கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

பகவத் கீதை பெண்களை இழிவுபடுத்துவதாக என் தோழி சொல்கிறாள். இந்து மதத்தில் பெண் உரிமை கிடையாது என அவள் சொல்கிறாள். பெண்ணடிமையின் சின்னமான சீதையைக் காட்டி பெண்களை அடிமைப்படுத்துகிறது இந்து மதம் என்று சொல்லுவதுடன் இங்கிருந்த திராவிட தாய் தெய வழிபாட்டை அழித்து ஆரியர்கள் ஆணாதிக்க மதத்தை புகுத்திவிட்டனர். அதுதான் இந்து மதம் நம் தாய் தெய்வங்கள் எல்லாம் நாட்டார் தெய்வங்கள் திராவிட தாய் வழிபாட்டு சின்னங்கள். இதற்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு கிடையாது என்கிறாள் அவள். அவள் சொல்வது தவறு என என் உள்மனதுக்கு தெரிந்தாலும் அதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு தமிழ் இந்துப் பெண் என்கிற முறையில் இது குறித்து தங்கள் பார்வையை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.’

– இரா.தமிழரசி, திருநள்ளாறு, காரைக்கால்.

வணக்கம்.

உங்கள் உள்ளுணர்வு முழுக்கமுழுக்க சரியானதே. நமது இந்து சமுதாயத்தின் இயற்கை என்னவென்றால் நாம் நம் தருமத்தை பின்பற்றுகிறோமே அன்றி அதனை வரலாற்றுப் பார்வையில் அலசுவதில்லை. இது சரியா தவறா என தெரியவில்லை. ஏனெனில் நமது இந்து தருமத்தை வரலாற்று பார்வையில் அலசுகிறோம் என சொல்லுகிற பலரும் அதன் விரோதியாக தங்கள் இந்து விரோதப் பார்வைக்கு ஏற்றப்படி தகவல்களை திரித்தும்
மறைத்துமே வெளியிடுகின்றனர். நம்மைப் போன்ற சாதாரண இந்துக்களுக்கு அவர்கள் சொல்வது தவறு என தெரிந்திருந்தாலும் அந்த தவறான தரவுகளை மறுக்க தெரிந்திருப்பதில்லை. இதுவே இந்த இந்து விரோதிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகப் போய்விடுகிறது.

முதலில், பகவத் கீதை பெண்கள் பற்றிக் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

கீதையில் சீடனாக வரும் அர்ஜுனன் அந்தக் காலகட்டத்தின் சமுதாய சூழலிலேயே வளர்ந்தவன். அவன் பெண்கள் குடும்ப கௌரவத்தை உறுதியுடன் காப்பாற்றுபவர்கள் என்று கருதுபனாக இருக்கிறான். இந்த நிலைதானே இன்றைக்கும் இந்திய சமூகத்தில் பல ஆண்களின் மனதில் உள்ளது? அர்ஜுனன் சொல்கிறான் –

கண்ணா, அதர்மம் சூழ்வதானல் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது. (கீதை, 1:41)

அறநிலையில் நிற்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை நம் முன்னோர்கள் நம்பினர். எனவேதான், ‘அதர்மம் சூழ்ந்தால்’ விளையும் கேடுகளில் பெருங்கேடாக (எந்தச் சூழலிலும் உறுதி குலையாத மனப்பாங்கு உள்ளவர்களான) குலஸ்திரீகள் கூடக் கெட்டுப் போகும் சூழல் உண்டாகும் என்று அர்ஜுனன் பேசுகிறான்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்

என்று வள்ளுவர் சொல்வதும் இதைத்தான். ‘கற்பு என்னும் திண்மை உண்டாகுமானால், பெண்ணை விடவும் சிறப்பு வேறு எதற்கு (யாருக்கு) உண்டு’ என்று கேட்கும் வள்ளுவருக்கு இன்றைய சூழலில் உரை கண்டால் ‘கற்பு எனும் திண்மை உண்டான பெண் ஆணைக் காட்டிலும் மேலானவள்’ என்றுதான் பேசவேண்டும். ‘அவள் உறுதி தவறாமல் நிற்பதே, அவனுடைய உறுதிக்கும் ஊற்றுக்கண்’ என்ற பொருளும் இதன் மூலம் பெறப்படுகிறது. ஒரு பொதுவான சமுதாய நலம் விரும்பியின் மனநிலை இது.

ஆனால், கீதையில் குருவும் தெய்வமும் ஆகிய கிருஷ்ணன் ஒருபடி மேலே சென்று, பெண்மையின் சிறப்புகளையும் போற்றிக் கூறுகிறான். ஒவ்வொரு பொருளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கூறி இவை அனைத்திலும் தெய்வத்தன்மை நிரம்பியுள்ளது என்று கீதை 10-ஆம் அத்தியாயம் (விபூதி யோகம்) கூறுகிறது. இதில், ஒரு பாடலில் கடவுள் கூறுகிறார் –

பெண்களிடத்தில் புகழ், செல்வம், வாக்கு, நினைவாற்றல், மேதைமை, திடசித்தம் ஆகியவையாக நான் இருக்கிறேன் (“கீர்த்தி ஸ்ரீவாக் ச நாரீணாம் ஸ்ம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா” – கீதை 10.34)

செல்வத்தின் உருவாக லட்சுமியையும், கல்வியறிவின் உருவாக சரஸ்வதியையும், வீரத்தின் உருவாக துர்கையையும் இந்துதருமம் போற்றி வணங்கும் கலாசாரம் இந்த கீதை மொழியின் சாரமே அல்லவா? “இந்த உலகத்தின் அப்பன் நான், இதன் அம்மா நான்” (கீதை 9.17) என்று பேசும் தெய்வக் குரல் தாய்மைக்கு உயர்ந்த இடத்தை அளிப்பதைக் காணலாம்.

அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு வீடுபேறு கிடையாது என்னும் நிலை உண்டானது. பின்னர் வந்த புத்த, சமண மதங்களிலும் முக்தி நிலை அடைந்தவர்களாகக் கருதப்பட்ட போதி சத்துவர்கள், தீர்த்தங்கரர்கள் இவர்களில் எவரும் பெண்கள் கிடையாது என்பதை நினனவில் கொள்ளவேண்டும். எனவே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என பகவத்கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலைபடைத்த ஆணினை நோக்கி என்றே கருதவேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் என புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, அண்மையில் ஒரு பெண்ணியவாதி ‘பெண்களால் சமுதாய நாசம் ஏற்படுகிறது’ என பகவத் கீதையில் கூறியுள்ளது என சொல்லியுள்ளது மிகவும் தவறான கருத்து. உண்மையில் அர்ஜுனனின் குழம்பிய மனநிலையிலிருந்து வரும் வார்த்தைகளில் கூட ஒருவித சமுதாயக் கவலை தான் தென்படுகிறதே அன்றி பெண்களுக்கு எதிரரன எந்தக் கருத்தும் தென்படுவதில்லை. கண்ணனின் வார்த்தைகளிலோ, பெண்மையின் உன்னதம் தான் பேசப் படுகிறது. எனவே பகவத் கீதை பெண்களை இழிவாகக் கூறவில்லை என்பது மட்டுமல்ல, நமது வேத பாரம்பரியத்திலுள்ள பெண் விடுதலை மரபினை -அதனை சமுதாயம் மறந்திருந்த போது மீண்டும் வலியுறுத்துகிறது என்றே சொல்லவேண்டும்.

அடுத்ததாக அன்னை சீதாதேவி குறித்த விஷயத்துக்கு வருவோம்.

இராமயணமே வான்மீகி முனிவரால் ‘ஸீதாயா: சரிதம் மஹத்’ என்றே சொல்லப்படுகிறது, அதாவது சீதையின் மகத்தான சரிதம்.

சீதை முழுக்க முழுக்க சுதந்திர உணர்வு கொண்ட காதல் மனைவியாகவே சித்தரிக்கப் படுகிறாள். எடுத்துக்காட்டாக, இராமர் வனவாசம் செல்கையில் அவர் சீதையை அயோத்தியில் இருக்க சொல்கிறார். ஆனால் சீதையோ பிடிவாதமாக இராமரிடம் மிகக்கடுமையான வார்த்தைகளால் வாதாடி கானகம் வருகிறாள். கானகத்தில் இராமர் அங்குள்ள சாதுக்களைத் துன்புறுத்தும் அரக்கர்களை அழிப்பதாக சபதமெடுக்கையில் சீதை அதனை விமர்சிக்கிறாள். வன்முறை சரியல்ல என கூறுகிறாள்.

Sita in Agniparikshaபின்னர் சீதை தன்னைக் காத்து நிற்கும் இலட்சுமணரிடம் இராமரிடம் தான் கொண்டுள்ள அதீத அன்பினால் கடுமையான வார்த்தைகளை பேசுகிறாள். நீ இப்போது இராமரை தேடி போகவில்லையெனில் நான் தீக்குளிப்பேன் என்கிறாள். இதற்கு இணையான ஒரு poetic justice ஆக இலங்கையில் இராமரின் முன்பாக தானே தீக்குளிப்பதாக சொல்லுகிறாள். எந்த இலட்சுமணனைப் பார்த்து நான் தீக்குளிப்பேன் என்றாளோ அதே இலட்சுமணனை தீமூட்ட சொல்கிறாள். இதன் பின்னர் தசரதர் சொர்க்கத்திலிருந்து வந்து சீதையை சமாதானப்படுத்தினார் என்றும் இராமனை மன்னித்துவிட சொன்னார் என்றும் இராமாயணம் சொல்கிறது. ஆக, இந்த இடத்திலும் இராமரின் மனப்பாங்கினை காவியகர்த்தர் ஏற்கவில்லை என்பது தெளிவு. பின்னர் உத்தர இராமாயணத்தில் இராமர் அவளைக் காட்டுக்கு அனுப்புகிற போது இராமாயணம் சீதையைச் சார்ந்தே பேசுகிறது என்பது தெளிவு. அதற்கு பிறகு இராமர் அனைவர் முன்னரும் தீக்குளிக்க சொல்லும் போது சீதை அதனை மறுத்து விடுகிறாள்…எந்த பூமியிலிருந்து வந்தாளோ அதே பூமியுடன் ஐக்கியமாகிறாள்.

பார்க்க: கற்பின் கனலி – ஹரி கிருஷ்ணன் அவர்களின் காவிய ஆய்வுச் சித்திரம்

இவ்வாறு சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப்படுகிறாள்.

குறுகிய எல்லைகளை கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது. அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கிறாள் அன்னை சீதை. சீதையிடம் இராவணன் வீழ்ந்த செய்தியைச் சொல்ல வருகிறார் அனுமான். ‘இந்த நல்ல செய்தியை சொன்ன உனக்கு என்ன பரிசு தருவேன்? என்னிடம் எதுவும் நல்ல பொருளோ அணிகலனோ இல்லையே’ என்கிறாள் சீதை. ‘தங்களை இத்தனை காலம் துன்புறுத்திய இந்த அரக்கிகளை கொல்ல அனுமதி அளியுங்கள் அதுவே எனக்கு பரிசு’ என்கிறார் அனுமான். இந்த அரக்கிகள் சீதையை தினந்தோறும் சித்திரவதை செய்தவர்கள். சகிக்கமுடியாத வசை பாடியவர்கள். சொல்லமுடியாத மனத்துயரத்தை ஏற்படுத்தியவர்கள். என்றாலும் பெண்கள். சீதா பிராட்டி, “இராவணன் ஏவலால்தான் இவர்கள் அவ்வாறு செய்தார்கள். அவர்களாக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்” எனக் கூறி ‘குறையற்றவர்கள் இந்த உலகில் யாருண்டு? சான்றோர்களின் குணம் கருணையே’ எனச் சொல்லி அனுமன் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்க மறுத்துவிடுகிறாள். ( ‘கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சின் ந அபராத்யதி’ -வால்மீகி)

இன்று இத்தகைய தாய்மைப் பார்வையே உலகின் பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது என்பதை சொல்லவும் வேண்டுமா? எனவே இராமயணம் முன்வைக்கும் சீதை பெண்களுக்கும் ஆண்களின் உள்ளிருக்கும் தாய்மை உணர்வை தட்டி எழுப்புவதற்குமாக வைக்கப்படும் அருள்வடிவாகும். அது நிச்சயமாக அடிமைத்தன்மையை போதிக்கவில்லை.

அடுத்து இந்த ஆரிய இனவாத பார்வைக்கும் வரலாம்.

ஆரிய-திராவிட இனவாதம் என்ற கோட்பாடு இன்றைக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது, அகழ்வாராய்ச்சியாளர்களால் மறுக்கப்பட்டு விட்டது, மரபணு-ஆராய்ச்சியாளர்களால் தவறு என்று நிரூபிக்கப்பட்டு நிற்கிறது. அடிப்படையே தவறான இந்தக் கோட்பாட்டின் வாதத்தில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணோட்டம்.

இந்தப் பார்வை சொல்வது என்னவென்றால் ‘ஆரிய’ படையெடுப்பாளர்கள் ஆண் தெய்வங்களை (இந்திரன், வருணன்ஆகிய தெய்வங்களை) வழிபட்டதாகவும் ஆனால் ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பண்பாட்டு மையங்களில் கிடைத்த தாய் தெய்வ வழிபாட்டுச் சின்னங்கள் அங்கு வாழ்ந்தவர்கள் தாய் தெய்வங்களை வழிபட்டனர் என்பதனைக் காட்டுகிறது என்பதுமாகும். இதன் அடிப்படையில் மார்க்சிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி இந்தியாவின் சமய வரலாறு என்பதே தோற்கடிக்கப்பட்ட தாய் தெய்வங்களின் வரலாறு என்பதாக கூறுகிறார். மேற்கத்திய நாடுகளிலும் ‘இந்தோ-ஐரோப்பிய’ பரவுதலுக்கு முன்னதாக தாய் தெய்வ வழிபாடு இருந்ததாகவும் அது படையெடுத்து வந்த தந்தைவழி சமுதாய போர்மரபு நாடோடிகளால் அழிக்கபட்டுவிட்டதாக பெண்ணிய அறிஞரான கிம்பூட்டாஸ் என்பவர் கூறுகிறார். ‘குர்கன்’ மக்கள் என இப்படையெடுப்பாளர்களை இவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இவை எல்லாம் எந்த அளவு உண்மையானவை? சிறிதே ஆராய்ந்து பார்த்தால் கூட, வேத இலக்கியங்களில் பல பெண் தெய்வங்கள் இருந்தார்கள் என்பதும், அது மட்டுமல்ல வேத சமுதாயத்திலும் பெண்கள் மகத்தானதொரு நிலையை பெற்றிருந்தார்கள் என்பதும் தெரிய வரும். மிக அடிப்படையாக, உலகின் மத/ஆன்மீக மறைநூல்கள் அனைத்திலும் வேதங்களில் மட்டுமே மறைஞானங்களை அறியும் பெண் ரிஷிகளைக் காண்கிறோம். பெண்கள் இறைவாக்கினராகவோ இறைதூதர்களாகவோ இருக்க உலகின் எந்த மதங்களும் அனுமதிக்காத நிலையில் நமது தேசத்தின் வேத இலக்கியத்தின் இத்தன்மை முக்கியமானதாகும்.

வேதகாலப் பெண்கள் குறித்த ஒரு விரிவான கட்டுரையை தமிழ்ஹிந்து தளம் அடுத்ததாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

6 Replies to “கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்”

  1. ஸ்ரீ ரமண மகரிஷிகள் தனது தாயார் அழகம்மை மரணத்தறுவாயில் இருந்தபோது அவர்மீது தனது கரங்களைப் பல மணிநேரம் வைத்திருந்து, அவரது ‘வாசனை’களை (ஆசாபாசப் பதிவுகளை) அகற்றி முக்தி தந்தார் என்பது வரலாறு. அதுமட்டுமன்றி, அந்தத் தாயின் சமாதிக் கோவிலே இன்று ‘மாத்ருபூதேஸ்வரர்’ (தாயுமானவர்) கோவில் என ரமணாச்ரம வளாகத்துக்குள் இருப்பது. பெண்கள் எல்லாவகை ஆன்ம சாதனைகளையும் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்பது ரமணர், ஸ்ரீ சத்ய சாயிபாபா, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி உட்படப் பல மகான்களின் கருத்து. அமிர்தானந்தமயி தேவி அவர்கள் தாமே ஓர் உதாரணமும் ஆவார்.

  2. Wonderful question answer. Thank you for the scolarly explanation in simple language.

    Hindu women have much to feel proud about their great heritage.

  3. ரொம்ப அருமையான கேள்விபதில். கஷ்டமான தமிழ் வார்த்தைகளைத் தவிர்த்து கொஞ்சம் எளிமையாக எழுதியிருந்தால், இன்னும் நன்றாக இருக்கும்.

    “இவ்வாறு சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப்படவில்லை.”

    “குறுகிய எல்லைகளை கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது.”

    அன்னை சீதையைப் பற்றி அழகான வரிகள்.

    தன் சக்தியினால் ராவணனை அழித்துவிட முடியும் என்றாலும் கணவனுக்குப் பெயர் வரவேண்டும் என்று காத்திருந்தவள். இன்றைய புதுமைப் பெண்களுக்கு முன் உதாரணம் சீதை.

    அவளது கதாபாத்திரத்தில் அடிமைத்தனம் இருக்கிறது என்று பேசுபவர்கள் முட்டாள்கள். ராமாயணம் ஒழுங்காகப் படிக்காதவர்கள்.

  4. தமிழரசியிடம் கேட்டது ஒரு கிருத்துவப்பெண்ணாக இருக்க வேண்டும். ஏனெனில் எனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு…

  5. எல்லை நீத்த உலகஙள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் அது என் தூயவன் வில்லின் அட்றர்க்கு மாசென்று வீசினேன் ‍
    இது தான் சீதா பிராட்டி.

  6. பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன். ஆம் நாம் தாய்க்கு தான் முதலிடம் தருகிறோம். நம் அனைவருக்கும் தாய் நம் அன்னை பராசக்தி. அவள் அம்சமே அணைத்து நன்னெறி படைத்த பெண்களும். நன்னெறி படைத்த பெண்களளின் எண்ணிக்கை குறைந்து போனாலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண் வழிபாடு மட்டும் அல்ல. பெண்ணை போற்றுபவர்களும் நாம் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *