மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)

மகாத்மா காந்தி தனது வார்தா ஆசிரமத்தில் பாம்புகளைக் கண்டால் பத்திரமாக அவற்றைப் பிடித்து ஊருக்கு வெளியே அவற்றை விட்டுவிட்டு வர அவர் வைத்திருந்த Y வடிவக் கம்பையும் அதனுடனிருந்த பெட்டியையும் பார்த்து “பாம்பிடம் கூட இத்தனை அகிம்சையா?” என வியக்கலாம். பாம்பு இருக்கும் மூட்டையைக் காட்டி தன்னுடன் வந்த நகரவாசியிடம் “குழந்தை குட்டி நிறைய இருக்குற எடத்துல இது வரக்கூடாது. அதுக்கு ஏத்த குளிர்ச்சியான எடத்துல விட்டுட்டா அது பாட்டுக்கு கெடக்கும். அதான் இத நேத்து பார்த்தபோதே பிடிச்சு மூட்டைக் கட்டிட்டோம். ராத்திரியில விட்டா சரிப்படாதுன்னுதான் இப்ப கொண்டாந்தேன்” என்று ஒரு இருளர் கூறுவதை “இருளர்கள் ஓர் அறிமுகம்” எனும் நூலில் படிக்கும்போது, மகாத்மாவின் அகிம்சை ஏதோ விண்ணிலிருந்து இறங்கியதல்ல. இந்த மண்ணின் வேர்களில் கலந்து கிடந்து கனியாகி வெளிப்பட்ட ஒன்று என விளங்கும்.

இந்தியத் தொல்குடி மக்கள் சமுதாயங்களில் ஒன்றான இருளர்கள் குறித்த ஒரு அறிமுக நூல் இது.
திரு. க.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்டது. சுவாரசியமான நூல். மானுடவியல் (anthropology) மிக அழகான எளிய தமிழில் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் தரப்பட்டுள்ளது. நமது சமுதாயத்தில் ஓர் அங்கமாக இருந்தபோதும் இதர பிரிவினரால் அறியப்படாத, ஏன் தவறாக அறியப்பட்ட, ஒரு மக்கள் குழுவினைக் குறித்த நூல் என்ற விதத்திலும் இந்நூல் முக்கியத்துவம் உடையது.

ஒரு சுய அனுபவ விவரிப்பிலிருந்து
தொடங்குகிறார் குணசேகரன். தெளிந்த நல்நீரோடை போன்ற ஓட்டம். கையில் எடுத்தால் வைக்க முடியாது முழுவதும் படித்துவிட்டுதான் வைக்கத் தோன்றும். இருளரல்லாதவருக்கு அந்தச் சமுதாயத்தில் பிறக்க மாட்டோமா அல்லது ஒரு நாளாவது அந்த மக்களுடன் செலவிடமாட்டோமா, களங்கமற்ற மாசற்ற இந்த மண்ணின் பண்பாடு இன்னும் மிளிர்கிற அந்த மக்களுடன் கலந்து உரையாட உறவாட ஒரு வாய்ப்புக் கிடைக்காதா, என ஏங்க வைக்கிறார் ஆசிரியர். அவர்களின் பாரம்பரிய அறிவு கோடி காட்டப்படுகிறது – மிகப்பெரிய பொக்கிஷம் அது எனப் புரிகிறது.

மேற்கத்திய அல்லது நவீன மருத்துவ உலகத்துக்கும் இருளர்கள் பாதுகாத்து வைத்துள்ள இந்த பாரம்பரிய அறிவுக்களஞ்சிய உலகுக்கும் இடையிலான மோதல் – பெரும்பான்மை மக்கள் சமுதாயம் இருளர்களோடான தனது பாரம்பரிய உறவுகளை துண்டித்துக் கொண்டு விலகும்போது இருளர்களின் சமூக உளவியல் மீது அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் இன்னும் எஞ்சி நிற்கும் பாரம்பரிய உறவு இழைகளைப் பற்றிப்பிடித்தபடி தன்னிடமிருக்கும் பாரம்பரிய அறிவினை அடுத்த பரம்பரைக்கு கொண்டு செல்ல முயலும் ஆதங்கம் அனைத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றன இந்நூலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இருளரின் குரல்:

“[பாம்புக்கடிக்கு]சரியான மருந்து இல்லைன்றாங்களே?”
“நிச்சயம் இருக்கு. ஆனா கட்டுப்பாட்டோட பத்தியம் இருந்தாகணும். கடி வாங்கினவங்க ஏழு நாள் முழுக்க தூங்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு
இருந்தாலே சரி செய்துடமுடியும். பெரிய பெரிய கம்பனிங்க துட்டுப்போட்டு
இங்கிலீஷ் மருந்து செய்யறாங்க. மூலிகை மருந்து குடுத்து சரியாக்கிட்டா
அந்தச் சாமானெல்லாம் எப்படிங்க விலை போகுறது? அதுக்காகவே மூலிகையைப் பத்தி மட்டமாப் பேசுவாங்க. ஆனா ஒண்ணுங்க. எங்க சுத்து பத்து ஊர்ல இருக்கறவங்கன்னு இல்லாம பல ஊர்கள்ல இருந்தும் இருளருங்க எங்கெல்லாம் இருக்காங்களோ அங்கே போயி மருந்து சாப்பிடறவங்க இருக்கத்தான் செய்றாங்க” [பக். 43-44]

இன்னும் எத்தனை நாள் என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது மனதில். மாற்று என்ன? ஏதோ ஒரு வெளிநாட்டுப் பண உதவியுடன் நடத்தப்படும் தன்னார்வ நிறுவனம் இந்த பாரம்பரிய அறிவைக் கடத்தி ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கலாம். அந்த மருந்து ஏதோ ஒரு அமெரிக்க முதலாளிக்கு பல கோடி டாலர்கள் இலாபம் ஈட்டித் தரலாம். இருளர்கள் தங்கள் பாரம்பரிய வேர்களை இழக்க நேரிடலாம். நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்த ஆயுர்வேத முறைகள் இன்று நிறுவனப்படுத்தப் பட்டாலும் அவற்றின் வேர்கள் இருளர்கள் போன்று பாரதமெங்கும் எண்ணிறந்த தொல்-சமுதாயங்கள் தாம். இவர்கள் பிரிட்டிஷ் காலனியக் காலகட்டத்தின் போது ‘நவீனத்துவ’ மேம்பாட்டு ஜோதியில் கலந்து தம்முடைய வேர்களை இழக்க விரும்பிடாதவர்கள். அந்த மேம்பாட்டுப் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் வெளியே சென்றவர்கள்.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அவர்கள் இந்த சமுதாயத்தில் வேறெந்த மக்கள் குழுவையும் போல அங்கீகாரமும் பங்களிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதனை இந்நூல் பல இடங்களில் மனதை நெகிழ நவக்கும் ஆதாரங்களுடன் காட்டுகிறது. ஏழு கன்னித் தெய்வங்களை வழிபடுகிறார்கள் இருளர்கள். “நல்ல மழை பெய்யணும் மண்போட்டா பொன் விளையணும்” என வேண்டும் இருளர்களின் பிரார்த்தனை காடு சார்ந்து வாழும் அவர்கள் சமுதாயத்துக்கு மட்டுமல்ல விவசாய மக்களுக்கும் சேர்த்துதான்”. அனைவரும் அனைத்து நலங்களும் பெறவேணும்” என கேட்கும் பிரார்த்தனைகளுக்கும் இருளர்களில் வேர் இருக்கிறது. அன்னை தெய்வமான எல்லம்மாள் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டு அனைத்து தெருக்களுக்கும் சென்று அருள் பாலிக்கிறாள். அன்னையின் ஊர் திருவிழா இருளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை இணைக்கும் சமுதாய ஒருங்கிணைப்புப் புள்ளியாகவும் செயல்படுகிறது.

“சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள ரெங்கசாமி மலைமுடிக்கு அருகில் உள்ள கன்னம்பாளையத்தில் அமைந்துள்ள ரெங்கசாமி கோவில் பிரசித்தமானது. இங்குள்ள பூசாரிக்கு பூஜையைவிட கோயிலுக்கு வரும் இருளர்களுக்கு நெற்றியில் நாமம் இடுவதுதான் முக்கியக் கடமை. பூசாரி மணி அடிக்க இருளர்கள் கையோடு கொண்டு செல்லும் பூ, பழங்களை வைத்து பூஜையை முடிப்பார்கள். அதே மலையிலுள்ள சிவன் கோவிலுக்கும் செல்வார்கள். அந்த கோவிலில் ஆண்டுதோறும் செம்மறி ஆடு பலியிடும் சடங்கு நடைபெறும். கோயில் பூசாரியே இவர்கள் கொண்டு செல்லும் ஆட்டைப் பலியிட்டு பூஜை
செய்வார்.” (பக்.64)

கண்ணப்பர் ஒப்பதோர் அன்பு! மற்றொரு முக்கியமான விஷயத்தையும் ஆசிரியர் கூறுகிறார்:

திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலைக்குப் பின்னால் ஒரு கதை உண்டு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இருளர்கள், அங்குள்ள சிவன் கோவிலை மிகவும் பக்தியுடன் வழிபட்டு வந்தனர். சிவன் கோவிலில் விளக்கேற்றுவதற்கு இலுப்பை எண்ணெய் தேவைப்படும் என்பதற்காக நிறைய இலுப்பை மரங்களை வளர்த்து வந்தனர். இலுப்பைக் காடு என அழைக்கப்படு அளவுக்கு அடர்த்தியான வனப்பகுதியாக அது வளர்ந்தது. இலுப்பை விதைகளை சேகரிப்பதில் ஒவ்வொரு இருளரும் கடமையுணர்வுடன் செயல்பட்டதால் மட்டுமே இந்தக் காடு உருவானது. சிவன் கோயில் செழிப்புடன் வளர ஆரம்பித்தது. இருளர்கள் குடும்பம் குடும்பமாக சென்று கோவிலுக்கு நெல் குத்தி வந்தனர். காலப் போக்கில் நெல் அரவை இயந்திரத்தின் வருகை இவர்களை கோயில் பணிகளிலிருந்து ஒதுங்க வைத்தது. நாளடைவில் இவர்கள் வளர்த்த இலுப்பைக் காடு திருவாலங்காடு சர்க்கரை ஆலைக்காக அழிக்கப்பட்டது.” (பக்.65)

நவீனத்துவம் எத்தனை சமுதாய உயிரிழைகளைக் கொடூரமாக வெளியே தெரியாமல் அழித்துவிடுகிறது. நாமும் பிரக்ஞையே இல்லாமல் நம் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து எப்படிப் பிரிந்து அன்னியப்பட்டுப் போய் நிற்கிறோம் என்பதனை இந்த நிகழ்ச்சி அருமையாகக் காட்டுகிறது. இந்த அரிய தகவலை வெளிக்கொண்டு வந்தமைக்கு ஆசிரியருக்கு நிச்சயம் நன்றி சொல்லவேண்டும்.

இருளர்கள் மீதான மிகக் கொடுமையான கொடூரங்கள் வெள்ளை ஆட்சியின்போது நடந்தேறின. அவர்கள் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாத துவேஷ மனப்பாங்குக்கு அறிவியல் முலாம் பூசி இறையியல் அங்கீகாரம் பெற்று நடத்திய காலனிய கொடுங்குற்றம் இது. விடுதலைப் போராட்டத்தில் இருளர்களின் பங்கு இந்நூலில் வெளிக்கொணரப் பட்டுள்ளது. ஜீவாவுக்கு அவர்கள் உதவியது, இருளர்கள் முன்னேற்றத்தில் ராஜாஜியின் ஈடுபாடு, முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர் ஆகியோருடன் இருளர்களின் உறவு ஆகிய பல தகவல்கள் உள்ளன. நவீனத்துவ மாயையிலும் மெகாலேயிஸ்ட் கல்வியிலும் மூழ்கி நம் இரத்தத்தின் ஒரு பகுதியான இருளர்கள் போன்ற தொல்குடிகளைச் சக-மனிதர்களாக காணும் தன்மையை பெரும்பாலும் இழந்துவிட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். பேருந்தில் ஒரு வனவாசி சமுதாயத்தவர் நம் அருகில் அமர்ந்தால் நெளிகிற தலைமுறை. டீக்கடைகள் முதல் காவல் நிலையங்கள் வரை இத்தகைய வேர்கள் இழக்காத சமுதாயங்களிடம்
அதனாலேயே அவர்களிடம் வெறுப்பை உமிழும் ஒரு மனப்போக்கு-திரைப்படங்களில் அந்த நஞ்சு நகைச்சுவையாகக் கூட, பகுத்தறிவாகக் கூட காணப்படுகிறது. இத்தகைய நூல்கள் அந்த நஞ்சினை முறிக்கும் அருமருந்து என்றே சொல்லவேண்டும். இந்த நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டதன் மூலம் வெகுவாக மக்களை போய் சேர்ந்திடவும் செய்யும்.

கிழக்குக்கும் ஆசிரியர் குணசேகரனுக்கும் தமிழ்இந்து.காம் இணையதளத்தின் நன்றிகள்.

இனி இந்த நூலில் இருக்கும் ஒரு முக்கியக் குறையை சுட்டிக்காட்ட வேண்டும். ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் இருளர்களைக் காண முயற்சித்திருப்பதே அது. ஒரு சித்தாந்த அடிப்படையில் இதனைக் குறையாகச் சொல்லவில்லை. மானுடவியலாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், மரபணுவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினராலுமே நிராகரிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டினைக் கொண்டு இருளர்களை தஸ்யூக்களுடன் அடையாளப்படுத்துவது பாரத தொல்வரலாற்றினைப் பொறுத்தவரையில் தமிழ் பொதுப்புத்தி எந்த அளவு பின்தங்கியுள்ளது என்பதனைக் காட்டுகிறது.

மேலும் லெமூரியா/குமரிக் கண்ட கற்பனைகள் நிலவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டவை. (உதாரணமாக ஜெயகரனின் குமரி நிலநீட்சி) பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது போல பாரதத்தில் ஏதாவது ஒரு சாதியினர் ஆரியர் என்றால் தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் உட்பட அனைவருமே ஆரியர்கள்தாம் ஆரியர் அல்லது திராவிடர் என்பது போன்ற பிரிவுகள் எவ்விதத்திலும் செல்லாதவை ஆகியுள்ளன இன்று. சுவாமி விவேகானந்தர், பாபாசாகேப் அம்பேத்கர், ஸ்ரீ அரவிந்தர் ஆகிய பாரத அறிஞர்கள் இந்த இனவாதக் கோட்பாட்டை மறுத்ததை இன்று அறிவியலும் அகழ்வாராய்ச்சியும் மீள்-நிரூபணம் செய்துள்ளது. இந்நூலின் அடுத்த பதிப்பில் ஆசிரியர் இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த பகுதிகளை நவீன அறிவியல் அகழ்வாரய்ச்சியின் துணையுடன் மாற்றி அமைப்பார் என நம்புவோம்.

மொத்தத்தில் இது ஒரு சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.

நூல் தலைப்பு: இருளர்கள் ஓர் அறிமுகம்
ஆசிரியர்: க.குணசேகரன்
வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 127
விலை: ரூ. 75

9 Replies to “மகாத்மாவின் வேர்கள்: “இருளர்கள் ஓர் அறிமுகம்” (நூல் அறிமுகம்)”

  1. திரு நீலகண்டன்
    சிறந்த புத்தக விமர்சனத்திற்கு மிக மிக நன்றி.
    நிறை குறைகளை நல்ல முறையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
    ஒரு முறை சென்னைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பெருமாள் கோயில் அருகே இருளர்களின் குடியிருப்பைக் கண்டேன்.
    அப்போது அதை பற்றி ஏதும் தெரியாது.
    பாம்பு பிடிக்க தெரிந்தவர்கள் , சிறிது மந்திர தந்திரம் தெரிந்தவர்கள் என்ற அளவில் தான் தெரியும்.
    பண்டை பாரதத்தின் உண்மை மைந்தர்கள் என எடுத்துக் கட்டும் புத்தகத்தை நல்ல முறையில் விமர்சனம் செய்தமைக்கு மிக நன்றி.
    சப்த கன்னியர் வழிபாடு என்பது இந்தியா முழுதும் காணப்படும், “ஒரே பாரதம்” என்பதை மெய்ப்பிக்கும் பல சாட்சிகளுள் ஒன்று.

  2. மிக அருமையான விமர்சனம், அரவிந்தன். Wherever Christian civilization spread, spread syphilisation என்பதை இந்த விமர்சனம் மீண்டும் நிறுவுகிறது.

    இந்து சமுதாயங்களைப் பற்றிய நம்பகத்தன்மை மிக்க நூல்கள் குறைவு. ஸல்ஸா மற்றும் ப்ரேக் டான்ஸ்கள் பயிலுவதை பெருமையாகக் கருதும் இந்திய பொதுபுத்திக்கு, நம்மிடம் இருக்கும் பலதரப்பட்ட நாகரீகங்களுக்கு இணையான மரியாதை செலுத்த தெரியாது. காரணம் ஆரிய-திராவிட இனவெறிதான்.

    ஆரிய-திராவிட இனங்கள் என்ற ஒன்றை உருவாக்கிய யூரோப்பியரே தற்போது அவற்றை நிராகரித்துவிட்ட போதிலும், இந்திய பள்ளி பாட புத்தகங்களில் இந்த இனவெறி போதிக்கப்பட்டுவருகின்றது. ஹிட்லர் காலத்து ஜெர்மனியர்கள் எங்கனம் அவர்கள் பயிலுவது இனவெறி என்பதை அறியாமல், பொதுப்புத்தியாக அதை ஏற்றுக்கொண்டார்களோ அதைப்போலவே இந்தியர்களும் இருக்கிறார்கள். இனவெறியை அரசாங்கமே போதிக்கும்போது, அதை எந்த இந்தியரும் சட்ட ரீதியாகவோ, ஜனநாயக ரீதியாகவோ விலக்கச் செய்ய முயலாதபோது இப்புத்தகத்தின் ஆசிரியர் அதை ஏன் செய்யவில்லை என்று குறைசொல்ல முடியாது.

    அந்த உண்மையை தெளிவாகப் புரிந்துகொண்டே, குறை இந்திய பொதுபுத்தியில் இருக்கிறது என்று சரியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். விமர்சனம் என்றால் ஒரேயடியாக ஆதரிப்பதோ அல்லது ஒரேயடியாக குறை சொல்லுவதோ இருக்கும் தமிழ் இலக்கிய (?) சூழ்நிலையில் இதைப் போன்ற விமரிசனங்கள், ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்துவதோடு வாங்கவும் தூண்டுகின்றன.

    கிராமவாசிகள் பற்றியும் நகரவாசிகள் பற்றியும் பல நூல்கள் உண்டு. ஆனால், வனவாசிகள் பற்றிய நூல்கள், அதுவும் சுவையான செறிவு மிகுந்த நூல்கள் மிகக் குறைவு. இந்த சூழலில் இப்படிப்பட்ட ஒரு நூலை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் பாராட்டுக்கு உரியது. இந்துக்களைப் பற்றி சுவையாக எழுதிய குணசேகரனுக்கும் பாராட்டுக்கள்.

    இப்புத்தகத்தை வாங்குபவர்கள் அறிவோடு அன்பும் மிக்கவர்கள் என்பது விமரிசனம் தெரிவிக்கும் செய்தி.

  3. பாரதத்தின் பண்பாட்டு வேர்கள் குடியானவர்களிடமிருந்தும், மலைவாழ் மக்களிடம் மட்டுமே இருக்கிறது. நாகரீகத்தின் பெயராலும், தொழில் வளர்ச்சியின் போர்வையாலும் அவர்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அழிக்கும் ஈனத்தனமான செயலையும், அவர்களது நாகரீகம், பண்பாடு மற்றும் தெய்வங்களை பாதுகாக்காமல் விடுவதன் மூலம் மிஷனரிகளின் அறுவடைக்கு பலியாடுகளாக ஆக்கிவைத்திருக்கிறோம்.

    கன்னிமார் பூஜையாகட்டும், அம்மன் பொங்கல்கள் ஆகட்டும் நாம் அனைவரும் பாரதத்தின், ஒரே காலாச்சாரத்தின் புதல்வர்கள் என இணைக்கும் கண்ணுக்குத்தெரியாத சங்கிலியின் கண்ணிகள் அவை.

    ஜாதியின் பெயரால், போலி நாகரீகத்தின் பெயரால் அவர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் நாம் இழப்பது நமது தொப்புள் கொடி உறவை.

    வருங்கால இந்து சமுதாயத்திற்கு நாம செய்யவேண்டிய கடமை இது. நமது வேர்களை நமக்கு மீள் அறிமுகம் செய்யும் நூலாக இந்த இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தைக் கொள்ளலாம்.

    இருளர்கள் ஓர் அறிமுகம் எழுதிய திரு. க. குணசேகரனுக்கும், அருமையான விமர்சனம் தந்த திரு. அரவிந்தன் நீலகண்டனுக்கும் வாழ்த்துக்கள்.

    ஸ்ரீதர்

  4. எழுத்தாளர், கவிஞர் ஹரன்பிரசன்னா அவர்களும் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதியுள்ளார்.

    நல்ல விமர்சனம் அரவிந்தன் நீலகண்டன் ஐயா. இதுபோன்ற புத்தகங்கள் வெளிவருவதை நாம் வெகுவாக ஊக்குவிக்க வேண்டும்.

  5. srinivasan, former principal of vidya mandir was a wellknown social worker in chennai. i have seen him intracting with the irular community on a regular basis(1970).even a cooperative society of irulars was formed.

  6. போனவாரம்தான் இந்த புத்தகம் படித்தேன்.. புத்தக விமர்சனம் எழுதலாம் என்று நினைத்து இருளர் குறித்த தகவல்களையும் சேர்த்து தரலாம் என்று தேடும்போது இந்த பதிவு வந்து நிற்கிறது.. நல்ல விமர்சனம்..

  7. இந்தக்கட்டுரையையை இப்போதுதான் வாசித்தேன்.இந்தக்கட்டுரையைப்படித்து மறுமொழி அளித்ததன் மூலம் எனக்கு இந்தமாதிரி ஒரு நல்லக்கட்டுரையையும் நூலையும் அறிமுகம் செய்த சசி அவர்களுக்கு நன்றி. இந்த நூலை வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை அரவிந்தன் அவர்களின் கட்டுரையை வாசிக்கும் போது தோன்றுகிறது. நீலகிரியில் மிதவெப்பமண்டலப்பகுதியில் வாழும் இருளர்களும் திருவாலங்காட்டில் வாழும் இருளர்களும் வேறுவேறானவர் என்பது எனது எண்ணம். இருகுடியினரும் ஒன்றே என்பது போன்று புத்தக ஆசிரியர் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. ஆனாலும் இதைப்போன்ற புத்தகங்கள் வரவேற்கத்தக்கவை.

  8. மிக அருமையான பதிவு…நான் ஏற்கனவே உடையும் இந்தியா என்ற தங்களது புத்தகத்தில் படித்திருக்கிறேன்…வெள்ளைக்கார படையெடுப்பு நம் தேசத்தின் நாடி நரம்பு எல்லாத்தையும் அழித்து … அடையாளம் இல்லாத சமூகமாக நம்மை மாற்றிவிட்டது .
    அவர்கள் செய்த தவறுகளை
    மறைக்க இன்று ஆரியம் எனும் பித்தலாட்டம் இனவாதத்தை. விதைத்து கொண்டு இருக்கிறது..இதற்கு திராவிட போர்வை வேறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *