போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்

beach

இலங்கையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, பெரும் போரின் பிடியில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியிலுள்ள இருபெரும் ஆலயங்களுக்கு அண்மையில் ஒரே நாளில் சென்று தரிசனம் செய்ய முடிந்தது. தற்போதைய போரினால் பாதிக்கப்பெற்ற இலங்கையிலுள்ள திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்தவும் இந்துமதத்தின் நிலையை நன்கு தெளிவுபடுத்தவும் வாய்ப்பாக இவ்விரு தலங்கள் பற்றிய இக்கட்டுரையைத் தர விரும்புகின்றேன்.

இவ்விரு பெருந்தலங்களும் கடலோரத்தில் அமைந்துள்ளன. இன்றைக்கும் இப்பகுதிகள் ‘உயர் பாதுகாப்பு வளையம்’ என்றே அழைக்கப்படுகின்றன. எக்காலத்திலும் போர்கள் நடைபெறுமிடத்து, பெரும் சேதத்திற்கு உள்ளாவன கடலோரப் பகுதிகளே. ஏனெனில் இப்பகுதிகளில் கடற்சமரும் அத்துடன் தரைவழிச் சமரும் நடந்திருக்கிறது. இது மட்டுமன்றி வான்வழித் தாக்குதல்களுக்கும் இவ்விடத்தில் குறைவிருக்கவில்லை.

topless-palms-after-bombsதலைகளின்றி முண்டங்களாகிக் கிடக்கும் பனைமரங்கள்… வெறிச்சோடிப்போன வீதிகள்… மிதிவெடி அபாயம்… சொல்லி நிற்கும் வீதியோரப் பதாகைகள்… உடைந்தும் கூரையின்றியும் இருக்கும் வீடுகள்… இவ்வளவும் இவ்விரு இடங்களிலும் பார்க்க முடிந்தது. இத்தலங்கள் இரண்டில், ஒன்று பிரபலமான சிவாலயமாகிய கீரிமலை நகுலாம்பிகை உடனாய நகுலேஸ்வர நாதர் கோயில்; மற்றொன்று வரலாற்றுச் சிறப்புமிக்க விஷ்ணுவாலயமாகிய பொன்னாலை ஸ்ரீ வராதராஜப் பெருமாள் கோயில்..

முதலில் காலையில் யாழ் நகரப் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நகுலேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். சுன்னாகம் என்ற நகரைக் கடந்து சிறிது தொலைவில் ‘உயர் பாதுகாப்பு வளையப் பகுதி’ என்று அடையாளப்படுத்தப்பட்ட பரப்பினுள் சில கிலோமீற்றர்கள் சென்று இக்கோயிலை அடைய வேண்டும்.

நகுலேஸ்வரம் கோயில் ஈழத்து இந்துக்களால் மிகவும் போற்றி பூஜிக்கப்படுகின்றது. நகுலேஸ்வரத்திற்கு அருகிலேயே மற்றொரு பிரபல ஸ்தலமாகிய மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இருக்கிறது. நகுலேஸ்வரத்தின் தீர்த்தம் வங்கக் கடல்.. இது அவ்விடத்தில் கண்டகி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு பிதிர்க்கடன் நிறைவேற்றவும் சுவாமி தரிஸனம் செய்யவும் இப்பொழுதும் தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்துசெல்கிறார்கள்.

வடஇந்தியாவிலுள்ள வாரணாசி என்ற காசி ஸ்தலம் போல பிதிர்க்கடன் செய்ய மிகப்பிரசித்தி பெற்ற ஸ்தலமாக வடஇலங்கையிலுள்ள இந்த நகுலேஸ்வர ஸ்தலம் விளங்குகிறது. இக்கோயில் பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. வடமொழியிலுள்ள ஸ்காந்தத்தின், ‘தட்சணகைலாச மஹாத்மியத்திலும்’ இத்தலப் பெருமை பேசப்பட்டிருக்கிறது. கோயில் சார்ந்த ஊர் முன்பு ‘கோயில்க்கடவை’ என்றழைக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் வாழ்ந்தவர்கள் அத்தனை பேருமே ஸ்வாமிக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டு செய்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

sri-nagulambigai-sametha-naguleswararஇவ்விடத்தில் அமைந்துள்ள சமுத்திர தீர்த்தம் மகாமகத்துவம் நிறைந்தது. தனக்கு ஏற்பட்ட வியாதியால் (சாபத்தால்) கீரிமுகம் அடைந்த ஒரு முனிவர் இத்தலத்தில் அமைந்துள்ள சமுத்திர தீர்த்தத்தில் நீராடி நகுலாம்பிகை உடனாய நகுலேஸ்வர நாதரை வழிபட்டதால் சாபவிமோசனம் பெற்றார். இக்காரணத்தால் இவ்வூரே கீரிமலை என்று அழைக்கப்படுகிறது. நகுலம் என்ற வடசொல் கீரி என்ற பொருளில் இருக்கிறது. இதன் காரணமாக நகுலேஸ்வரம் என்றும் சுவாமி நகுலேஸ்வரர் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

9-ஆம் நூற்றாண்டில் சோழ தேச இளவரசி ஒருத்தி குஷ்டநோயால் பீடிக்கப்பெற்று குதிரை முகம் அடைந்து அதனைத் தீர்க்க வழியின்றித் தவித்து பல இடங்களிலும் சென்று கைகூடாமல் இறுதியாக கீரிமலையாகிய இவ்விடம் வந்து இறைவனருளால் குதிரை முகம் நீங்கப்பெற்று இக்கோயிலை பெருப்பித்துக் கட்டியிருக்கிறாள். இவள் இக்கோயிலின் அருகில் எழுப்பிய கந்தசுவாமி கோயில் அமைந்துள்ள பிரதேசமே ‘மாவிட்டபுரம்’ என்று அழைக்கப்படுகின்றது. மா-விட்ட-புரம் அதாவது குதிரை முகம் நீங்கிய இடம் என்பது இதன் கருத்தாகவும் கொள்வர்.

மாருதப்புரவல்லி என்ற அந்த இளவரசியார், தாம் கொண்டு வந்த முருகன் விக்கிரகத்தை தரையிறக்கிய இடமாகிய நகுலேஸ்வரம் கடற்கரை காங்கேசன்துறை என்று அழைக்கப்படுகிறது. இத்தகு சிறப்புகள் அமைந்த இக்கோயிற் பிராந்தியத்தில் கடந்த இருதசாப்தங்களாக எவரும் வசிக்கவில்லை (படையினரைத் தவிர). 1990-களில் ஏற்பட்ட கடும் போரினால் இப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய மக்கள் இப்போதுதான் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்ந்து வருகிறார்கள்.

f_041_copyயாழ்ப்பாணத்தரசர்களின் திருப்பணிகளால் மூன்று பிரகாரங்களுடனும் ஐந்து இராஜகோபுரங்களுடனும் பெரியதோர் ஆலயமாக நிர்மாணிக்கப் பெற்றிருந்த இக்கோயில் 1605-இல் முதலில் மதவெறி பிடித்த போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்டிருக்கிறது. அப்போது கோயிலிலிருந்த அர்ச்சகர்களும் அடியார்களும் கோயிலில் எழுந்தருளியிருந்த அம்பாளையும் மற்றுமுள்ள சில விக்கிரகங்களையும் பாதுகாப்பாக ஒரு கிணற்றில் இட்டு ‘ஜலாதிவாச’த்தில் பாதுகாப்புச் செய்திருக்கிறார்கள். எடுக்க இயலாததான மூலஸ்தானத்திலுள்ள மகாலிங்கத்தை அப்படியே ஏதோ ஒரு வகையில் மறைத்துப் பாதுகாத்திருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீண்ட கத்தோலிக்க மதவெறியர்களின் ஆட்சியில் கோயில் இருந்த இடமே தெரியாமல் தகர்க்கப்பட்டது. இது ஒருவாறு முடிய ஒல்லாந்தரின் ஆட்சியில் புரொட்டஸ்தாந்து சமயம் திணிக்கப்பட்டது. ஆயினும் இவர்கள் தம் இறுதிக் காலத்தில் இவ்வாறு செய்து பயனில்லை என்றறிந்து சிறிது மதச்சுதந்திரம் கொடுத்தனர். அப்போது இருந்த சைவ அபிமானிகள் பழைய கோயிலிருந்த இடத்தில் எழுப்பிய ஆலயத்தையே இன்றும் நாம் காண முடிகின்றது.

போர்த்துக்கேயர் காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட வரலாற்றுச் சோகமாக சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோயில் போரின் பெரும் பிடியில் பூட்டப்பட்டு பூஜைகள் ஏதுமின்றியிருந்தது. எனினும் தற்போது மக்களின் பேருதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. முறைப்படி பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. கோயிலின் பரம்பரையான பிரதான குருக்களாயும் பரிபாலகராயும் விளங்கும் 90 அகவை நிறைந்த சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் பல்வேறு விஷயங்களைக் கோயில் பற்றிச் சொல்கிறார்.

keerimalai-sahasra-lingam

அதிகளவான புனரமைப்புப் பணிகள் நிறைவேறியுள்ள நகுலேஸ்வரம் திருத்தலம் மிக விரைவில் கும்பாபிஷேகத்தினை காணும் என நம்பமுடிகிறது. கோயில் வழக்கப்படி முன்னர் மாசி மாத மஹாசிவராத்திரியை தேர்த் திருவிழாவாகக் கொண்டு சிவபெருமானுக்கு மஹோத்ஸவமும் ஆடிப்பூரத்தை நிறைவுநாளாகக் கொண்டு அம்பாளுக்கு மஹோத்ஸவமும் நடைபெறும். அது கடந்த இரு தசாப்தமாக தடைப்பட்டிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் அவை சிறப்புற நிகழ சிவனருள் வேண்டுவோம். எனினும் தற்போதும் ஆடி அமாவாசை மற்றும் சித்திராபூரணை நாள்களில் கோயிலை அண்டியுள்ள சமுத்திரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் புனிதநீராடி பிதிர்க்கடன்களை நிறைவேற்றி வருவதையும் அவதானிக்க முடிகிறது. இந்நிலையிலும் தற்போதும் கோயில் சார்பில் மக்கள் இன்னும் மீளக்குடியேறாத பகுதியிலுள்ள இக்கோயிலை வழிபட வருவோருக்கு மதியம் 12 மணிக்கு அன்னதானம் செய்யப்படுவதுடன் தினமும் மூன்று வேளையும் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருவது மனமகிழ்வைத் தருகிறது. ஆலயத்திலுள்ள சஹஸ்ரலிங்கம் மற்றும் நடராஜ விக்கிரகங்களின் கலை எழில்- கண்டு வழிபட வேண்டியன.

f_066_copyசிறப்பிற்குரிய இவ்வாலய வாகனங்கள் மற்றும் திருத்தேர் ஆகியன சிதிலமடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறமை வருத்தமளித்தது. இருபது வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயத்தைச் சுற்றிலும் பல்வேறு மடங்கள் காணப்பட்டிருக்கின்றன. தற்போதும் அவற்றின் அடையாளங்களைக் காணமுடிகின்றது. கோயிலில் மதியம் நடைபெறும் பூஜையாராதனையைக் கண்டு வணங்கிவிட்டு நகுலேஸ்வரத்திலிருந்து கடலோரமாக பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் நோக்கிப் புறப்பட்டோம். வழியில் அண்மையில் அமைக்கப்பெற்ற பௌத்தவிகாரையையும் காணமுடிந்தது. அதனருகில் ‘ஜம்புகோளப்பட்டின’ என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகை இருந்தது. அவ்விகாரையின் அருகில் திருவடிநிலை பொன்னாலைக் கோயிலின் பெருங்கடற் புனிததீர்த்தம் அமைந்துள்ளது.

திருவடிநிலை என்பது அவ்விடப்பெயர். ஸ்ரீமந் நாராயணனின் திருவடித் தாமரைகள் பட்ட இடமாதலில் அதற்கு அப்பெயர் உண்டாகியிருக்கிறது. ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ராவண சம்ஹாரம் செய்துவிட்டு சீதாதேவி மற்றும் ஹநுமான் உடன்வர இப்பகுதிக்கு எழுந்தருளினார் என்பதும் நம்பிக்கை. தவிர இவ்விடத்தினைப் பற்றிப் பல்வேறு புராணக் கதைகளையும் கேட்டறிய முடிந்தது. இத்தலம் பற்றியும் ஸ்காந்தம் அழகாக வர்ணனை செய்கிறது.

indiran-as-fisherman

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஒருமுறை தேவேந்திரன் பொன்னாலைப் பகுதியில் மீனவ குலத்தில் பிறந்தான். அவன் இக்கடற்கரையில் ஒரு நாள் வலை வீசிய போது ஓர் ஆமையை மிகவும் பிரயத்தனப்பட்டுப் பிடித்தான். பிடித்த ஆமை வலையையும் இழுத்துக் கொண்டு ஓடியது. இவன் தொடர்ந்து ஓடினான். அவன் சகாக்களும் அவனுக்கு உதவ ஓடினர். ஓரிடத்தில் ஆமையின் மேல் அவன் சரீரம் பட்டது. அந்த இடத்தில் ஆமை கல்வடிவானது.

ponnalai-sri-varadarajarஆமையின் மேல் தொட்ட உடன் தேவவடிவம் பெற்று சாபவிமோசனம் அடைந்தான் இந்திரன். இந்த இடத்தில் பொன்மயமான தேவவிமானம் வந்து அவனை ஏற்றிச்சென்றது. இவ்விடம் இதனால் ‘பொன்னாலை’ எனப்படுகின்றது. பகவான் நாராயணனே கூர்மாவதாரம் செய்து அருளியதாக உணர்ந்த மக்கள் அசரீரி வாக்கின்படி கல்லாய் மாறியிருந்த கூர்மரூபத்தை மூலாலயத்தில் வைத்து அதனுடன் பெருமாளின் திருவடிவத்தையும் வைத்துப் பிரதிஷ்டை செய்து போற்றினர். இதுவே இன்று நாம் காணும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலாகும்.

16-ஆம் நூற்றாண்டளவில் இக்கோயில் ஸ்ரீரங்கம் பெரிய கோயில் போல ஏழு பெரிய வீதிகளுடன் கூடியதாக பிரம்மாண்டமாக இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும் இதன் அடையாளங்கள் இக்கோயிலைச் சுற்றிக் காணப்படுகின்றன. ஏழாம் திருவீதியில் விநாயகர் ஆலயம் இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதனைக் காண முடிகிறது. ஐந்தாம் திருவீதியில் நரசிம்மப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. எனினும் இன்றைக்கு இக்கோயிலின் மூன்று வீதிகளையே சிறப்பாக அடையாளம் காண முடிகிறது.

மதவெறியர்களான போர்த்துக்கேயரினால் இக்கோயிலின் பெரிய பிரகாரங்கள் பலவும் முற்றாக அழிக்கப்பெற்றன. ஆனாலும் சிதிலமடைந்தது தவிர நரசிம்மப் பெருமானின் சந்நதிக்கு அப்பால் அவர்களால் சேதங்களை பெரியளவில் ஏற்படுத்த முடியவில்வையாம்.

இவ்வாலயத்திலிருந்து எடுக்கப்பெற்ற கற்களைக் கொண்டே யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் அமைத்த சங்கானைக் கோட்டை, ஊர்காவற்துறைக் கோட்டை ஆகியன அமைந்தன என்பர். இதற்கு ஆதாரமாக ஊர்காவற்துறைக் கோட்டையிலுள்ள கற்களில் சங்கு சக்கரத் திருச்சின்னங்கள் உள்ளதைப் பலரும் அவதானித்ததாகக் கூறுகின்றனர்.

இதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்தின் பிற்பகுதியில் கோயில் மீள அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றிலும் கடந்த போர் அனர்த்தங்களால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் பெருமாளின் பேரருளால் கோயிலில் பாரிய அனர்த்தங்கள் இல்லை. தற்போது ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பெற்றுள்ளது. விரைவில் (எதிர்வரும் தை மாதத்தில்) மஹாசம்ப்ரோஷணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ponnaalai-sri-varadaraja-perumal-koilஆலயத்திற்கு 108 அடி உயரமான இராஜகோபுரப் பணி நடைபெற்று வருகிறது. அது தற்போது நிறைவடையும் நிலையிலுள்ளது. கோயிலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான, ஒரே கல்லில் அமைந்த பள்ளிகொண்ட பெருமாளின் விக்கிரகம் மனதைக் கொள்ளை கொள்ளவல்லது. ஆலயத் தலவிரட்சமாக வன்னி விளங்குகிறது. பெருமாளுக்கு ஆண்டுக்கு இரண்டு மஹோத்ஸவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியைத் தேர்த் திருவிழாவாகக் கொண்டு 19 நாள்கள் ஆவணி மஹோத்ஸவமும் பரமபதவாசல் ஏகாதசியைத் தேர்த் திருவிழாவாகக் கொண்டு 10 நாள்கள் மார்கழிப் பிரம்மோத்ஸவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வைதீகப் பிராம்மணர்களாலேயே பாரம்பரியமாகப் பூஜிக்கப்பெறும் இவ்வாலயத்தில் வைஷ்ணவ மற்றும் வைதீக ஸம்ப்ரதாயங்களின் இணைப்பாக கிரியைகள் நடைபெறுகின்றன. ஆயினும் மிகப் பழைய காலத்தில் வைகானஸ ஆகமப்படியே கிரியைகள் நடைபெற்றதாக அறிய முடிகின்றது. திருக்கோயிலில் உள்ள திருத்தேரின் சிற்பங்களில் ஆலய வரலாறு சிறப்பாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தில் தசாவதார மூர்த்திகள், ஆழ்வார் பெருமக்கள், வேணுகோபாலர், தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர், ஹநுமார் ஆகிய மூர்த்திகளுக்கு சிற்றாலயங்கள் உள்ளன. மஹாலஷ்மித் தாயார் பெருமாளின் வலது பக்கத்தில் தனிச் சந்நதியில் எழுந்தருளியிருக்கிறாள்.

ponnaalai-sri-varadaraja-perumalகோயிலின் திருவாயிலில் அமைந்துள்ள புளிய மரத்தடியில் நம்மாழ்வாருக்கு சிறியதொரு ஆலயம் அமைந்திருக்கிறது. கோயிலின் உட்பிரகார சுவற்றில் தசாவதாரங்கள் மற்றும் ஆழ்வார்களின் சித்திரங்கள் மிக அழகாக அமைந்திருக்கின்றன. தசாவதாரச் சித்திரத்தில் நடுவில் கூர்மாவதாரமும் சுற்றிலும் மற்றைய அவதாரங்களும் உள்ளது போன்ற ஒரு தனிச்சித்திரத்தைக் காண முடிந்தது. அது இவ்வாலயத்தில் கூர்மாவதாரத்திற்கு அளிக்கப்பெறும் முதன்மையை வெளிப்படுத்திக் காட்டியது.

இது தவிர கோயிலில் நிகழும் முதற்பூஜை கல்வடிவில் தானேயமைந்த பெருமாளின் கூர்ம ரூபத்திற்கேயாகும். இன்றைக்கும் இறைவன் தீர்த்த உத்ஸவத்திற்காக திருவடிநிலைச் சமுத்திரத்திற்கு எழுந்தருள்கிறார்.

கடற்பேரலையால் ஆலயத்தினை நெருங்கவே முடியவில்லை. பெரும்போர் அலையும் ஷெல் வீச்சுக்களும் அழிவுகளும்கூட ஆலயத்தை– அதன் புனிதத்தை– அழிக்க முடியவில்லை. அங்கே பேரருளாளன் அல்லவா எழுந்தருளியிருக்கிறான்!

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன் – ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு

–என்று திருமழிசையாழ்வார் பாடுவதை அந்த ஈழத்து அரங்கன் ஆகிய பொன்னாலைப் பெருமாள் திருமுன்றலில் உணர்ந்து அனுபவிக்க முடிகிறது. அவன் திருமுன்றலில் ‘மா மேகம் சரணம் விரஜ‘ என்று காட்டுகிற வரதகரக் காட்சியில் நம் மனம் அமைதி கொள்கிறது; பேரானந்த நிலையை… ஒரு மனநிறைவை அடைகிறது. பிரபலமாக இலங்கையில் வழக்கிலுள்ள கல்யாண வசந்தம் இராகத்தில் அமைந்த மதுரபாவத்தில் இப்பெருமான் மீது பாடப்பெற்ற கீர்த்தனை ஒன்று ஞாபகம் வருகிறது.

பல்லவி

கல்யாண வசந்தமண்டபத்தில் எந்தன்
கால்தூக்கிக் கண்ணன் அம்மிக்கல்லில் வைத்தானடி (கல்யாண)

அனுபல்லவி

எல்லாம் மறந்தேனடி ஏகனோடிணைந்தேனடி
நல்லாயன் வேங்கடேசன் நாயகனானடி (கல்யாண)

சரணம்

ஓமப்புகை நடுவே ஓரக்கண்ணால் பார்த்து
கோமளப்புன்னகையால் குழைத்தானடி நெஞ்சம்
சியாமள வண்ணன் கண்ணன் சௌந்தர்ய லாவண்யன்
பூவளர் பொன்னாலைப்பதிப் புனித வரதராஜன் (கல்யாண)

23 Replies to “போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்”

  1. இலங்கையின் இந்து சமய நிலமைகளை நன்கு தெளிவாக காட்டும் கட்டுரையாக இது அமைகிறது. உலகளாவிய ரீதியில் இந்துக்களின் வாழ்வைப் பற்றிய நோக்கினை ஆராய்பவர்களுக்கும் இக்கட்டுரை உதவியாக அமையலாம்.

    கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
    மாற்றமும் சாரா வகையறிந்தேன் – ஆற்றங்
    கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
    உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு

  2. Pingback: Indli.com
  3. மயக்குகிறது தங்கள் தமிழ். உள்ளம் நிறைகிறது தங்கள் ஆன்மீக பொழிவால் !

    ஈழம் என்றும் வைதீக இந்து மதத்தின் வேர்களையே கொண்டது. புலிகளின் ஆளுமையில் இருந்த பகுதிகளில் மட்டும் நம் ஆலயங்கள் சிதைந்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் பகுதிகளில் கோவில்கள் நல்ல நிலைமையில் இருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.

    இறுதிப் பெரும் போரின் போது, கிழக்கு மாகாணத்தில் ஒரு ஆலயம் குடமுழுக்கு கண்டது. இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அங்கே போர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை போலும்.

    எங்கேனும் ஒரு கிருத்தவ ஆலயம் தாக்கப் படட்டும் , போராளிகள் அதை உலக அரங்கிற்கே கொண்டு செல்வர்.

    போராளிகளுக்கு கர்த்தர் தான் வேண்டும் போலும். இங்கே போராளிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் ‘கோவை அடுக்கு மொழி மன்னர்’ கூட தன் தலைவர் பாணியில் சிலுவை தூக்க ஆரம்பித்து விட்டதாகக் கேள்விப்படுகிறேன். உண்மைதானோ ? நாரணனைப் புகழ்ந்த பரம்பரையில் பிணத்தைப் புகழும் காகம் பிறந்து விட்டதோ ?

  4. உங்கள் கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை திரு .நெடியோன் குமரன் ,முன்பு போல் இல்லாமல் ,இறுதி போரில் தாயகத்தமிளர்கள் முழு ஆதரவையும் தராமலும்,சாலையில் இறங்கி போராடாமலும் இருந்ததற்குக்காரணம் போராட்டத்தை முன்நடத்திய தலைவர்களே! பெருவாரியான மக்கள் ஆதரவை பெற முடியாத நாத்திக வாத அமைப்புகளும் ,விடுதலை சிறுத்தைகளும் ,சினிமாக்காரர்களும் முன்னின்றதாலேயே ஈழத்தமிழர்கள் ஆதரவற்றுப்போயினர் .நம்பவேண்டியவர்களை நம்பாமல் போனதும் ,கூடா நட்புமே பிரபாகரனை ஆதரவற்று போகசெய்தது.

  5. திருகோணமலையிலும் சிவன் கோவில்கள் இருப்பதாக கேள்விபட்டிருக்கேறோம் .அந்த கோவில்கள் பத்தியும் எழுதுமாறு கேட்டுகொள்ல்கிறோம்
    நன்றி

  6. எத்தனை பேரழிவுகளைத் தாண்டி கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் மீண்டெழுந்திருக்கிறது! சிலிர்ப்பூட்டும் வரலாறு… இதே பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு பிரசித்தி பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது – Nakuleshwar temple, Pithoragarh. இமயமலைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் நடுவே என்னே ஒரு பண்பாட்டுத் தொடர்பு! பொன்னாலை பெருமாள் கோயில் பற்றிய செய்திகளும் மனதுக்கு ஆறுதலளிக்கின்றன.

    யாழ் நகரிலிருந்து பதினாறே கிலோமீட்டர் தொலைவில் உயர்பாதுகாப்பு வளையம் உள்ளதா? – ஆச்சரியம்!

    தமிழக வெகுஜன ஊடகங்களில் இலங்கைக் கோயில்கள், அவற்றின் தற்போதைய நிலை, புனருத்தாரணம் பற்றி விரிவான செய்திகள் இடம் பெறச் செய்யவேண்டும்.. கலாசார ரீதியாக தமிழகத்து பொது மக்கள் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களின் மீட்சியில் பங்களிப்பு செய்ய அது உதவும்.

  7. அன்புசால் சர்மா அவர்களுக்கு,

    தங்களின் இந்தக்கட்டுரை என் கண்களை நிறைத்தது. ஈழச்சோதரர் வாழ்வில் அமைதி திரும்ப வேண்டுகிறேன்.

    உலகியலோடு முரண்படா ஒட்டிப்போகும் சைவநெறி கடந்த சில நூறாண்டுகளாய் இங்கே தமிழகத்தில் வெட்டிப் போகும் சமயமாகி விட்டது.

    ‘அயனொடு மால் நமக்கு அன்னியமில்லை’ என்றும், ’பகலவன் மாலவன்‘ என்றும் தொன்மையான திருமந்திரமாலை காட்டிய வழியில் ஈழத்து இந்துக்கள் இன்னும் தொடர்வது கண்டு மகிழ்ச்சி!

    ஓர் ஐயம்:
    அங்கே பொதுவாய் பெருமாள் கோயிலில் பூஜை செய்வோர் சைவ அந்தணரா அல்லது ஸ்ரீவைஷ்ணவரா?

    அன்புடன்,
    ஜாவா குமார்

  8. பொன்னாலை கோவில் அருகில் இருக்கும் மூளாய் விநாயகர், முருகன்
    கோவில்களில் 2009 ஆண்டு இரவு பொழுதி இல் கோவில் சாமியின் தங்கமும்,சொத்துக்களும் கொள்ளை போயின.

  9. Absolutely brilliant, scintillating,soaked in Bhakti.
    It takes me to the narratives of ‘kalki’
    It makes me crave to be transported back in time by a time machine to drink in the beauty of Hindhu Dharma,art,temple building,literature etc.

  10. மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களுக்கு,

    தங்கள் தெரிவித்த இமய மலைச் சாரலில் நகுலேஸ்வரதலம் ஒன்றுண்டு என்ற செய்தி வியப்பளிக்கிறது. இது பற்றி மேலும் அறிய ஆவலுண்டாகின்றது. இது போலவே நாகையிலுள்ள செம்பொன் செய் கோயில் என்ற மங்களாசாசனம் பெற்ற கோயிலுடன் பொன்னாலையை ஒப்பிட முடியும். இவை இரண்டையும் இணைத்து இது வரை எவரும் நோக்கியதாகத் தெரியவில்லை. ஆனால் ஆச்சரியமாக மிகுந்த ஒற்றுமைகள் உள்ளதை எதேச்சையாக கவனிக்க நேரிட்டது.

    இரண்டிடமும் வரதராஜர் (பேரருளாளர்) மற்றும் பொன்னரங்கர். இரண்டும் பொன் கோயில் (பொன்னாலயம் ஒன்று. மற்றொன்று பொன் செய் கோயில்) கிழக்கு நோக்கிய காட்சி. இப்படி எத்தனையோ ஒற்றும. 60 ஆண்டுகளுக்கு முன் வரை எந்த ஒரு பாஸ்போட் அனுமதி விசா எதுவுமில்லாமல் சில மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுமரத்தில் நாகபட்டினம் மற்றும் வேதாரண்யத்திற்கு வந்து போகலாம். இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குமார் அவர்களுக்கு,

    இலங்கையில் வைஷ்ணவக் கோயில்கள் உள்ளன. ஆனால் முழு வைஷ்ணவர்கள் இல்லை. விபூதி பூசிக் கொள்கிற விஷ்ணு பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள். பழங்காலத்தில் வைஷ்ணவர்கள் நிறைய இருந்திருக்கலாம் என்று நம்ப முடிகிறது. புறப்படையெடுப்புக்களும் இடர்ப்பாடுகளும் அவர்களை சைவர்களோடு இணையச் செய்து விட்டது என்று நான் கருதுகிறேன்.

    தற்போது விஷ்ணுவாலயங்களில் பூஜை செய்பவர்கள் வைதீகப்பிராம்மணர்கள். வைஷ்ணவர்கள் அல்ல.. என்றாலும் இவர்களின் பரம்பரை முன்னர் வைஷ்ணவர்களாய் இருந்திருக்கலாம் என்று கருத முடிகிறது.

    பின்னூட்டல்கள் இடுகை செய்யும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்… இலங்கைத் திருக்கோயில்கள் பற்றி (நல்லூர் கந்தசுவாமிகோயில், நயினை நாகபூஷணி, போன்ற பிரபலமான) அறிய விரும்புகிறவர்களுக்கு இணையத்தளங்களில் நிறை நிறையச் செய்திகள் உள்ளன. தேடற்பொறிகளில் தேடிப்பாருங்கள்..

  11. தகவலுக்கு நன்றி சர்மா அவர்களே,

    “பழங்காலத்தில் வைஷ்ணவர்கள் நிறைய இருந்திருக்கலாம் என்று நம்ப முடிகிறது. புறப்படையெடுப்புக்களும் இடர்ப்பாடுகளும் அவர்களை சைவர்களோடு இணையச் செய்து விட்டது என்று நான் கருதுகிறேன்.”

    அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று அடியேன் நினைக்கிறேன். ஏனென்றால்
    “தற்போது விஷ்ணுவாலயங்களில் பூஜை செய்பவர்கள் வைதீகப் பிராம்மணர்கள்.“ – என்று நீங்கள் சொல்வதுபோல் கேரளத்திலும் அவ்வண்ணமே.

    இத்திறக்கில் மேலும் ஏதாவது அறியவந்தால் சொல்லுங்கள்.

    அன்புடன்,
    குமார்

  12. திரு குமார் அவர்களுக்கும் திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கும்,

    எனக்கு இலங்கையின் இந்துமத சம்பந்தமான வரலாறு பற்றி அதிகம் தெரியாது. இருப்பினும் திரு குமார் அவர்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு ஒரு யோசனை:

    //
    “பழங்காலத்தில் வைஷ்ணவர்கள் நிறைய இருந்திருக்கலாம் என்று நம்ப முடிகிறது. புறப்படையெடுப்புக்களும் இடர்ப்பாடுகளும் அவர்களை சைவர்களோடு இணையச் செய்து விட்டது என்று நான் கருதுகிறேன்.”

    அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று அடியேன் நினைக்கிறேன். ஏனென்றால்
    “தற்போது விஷ்ணுவாலயங்களில் பூஜை செய்பவர்கள் வைதீகப் பிராம்மணர்கள்.“ – என்று நீங்கள் சொல்வதுபோல் கேரளத்திலும் அவ்வண்ணமே.
    //

    இந்த முடிவுக்கு வருவதற்கு முன், இன்னொரு விஷயத்தைக் கண்டுக்கொள்ள வேண்டும்: திரு சர்மா அவர்கள் கூறும் கோயிலில் ஆழ்வார்களுக்குச் சந்நிதி இருப்பதாகத் தெரிகிறது. சித்தாந்த ரீதியில் வேறுபட்ட வைஷ்ணவர்களும் விஷ்ணுபக்தர்களும் பல விதமானவர்கள் இருக்கலாம். ஆனால், ஆழ்வார் சித்தாந்தம் ஸ்ரீவைஷ்ணவம் ஒன்றுக்கே தனிச்சிறப்பானது. கேரளத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் என் சிற்றறிவுக்குத் தெரிந்தவரை ஆழ்வார் சந்நிதி இல்லை — இது தவறானால் திருத்தலாம். இருந்தாலும் இலங்கையில் உள்ள இப் பெருமாள்கோயில் ஸ்ரீவைஷ்ணவர்களால் நிர்மாணிக்கப்பட்டது என்று அடித்துக் கூறவில்லை — சித்தாந்த விஷயமாக ஆழ்வார்களை முழுமையாக ஏற்கவில்லையானாலும், பக்திரச்சத்திர்காக ஆழ்வார்களை ஏற்றுக்கொண்டு அப்படிக் கட்டியிருக்கலாம், அல்லது தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களை அடிப்படையாக வைத்து மக்களோ அரசனோ கட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.

    எப்படி இருப்பினும், இது ஒரு academic point அவ்வளவே. விஷ்ணுபக்தர்கள் எக்கோலத்தில் இருந்தாலும் விஷ்ணுபக்தர்களே.

  13. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    மிகவும் informative-ஆன கட்டுரை தந்ததற்கு நன்றி.

    “அத்வைத ஸ்மார்த்த பிராம்மணர்கள்” என்பதைத் தான் “வைதீக பிராம்மணர்கள்” என்று கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வைஷ்ணவ பிராம்மணர்களும் வைதீக நெறியில் உள்ளவர்களே என்று தாழ்வுடன் தெரிவிக்க அனுமதி கோருகிறேன். வேதமோதும் (ஸ்மார்த்த, வைஷ்ணவ, மத்வ, வேறு பிரிவினர்) பிராம்மணர்கள் அனைவரும் வைதீகர்களே. “ஒருவருக்கு வேதம் பிரமாணம், மற்றொருவருக்கு வேறு ஏதோ நூல் பிரமாணம்” என்ற அபிப்பிராயம் வரக்கூடாது என்பதால் கூறினேன். தவறானால் மன்னிக்கவும்.

  14. கந்தர்வன் அவர்களுக்கு,

    தாங்கள் சொல்வது சிந்திக்கத்தக்கது. இந்துக்கள் அனைவருமே வேதத்தைப் பிரமாணமாகக் கொள்பவர்களே… எனவே அவர்கள் யாவரும் வைதீகர்களே. நடைமுறை வழக்காற்றுச் சொல்லை பயன்படுத்திதால் ஏற்பட்ட குழப்பமே இது… அச்சொல் வழக்கில் உள்ள தவற்றை தெளிவாகச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்… இன்னும் இக்காரணத்தாலேயே நமது இந்து தர்மம் வைதீக தர்மம் என்றும் அழைக்கப்படுகின்றதையும் எண்ண சிந்திக்க முடிகிறது.

  15. அன்புள்ள திரு மயூரகிரி அவர்களே,

    சொல் வழக்கையும் அதன் அர்த்தத்தின் வரையறைகளையும் புரிந்துக்கொண்டால் சரி. சொல்வழக்கையே மாற்றவேண்டும் என்று நாம் ஒரு நாளும் கூறுவதில்லை (சொல்வழக்கையே மாற்றவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் பண்ணுபவர்கள் political correctness பார்க்கும் இடதுசாரிகளே). விஷயத்தைத் தேவையில்லாமல் வளர்த்திருந்தால் மன்னிக்கக் கோருகிறேன். மையக் கருத்துக்கு tangential-ஆக உள்ள விஷயத்தைப் பற்றிப் பேசியதற்கு பொறுத்தருள்வீர்களாக.

  16. தமிழகத்தில் உள்ள வைதிகப் பிராமணரிடத்தில் வைணவம் மாத்துவம் ஆகியபிரிவுகளின் தாக்கம் காணப்படுவது போல ஈழத்து வைதிக பிராமணரிடத்துக் காணப்படுதல் இல்லை. ஆனால் சைவத்தின் செல்வாக்கு அவர்களிடம் மிகுதியும் காணப்பட்டது. ஈழத்து அந்தணர்கள் சைவநெறியில் நின்று திருமாலிடமும் பத்தி செலுத்தினர் என அறிகிறேன். திருமாலைச் சிவனுடைய மாகேசுவர மூர்த்தங்களில் ஒன்றாக வழிபடுவது சைவமரபு.. அதனால் வைதிகப் பிராமணர்கள் ஈழநாட்டுப்பெருமாள் கோவில் அருச்சகர்களாக இருத்தலில் புதுமையொன்றும் இல்லை. ஈழத்து வைதிக அந்தணர்களிடத்தில் இராமானுஜ சித்தாந்ததின் அடிப்படையிலான வைணவமோ மாத்துவர் சித்தாந்தின் அடிப்படையிலான வைணவமோ பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகின்றது. ஈழநாட்டுச் சைவர்களிடையே வரதராஜப் பெருமாள், திருவரங்கன் முதலிய பெயர்கள் காணப்படும்.( யாழ்ப்பாணத்தவராகிய என்னுடைய சம்பந்தியின் பெயர் வரதராஜப் பெருமாள்). தமிழ்நாட்டில் காணப்படும் சைவவைணவ வேறுபாடுகளோ, பிராமணர் பிராமணர் அல்லாதார் வேறுபாடுகளோ சண்டைகளோ ஈழத்தில் காணப்படவில்லை . தமிழ்நாட்டிலும் பழங்காலத்தில் இத்தகைய வைதிகமே நிலவியிருந்திருக்க வேண்டும். ஈழம் அண்மைக்காலம் வரைக்கும் இந்நிலைமையைக் காப்பாற்றி வந்துள்ளது. இது என்னுடைய ஊகமே.

  17. ஐயா,

    தங்களின் ஊகம் மிகச்சரியானதே. ஈழத்து இந்துசமயம் ‘அத்துவிதம் ஆதல் அகண்டமும் தெய்வமே’ என்ற மெய்கண்டாரின் பேருரைக்கேற்ற தொன்மையான meta சைவம் என்பதே என் புரிதலும். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வைணவம் வெட்டிபோனபின், தமிழ்நாட்டுச் சைவரில் சிறுபான்மையும் தமக்குள் சுருங்கியிருக்கலாம். அதுவும் அருணகிரியார் காலத்தில் தம்மியல்புக்குத் திரும்பியதைக் காணமுடிகிறது.

    கந்தர்வன் அவர்கள் சொல்வதைபோல் ஆழ்வாராதிகள் இருந்தால் அங்கே ஸ்ரீவைஷ்ணவ மரபினரே பூஜை செய்வர் என்றால் குலசேகர ஆழ்வார் பிறந்த மலைநாட்டு திவ்யதேசங்களில்கூட அப்படி இல்லை என்று பார்க்கிறோம். தமிழகம் கடந்த பத்ரிகாஸ்ரமம் உள்ளிட்ட தலங்களிலும்.

    ஆதியில் ஆழ்வார்களே இப்படியான பிரிவினை கொண்டவரில்லை என்பதும் அவர்தம் பாடல்கள் மூலமே அறியமுடிகிறது.

    முதல் திருவந்தாதியில் பொய்கையாழ்வார் பாடுவது:

    நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
    பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம்
    ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
    ஆலமமர் கண்டத் தரன்.

    அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
    உரை_ல் மறையுறையும் கோயில், – வரைநீர்
    கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
    உருவமெரி கார்மேனி ஒன்று.

    திருமூலரும் இதைத்தான் சொல்கிறார்:
    ஆதிப் பிரானும் அணி மணிவண்ணனும்
    ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
    சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
    பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே.

    அன்புடன்,
    ஜாவா குமார்

  18. முனைவர் அவர்களுக்கு,

    தங்களின் கருத்து மிகவும் தெளிவானதும் சரியானதும் ஆகும். இலங்கையில் நாஸ்தீகமும் இல்லை. இலங்கை அரசாங்கம் பௌத்த குருமார்களுக்கு மிகுந்த மரியாதை வழங்குகிறது. அதே வேளை அப்படி வழங்கப்படும் போது இந்துக்குருமார்களுக்கும் மரியாதை வழங்கப்பெறுதல் இயல்பானது. இந்துக்களிடத்தில் சைவ வைஷ்ணவ ஸ்மார்த்தப் பிரச்சினைகளும் அறவே இல்லை. தாங்கள் தெளிவாக இதனைப் புரிந்து கொண்டு அதனைப் பதிவு செய்ததையிட்டு மிக்க நன்றிகள் தெரிவிக்கிறேன்.

    அரியும் அரனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்று குழந்தைப் பிள்ளை கூட சொல்வதை அறிய வேண்டும். முதலில் நாம் நம்முள் ஒற்றுமைப்பட்டு காரியங்களைச் செய்ய வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களை எடுத்து அது முந்தியதா? இது முந்தியதா? என்று வீணே மற்றவர்களின் வாய்க்கு அவல் கொடுக்கக் கூடாது. நாம் ஹிந்துக்கள்.. ஹிந்துதர்மத்தின் படி வாழ்வதே நமக்குச் சிறப்பு….

  19. இலங்கை வடக்கில் வல்லிபுரம் கோயிலில் மட்டும் வைணவ முறைப்படி பூசை நடப்பதாக கேள்விப்பட்டதுண்டு.

  20. திருமூலர் பாடலுக்கு நன்றி. அதையேதான் ஆதிசங்கரரும் சொல்கிறார்:

    AdiSankara in Maya Panchakam:

    vidhiharihara vibhedámapyakhaïde
    bata viracayya budhánapi prakámam
    bhramnayati hariharavibhedabháván
    aghaûitaghaûanápaûèyasè máyá.(5)

    Máyá which is skilful in accomplishing the impossible deludes, alas, very much Harim Hara, and others, though wise, by introducing the distinctions of Brahmá, Hari and Hara in the unitary reality.

  21. Hundreds of Hindu temples have been destroyed during the last 25 years by the successive sinhala buddhist governments in the north and east of srilanka. Hindu priests were arrested detained and torutured by the Sinhala armed forces. Very recently in Trincomalee ( eastern province of srilanka) three hindu temples were destroyed and in its place three buddhist temples were built by the buddhist extremists called “hela urumaya” with the help of government and state armed forces. Buddhist monks belonging to Hela Urumaya are sitting as members of parliament. I request Mayoorakiri Sharma to write more on destruction of hindu emples nd religious conversion that has been taking place so that readers in India could come to know more.

    Tere is a book titled “destruction of Hindu Temples in Sri lanka” published in London about ten years ago. It may be vailable at Kanthalakam publishers in Madras.I request all hindus living in India should read this book to know more about hindus in Srilanka.

    Rishi

  22. ஏன், எதற்கு கிறித்தவர்கள் ‘அன்பு கடவுள், கடவுள் அன்பு’ என்று கூறிக்கொண்டே, எங்கிருந்தெல்லாமோ வந்து, இந்துக் கோவில்களை இடிக்கவேண்டிய, மனநிலை பாதிக்கப்பட்ட நோயினால் அவஸ்த்தை பட்டார்கள் என்று, மனநிலை நோய் நிபுணர்கள் சேர்ந்து ஆராய்ந்து,
    முடிவுகளை தற்போதைய அனைத்து ஐரோப்பிய கிறித்தவ நாடுகளின் அரசாங்கங்களுக்கும் அனுப்பி அவமானப்படுத்த வேண்டும். இந்நிலையில் இந்துக்கள் அனைவரும் படிக்கக்கூடிய, புத்தகத்தின் இணைத்தளத் தொடர்பை அளிப்பதில், திருப்தி அடைகிறேன்:
    https://books.google.co.in/books?pg=PA30&dq=puranas&ei=lE7ATM6CIoHCvgPf5ZH9Cg&ct=result&id=PKrE8vPRjJYC&output=text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *