அறியும் அறிவே அறிவு – 5

அறியும் அறிவே அறிவுபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

(தொடர்ச்சி…)

deepam

 விதியையும் மதியையும் பற்றி நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இப்படிச் சொல்வார்- “சீட்டாட்டதின் போது கலைக்கப்பட்ட சீட்டுகள் நால்வருக்கும் விழுகிறதே, அதில் ஒருவரை எடுத்துக் கொண்டால் அவருக்கு விழுந்திருக்கும் சீட்டுகளை விதிப்படி விழுந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அந்தச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு எப்படி ஆடுகிறாரோ அதை அவரது மதியால் ஆடுகிறார் என்று கொள்ளுங்கள்” என்பாராம். அதாவது, நமது சக்திக்கும் புறம்பாய் அமைவது விதி, சக்திக்கு உட்பட்டு நாம் செய்யும் செயல்களை நாம் நமது மதியால் கட்டுப்படுத்தலாம் என்பதை இக்கருத்து அறிவிக்கிறது. ஆகவே விதியை நொந்து ஒரு பயனும் இல்லை, ஆனால் நமது மதியை உபயோகப்படுத்தாது நாம் இருப்பது அறிவுள்ள செயல் ஆகாது. ஆனால் நாம் செய்யும் செயலினால் நமது விதியும் கட்டுப்படலாம் என்பதை இந்த உதாரணம் விளக்கவில்லை அல்லவா? சரி, ரமணர் அவரது உன்னத நிலையிலிருந்து நமக்கு என்ன அருளுகிறார் என்று பார்ப்போம். 
 

விதிமதி மூலம் விவேகம் இலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் – விதிமதிகட்கு
ஓர் முதலாம் தன்னை  உணர்ந்தார் அவை  தணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று

பொருள்: விதி மதிகள் என்னும் இரண்டுக்கும் ஆதாரமாயுள்ள அகங்காரத்தின் உண்மையை அறியாத அஞ்ஞானிகளுக்கு விதியை மதி வெல்லுமா, மதியை விதி வெல்லுமா என்ற வாத விவாதங்கள் தோன்றும். விதி மதிகளாகிய இரண்டுக்கும் ஒரே அடிப்படையான அகந்தையின் ஆதார உண்மையாகிய தனது ஞான சொரூபத்தை உணர்ந்தவர் அந்த விதி மதியென்ற இரண்டையும் ஒழித்தவராவர். அவர்கள் மீண்டும் விதி மதிகளாகிய அவற்றைச் சார்ந்து பாதிக்கப்படுவார்களோ? சொல். 

ramanar3சாதாரணமாக விதி என்பதை ஈஸ்வர நியதி என்றும், மதி என்பது நமது முயற்சியால் ஆவது என்றும் சொல்வார்கள். சிலர் இரண்டுமே இறைவனின் சித்தப்படி நடக்கிறது என்று கொள்வர். மற்றவர்களோ மதி என்பதை நாம் நினைத்தபடி செய்வதால் அடைவது என்றும் அதற்குக் காரணம் நாமே என்றும் கொள்வர். ஆனால் தாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் சிலர் அது விதியின் சதி என்று அலுத்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் விதி-மதி என்ற இரண்டுமே காரணம்-விளைவு (cause and effect) என்ற நியதிக்குள் கொண்டு வரப்படுவது என்று தெரிகிறது. அதாவது நாம் தற்போது நினைத்துச் செய்வதால் விளைவது என்றும் முன்னர் செய்த வினையால் விளைவது என்றும் இவைகளுக்கு காரண கர்த்தாவாக நாமோ, இறைவனோ இருக்கிறோம் என்றும் கொள்ளப்படுகிறது.  

கூர்ந்து கவனித்தால், விதி-மதி என்ற இரண்டுக்குமே மூலமாக நமது தேக-ஆத்ம பாவனையைத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் நாம் உடம்பு என்று கொள்ளும்போதுதான் நமக்கு ஆன்ம சிந்தனை வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போதுதான் மற்றவர்களை உள்ளடக்கிய உலகம் தெரிகிறது. அந்த நிலையில்தான் நமது முயற்சி, நமது செயல், அதன் விளைவுகள் என்றெல்லாம் தெரிகிறது. அங்குதான் விதியால் வந்தது, மதியால் விளைந்தது, விதி மதியை வெல்லுமா அல்லது மதி விதியை வசப்படுத்துகிறதா என்ற வாதங்களும் கிளைத்து எழுகின்றன.ஆக இவை அனைத்துக்கும் காரணமான “நான்” என்னும் அகந்தை என்ன என்று அதைத் தேடி அதன் மூலமான ஞான சொரூபத்தை உணர்ந்தவர்கள், விதி-மதி என்று ஏதும் தனியாக இல்லை என்றறிந்து அவை இரண்டையும் அழித்தவர்கள் ஆவர். அவர்கள் மறுபடியும் அவைகளைச் சார்ந்து அதனால் பாதிக்கப்படுவார்களோ என்று ரமணர் கேட்கிறார்.

இருந்தும் ஒருவனின் மதியால் உலகில் நடக்கும் பல சாதனைகள் சீடனுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. இப்படியாக மதியின் செயல்களைப் பார்க்கும் சீடனுக்கு தன் மதியாலேயே அதன் மூலமான ஆன்மாவை அறிய முடியாதா என்ற சந்தேகம் வரலாம் அல்லவா? அதற்கு ரமணர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 
 

மதிக்கு ஒளி தந்து அம்மதிக்குள் ஒளிரும்
மதியினை உள்ளே மடக்கிப் – பதியில்
பதித்திடுதல்  அன்றிப் பதியை  மதியால்
மதித்திடுதல் எங்கன் மதி

பொருள்:  அனைத்தையும் அறிந்து கொள்ளும் மனத்திற்குப் பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டு, அந்த மனதிற்கும் ஆதாரமாக அதனுள் இருந்து விளங்கிக்கொண்டு இருக்கும் இதயப் பதியாகிய ஆன்மாவில், மனதை வெளி விஷயங்களில் போகாமல் அந்தர்முகப் படுத்தி நன்றாகப் பதியும்படி ஒன்றுபடுத்துவதை விட்டு அந்த ஆத்ம சொரூபத்தை புத்தியினால் அளவிட்டு அறிவது அல்லது மதிப்பிடுவது எப்படி முடியும் என்பதை உணர். 

மனித குலத்தின் வளமைக்கும் முன்னேற்றத்திற்கும் எண்ணங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. வேறு பல சீவ ராசிகளுக்கும் எண்ணங்கள் இருக்கலாம், ஆனாலும் எண்ணங்கள் தனக்கு இருக்கின்றன என்று அறியும் அறிவும் அவைகளைக் கட்டுப்படுத்தவும் விரிவாக்கவும் சீராக்கவும் மனித இனம் ஒன்றுக்குத்தான் உண்டு என்பதே உண்மை. 

அதனாலேயே நமக்கு எண்ணங்கள் மட்டுமல்லாது எண், எழுத்து என்றிவ்வாறான ஆற்றல்களும்  வளர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, தனது வாழும் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக தற்காப்பிற்காக தூரத்தே நின்று தாக்கும் வல்லமையும் மனிதப் பரிமாணத்தில் வளர்ந்த இனத்திற்கே உள்ளது. அதனாலேயே நாம் மற்ற விலங்கினங்களைவிட இயற்கையில் பலம் இல்லாது உள்ளோம். அறிவே நமது பலம். எதையும் நல்ல முறையிலோ தீய முறையிலோ பயன்படுத்திக் கொள்வது அவரவர்கள் அறிவு முதிர்ச்சியைப் பொருத்து அமைகிறது. 

எண்ணங்களினால், அதற்கேற்பச் செய்யப்படும் செயல்களால், செயல்களின் விளைவுகளால், அவைகளைப் பற்றிய எண்ணங்களால் என்ற இந்தச் சக்கரம் சுழன்று கொண்டே போகிறது. அதற்கேற்ப ஒருவனின் வாழ்க்கையும் அமைகிறது. அத்தகைய தொடர் எண்ணங்களின் தொகுப்பே ஒருவனின் மனம் என்று முன்னால் பார்த்தோம். 

அப்படி வெளிப்படும் மனத்தைச் செலுத்தும் உள்ளுறை சக்தியாக ஒருவனின் மதி அமைவதால், இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. அந்த மதி அல்லது மனத்தைக் கொண்டே ஒருவன் உலகில் உள்ளது அனைத்தையும் காண்கிறான், அறிகிறான். மதியினால் உலகில் உள்ளவைகளை அறிய முடியுமே தவிர, மதியையோ அதன் மூலத்தையோ அந்த மதியின் உதவியால் எப்படிக் காண முடியும்? 

அந்த மதியோ மனமோ இருக்கும்போதுதான் ஒருவன் உலகைக் காண்கிறான். ஒருவனின் உறக்கத்தில் இவை எதுவுமே அனுபவத்தில் இல்லை. ஏனென்றால் அப்போது அவனுக்குத் “தான்” என்ற உணர்வும் கிடையாது. ஆக இவை அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவது ஆன்மாவே. மதிக்கே ஒளி தந்து அதற்கு ஆதாரமாயுள்ள ஆன்மாவை மனத்தால் அறிவது எப்படி? 

அப்படி மனம் முயற்சி செய்தால் எப்படி இருக்கும் என்று “அருணாச்சல அஷ்டக”த்தில் உருவம்-அருவம் பற்றிப் பேசும்போது ரமணர் சொல்வார்:

உன்னுரு உனலற உன்னிடம் உன்ன முந்நீர்
உரு சருக்கரை உரு என உரு ஓயும்
 

பொருள்: உனது உண்மை சொரூபத்தை மனதினால் நினைக்காமல், உள்ளபடி உணரும்போது கடலில் (அதன் ஆழத்தை அளக்கச் சென்ற) சர்க்கரை பொம்மையின் உருவம் கரைவதுபோல (மனம் தன்னுடைய) உருவத்தை இழக்கும் என்று சொல்கிறார். .

புத்தியினால் “ஆன்மாவே எல்லாம்” என்று தெளிந்தபின், அந்த மனத்தினால் ஆன்மாவை அறிவதை விட்டு, அந்த மனத்தை வெளியே செலுத்தாது அதன் மூலமான ஆன்மாவிற்கு அன்னியமாக இல்லாமல் ஆன்மாவிலேயே மூழ்கி அதனுடன் ஒன்றுபடுதல் மட்டுமே அதற்கு ஒரே வழி.

மௌனம் என்றால் வாயை அடைக்கலாம். ஆனால் மனத்தை வெளியே செலுத்தாது அமைதியில் ஆழ்ந்தால், ஏதோ எண்ணங்கள் வந்து நம்மை அலைபாய வைக்கிறதே என்று சீடனுக்கு ஐயம் வந்தால் தவறில்லை. அது எல்லோருக்கும் வருவதுதானே? எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது “நான்” என்னும் எண்ணமே. அதுதான் அகந்தை என்றும் சொல்லப்படுகிறது. அதன் தன்மை என்ன? 
 

உருப்பற்றி உண்டாம் உருப்பற்றி நிற்கும்
உருப்பற்றி  உண்டு மிக  ஓங்கும் – உருவிட்டு
உருப்பற்றும்  தேடினால் ஓட்டம் பிடிக்கும்
உருவற்ற பேய் அகந்தை ஓர் 

பொருள்:  தனக்கென்று ஒரு உருவமில்லாது பேய் போல அலையும் உருவற்ற அகந்தையானது ஒரு உடலை “நான்” என்று பற்றிக்கொண்டுதான் உண்டாகும்; அந்த உடலைப் பற்றிக்கொண்டுதான் நிற்கும். அப்படி உடலைப் பற்றிக்கொண்டே, விஷய ஆகாராதிகளைப் புசித்து, இன்ப துன்பங்களை நுகர்ந்து அவற்றின் வாசனா பலத்தினால் மிக ஓங்கி வளரும். ஒரு உடல் நசித்தால் மற்றொரு உடலைப் பற்றிக்கொள்ளும். அதன் உண்மையைத் தேடி விசாரித்தால் அது நில்லாது, இருப்பற்று ஓடிப் போகும் என்பதை அறிவாயாக.

நாம் விழித்திருக்கும் நிலையில், உலகில் நமது கடமைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் போது, நம்மையும் அறியாமல் வேலைகளில் மூழ்கியிருக்கும் போது, நமக்கு அந்த வேலையைத் தவிர வேறு எந்த நினைப்பும் இருக்காது. ஆனால் அசதியினாலோ, வேறு ஏதேனும் ஒரு காரணத்தினாலோ செய்து கொண்டிருக்கும் வேலை நிற்கும்போது, நமக்கே தெரியாது “நாம் வேலை செய்கிறோம்” என்ற நினைப்பு வரும். அந்தச் சமயத்தில் “நான்” என்ற அந்த நினைவைச் சுற்றி எழும் எல்லாவிதமான நிலைகளும் அகந்தையால் எழுவன என்று இப்போதைக்குக் கொள்ளலாம். 

அதேபோல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழிக்கும்போது முதன் முதலில் தோன்றும்  “நான்” என்ற எண்ணம்தான் அகந்தையின் முதல் எழுச்சி. அப்போதுதான் நமக்கு நமது உடல் என்ற உணர்வும் வரும். அதற்குப் பின்னரே மற்றவர்களைப் பற்றியோ, அல்லது அன்று நாம் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றியோ எண்ணங்கள் வரும். இவை எல்லாமே அகந்தையின் வெளிப்பாடுகளே.

இதைக் கூர்ந்து கவனித்தால் பல உண்மைகளை நாம் அறியலாம். “நான்” என்ற அந்த எண்ணத்தைத் தொடர்ந்தே பல எண்ணங்களின் தொகுப்பான மனமும் எழுகிறது. அவைகளில் “நான் உடல்” என்பதும் ஒரு எண்ணமே. நமது தூக்கத்தில் “நான்” என்ற எண்ணமோ வேறு எந்த விதமான எண்ணமோ இல்லை, உடலும் இல்லை. ஆக இந்த உடலைப் பற்றிக் கொண்டே அகந்தை எழுகிறது.

இது தவிர நமக்கு ஆழ்ந்த தூக்கம் இல்லாத நிலையில் கனவுகள் வரும்போது, நமது அனுபவம் என்ன? நம்மைப் பற்றியே கனவு இருந்தாலும், அப்போது விழிப்பு நிலையில் உள்ள இந்த உடலைப் பற்றியா அது இருக்கிறது? நம்மைப் புலி துரத்துவதாக கனவு என்று இருந்தால், அந்தக் கனவில், புலி நமது கனவு உடலைத் துரத்துவதாகத்தான் நாம் கனவு காண்போம்; இந்த உடலை அல்ல. ஏனென்றால் நாம்தான் கனவில் ஓடிக்கொண்டிருக்கிறோமே. மேலும் கனவுக் காட்சியை நமது உடல் சம்பந்தப்பட்ட மனமானது, தான் என்று தெரியாமலேயே, பார்த்துக் கொண்டிருக்கிறதே. இல்லையென்றால் அந்தக் கனவு எப்படி நமக்குத் தெரிய வரும்? அதற்காக ஒரு கனவு உடல், கனவுப் புலி, கனவு நிகழ்ச்சி என்று எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டு, நாம் கனவையும் அனுபவித்துக் கொண்டு இருப்போம். அவை எல்லாவற்றையும் கனவின் இறுதியில்தான் முடிவுக்குக் கொண்டு வருவோம். அதுவரை எல்லாம் நனவில் நடப்பது போலத்தான் இருக்கும்.

கனவில் வருவதெல்லாம் நமது நனவில் நடந்த அல்லது நினைக்கப்பட்டோ, நினைக்கப்படாமலோ ஆழ்மனத்தில் புதைந்துள்ள நிகழ்ச்சிகளின் பாதிப்புகளே என்று அனைவரும் அறிவர். ஆதலால் நமது அகந்தையின் சாயல் அதிலும் இருக்கும். இப்படியாக நமது அகந்தை இடத்திற்குத் தகுந்தாற்போல் நனவு உடல், கனவு உடல் என்று ஒவ்வொன்றாகத் தொற்றிக்கொண்டு போகும். எப்படி கனவு முடியும் தருவாயில் நமது கனவு உடல் கழன்று போகிறதோ, அதைப் போலவே ஞானம் வரும்போதும் நனவில் நாம் காணும் இந்த உடல் எனும் எண்ணமும் கழன்று போகும். நாம் உடலைக் காணும்வரை அகந்தை இருந்துகொண்டே இருக்கும். 

“நான் உடல்” என்ற எண்ணம் அழியப் பெறாதவர்களின் உடல் இறந்து போகும்போது, அவர்களின் அகந்தைக்கு வேறு உடல் தேவைப் படுகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா? இந்த அனுபவங்களே முற்பிறவி-இப்பிறவி-மறுபிறவிகளில் வெவ்வேறு உடல்களைச் சார்ந்து தொடரும் அகந்தையின் விளைவுகள் என்றும் காணலாம். 

அகந்தைக்கு என்று உருவம் ஒன்று இல்லாவிடினும் ஏதோ ஓர் உடலைப் பற்றிக்கொண்டு செல்கிறது. இப்படி நம்மை ஆட்டிப் படைக்கும் இந்த அகந்தைதான் என்ன என்று தீர விசாரிக்க எத்தனிக்கும்போது, அது பிடிபடாது ஓட்டம் பிடிக்கும். இது திருடனே போலீஸாக வந்து திருடனைப் பிடிக்கும் முயற்சி போன்றதுதான். “நான் தான் திருடன், போலீஸ் அல்ல” என்று திருடன் உணராத வரை திருடனை எங்கே பிடிப்பது என்று வேறோர் இடத்தில் ரமணர் கூறுவார். அகந்தையைப் பற்றி மேலும் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

(தொடரும்…)

3 Replies to “அறியும் அறிவே அறிவு – 5”

  1. Pingback: Indli.com
  2. திரு ராமன் அவர்களே

    பகவான் ரமணரின் தத்துவ விளக்கங்களைத தாங்கள் மிகவும் எளிதாக விளக்கி வருகிறீர்கள். படிக்கப் படிக்க உண்மையான பேரின்பத்தின் ஒரு துளியையாவது தரிசிக்க முடியும் வண்ணம் உள்ளன.

    ///அகந்தைக்கு என்று உருவம் ஒன்று இல்லாவிடினும் ஏதோ ஓர் உடலைப் பற்றிக்கொண்டு செல்கிறது. இப்படி நம்மை ஆட்டிப் படைக்கும் இந்த அகந்தைதான் என்ன என்று தீர விசாரிக்க எத்தனிக்கும்போது, அது பிடிபடாது ஓட்டம் பிடிக்கும். இது திருடனே போலீஸாக வந்து திருடனைப் பிடிக்கும் முயற்சி போன்றதுதான். “நான் தான் திருடன், போலீஸ் அல்ல” என்று திருடன் உணராத வரை திருடனை எங்கே பிடிப்பது ///

    எத்தனை சத்தியமான வார்த்தைகள். அகந்தையில் அமிழ்ந்தவனுக்குத் தான்தான் காவல்காரன் என்பது போன்ற தோற்றம் வருவது நிதர்சனமாக நாம் காணும் நிகழ்வாகவே ஆகிப்போயினவே. எத்தனை விசாரித்தாலும் அகந்தை அழியாது மீண்டும் மீண்டும் தலை தூக்கிக் கொண்டுதானே இருக்கிறது.

  3. திரு. உமா சங்கர் அவர்களே,
    தங்கள் மறுமொழிக்கு நன்றி.

    //…எத்தனை விசாரித்தாலும் அகந்தை அழியாது மீண்டும் மீண்டும் தலை தூக்கிக் கொண்டுதானே இருக்கிறது…//

    உண்மைதான். அதற்கு, ரமணர் அவர்கள் “நான் யார்” நூலில் இப்படிக் கூறுவதை ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது.
    “…..பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை யாருக்கு உண்டாயின என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வோர் எண்ணமும் கிளம்பும் போதே அவை யாருக்கு உண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். நானார் என்று விசாரித்தால் மனம் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிவிடும்; எழுந்த எண்ணமும் அடங்கி விடும். இப்படிப் பழகப் பழக மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது. ……….. ஒருவன் தான் சொரூபத்தை அடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின் அது ஒன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகள் உள்ளவரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண்டே இருப்பார்கள். வர வர அவர்களையெல்லாம் வெட்டிக்கொண்டே இருந்தால் கோட்டை கைவசப்படும்.”

    தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *