கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 |  பகுதி 6 |  பகுதி 7 

தொடர்ச்சி…

Altruismத்தின் எல்லை:-

பொதுநலன் என்பது மனித சமூகத்தில் எந்த அளவு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை என் கருத்துப்படி எழுதியிருந்தேன்.சமூகத்தில் சிலர் இந்த பொதுநலன் என்பதை மனிதர்களுக்கிடையேயான நிலைக்கும் மேலே சென்று, விலங்குகள் வரை கொண்டு செல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, அந்த முன்னெடுப்புகளால், மனித சமூகத்திற்கு ஏதேனும் நன்மை இருந்தால் மட்டுமே வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டும். உதாரணமாக, காட்டு மிருகங்களை பாதுகாப்பது போன்றவற்றில் கருணை அடிப்படையில் அல்லாமல், மனிதர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் உதவிகரமாக இருந்தால் மட்டுமே வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டும்.

இதை சிலர் தெரு நாய்கள், சொறி நாய்கள், வெறி நாய்கள் அளவுக்கு எடுத்துச்சென்று ஊரை குழப்புகின்றனர். நம் வரிப்பணத்தைக் கொண்டு அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைகள் செய்வதெல்லாம் “ரொம்ப ஓவர்”. கொன்று விட்டுப் போக வேண்டியதுதான். விலங்கு நலனில் அக்கறை கொண்டவர்கள், அதே போன்ற மனநிலை உடைய மக்களிடமிருந்து பணம் பெற்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நம் பணத்தில் கை வைக்காமல் இருந்தால் சரி.புலிகள் வேறு; தெரு நாய்கள் வேறு;

ஏற்கெனவே பொதுநலனின் அடிப்படையில் உண்மையாகவே பட்டினி கிடப்பவர்களுக்கு மானிய விலையில் தானியங்கள் அளிக்க வேண்டிய அவசியத்தை எழுதினேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் இதுவும் அப்பட்டமான சுயநலம் என்பது புரிந்தது.சாதாரண விஷயம்தான். பட்டினி கிடப்பவர்கள் அதிகமானால் திருட்டுகளும், கொள்ளைகளும் சமூகத்தில் பரவும். என்னைப் போன்ற நடுத்தர, உயர்நடுத்தர மக்கள்தான் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். அவர்களை திருட்டில் ஈடுபடாமல் தடுக்கவே உணவு மானியம் என்பது எனக்கு புரிந்தது. என்ன வெளியில் கருணை என்று உதார் விடலாம். எல்லாம் சுயநலம்தான்.

பொதுநலனைக் குறித்து மிகவும் காட்டமான கருத்துகளை திரு.ரிச்சர்ட் டாகின்ஸ் தன் “The Selfish Gene” புத்தகத்தில் அளித்துள்ளார். படித்தவுடனேயே இது மேட்டிமைவாதியின் கருத்து என்று ஊதாசீன படுத்துவது சரியல்ல. மற்ற விலங்குகளைக் குறித்தும் இதே போன்ற கருத்தை முன்வைக்கும் திரு.டாகின்ஸ் மனித சமூகத்தைக் குறித்தும் அதே பார்வையில் எழுதியுள்ளார். அவர் எழுதியதன் ஒரு பகுதி:

“கருத்தடை என்பது கண்டிப்பாக செயற்கைதான். ஆமாம், கருத்தடை செயற்கையானது தான். ஆனால், அதைப்போன்றே பொதுநலனைக் கொண்ட சமூகமும் செயற்கையானதுதான். பொதுநலனை ஆதரித்தால், கருத்தடை முறைகளையும் ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.

பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது. தனிமனிதர்கள், தங்களால் வளர்ப்பதற்கு முடியாது போனாலும் கூட அதிகப்படியான குழந்தைகளை பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் வளர்க்கும் வேலையை அரசே, அதாவது மற்ற சமூக அங்கத்தினர்களே செய்து விடுவார்கள்.”

“Altruistic Societies are inherently Unstable”. “பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதியற்றது”.

மேற்கூறிய வாக்கியம் இந்த கட்டுரையின் மைய கருத்து. திரு.ரிச்சர்ட் டாகின்ஸ் கூறிய இக்கருத்துடன் முழுவதுமாக நான் உடன்படுகிறேன். வெளிப்பூச்சு பூசி இக்கருத்தை நமக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது. அதாவது,கருத்தடை அனுசரிக்கப்படும் சமூகங்களில் பொதுநலன் சரியான வழிமுறை என்று புரிந்து கொண்டு விடக்கூடாது.உதாரணமாக சீனாவில், கருத்தடை அனுசரிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையும் கடைபிடிக்கப்படுகிறது. மீறி கருத்தரித்தால் கட்டாய கருக்கலைப்பும் நடக்கிறது. நான் இதை முற்றிலுமாக எதிர்க்கிறேன். இவையெல்லாம் அந்தந்த தனி மனிதனின் அடிப்படை மனித உரிமைகள். இவற்றிலெல்லாம் அரசோ, சமூகமோ தலையிட முடியாது.

சென் க்வாங்க்சென் (Chen Guangchen) என்னும் சீனரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கட்டாயக் கருக்கலைப்பில் ஈடுபடும் சீன அரசை எதிர்த்து நிற்பவர். பல காலம் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். உலக அரசியலை விட்டுவிடுவோம். எப்படி இருப்பினும், அமேரிக்க அரசின் அழுத்தத்திற்கு பணிந்த சீன அரசு, அவரை அமேரிக்காவிற்கு மேற்படிப்பிற்கு அனுப்ப சம்மத்து விட்டது. அவர் சுதந்திரமாக குடும்பத்துடன் அமேரிக்காவில் வசிக்கிறார். நான் கூற வந்த விஷயம், கட்டாய கருத்தடையை அனுசரிக்கும் சீனாவிலும் பொதுநலனை அடிப்படையாகக்கொண்ட சமூகம் உறுதி அற்றதாகவே இருக்க முடியும். இருக்கும். இதை மறக்கக் கூடாது.நான் கட்டாய கருக்கலைப்பை எதிர்க்கிறேன். இது இயற்கைக்கு எதிரானது மட்டுமல்ல. நாம் அடைந்த நாகரீக வளர்ச்சிக்கும் தடைபோடுவது. ஒரு கணவன், மனைவி முடிவு செய்து எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், “எனக்கு நிறைய குழந்தைகள் உள்ளன”.

ஆகவே எனக்கு சமூகம் உதவ வேண்டும் என்பதையும் சேர்த்தே நான் எதிர்க்கிறேன். குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு மனித ஜோடியின் அடிப்படை உரிமை என்பதைப் போலவே, பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் அவர்களையே சாரும். நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டால், ஏழ்மையில் வாட வேண்டும் என்ற செய்தியை பிரசாரம் செய்து பரப்ப முடியாது. அவரவர்களே அனுபவிக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பம் சந்திக்கும் சிரமங்களை கண்ணால் காணும் பிற ஜோடிகள், தாங்களாகவே மனமுவந்து கருத்தடையை அனுசரித்து விடுவர். ஒரு சட்டமும் அவசியம் இல்லை.

ஆனால், நாம் இந்தியாவில் செய் து கொண்டிருப்பது இதற்கு எதிரிடையான நடைமுறை. அதாவது மக்கள் தொகை குறைப்பை வெறும் மன  மாற்றத்தினால் சாதித்து விட முடியும் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். எவ்வளவு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும், அரசின் மானியங்கள் கிடைக்கும் என்றால், இந்த நிலை தொடரவே செய்யும். சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்ற பயம் இருந்தால்தான், மனிதன் தன் தவறுகளை திருத்திக்கொள்வான்.

“கட்டாய கருத்தடையை எதிர்க்கிறோம். ஒவ்வொருவரும் எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து குழந்தைகளையும் அடுத்தவர்களே (அதாவது, பிற சமூக அங்கத்தினர்களே) காப்பாற்ற வேண்டும்” என்ற ரீதியில் ஒரு சமூகத்தை கட்டமைக்க முடியாது. இதையே திரு.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதினார்.Welfare State என்ற பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் சில கூறுகளே சமூக அங்கத்தினர்களால்,துஷ்பிரயோகம் செய்யப்படும் என்றால், அதையே பொதுவுடைமையாக நடைமுறை படுத்தினால், அந்த சமூகம் இயற்கையின் எந்த நியதிக்கும் கட்டுப்படாததாகவே செயல்படும். அந்த முரணியக்கமே, அதன் எதிர்ப்பாக மாறிவிடுமாதலால், சந்தேகத்திற்கு இடமின்றி அந்த சமூகம் அழிந்தே போகும். அந்த நிலைக்கு நாம் செல்லத்தான் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய நேரமிது.

Altruism என்ற பொதுநலனின் எல்லையாக நான் கூறுவது, பட்டினி கிடப்பவர்களுக்கு உணவளிப்பது மற்றும் மக்கள் தொகையில் ஒரு சிறு தொகுதியாகவே இருக்கக்கூடிய சிலருக்கு மட்டும் உதவி செய்வது என்று எழுதினேன். இதுவும் இயற்கை நியதிக்கு பொருந்தாததுதான். ஆனால் வரட்டு வரட்டென்று அறிவியலை மாத்திரம் ஏற்றுக் கொள்ள முடியாது.கண்முன் பட்டினி கிடப்போரை கண்டும், ஒரு சமூகம் உதவாமல் போவது நாம் அடைந்த நாகரீக வளர்ச்சிக்கு ஒத்துப்போகாது. மேலும் “சமவாய்ப்பு” என்ற நிலையை சமூக அங்கத்தினர்கள் அனைவர்க்கும் அளிக்கும்வரை இந்த உதவிகளை நாம் செய்துதான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில், உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி என்று அனைத்து தேவைகளையும் ஏதோ ஒரு விதத்தில் மானிய விலையிலோ இலவசமாகவோ அளிக்கும் போக்கு இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளது. நான் அதையே முழுமையாக எதிர்க்கிறேன். இது இயற்கை நியதி அல்ல. பொதுவுடைமையை ஆதரிக்க வில்லை என்று கூறிக்கொண்டே, பொதுவுடைமையின் பெரும்பாலான கூறுகளை முன்னெடுப்பது போலாகிவிடும்.

தமிழகத்தின் நிலையையே எடுத்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட 12 வருடங்கள் நான் உழைத்து சேர்த்த பணத்தில் ஒரு வீட்டை கட்டியுள்ளேன். ஒரு தொழில் முனைவரும் உழைத்து சாமர்த்தியத்தினால் முன்னேறி பிறகு வீடு கட்டுவார். ஆனால் முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி, குடிசை வீட்டில் வாழும் அனைவருக்கும் கான்கிரீட் வீட்டை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். இது அட்டூழியமல்லாமல் வேறு என்ன? உழைப்புக்கு பிறகு என்னைப்போன்றவர்கள் 2 படுக்கை அறை கொண்ட வீட்டை கட்டுகிறோம். நாங்கள் ஏழைகள் என்று கூறிக்கொண்டே ஒரு கூட்டம் ஓசியிலேயே வீட்டு வசதியை அடைந்து விடுகிறது. என்னய்யா நியாயம் இது!

மீண்டும் சப்பாத்தியின் கணக்குகள்:-

எங்கள் கிராமத்தை ஒரு உதாரணமாக கொள்ளலாம். எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 2500.

கிராம மக்களில் ஒவ்வொருவரும், தங்களுக்குரிய அறிவுக்கூர்மை, திறமை, உழைப்பு போன்றவற்றை மூலதனமாக அளித்து சப்பாத்தியை உருவாக்குகிறார்கள். அதற்குரிய சப்பாத்தியின் பங்கையும் பெற்றுக் கொள்கிறார்கள். சப்பாத்தியின் பங்கு என்பது உணவு, உடை, வீடு போன்ற வசதிகள் என்று கொள்ளலாம்.அனைவர்க்கும் ஒரே அளவில் சப்பாத்தி கிடைக்காது. சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்களுக்கு சப்பாத்தியின் பெரிய துண்டும், பணக்காரர்களுக்கு சப்பாத்தியின் மிகப்பெரிய துண்டும், பணக்காரர்களின் சாமர்த்தியம் அற்ற வாரிசுகளுக்கும் கூட சப்பாத்தியின் மிகப்பெரிய துண்டும், உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றோர்க்கு சிறிய பங்கும், உழைக்கும் மக்களுக்கு சிறிய துண்டுமே கிடைக்கும். காலம் காலமாக அனைத்து சமூகங்களிலும் இந்த நடைமுறையே இருந்து வந்துள்ளது. ஆனால் நவீன சமூகத்தில், சாமர்த்தியத்துடன் வாழத்தெரிந்த ஏழை மனிதன், சம்பாதித்து, பெரிய சப்பாத்தி துண்டை பெற முடியும். பலர் பெற்றும் வருகின்றனர். வரும்காலத்திலும் பலர் நல்ல நிலையை அடைவர். ஆனால் அனைத்து ஏழைகளுக்கும் பெரிய சப்பாத்தி துண்டு கிடைக்கும் என்று கூறக்கூடாது. அது சாத்தியமே இல்லை.

என் தாயார் கூறுவார். 1960களில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில்தான் அவர் பிறந்து வளர்ந்தார். 6 பெண்களும் ,1 ஆண் குழந்தையும் என்று அந்த காலத்துக்கே உரியதான பெரிய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம்தான் என் தாத்தாவிற்கு தொழில். நெல் பயிரிடுவதை விட வாழை பயிரிடுவது அதிக இலாபத்தை அளிக்கும் என்பதை அறிந்து பல விவசாயிகள் வாழை பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். 3 வருடங்கள் மிகப்பெரிய இலாபத்தை அடைந்து 2 பெண்களுக்கு கல்யாண செலவையே செய்ய முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு முறை சுழற்காற்று வந்து, குலை தள்ளிய நிலையில் இருந்த அனைத்து வாழை மரங்களும் நாசமாகி விட்டனவாம். மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஒரு பைசா கூட கொடுக்க வில்லை. சில காலம் பணச்சிக்கல்களுடன்
வாழ்ந்து பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

நான் இதைக் கூற வந்தது, வெள்ள நிவாரணத்தை அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் வழக்கம் இருந்ததே இல்லை.ஒவ்வொரு வருடமும், வெள்ளம் ஏற்படத்தான் செய்கிறது. இன்றைய விவசாயிகள் நெற்கதிர்களை கையில் பிடித்துக்கொண்டு தொலைக்காட்சியில் போஸ் கொடுத்து விடுகிறார்கள். இழப்பீடு அளிப்பதை நிறுத்தி விட்டால் இந்த போக்கு காட்டுவதெல்லாம் நின்று விடும். விவசாயம் என்பது ஒரு தொழில்தான். இலாபமும் நஷ்டமும் மாறி மாறி வரத்தான் செய்யும். இலாபம் வரும்போது அதிகப்படி வரியை அளிக்கிறார்களா! நஷ்டம் வந்தால் மட்டும் ஏன் இழப்பீட்டை எதிர்பார்க்கிறார்கள். பெரிய புயலினால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கேட்பதில் நியாயம் இருக்கக்கூடும். பருவமழைக்கு இழப்பீடு அளிப்பது அட்டூழியமே!

சரி, சப்பாத்தி கதைக்கு வரலாம். எங்கள் கிராமத்தில் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கத்தினர் பலரும், உழைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பட்டினி கிடப்பவர்கள் இங்கு இல்லவே இல்லை. ஆனால் தமிழக அரசு அளிக்கும் குப்பையான மானிய திட்டங்களால், 50 சோம்பேறிகள் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளும், அரசு பள்ளிகளும் உண்டு. அதைப்போலவே அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவ மனைகளும் உண்டு. அவரவர்கள் வசதிக்கேற்ப அனுபவிப்பதுதானே சரியான வழிமுறை!

ரபீந்திரநாத் தாகூர் கூறியது நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன் கூறியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“இன்று பெங்காலி மக்களின் சிந்தனைகள் கிராமங்களிலிருந்து விடுபட்டு விட்டது. தண்ணீர் விநியோகம் செய்வது, மருத்துவ வசதிகளை அளிப்பது, கல்வி அளிப்பது போன்றவை அரசாங்கத்தின் கடமை ஆகி விட்டது. மேற்கத்திய அரசாங்கம் இது போன்ற கொள்கைகளை நம் நாட்டின் அரசிற்கும் அளித்து விட்டது. (பிரிட்டீஷாரின்) இந்திய அரசு இதை சிறிதளவு மட்டுமே செய்துள்ளது. முழுமையாக அல்ல. தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன.

பழங்காலத்தில் இந்த பொறுப்புகளின் ஒரு பகுதியை அளிக்கும் கடமை மட்டுமே அரசனிடம் இருந்தது. பெரும்பகுதியை கிராம மக்களே செய்து கொண்டனர். சமூக கொந்தளிப்பு ஏற்படும் காலங்களில், அரசன் இந்த மானியங்களை நிறுத்துகையிலும், இந்த வேலைகள் தொடரவே செய்தன.”

கொஞ்சம் யோசித்து பாருங்கள்; என்ன ஒரு தீர்க்க தரிசனம். கிராம சுயராஜ்ஜியம் என்பதின் அற்புதமான வடிவம்தான் இது. இன்றுபோல் கிராமங்கள், மாநில தலைநகரிலிருந்தும், டில்லியிலிருந்தும் மானியங்களுக்காக பிச்சை எடுக்க வேண்டிய அவசியமே இருந்ததில்லை. கட்டுரையின் ஆரம்பத்தில் நேரு கூறிய ஒரு விஷயத்தை எழுதியிருந்தேன். அதாவது, காங்கிரஸ் கட்சி, சோஷலிஸ கொள்கையை ஏற்றுக் கொண்டதனால் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது என்று நேரு கூறினார். நேரு பேசியதிலிருந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, 1942ம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறிய பிறகு, காங்கிரஸ் கமிட்டியில் காந்திஜி கூறியது.

“ஜவஹர்லாலின் சுதந்திர இந்தியாவில், சலுகைகளோ, சிறப்புரிமை அளிக்கப்பட வேண்டிய மனிதர்களுக்கோ இடம் இல்லை. ஜவஹர்லாலைப் பொறுத்தவரை, அனைத்து வளங்களும் அரசுக்கு சொந்தமானது. அவர் வேகமாக பறக்க ஆசைப்படுகிறார். நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன.”

காந்திஜி உதிர்த்த முத்தான வாக்கியங்கள் இவை. இன்று காந்திஜி இருந்திருந்தால், பணக்காரர்களை கொச்சைப் படுத்தும் வேலையை கண்டிப்பாக செய்திருக்க மாட்டார் என்பது இந்த வாக்கியங்களை படித்தவுடனேயே புரிந்து விடும். இந்த முடிவிற்கு வர இன்னொரு காரணமும் உண்டு. காந்திஜி கூறிய பணக்காரர்கள் இளவரசர்களும், ஜமீன்தார்களும். பிறப்பினாலும், பிதுரார்ஜித சொத்துகளினாலும் மட்டுமே வசதியுடன் இருந்தவர்கள். இன்று நான் ஆதரிப்பது, சுதந்திரம் அடைந்த பிறகு, எவ்வளவோ முட்டுக்கட்டைகளை அரசு போட்டும், அதை மீறி, சாமர்த்தியத்தினால் பணக்காரர்களாக உருவானவர்கள். அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் காந்திஜி கண்டிப்பாக இடம் அளித்திருப்பார். அவர்களின் சொத்துக்களை, அரசே பிடுங்கி ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருக்க மாட்டார் என்று தீர்மானமாக கூறலாம்.

கல்வித்துறையில் சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்:-

“பாஸ்கர், உனக்குள்ள ஏதோ ஒரு திறமை இருக்கு பாஸ்கர். உன்னால முடியும் பாஸ்கர்- இப்டில்லாம் Adviseஏ ஆரம்பிச்சிராதே.” ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் இது.பழங்கால ஹிந்து சமுதாயத்தில் சமச்சீர் கல்வி என்பது இருந்ததே இல்லை. அதாவது அனைத்து இந்திய குழந்தைகளுக்கும், அல்லது அந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும்,ஒரே தரத்தில் கல்வி அளிக்கப்பட்டிருக்காது என்று நான் தீர்மானமாக நம்புகிறேன். ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் கல்வி பெரும்பாலான குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்றே நான் நம்புகிறேன். இன்றைய இந்திய கல்வியின் சீர்திருத்தத்தைக் குறித்து பேசாதவர்கள் இல்லை. ஆனால் அடிப்படையில் அவர்கள் செய்யும் தவறு, எல்லா குழந்தைகளிடமும் ஏதோ ஒரு திறமை ஒளிந்துள்ளது என்று நம்புவதுதான். நிதானமாக சிந்தியுங்கள், இது ஒரு தவறான அணுகுமுறை என்பது உடனே புரிந்து விடும். எந்த திறமையும் இல்லாத குழந்தைகள் சமூகத்தில் இருக்கவே செய்வார்கள். அடிப்படையிலேயே இந்த தவறை செய்து விடுவதால், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியில் சமவாய்ப்பு என்று பேத்த ஆரம்பித்து விடுகிறோம்.

அறிவியல் துறையில் “அறிவுக்கூர்மை” என்பது என்றுமே சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விஷயம். நாம் சர்ச்சையை விட்டு விடுவோம். பெரும்பாலான அறிவியல் நிபுணர்களின் கருத்துப்படி, அறிவுக்கூர்மை என்பது மரபணு மற்றும் வளரும் சூழல் (Nature and Nurture) என்ற இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இக்காரணிகளில் அறிவுக்கூர்மைக்கான மரபணு எத்தனை சதவிகிதம்; வளரும் சூழல் எத்தனை சதவிகிதம் என்றெல்லாம் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை. மரபணு ஒரு காரணியாக இருப்பதாலேயே, இத்துறையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அறிவுக்கூர்மை இல்லாதவர்கள் என்று ஒரு சாராரால் முன்வைக்கப்பட்ட வாதங்களாலேயே, பலருக்கு மேற்கத்திய நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹிட்லர் இதே காரணங்களை முன்னிறுத்தியே இலட்சக்கணக்கான யூதர்களை கொன்று போட்டான். ஆகவே இன்றுவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத துறை இது.

மரபணுவை சரிசெய்யும் சக்தி நமக்கு இல்லையெனினும், வாழும் சூழலை சரிசெய்யும் சக்தி, நவீன மனிதர்களுக்கு இருக்கவே செய்கிறது. உதாரணமாக, போஷாக்கு நிறைந்த உணவு, நல்ல வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர வீட்டின் சூழல், சமூக சூழல் போன்றவையும் அறிவு வளர்ச்சிக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஆகவே, பட்டினி கிடப்போருக்கும், போஷாக்கு குறைந்த உணவை மட்டுமே சாப்பிடும் நிலையில் இருக்கும் மக்களுக்கும் உணவை மானிய விலையில் அளிப்பது அறிவியல் படியும் மிகச்சரியான முடிவே! ஆனாலும் பிற காரணிகளை அனைவர்க்கும் தோதான வகையில் அளிப்பது நடைமுறை சாத்தியமல்ல என்பதை உள்ளபடியே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தியாவில் மிகவும் பேசப்பட்ட “3 Idiots-தமிழில் நண்பன்” என்ற திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். கடைசி காட்சியில் கதாநாயகன் ஒரு பள்ளியில், ஆசிரியராக இருப்பான். அனைத்து குழந்தைகளும் விதவிதமான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இது குப்பையான, பேத்தலான சிந்தனை. அந்த பிராந்தியத்தில் இருந்து, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், தலா 2 புத்திசாலி குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்கிறேன் என்று கதாநாயகன் கூறியிருந்தால் அது இயற்கையாக இருந்திருக்கும். நம் கல்வியாளர்களின் அடிப்படை பிரச்சினையே இதுதான். இரண்டாவதாக செய்யும் பேத்தலான விஷயம், பெரும்பாலான பெற்றோர்களுக்கு கல்வி அளிக்கும் கடமையிலிருந்து விலக்கு அளித்து விடுகிறோம். குறிப்பாக பொருளாதார வகையில். என்னைப் பொறுத்தவரை, அரசாங்கம் வரிப்பணத்தைக் கொண்டு எது செய்தாலும், ஏதேனும் இலாபம் இருக்க வேண்டும்.

இலாபம் என்று நான் கூறுவது, சப்பாத்தியின் அளவை பெரிதாக்குவது மட்டுமல்ல. சப்பாத்தியின் அளவாக இருக்கலாம். கலாச்சார முன்னெடுப்பாக இருக்கலாம். அடுத்த தலைமுறையின் வசதிக்காக இருக்கலாம். ஆனால் ஏதெனும் இலாபம் இல்லாமல் வரிப்பணத்தை இன்று போல் அள்ளிவிடுவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. நம் நாட்டில் 27 கோடி குழந்தைகள் 14 வயதிற்குள் இருக்கிறார்கள். அடிப்படை அறிவியல், கணிதம், மொழிகள், பல்வேறு கலைகள், இலக்கியம், ஆன்மீகம் போன்ற பல்துறைகளில் ஏதேனும் ஒன்றில் சிறந்து விளங்கும் சாத்தியம் கொண்ட 2.7 இலட்சம் குழந்தைகளுக்கு கல்வியை இலவசமாக அளிக்கலாம். அவர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல,எதிர்கால இந்தியாவை கட்டமைப்பது, தலைமுறை தலைமுறைகளாக பெருமையுடன் பேசவைக்கும் கலாச்சார குறியீடுகளை உண்டாக்குவது அல்லது மேம்படுத்துவது போன்றவையும் நிகழும். ஒரு சமூகத்தேவை இப்படிப் பட்ட காரணிகளைக் கொண்டுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்தபடியாக 27 இலட்சம் குழந்தைகள் வரை, 2ம் நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் கல்வி வசதிகள் செய்து தரப்படலாம். வெறும் 27 இலட்சம் குழந்தைகளுக்கு கல்வியை அளிக்கையில் செலவும் அதிகம் இருக்காது.சமூகத்திற்கான இலாபமும் பலமடங்கு இருக்கும். ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு ஒரு இலட்சம் ரூபாய் செலவு செய்தால் கூட,27000 கோடி ரூபாய்கள்தான் செலவாகும். மேலும் சமூகத்திற்கான இலாபமும் பலமடங்கு இருக்கும்.

மேலும், புத்திசாலிகளை கண்டுபிடித்து அவர்களின் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக் கொள்வதுதான் ஒரு சமூகத்திற்கு இலாபகாரமாக இருக்கும். இது எளிதான காரியமல்லதான். ஆகவே, விடுபட்ட குழந்தைகள் 10 வயது,15 வயது, 20 வயது என்ற நிலையில் இந்த புத்திசாலி கூட்டத்திற்குள் உள்ளே வர வழி செய்யப்பட்டு விட்டால் போதுமானது. இன்று அனைத்து குழந்தைகளும், ஏதோ ஒரு துறையில் புத்திசாலி என்று பேத்த ஆரம்பிப்பதுதான், கல்வித்துறையின் முதலாவதான மற்றும் முக்கியமானதான குழப்படி.

அறிவியலை ஆதரிப்பவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். எந்த சமூகத்திலும் புத்திசாலிகள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் இடஒதுக்கீடு என்றெல்லாம் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. புத்திசாலிகளுக்கு வாய்ப்பளித்தால் போதும். அனைத்து சமூகத்திலிருந்தும் குழந்தைகள் முன்னுக்கு வந்து விடுவார்கள். தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து திரு.அம்பேத்கரும் வருவார். உயர்ஜாதியிலிருந்து திரு.இராமானுஜனும் வருவார்.

பிற குழந்தைகளின் கல்விக்கான பெரும்பாலான கடமை மற்றும் பொறுப்பு, அக்குழந்தைகளின் பெற்றோரையே சாரும்.அரசாங்கம் சில ஒழுங்கு விதிமுறைகளை செயல்படுத்துவது என்ற அளவில்தான் இருக்க வேண்டும். அந்தந்த பிராந்தியத்திலுள்ள கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் முன்னெடுப்புகளை செய்து அனைத்து குழந்தைகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கல்வியை அளித்து விடுவர். அரசாங்கம் முட்டுக் கட்டையை போடாமல் இருந்தாலே போதும். தனியார் துறை பார்த்துக் கொள்ளும். மற்றக் குழந்தைகளில் அடுத்த படிநிலையில் உள்ள குழந்தைகள் “Software Engineer”ஆகத்தானே படிக்கப்போகிறார்கள். அதற்கு அரசாங்க வரிப்பணம் அவசியமில்லை.

புத்திசாலிகளாக இல்லாதது மட்டுமல்ல, இது போன்ற தனியார்களின் முன்னெடுப்புகளிலும் ஈடுபடாமல் வெளியேறும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்வார்கள். “சுனா-பானா”க்களுக்கு சமூகத்தில் இடம் வேண்டாமா? எல்லா குழந்தைகளையும் Software Engineerகளாக மாற்றும் பேத்தலான சிந்தனைகளை விட்டாலே சமூகம் முன்னேறிவிடும்.இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில், டில்லியிலிருந்து அனைத்து திட்டங்களையும், பிராந்திய தேவைகளை கணக்கில் கொள்ளாமல் முன்னெடுப்பதால், ஒன்றும் பயனில்லை. சட்டம் எழுதி விட்டோம் என்று மார் தட்டிக் கொள்ளலாம்.அவ்வளவுதான்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஐக்கிய நாடு சபையின், 1948-United Nation Declaration of Human Rightsன் படி, உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக இலவச ஆரம்பக்கல்வியை அளித்தாக வேண்டும். இந்தியா இந்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளது. இதை நான் எதிர்க்கிறேன் என்று கூறி விட்டேன். சரி, ஒரு பேச்சிற்கு இதை ஒப்புக்கொண்டு அடுத்த வாக்கியத்தை பார்ப்போம். உயர்கல்வியில் அனைத்து சமூக பிரிவினரையும் ஓர் அரசு, சம வாய்ப்புடன் போட்டி போட வைத்து, தகுதியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப கல்வி அனைவர்க்கும் இலவசம் என்பதை மட்டும் நாம் அனுசரித்து, உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை எவ்வாறு அனுசரிக்க முடியும்? இது ஐக்கிய நாட்டு சபையில் நாம் கையெழுத்திட்டுள்ள மசோதாவிற்கு எதிரான நிலைப்பாடு.

மேலும் நான் ஏற்கெனவே எழுதியபடி, திறமை கொண்ட ஆனால் பொருளாதார நிலையில் வசதி இல்லாதவர்களுக்கு கல்வி அளிப்பதை Scholarship என்று அழைக்கிறோம். பாபா சாகெப் அம்பேத்கர் மேல்நிலைக் கல்வியில் தன் திறமையை வெளிப்படுத்தி, உயர்கல்விக்கான Scholarshipஐ ஒரு சிற்றரசரிடம் பெற்றார் என்று படித்துள்ளோம். இன்று அனைவரையும் பாபா சாகெப் அம்பெத்கர் என்று நினைத்து விட்டோம். ஆகவே Scholarஆக வாய்ப்பே இல்லாதவர்களுக்கும் Scholarship அளிக்கிறோம். நான் கூட ஒரு Scholarதான். ஓர் அரசு அதிகாரியின் மகனாக பிறந்தவனாயிற்றே! வாங்கிய வரைமுறையற்ற சம்பளத்தைப் போன்றே, என் தந்தையைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு, குழந்தைகளின் கல்விக்கான பணமும் அளிக்கப்படுகிறது. நான் படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வருடத்திற்கு 2 முறை என் தந்தை பெற்று விடுவார். Scholarship வாங்கியதால் நானும் Scholarதான்.

அமேரிக்காவின் நிலையை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் நிலை எவ்வளவோ மேல். கல்வி கற்பிக்கும் கடமையை முழுவதுமாகவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டு விட்டது. பெற்றோர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளிக்கப் பட்டு விட்டது. உயர்கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்விக்கடனின் மூலமே தங்கள் செலவை பார்த்துக் கொள்கிறார்கள். மொத்தமாக அமேரிக்காவின் மாணவர்கள் 1 ட்ரில்லியன் டாலர்களை கல்விக் கடனாக வாங்கி வைத்துள்ளனர். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 இலட்சம் கோடி ரூபாய்கள்.

அமேரிக்க மாணவர்கள் வாங்கும் இந்த கடனை, அவர்கள் வேலைக்கு சேர்ந்தபின் சிறிது சிறிதாக அடைப்பார்கள். இதற்கு வட்டி விகிதம் சந்தையின் வட்டியிலிருந்து மிகவும் குறைவு. அதை சரிகட்ட தேவைப்படும் பணத்தை அரசே தன் கஜானாவிலிருந்து தருகிறது. நமக்கு நன்றாக அறிமுகமான அதிபர் திரு.ஒபாமா, தன் கல்விக்கடனை, தான் அதிபராக பொறுப்பேற்பதற்கு 8 ஆண்டுகள் முன்னர்தான் கட்டி முடித்ததாக கூறுகிறார். நம் சுணா-பாணாவைப் போன்றவர்கள் கடனை வாங்கி விடுவார்கள். ஆனால் படிப்பை முடிக்க மாட்டார்கள். அன்பே சிவம்! இந்தியாவில் சுணா-பாணாக்களுக்கு பஞ்சமே கிடையாது. சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. தமிழகத்தில் உள்ள 540 பொறியியல் கல்லூரிகளில் 175 கல்லூரிகளில் வெளிவந்த தேர்வு முடிவுகளை ஆய்வு செய்த போது ஒரு ஆச்சரியம்(!) கிடைத்தது. 75 சதவிகித பொறியியல் கல்லூரி மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்திலாவது தோற்றிருந்தார்கள்.

வேறு ஒரு செய்தியில், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித மாணவர்கள்தான் பொறியியல் பட்டப் படிப்பையே முடிக்கின்றனர். காலம் கடந்தாவது அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். மருத்துவ படிப்பிலும் இதே நிலைதான். இந்த கண்றாவி கோஷ்டத்தில், மத்திய அரசு இனிமேல், ஐ.ஐ.டிக்களுக்கு தனியான நுழைவு தேர்வு கிடையாது என்று வேறு அறிவிக்கிறது. டீக்கடைகளை எல்லாம் ஐ.ஐ.டியுடன் சேர்த்து பேசி விட வேண்டும். டீக்கடைகளை ஐ.ஐ.டிகளாக மாற்ற முடியவில்லை.சரி, ஐ.ஐ.டிகளை டீக்கடைகளை மாற்றி விடலாமே! ஏதோ கொஞ்ச நஞ்சம் தகுதியிருந்த உயர்கல்வியையும் இழுத்து மூடி விடலாமே!

ஒரு சுவாரசியமான செய்தி. அமேரிக்க மாணவர்கள் வாங்கிக் கொள்ளும் கல்விக்கடனைக் கொண்டு தங்கள் கேளிக்கை தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஐ-பாடைக் கூட அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அடப்பாவிகளா! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா!

அதிபுத்திசாலிகளை உபயோகப்படுத்திக் கொள்வது எப்படி?

கிரிக்கெட் விளையாட்டில் “Catches Win Matches” என்று கூறுவார்கள். இதன் பொருள், எப்போதாவது பேட்ஸ்மேன் அடித்து பறந்து வரும் பந்தை Catch பிடித்து விட வேண்டும். விடவே கூடாது. அதிபுத்திசாலிகளையும் நாம் விடவே கூடாது. வாழ்க்கை என்னும் வியாபாரத்தில், நம் பாரத மக்கள் வெல்ல அதிபுத்திசாலிகளை பாரதத்தில் எங்கிருந்தாலும் பிடித்து, உபயோகப்படுத்திக் கொண்டாக வேண்டும். இரண்டு உதாரணங்களை தருகிறேன்.

1.கணித மேதை இராமானுஜன்:-

இராமானுஜத்தின் கதை நம் அனைவர்க்கும் தெரியும். அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவதானித்தால், பல நேரங்களில், நம் சமூகத்தால் அவரின் மேதமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளமுடியவில்லை என்ற வேதனையே ஏற்படும். கணிதத்தில் மட்டுமே ஈடுபாடு கொண்ட அவரை, மற்ற பாடங்களைக் கொண்டும் அளவிட்டது, சில வருடங்கள் அவர் பட்டினி கிடக்கும் நிலையில் வாழ்ந்தது போன்றவற்றை அவதானிக்கும்போது ஆத்திரமே எனக்கு வருகிறது. ஆனாலும் சிலர் அவரின் கணித மேதைமையை அறிந்து, அதை மெருகேற்றவும் உதவி உள்ளார்கள் என்பதும் உண்மைதான். நான் கூற வந்தது. அவருக்கு நடந்த சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்திருக்கவே கூடாது. இராமானுஜனைப் போன்ற மேதைகள் 32 வயதில் இறப்பது நம் சமூகத்தின் இயலாமையையே காட்டுகிறது. அவரைப் போன்றவர்கள் 100 வயது வரை பூரண ஆயுளுடன் வாழ்வதாலேயே சமூகம் முன்னோக்கி செல்ல முடியும்.

2.ஸ்டேன்லி மில்லர்

வருடம் 1953-சிகாகோ பல்கலைக் கழகத்தில் உயிரியல் படித்துக் கொண்டிருந்த இவர் தன் பேராசிரியரிடம் சென்று, தன் செய்முறை பயிற்சிக்காக ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதற்கு நிதியுதவியும் கேட்கிறார். உலகையே அதிர வைத்த சோதனை முயற்சி அது.

டார்வினின் பரிணாம வளர்ச்சி பல மட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், உயிர்கள் எவ்வாறு உருவாகி பெருகின என்பதற்கு ஆதாரங்களை எவரும் தரவில்லை. 5 பில்லியன் வருடங்களுக்கு முன்னதான புவியில் இருந்த சூழ்நிலைகளை சோதனைச்சாலையில் வடிவமைத்து, ஒரு உயிரின் ஆதாரமாக விளங்கும் அமினோ ஆஸிட்டை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். நான் இங்கு கூற வந்தது, இது போன்ற முன்னெடுப்புகளுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் அந்த பேராசிரியரிடம் இருந்தது என்பதுதான்.

இது போன்ற உதாரணங்களை வரலாற்றில் நாம் எத்தனையோ பார்க்க முடியும். அதிபுத்திசாலிகளை கண்டுபிடிப்பது இருப்பதிலேயே கடினமான வேலை. பிறகும், அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் சில வசதிகளை செய்து தருவது அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பணி. அவரும் அவரின் குடும்பத்தாரும் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் வாழ்ந்தால்தான், அவரால் தன் வேலையை நிம்மதியாக முன்னெடுக்க முடியும். Good Will Hunting என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. கதாநாயகன் சிறுவயதிலிருந்தே கணக்கில் புலி. ஆனால் ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். ஒரு பல்கலை கழகத்தில் வகுப்பறைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பேராசிரியர் கூறும் ஒரு கணக்கிற்கான விடையை, அறையின் வாசலிலேயே எழுதி விடுவான். ஆச்சரியம் அடையும் பேராசிரியர், அவனை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வருவார். சமூகத்திற்கு அவனின் புத்திசாலித்தனம் எவ்வளவு அவசியம் என்பதை கூறி அவனை நல்வழிக்கு மாற்றுவார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து சமூகங்களிலும், இன்று புத்திசாலிகளுக்கு அங்கீகாரம் இல்லை. அனைவரையும் சராசரிகளாக ஆக்குவதுதான் நம் தலையாய பணியாக மாறியிருக்கிறது. சீனிவாசன் இராமானுஜன் இன்று தமிழகத்தில் இருந்திருந்தால், நாமத்தைப் போட்டுக்கொண்டு ஏனடா ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்? என்று நம் தமிழ் சமூகம் கேட்டிருக்கும். அன்றாவது ஒரு மாவட்ட ஆட்சியரும், ஒரு பேராசிரியரும் இராமானுஜனுக்கு உதவினார்கள். இன்று அவ்வாறு செய்ய முடியுமா என்பதை நினைக்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் மேலும் ஒரு விஷயத்தைக் கூறித்தான் ஆக வேண்டும். பாபா சாகெப் அம்பேத்கருக்கு தன் மேதைமையை முன்னிலைபடுத்த ஒரு பிரச்சினையும் இன்று இருந்திருக்காது.

இப்படி ஒரு துரதிருஷ்டவசமான நிலையில் உள்ள ஒரு சமூகம் அழிவை நோக்கித்தான் போக முடியும். அதிபுத்திசாலித்தனத்திற்கும் ஜாதிக்கும் என்ன தொடர்பு உள்ளது? அறிவியல் அடிப்படையில் இந்த கருதுகோள் தூள்தூளாக்கப்பட்டு விட்டாலும், நாம் இன்னும் முட்டாள்தனத்திலேயே உழன்று கொண்டிருக்கிறோம். இதற்கு எதற்காக மனிதர்களாக மாறி இருக்க வேண்டும். பேசாமல் குரங்குகளாகவே இருந்திருக்கலாமே! அறிவுக்கூர்மைக்கு முக்கியத்துவம் இல்லாமல், உடல் பலத்தை முன்னிறுத்தியே பெட்டைகளுடன் கூடி, குட்டிகளை ஈன்று பின் இறந்திருக்கலாமே!

ஆராய்ச்சிகளுக்கான ஒதுக்கீடு அவசியமா?

குறியீட்டளவில் செய்யப்படும் எந்த ஒரு முன்னெடுப்பும், குறியீட்டளவிலேயே இருக்கும். சமூகத்திற்கு பெரிய அளவில் அதனால் பயன் இருக்காது. மேலும், இது போன்ற முன்னெடுப்புகளால் வசதி வாய்ப்புகளை இலவசமாக பெறும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே இருக்க முடியும். அதே சமூகங்களில் உள்ள, இலவச வாய்ப்புகளை பெறாத மக்கள், இது போன்ற முன்னெடுப்புகளை அதிகம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பர். இன்று இந்தியாவில் இந்த நிலைதான் உள்ளது. அந்த மக்கள் தொகுதியில் உள்ள மேலும் சிலருக்கு இலவச வாய்ப்பை அளிக்க மேலும் அதிகமான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியிருக்கும். இது ஒரு தொடர் கதைதான். இதற்கு முடிவே இல்லை.

அரசு வேலைகளில் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து விட்டோம். அதற்கு பதிலாக மானியங்களை அளிப்பதால் பெரும்பாலான மக்களை திருப்தியுடன் வைத்திருக்கவே அரசு முயல்கிறது. இதுவும் தற்காலிக ஏற்பாடே!

ஒர் அரசு தற்காலிக இலாப நோக்குக்காக இல்லாமல், நெடுங்கால சமூக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றில் அதிகப்படி முதலீட்டை செய்ய வேண்டியிருக்கும். நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் மானிய தேவைகளாலும், ஏழைகளின் எண்ணிக்கையினாலும், இவற்றை விமர்சிக்கும் போக்கை நாம் சர்வசாதாரணமாக காணலாம். எந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டாலும், எந்த அறிவியல் முன்னேற்றத்திற்கான முதலீட்டை அரசு அளித்தாலும், “ஏழைகளுக்கு உதவுவதை விட்டு அரசு தேவையற்ற செலவை செய்கிறது” என்று பேசுவது இன்று ஃபேஷனாகி விட்டது. ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை.

(தொடரும்)

10 Replies to “கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8”

  1. நிச்சயம் பொதுநலம் பொதுஉடைமை அப்படிங்கறது இயற்கையானதோ அறிவியல் ரீதியானதோ அல்ல, ஆனால் உங்கள் ஒரு கருத்துடன் நான் முரண்படுகிறேன், காடுகளை பாதுகாக்க வேண்டியது பொதுநலத்தின் அடிப்படையில் அல்ல, நாம் பாதுகாக்காமல் போனால் நாமே அழிந்துவிடுவோம், அதுமாதிரிதான் ஜனத்தொகை பெருக்கமும்.

  2. பாலாஜி சார்,

    நான் உங்கள் கட்டுரை தொடரை ஆரம்பம் முதல் படித்து வருகிறேன்,கொஞ்சம் கொஞ்சமாக கம்யுனிச எதிர்ப்பு என்பதை தாண்டி,ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத விசயங்களை பற்றி பேசுகிற தொகுப்பாக இந்த தொடர் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை

    இந்த நாட்டில் முக்கியமாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை சிரமத்துடனேய நகர்கிறது..எனக்கு தெரிந்து பல குடும்பங்கள் இன்றளவும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள்,
    கிராமப்புற விவசாய்கள் கடும் வறட்சியையும் பொருளாதார சுமைகளையும் தாங்கி கொண்டு இருகிறார்கள்,குறைந்த பட்சம் இவர்களுக்காவது மானியத்தை தர வேண்டும்,நாட்டில் உள்ள அணைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி தர தேவை இல்லை,ஆனால் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு மட்டும் குறைந்த பட்சம் அடிப்படை கல்வி இலவசமாக தரலாமே.

    200 லட்சம் கோடி கருப்பு பணத்தை கொள்ளையடித்த கருப்பு முதலைகளிடம் இருந்து அந்த பணத்தை மிட்டுவிட்ட அடுத்த கணம் உலகின் மாபெரும் வல்லரசாக ஹிந்துஸ்தானம் உருவெடுக்கும் அப்பொழுது கம்யுனிஸ்டுகள் உட்பட அணைத்து தேச விரோத சக்திகளும் மரிக்கும்,ஆனால் நீங்கள் சொல்கிற சீர்திருத்தங்களை நிறைவேற்றினால் நாடு மிகப்பெரிய அமைதி குலைவை சந்திக்க நேரிடலாம்.

    நமஸ்காரம்
    Anantha saithanyan.

  3. நண்பர் பாலாஜி அவர்களே ,

    29-8-2013 அன்று காலை வெளிவந்துள்ள செய்திகளின் படி ஒரு டாலரின் இந்திய மதிப்பு 68.8 ரூபாய் ஆகிவிட்டது.

    1) ஐ மு கூ எனப்படும் யூ பி ஏ அரசு வாஜ்பாய் அரசிடம் இருந்து மே-2004 லே பொறுப்பை ஏற்றபோது , இந்திய அரசின் நிதி நிலையில் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலர் ( current account surplus ) ஆக இருந்தது. ஒன்பது ஆண்டுகள் யூ பி ஏ ( ஐ மு கூ ) ஆட்சியின் பின்னர் இந்த நிலை மாறி இப்போது பற்றாக்குறை 89 பில்லியன் டாலராக , அதாவது உபரி போய் பற்றாக்குறையாக மாறிவிட்டது.

    2) ஐ மு கூ அரசின் முதல் நாலு வருடங்களில் 11.5% ஆக இருந்த தொழில் துறை உற்பத்தி இப்போது ஆண்டுக்கு 2.9 % ஆகி விட்டது. ஆம் – டூ ஜி , நிலக்கரி, சுரங்கம், ஆதர்ஷ் மற்றும் ஏராளமான ஊழல்கள் வளர்ச்சி கண்டன. தேசத்தின் அதாவது நம் நாட்டின் GNP -(GROSS NATIONAL PRODUCT ) படுத்துவிட்டது.

    3) வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு தேசீய வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம் – அதாவது தானே முன்வந்து அறிவிக்கும் திட்டத்தை அமல் செய்து ஒரு 20 அல்லது 30 சதவீதம் வரியாக வசூலித்து , பாக்கி 80 அல்லது 70 சதவீதப்பணத்தை வெள்ளை ஆக்கி கொள்ள அனுமதித்தால், அரசிடம் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு பகுதியாவது அரசுக்கு மீண்டும் கிடைக்கும். ஆனால் பத்தினி வேடம் போடும் இந்த விபச்சாரிகள் அதனை செய்ய மறுப்பது ஏன் ?

    4) எல்லையில் சீனாக்காரன் அடிக்கடி வாலாட்டுகிறான். சோனியாவின் டம்மி அரசு தூங்குகிறது.

    5) பாகிஸ்தானிய நாய்கள் இதுவரை 18 முறை அத்துமீறி சுட்டதுடன், இரண்டு வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றுள்ளன. மேலும் ஐந்து வீரர்களை சுட்டு கொன்றுள்ளன., சோனியாவின் இத்தாலிய டம்மி அரசு தூங்குகிறது.

    6) போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற கதையாக , முன்னாள் பர்மா எனப்படும் இந்நாள் மியான்மர் அரசு கூட தனது ராணுவத்தை மணிப்பூருக்குள் அனுப்பி கூடாரம் அடித்துள்ளது.

    இந்தியா இருக்கிறதா ? அப்படி இருந்தால் எங்கே போகிறது ? தயவு செய்து விளக்குங்களேன் பாலாஜி ? 25-செப்டம்பர் 2013- அன்று இரவு சனி ராகு சேர்க்கை ஒரே பாகையில் ஏற்படுகிறது அது வரை , இந்தியாவில் இப்படி தான் இருக்கும். அதன் பிறகு இந்தியாவில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று மரத்தடி ஜோசியர்கள் கூட கூறுகின்றனர். இந்த தீய சக்திகளின் ஆட்சியில் நல்ல மாறுதல் எப்படி வரும் என்று பகுத்தறிவுடையோருக்கு புரியவில்லை.

    7) ரஷ்யாவில் 1917-லே ஏற்பட்ட கம்யூனிஸ்டுகளின் புரட்சி , சுமார் 73-ஆண்டுகளில் சிதறி 1989-90 ஆம் ஆண்டு , கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போனது .1947-லே இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரமும் அதே போல சுமார் 73- வருடத்துக்கு பிறகு , 2020-லே காணாமல் போய்விடும் என்று சில எதிர்மறை சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். அது உண்மை ஆகிவிடுமா ? இந்தியர்களாகிய நாம் சிந்திப்போமா ?

  4. அத்விகா அவர்களுக்கு,

    இந்த கட்டுரைத் தொடரையும், என் மறுமொழிகளையும் வாசித்தவர்கள் ஒன்றை
    கவனித்திருக்கலாம். நான் எப்பொழுதுமே கூறுவது.
    “காசு, பணம், துட்டு, Money Money”.

    விவரமறிந்த பொருளாதார நிபுணர்கள் கூறுவது. பொருளாதார சீர்திருத்தம்
    என்பதன் விளைவு “கைல காசு, வாய்ல தோசை” என்பதைப் போல் இருக்காது.
    வாஜ்பாய் ஆட்சியில் நடந்த சீர்திருத்தங்களின் விளைவைத்தான் ஐ.மு.கூ-I
    ஆட்சியில் 2004-2009 வரை 8 சதவிகிதம் வளர்ச்சியாக பெற முடிந்தது. அப்படி
    என்ன செய்தார் திரு.வாஜ்பாய்?

    (1) பெட்ரோல், டீஸல் மற்றும் எரிவாயுவின் விலையை கிடுகிடுவென
    அதிகரித்தார். பெட்ரோல் விலைமாற்றத்திற்கும் அரசுக்கும் “ஸ்நான-பிராப்தி”
    சம்பந்தம் கூட இல்லை என்று கைகழுவினார்.
    (2) சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, பொதுத்துறை நிறுவனங்களை
    தனியார்படுத்த ஒரு அமைச்சகத்தையே ஏற்படுத்தினார். திரு.அருண் ஷூரி,
    இராப்பகலாக பொதுத்துறையின் பங்குகளை விற்றுக்கொண்டிருந்தார். சுதேசி க்ரூப்
    கொஞ்சம் வேலையை காட்ட ஆரம்பித்தவுடன், அந்நிய தனியார்களுக்கு
    பொதுத்துறையின் பங்குகள் அளிக்கப்படாது. இந்திய தனியாருக்கு மட்டும்
    விற்கப்படும் என்று சிறிது Adjust செய்து கொண்டார். சுதேசி எதிர்ப்பு புஸ்ஸானது.
    (3) அந்நிய முதலீடுகளை பெருமளவு பலதுறைகளில் ஏற்க வைத்தார்.

    இக்காரணங்களால்தான் நீங்கள் குறிப்பிட்ட அந்நிய செலவாணி கையிருப்பு
    அதிகமானது. அதே காரணங்களால்தான் ஐ.மு.கூ அரசு சீர்திருத்தம் எதுவும்
    செய்யாது போனாலும், 2004-2009ல் 8 சதவிகித வளர்ச்சி வந்தது.

    2004-2009ல் சீர்திருத்தம் செய்யாததனால், 2009க்கு பிறகு சர்வமும் புஸ்ஸாகி
    போனது. ஊழல் போன்றவையும் காரணங்கள் என்றாலும், முதல் Termல் ஒன்றும்
    செய்யாததனால், 2வது Term நாறிப் போனது.

    ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளதை நான் காண்கிறேன். அதாவது, வேறு
    வழியில்லாததனால் என்றாலும், பல சீர்திருத்த முடிவுகள் 2013ல் எடுக்கப்
    பட்டுள்ளன. அவ்வளவு சீர்திருத்தங்களையும் நான் வரவேற்கிறேன். (அந்நிய
    முதலீடு).

    ஆகவே, அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், சில காலம் எதுவும் செய்யாது
    போனாலும், வளர்ச்சி இருக்கும் என்றே நாம் ஊகிக்க முடியும்.

    (II) நீங்கள் கூறும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முறை திரு. சிதம்பரம்
    அவர்களால் 2 முறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அரசு எதிர்பார்த்த
    அளவிற்கு பணம் வரவில்லை.(VDIS-Voluntary Disclosure of Income Scheme)

    (III) சரி, இந்தியா எங்கே போகிறது? சரியான திசையில் போவதாகவே
    நினைக்கிறேன். நான் Eternal Optimistic. Firstpost இணையதளத்தில் திரு.ஜகன்னாதன்
    எழுதுகையில், “Sonia’s Food Bill may provide the tipping point to bankruptcy and then reform”
    என்று எழுதியுள்ளார். இந்திய பொருளாதாரம் என்ற படகு நடுக்கடலில்
    தத்தளித்துக் கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா என்ற ஓட்டையும்
    இப்பொழுது விழுந்து விட்டதால், அதை அடைக்க, கண்-மண் தெரியாத அளவில்
    பொருளாதார சீர்திருத்தங்கள் அடுத்த 2,3 வருடத்தில் நடக்கும். ஏனெனில்
    வேறு வழியில்லை. அந்நிய முதலீடு, கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும்
    அறிமுகப்படுத்தப்படும். எனக்கு கொண்டாட்டம்தான். இந்தியாவிற்கும்
    கொண்டாட்டம்தான். கம்யூனிஸ்டு கொரில்லாக்களுக்கு திண்டாட்டம்தான்.

    (IV) 2020ல் இந்திய சுதந்திரம் பறிபோய்விடுமா என்றால், நான் ஜோசியனுமில்லை.
    எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கையுமில்லை. ஒன்று வேண்டுமானால் கூறலாம்.
    “ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக” என்று கா-கா ஓட்டும்
    கம்யூனிஸ்ட் கொரில்லாக்களின் மூளைச்சலவையில் மதிமயங்கி சுமார் 5 கோடி
    கா-கா பேர் சேர்ந்து புரட்சி செய்தால் நிச்சயம் நடக்கும், என்னைப் போன்றவர்களை
    போட்டுத் தள்ளி விடுவார்கள். அப்புறமென்ன! அருக்காணி Clear ஆயிட்டா, ஆனா
    Beauty Parlourதான் நாறிடுச்சு கதைதான். கா-கா பேர் ஓசியில் வாழ்வார்கள்.
    ஏற்கெனவே சொத்து சேர்த்து வைத்தவர்கள் நாறிப் போவார்கள். எல்லோரும்
    ஓண்ணு, எல்லார் வாயிலேயும் மண்ணு!

  5. மிக நன்று…… சோசியலிசம் தேவை இல்லை என்றே வைத்து கொள்வோம்.. இந்த நாடு எதிர் நோக்கி இருக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு ( அனைவருக்குமான தரமான உணவு, கல்வி, மருத்துவம், சமுக பாதுகாப்பு குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு ) இவை அணைத்தும் கிடைப்பதற்கு உங்களிடம் என்ன வழி இருக்கிறது என்று கூற முடியுமா….. உடனே கை மறைந்து தாமரை மலர்ந்தால் அணைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறிவிடவேண்டாம்.. ஏன் என்றால் பா.ஜ.கா.ஆளும் மாநிலங்களிலும் இந்த பிரச்சனைகள் கொடி கட்டி பறக்கின்றன (ஊழலையும் சேர்த்து).

  6. திரு.ராகுலன்,
    இணையத்தில் எழுதுவதில் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது. பல நேரங்களில் நாம்
    அனுசரிக்கும் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான மனநிலையுடன்
    உள்ளவர்களுடன் நாம் விவாதிக்க நேரிடும். முன்னரே தெரிந்துவிட்டால், நாம்
    நிறுத்திக் கொண்டு விடலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தெரியவரும்.
    உதாரணமாக, கூடங்குளம் உதயகுமாரிடம் அணுசக்தியின் அவசியத்தைப் பற்றி
    பிரஸ்தாபிக்க முடியுமா? கம்யூனிஸ்ட் கொரில்லாக்களிடம் சந்தை
    பொருளாதாரத்தைப் பற்றி பேசி ஏதாவது உபயோகம் உண்டா?

    தாமரை மலர்ந்தால், நீங்கள் கூறும் (!!!) அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்து விடும்
    என்று நான் கூறவே இல்லை. மேலும் அவை அடிப்படை பிரச்சினைகளே
    அல்ல என்பதுதான் எனது வாதம். நேரம் இருந்தால் இக்கட்டுரையின் அனைத்து
    பகுதிகளையும் படிக்கவும். ஒன்று என் கட்டுரையை முற்றும் முழுதுமாக
    நீங்கள் நிராகரித்து விடுவீர்கள். இரண்டு சில கூறுகளுடன் உங்களுக்கு மாற்று
    கருத்துகள் இருக்கலாம். இரண்டாவது நிலையாக இருக்கும் பட்சத்தில் நாம்
    விவாதிப்பதில் அர்த்தம் உண்டு.

    என்னைப் பொறுத்தவரை, கல்வி மற்றும் மருத்துவத்தை ஒரே தரத்தில் அனைத்து
    மக்களுக்கும் கொடுப்பது நியாயமல்ல. அவசியமல்ல. அப்படியே கொடுத்தாலும்
    கஜானா நாறிவிடும். வலதுசாரித்துவ பொருளாதார சித்தாந்தம் அத்வைதத்தைப்
    போன்றது. Truth அப்படியேதான் இருக்கும். உதாரணங்கள் மட்டும்தான்
    காலத்திற்கேற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும்.

    Bharat Nirman விளம்பரத்தில் ஒரு செய்தி வருகிறது. 65 இலட்சம் குழந்தைகளுக்கு
    கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளதாக பரப்புரை செய்யப்படுகிறது.
    இவ்வளவு மாணவர்களில் எவ்வளவு பேர் ஒழுங்காக Arrears இல்லாமல் படிப்பை
    முடித்தார்கள்? எவ்வளவு பேர் வேலையோ, தொழிலோ செய்து இந்திய
    பொருளாதாரத்திற்கு உதவினார்கள்? இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று
    பாருங்கள். நான் பேசுவது புரிந்துவிடும். கல்லூரிக்கு போகாமல் வாராவதிக்கு
    கீழே துண்டு பீடி அடிக்கும் மாணவ சிகாமணிகளுக்கு கல்வி உதவித்தொகையை
    கொடுக்க வேண்டுமா?

    சரி, மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு உதாரணத்துடன் இதை நோக்கலாம்.
    இந்தியாவில் வருடத்திற்கு 25000 பேருக்கு Blood Cancer இரத்த புற்றுநோய்
    வருகிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதில் 1000 பேர் பணக்காரர்களாக
    இருந்தால், அவர்களுக்கான மருத்துவ செலவைப் பற்றி மற்றவர்கள் கவலை
    கொள்ளத் தேவையில்லை. ஆனால் பிற 24000 பேருக்கு தலா 35 இலட்சம் ரூபாயை
    யார் கொடுப்பது? நான் நடுத்தர நிலையில் வசிப்பவன். சுமார் 5 இலட்சம் ரூபாய்
    வரை என்னால் திரட்ட முடியும். அவ்வளவுதான் என் Limit. இரத்த புற்றுநோய்
    வந்தால் நான் இறப்பதுதான் நியாயம். It is as simple as that. ஏழைகளுக்கு, நடுத்தர
    மக்களுக்கு என, இந்த ஒரே ஒரு நோய் நிவாரணத்திற்காக 840 கோடி ரூபாயை
    வருடம் ஒருமுறை அள்ளி விட முடியுமா?

    பழங்காலத்திலும் இரத்த புற்றுநோய் வந்தால் இறந்துதான் போயிருப்பார்கள்.
    இப்பொழுது பணக்காரர்களாவது தப்பிக்கிறார்கள். வருங்காலத்தில் இதற்கான
    செலவு குறைந்தால் மேலும் சிலர் நிவாரணம் பெறக்கூடிய சாத்தியம் ஏற்படலாம்.
    ஆனால் புதிய நோய்கள் வந்திருக்கும்.

    கடைசியாக இப்படி முடிக்கிறேன்.

    “எங்கள் நாட்டு கஜானாவில் டாலர் இல்லை. என் மனதில்
    பைத்தியக்காரத்தனமான கருணை இல்லை”

  7. காங்கிரஸ் அரசு நம் நாட்டுக்கு அதிக பட்ச தேசத்துரோகத்தை செய்துள்ளது. இன்று நம் அன்னியசெலாவனிக்கு கடும் ஆபத்து நேரிட்டுள்ளதற்கு முக்கிய காரணம் , ஈரானிடம் நாம் வாங்கி கொண்டிருந்த கச்சா எண்ணையை நிறுத்திவிட்டு, பெரியண்ணன் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மிரண்டு, மன்மோகன், சோனியா கூட்டணி அரசு , ஈரானுக்கு பதிலாக வேறு சில நாடுகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகிறது. ஏற்கனவே உள்ள டூஜீ, நிலக்கரி, சுரங்கம், ஆதர்ஷ் என்று பல்வேறு ஊழல்களுடன் இந்த எண்ணெய் இறக்குமதி ஊழலும் சேர்ந்து தான் நம் பொருளாதாரத்தின் கழுத்தை இறுக்கி பிடித்து மூச்சு திணற வைத்துள்ளது.

  8. திரு. பாலாஜி ……..

    எப்படி இது போலெல்லாம் உங்களுக்கு பேச வருகிறது….

    //என்னைப் பொறுத்தவரை, கல்வி மற்றும் மருத்துவத்தை ஒரே தரத்தில் அனைத்து
    மக்களுக்கும் கொடுப்பது நியாயமல்ல. அவசியமல்ல. அப்படியே கொடுத்தாலும்
    கஜானா நாறிவிடும். வலதுசாரித்துவ பொருளாதார சித்தாந்தம் அத்வைதத்தைப்
    போன்றது. Truth அப்படியேதான் இருக்கும். உதாரணங்கள் மட்டும்தான்
    காலத்திற்கேற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும்.//

    மனிதனின் அடிப்படை உரிமையான கல்வியையும் மருத்துவத்தையும் ஒரே தரத்தில் அனைவருக்கும் அளித்தால் கஜானா நாரி விடும் என்றால்… பின்பு கஜானாவில் உள்ள பணம் வேறு எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா……. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளின் சொந்த குடும்ப கஜானவிற்கா… ஒரே மாதிரியான கல்வியை, மருத்துவ வசதியை அனைவருக்கும் தாராளமாக கொடுக்க முடியும்… அதற்க்கு தேவை ஒரு உறுதியான அரசாங்கம்… மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல்… மக்கள் பணத்தை மக்களின் வளர்ச்சிக்கே செலவிட வேண்டும் என்கிற உறுதியுள்ள ஒரு அரசு அமைப்பு நமக்கு இப்போது தேவை…. தனியார்மயத்தையும் . தாரளமயத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வரும் அரசாங்கம் இப்போது தேவை நமக்கு… அதை நிச்சயம் இந்த காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஒட்டு பொறுக்கி கட்சிகள் நிறைவேற்றாது என்பதே நிதர்சனம்…..
    ஒரு மனிதன் உயிர் வாழ தரமான உணவு , கல்வி மற்றும் மருத்துவம் மிக மிக அவசியம். அந்த மூன்றும் தனியாரின் கைகளில் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது அதை மீட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்குவதே உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் உடைய கடமையாகும்..மருத்துவ வியாபாரி அபோல்லோ ரெட்டியால் செய்ய முடியும் என்றால் ஏன் ஒரு மக்களுக்கான அரசாங்கத்தால் செய்ய முடியாது.. நிச்சயம் முடியும்.

    //சரி, மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு உதாரணத்துடன் இதை நோக்கலாம்.
    இந்தியாவில் வருடத்திற்கு 25000 பேருக்கு Blood Cancer இரத்த புற்றுநோய்
    வருகிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதில் 1000 பேர் பணக்காரர்களாக
    இருந்தால், அவர்களுக்கான மருத்துவ செலவைப் பற்றி மற்றவர்கள் கவலை
    கொள்ளத் தேவையில்லை. ஆனால் பிற 24000 பேருக்கு தலா 35 இலட்சம் ரூபாயை
    யார் கொடுப்பது? நான் நடுத்தர நிலையில் வசிப்பவன். சுமார் 5 இலட்சம் ரூபாய்
    வரை என்னால் திரட்ட முடியும். அவ்வளவுதான் என் Limit. இரத்த புற்றுநோய்
    வந்தால் நான் இறப்பதுதான் நியாயம். It is as simple as that. ஏழைகளுக்கு, நடுத்தர
    மக்களுக்கு என, இந்த ஒரே ஒரு நோய் நிவாரணத்திற்காக 840 கோடி ரூபாயை
    வருடம் ஒருமுறை அள்ளி விட முடியுமா?//

    ஏன் முடியாது …. 840 கோடி அல்ல 8400 கோடி ரூபாய் என்றாலும் செய்யலாம். அதில் தவறொன்றும் இல்லை … 2G அலை கற்றை ஊழல் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல். நிலகரி சுரங்க ஊழல் ….காமன்வெல்த் ஊழல் என்று பல ஊழல்கள் செய்து லட்சக்கணகான கோடி மக்களின் வரி பணத்தை ஊழல்கள் செய்வது சாத்தியம் ஆகும் பொழுது… எல்லோருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் என்பது சாத்தியமே ஆகும் ….. விஞ்ஞானம் என்பது தனி மனித சொத்தல்ல … அது சமுகம் முழுமைக்கும் சொந்தமான ஒன்று… இன்னும் சொல்ல போனால் அனைவருக்கும் பொதுவான ஒன்று …மருத்துவ விஞ்ஞானம் அல்லது நவீன கால மருத்துவமும் மருத்துவ உபகரணங்களும் விஞ்ஞானத்தின் ஒரு பகுதி தான்… அது பணம் படைத்தவனை மட்டுமே வாழ வைக்கும் என்ற கூற்று கிஞ்சித்தும் ஏற்புடையதல்ல…. மேலும் அது மனித தன்மையும் அல்ல. கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டு இரண்டில் இருந்தும் ஒதுங்கி கொள்ள நினைக்கும் அரசாங்கங்களை தூக்கியெறியும் காலம் வெகு தொலைவில் இல்லை… பொதுவுடைமை ஒரு நாள் நிச்சயம் இந்நாட்டில் மலரும்….

  9. இந்திய அரசின் கஜானாவில் வந்துசேரவேண்டிய பணத்தை காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி ஊழல் கட்சிகளும் சேர்ந்து ஆளும் குடும்பங்களின் வெளிநாட்டு வங்கிகளில் கொண்டுபோய் சேர்த்துவிட்டன. எனவே இந்தியாவில் ஏழைகளுக்கு பல அடிப்படை வசதிகளை கூட செய்ய முடியாது என்பதே யதார்த்த நிலை. எனவே பாலாஜி சொல்வதே இப்போது உண்மை . இந்நிலை மாற வேண்டுமானால் , தேசவிரோத காங்கிரஸ் ஆட்சி மாற்றப்பட வேண்டும். சில அரசியல் குடும்ப நலன்களுக்காகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது என்பது தெளிவாகிவிட்டது. நல்ல மாறுதல்கள் ஏற்பட்டவுடன் தான் ராகுலன் கூறும் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய ஏதுவாகும் .

    பாலாஜி சொல்லும் கணக்கு மிக சரியானது. சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது. உற்பத்தியை பெருக்காமல் , எப்படி பங்கு வைக்க முடியும். அனைத்து துறைகளிலும் உற்பத்தி பெருகினால் தான் மக்கள் வாழ்வில் வேலைவாய்ப்பு பெருகி, உயர்வு கிடைக்கும். ஆனால் கம்யூனிச சித்தாந்தம் என்ற வியாதி மூலம் கதவடைப்பு, வேலைநிறுத்தம் , போராட்டம் என்று உற்பத்திக்கு தடைகள், இடையூறுகள் மட்டுமே ஏற்படுகின்றன. நாம் அனைவரும் சிந்தித்தால் இந்த உண்மை விளங்கும்.

  10. https://economictimes.indiatimes.com/opinion/editorial/when-taxpayers-shell-out-crores-for-monkey-meal-schemes/articleshow/24212856.cms

    விலங்குகளுக்கு அரசு வரிப்பணத்திலிருந்து செலவு செய்வது எந்த அளவுக்கு
    கொடூரமாக மாறியுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். புது டில்லியின் புறநகர்
    பகுதியில் உள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில் உள்ள 16000 குரங்குகளுக்கு,
    வருடத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் உணவு அளிக்கப்படுகிறது. நூறு
    குரங்குகளை பராமரித்து வைத்துக் கொண்டு மிஞ்சியவற்றை கொன்று போட
    வேண்டும் அல்லது காட்டினுள் விட்டு விட வேண்டும். நம் நாட்டில் பல
    பிரச்சினைகள் உள்ளன. இதில் குரங்குகளைப் பரமாரிப்பது ஒன்றுதான் குறைச்சல்.
    இப்படியே உணவு அளித்துக் கொண்டிருந்தால், அவைகளும் இந்தியர்கள் மாதிரியே
    வரைமுறையின்றி குட்டிகளை ஈன்று உணவுச்செலவும் வான்வரை பாயும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *