[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

தாயினும் நல்லவன்

அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.

எத்தாயர் எந்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
– எனவும்

தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார்
தாந்தாம் யாரே வந்தவாறேதோ
போமாறேதோ
மாயமாம் இதற்கேதும்
மகிழ வேண்டாம்
– எனவும்

எனவரும் அடிகளில் அப்பர் சுவாமிகள் உலக வாழ்வின் பொய்த் தன்மையைப் புலப்படுத்தக் காண்கிறோம். இந்த உண்மையை உள்ளவாறு தெளியுமிடத்து, நமக்கும் இறைவனுக்கும் உள்ளதாகின்ற உறவு வலுப்பெறும். நம் வாழ்வு சிறக்கும். ஆண்டவனோடு கொள்ளுகின்ற உறவில் உரிமை சிறக்கின்றது ; அடிமை உணர்வு அகல்கின்றது ; இன்பப் பேறு வாய்க்கின்றது. அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள் ; தன்னை மறந்தாள் ; தன் நாமம் கெட்டாள்:
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்ற அடிகளில் அப்பர் சுவாமிகளும், தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை சங்கரா! யார் கொலோ சதுரர்? அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன். உன்னைக் கண்ணுறக் கண்டுகொண்டு களித்தனன்! உன்னைக் குறுகினேற்கு என்ன குறையே என்ற அடிகளில் மாணிக்கவாசக சுவாமிகளும் இறைவனோடு இயைந்த இன்ப உறவின் இயல்பை வியந்து பேசுகின்றனர். இம்மேலான உறவு எத்தகைய வலிமையுடையது என்பதை வேறு இடங்களிலும் காண்கிறோம். மணிவாசகர் ஆண்டவன் தம்மை எவ்வாற்றானும் கைவிடல் ஆகாது என்பதை அவர்க்கு உரிமையால் உணர்த்துவார் போன்று என்னைக் கைவிட்டு
விடாதே! அப்படிக் கைவிட்டு விட்டால் நின்னால் கைவிடப்பட்டவன் நின் அடியார்க்கு அடியவன் என்று பலரிடத்தும் சொல்லி நின்னைப் பழிக்கு உரியவனாக்குவேன் ; நின்னைப் பித்தன் என்று இகழ்வேன் என்று மருட்டுகின்றார்.

சுந்தரரோ தம் கண் இழந்து வருந்துகின்ற நிலையில் – என் கண்ணைக் கெடுத்துவிட்டு நீ மட்டும் மூன்று கண்களை வைத்துக்கொண்டு வாழ்ந்து போவாயோ! என்று உரிமைக் கூச்சலிடுகின்றார். இத்தனை உரிமைக்கும் இடம் தந்து நிற்கும் ஓத உலவா ஒரு தோழனின் பெருமையை என்னென்று பேசுவது! சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பண்ணால் அழைத்தால் இவன் என்னை அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே என்ற அடிகளில் நாவரசர் இறைவனின் எளிவந்த தன்மையைச் சிறப்பித்து முயன்றால் அவனது உறவு நமக்கு எப்படியும் கிட்டும் என்ற பேருண்மையை வலியுறுத்துகின்றார்.

புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ! (லாததோ!
திகைத்தால் தேற்ற வேண்டாவோ! –

குன்றேயனைய குற்றங்கள் செய்தாலும் குணமாம் என்றே நீ கொண்டால் என் தான் கெட்டது? இரங்கிடாய்! என்று மணிவாசகர் ஊடி உறவாடும் உயர்நிலை அடியவர்க்கே உரிய தனிச்சிறப்பு அன்றோ!

ஆவித்துணையே அருமருந்தே என்றனைநீ கூவி
அழைத்து இன்பம் கொடுத்தாற் குறைவாமோ!

என்பது தாயுமானார் தம் உரிமைப் பிணக்கு, இறை உறவின் இனிமை இங்கன்றோ புலப்படுகின்றது!

குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமேயாவோம் ; உனக்கே ஆட்செய்வோம் என்ற அடிகளில் கண்ணனிடத்துத் தன்னையே இழந்து நிற்கும் கோதையைக் காண்கிறோம். உறவு மற்றொருவரில்லை காரொளி வண்ணனே! கதறுகின்றேன். யாருளர் களைகண்! என்பது ஆழ்வார் தம் அருட் புலம்பல். இவ்வாறு அடியவர் பலரும் ஆண்டவன்பால் தாம் உரிமை கொண்டாடி இன்பப்பேறு எய்துவதோடு அமையாது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பாங்கில் பற்றும் பற்றாங்கு அதுபற்றி நற்றாமம் கதி அடைவோம் என்னில் ஓடி வம்மின் என்று நம்மையும் அழைக்கின்றனர். இறைவனோடு கொள்ளும் இனிய உறவில்தான் அழுக்காறு, அவா அற்ற அன்பு மனம் மலர்கின்றது ; அருள் நெறி ஓங்குகின்றது. சேரவாரும் செகத்தீரே! மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே என்ற அன்பு அழைப்பு அனைவருக்கும் கிட்டுகின்றது.

உலகியல் வழக்கில் தாயன்பு தலையாயதாகப் போற்றப்படுவது.

ஈன்றாளோடு எண்ணக் கடவுளுமில்லை
தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என வரும் மொழிகள் தாயன்பின் தனித்தன்மை
உணர்த்துவன.ஆனால் இறையன்போ தாயன்பினை ஒத்தது என்றும், தாயன்பின் மிக்கது என்றும்
இருபடித்தானம் போற்றப் பெறுவது. தாயன்பு தலையாயது எனினும் திரிதற்பாலது என்பதனை வலியுறுத்த, பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் எனவரும் புற நானூற்றுத் தொடரும்.

அறன் சாரா நல்குரவு ஈன்ற தாயானும், பிறன்போல நோக்கப்படும் என்ற குறட்பாவும் இல்லானை இல்லாளும் வேண்டாள் ; மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள் ; செல்லாது அவன்வாயிற் சொல் எனவரும் நல்வழித் தொடரும் போதிய சான்றுகளாம்.

இறையன்பு தாயன்பினை ஒத்ததும், மிக்கதும், ஆகும் என்ற உண்மையை,

தாயேயாகி வளர்த்தனை போற்றி
தாயாய் முலையைத் தருவானே
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
தாயினும் சாலப்பரிந்து
அன்னையினும் பெரிதினிய கருணையினால்
தாயினும் நல்லன் தாழ்சடையோனே

என்ற அடிகளால் தெளியலாம். எனவே தாயன்பினும் சாலச்சிறந்தது இறையன்பு என்பதும் அம்மையப்பனாக நின்று அனைத்துயிர்க்கும் அருள் சுரப்பவன் இறைவனே என்பதும் வெளிப்படை. தலைவ! நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே! என்று முறையிட்டு இறைவனோடு இயைந்த கேண்மையில் நாளும் திளைத்து நலம் பெறுவோமா! இறை உறவாகிய இன்ப உறவு வாய்க்கத் துணை நிற்பவனே ஞான குரு, அருட் குரவன் என்று போற்றத்தக்கவன். அத்தனை சிறப்புமிக்க குருவருளைப் பெறுவோமாக!

****

ரந்திதேவர்

மண்ணக மாமுனி விசுவாமித்திரருக்கும் விண்ணக அரம்பை மேனகைக்கும் மகளாகப் பிறந்த சகுந்தலையை வேந்தன் துஷ்யந்தன் மணம் புரிந்து கொண்டான். பல்லாண்டு நல்லாட்சி நடத்திய துஷ்யந்தன் இறுதியில் தன்மகன் பரதனிடத்து அரசாட்சியை ஒப்படைத்துவிட்டுப் பரலோகம் எய்தினான். பரதன் ஆளத் தொடங்கிய அன்றுமுதல் இந்நாட்டிற்குப் பரதநாடு என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஒப்புயர்வற்ற மன்னன் பரதனது புரு வம்சத்தில் தோன்றியவர் தான் ரந்திதேவர். செங்கோல் ஏந்தும் அரசனாக இருந்த பொழுதே அவர் செம்பொருளை நாடும் அருளாளனாகவும் விளங்கினார். மணிமுடி தரித்த இம்மன்னவனது தலை மட்டும் மணிவண்ண மேனியனை வணங்கிய வண்ணமாய் இருந்தது. நீரிலிருப்பினும் நிலத்திலிருப்பினும் ஆமையானது தான் இட்ட முட்டைகளையே சதா நினைந்து கொண்டிருப்பதைப் போல, அரசியல் அலுவல்கள் பலவற்றிற்கும் இடையில் இம் மன்னனது மனம் மட்டும் ஹரியின் நினைவிலேயே புதைந்து கிடந்தது. மண்ணுலகில் மன்னனாகப் பிறந்த இம்மன்னவனது புகழ் மண்ணுலகில் மட்டுமன்றி விண்ணுலகிலும் பரவியிருந்தது.

வள்ளல்கள் பலரை ஈன்றது இப்பரத நாடு. பொருளை வாரி வாரி வழங்கிய வள்ளல்களும், அறிவை எடுத்துப் புகட்டிய அறிஞர்களும், அருளைப் பரப்பிய பெருஞானியர்களும் தோன்றியது இப்புண்ணிய பூமியாகும். பண்டைக்காலம் முதல் இன்றுவரையிலும் இப்புண்ணிய பூமியில் இம்மூவிதக் கொடைகளும் நடந்து கொண்டே வந்திருக்கின்றன. பொருளை நாடி வேற்று நாட்டார் பலர் இங்கு வந்திருக்கின்றனர்.

அதைப்போலவே அறிவையும், அருளையும் நாடிவந்த அயல் நாட்டவர்களும் பலப்பலரவர். வந்தவர்களுக்கெல்லாம் வரையாது வழங்கிய இப்பாரத நாட்டில் கொடையில் இணையற்றவராய் விளங்கினார் ரந்திதேவர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

என்னும் மறைமொழிக்கிணங்க ஈதலையே பேரறமாகக் கொண்டார். தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்ற கூற்றுக்கு மாறாக, தானத்தில் மிஞ்சியதுதான் தனக்கு என்ற கூற்றை நிறுவுவார் போலத் தன்னிடத்து இருந்தது அனைத்தையும் கரவாது பிறருக்காக எடுத்து வழங்கிவிட்டார். இருந்ததை யயல்லாம் பிறரின் பொருட்டு அளித்துவிட்ட அவர் ஒருவேளை உணவிற்கும் வழியின்றித் தம்மை ஏழையாக்கிக் கொண்டார்.

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றக்கோள் தக்க துடைத்து

என்னும் மறைமொழிக்கிணங்க அவர் வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டார். முன்பு எடுத்து வழங்கிய அவரது கரங்கள் பொருள் ஏதுமின்றி வறிதே கிடந்தன. பலருடைய பசிப்பிணியைப் பறந்தோடச் செய்த அவர் தன்னுடைய பசியைப் போக்குவதற்கும் வகையில்லா நிலையில் வெறுமனே வீற்றிருந்தார். அவரது உடல் உணவின்றிப் பட்டினி கிடந்தது உண்மை. ஆனால் அவரது உள்ளம் மட்டும் ஈசுவர உபாசனை என்ற அருள் விருந்தை இடையறாது அருந்திக் கொண்டிருந்தது. ஆதலால், உணவின் பொருட்டுப் பிறரிடம் கைகளை நீட்டி அவர் ஒருநாளும் பிச்சை எடுக்கவில்லை. வெளியே சென்று தேடாமல் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு நல்லதோ கெட்டதோ கிடைத்ததைக் கொண்டு மனத்திருப்தியுடன் காலங்கழித்து வந்தார். இவ்வாறு காலத்தை இனிதே கழித்துவந்த அவர் ஒருசமயம் பலநாட்கள் உணவின்றிப் பட்டினிகிடக்க நேர்ந்தது. இன்ப துன்பம் இரண்டையும் பொருட்படுத்தாத அம்மகான் பசியைக் குறித்துச் சிறிதும் வருந்தவில்லை. தன்னுடைய உடல் இருப்பதைப்பற்றியோ அல்லது இல்லாது ஒழிந்துபட்டுப் போவதைப்பற்றியோ சிறிதும் கருத்தில் வாங்கிக்கொள்வில்லை. உலக இச்சைகளையயல்லாம் அடியோடு ஒழித்துவிட்ட அவரது உள்ளம் யாண்டும் இறை உணர்விலேயே ஊறிக்கிடந்தது. இவ்வாறு பல நாட்கள் பட்டினி கிடந்த அவருக்கு ஒருநாள் எதிர்பாராமல் பால் அன்னமும், கோதுமைக்கஞ்சியும் கிடைத்தன. எனக்கு அன்னியரல்லாராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வகிக்கிறேன் என்று கண்ணபிரான் கீதையில் பகர்ந்தருளியுள்ளார். தன்னை முற்றிலும் ஹரியினிடத்து ஒப்படைத்துவிட்டு ஹரியையே எங்கும் கண்ட அவருக்கு ஹரியின் அருளாலேயே உண்ண உணவும் கிடைக்கலாயிற்று.

பசிப்பவன் புசிக்க விரும்புவது இயற்கை, பசியால் வாடும் ஒருவன் உணவைக் கண்டதும் முதலில் அவ்வுணவை உண்டு தனது பசியை ஆற்றிக் கொள்ளுவான். உணவைக் கண்டதும் அவசர அவசரமாக உண்டு தீர்ப்பது உலகில் பெரும்பாலோரது பழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால் ரந்திதேவரிடத்து அதற்கு முற்றிலும் நேர்மாறான காட்சியைக் காணுகின்றோம். உணவைக் கண்டதும் அவர் உண்டு தீர்த்துவிடவில்லை. பங்குக்கு வேற யாரேனும் வந்துவிடுவார்களோ என்று அவ்வுணவைப் பிறர் அறியா வண்ணம் பதுக்கி வைக்கவுமில்லை. யாருடைய அருளால் தனக்கு அவ்வணவு கிடைத்ததோ, யாருடைய அருளால் உயிர்கள் அனைத்திற்கும் உணவு கிட்டுகிறதோ அந்த முதல்வனுக்கு, இறைவனுக்கு முதலில் அவ்வுணவைப் பக்தியோடு நைவேத்தியமாகப் படைத்தார். பிறகு அவ்வுணவை இறைவனது அருட்பிரசாதமாக அருந்துவதற்கு ஆசனத்தில் அமர்ந்தார். உணவை உட்கொள்ளப்போகும் தறுவாயில் அதிதியாய் வந்த அந்தணன் ஒருவன் ஆங்குத் தோன்றினான்.

அதிதியைக் கண்ட ரந்திதேவர் திரிகரண சுத்தியுடன் அவனை வரவேற்றார். யாண்டும் ஹரியையே காணும் அவர் வந்த அதிதியையும் ஹரியாகவே கருதினார். தன்னிடத்து இருந்த உணவில் ஒரு பகுதியை எடுத்து அதிதியாக வந்த அந்தணனுக்கு உள்ளன்போடு வழங்கினார். உண்டு பசியாறிய அவ் அதிதியும் ரந்திதேவரை வாழ்த்தி விட்டு வந்த வழியே சென்று விட்டான். அந்தணனை அனுப்பிவிட்டுத் திரும்பவும் உண்ணுதற் பொருட்டு ஆசனத்தில் அமர்ந்தார் ரந்திதேவர். ஆனால் அப்பொழுது கீழ்க்குலத்தோன் ஒருவன் உணவு வேண்டித் தன் முன் நிற்பதைக் கண்டார். முகம் சிறிதும் கோணாது எஞ்சியிருந்த உணவில் ஒரு பகுதியை அவனுக்கு உவகையுடன் பெற்ற அவன் சென்றவுடனே நாய்கள் சூழ வேறொருவன் அங்குத் தோன்றினான். தனக்கும், தன்னுடைய நாய்களுக்கும் உணவு வேண்டுமென்று பரிந்து வேண்டினான். கண்ணிற் காணும் காட்சியனைத்தையும், நிகழும் நிகழ்ச்சியனைத்தையும் ஈசன் மயமாகக் காணும் அவர் தன்னிடத்து மீதமிருந்த உணவு அனைத்தையும் அவனுக்கும், அவனுடைய நாய்களுக்குமாக அளித்துவிட்டார். உணவு கிடைத்த உவகையுடன் வந்தவனும் தனது நாய்களுடன் மறைந்து விட்டான்.

இப்பொழுது அவரிடத்து எஞ்சியிருப்பது சிறிது நீர் மட்டுமேயாகும். ஒருவருடைய தாகத்தைப் போக்குதற்குக்கூட அது போதாததாக இருந்தது. அதையாவது பருகலாமெனக் கையில் எடுத்தார். ஆனால் அந்தோ! அங்கு ஒரு வயோதிகன் தோன்றி ரந்தி தேவரை நோக்கி, ஐயா, எனக்குத் தாகம் மிக எடுக்கின்றது. நீர் வேட்கையால் உயிரே போய்விடும் போல் தோன்றுகின்றது. தண்ணீர் தந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று பரிந்து வேண்டினான். வயோதிகனது உரையைக் கேட்ட ரந்தி தேவரது உள்ளம் உருகிற்று. தன்னிடத்து இருந்த நீர் அனைத்தையும் அவ்வயோதிகனுககுத் தந்துவிட்டார். தாகத்தைப் போக்கிக்கொண்ட வயோதிகனும் விடைபெற்றுச் சென்றுவிட்டான். வயோதிகன் சென்றதும் ரந்திதேவர் தனக்குள் யோக சித்திகள் பல எனக்கு வேண்டாம். முக்தியும் எனக்கு வேண்டாம். வருந்துவோர் உள்ளத்தில் புகுந்து அவர்களுடைய துன்பச் சுமைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் பேறு ஒன்றையே நான் வேண்டுகின்றேன்.

இவ்வயோதிகனுக்கு நீரை அளித்ததும் என்னுடைய பசியும் தாகமும் பறந்துவிட்டன என்று சொல்லிக்கொண்டார். என்னே ரந்திதேவரின் பெருமை! சுயநலத்தின் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மனிதனைப் பந்தத்தில் தள்ளுகின்றது. பரநலத்தின் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மனிதனுக்கு விடுதலையை நல்குகின்றது. தன்னுடைய உயிரையே பிறரின் பொருட்டு வழங்கும் தியாக புரு­னுடைய ஒவ்வொரு சிறு செயலும் இறைவனுக்குரிய பூஜையாகின்றது. அத்தகைய தியாக புரு­னுக்கு இறைவனது திருவருள் விரைவில் கிட்டுகிறது. சற்றுமுன் ரந்திதேவரிடத்து மனதைச் சோதிப்பதற்கென்று வந்தவர்கள் மும்மூர்த்திகளேயாவர். வயோதிகனுக்கு நீரை அளித்ததும் மும்மூர்த்திகளும் தங்களுடைய சொந்த உருவோடு ரந்திதேவர் முன் தோன்றி அவரை ஆசீர்வதித்தனர். மாயையை வென்ற அம்மன்னவன் அவர்களிடத்துத் தமக்காக வென்று எதையுமே வரமாக வேண்டிக் கொள்ளவில்லை. இறைவனிடத்து மாறாத பக்தி ஒன்றை மட்டும் வேண்டினார். சதாகாலமும் இறைவனையே நினைந்து அவனது திருவடிகளை அடைந்தார்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

 

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

3 Replies to “[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு”

  1. நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும்//

    mannikavum..thirunavukarasar perumaan irumaanthu pesavillai..emperumaan sivaperumaanin muthalkal adiyaargalil, samayakuravargalil thanum oruvar enbathaal matraya ethirmarai sakthikalidam thanai adaiyalapaduthi kolla thondri vanthathe agum. miga periyavargalai patri vilikum mun kavanam thevai..ningal pesum matra nalla varigal kanirku padathu…siru thavaru irundhaal kuda athu mattume padum.

  2. Gnanaguru அவர்களுக்கு,

    ”இறுமாந்து” என்ற தமிழ்ச் சொல்லுக்கு கர்வம் என்று மட்டும் பொருள் அல்ல. பெருமிதம், துணிவு, உறுதி போன்ற அர்த்தங்களும் உண்டு.

    திருநாவுக்கரசரே ஒரு பாடலில்

    இறுமாந்திருப்பன் கொலோ – சிவன்
    பல்கணத்தெண்ணப் பட்டு
    சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று
    இறுமாந்திருப்பன் கொலோ

    என்றூ பாடியிருக்கிறார். எனவே சுவாமிகள் அச்சொல்லை இவ்விடத்தில் பயன்படுத்தியிருப்பது மிகவும் ஏற்புடையதே.

  3. சுவாமிகள் வார்த்தைகளை சரியாக பயன் படுத்துவார் .
    வ.சோமு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *