அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

அமெரிக்க தேர்தல் இரு கட்சிகளின் மாநாடுகளில் வேட்ப்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் இருந்துதான் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. அந்த மாநாடுகள் சென்ற மாதம் நடந்து முடிந்து விட்டன. மாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்ப்பாளர்களும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு அரங்குகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுவார்கள். டி வி விளம்பரங்கள் மூலமாக மக்களைச் சென்றடைவார்கள். இமெயில்கள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், விளம்பர ஸ்டிக்கர்கள், போர்டுகள் மூலமாகவும், தனி முகவரிக்கு அனுப்பப் படும் பிரச்சாரக் கடிதங்கள் மூலமாகவும் பெரும்பாலும் தங்கள் பிரச்சாரங்களைச் செய்கிறார்கள். இவற்றில் டி வி மூலம் செய்யப் படும் பிரச்சாரத்திற்கு பெருவாரியான தேர்தல் செலவு ஒதுக்கப் படுகிறது. ஒபாமா இது வரை 1 பில்லியன் டாலர்களுக்கு மேலாக தேர்தல் நிதி சேகரித்து செலவு செய்து வருகிறார். இருவருமே தேர்ந்தெடுத்த சில மாநிலங்களில் அதிக செலவு செய்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஜனாதிபதி வேட்ப்பாளர்கள் தவிர செனட் தேர்தலில் போட்டியிடுபவர்கள் முதல் சாதாரண நகர கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வரையிலும் இதைப் போன்ற பிரச்சாரங்களையே செய்கிறார்கள். இந்தியா போல கட் அவுட் வைப்பது, சுவரில் எழுதுவது, நோட்டீஸ்களை ஒட்டுவது இங்கு கிடையாது. ஆனால் முக்கியமான சந்திப்புகளிலும் விளம்பரத்துக்காக ஒதுக்கப் பட்ட பொது இடங்களிலும் போர்டுகளை வைத்து கவனங்களை ஈர்க்கிறார்கள். ஆதரவாளர்கள் தங்கள் கார்களில் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களது பெயர்களை ஒட்டிக் கொள்கிறார்கள். சின்னங்கள் கிடையாது என்பதினால் பெயர்களைப் பெரிதாக நினைவு படுத்துகிறார்கள். காசு செய்து செய்யும் விளம்பரங்கள் தவிர டி விக்கள் இரு பெரிய கட்சிகளின் மாநாடுகளை மிக விரிவாகக் காட்டுகிறார்கள். அதில் பேசப் பட்டவை குறித்தும் பேசியவர்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார்கள். இரு கட்சிகளும் நான்கு நாட்கள் வரை மிகப் பெரும் செலவில் மிகப் பெரும் ஸ்டேடியங்களில் இந்த மாநாடுகளை நடத்துகிறார்கள். இந்த மாநாடுகளில் பேசப் படுபவை டி வி மூலமாக அனைத்து வாக்காளர்களையும் சென்று அடைகின்றன. இந்த மாநாடுகளில் முக்கியமானவர்கள் பேசுவதை மக்கள் கேட்க்கிறார்கள். முக்கியமான விஷயங்களில் இரு தரப்பாரும் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த மாநாடுகள் உதவுகின்றன.

முதலில் ரிபப்ளிக்கன் கட்சியின் மாநாடு டென்வர் என்ற நகரில் நடந்தது. மாநாட்டின் முடிவில் மிட் ராம்னியையும், பால் ரயானையும் அதிபர் வேட்பாளராகவும் துணை அதிபர் வேட்ப்பாளராகவும் அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் பேசிய பேச்சு ஒரு முக்கியமான பேச்சாகக் கருதப் பட்டு மக்களைச் சென்றடைகிறது. இருவரது மும்முரமான பிரச்சாரங்களும் இந்த மாநாட்டில் இருந்து துவங்குகின்றன. ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, தென்னமரிக்க ஸ்பானிஷ் பேசும் அமெரிக்கர்களையோ, இந்தியர்களையோ அபூர்வமாகவே காண முடிந்தது. பேச்சாளர்களில் ஒரு வித பிரதிநிதித்துவத்துக்காக ஒரு சில ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும், ஸ்பானிஷ் பேசும் அமெரிக்கர்களையும் பேச வைத்தார்கள். இவர்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் புஷ் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டார். அவர் பெயரைக் கூட அவரது தம்பியைத் தவிர வேறு எவரும் உச்சரிக்க மறந்து போனார்கள். புஷ்ஷும், அவரது உதவி ஜனாதிபதியான டிக் சென்னியும் அவர்கள் கட்சிக்கே தீண்டத்தகாதவர்களாக ஆகிப் போனார்கள். முற்றிலுமாகத் தவிர்க்கப் பட்டார்கள் அந்த அளவுக்கு அவர்களின் எதிர்மறை செல்வாக்குக் குறித்து அச்சப் படுகிறார்கள்.

மாநாட்டில் பேசிய அத்தனை முக்கியமான ரிபப்ளிக்கன் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சில முக்கியமான பிரச்சாரங்களையே பேசினார்கள்.

ஒபாமாவின் நான்கு ஆண்டு ஆட்சியில் 2.3 கோடி பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்கள் விலைவாசி ஏற்றத்தினாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் பெரிதும் அவதிப் படுகிறார்கள். உலக அளவில் அமெரிக்கா மீது பிற நாடுகளுக்கு குறிப்பாக சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு சுத்தமாக பயம் விட்டுப் போய் விட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய் விட்டது. நாட்டின் ஒட்டு மொத்தக் கடன் கடந்த நான்காண்டுகளில் பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒபாமாவுக்கு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. ஒபாமாவின் ஆட்சி படு தோல்வி அடைந்த மக்களைக் கை விட்டு விட்ட ஒரு ஆட்சி. சிறு தொழிலதிபர்களை கஷ்டப் படுத்தும் ஆட்சி. வேலை வாய்ப்புக்களை உருவாக்காத ஆட்சி.

இதையே மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள். முக்கியமாகத் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள். எப்படி தாங்கள் ஏழ்மையில் இருந்து வளர்ந்து இந்நிலைக்கு வந்தோம் என்று சுய புராணம் பாடினார்கள். அனைவரும் மறக்காமல் தாங்கள் சர்ச்சுக்குப் போவது குறித்தும் தங்களது மத விசுவாசம் குறித்தும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டார்கள். அனைவருமே தங்கள் குடும்பத்தின் மீதான பாசத்தையும், எப்படி ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தன் என்பதையும் வலியச் சொல்லிக் கொள்கிறார்கள்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய வேட்ப்பாளர் மிட் ராம்னி தான் பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட தனக்கும் ஏழைகள் மீதும், நடுத்தர வர்க்கத்தினர் மீதும் பாசம் உள்ளதாக உருக்கமாகப் பேசினார். தான் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பேன் என்றும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை அதிகரிப்பேன் என்றும் பெரிய நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்களின் மீதான வரிச்சுமையைக் குறைப்பேன் என்றும் நான்கு ஆண்டு கால ஒபாமா ஆட்சியில் அனைத்தும் பாழ் பட்டுப் போனது என்றும் தான் ஒரு பெரிய பிஸினெஸ்மேன் ஆகையால் தனக்கு மட்டுமே நாட்டை எப்படி பொருளாதாரச் சீர்குலைவில் இருந்து மீட்ப்பது என்பது தெரியும் என்றும் கூறினார். மீண்டும் மீண்டும் தனது பிஸினெஸ் அனுபவத்தை முன்னால் வைத்து தனக்குத்தான் பொருளாதார அறிவு அதிகம் என்பதை வலியுறுத்திக் கொண்டார். பருவ நிலை மாற்றம் குறித்தும் பூமி சூடாவதைக் குறைப்பதற்காகவும் ஒபாமா கவலைப் படுவது குறித்தும் அதற்காக ஆராய்ச்சி செலவு செய்வது குறித்தும் மிட் ராம்னி கிண்டல் அடித்தார். எந்த வித பிரச்சினைகளைப் பற்றியும் ஆழமான புரிதலுடனோ தீர்வுகளுடனோ எவருமே பேசவில்லை. கிட்டத்தட்ட இந்திய அரசியல் மேடப் பேச்சுக்களில் தெளிவில்லாமல் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்கும் வெட்டிப் பேச்சாகவே மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலோரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பாக கடைசியாகப் பேச வந்த பிரபல நடிகரும் இயக்குனருமான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஒரு காலி நாற்காலியில் ஒபாமா அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அவருடன் பேசுவது போல நடித்துப் பேசிய பேச்சு சற்று எல்லை மீறிச் சென்று பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அவரது நடிப்பும் பேச்சும் எதிர் மறையான விளைவுகளை உருவாக்கியது. சிறிது ஆபாசமான முறை தவறிய கண்ணியம் குறைந்த பேச்சும் நடவடிக்கைகளும் கூட நுட்பமாகக் கவனிக்கப் பட்டு அனைவரது கண்டனங்களுக்கும் உள்ளாகியது. இந்திய மேடைகளில் தலைவர்கள் பேசுவது போல கண்ணியக் குறைவான ஆபாசமான பேச்சுக்களை எவரும் எளிதாகப் பேசி விட முடிவதில்லை.

ரிபப்ளிக்கன் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து டெமாக்ரட்டிக் கட்சியின் மாநாடும் கோலாகலமாக நடைபெற்றது. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். மாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது. டெமாக்ரடிக் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் பிரபலமான மாநில ஆளுனர்களும் பேசினார்கள். ஒபாமாவும், பைடனும் இறுதியாக உரையாற்றினார்கள். இறுதியில் பேசிய முன்னாள் அதிபர் பில் க்ளிண்ட்டனின் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றது. பேசிய அனைவரையும் விட அவரது பேச்சே அனைவரையும் பெரிதாகக் கவர்ந்தது. நிறைய புள்ளி விபரங்களுடன் மிகத் தெளிவான ஒரு பேச்சாக அமைந்திருந்தது. அவர் மட்டும் மீண்டும் போட்டியிட முடிந்தால் அவரையே மீண்டும் அதிபராக மக்கள் தேர்ந்து விடும் அளவுக்கு பிரபலமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. பில் க்ளிண்டனின் உரை ஒபாமாவுக்கு பெரும் உத்வேகத்தையும் ஆதரவையும் உருவாக்கியிருந்தது. புஷ்ஷின் இரு பெரிய போர்களினாலும் பொருளாதார மந்த நிலையினாலும் எப்படி கடன் உயர்ந்தது, எவ்வளவு பெரிய நஷ்டத்தை அவை உருவாக்கின. அவற்றில் இருந்து எப்படி ஒபாமா படிப்படியாக நாட்டை மீட்டு வருகிறார் என்பதை தெளிவான புள்ளி விபரங்களுடன் க்ளிண்ட்டன் பேசினார். மாநாட்டின் முக்கியமான உரையாக அது அமைந்து விட்டது.

ஒபாமாவும் பிற பேச்சாளர்களும் டெமாக்ரடிக் கட்சியின் சாதனைகளாகவும் தங்களது அடுத்த நான்காண்டு திட்டங்களாகவும் கீழ்க்கண்ட பிரச்சாரங்களை மீண்டும் மீண்டும் அழுத்த்மாக எடுத்து வைத்தார்கள்: முந்தைய புஷ் ஆட்சியினால் நிகழ்த்தப் பட்ட இரு பெரும் போர்கள் காரணமாக நாடு மிகப் பெரிய கடனில் மூழ்க நேரிட்டது. அதில் இருந்து நாட்டை மீட்டு வருவதே பெரும் சவாலாக இருந்தது. கடனில் மூழ்கிப் போய் மூடும் நிலையில் இருந்த கார் கம்பெனிகளுக்கு உதவி அளித்து அவற்றை மீண்டும் வெற்றிகரமாக இயங்க வைத்திருப்பது. 50 லட்சம் வேலைகள் உருவாக்கப் பட்டுள்ளன. வீட்டுக் கடன்களினால் மூழ்கிப் போன வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மீட்க்கப் பட்டு வீட்டு விற்பனை இப்பொழுது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஏமாற்றும் நிதி நிறுவனங்களின் மீது பெரும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப் பட்டன. ஈராக் நாட்டில் இருந்து படைகளை விலக்கி நாட்டுக்கு திருப்பி அழைக்கப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்தும் 2014ம் ஆண்டும் படைகளை வாபஸ் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது. ஈரான் மீது தடைகள் மூலமாக பெரும் அழுத்தம் தரப் பட்டு வருகிறது. சீனாவிடம் கண்டிப்பாக நடந்து கொண்டு சீனாவின் வரம்பு மீறிய வர்த்தக நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் கொண்டு வரப் பட்டுள்ளன. எண்ணைக்காக அரபு நாடுகளைச் சார்ந்திருப்பது பெரும் அளவு குறைக்கப் பட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு அடைய முயன்று வருகிறது. பாக்கிஸ்தானில் பின் லாடன் கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப் பட்டுள்ளான். அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் கார்களின் எரிசக்தித் திறன் அதிகரிக்கப் பட்டு தற்பொழுது ஒரு காலனுக்கு கார்கள் ஓடும் தூரத்தை விட இரு மடங்கு அதிகரிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளதை தனது சாதனையாக அறிவித்தார். அதன் படி எரி பொருள் சேமிப்பு அதிகரிக்கும்.

இவை போன்ற சாதனைகளைச் சொல்லி இருந்தாலும் நாடு இன்னமும் முழுதாக பொருளாதாரச் சீர்குலைவில் இருந்து மீளவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அதை முழுவதும் சீரமைத்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர தனக்கு இன்னும் ஒரு நான்கு ஆண்டுகள் தொடர வாய்ப்புத் தருமாறு ஒபாமா கோரினார்.

இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி தாங்களால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும் என்று சூளுரைத்தார்கள். வருட வருமானம் 2,50,000 டாலர்களுக்கு மேல் அதிக வருமானம் உள்ள பணக்காரர்களிடம் அதிக வரி விதித்தும் அதற்குக் கீழேயிருப்பவர்களுக்கு குறைவான வரி விதித்தும் நிதிப் பற்றாக்குறையை தீர்க்கப் போவதாக ஒபாமாவும் அனைவரின் வரிகளையும் குறைக்கப் போவதாக ராம்னியும் அறிவித்தார்கள். ஆனால் இரு தரப்பாருமே இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதற்கான தெளிவான திட்டங்களை விரிவாகப் பேசவில்லை. ஒபாமா ராணுவ பட்ஜெட்டில் 2 டிரில்லியன் டாலர்கள் குறைக்கப் போவதாகக் கூறினார். ஆனால் ராம்னியோ அதை அதிகரிக்கப் போவதாகவும் மேலும் வலுவான ராணுவத்தை உருவாக்கப் போவதாகவும் கூறினார். வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர். பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள். கருத்தடை, கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் மத அடிப்படையிலான நிலைப்பாட்டை மிட் ராம்னி எடுத்தார். ஒபாமா ஓரின திருமணம், கருக்கலைப்பு, ஸ்டெம் செல் ஆராய்ச்சி போன்ற விவகாரங்களில் முற்போக்கான ஆதரவைத் தெரிவித்தார்.

அமெரிக்கா முழுவதும் சில கோடி மக்கள் ஆர்வத்துடன் டெலிவிஷனில் இரு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். முதலில் மாநாடுகளில் முத்தாய்ப்பாக இரு வேட்பாளர்களும் அவர்களது உதவி ஜனாதிபதி வேட்ப்பாளர்களும் ஆற்றும் உரை அடுத்தது அதை விட முக்கியமாக அதை விட அதிகமாக அதை விட ஆர்வமாக மக்கள் பார்ப்பது இரு வேட்பாளர்களுக்கு இடையிலும் நடக்கும் நேரடி விவாதங்களை. கிட்டத்தட்ட ஒரு குத்துச் சண்டையை, ஒரு யுஸ் ஓப்பன் ஃபைனல்ஸை, ஒரு பேஸ்பால், பாஸ்கட் பால் ஃபைனல்ஸைக் காணும் ஆர்வத்துடன் இந்த நேரடி விவாதங்களை மக்கள் டி வி யில் காண்கிறார்கள். இங்கு இரு வேட்ப்பாளர்களும் நேரடியாகச் சந்தித்து சிரித்து, கட்டிப் பிடித்துக் கை குலுக்கி, பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு பேச்சைத் தொடர்கிறார்கள். மொத்தம் ஒன்றரை மணி நேரம் இந்த விவாதம் நடை பெறுகிறது. பி பி எஸ் தொலைக் காட்ச்சியின் செய்தி வாசிப்பாளரான ஜிம் லெரர் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக விளங்கினார். அவர் கீழே அமர்ந்திருந்து கேள்விகள் கேட்க இரு வேட்ப்பாளர்களும் மேடையில் அருகருகே நின்று கொண்டு தத்தம் வாதங்களைப் பதில்களை, பதிலுக்குப் பதில்களை எடுத்து வைத்தார்கள். போட்டியிடும் இரு வேட்ப்பாளர்களும் மூன்று முறை நேருக்கு நேர் ஒரே மேடையில் கேட்க்கப் படும் கேள்விகளுக்கும் பரஸ்பரம் சுமத்தப் படும் குற்றசாட்டுகளுக்கும் பதில் அளிக்கிறார்கள். இதில் இருவரும் அளிக்கும் பதில்களில் உள்ள தெளிவு அவர்கள் விவாதங்களில் காண்பிக்கும் முதிர்ச்சி எதிர்மறை தன்மை, ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் காண்பிக்கும் ஆழம், அறிவு, விபரம், முக பாவங்கள், எதிரியை கையாளும் திறன், பேச்சின் நம்பகத் தன்மை, தகவல்களில் இருக்கும் உண்மைகள் பொய்கள் மழுப்பல்கள், முகக் கோணல்கள், கண்களைப் பார்த்துப் பேசுதல், பரஸ்பரம் காண்பிக்கும் மரியாதை, கண்ணியம், குறுக்கே நுழைந்து பேசுதல், அடாவடியாக பேசுதல் போன்ற எண்ணற்ற விஷயங்களை மக்களும் ஊடக விற்பன்னர்களும் மிக நுட்பமாகக் கவனித்து அலசுகிறார்கள். முதல் விவாதத்தில் நடுவர் ஒருவர் ஒரே கேள்வியை இருவரிடமும் கேட்க்க இருவரும் பதில் சொல்லுகிறார்கள். ஒருவர் சொன்ன பதிலுக்கு மற்றவர் மறுமொழி அளிக்கிறார். இரண்டாவது விவாதத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் சிலர் இரு வேட்பாளர்களிடமும் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டு பதில் பெறுகிறார்கள். மூன்றாவது விவாதத்தில் வெளிநாட்டுக் கொள்கைகள் சார்ந்த கேள்விகள் கேட்டு இருவரும் பதில் அளிக்கிறார்கள். இந்த விவாதங்கள் மூலமாக இரு வேட்ப்பாளர்களது பேச்சாற்றலும், அறிவும், திறமையும், தலமைப் பண்பும், ஆற்றலும் எடை போடப் படுகின்றன. அது வரை தீர்மானித்திராத பலரும் இந்த விவாதங்களைக் கேட்ட பின் எவருக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.

இது போன்ற நேருக்கு நேராக பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சருக்கான வேட்ப்பாளர்கள் இந்தியாவில் கலந்து கொண்டு விவாதிப்பது இல்லை. அப்படி சந்தித்து விவாதித்தால் கை கலப்பு ஏற்படும் வாய்ப்புகள் கூட வந்து விடலாம். அமெரிக்க அதிபர் தேர்தல்களில் விவாதம் துவங்குவதற்கு முன்பாக இருவரும் கட்டிப் பிடித்து ஆரத் தழுவி அன்பான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதன் பின் சூடான விவாதம் நடக்கிறது. விவாதம் முடிந்த பின்னர் இரு வேட்பாளர்களின் குடும்பத்தாரும் மேடைக்கு வர இருவரும் மீண்டும் ஒரு முறை பரஸ்பரம் அன்பான வார்த்தைகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டு குடும்பத்தாருடனும் பேசிய பின்னரே விடை பெறுகிறார்கள். ஆரம்பத்திலும் முடிவிலும் கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டாலும் இடைப்பட்ட விவாதத்தில் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக விவாதிக்கிறார்கள். இதற்கு அமெரிக்கன் சாண்ட்விச் அணுகுமுறை என்று பெயர். மேலும் கீழும் ரொட்டியை (bun) வைத்து இடையே மாமிசத் துண்டை வைத்துக் கொள்வதற்கு ஒப்பான விவாத அணுகு முறை இது. ஒரே மேடையில் இரு முக்கிய வேட்ப்பாளர்களும் நேருக்கு நேராக பேசிப் பதில் சொல்லும் கலாச்சாரம் நம்மிடம் கிடையாது. இந்தக் கண்ணியம், மரியாதை எல்லாம் இந்திய மேடைகளில் வெகு அரிதாகவே சாத்தியப் படும் வாய்ப்புள்ளது. தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வருமாறு அத்வானி முன்பு மன்மோகன் சிங்கைப் பல முறை அழைத்தும் மன்மோகன் மறுத்து விட்டார். அது போலவே நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் சோனியா, ராகுல் மன்மோகன் ஆகியோரை தன்னுடன் ஒரே மேடையில் தேசீயப் பிரச்சினைகளை விவாதிக்க அழைத்துக் கொண்டேயிருக்கிறார். காங்கிரஸ் தரப்பில் இருந்து பிடிவாதமாக மறுத்து விடுகிறார்கள். ஒரே மேடையில் விவாதிக்கா விட்டாலும் கூட பேட்டிகள் மூலமாகக் கூட இவர்கள் தங்கள் நிலைகளை மக்களிடம் கொண்டு செல்ல மறுக்கிறார்கள். மேடை விவாதங்கள் தவிர ஏராளமான தொலைக் காட்சி பேட்டிகள், மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்வது மூலமாக அமெரிக்க அதிபர் வேட்ப்பாளர்கள் தொடர்ந்து மக்களுடன் நேரடியாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமாவும், மிட் ராம்னியும் கலந்து கொண்ட விவாதம் எப்படிப் போயிற்றூ என்பதையும் இன்னும் சில விசயங்களையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *