ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -2

வெறுப்பை விதைக்கும் சுயநலவாதிகள்…

saathi

முந்தைய பகுதி
எந்த ஒரு விளைவுக்கும் காரணம் இருக்கும். அதுபோல தமிழகத்தின் ஜாதிக் கலவர சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் நமது அரசியல்வாதிகள் தான். திமுகவின் கருணாநிதி முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவரை, யாரையும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துவிட முடியாது.

தமிழன் என்ற பெருமிதத்தை பிரசாரம் செய்து, திராவிட பிரிவினைவாதம் பேசி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இதில் பெரும் பங்குண்டு. உண்மையில் திமுக, முதலியார்களின் கட்சியாகவே வளர்ந்த இயக்கம். பிற்பாடு அரசியல் வெற்றிகளுக்காக பிற ஜாதிகளை அரவணைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, அவர்களால் இணைக்கப்பட்டவர்கள் பிற ஆதிக்க ஜாதியினர் மட்டுமே. பகுத்தறிவு பிரசாரத்தை தலையில் தாங்கிய திராவிடக் கொழுந்துகள் எவரும் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், நில உடைமை சமூகத்தின் எச்சமான ஆதிக்க ஜாதியினரின் அபிலாஷைகளையே அக்கட்சி பொருட்படுத்த வேண்டி இருந்தது. அதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு சலுகைகள் ஆதிக்க ஜாதியினருக்கும் அளிக்கப்பட வசதியாக தமிழகத்தில் அதன் விகிதாசாரமே (69 சதவீதம்) திருத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு பெற வசதியாக பல பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் கோரிக்கைகளை முன்வைத்தன. பல ஜாதிகள் தங்களை ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்’ பட்டியலில் சேர்க்க கொடி பிடித்தன. வாக்கு வங்கி அரசியலில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இதுவே ஜாதி ரீதியாக மக்கள் ஒருங்கிணைய முக்கிய காரணியாக அமைந்தது. அதாவது ‘ஜாதிகளை ஒழிப்போம்’ என்று சொல்லிக் கொண்டே, ஜாதிகள் வளர அற்புதமான நாற்றங்காலாக தமிழகம் மாற்றப்பட்டது. அதன் விளைவே வன்னியரை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாள கவுண்டர்களை ஆதாரமாகக் கொண்ட கொங்கு வேளாளர் பேரவை போன்ற அமைப்புகளின் உதயம். இதில் பாமக பெற்ற வெற்றி, பிற ஜாதியினரையும் இதே திசையில் யோசிக்கச் செய்தது.

அதன் விளைவாக முதலியாருக்காக புதிய நீதிக் கட்சி, நாடார்களுக்காக சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தேவர்களுக்காக பார்வர்ட் பிளாக் கட்சி, மூவேந்தர் முன்னற்ற கழகம் போன்ற கட்சிகள் இயங்கத் தலைப்பட்டிருக்கின்றன. இதில் பார்வர்ட் பிளாக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க உருவாக்கப்பட்ட கட்சி. அது நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கும் ஜாதி கட்சியாக மாறி இருப்பது தற்போதைய வீழ்ச்சிக்கு அற்புதமான உதாரணம்.

முத்தரையர்கள், நாயுடுகள், யாதவர்கள் போன்ற இடைநிலை ஜாதியினரும் தங்கள் அரசியல் வடிவை உருவாக்கி தேர்தல் அரசியலில் குதித்திருக்கின்றனர். 2001 சட்டசபை தேர்தலின் போது, ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவற்றுக்கு அங்கீகாரமும் அளித்தார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு போட்டியாக, தேவர் சமூகத்தை தனது ஆதார வாக்குவங்கியாக அதிமுக வளர்த்தெடுத்தது.

caste04
இதே வேளையில், தாழ்த்தப்பட்ட மக்களிடையிலும் அரசியல் விழிப்புணர்வு கட்சிகளாக மலர்ந்தது. வை.பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள் கட்சி, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், ஜான் பாண்டியனின் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பூவை மூர்த்தியின் புரட்சி பாரதம், பழ.அதியமானின் ஆதித் தமிழர் பேரவை போன்றவை இவற்றில் முக்கியமானவை. இவையல்லாது நக்சலைட்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சிறு குழுக்களாக இயங்கி வருகிறார்கள். அண்மையில் கலவரம் நடந்த தருமபுரி- நாயக்கன்கொட்டாய் பகுதியில், கலவரத்துக்கு காரணமான வெறுப்பூட்டும் பிரசாரத்துக்கு நக்சலைட்களும் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆக, தமிழக அரசியல் களம் ஜாதிரீதியாக இருதுருவ மயமாதலில் சிக்கிவிட்டது. ஆளும் கட்சி- எதிர்க்கட்சி கூட்டணிகளில் இரு பிரிவுகளிலும் ஜாதிக் கட்சிகள் சேர்வதும் பிரிவதும் வாடிக்கையாகி விட்டது. சென்ற 2011 சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், பாமக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னற்ற கழகம் போன்ற ஜாதி கட்சிகள் திமுக தரப்பில் இருந்தன. அதிமுக தரப்பில் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு தேர்தலிலும் இது மாறாத யதார்த்தமாக உள்ளது.

எந்த ஒரு கூட்டணியிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ கட்சிகள் போலவே (மதச்சார்பின்மையைக் காக்க வேண்டுமே?), ஜாதிக் கணக்கீட்டுடன் ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளைச் சேர்த்துக் கொள்வதும் (இது சமூகநீதியைக் காக்கவாம்!) தமிழகத்தின் அரசியலில் பெரும் ராஜ தந்திரமாகவே மாறியுள்ளது. இதன் காரணமாகவே, கலவர சமயங்களில் காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட முடியாமல் போகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தங்கள் ஜாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்த அரசியல் களம் கண்டு கூட்டணிக்காக தேர்தலில் ஒன்றாக பிரசாரம் செய்யும் தலைவர்கள், தங்கள் சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டால், அதைத் தீர்க்க முயற்சிக்காமல் ஒருவரை ஒருவர் ஏசுவதில் இறங்கி விடுகின்றனர். முன்பு கரம் கோர்த்து இயங்கிய ராமதாசும் திருமாவளவனும் இப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து அரசியலால் ஜாதி வேற்றுமை குறைய வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வெற்றிகளுக்காக, பிற சமூகங்கள் மீது அவநம்பிக்கையை விதைக்கின்றனர். ‘நாம் ஆண்ட ஜாதி; மீண்டும் ஆளுவோம்’ என்று வெறியூட்டுவது சுலபம். அதுதான் அரசியலுக்கு மிகவும் உபயோகமாகும். ‘நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்; நமக்குள் பேதம் வேண்டாம்’ என்று சொன்னால் இவர்களது வியாபாரம் எடுபடாது. பிளப்பது சுலபம்; இணைப்பது கடினம்.

images
முந்தைய நில உடைமை காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சவாரி செய்தது போல இப்போது செய்ய முடியாது. நமது அரசியல் சாசனம் அளிக்கும் அனைத்து உரிமைகள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். அதை ஆதிக்க ஜாதிகளால் எங்குமே சகிக்க முடிவதில்லை. முன்பு சுப்பனும் குப்பனும் செருப்பைக் கைகளில் இடுக்கிக்கொண்டு வாய் பொத்தி நின்றது போல, அவர்தம் பேரப்பிள்ளைகளும் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமல்ல; அது ஒருவகையில் தன்னம்பிக்கை இல்லாத இயலாமை.

முந்தைய காலகட்டத்தில் நில உடமையாளர்களாக இருந்த ஆதிக்க ஜாதியினரிடம் சேவகம் செய்ய வேண்டியிருந்ததால் அடங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விவசாயக் கூலிகளின் வாரிசுகள், இன்று கல்வி அறிவு பெற்று சமூக அந்தஸ்துக்காக போராடத் தலைப்பட்டிருக்கிறார்கள். இது இயல்பானது. இந்த யாதர்த்தத்தை ஆதிக்க ஜாதியினர் உணர மறுப்பது தான் மோதல்களுக்குக் காரணம்.

இதை, தங்கள் (இடைநிலை ஜாதி) சமூக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய ஜாதி சார்ந்த அரசியல் தலைவர்கள், அதற்கு மாறாக, தங்கள் பிழைப்புக்காக மக்களை உசுப்பேற்றுகிறார்கள். அதே போல, ஒரே நாளில் சமூக மாற்றம் வந்துவிடாது என்பதை தங்கள் சமூக மக்களுக்கு சொல்லி. அவர்களை மேலும் உயர்த்த வழி தேட வேண்டிய தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தெரிந்தே தங்கள் மக்களை உசுப்பேற்றுகிறார்கள். விளைவு இரு தரப்பிலும் மோதல்கள் பெருகுகின்றன.

சுதந்திரத்தின் பலன் அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்திருப்பது கண்டு உளம் மகிழ்ந்து தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டியவர்கள் ஆதிக்க ஜாதியினர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஜாதி வேற்றுமைகளுக்கு பிராமணர்களையும் இந்து மதத்தையும் காரணமாகக் காட்டி வெறுப்பு வளர்த்து, தங்கள் ஆதிக்கத்தைத் தொடரவே இடைநிலை ஜாதியினர் (பிராமணர் அல்லாத ஆதிக்க ஜாதியினர்) விரும்புகின்றனர். ஒரு விசித்திரமான ஒற்றுமை என்னவென்றால், தீண்டாமைக்கு சமூகக் காரணங்களை விட சமயக் காரணங்களே அடிப்படை என்று திட்டமிட்டு செய்யப்படும் பிரசாரத்தில் தலித் தலைவர்களும் ஈடுபடுவது தான். லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும் ஒரே கண்ணோட்டத்தில் சிந்திப்பது இங்கு மட்டுமே.

இதற்கு தூபமிடும் முயற்சிகளில் அந்நிய நிதி உதவியுடன் இயங்கும் சிறுபான்மை மத அமைப்புகள் ஈடுபடுகின்றன. அவர்களின் எளிய இலக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தான். அவர்களுக்கு ஆசை காட்டி, அவர்களிடையே இந்து விரோத பிரசாரம் செய்து அவர்களை பாரம்பரியத்தில் நம்பிக்கை இழக்கச் செய்து, லாபம் ஈட்டப் பார்க்கின்றனர் அந்நிய மத அமைப்புகள். அதையும் மீறித்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தொடர்கின்றனர் என்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம். அதேசமயம், அவர்களிடையிலான வெறுப்பூட்டும் பிரசாரத்தின் எதிரொலிகள் கேட்கத் துவங்கி இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் சில இடங்களில் வன்முறைக்கு காரணமாவதைக் காண முடிகிறது. தென் மாவட்டங்களில் தேவர் சிலைக்கு சாணிக் கரைசலை ஊற்றி கலவரம் தூண்டப்படுவதை இதற்கு சான்றாகக் கொள்ளலாம். மதுரையில் தேவர் குருபூஜைக்கு சென்றுவந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது விபரீதமான ஓர் உதாரணம்.

ஒத்துணர்வுடன் வாழ வேண்டிய சமூகத்தில் பெரும் பிளவுக்கு வழி வகுக்கும் வெறுப்புணர்வுப் பிரசாரத்துக்கு அந்நிய நிதி உதவி கிடைப்பது ஆபத்தானது. இதன் விளைவாக, தென் மாவட்டங்களில் தேவர் சிலைகளுக்கு கூண்டு அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜாதித் தலைவர்களின் பெயர்களை போக்குவரத்துக் கழகங்களுக்கு சூட்டிவிட்டு, பிறகு அவற்றை ரத்து செய்த கதை அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், அதிமுக ஜாதி அரசியலை நேரடியாக வளர்க்கவில்லை என்று சொல்லலாம்.

தமிழகத்தின் தற்போதைய சாபக்கேடு, தேர்தல் அரசியலில் களம் காணும் பல அரசியல் கட்சிகள் ஜாதியை அடித்தளமாகக் கொண்டு இயங்குவது தான். இந்தக் கட்சிகளை திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி அரவணைத்து, அவர்களுக்கு சமூகத்தில் இல்லாத மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதுவே ஜாதி அரசியலை தமிழகத்தில் ஊக்குவிக்கிறது. இது ஒருவகையில் புரையோடி இருக்கும் புண்ணைக் கிளறிவிடும் வேலை.

images (1)தீயணைப்புத் துறையில் முக்கியமான பாலபாடம் ஒன்றுண்டு. ‘எரியும் தீயை அணைக்க அதில் உள்ள எரியும் பொருளை அகற்ற வேண்டும்’ என்பது தான் அது. அடுப்பில் இருந்து விறகை வெளியே எடுத்துவிட்டால் தீ தானாக அணைந்துபோகும். அதுபோல, இப்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசியலில் இருந்து ஜாதிய நோக்குள்ளவர்களை விலக்குவதுதான் வழி. மக்களை ஒன்றுபடுத்த இதுவும் ஒரு தீர்வு.

 

இட ஒதுக்கீடு -பிரச்னையா? அரசியலா?

சமூக ஏற்றத் தாழ்வு மிகுந்த நமது நாட்டில் சமத்துவம் உருவாக வேண்டுமானால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்ற கோட்பாடு நமது அரசியல் சாசனத்திலேயே உருவாக்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர்கள் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற, சமூக நலனை மட்டுமே கருதிய தலைவர்கள் தான். எனினும், இட ஒதுக்கீட்டுக்காக அரசியல் நிர்ணய சபையில் வாதிட்ட அம்பேத்கர், ”இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இதுவும் 30 அல்லது 40 வருடங்களில் நீக்கப்பட்டுவிட வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்” என்று சொன்னார். அவர் கூறிய கால அவகாசம் தாண்டியும், பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு தொடர்கிறது. எனினும், இந்தக் கோட்பாடு ஏன் இன்னமும் நம் நாட்டில் முழுமையாக பயன் தரவில்லை?

இதற்கான காரணம் மிகத் தெளிவானது. ஒடுக்கப்பட்டவர்களிடத்தே கல்வியறிவைக் கொண்டு சேர்க்காமல் வெறும் இட ஒதுக்கீட்டு சலுகைகளைக் கொடுப்பதால் பயன் விளையாது. கல்விக் கூடங்களில் இடைநிற்றலைத் தவிர்க்கவும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் உயர்கல்வி பெறவும் வழிவகை செய்வதைத் தவிர்த்துவிட்டால், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பவும் ஆள் கிடைக்காது. அது தான் இன்றைய நிதர்சன நிலைமை.

இது ஒருபுறமிருக்க, சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு சலுகைகளை, உயர்ஜாதியினரால் தாங்களும் ஒடுக்கப்பட்டதாகக் கூறி இடைநிலை ஆதிக்க ஜாதியினரும் பெற்றனர். மண்டல் அறிக்கை இதன் ஒரு பிரதிபலிப்பே. சமூக நீதிக்காக என்ற கோஷத்துடன் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. ஏனெனில், எல்லா கட்சிகளிலும் இவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உண்மையிலேயே, சமூக நீதிக்காக இடைநிலை சாதியினரில் பின்தங்கிய மக்களுக்கு சலுகைகள் கொடுப்பது தவிறில்லை. அதுவே அரசியல் விளையாட்டாக மாறி, எஸ்.சி. / எஸ்.டி. தாண்டி, எம்.பி.சி./ பி.சி.க்கு சலுகை என்றெல்லாம் புதிய அவதாரம் எடுத்தபோது, இட ஒதுக்கீட்டின் ஆதாரக் கோட்பாடே அடிபட்டது.

அதாவது தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட காரணமானது, பல்லாயிரம் ஆண்டுகால ஆதிக்க உணர்வுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி நோக்கு. அந்த தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருவோரே இட ஒதுக்கீட்டுக்காக வரிசை கட்டி நின்றபோது, இட ஒதுக்கீட்டின் தாத்பரியமே கேள்விக்குள்ளானது. எனினும், இதை எந்த ஒரு அரசியல் தலைவரும் மெதுவாகக் கூட சொல்ல முனையவில்லை. அவ்வாறு கூறுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று அவர்களுக்குத் தெரியும்.

உண்மையில் தலித் மக்கள் மீது பிற சமூக மக்கள் நடத்திவந்த / நடத்தி வரும் அடக்குமுறைகளுக்கு பிராயச்சித்தமாக, அந்த மக்களுக்கு இன்னமும் பல நூற்றாண்டுகள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அம்பேத்கரே அதற்கு கால வரையறை செய்திருந்தாலும் கூட, தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தலித் மக்கள் இரட்டைக் குவளை முறையிலிருந்து விடுவிக்கப்படும் வரையில், அனைத்து ஆலயங்களிலும் சுதந்திரமாக வழிபடும் உரிமை கிடைக்கப்பெறும் வரையில், தீண்டாமை என்ற விஷம் இந்த மண்ணில் மட்கி மறையும் வரையில், தலித் மக்களுக்கு நாம் பிராயச்சித்தம் செய்தே தீர வேண்டும். ஆனால், தலித் மக்கள் மீது சவாரி செய்யும் பிற இடைநிலை ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா? இதுகுறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

இட ஒதுக்கீடு எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ, அதன் நோக்கமே தற்போது திசை திரும்பிவிட்டது. இப்போது இது ஒரு அரசியல் ஆயுதம். எந்த ஒரு மக்கள் நலத் திட்டம் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டதோ, அதனால் மக்களுக்கு நலன் விளைவது குறைவே. இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமநீதி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களும், அவர்களை ஒடுக்குபவர்களும் இட ஒதுக்கீடு பெற ஒரே வரிசையில் நிற்பது சமநீதி ஆகாது. இந்தச் சலுகைகள் கிடைக்கும் வரை, ஒடுக்கப்பட்டவர்களின் துயரம், இடைநிலை ஜாதியினருக்கு புரியவே புரியாது. அதுவரை சமூக மாற்றம் எதிர்பார்த்த வேகத்திலும் அமையாது.


செய்தி ஆதாரங்கள்:

தேவாரத்தில் தேவர் சிலை அவமதிப்பால் பதற்றம் (தினத்தந்தி- 05.11.2012)

ஊத்துமலையில் தேவர் சிலை அவமதிப்பு: மக்கள் மறியல் (மாலை மலர் செய்தி – 11.11.2012)

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் (ONE INDIA -14.09.2011)

வத்தலக்குண்டில் தேவர் சிலை அவமதிப்பு – நெல்லை சிலைகளுக்குப் பாதுகாப்பு (ONE INDIA -29.12.2009)

நாம் ஆண்ட பரம்பரை – (தினமலர் செய்தி- 30.04.2012)

Tamil Nadu legislative assembly election, 2001

Tamil Nadu legislative assembly election, 2011

சாதியும் ஜனநாயகமும் – ஜெயமோகன்

இட ஒதுக்கீட்டின் சிற்பிகள்- விளக்கம் – ஜெயமோகன்

Ambedkar had called for measured reservation quotas (DNA News)

There’s no end to reservation- (Business Line Artilce)

Reservations in India – Ambedkar.org
தொடரும்

19 Replies to “ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -2”

  1. அற்புதமான தொகுப்பு. யதார்த்தம் சற்று சுடும் என்பது உண்மை தான். சேக்கிழான் அவர்கள் இந்த கட்டுரையை வெளியிட்டதன் மூலம் தமிழ் இந்துவுடன் சேர்ந்து பெரிய பாராட்டத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். கீழ்க்கண்ட வாக்கியங்கள் என் மனதை தொட்டதுடன் ஏனிந்த உண்மையை திராவிடம் என்று சொல்லும் கட்சிகள் மூடி மறைக்கின்றன என்பதும் அப்பட்டமாக தெரிந்து விட்டது. இனியாவது திராவிட மோசடி கும்பல் திருந்துமா ?

    கலைஞரின் மோசடிகள் ஒன்று இரண்டல்ல. அண்ணா, காமராஜர், பெரியார் , எம்ஜீயார் ஆகிய தலைவர்களின் பெயர்களில் மாவட்டங்களோ, போக்குவரத்து கழகங்களோ இருந்தால் , தமிழகத்தில் சாதி கலவரம் வருமாம் ஆனால், இந்த தலைவர்களின் பெயரில் பல்கலை கழகங்கள் இருந்தால் , சாதி கலவரம் வராதாம் ! இதைவிட ஒரு மோசடியான சந்தர்ப்ப வாதம் தமிழகத்தில் உண்டா ? சாதிக்கலவரத்துக்கு திக, திமுக போன்ற தேசவிரோத இயக்கங்கள் தான் காரணம். சாதிப்பெயர்களோ, மாவட்டபெயர்களோ, போக்குவரத்து கழகபெயர்களோ சாதிக்கலவரங்களுக்கு காரணம் அல்ல.

    கட்டுரை முழுவதுமே மிக சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சொற்பிரயோகமும் மிக தெளிவு. இருப்பினும் ரத்தினம் போன்ற வாக்கியங்களை கீழே தேர்ந்தெடுத்து தருகிறேன்.

    ” அதாவது ‘ஜாதிகளை ஒழிப்போம்’ என்று சொல்லிக் கொண்டே, ஜாதிகள் வளர அற்புதமான நாற்றங்காலாக தமிழகம் மாற்றப்பட்டது. அதன் விளைவே வன்னியரை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாள கவுண்டர்களை ஆதாரமாகக் கொண்ட கொங்கு வேளாளர் பேரவை போன்ற அமைப்புகளின் உதயம். இதில் பாமக பெற்ற வெற்றி, பிற ஜாதியினரையும் இதே திசையில் யோசிக்கச் செய்தது. ”

    ” அதன் விளைவாக முதலியாருக்காக புதிய நீதிக் கட்சி, நாடார்களுக்காக சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தேவர்களுக்காக பார்வர்ட் பிளாக் கட்சி, மூவேந்தர் முன்னற்ற கழகம் போன்ற கட்சிகள் இயங்கத் தலைப்பட்டிருக்கின்றன. இதில் பார்வர்ட் பிளாக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க உருவாக்கப்பட்ட கட்சி. அது நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கும் ஜாதி கட்சியாக மாறி இருப்பது தற்போதைய வீழ்ச்சிக்கு அற்புதமான உதாரணம்.

    முத்தரையர்கள், நாயுடுகள், யாதவர்கள் போன்ற இடைநிலை ஜாதியினரும் தங்கள் அரசியல் வடிவை உருவாக்கி தேர்தல் அரசியலில் குதித்திருக்கின்றனர். 2001 சட்டசபை தேர்தலின் போது, ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவற்றுக்கு அங்கீகாரமும் அளித்தார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு போட்டியாக, தேவர் சமூகத்தை தனது ஆதார வாக்குவங்கியாக அதிமுக வளர்த்தெடுத்தது. ”

    ” அண்மையில் கலவரம் நடந்த தருமபுரி- நாயக்கன்கொட்டாய் பகுதியில், கலவரத்துக்கு காரணமான வெறுப்பூட்டும் பிரசாரத்துக்கு நக்சலைட்களும் காரணம் என்று கூறப்படுகிறது.”

    ” முன்பு கரம் கோர்த்து இயங்கிய ராமதாசும் திருமாவளவனும் இப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து அரசியலால் ஜாதி வேற்றுமை குறைய வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.”

    ” கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜாதித் தலைவர்களின் பெயர்களை போக்குவரத்துக் கழகங்களுக்கு சூட்டிவிட்டு, பிறகு அவற்றை ரத்து செய்த கதை அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், அதிமுக ஜாதி அரசியலை நேரடியாக வளர்க்கவில்லை என்று சொல்லலாம். “-

    ” ஒடுக்கப்பட்டவர்களும், அவர்களை ஒடுக்குபவர்களும் இட ஒதுக்கீடு பெற ஒரே வரிசையில் நிற்பது சமநீதி ஆகாது. இந்தச் சலுகைகள் கிடைக்கும் வரை, ஒடுக்கப்பட்டவர்களின் துயரம், இடைநிலை ஜாதியினருக்கு புரியவே புரியாது. அதுவரை சமூக மாற்றம் எதிர்பார்த்த வேகத்திலும் அமையாது. ”

    அய்யா செக்கிழானின் தொண்டு இறை அருளால் மேலும் சிறக்கட்டும்.

  2. ” செக்கிழானின் “என்று தவறுதலாக தட்டச்சு ஆகிவிட்டது. பிழையை திருத்தி ” சேக்கிழானின்” என்று படிக்க வேண்டுகிறேன்.

  3. நண்பர் சேக்கிழார் ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன என்று எழுதிய இருபகுதிக்கட்டுரையை வாசித்தேன். ஜாதிமோதலுக்கு அடிப்படையான காரணிகள் எவை என்று சமூகப் பொருளாதர அரசியல் தளங்களில் ஆய்வை நிகழ்த்தியுள்ள திரு சேக்கிழான் அவர்கள் உண்மையிலேப்பாராட்டுக்குரிவர்.
    எனினும் சாதி மோதலை வேறுவிதமாக அடியேன் பார்கிறேன். சாதிக்கலவரங்கள் எங்கெங்கு யார் யாருக்கு இடையில் நிகழ்கிறது என்று உற்று நோக்கினால் சில உண்மைகள் தெற்றெனவிளங்கும்.
    1. சாதி மோதல்கள் சமூகத்தின் கட்டமைப்பில் கீழ் நில்லையில் அருகருகே இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நிகழ்கின்றன. இந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும்பாலும் முற்காலத்தில் குற்றபரம்பரையினராக அன்னிய ஆட்சியில் அடக்கிய ஒடுக்கப்பட்டமக்கள்.
    2. விடுதலைக்குமுன்பு இந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும், முந்தய மக்களின் சமூக அந்தஸ்து மேலாக இருந்தாலும், பெரும்பாலும் ஒரே நிலையில் இருந்தது. ஆனால் இடஒதுக்கீடு, அரசின் சலுகை ஆகியவற்றின் பயனாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை சற்றே மேம்பட்டுள்ளது. இதரபிற்படுத்தப்பட்ட மக்களோடு போட்டிபோட முடியாத நிலையில் இருக்கின்ற மிகவும் பிற்பட்டோர் இன்னும் பின் தங்கி இருக்கின்றனர்.
    3. இந்த சமூகப்பொருளாதர சூழலில் தாழ்த்தப்பட்டோர் அரசியல் இயக்கங்கள் கலப்பு மணத்தினை தமதுமக்களிடையே இளைஞர்களிடையே ஒரு பெரும் ஆயுதமாக பிரச்சாரம் செய்துவந்தனர். அதே சமயம் தாம் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப்பின் தங்கி விட்டோம் என்ற வருத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்டமக்களிடையே நிலவுகிறது. கலப்புத்திருமணங்கள் தமது சமூக அந்தஸ்தைப்பாதித்துவிடும் என்ற அச்சமும், தாம் முன்னேற முடியவில்லை என்ற ஆதங்கமும் தான் இந்த மோதலுக்கு அடிப்படைக்காரணங்கள்.
    இதனை மாற்றுவதற்கு மிகவும் பிற்படுத்தமக்களாக இன்னும் இருக்கின்ற சீர்மரபினர் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழிவகை செய்யவேண்டும். அவர்களில் தம் சமூக அமைப்பின் பண்பாட்டில் பலர் இன்னும் பழங்குடிக்கூறுகளைக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்தகையவர்களை அடையாளம் கண்டு பழங்குடியினராக எஸ்டி பிரிவாகக் கருதி அவர்தம் வளர்ச்சிக்கு வழிசெய்யவேண்டும்.
    தாழ்த்தப்பட்ட மக்களும் இன்னும் இடஒதுக்கீட்டின் பலனை முழுமையாக அடையவில்லை. அரசுபள்ளிகளின் தரம் உயர்த்தப்படுதல்மூலம். இடஒதுக்கீடு முழுமையாக நியாயமாக அமுல் படுத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விலும் மேன்மை வரும்.ஆக முழுமையான அனைவருக்குமான சமூகப்பொருளாதார வளர்ச்சியே இது போன்ற மோதல்களை முற்றிலும் இல்லாமல் செய்யும்.
    சிவஸ்ரீ.

  4. கடந்த அதிமுக ஆட்சியில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்த போது நடந்த ஒரு சம்பவம்……” திருமாவளவனைபபோல் நடித்து பாதிரியாரிடம் ஏமாற்றி பணம்பறித்தவர் கைது ” என்று செய்தித்தாள்களில் ஒரு செய்தி வந்தது…….அதாவது பாதிரியார்கள் திருமாவளவனுக்கு பணம் கொடுத்துவருவது இந்த செய்திமூலம் உறுதியானது…..

    திருமாவளவனுக்கு பாதிரியார்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்….? தலித்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டதற்கான கூலியா ?

    தருமபுரி சம்பவத்தின் மூலம் திருமாவளவன் கும்பல் செய்து வந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் ” ஞானஸ்நானம் ” நடந்துவிட்டது……. தனியார் இடங்களில் குடிசை போட்டுக்கொண்டு காலிசெய்ய பணம் கேட்டு மிரட்டுவது……ரியல் எஸ்டேட் அராஜகம் , கட்டப்பஞ்சாயத்து என திருமா கும்பல் செய்த எல்லா அக்கிரமங்களும் தரை விரிப்புக்குக்கீழ் மறைக்கப்பட்டுவிட்டது…..

  5. அவர் கூறிய கால அவகாசம் தாண்டியும், பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு தொடர்கிறது. எனினும், இந்தக் கோட்பாடு ஏன் இன்னமும் நம் நாட்டில் முழுமையாக பயன் தரவில்லை?
    திரு சேக்கிழான் இடஒதுக்கீட்டினை எதிர்க்கிறவர்கள் அடிக்கடி எழுப்பும் கேள்வியை எழுப்பி தாம் இதரபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டினை எதிர்பவர் என்பதை சொல்லியிருக்கிறார்.
    இடஒதுக்கீடு எப்படி மைய அரசால் அமல் படுத்தப்படுகிறது. இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், மற்றும் இதரப்பிற்படுத்த மக்கள் மைய அரசுப்பணிகளில் எத்துணை சதவீதம் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து திரு சேக்கிழார் போன்றவர்கள் பேசவேண்டும்.
    இன்னும் இந்தியத்திரு நாட்டின் அறுபது ஆண்டு சுதந்திர ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீடு முழுமையாக அமல் படுத்தப்படவில்லை. முன்னேரியவர்களால் அது வெற்றிகரமாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மெய்யாக ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நடுவண் அரசுப்பணிகள் முன்னேறிய சாதியினருக்கே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்போட்டியிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களும், ஆதிவாசி மக்களும் விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதரப்பிற்படுத்தப்பட்ட மக்கள் 27% மேலோ, தாழ்த்தப்பட்ட மக்கள் 15% மேலோ அல்லது பழங்குடியினர் 7.5% மேலோ மைய அரசுப்பணிகளில் இடம் பெறவில்லை என்பது சாணக்கியர்களின் சாதனை. இன்னும் சொல்லப்போனால். இந்த மக்களுக்கு உயர்பதவிகள் ஒதுக்கப்படாமல் சாமானிய இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    இடஒதுக்கீடு முழுமையாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை சத்தியம்.
    இதரப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களின் இடஒதுக்கீட்டைப்பெற குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்து அதனை தடுக்கவும் செய்துள்ளார்கள். நிலமை இப்படி இருக்க இதரபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றால் போல் எழுதுகிறீர்கள். அவர்கள் எல்லோரும் ஆதிக்க சாதியினர் இல்லை. முதன் முதலில் கல்லூரியை மிதிக்கும் இளைஞர்கள் மிகஅதிகம் பெரும்பான்மை. ஆகவே திரு சேக்கிழான் அவர்களின் இந்த வாதம் முன்னேறிய பிரிவினரின் நலனையே பிரதிபலிப்பது கண்கூடு.
    நம் நாடு பாரதம் அது எல்லோருக்கும் இடமுண்டு நலமான வாழ்வும் வளமும் உண்டு.
    சிவஸ்ரீ.

  6. ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லும் அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் போது ‘உன்னோடைய ஜாதி என்ன’ என்று application form இல் குறிபிடுமாறு கேட்கிறது பிறகு எப்படி ஜாதி அழியும்………முதலில் சொல்ல வேண்டிய இடமே பள்ளி தான். ஆனால் அவர்களே ஜாதி பற்றி application formல் கேட்கிறார்கள். முதலில் இதை ஒழிக்க வேண்டும்

  7. தமிழகத்தில் ஜாதிப் பிரச்சினை சுதந்திரமடைந்த பிறகுதான் அதிகமாகப் பரவியது. சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ்காரர்கள் சுதந்திரத்தைக் குறித்து மட்டும் தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள், திராவிட இயக்கத்தரும், அவர்களது முன்னோடிகளும் சுதந்திரம் பற்றிக் கவலைப்படவில்லை, பிராமண எதிர்ப்பு, சுயமரியாதை எனும் பெயரில் ஜாதிப்பிரிவினை பற்றிய வெறுப்புணர்வு இவற்றில்தான் கவனம் செலுத்தினர். சுதந்திரத்துக்குப் பிறகு பதவிகளைப் படிக்கும் ஓட்டப் பந்தயத்தில் காங்கிரசார் பின் தங்கிய நேரத்தில் இவர்கள் ஓடி அத்தனை பதவிகளையும் பிடித்துக் கொண்டனர். அதற்கு அவர்களுக்குத் தேவையாக இருந்தது பிராமண எதிர்ப்பு. வர்ணங்கள் நான்கு என்கின்றனர். ஆனால் அவர்கள் கண்ணோட்டத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற இரு பிரிவோடு அடங்கிவிட்டது. மற்ற முன்று பிரிவும் இங்கு ஒன்றாகிவிட்டது. பின்னர் இவர்கள் கை ஓங்கிவிட்ட நிலையில் இந்தப் பிரிவினருக்குள் நீ இந்த ஜாதி, நான் இந்த ஜாதி என்பதோடு, பதவிகளில் கூட இன்னன்ன ஜாதிக்கு இத்தனைப் பதவி என்று பங்கீடு நடந்தது. அரசியலுக்காகவும், ஆதாயத்துக்காகவும்தான் ஜாதிப் பிரிவினை இவர்களுக்குப் பயன்பட்டதே தவிர எந்தவொரு பிரிவினரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக அல்ல என்பதை இப்போதைய படித்த இளைஞர்கள் நன்கு உணரத் தலைப்பட்டு விட்டனர். இவர்கள் இந்த அழிவுப் பிரச்சாரத்தை விட்டுவிட்டாலே ஜாதிப்பிரிவினைகளின் கேடு தானாகவே ஒழிந்து போகும். ஆனால் இவர்கள் விடமாட்டார்கள். மக்கள் ஜாதிப் பிரிவினையில் மூழ்கிக் கிடக்கும் வரையில்தான் இவர்கள் வியாபாரம் நன்கு நடைபெறும்.

  8. அன்புள்ள திரு சேக்கிழான்,

    செய்தி ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களில் Tamil Nadu legislative assembly election, 2001, Tamil Nadu legislative assembly election, 2011 ஆகிய இரண்டு இணைப்புக்களுமே 2001- தேர்தல் நிலவரங்களுக்கே அழைத்து செல்கின்றன. சரிசெய்ய வேண்டுகிறேன்.

  9. இன்று தமிழகத்தில் வேறு ஒரு வினோதம் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது தங்கள் ஜாதிதான் சேர சோழ பாண்டிய பரம்பரை வழித்தோன்றல்கள் என்ற சண்டை. நாங்கள் சமூகத்தில் முன்னேறிய குழுக்கள் எங்களை வஞ்சகமாக கீழ் நிலைக்கு தள்ளிவிட்டார்கள் என்று ஒருவரை ஒருவர் குற்றசாட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதேசமயத்தில் யாரும் நாங்கள் முன்னேறிய குடிகள் இன்று எங்களுக்கு அளிக்கும் இட ஒதுக்கீடு போன்றவைகள் வேண்டாம் என்று சொல்ல முன்வருவதில்லை.

    வெள்ளையரின் பிரித்தாளும் கொள்கைகளை இன்று வரை பின்பற்றிவருபவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சிறுபான்மையினர் மற்றும் திராவிடகழகம் போன்ற பல மாநில ஜாதி கட்சிகள்தான் நாட்டின் ஒற்றுமையை தொடர்ந்து அழித்து வருகின்றார்கள். தமிழகத்தில் சமீபத்திய பெரும்பான்மையான ஜாதி கலவரங்களுக்கு மதம் மாறிய கிருஸ்துவர்கள்தான் காரணம். கிருஸ்துவம் தொடர்ந்து அராஜகத்தை தூண்டுவிடுகிறது. மதமாற்றத்தை கட்டுபடுத்தும் சட்டம் இன்று அவசியம் எல்லா மாநிலங்களிலும் தேவை

    சிறுபான்மையினரிடமிருந்து 10 அடி தள்ளியிருந்தால்தான் தமிழகத்தில் ஜாதி சண்டைகள் குறையும். இப்படி கேக் சாப்பிடுவதற்கும் கஞ்சி குடிபதற்கும் வாயைபிளந்து கொண்டு அவர்கள் பின்னால் சென்றால் நாம்தான் மோசம் போவோம் இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு

  10. சிவஸ்ரீ ஐயா
    இட ஒதுக்கீடு,பிற்படுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்
    ஹிந்து ஒற்றுமை விரும்பும் ஹிந்டுத்வர்கள் என்று கூறி கொள்ளும் பெரும்பான்மையானோர் செய்வது அதற்க்கு நேர் எதிரான ஒரு குழுவை இன்னொரு குழுவிற்கு எதிராக தூண்டும் பிரச்சாரம் தான்
    பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீடு ஒரு பெரிய தவறு,குற்றம் என்று பேசுவது ஹிந்து பார்வையில் அல்ல ,அவர்களின் சாதி சார்ந்த பார்வையில் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேதனை தான்
    தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கங்களும்,பிறபடுத்தப்பட்ட மக்களின் இயக்கங்களும் (எல்லா திராவிட இயக்கங்களும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இயக்கங்கள் தான் )இதை புரிந்து கொண்டு இருவருக்குள் ஒற்றுமையை (அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும் அளவிற்காவது) முயற்சிக்கின்றன

    பிராமண எதிர்ப்பு எனபது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த மாதிரி,ஆனால் பிற்படுத்தப்பட்டவர்,தாழ்த்தப்பட்டவர் நிலை எனபது இந்தியா சீனா போல .இதில் வாய்ச்சவடால் உதவாது. எண்ணிக்கை பெரும்பான்மை இருக்கும் குழுக்களை எதிரும் புதிருமாக நிறுத்துவதால் இந்து ஒற்றுமைக்கு என்ன லாபம் என்று புரியவில்லை

    முக்கால் வாசி சாதிகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் தமிழகத்தில் தான் அனைத்து சாதி மக்களில் இருந்தும் மக்கள் கல்வி,வேலைவாய்ப்பில் பெருமளவில் வருகின்றனர்.SC /ST இட ஒதுக்கீடு மட்டும் இருந்த மட்டும் இருந்த மத்திய அரசு பணிகள்,IIT (2000 பேராசிரியர்களில் நான்கு,ஐந்து பேர் கூட ஒதுக்கீட்டு வகுப்பை சார்ந்தவர் கிடையாது.ஆனால் மாநில அளவில் பேராசிரியர்கள் ,நீதிபதிகள் ,காவல் துறை தலைமை பொறுப்பு,தலைமை செயலாளர் என தமிழகத்தில் வந்தவர்கள் மற்ற எல்லா மாநிலங்களையும் விட அதிகம் )போன்றவற்றில் உயர்பதவியில் விடுதலை அடைந்து 55 ஆண்டுகளில் 5 சதவீதம் கூற வரமுடியாத நிலை என்ன என்பதை பார்த்தால் யார் இட ஒதுக்கீட்டுக்கு எதிரி எனபது புரியும்

  11. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சாதி வேற்றுமைகள் குறைவு,பாசம் அதிகம்,விடுதலைக்கு முன் தாயா புள்ளையா எனபது போல பேசுவதை விட சிறந்த நகைச்சுவை கிடையாது
    ஆந்திரத்தில் முழுக்க ரெட்டி,கம்மா ராஜ்ஜியம் தான் .கர்நாடகத்தில் லிங்காயத்,வோக்கலிகா ராஜ்ஜியம் தான்.
    கேரளத்தில் இப்போது தான் ஈழவர்கள் முழுக்க முழுக்க ஒரு கட்சியின் பின்னால் திரண்டு ஒரு சக்தியாக உருவாகிரார்கள் இவர்கள் அனைவரும் பிராமணர்களை குறிப்பிட்ட அளவில் சேர்த்து கொள்வதால்(ஆனால் தலைமை பதவி,முக்கிய பதவிகள் இந்த இரு சாதிகளுக்குள் தான் ) அவை சாதி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தெரிகிறது போலும் ,ஆனால் இங்கு பிராமண பெண் ஒருவரே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவி வகித்து இரும்பு மனுஷியாக உலா வந்தாலும் இங்கு அதிக அளவில் சாதி துவேஷம் இருப்பது போல பிரச்சாரம் செய்யபடுவது ஏனோ
    மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட இரண்டு மூன்று,சாதிகளை தவிர மற்ற எல்லா சாதிகளும் அரசியல்,கல்வி,தொழில் முனைவோர் என எதை எடுத்தாலும் அனைத்து விதத்திலும் பல படி கீழே தான் .
    வட மாநிலங்களின் நிலை படு மோசம்.
    இந்த நிலையில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட மிக மோசம் என்று எந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதுகிறீர்கள்
    சாதி பார்க்காமல் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்தை சார்ந்தவர்கள் ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கும் மாநிலம் இது தான்
    பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை சார்ந்தவர்கள்,ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு சண்டாளர் ஆனவருக்கும் அன்றைய தீண்ட தகாத சாதியான ஈழவருக்கும் பிறந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட எம் ஜி ஆர் என சாதி பார்க்காமல் தலைவர்கள் பின் திரண்டவர்கள் தமிழர்கள் தான்
    அற்புத ஆட்சி புரிகிறார் அதனால் வெல்கிறார் என்று கூறப்படும் மோடி கூட ஐம்பது சதவீத ஆதரவை பெற முக்கி முனகுகிறார். ஆனால் இங்கு சாதி ஆதரவு இல்லாமல்,சாதி பார்க்காமல் வோட்டு போடுவதால் தான் கிடைத்தால் பூஜியம் அல்லது 234/200 இடங்களுக்கு மேல் என்று பல தேர்தல்களாக முடிவுகள் வருகினறன

  12. அன்பர் அத்விகா அவர்களுக்கு,
    தாங்கள் குறிப்பிட்ட லிங்க் பிழை சரி செய்யப்பட்டுவிட்டது.
    நன்றி.

  13. சாதி என்ற பெயரால் அரசியல் நடத்தும் தலைவர்களை முதலில் மக்கள் தூக்கி ஏறிய வேண்டும் . பள்ளிகளில் சாதியை ஒழிக்க வேண்டும் அதை செய்தாலே சாதியம் ஒழியும்

  14. நாம், நம் மனத்தில் இருந்து சாதியினை ஒழித்தோமா ? நம்மை நாமே அறிவோம். பின், உலகத்துடன் உரையாடுவோம்.

  15. இது எல்லாவற்றுக்கும் காரணம் கிறிஸ்தவ ,முஸ்லீம்களிடம் பொட்டி வாங்கிக் கொண்டு , அவர்களின் வோட்டு வங்கிக்காக ஜொள்ளு விடும் நம்ம காங்கிரஸ் ,திமுக, அதிமுக இத்யாதி கும்பல்களே காரணம்.

    இவர்களை ஒழித்தால் இந்தப் பிரச்னை தானாக ஒழியும்
    குழந்தை மருந்து சாப்பிட அடம் பிடித்தால் தாய் மூக்கைப் பிடிப்பாள் . அது வாயைத் திறக்கும். அப்போது மருந்தை வாய்க்குள் போட்டி விடுவாள் அது போல் நாம் இவர்கள் ‘மூக்கைப்’ பிடிக்க வேண்டும்

  16. பூவண்ணன் அவர்களே…..

    திராவிட இயக்கங்களை தூக்கிப்பிடிக்க நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் [ ஆந்திராவில் நாயுடு – ரெட்டி , கர்னாடகாவில் கவுடா -ஒக்கலிகா ] பிட்டையே போட்டு இன்னும் எத்தனை நாளைக்கு ஊரை ஏமாற்றுவதாக உத்தேசம்? தமிழகத்தில் திராவிடகட்சிகளின் வருகைக்கு முன் ஏதோ தினந்தோறும் சாதிக்கலவரம் நடந்து கொண்டிருந்தது போலவும் , திராவிட கட்சிகளின் வருகைக்குப்பின்தான் நிலைமை சீரடைந்தது போலவும் பில்ட் அப் கொடுக்கிறீர்கள்……

    மற்ற மாநிலங்களோடு தமிழகம் சாதி விஷயத்தில் பலமாக வேறுபடுகிறது……

    1. முதலாவது தமிழகத்தில் எண்ணிக்கையில் அதிகமாக மக்களைக்கொண்ட சாதிகளின் எண்ணிக்கை நான்கை தாண்டுகிற‌து…..[ தேவர், நாடார், வன்னியர் , மற்றும் கவுண்டர் ] எனவே இந்த சாதிவிட்டால் அந்த சாதி என்ற பைனரி அரசியல் இங்கு எடுபடாது……

    2. ஒவ்வொரு சாதியும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பலமாக விளங்குகின்றன……[ தென் தமிழகத்தில் நாடார்கள் , மதுரை மற்றும் தேனிப்பகுதிகளில் தேவர்கள், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்கள் , வடமாவட்டங்களில் வன்னியர்கள் ]

    3. ஒரு சாதியை சேர்ந்தவர்கள் ஏற்க மாட்டார்கள்…..[ காமராஜர் ஒரு விதிவிலக்கு ]

    4. வெள்ளையனுக்கு வால்பிடிப்பதில் பிராமண‌ருக்கும் – இதர முற்பட்ட சாதிகளுக்கும் [ குறிப்பாக முதலியார்களும் , தெலுங்கர்களும் ] ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்த , பிராமனரல்லாத உயர்சாதியினரால் துவக்கப்பட்டதே திராவிட இயக்கம்……. இவர்கள் என்னவோ சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் சித்க்தரிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்……..

  17. சான்றோன் சார்
    கருணாநிதி,எம் ஜி ஆர்,ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அவர்களின் சாதியை பார்த்தா ஆதரிக்கிறார்கள்.ஆனால் எடியுரப்பா,தேவ கௌடா,அச்சுதானந்தன்,ஒய் எஸ் ஆர் ,சந்திரபாபு நாய்டு போன்றோரின் மிக தீவிரமான ஆதரவாளர்கள் அவர் சாதிக்காரர்கள் தான்
    நாயுடுக்கள் ,ரெட்டிகள்,வோக்களிகர்கள்,லின்காயத்கள் இங்கு இருக்கும் பெரும்பான்மை சாதிகளின் எண்ணிக்கையை விட குறைந்த சதவீதம் தான்
    அவர்களின் மாநிலங்களில் ,கபுக்கள்,பிற பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சாதிகள் அதிக எண்ணிகையில் தான் உள்ளன
    லிங்காயத் என்ற சாதியே சாதியை எதிர்த்து உருவான ஒரு கூட்டம் தான்.அதுவே ஒரு சாதியாக மாறியது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.அதே நிலை திராவிட இயக்கத்திற்கும் ஏற்பட வேண்டும் என்று விரும்புவது சரியா

  18. படிப்பு பிழைப்பு இந்த இரண்டுக்காகவும் ஜாதியை பிடித்துக்கொண்டிருக்கும் மக்கள். அரசியலுக்காக ஜாதியை பிடித்துக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகள். இந்த இரண்டு நிலையும் மாறினால் தான் நல்லது. எதன் மூலம் சலுகை கிடைக்கிறதோ அது வளரும். ஜாதியின் மூலம் கிடைபதால் அது வளர்கிறது. திறமைக்கே சலுகை என்றால் திறமை மட்டுமே வளரும். மெல்ல மெல்ல ஜாதி மறையும்.

  19. பூவண்ணனார் அவர்கள் தான் குழம்புவதுடன் , பிறரையும் குழப்புகிறார். எல்லா ரெட்டியும் காங்கிரசுக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டுப்போடுவதில்லை. எல்லா காபுவும் அந்த ஆந்திர சினிமா நடிகரின் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டுப்போடவில்லை. எல்லா சாதியினரும் , ஆந்திராவில் எல்லா கட்சிகளுக்கும் கலந்துதான் ஓட்டுப்போடுகிறார்கள். பூவண்ணனார் பொய் வண்ணனார் ஆகிவிட்டார். ஏனிப்படி ? சாதி வியாபாரம் விரைவில் மூடுவிழா காண இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *