பாரதி என்னதான் சொன்னான்?
முனைவர் இறையரசன் அவர்கள், ‘பொருத்தமாக இல்லை’ என்று அபிப்பிராயப்படும் பாரதியுடைய தலையங்கப் பகுதியை எடுத்துக் கொள்வோம். அது பாரதியுடைய கருத்து இல்லை. இப்போது, ஜஸ்டிஸ் மன்றோ தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கீழே தருகிறேன்:
“எதிரி தனக்குப் பத்திரிகை வைத்து நடத்தச் சாமர்த்தியமும் பணமும் இல்லை என்று வழக்காடுகிறான். எதிரி மெட்ரிகுலேஷன் பரீட்சை பாஸ் பண்ணி இருக்கிறான். மேற்படி மெட்ரிகுலேஷன் பரீட்சை பாஸ் பண்ணி நான்கு வருஷமான பிறகு குற்றம் சாட்டப்பட்ட வியாசங்களை எழுதச் சாதாரணமாக யாருக்கும் கூடுமேன்று எதிரிக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த உபாத்தியாயர் சொல்கிறார். எதிரிக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாதென்று
ஒரே சாட்சிதான் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. இது யோஜித்துப் பார்த்தால்அவ்வளவு நம்பத்தக்கதல்ல.
[1]
“
இந்தப் பகுதியைத்தான் பாரதியுடைய இந்தியா கேஸ் என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கம் மேற்கோளாகக் காட்டுகிறது. ‘பொருத்தமாக இல்லை’ என்று முனைவர் இறையரசன் அபிப்பிராயப்படும் அந்தப் பகுதியின் முழுப் பத்தியையும், தீர்ப்பையும் (குறைந்தது, தீர்ப்பின் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள இந்தப் பத்தியையும்) ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள். தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள இந்தப் பத்தியின் சாராம்சமும் அதில் இருப்பது தெரியவரும். அது மட்டுமேயல்லாது, அந்தப் பத்தியில்
பாரதி குறித்திருப்பது வக்கீல் கௌடல் செய்த பிரதிவாதத்தின் சாரம்தான் அந்தப்பத்தியின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதும் தெரியவரும். ‘*அவர் செய்தது குற்றம் என்றே தீர்ப்பாகிவிடும் பக்ஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு
மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும்* சொல்லி *எதிர்வாதம் செய்தார்**’* என்ற பகுதியையும், அதைத் தொடரும் ‘எல்லோரும் எதிர்பார்க்கக்கூடியபடியே ஜட்ஜியும் ஜூரர்களும் அவ்விதமான எதிர்வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை’ என்ற (அந்தத்
தலையங்கத்தின்) அடுத்த வாக்கியத்தையும் சேர்த்தே படிக்கவேண்டும். ஏதோஅங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்கியங்களைத் துண்டாடித் தேர்ந்து கோத்துக்காட்டுவது, உண்மையைக் காட்டாது என்பது மட்டுமன்று; உண்மைக்குப் புறம்பானதும் ஆகும் என்பதைத் தெளிந்துகொள்ள வேண்டும்.
முனைவர் இறையரசன் சொல்வதுபோல் ‘பொருத்தமாக இல்லை’ என்ற கருத்து செல்லுபடியாக வேண்டுமானால், ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியரும் (எதிலிருந்தேனும்) குறிப்பிட்ட சில
பகுதிகளை மேற்கோள் காட்டுவதையே விட்டுவிட வேண்டிவரும். வக்கீலின் வாதத்தையும், தீர்ப்பின் சாரத்தையும் இணைத்துச் சுருக்கமாக விவரித்திருக்கும் பத்தி, சீனிவாசன்மேல் பாரதி வைத்த தீர்ப்பாகாது. இதழாளர் பாரதி புத்தகம் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதி அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது
துரதிர்ஷ்டவசமானது. சொல்லப் போனால் பாரதியுடைய கருத்து அது இல்லை. தலையங்கத்தின் அடுத்த பத்தியில் பாரதி சொல்கிறான்:
‘இதனால் அவருக்குக் கிடைத்த சிக்ஷை சரியென்றும் அவர் குற்றவாளி யென்றும் நாம் ஒப்புக்கொள்ளவில்லை.’ இதன் பிறகு, அரசாங்கத்தார் பேரிலும், ஆட்சி முறையைப்பற்றியும் தலையங்கம் பேசிக்கொண்டு போகிறது. சீனிவாசன்மேல் எந்தக் குற்றச்சாட்டையும் காண முடியவில்லை.
குற்றச்சாட்டாக எதையேனும் காட்டவேண்டுமானால், தலையங்கத்தின் பிற்பகுதியில் காணப்படும் இந்தப் பகுதியைச் சொல்ல்லாம். இதைத்தான் இந்தத் தலைப்பில் ஆய்ந்த
பெரும்பாலான ஆய்வாளர்களும் மேற்கோள் காட்டி வருகிறார்கள்:
‘நம்முடைய தேசபக்தியை அவர்கள் ராஜத்துரோகம் (இ.பி.கோ. 124A செக்ஷன்) என்று சொல்லுகிறார்கள். நம்முடைய சுதேசாபிமானத்தை அவர்கள் ‘அன்னியரைப் பகைத்தல்’(153
செக்ஷன்) என்கிறார்கள். நாம் அதற்குச் சொல்வதென்ன? நாம் எது செய்யினும் தேசத்துரோகம் செய்யோம். தேசத் துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்.
‘ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திராசிரியரும் சொல்லவேண்டியதும் அதுவே. அப்படியே பிரம்மஸ்ரீ திலகர் சொன்னார். அப்படியே பூபேந்திரநாதர் சொன்னார். அப்படியே பிரம்மபாந்தவ உபாத்தியாயர் சொன்னார். மற்றவிதமான
வாக்குமூலம் இந்தியன் என்ற அந்தஸ்துக்குத் தகாது.
இந்த இடம், சீனிவாசன் மேல் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வைக்கப்படும் விமரிசனம்தான். ஒன்றை நினைத்துப் பாருங்கள். சீனிவாசனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதே என்று பாரதி சொல்லவில்லை. மாறாக, சட்டத்தை இவ்வாறெல்லாம்
பயன்படுத்தும் அரசாங்கத்தைக் கண்டிக்கவே செய்திருக்கிறான். நாம் எதை தேசபக்தி என்கிறோமோ, அதை அவர்கள் ராஜதுரோகம் என்கிறார்கள் என்ற தெளிவான விளக்கத்தை ஏனோ எல்லோரும் தவறவிட்டு விடுகிறார்கள்.
இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும். எம் பி திருமலாசாரியார், எஸ் என் திருமலாசாரியார் ஆகியோரோடு சேர்ந்துகொண்டு, *முரப்பாக்கம் சீனிவாச*னும் இந்தியா
பத்திரிகையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியா பத்திரிகையை நிறுவுவதற்காக சீனிவாசன் பணம் போட்டிருந்ததும்; அதில் பங்குதாரராக (partner) இருந்ததும் அவருடைய வாக்குமூலத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.
இப்படி, பத்திரிகையை நிறுவியதிலும், அதற்கான பணம் போட்டதிலும் அதன் முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுத்ததிலும் பங்கேற்ற சீனிவாசன், தன்னுடைய வாக்குமூலத்தில்,
மற்ற இருவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, தான் வெறும் குமாஸ்தாதான் என்று வழக்காடியது பொருத்தமற்றதல்லவா? பங்குதாரர் என்ற முறையில், சீனிவாசனுடைய ஒப்புதலும் இல்லாமலா, மற்ற இரு திருமலாசாரிகளும் மட்டுமே நிர்வாக முடிவுகளை
எடுத்திருக்க முடியும்?
பங்குதாரர்களில் ஒருவரான சீனிவாசன், பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். பத்திரிகைக்கு இன்னார் உரிமையாளர், இன்னார் ஆசிரியர் என்று காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்தவரும்
அவர்தான். தீர்ப்பில் ஜஸ்டிஸ் மன்றோ இதைக் குறிப்பிடுகிறார்: ‘போலீஸ் கமிஷனர் ஆபீஸ் குமாஸ்தாவாகிய நீலமேகாச்சாரி யென்பவர் எதிரி* 1907ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 18ம் தேதியன்று ‘இந்தியா’ பத்திரிகைக்குத் தான் அச்சிடுவோனென்றும், வெளிப்படுத்துவோனென்றும், பிரஸ் ஆக்ட் (பத்திரிகை சட்டத்தின்) படி ‘டிக்ளரேஷன்’ பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டதற்குச் சாட்சியம் சொன்னார்‘. ஆகவே, நிர்வாகத்துறையைத் தன் நேரடிப் பொறுப்பில் வைத்துக் கொண்டிருந்த்தும், கவனித்துக் கொண்டிருந்த்தும் முரப்பாக்கம் சீனிவாசன்தான் என்பது தெளிவாகிறது. இப்படி இருக்கும்போது, எடுக்கப்பட்ட முடிவுகளிலும், பதிப்பிக்கப்பட்ட கட்டுரை, கவிதைகளிலும் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், பாரதியும் மற்ற இரு திருமலாசாரியார்களுமே அவற்றுக்குப் பொறுப்பு என்றும், தன்னுடைய பொறுப்பைக்கைகழுவி விட்டபடி நழுவ முயன்றது நாகரிகத்தின்பாற்பட்ட செயலன்று. (* எதிரி:இந்த இடத்தில் முரப்பாக்கம் சீனிவாசனைக் குறிக்கும் சொல்.)
இவ்வளவு கடுமையான நெருக்கடியில்கூட, இப்படிப்பட்ட உண்மைகளை இந்தியா பத்திரிகையில் பிரசுரித்தோ, ‘இவரும் இந்தச் செயல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்தான்’ என்ற வகையிலோ எழுதாமல், பிரசுரிக்காமல் இருந்ததே மற்ற
இரண்டு பங்குதாரர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பாரதியின் இந்தக் குறிப்பிட்ட தலையங்கம் மிகமிக அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. சொல்லியிருக்க வேண்டிய (சீனிவாசனுக்கு சங்கடத்தை உண்டுபண்ணக்கூடிய—மற்றவர்களுக்கு அவர் சங்கடத்தை உண்டுபண்ணிய போதிலும்) உண்மைகளை எடுத்து வைக்காமல், அவற்றைப் பெரும்போக்காக மறைத்தபடி, பொதுவான அம்சங்களையும், இப்படிப்பட்ட ராஜதுரோக கேசில் அகப்பட்டுக்கொள்ளும் பத்திரிக்கை அதிபர்கள் செய்யவேண்டுவது என்ன என்பது பற்றிய சிறிய குறிப்பையும் மட்டுமே வெளியிட்டு, சீனிவாசனுக்குக் கிடைத்த தண்டனைக்கு
அரசின் தவறான போக்கே காரணம் என்று சுட்டி நிறுத்தியிருப்பது பெருந்தன்மைக்கும், மன்னிக்கும் சுபாவத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
சீனிவாசன், நீதிமன்றத்தில் மற்ற இரு பங்குதாரர்களுக்கும் பாரதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் சாட்சியமும் வாக்குமூலமும் அளித்திருந்தும்கூட, இந்தியா
கேஸ் என்ற இந்தத் தலையங்கம், பொது அரங்கில் பத்திரிகையாளர்கள் கையாள வேண்டிய நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ‘உள்வீட்டுச் செய்தியெல்லாம்
ஊரம்பலத் துரைப்பார்’ என்று கண்ணன்-என் சேவகனில் பாரதி பாடுவதுபோல் இல்லாமல் உள்வீட்டுச் செய்தி, உள்வீட்டுச் செய்தியாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலைப்பாடு, நான் மேலே எடுத்து வைத்துள்ள ஆதாரங்களிலிருந்து தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.
இன்னும் குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டுமானால், நான் முதலில் குறிப்பிட்ட பாரதி அன்பர் சொல்லியிருப்பதைப்போல், “நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று
வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? என்று” என்ற பகுதி, (அவர் எந்த அடிப்படையில் இப்படியொரு கருத்தை
மனத்துக்குள் ஆழமாக விதைத்து வளர்த்துவருகிறார் என்பதை நான் அறியேன்) உண்மைக்கு மாறானது; தவறானது என்பது தெரியவருகிறது. பாரதி இந்தத் தலையங்கத்திலும் சரி,
இந்தியா பத்திரிகை மீதான வழக்கு தொடர்பான மற்ற எந்தக் கட்டுரைகளிலும் சரி, பாரதி உரைநடைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் (சீனி விசுவநாதன் இதுவரையில்
வெளியிட்டிருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் சேர்த்தே சொல்கிறேன்) இப்படி ஒருவாக்கியத்தையோ, அல்லது இப்படி ஒரு பொருள்படும் கருத்தையே சீனிவாசனுக்கு எதிராகச் சொல்லவில்லை, சொல்லவில்லை, சொல்லவே இல்லை.
அப்படியானால், வழக்கு நடைபெற்றதற்கும், சீனிவாசன் தண்டனை பெற்றதற்கும் காரணமான கட்டுரைகளை எழுதியவன் பாரதிதானே? அதற்கு அவனுக்குப் பொறுப்பில்லையா என்று கேட்பீர்கள். அதற்கு வருகிறேன்.
——————————
[1]
இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சீனி. விசுவநாதன் தொகுத்துள்ள ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதி 3ல்இருக்கின்றன. தீர்ப்பு முதலான விவரங்கள் இந்தியா பத்திரிகையில் வெளியானவை என்று சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர், இந்த நூலிலிருந்து பெறலாம்.
ஹரி கிருஷ்ணன் அவர்கள் இதுகாறும் தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வந்த இத்தொடர் 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி சமயத்தில் புத்தகமாக வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தளத்தில் வெளிவரும் தொடரின் இறுதி பாகம் இது தான். பின்வரும் பாகங்களைப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
புத்தகம் பற்றிய விவரங்கள் கூடிய விரையில் தமிழ்ஹிந்து தளத்தில் அறிவிக்கப்படும்.
– ஆசிரியர் குழு
திரு ஹரிகி அவர்களே! நீண்ட நாட்களுக்குப்பின் தொடரும் உங்கள் பாரதி பற்றிய கட்டுரை கண்டு மிக்க மகிழ்ச்சி. இதேபோல’ மகாபாரத உரையாடலையும் தொடர வேண்டுகிறேன்.
ஹரி கிருஷ்ணன்! தங்கள் வரவு நல்வரவு ஆகுக. சற்று இடைவெளிக்குப் பிறகு தங்கள் எழுத்தைப் படிப்பது புத்துணர்ச்சி தருகிறது. தொடருங்கள்.
நன்றி, அன்புடன்
ஹரன்.
ஹரிகி அவர்களே,
இந்த மிக எளிதாக குழப்பம் உண்டாக்கக் கூடிய பொருளில், லாவகமாகப் பாரதியின் சிறப்பை தாங்கிப் பிடித்து எழுதிஇருக்கிறீர்கள். மிக்க நன்றி.
திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு,
மறுபடி பாரதி பற்றிய கட்டுரைத் தொடரைத் தொடர்வது கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் இந்த முறை இத் தொடரை முழுமையாக எழுதி முடிப்பீர்கள் என நம்புகிறேன். பிற்பாடு இத்தொடர் ஒரு புத்தகமாகப் பிரசுரமாவதும் அவசியம். உங்கள் பணி ஒப்பற்றது.
மைத்ரேயன்
தமிழ்ஹிந்து தளத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இத்தொடர் புத்தகமாக இன்று மாலை (18 டிசம்பர்) 6 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்படுகிறது. ராஜ்குமார் பாரதி முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார். இத்தொடரி்ல் இடப்பட்ட மறுமொழிகளை, அவரவர் பெயருடன், புத்தகத்தின் இறுதிப் பகுதியாக இணைத்திருக்கிறேன். என்னை ஊக்குவித்து வரும் உங்களுக்கு வேறு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
மைத்ரேயா, புத்தகம் குறித்த அறிவிப்பைப் பார்க்கவில்லையா? இந்த முறையாவது முடிக்கவும் என்ற உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டேன். புத்தகமாகவும் வருகிறது. இங்கேதான் தொடர்ச்சியை வெளியிட முடியாமல் போய்விட்டது. விரைவில் கம்பராமாயணத் தொடருடன் மீண்டும் வருகிறேன். எல்லோருக்கும் மிக்க நன்றி.
//தமிழ்ஹிந்து தளத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இத்தொடர் புத்தகமாக இன்று மாலை (18 டிசம்பர்) 6 மணிக்கு,//
இன்று மாலை (20 டிசம்பர்) 6 மணிக்கு என்று திருத்தி வாசிக்கவும். தேதியைத் தவறாகக் குறித்துவிட்டேன்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
இக்கட்டுரைத் தொடர் முடிந்து விட்டது. நான் இப்போதுதான் பார்த்தேன். முன்பே பார்த்திருந்தால் நிறைய கருத்துகளை முன் வைத்திருப்பேன். இப்போது புத்தகமாக வந்து விட்டது. படித்து தனி பதிவே போடலாமென இருக்கிறேன்.
இப்பொது சில கருத்துகள் மட்டுமே:
1. ஏதோ முனைவர் இறையரசன் மட்டுமே பாரதியின் சரிதத்தில் சீனிவாசன் தொடர்புடைய செயல் ஒரு களங்கம் என்று சொல்வதை எதிர்னோக்கி ஹரி கிருஷ்ணன் எழுதியிருக்கிறார் போல. உண்மையென்னவெனில் (நான் படித்தவரை) இக்கருத்துகள் பாரதி காலத்திலும், அதற்குப்பின் அவரோடு நெருங்கிப்பழகிய, அல்லது அவரை நன்கு தெரிந்த பலர் சொன்னதுண்டு. நீலகண்ட பிரம்மச்சாரி, சீனிவாசனை அப்பாவி என்கிறார். எதிராஜுலு நாயுடு, ‘பாரதி சரிதத்தில் இஃது ஒரு களங்கம்’ என்கிறார். (’பாரதி பற்றி நண்பர்கள்’ – ரா. அ.பதமநாபன் தொகுப்பு – வானதி பதிப்பகம்).
2. சீனிவாசன் ‘சுதேசி’ அல்ல. அதைப்போல ‘இந்தியா’ பத்திரிக்கையில் பணியாற்றிய அனைவரும் ‘சுதேசிகள்’ அல்ல. அதில், பாரதியில் அனலான சுதேசி கட்டுரைகளை எதிர்த்தவர்கள் பலர். திருமலாச்சாரி, தன் தங்கை மகன் ரங்காச்சாரியிடம் நிர்வாகப்பொறுப்பைக் கொடுத்தவுடன், ரங்காச்சாரி, பாரதியை, இப்படிப்பட்ட கட்டுரைகளை வரைவதை நிறுத்தும் எனச்சொல்ல, பாரதிக்கும் ரங்காச்சாரிக்கும் சண்டை. ரங்காச்சாரி, get out என்று சொல்ல, பாரதி கொத்த்து விட்டார். பெரிய சண்டை. மற்றவர்கள் தடுத்து நிறுத்த, மறுநாளே பாரதி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
3. சீனிவாசன் சுதேசி அல்ல என்று தெரிந்தும் அவரை அரசு பிடித்த காரணம் இங்கு விளக்கப்பட்டது. அவர் ஒரு பங்குதாரர். பாரதி நினைத்திருந்தால், தான் தான் கட்டுரைகளைவரைந்தவன்; தான் தான் சுதேசி, எனச்சொல்லியிருந்தால், சீனிவாசன் விடுதலை செய்யப்படாவிடிலும் கூட தண்டனை குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், பாரதி அதைச்செய்யாமல் தலைமறைவாகி விட்டார். அவர் நணபர்களின் தூண்டலினால் அவர் புதுச்சேரி சென்றார் என்று எடுத்தாலும், இஃது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலா?
4. இத்தள வாசிப்பாளர்கள் ஒன்றைத்தெரிந்து கொள்ளவேண்டும். பாரதி காலத்தில் ‘சுதேசிகள்’ எண்ணிக்கை குறைவு. பாரதியோடு தங்களைத் தொடர்படுத்திக்கொள்ள பலர் பயந்தார்கள். யாரோ ஒருவர் ‘குற்றத்திற்காக’ மற்றவர்கள் ஏன் சிறையில் அடிபடவேண்டும். முரப்பாக்கம் சீனிவாசன் சிறையில் துவைத்து எடுக்கப்பட்டார் தான் செய்யாத குற்றத்திற்காக!
5. இந்தியா பத்திரிக்கை சுதந்திர தாகத்தை சாத்வீகமான முறையில் வெளிப்படுத்தவும். மக்களுக்கு அத்தாகத்தை மெதுவெதுவாக ஊட்டவும்தான் தொடங்கப்பட்டது சுப்ரமணிய ஐயரால். ஆனால், பாரதி ஒரேயடியாக அரசைத் தாக்கத் தொடங்க பத்திரிக்கை பிரச்னைக்குள்ளாகியது.
6. பாரதி எல்லா விசயத்திலும் forward. அவருக்கு எல்லாம் உடனே நினைத்தவுடனே முடியவேண்டும். மற்றவர்கள் அப்படியல்ல. வ.வே.சு ஐயர் இதற்கு நேர்மாறாவனவர். இருவருக்கும் உள்ள குணவேறுபாடுகளை மண்டயம் சீனிவாசச்சாரியின் கட்டுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
7. இந்த forward குணத்தாலே தன் இனத்தாரின் கோபத்திற்கும் ஆனவர் பாரதி. ஆனால் அதற்கும் இக்கட்டுரைக்கும் தொடர்பில்லை.
புத்தகம் விலைக்கு வரட்டும். படித்துப்பார்ப்போம்.
திரு கள்ளபிரான்,
கருத்துகளுக்க நன்றி. என் எதிர்வினை:
. ஏதோ முனைவர் இறையரசன் மட்டுமே பாரதியின் சரிதத்தில் சீனிவாசன் தொடர்புடைய செயல் ஒரு களங்கம் என்று சொல்வதை எதிர்னோக்கி ஹரி கிருஷ்ணன் எழுதியிருக்கிறார் போல.
இல்லை. நீங்கள் இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்து படித்தால் நான் அப்படிச் சொல்லவில்லை என்பது புரியும்.
உண்மையென்னவெனில் (நான் படித்தவரை) இக்கருத்துகள் பாரதி காலத்திலும், அதற்குப்பின் அவரோடு நெருங்கிப்பழகிய, அல்லது அவரை நன்கு தெரிந்த பலர் சொன்னதுண்டு. நீலகண்ட பிரம்மச்சாரி, சீனிவாசனை அப்பாவி என்கிறார். எதிராஜுலு நாயுடு (’பாரதி பற்றி நண்பர்கள்’ – ரா. அ.பதமநாபன் தொகுப்பு – வானதி பதிப்பகம்).
நீங்கள் குறிப்பிட்டிருப்பவர் பெயர் எதிராஜுலு நாயுடு அல்ல; எஸ் ஜி ராமானுஜலு நாயுடு. இந்தத் தொடரின் மையப் புள்ளியே இந்தக் ‘களங்கம்’ பற்றிய அலசல்தான். நீங்கள் இன்னமும் அவற்றையெல்லாம் படிக்கவில்லை என்பது புரிகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
2. சீனிவாசன் ‘சுதேசி’ அல்ல. அதைப்போல ‘இந்தியா’ பத்திரிக்கையில் பணியாற்றிய அனைவரும் ‘சுதேசிகள்’ அல்ல. அதில், பாரதியில் அனலான சுதேசி கட்டுரைகளை எதிர்த்தவர்கள் பலர். திருமலாச்சாரி, தன் தங்கை மகன் ரங்காச்சாரியிடம் நிர்வாகப்பொறுப்பைக் கொடுத்தவுடன், ரங்காச்சாரி, பாரதியை, இப்படிப்பட்ட கட்டுரைகளை வரைவதை நிறுத்தும் எனச்சொல்ல, பாரதிக்கும் ரங்காச்சாரிக்கும் சண்டை. ரங்காச்சாரி, get out என்று சொல்ல, பாரதி கொத்த்து விட்டார். பெரிய சண்டை. மற்றவர்கள் தடுத்து நிறுத்த, மறுநாளே பாரதி ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
அ. சீனிவாசன் சுதேசி இல்லாமலேயே இருக்கட்டும். ஆனால், பத்திரிகையைத் தொடங்கப் பணம் போட்டவர்தானே? என்ன நோக்கத்துடன் பணம் போட்டு, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட காரணமாக இருந்தார்? எது, எந்த நோக்கம் மற்ற இருவருடன் இவரைக் கைகோக்க வைத்திருக்கும்? தேசபக்தி, சுதேசி என்ற பாகுபாடு இல்லாவிட்டால், பத்திரிகை நடத்தி லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்துடன் பணத்தை முதலீடு செய்தாரா?
ஆ. ரங்காசாரி சம்பவத்தை இந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் குறித்திருக்கிறேன். பாரதியின் கட்டுரைகளின்மேல் உண்டான ஒவ்வாமை காரணமாக ரங்காசாரி அவ்விதம் சொல்லவில்லை. பாரதி வேலைக்குக் கால தாமதமாக வந்ததைக் கண்டித்து, ஒரு நாள் தொடங்கிய விவாதம், இவர் பாரதியை அடிக்கக் கையை ஓங்கியதில் முடிந்தது. பெ சு மணி, பத்திரிகையாளர் பாரதியில் இவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே, பாரதியின் தீவிரமான எழுத்துகள் பிடிக்காமல்தான் ரங்காசாரி அவனை விலகச் சொன்னார் என்பதற்கும்; ரங்காசாரி கையில் பொறுப்பை நிரந்தரமாக ஒப்படைத்தார்கள் என்பதற்கும் ஆதாரம் தேவை அல்லவா? ரங்காசாரியிடம் பொறுப்பைக் கொடுத்தது ஒரு இடைக்கால ஏற்பாடே. திருமலாசாரியாரும் ஸ்ரீனிவாஸாசாரியாரும் ஊரில் இல்லாத சமயத்தில் செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடு அது. அந்தச் சமயத்தில் மூண்ட கருத்து வேற்றுமை. இருவரும் ஊருக்குத் திரும்பியதும், பாரதியை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான முயற்சியும் நடந்தது. பாரதி சம்மதிக்கவில்லை. (நான் சென்னையில் இருக்கிறேன். ரெஃபரன்ஸ் புத்தகங்கள் பெங்களூரில் இருக்கின்றன. விவரங்களை இன்னும் ஒருமுறை சரிபார்க்கவேண்டும் என்றாலும், இது என் நினைவில் இருப்பது. 99 சதம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.)
3. சீனிவாசன் சுதேசி அல்ல என்று தெரிந்தும் அவரை அரசு பிடித்த காரணம் இங்கு விளக்கப்பட்டது. அவர் ஒரு பங்குதாரர். பாரதி நினைத்திருந்தால், தான் தான் கட்டுரைகளைவரைந்தவன்; தான் தான் சுதேசி, எனச்சொல்லியிருந்தால், சீனிவாசன் விடுதலை செய்யப்படாவிடிலும் கூட தண்டனை குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், பாரதி அதைச்செய்யாமல் தலைமறைவாகி விட்டார். அவர் நணபர்களின் தூண்டலினால் அவர் புதுச்சேரி சென்றார் என்று எடுத்தாலும், இஃது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலா?
இவை எல்லாவற்றுக்கும் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் என் முடிவுகளைத் தெரிவித்திருக்கிறேன். நீங்கள் சீனிவாசனுடைய வாக்குமூலத்தைப் படித்திருக்கிறீர்களோ? உங்களுடைய கருத்தைப் பார்த்தால், அப்படித் தோன்றவில்லையே!
4. இத்தள வாசிப்பாளர்கள் ஒன்றைத்தெரிந்து கொள்ளவேண்டும். பாரதி காலத்தில் ‘சுதேசிகள்’ எண்ணிக்கை குறைவு. பாரதியோடு தங்களைத் தொடர்படுத்திக்கொள்ள பலர் பயந்தார்கள். யாரோ ஒருவர் ‘குற்றத்திற்காக’ மற்றவர்கள் ஏன் சிறையில் அடிபடவேண்டும். முரப்பாக்கம் சீனிவாசன் சிறையில் துவைத்து எடுக்கப்பட்டார் தான் செய்யாத குற்றத்திற்காக!
இது காஃபி-டாஃபி விவாதம். பாரதியைக் கைது செய்யத்தான் அரசு முயன்றது. அரசால் முடிந்ததெல்லாம் சீனிவாசனைக் கைது செய்ததுதான். அவர்களால் வேறு நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் இந்தத் தொடர் முழுவதையும் (குறைந்தது இந்தத் தளத்தில் வெளிவந்திருக்கும் வரையிலாவது) படித்துவிட்டு, பிறகு சொல்லுங்கள். அப்படியும் பாரதி செய்தது குற்றம்தான் என்று உங்களுக்குத் தோன்றினால், please go ahead. It is your opinion after all.
5. இந்தியா பத்திரிக்கை சுதந்திர தாகத்தை சாத்வீகமான முறையில் வெளிப்படுத்தவும். மக்களுக்கு அத்தாகத்தை மெதுவெதுவாக ஊட்டவும்தான் தொடங்கப்பட்டது சுப்ரமணிய ஐயரால். ஆனால், பாரதி ஒரேயடியாக அரசைத் தாக்கத் தொடங்க பத்திரிக்கை பிரச்னைக்குள்ளாகியது.
புதுக் கதையாக இருக்கிறதே! ஏந்த சுப்பிரமணிய ஐயர் இந்தியா பத்திரிகையைத் தொடங்கினார்? நீங்கள் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள விவரக் கோவைகளை சரிபார்த்தபிறகு, அவற்றில் ஏதும் தவறிருந்தால், ஆதாரபூர்வமான எதிர்த் தகவல் ஏதம் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன். அரசை ஒரேயடியாகத் தாக்கத் தொடங்கியது உண்மை என்றால், அரசால் ஏன் பாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியவில்லை? அரசு இயந்திரத்தால் முடியாத காரியமா அது? சட்ட வரம்புக்குள் அதைச் செய்ய முடியவில்லை என்பது வெளிப்படைக் காரணம்.
பிற்பகுதியில் இவற்றையும் அலசி இருக்கிறேன். படித்துப் பார்க்கிறேன் என்று பயமுறுத்தாதீர்கள். பயமாக இருக்கிறது. :-))
திரு கள்ளபிரான் அவர்களுடைய கருத்துகளையும், அவற்றுக்கு என்னுடைய எதிர்வினைகளையும் தனித்தனியாகப் பகுத்து, கோடிட்டுக் காட்டியிருந்தேன். அவை (ஒருவேளை மறுமொழிப் பெட்டியில் அவை இடம்பெறும் வசதி இல்லையோ என்னவோ) மொத்தமாக ஒன்று கலந்து எது என்னுடைய எதிர்வினை என்பது தெரியாமல் நிற்கிறது. பகுத்துப் படிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரு கள்ளபிரானுடைய இந்தக் கருத்தைக் குறித்து
\\3. சீனிவாசன் சுதேசி அல்ல என்று தெரிந்தும் அவரை அரசு பிடித்த காரணம் இங்கு விளக்கப்பட்டது. அவர் ஒரு பங்குதாரர். பாரதி நினைத்திருந்தால், தான் தான் கட்டுரைகளைவரைந்தவன்; தான் தான் சுதேசி, எனச்சொல்லியிருந்தால்\\
சற்று விளக்கமாகச் சொல்லவேண்டும். இந்தத் தொடரிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன்; புத்தகத்தின் பிற்பகுதியிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். ராம்ஸே மக்டொனால்டுக்கு பாரதி எழுதிய கடிதத்தில் அவனே குறிப்பிட்டிருந்ததுபோல், (மேற்கோள் நினைவிலிருந்து சொல்லப்படுகிறது) When I came to Pondicherry, I was not attached to any paper, receiving money for signed aritcles என்று சொல்லியிருப்பதன் அடிப்படையில், பாரதியின் கையெழுத்துப் படிகள் (பல புத்தகங்களில் இவை வந்திருக்கின்றன) எல்லாமே, சி. சுப்பிரமணிய பாரதி என்று கையொப்பமிடப்பட்டவைதாம் என்பது தெரியவருகிறது. கீழே கையெழுத்திட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், இது யார் எழுதியது என்பதை, எழுதியவரே வந்து ‘நான்தான் எழுதினேன்’ என்று சொல்லவேண்டுமா? கையெழுத்தே இல்லாவிட்டாலும், manuscript எல்லாமே கைப்பட எழுதப்பட்டவைதாமே! பார்த்த அளவிலேயே இது இன்னாருடைய கை எழுத்து (சிக்னேச்சர் அல்ல) என்று சொல்லிவிட முடியும் அல்லவா? இதற்கென்று ஒருமுறை பாரதிதான் வந்து ‘நான்தான் எழுதினேன்’ என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை அல்லவா? காவல்துறையில் இல்லாத கை எழுத்து நிபுணர்களா? நிரூபிக்க வேண்டுமானால் அதற்கு வழியா இல்லை?
இன்னொன்று. நீதிமன்றத்துக்குள் வந்து, அவ்வாறு சொல்லவேண்டுமாயின், சம்மன்ஸ் வேண்டும். பாரதியின் பேரில் சம்மன் ஏதும் இருந்திருக்கவில்லை. ஆகவே அவன் நீதிமன்றத்தில் வந்து ‘நான்தான் இவற்றையெல்லாம் எழுதினேன்’ என்று சொல்வதற்கான சந்தர்ப்பம் இல்லை. பாண்டிச்சேரி, சென்னையிலிருந்து அதிகம் போனால் 130 கிமீ தொலைவிலிருக்கிறது. பாரதி சென்னையில் நீதிமன்றத்துக்கு வருவது இருக்கட்டும். குறைந்தபட்சம், அரசு அவன்மீது பிடிவாரண்ட்டாவது பிறப்பித்திருந்ததா? பாண்டிச்சேரிக்குப் போய் ஒளிந்துகொண்ட காரணத்தால் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது அப்பட்டமான பொய். (கள்ளபிரான் இவ்வாறு சொல்வதாக நான் சொல்லவில்ல. அப்படி நிறையபேர்கள் சொல்கிறார்கள். அவர் தன்னுடைய கருத்துகளுக்கு அடிப்படையாக யாரைக் காட்டுகிறாரோ அவர்களைச் சொல்கிறேன்.) உள்நாட்டில் இல்லாத, வசிக்காத, நம்நாட்டுக் குடிமகனே இல்லாதவர்கள் பேரிலெல்லாம் வழக்குகள் நிலுவையில் உள்ளனதாமே? ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று அரசு தொடுத்திருக்கும் வழக்கை ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டால், அரசு நினைத்தால், பூகோள எல்லையோ, நாட்டுக் குடியுரிமையோ ஒரு வழக்கில் ஒருவரைத் தேடவோ, சம்மன் பிறப்பிக்கவோ தடை இல்லை என்பது புலனாகிறது அல்லவா? அப்படி சம்மன் பிறப்பிக்க சட்டப்படி வழி இருந்திருக்கவில்லை என்பதையும்; இந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றுவதற்கு முன் எழும்பூர் சீஃப் பிரசிடென்ஸி மாஜிஸ்ட்ரேட் ‘காவல் துறை சமர்ப்பித்திருக்கும் ஆதாரங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போதுமானவை அல்ல’ என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனித்துப் படிக்கவேண்டும். அந்த நாளில் சட்டத்தைக் காவல் துறையும், நீதித் துறையின் ஒரு பகுதியும் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதன் விமரிசனம் அல்லவா இந்த நிகழ்வுகள்!
இவற்றையும் புத்தகத்தின் பிற்பகுதியில் சொல்லியிருக்கிறேன். பாரதியைக் கடுமையாக விமரிசனம் செய்வதற்கு ஆழமான படிப்பு தேவையே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பழைய வாதங்களில் காணப்படும் வாக்கியங்களைத் தொகுத்துக்கொண்டு, பொத்தாம் பொதுவாக தமக்குத் தோன்றிபடியெல்லாம் விமரிசிக்க யாராலும் முடியும். அப்படித்தான் இதுவரையிலான ஆய்வுகளில் பெரும்பாலானவை நிகழ்ந்திருக்கின்றன (பாரதியைக் குறித்த ஆய்வுகளுக்கு மட்டுமே நான் சொல்வது பொருந்தும். திரு கள்ளபிரான் மீது வைக்கப்படும் விமரிசனம் அன்று இது.) நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில் உரிய விளக்கங்களுடன் என் முடிவுகளைக் கண்டடைந்திருக்கிறேன். நூலின் முன்னுரையிலேயே சொல்லியிருப்பது போல், ‘புத்தகம் இனி வாசகர்களுடையது. முடிவுகள் உங்களுடைய அறிவுத் துலாக்கோலுக்கானவை.’ நான் ஆதாரபூர்வமான அடிப்படைக் கட்டமைப்பைக் கொடுத்துவிட்டேன். முடிவுகளைக் காண்பது, அவரவர் தேர்வு; சார்பு; சார்பற்ற நிலைமை; சாய்வு, நடுவுநிலைமை என்று பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.