அச்சுதனின் அவதாரப் பெருமை – 2

அச்சுதனின் அவதாரப் பெருமை – 1

(தொடர்ச்சி…)

krishna-leela14

முதல் பாகத்தில் திருமாலுடைய அவதாரம் பற்றிப் பல வேதாந்த விளக்கங்களைக் கண்டோம். இன்றோ வேதாந்த விழுப்பொருளான பரமனே புவியில் கண்ணனாக அவதரித்த நாள். இரும்புக்கடலை போன்ற மிகக்கடினமான தத்துவ விளக்கங்களுக்கும், வடமொழி சாத்திரநூல்-பாடியநூல் ஆராய்ச்சிகளுக்கும் இன்று விடுமுறை நாள்! ஞான மார்க்கத்தை விடவும் பல படிகள் உயர்ந்ததும் பல படிகள் எளியதும் ஆகிய பரம தர்மமான நாம சங்கீர்த்தனம் (திருப்பெயர்களை வாய்விட்டு அழைத்தல்), பகவத் கதா சிரவணம் (திருவவதாரங்களின் கதைகளைச் செவியால் கேட்டு மகிழ்தல்), முதலியவை நிரம்ப இனிக்க இனிக்கக் கண்ணன் பிறந்த கதையை இன்று இப்பகுதியில் பார்ப்போம். ஸ்ரீநாராயணபட்டர் என்பவர் இயற்றிய நாராயணீயம் என்னும் நூலில் இருப்பவற்றைத் தழுவி எழுதப்பட்டது இது.

 

ஸ்ரீமந் நாராயணீயத்தின் வரலாறு

sri-guruvayurappan

கேரள மாநிலத்தில் மிக உன்னதமான க்ஷேத்திரங்களுள் (திருத்தலங்களுள்) ஒன்று குருவாயூர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இத்திருத்தலத்தில் நாராயணபட்டர் என்னும் பண்டிதர் வாழ்ந்து வந்தார்; வடமொழிப் புலமையிலும் வடமொழி சாத்திர ஞானத்திலும் மிகச் சிறந்தவராக இருந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குருவாயூரப்பனிடம் அதீத அன்பும் பக்தியும் வைத்திருந்தார். இவர் ஆதி சேடனின் அவதாரம் என்று சொல்லப்படுவதும் மரபில் உண்டு. குருபக்தியினால் தம்முடைய ஆசானாகிய “அச்சுத பிஷாரடி”-யிடமிருந்து வாத நோயை வாங்கிக்கொண்டார். அதற்கு மருத்துவம் பார்க்க “எழுத்தச்சன்” என்பவரிடம் சென்றவர், “மீன் தொட்டுக் கூட்டச் சொல்லு!” என்று அவரால் பரிந்துரைக்கப் பட்டார். எழுத்தச்சனின் பரிந்துரையைச் சரியாகப் புரிந்துக் கொண்ட நாராயணபட்டர், “நம்மை ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களை (மத்ஸ்ய அவதாரம் தொடக்கமாகப்) பாடச் சொல்லுகிறார்,” என்று புரிந்துக் கொண்டு, வேதம் அனைத்துக்கும் சாரமாகிய ஸ்ரீமத் பாகவத புராணத்திற்குச் சாரமாக வடமொழியில் 1036 பாசுரங்களாகப் பாடினார். அதை குருவாயூர் திருத்தலத்தில் அரங்கேற்ற, இவர் பாடிய ஒவ்வொரு தசகத்துக்கும் (பத்துப் பாசுரங்களுக்கும்) குருவாயூரப்பனே தலையசைத்து வரவேற்றதாக இத்தல வரலாறு கூறும். நூறு தசகங்களைப் பாடி முடித்தபோது (27-11-1587 அன்று) வாத நோயிலிருந்து விடுபட்டார். இப்பாசுரங்களே இன்று “நாராயணீயம்” என்று பிரபலமாக வழங்கப்படுவது. நூறு தசகங்களைக் கொண்ட நாராயணீயத்தில் ஸ்ரீ நாராயணபட்டர் கிருஷ்ணாவதாரத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தசகங்களை (ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்களை) ஒதுக்கியுள்ளார். இதன் சாரமான பகுதிகளைத் தமிழ் வடிவில் இக்கட்டுரையில் காண்போம். மேற்கொண்டு வரும் பகுதிகள் “முல்லை பி.எல்.முத்தையா” என்பவரால் இயற்றப்பட்டு, 1994-ஆம் ஆங்கில வருடம் திருமலை திருப்பதி தேவஸ்தானக்காரர்களால் வெளியிடப்பட்ட “ஸ்ரீ நாராயணீயம்” என்னும் எளிய நடை தமிழ் நூலைத் தழுவி எழுதப்பட்டவை.

 

நாராயணீயம் கூறும் கண்ணன் கதை

37-ஆம் தசகம்

முழுமை நிறைந்த ஆனந்தத்தின் அழகு உருவே! ஹரியே! முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடந்த போரில், அரக்கர்களைக் கொன்றீர். ஆனால் பாவங்களின் வயப்பட்ட அந்த அரக்கர்களுக்கு முக்தி கிட்டவில்லை. மண்ணுலகில் பிறந்த அரக்கர்களின் சுமையினால் நிலமடந்தை துன்புற்றாள். அதனால், அவள் தேவர்களுடன் சத்திய உலகத்தில் உள்ள பிரமனைக் காணச் சென்றாள். …(1)

brahmam

தென்றல் இனிமையாகத் தவழ்ந்து வரும் பாற்கடலின் கரையை அடைந்து, ஒன்று கூடி, மனதை ஒரு நிலைப்படுத்தி (பிரமன் முதலான தேவர்கள்) உம்மைத் தியானம் செய்தனர். அப்பொழுது பிரமனின் உள்ளத்தில் உன் அருள் வாக்கு ஒலித்தது. “நாராயணன் எனக்குக் கூறியவற்றை நீங்களும் கேட்பீர்களாக” என்று மகிழ்ச்சியோடு கூறினான். …(4)

மேலும், “நிலமகளுக்கும் தேவர்களுக்கும் ஈனர்களால் ஏற்பட்ட இழிநிலையை நான் அறிவேன். அதைப் போக்குவதற்காக யாதவர் குலத்தில் தோன்ற இருக்கிறேன். தேவர்கள் தத்தம் அம்சங்களோடு விருஷ்ணி குலத்தில் பிறப்பார்கள். தேவ மங்கையரும் எனக்குப் பணியாற்றப் பூமியில் பிறப்பர்” என்ற அருள் மொழியைப் பிரமன் எடுத்துக் கூறினான். …(5)

இறைவா! உமது அருள் மொழி கேட்டு அனைவரும் அகமகிழ்ந்தனர். மனம் அமைதியடைந்தனர். பிறகு கவலையின்றித் திரும்பிச் சென்றனர். உமது தொடர்பால் புகழும் தூய்மையும் பெற்ற நகரம் (வட) மதுரை ஆகும். …(6)

(இதன் பிறகு வசுதேவர்-தேவகி திருமணம் தொடங்கி, அவர்கள் இருவரையும் தேவகியின் தமையன் கம்சன் சிறையில் அடைத்தது, ஆறு குழந்தைகளைக் கம்சன் கொன்றது முடிய நாராயணீயத்தில்வருகிறது. அதன் பிறகு வரும் பகுதிகளை இனி காண்போம்.)

மாதவனே! உமது ஆணைப்படி, பாம்பரசனாகிய ஆதிசேஷன் ஏழாவது கருவாக இடம் பெற்றான். யோகமாயை அந்த கர்ப்பத்தை உரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள்; சச்சிதானந்த ரூபனாகிய நீரும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக இடம்பெற்றீர். எங்கும் நிறைந்த கண்ணா! தேவர்களால் போற்றப்படுபவனும் தேவகியின் மணி வயிற்றில் உதித்தவனும் ஆகிய நீர்தான் என்னைப் பிடித்திருக்கும் இந்தத் தீராத (வாத/சம்சார) நோயின் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும். …(10)

38-ஆம் தசகம்

ஆனந்த வடிவான இறைவனே! உமது அவதாரத்துக்கு உரிய காலம் நெருங்கி விட்டது. உன் திருவுருவில் கிளம்பிய ஒளியைப்போல மேகக்கூட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. அவ்வாறு மழைக்காலம் காட்சி தருகின்றது அல்லவா? …(1)

devaki-vasudevar

மேகங்கள் பொழிந்த நீரால், திக்கெங்கும் குளிர்ச்சி அடைந்தன. விரும்பியதைப் பெற்ற நல்லவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அப்பொழுது நடு இரவில், விண்ணில் மதி தோன்றும் வேளையில், மூவுலகங்களின் துன்பங்களைப் போக்கக் கூடிய நீர் இவ்வுலகில் அவதரித்தீர். …(2)

சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தாலும், உன் திருமேனி மிகவும் வல்லமை வாய்ந்தது. தலையில் கிரீடம், கைவளை, தோள்வளை, முத்துமாலை ஆகியவற்றின் ஒளியுடன், சங்கு, சக்கரம், தாமரை மலர், கதாயுதம் தரித்த கைகளோடு காட்சி தந்தீர். கார்மேகத்தை ஒத்த நீல நிறத்துடன் அந்த அறையில் காட்சி தந்தீர். …(3)

நீ பிறக்கும் இடத்தை லட்சுமி வசிப்பதற்கேற்ற இடமாகக் கம்சன் வைக்கவில்லை. ஆனால் எப்போதும் உன் மார்பில் வசிக்கும் இலட்சுமி அங்கிருந்துகொண்டு கடைக்கண்ணால் பார்த்ததாலேயே அந்த இடம் லட்சுமிகரமாகக் காட்சி அளித்தது. …(4)

மகா ஞானிகளான முனிபுங்கவர்களின் அறிவுக்கு எட்டாத தொலைவில் உமது திருமேனி இருந்தது. அதனை வசுதேவன் தன் கண்களால் கண்டார். கண்களில் நீர் பெருக, உடல் சிலிர்க்க எல்லையில்லா ஆனந்தத்தைப் பெற்றார். மனங்கனிந்த வசுதேவன் இனிய நறுங்கனியான உம்மைப் போற்றித் துதித்தார். …(5)

“தேவதேவனே! புருஷோத்தமனே! துன்பம் நீங்கப் பிறந்த தூயவனே! எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கருதிக் கருணை காட்டுபவனே! மாயலீலா விநோதனே! கடைக்கண் காட்டி கவலை வினைகளைப் போக்க வேண்டும்!” என்று நெடுநேரம் துதித்தார். …(6)

vasudevarகொடியுடலாள் தேவகியின் கண்களிலும் மகிழ்ச்சிப் பெருக்கால் நீர் பெருகி வழிந்தது. உன் கல்யாண குணங்களைப் பற்றிப் பாடித் துதித்துப் போற்றினாள். அருளுக்கு உறைவிடமான நீர், அவர்களிருவருக்கும் அவர்களது முன்னிரண்டு பிறவிகளைப் பற்றி எடுத்துரைத்தீர். பிறகு உமது தாயின் வேண்டுதல்படி, மானிட உருவை எடுத்துக் கொண்டீர். முன்பெடுத்த இரு பிறவிகளில், பிருச்னி-சுதபஸ் ஆகியவர்க்கு பிருச்னிகர்ப்பனாகவும், அதிதி-காச்யபன் ஆகியவர்க்கு வாமனனாகவும் பிறந்துள்ளீர். …(7)

அதன் பிறகு உம்மை, நந்தகோபனுடைய மகளுக்குப் பதிலாக மாற்றி வைக்கும்படி வசுதேவனுக்கு ஆணை இட்டீர். உடனே அவர், உயர்ந்தோர் உள்ளமாகிய தாமரைத் தடாகத்தில் இருக்கும் அன்னமாகிய உம்மைத் தமது இரு கரங்களாலும் வாரி எடுத்துக்கொண்டார். …(8)

நல்வினை பல செய்த வசுதேவன் உம்மைக் கரங்களில் தூக்கிக் கொண்டு மெதுவாகப் புறப்பட்டார். ஆதிசேஷன் படம் எடுத்துக் குடை பிடித்தான்; அவன் தலைகளில் இருந்த இரத்தினங்கள் ஒளி வீசி வழிகாட்டின. இறைவா! (வாத/சம்சார) நோயைப் போக்கிக் காப்பாற்ற வேண்டும். …(10)

 

39-ஆம் தசகம்

யாதவ மகளிர் நந்தகோபன் இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். பிறந்த பெண் குழந்தை மெதுவாக அழுது கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்தன. அந்த இல்லத்திற்குள் வசுதேவன் சென்றார். அங்கே உம்மைப் படுக்கவைத்து விட்டு அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு விரைவாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். …(2)

yasodha-feeding-krishna

முகுந்தனே! நந்தகோபனின் வீட்டில் கால்களை உதைத்து யசோதையின் பக்கத்தில் அழுது கொண்டிருந்தீர். உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் விழித்தெழுந்து, குழந்தை பிறந்த செய்தியை மற்றவர்களுக்குத் தெரிவித்தனர். என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்? கோகுலம் முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. …(8)

மனங்கவர்ந்த உம்மை முதன் முதலாகக் கண்டு யசோதை மகிழ்வுற்றாள். உம்மைத் தொட்டும் தடவியும் மார்போடணைத்தும் பால் ஊட்டினாள். புண்ணியம் புரிந்தவர்கள் அனைவரிலும் அவளே மிகச் சிறந்தவள்; யாருக்குக் கிடைக்கும் இத்தகைய பெற்றாகிய பேறு? …(9)

மகிழ்ச்சியில் திளைத்த நந்தகோபனும், மறையவர்களுக்குக் கேட்டதை இல்லை என்னாது கொடுத்தான். மற்ற இடையர்களும் மங்கல காரியம் பல புரிந்து மகிழ்ந்தனர். ஆயர்ப்பாடியே விழாக்கோலம் பூண்டது. மூன்று உலகங்களையும் காப்பாற்றி நலம் அருள வந்தவனே! என்னை (வாதம்/சம்சாரம் ஆகிய) கொடிய பிணியிலிருந்து காப்பாற்றி அருள் புரிய வேண்டுகிறேன்! …(10)

krishna-leela1

[தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி வாழ்த்துகள்! இந்நன்னாளில் கோகுலக் கண்ணனுடைய அருளுக்கு அனைவரும் பாத்திரமாவோம்.]

(தொடரும்…)

6 Replies to “அச்சுதனின் அவதாரப் பெருமை – 2”

  1. கட்டுரையை படித்ததில் மனதுக்கு மிக திருப்தி,ஆயார்பாடி கண்ணனின் லீலைகளை மேலும் படிக்க ஆவல்.
    கட்டுரையை எழுதிய திரு கந்தர்வன் அவர்களுக்கும்,தமிழ் ஹிந்து தளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். இனிய இந்நன்னாளில் எல்லோரும் அவன் தாள் பணிந்து அவனருளை பெறுவோம்.
    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.

  2. எங்கள் குட்டிக் கண்ணனின் பிறந்த நாளில் அத்புதமான கட்டுரை தந்ததற்கு நன்றிகள்… நாராயணீயம் பற்றிய செய்திகளில் தேன் கொட்டுகிறது. கிருஷ்ண பக்தி வளர்க்க உதவ வல்ல அரிய கட்டுரை இது. படங்களும் மிக அருமை…ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண… கிருஷ்ண…

    எல்லோருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்….

  3. https://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_pogai

    சுஜாதாவின் ஆழ்வார்கள் ஒரு அறிமுகம் மேலுள்ள சுட்டியில்
    அங்குள்ள சில சுவையான பகுதிகள்

    பொய்கையாழ்வார் பகவானுக்கு ஒரு ”பயோடேட்டா” தருகிறார்.

    ‘அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி உரைநூல்மறை உறையும் கோயில் – வரைநீர்
    கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
    உருவம் எரிகார் மேனி ஒன்று’ (5)

    பெயர்-பரமசிவன், நாராயணன்
    வாகனம் – எருது, கருடன்
    பெருமை சொல்லும் நூல்கள் – ஆகமம், வேதம்
    இருக்கும் இடம் – (கைலாய) மலை, (பாற்) கடல்
    தொழில் – அழித்தல், காத்தல்
    ஆயுதம் – வேல், சக்கரம்
    உருவம் – நெருப்பின் சிவப்பு, மேகத்தின் கருப்பு
    உடல் – ஒன்றே!

    முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் சைவ வைணவப் பிணக்குகள் பண்டிதர்களிடம் அதிகமாக இருந்தன. இரண்டு தெய்வங்களும் ஒன்றே என்று கூறும் முதல் குரல் பொய்கை யாருடையது. இந்தக் கருத்தை பொய்கையார் பலவிடங்களில் வலியுறுத்துகிறார்.

    ‘பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்
    நின்றுலகம் தாய நெடுமாலும் – என்றும்
    இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன்
    ஒருவரங்கத்து என்றும் உளன்’ (98)

    பொன்போன்ற மேனியும் பின்னிவிட்ட சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், இரண்டு உடல்களில் திரிவார்கள் என்றாலும் ஒருவரில் ஒருவர் என்றும் உளர்.

    பரமசிவன் மட்டும் அல்ல பிரமனும் இலக்குமியும் கூடச் சேர்கிறார்கள்.

    ‘கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்து
    ஐய மலர்மகன் நின் ஆகத்தாள் – செய்ய
    மறையான் நின்னுந்தியான் மாமதிள் மூன்றெய்த
    இறையான் நின்னாகத் திறை’ (28)

    கையில் சங்கு சக்கரம் மேகவர்ணம் கொண்ட உன் பக்கத்தில் இலக்குமி இருக்கிறாள். உன் உந்திக்கமலத்தில் பிரமன் இருக்கிறான். முப்புரமெரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்.

  4. திரு பாபு, முதலாழ்வார்கள் பற்றிய சுட்டிக்கு நன்றி. தமிழகத்தில் பக்தி குறைந்து வரும் இந்நாளில் பாசுரங்களைப் பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம். ஆழ்வார் பாசுரங்களை மாத்திரம் அல்லாமல் அப்பாசுரங்களுக்கு, பெரியவாச்சான்பிள்ளை முதலிய ஆச்சாரியார்கள் இட்ட உரைநூல்களையும் பேணிப் பாதுகாத்து பிரச்சாரம் செய்வது அவசியம். நமக்கு எட்டாத, பாசுரங்களில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை அவர்கள் நமக்குத் தங்கத் தட்டில் கொடுத்துள்ளனர். ஆர்வமுள்ளவர்களுக்கு: இன்று பரம காருணிகரான ஸ்ரீ் பெரியவாச்சான்பிள்ளை அவர்களின் திருநக்ஷத்ர தினமும் கூட!

    திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. குட்டிக் கண்ணனுடைய பால்ய லீலைகளை அனுசந்தித்து லயித்திருப்பது வேதாந்த தத்துவ விசாரத்தை விடவும் மிக உயர்ந்தது என்று பல பெரியோர்கள் கூறியுள்ளனர். “ஒரு முறை கண்ணனுக்கு அன்புடன் நமஸ்காரம் செய்தால், நூறு யாகங்கள் செய்திருந்தும் பெறுதற்கரியதான பலனையும் பெறலாம்” என்று ஆதி சங்கரர் ஸ்ரீ்விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் கூறுகிறார்.

  5. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *