மாயையை அறிதல்

mayauniverse1

மாயை என்பது பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்படுகிறது. மாயை என்பது அறியாமை, நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம், மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்று மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுபோல் எல்லாம் எண்ணங்கள் வேரூன்றியிருக்கின்றன.

உண்மையில் மாயையே பிரம்மத்தை அறிவதற்கான திறவுகோலாக உள்ளது.

rope-snakeமாயையானது, அது உள்ளளவும் சாசுவதமானதாகவே உள்ளது. சங்கரரின் கயிறும் பாம்பும் நியாயம் இதைத்தான் சொல்கிறது.

அதாவது கயிறு பாம்பாகத் தெரியும் வரை அது பாம்பாகவே உணரப்படுகிறது. அவ்வாறு உணரும் பரியந்தம் அது வாஸ்தவமாகப் பாம்பாகவே உள்ளது. மட்டுமல்ல. பாம்பாக இருந்ததுதான் கயிறாகவும் உள்ளது. அதாவது இரண்டுமே ஒன்றுதான்.

நமது பார்வையின் தன்மைக்கேற்ப, சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, அது வெவ்வேறாகத் தென்படுகிறது. இதுதான் கயிறுபாம்பு நியாயத்தின் உட்பொருளாகும்.

இதை இன்னும் விவரித்தால் கயிறுபாம்பு இரண்டுமே நிஜம், அவையவற்றின் காலப் பிரமாணப் பரியந்தம் அவை நிஜமாக இருக்கும், இருக்க வேண்டும். கனவானது கனவு காணும்வரை தத்ரூபமாகவே உள்ளது. விழிப்பு நிலை வருகையில்தான் கனவு என்பது உறைக்கிறது. விழிப்பு நிலை வராது கனவு நீடிக்கும்வரை அது தன்னளவில் நிஜமான ஒன்றாகவே உள்ளது.

ஏனெனில், மாயை என்பது உறைநிலையில் உள்ள சக்தியைப் போன்று ப்ரம்மத்தின் வெளிப்படாத நிலையே ஆகும். மாயையை பிரம்மத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதால்தான் அது ஒரு வேண்டாத அம்சம்; பிரம்மத்தைக் காணவிடாமல் மறைக்கும் இடையூறு என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

veil_of_maya

என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன், மம மாயா என்றும் தைவீ மாயா என்றும் இந்த மாயையைப் பற்றிக் குறிப்பிடுகிறான். மம என்றால் என்னுடைய என்றும் தைவீ என்றால் தெய்வீகமான என்றும் பொருள்படும்.

ஏஷா என்றும் மாயைக்கு ஒரு அடைமொழி கொடுக்கிறான். அதாவது புலன்களால் உணரக் கூடியது. கண்களால் காணவும், செவிகளால் கேட்கவும், சருமத்தால் உணரவும்,  மனதால் புரிந்துகொள்ளக் கூடியதுமான மாயை. ஆக, மாயையின் வடிவில் உனக்கு எந்நேரமும் நான் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நமக்கு உறுதி கூறுவதாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்னை வெளிப்படுத்திக்கொள்ளாத பிரம்மமாக இருக்கையில், நானே மாயையாக இருக்கிறேன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணன் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.

மாயையை நாம் அன்னையின் வடிவிலேயே உணர்கிறோம். மஹா மாயை என அவளைத் துதிக்கிறோம். ஸ்ரீ க்ருஷ்ணன் பெண்மையின் குணாம்சத்தை வெளிப்படுத்துகையில் அவ்வாறாக அமைகிறான் என இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.krishnamaya

ஆணானாலும் பெண்ணானாலும் இருவர் உடம்பிலுமே ஆண்பெண் ஹார்மோன்கள் இருப்பது, அவற்றின் விகிதாசாரம் அமைவதை ஒட்டியே ஆண், பெண் நிர்ணயம் ஆகிறது. ஆனாலும், பரஸ்பரம் ஆண் பெண் தன்மைகள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் உடற்கூறு விஞ்ஞானம் தெரிவிக்கிறது.

இதேபோல் அவசியமான தருணங்களில் தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் மாற்றிக்கொள்ளும் ஜீவராசிகளும் உள்ளன. மண்ணுக்கடியில் அடைகாக்கப்படும் நிலையில் உள்ள முதலையின் முட்டைகளுக்குள் வளரும் குட்டிகள் அவையவை வைக்கப்பட்டுள்ள அடுக்குகளின் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆணாகவும் பெண்ணாகவும் பிறவி எடுக்கின்றன. சில தாவரங்களிலும் ஆண் பெண் தன்மைகள் ஒரு சேர இருந்து எப்போது எது அவசியப்படுகிறதோ அப்போது அது வெளிப்படுவதாக இருக்கிறது. .இவ்வளவும் சொல்லக் காரணம், ஸ்ரீ க்ருஷ்ணனே அவசியம் கருதி மஹா மாயையாகவும் இருக்கிறான் என்பதை நினைவூட்டத்தான்.

மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.

mahamaya2மாயையானது அசுத்தமானது, ஜீவாத்மாக்களுக்கே அது உரித்தானது என்றெல்லாம் எண்ணிப் புறந் தள்ளத் தேவையுமில்லை. அதிலும் இறைச் சக்தி உறைந்து இருப்பதை உணர்த்துவதற்காகத்தான் திருமாலின் செவி அழுக்கிலிருந்து வெளிப்பட்ட அசுரர் கதையைப் புராணம் சொல்கிறது. மேலும் அசுத்தம் அவசியமான உணவாகவும் சில ஜீவராசிகளுக்கு அமைகிறது.

மாயை என ஒன்று இருப்பதால்தான் பிரபஞ்சம் இருக்கிறது. அதன் இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் காரணமாகத்தான் இயற்கையின் மகத்தான சாதனைகளை அனுபவிக்க முடிகிறது.

சரி. இவ்வாறெல்லாம் மாயை செயல்பட வேண்டிய அவசியம் என்ன? இப்படியொரு லீலைக்கு என்ன அவசியம்?

இதற்கு விடை தேடித்தான் மெய்ஞ்ஞானிகள் காலங்காலமாக சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். விஞ்ஞானிகளும்தாம். நாத்திகர்களுக்குப் பிரச்சினை இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று போய்விடலாம்.

மாயை என்பது உறை நிலையில் உள்ள பிரும்மம் என்று ஸ்ரீ க்ருஷ்ணன் உணர்த்தியிருக்கிறான். இதில் உள்ள ஒரு நுட்பமான விஷயம், பிரும்மம் உறைநிலையில் இருக்கும்போதுதான் மாயையாக, சக்தியாக இயங்கி பலவற்றையும் தோற்றுவிக்கிறது !

பிரும்மம் இயக்க நிலையில் இருக்கிறபோது செயலற்றதாக அதாவது ஒருவர் சமாதி நிலையில் இருப்பதுபோல நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது!

முரண்பாடு போலத் தோன்றும் இந்த உண்மையை வார்த்தைகளால் புரியவைப்பது கஷ்டம். என்னை நான் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாதபோது மாயையாக இருக்கிறேன் என்று என் எஜமானன் ஸ்ரீ க்ருஷணன் சொல்வதைத்தான் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இறைச் சக்தி தன்னை பகிரங்கமாக வெளிப்படுதிக் கொள்ளாமல் மாயையான பிரபஞ்சத் தோறறங்களின் மூலம் தன் இருப்பை சூசகமாக உணர்த்துகிறது.

இதைப் புரிந்துகொண்டதால்தான் ஞானியர் ஜடப் பொருள் உள்ளிட்ட சகலத்திலும் இறைச் சக்தியைக் காண்கின்றனர். இதில் சுயமும் அடக்கம். மாயை என்று எதையும் தூஷிப்பதில்லை.

அத்வைதம், த்வைதம் இரண்டுமே இதில்தான் வந்து ஒடுங்குகின்றன.

sankara_madhva

நானே கடவுள் என்பது அத்வைதம் அல்ல. மாயையின் நிலையில் சகலத்திலும் பிரதிபலிக்கும் பிரும்மம் என்னுள்ளும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்தலே அத்வைதம். நீர்த்துளியில் சூரியன் பிரகாசிப்பதுபோல. நீர்த்துளி இருக்கும்வரை சூரியனும் அதில் இருக்கும். நீர்த்துளி உலர்ந்துபோகையில் அதில் உள்ள சூரியனும் மறையும். ஆனால் சூரியன், தொடர்ந்து விண்ணில் பிரகாசித்துக்கொண்டு இருக்கும்.

மாயா லீலையின் நோக்கம் பரிணாமம் என்றால் பரிணாமத்தின் நோக்கமும் அவசியமும் என்ன என்பது அடுத்த கேள்வியாகும்.

படிப்படியாக முதிர்ச்சிபெற்று இறுதியாக ஆன்மிகத்தில் முழுமையாகத் தோய்தலே அதன் நோக்கமும் அவசியமும் என்றால் அதற்கும்தான் என்ன அவசியம்? பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டு அரும்பாடுபட்டு மேலே ஏறிவரச் செய்யும் விளையாட்டு குரூரமாக அல்லவா இருக்கிறது?

முயற்சி செய், முயற்சி செய், முயற்சி செய்துகொண்டே இருஅதற்கான பயிற்சியே அது. நீச்சல் பழக வேண்டுமெனில் நீரில் தள்ளிப் பழக்குகிற மாதிரி.

சிரத்தையும் விடா முயற்சியும் இருந்தால் மாயையின் இறுதி நோக்கமும் அவசியமும் மறைந்திருக்கிற பிரபஞ்ச ரகசியம் புரிந்துவிடும். இன்றைய விஞ்ஞானம் அதை நோக்கித்தான் வெகு விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குள் மனிதன் தனது அகந்தையாலும் பேராசையாலும் பொறுப்பினைமையாலும் சூழலை நாசம் செய்து காரியத்தைக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.

மஹா மாயையின் லீலா வினோதங்களை நாம் அனுபவித்து மகிழலாம் (வலி, வேதனைகள் உள்படத்தான்! உடல் நோவையும் பிற துயரங்களையும் அனுபவிக்க நேர்கையில் பெரியவர்கள் தமது கர்ம வினைகள் கரைந்து போவதாகவே அதனைக் கருதி மகிழ்கின்றனர். இறைச் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மற்றவர்கள்தான் இதற்கு மாறாக ஆண்டவனே உனக்குக் கண்ணில்லையா என்று புலம்புகின்றனர்).

அதன் ரகசியம் புரிந்தாலும் பிறருக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. அவரவரும் தாமே முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயமிது. வாதப் பிரதிவாதங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.

ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்.

15 Replies to “மாயையை அறிதல்”

 1. //நானே கடவுள் என்பது அத்வைதம் அல்ல. மாயையின் நிலையில் சகலத்திலும் பிரதிபலிக்கும் பிரும்மம் என்னுள்ளும் பிரதிபலிக்கிறது என்பதை உணர்தலே அத்வைதம்.//

  வணக்கத்திற்குரிய மலர்மன்னன் ஸ்வாமி,

  தங்களின் விளக்கங்கள் மிக நன்றாக உள்ளன.. தாங்கள் மேன் மேலும் அத்வைதம் பற்றிய விளக்கங்களை நல்ல தமிழில் எழுத வெண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்..

 2. இவ்வளவு தெளிவான விளக்கங்கள் தமிழில் யாரும் கொடுத்திருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாயை என்பது சக்தியின் பெயராகவே நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

  கிணற்றில் தள்ளிவிட்டு அதன்பிறகு மேலே ஏறிவர பயிற்சி செய்யனுமா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்பதே உண்மை. கிணற்றில் ஏன் தள்ளிவிடப்பட்டோம் என்பதை யாரும் சரிவர சொல்லவில்லை. முற்பிறவி வினை என்று சொல்லும் அன்பர்கள், முதல் பிறவி ஏன் வந்தது என்பதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை.

  எனவே, நாம் நீண்ட காலம் யோசித்தாலும், ஏதோ ஒரு மிகப்பெரிய சக்தியின் கரங்களில் , நாம் ஒரு கருவியாகவே செயல்படுகிறோம் என்பது மட்டும் புரிகிறது. இந்த விளையாட்டு ஏன் என்பது புரிபடவில்லை.

  புரிந்துகொண்ட சிலரால், மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை. ஏனெனில், மனிதனின் மொழிக்கு , ஏராளமான எல்லைகள் உண்டு. தான் மட்டுமே அறியலாம். பிறருக்கு உணர்த்தினாலும் ,பிறர் புரிந்து கொள்ள முடியாதபடி ஏதோ தடுக்கிறது . அது என்ன ?

  பெரியவர் மலர்மன்னன் அவர்களுக்கு நமது நன்றிகள் பலப்பல.

 3. Pranams Shri Malarmannan ji.
  It is a privilege to read such an article, with such a clarity. Thank you Sir.

 4. பெரியவர் மலர்மன்னன் அவர்கள் மாயையைப் பற்றிச் சிந்திக்க ஒரு நல்ல வாய்ப்பைத் தந்த்துள்ளார்.

  சைவசித்தாந்தத்தில் மாயை என்பது உள்பொருளே. அது சிவத்துக்கு வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் பரிக்கிரகசத்தியாக உள்ளது. அதன் இருப்பிடம் சிவசத்தி. சிவசத்தி சிவத்துடன் சமவாயம் அல்லது அபின்னாசத்தி. பானையை வனையும் குயவன் போல சிவம் பிரபஞ்சத் தோற்றத்துக்கு நிமித்தம் அல்லது கருத்தா. குயவனின் தண்டசக்கரம்போல சிவசத்தி பானை வனைய துணை அல்லது கருவி காரச்ணம் பானைக்கு மண் முதல் அல்லது உபாதானகாரணம் போல் பரிக்கிர்கசத்தியாகிய மாயை பிரபஞ்சதிற்கு முதற்காரணம். பானை உடைந்தால் மண் ஆகும். பிரபஞ்சம் சர்வசங்காரத்தில் மாயையில் ஒடுங்கி சிவசத்தியில் அடங்கி சிவத்துடன் ஒன்றாகும். புனருற்பவத்தில் சிவசத்தி சிவத்திலிருந்து வெளிப்பட்டு பரிக்கிரகசத்தியாகிய மாயையைத் தொழிற்படுத்தி பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும். உள்ளதே தோன்றும் என்பது சைவம் கூறும் சற்காரியவாதம். பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில் உயிர் பெறும் அனுபவமும் பொய்யோ போலியோ அன்று என்பது சைவத்தின் கொள்கை

  பிரபஞ்சத் தோற்றத்துக்கு முண்டகோபநிஷத் கூறும் ஊர்ணநாபி உவமானத்துக்கு பீறர் கூறுவதற்கு வேறான பொருள் சைவம் கொள்ளும். சிலந்தியின் வலை சிலந்திப் பூச்சியின் எச்சிலில் தோன்றுவதாகும். ந்ச்சில் சிலந்தியின் உடம்பிலிருந்து வருவதுதான். ஆனால் உயிரில்லாத சிலந்தியின் உடம்பிலிருந்து எதுவும் தோன்றாது. சில்ந்தியின் உடம்பு போன்றது பரிக்கிரகசத்தியாகிய மாயை. அதன் எச்சிலில் தோன்றிய வலைதான் பிரபஞ்சம். எச்சில் தோன்றுவதற்கு நிமித்தகாரனமாக சிலந்தியின் உயிர் இருப்பதுபோலத்தான் மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றுவதற்கு சிவம் நிமித்த காரணமாக உள்ளது.
  அதே போல பிரபஞ்சம் பிரமத்தின் லீலை அல்லது விளையாட்டு என்பதற்கும் சைவம் வேறுவிதமாகப் பொருள் கொள்ளும். லீலை அல்லது விளையாட்டு என்பது எளிதாகச் செய்தல் என்றே பொருள்படும்.

  “குணங்களைக் கடந்தோய் எனினும் மாயையினைத்
  தோய்தலால் குணமுடையவன்போல்
  அணங்கொரு பாலுங் கறைமிடற் றழகும்
  அம்பகம் மூன்றுமாம் உருக்கொண்டு
  இணங்குறு நாமம் சிவன்” எனக் கொண்டு என சிவம் மாயையுடன் கலந்து உலகின் பொருட்டுத் தடத்த வடிவங்கொள்ளுதலை மஹாவித்துவ சிரோன்மணியாகிய அப்பைய தீக்ஷிதேந்திரர் சிவதத்துவ விளக்கத்தில் கூறுகின்றார்.
  சிவசத்தி வாயிலாக சிவம் மாயையில் கலந்து உய்ரின்பொருட்டு வேதம் ஆகமம் முதலியன் அருளினமையஃஅல் அருணகிரிப் பெருமானால் பரமாயை எனப் போற்றப்பட்டது. அந்தப் பரமாயையே ஓம் எனும் பிரணவம், குண்டலி என்றெல்லாம் பேசப்படுகின்றது.
  “மிகு பரமாகும்
  பரம மாயையி னேர்மையை யாவரும்
  அறியொ ணாததை நீகுரு வாயிது
  பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்”

  அருணகிரிநாதர் தமக்கு முருகப்பெருமான் செய்தருளிய உபதேசத்தின் பெருமையைத் திருப்புகழப் பாடல்கள் பலவ்ற்றில் மக்கள் பயன்பெறும் பொருட்டு எடுத்து உரைக்கின்றார். திருக்குடவாயில் திருப்புகழொன்றில் தாம் முருகக் கடவுளிடமிருந்து பெற்ற அந்த உபதேசத்தின் பெருமையை நினைந்து வியக்கின்றார்.

  ‘எவரும் அறிதற்கு அரிதாகிய அந்த உண்மையை, நீ, குருவாக வந்து , இந்த உலகமக்கள் பயன்பெற அவர்களுக்கு எடுத்து ஓதுமாறு எனக்குத் திருவருள் புரிந்தாய்! இந்தப் பேறு யான் முன்னைப் பிறப்புக்களிலே செய்த தவப்பயன் தானோ”

  என நன்றி பாராட்டுகின்றார்.

  வேதமாய், ஆகமங்களாய், இயற்றமிழ்த் தொகுதியாய், மக்கள் பேசும் மொழிகள் அனைத்தொடும் .சம்பந்தத்தை உடையதாய் , அனைத்தினுக்கும் அடிப்படையாய், நடுவாய், பற்றுக்கோடாய்,

  உலக சம்பந்தம் அனைத்தையும் விட்டுத் துறந்த நிலையதாய் அறமாய், நல்லொழுக்க வழியாய், அருள் நிரம்பிய ஞானிகள் அனுபவிக்கும் சுகப்பொருளாய், மேகமாய், மழையாய், சூரியமூர்த்தியாய், சந்திரனாய், தாரகையாய், ஆகாயவெளியாய், சோதியாய், பகலும் இரவும் அற்றதாய் நிலைத்துள்ளதாய், இவ்வாறெல்லாம் உள்ள பரம மாயையின் நேர்மையை முருகப் பெருமான் தனக்கு உபதேசித்ததாக அருணைமுனிவர் வியக்கின்றார்.

  மாயை அறிவை மறைப்பதோ மயக்குவதோ அன்று. மாயை திருவருளைக் காட்டுவது.

 5. எளிமையான ஆழ்ந்த கருத்துகளால் ஆன வ்யாசத்திற்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசய்.

  \\\\\\கனவானது கனவு காணும்வரை தத்ரூபமாகவே உள்ளது. விழிப்பு நிலை வருகையில்தான் கனவு என்பது உறைக்கிறது. \\\\\\\

  ஒரு நிஜ வாழ்க்கை சம்பவம். என் பந்து ஒருவருக்கு காலில் புரையோடிய புண் காரணமாக அவரது காலின் ஒரு பாகம் ரண சிகித்ஸை செய்து வெட்டப்பட்டது. புண்ணினால் சிகித்ஸைக்கு முன் மிகுந்த சரீர வேதனையை அவர் அனுபவித்தார். சிகித்ஸைக்குப் பின் முற்றிலும் குணமாகி வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் தூக்கத்தில் காலில் வலி வலி என முனகியுள்ளார். எழுப்பிய போது வியர்த்து விறுவிறுக்க எழுந்து காலில் புரையோடிய புண்ணுடன் வலிமிக ஆதுரசாலைக்கு சென்றதாக கனவு கண்டதாக சொன்னார். புண் சரியாகி விட்டது காலின் ஒரு பாகமே வெட்டப்பட்டது. ஆனால் கனவிலோ புண்ணும் வலியும் வேதனையும் ஜாக்ரதவஸ்தை வரும் வரை நிஜமே.

  என்னே மாயையின் ப்ரபாவம்.

  நன்றி ஸ்ரீ மலர் மன்னன். மங்களானி பவந்து.

 6. @ சு பாலச்சந்திரன்

  >>> கிணற்றில் தள்ளிவிட்டு அதன்பிறகு மேலே ஏறிவர பயிற்சி செய்யனுமா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை என்பதே உண்மை. கிணற்றில் ஏன் தள்ளிவிடப்பட்டோம் என்பதை யாரும் சரிவர சொல்லவில்லை. முற்பிறவி வினை என்று சொல்லும் அன்பர்கள், முதல் பிறவி ஏன் வந்தது என்பதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை.<<<

  தீ சூழ்ந்து கொண்டதை அறிந்துகொண்டதும் முதலில்
  தப்பித்துச் செல்ல முயல்வதே அறிவுடைமை.
  காரண ஆய்வு ஆபத்தை மிகுவிக்கும். நூல்களில்
  மாயை அநாதி என்றே விளக்கம் கூறப்படுகிறது

  தேவ்

 7. விடை தெரியாத கேள்விகள் ஏராளம். ஆனால் இந்த நிலையிலும் , சில பொய்யர்கள் இதுதான் ஒரே வழி, இது தான் ஒரே உண்மை, இது தான் ஒரே தீர்வு என்று தங்கள் அறியாமையின் மூலம் , எல்லைகளை வகுப்பதுடன், எல்லைகள் அற்ற பிரம்மத்திற்கு , குறுகிய எல்லைகளை வகுக்கும் திருப்பணியை செய்கின்றனர்.

  மாயை என்பது ஒரு அற்புதமான இறைவடிவே. மாயையுடன் எல்லா உருவங்களுமே நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உருவம் வழிபாட்டுக்கு மிக உகந்தது. உருவம் மூலம் செய்யப்படும் வழிபாடே மிக உயர்ந்தது. நிர்க்குண வழிபாடாகிய அருவ வழிபாடு பெரும்பான்மை மனிதர்களுக்கு ஏற்றதுஅல்ல. அருவ வழிபாட்டையும், உருவ வழிபாட்டையும் உலகில் மனித இனத்துக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியதில் இந்தியர்களின் பங்கு மறுக்கமுடியாதது.

 8. திரு மலர்மன்னன் அவர்களுக்கு

  மிக அழகான கட்டுரை. வைணவம் கூட சில விஷயங்களை கோடிட்டு காட்டுகிறது. இந்த பிரபஞ்சம் உருவாகப்படுவதர்க்கு முன்னால் மூலப் பிரக்ரிதி என்கின்ற செயலற்ற நிலையை வகுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதுவே மாயையின் வடிவு. பின் நீங்கள் கூறியுள்ளதை போல இந்த மூலப் பிரகிருதியே தன்னை பலவாறாக படைத்துக் கொள்கிறது. பெரு வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பாக இப்படி இருந்திருக்கக்கூடும்.

  பிறகு பலவாறாக தோற்றம் அளிக்கும் இந்த பிரபஞ்சத்தில் எதையுமே நாம் மாயை என ஒதுக்க வேண்டியதில்லை. பஞ்ச பூதங்களால் ஆன சரீரத்தை வைத்துக் கொண்டு, தனியாய் இருக்கும் பஞ்ச பூதங்களை கொண்டே நாம் இறைவனை நோக்கி முன்நகரலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கண்களால் அவனை தரிசித்து, செவிகளால் அவன் கதை கேட்டு, வாயினால் பாடி, அவன் உண்ட உணவை சுவைத்ததுண்டு, அவனுக்கும் சூட்டப்பட்ட மலர்களை தான் சூடிக்கொண்டு தர்மம், அதர்மம் புரிந்துக்கொண்டு இறைநிலை அடைதல் . அதனை தர்ம பூத ஞானம் என சொல்லப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் தள்ளப்பட்டாலும் நம் கடமைகளை செய்து கொண்டு பின்னும் அவனை நோக்கி முன்நகர்வதே இந்த சுழற்சியில் இருந்து வெளி வர வழி.

 9. //அதன் ரகசியம் புரிந்தாலும் பிறருக்கு வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது. அவரவரும் தாமே முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயமிது. வாதப் பிரதிவாதங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை.//

  உண்மையான எதார்த்தமான வரிகள் இவை. ஒரு முறை நூலகத்திலிருந்து ”திரிபுர ரகஸியம்” என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன் ஆனாலும் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை

 10. என்னை போன்ற சாமான்யர்களுக்கு புரிகிற வகையில் தெளிவாக எளிமையாக மாயை விளக்கியதற்கு மிகவும் நன்றி 🙂

  இது போன்ற விசயங்கள் நமது அடுத்த தலை முறையினறுக்கு நாம் எப்படி எடுத்து செல்வது என்பது இன்னும் மிகப் பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.

 11. மாயை வழி பயணம்
  மாயவன் உடன் பயணம்
  மௌனமும் மாயை
  சப்தமும மாயை
  சகலமும் மாயை
  மாயை எதுவென உணர்கையில் நீ கிருஷ்ணர்

 12. ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தத்துவியல்துறையில் பேராசிரியராக நான் பணி செய்கிறேன். இந்தியா வந்துள்ள எனக்கு இந்தத் தளம் ஆனந்தத்தைத் தருகிறது. மிக அருமையான தரமான படைப்புகள்.

  ஆனால், இந்த “மாயைய் அறிதல்” என்ற கட்டுரையின் பொதுப்புரிதல் ஓரளவு சரியாக இருந்தாலும், அத்வைதம் த்வைதம் உள்ளிட்ட தத்துவங்களைப் பற்றிக் கொடுத்திருக்கும் விளக்கங்கள் மிகவும் தவறு.

  இந்திய தத்துவம் பற்றி அறியாதவர்களை ஏமாற்றுவதுபோல் இருக்கிறது. தளம் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இந்தியா என்பதே ஒரு தத்துவம்தான். அந்த இந்தியாவில் தத்துவம் பற்றிச் சரியாகத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். உதாரணமாக, இதே தளத்தில் கட்டுரைகள் எழுதி உள்ள மயூரகிரி ஷர்மா மற்றும் Dr. முத்துக்குமாரசுவாமி ஆகியோர்.

  என் கருத்தைச் சரியான பார்வையில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  இந்திய வரலாறு தத்துவம் பற்றிய கட்டுரைகள் அதிகம் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *