எழுமின் விழிமின் – 3

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<—  முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ஆத்மீகத்தின் ஊற்றுமுகம்:

ஞானமானது வேறு எந்த நாட்டுக்கும் செல்லுமுன் இந்தப் புராதன பூமியையே தனது வீடாகக் கொண்டிருந்தது. கடலிலே கலக்கத் துள்ளியோடும் இந்த நாட்டு நதிகள் இந்த நாட்டு மக்களிடையே ஆத்மீக வெள்ளம் எப்படிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது என்பதை உணர்த்துகின்றன. இந்நாட்டில் சிரஞ்சீவியாய் எழுந்து நிற்கும் இமயமலை படிப்படியாக மேலெழுந்து, பனிமுடி அணிந்து, உயர்ந்து வானுலக ரகசியங்களை நோக்குவது போல உள்ளது. உலகில் எல்லாக் காலத்திலும் வாழ்ந்துள்ள முனிவர்களிலே மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பாரதம் இதுவே தான்.

இங்கே தான் முதன்முதலில் மனிதனின் தன்மையைப் பற்றியும், ஆத்மாவின் இயல்பைப் பற்றியும் ஆராய்ச்சிகள் துவங்கின. “மனிதன் நித்தியமான, சிரஞ்சீவியான ஆத்மா ஆவான். அனைவருக்கும் மேலான ஒரு கடவுள் உண்டு; அவர் இயற்கையினுள்ளும், மனிதனுக்குள்ளும், எங்கும் உறைகிறார்” என்ற உண்மைகள் இங்குதான் கண்டுபிடிக்கப் பெற்றன. சமயத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் சிகரமாக விளங்கக்கூடிய பல உன்னதமான கருத்துகளும் இங்குதான் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளன. ஆத்மீக ஞானமும் தத்துவ ஞானமும் இந்த நாட்டிலிருந்துதான் பொங்கித் தாவும் அலைபோல மீண்டும் மீண்டும் வெளியே பாய்ந்து உலகத்தை வெள்ளக் காடாக்கின.

தெய்வநிலை எய்தப் போராட்டம்:

எத்தகைய அற்புதமான நாடு இது! இந்தப் புனித நாட்டில் ஒருவர் நிற்பாராயின், அவர் அந்நியராயினும், அன்றி இந்த மண்ணின் மைந்தராயினும், அவரது ஆத்மா கொடிய விலங்கு நிலைக்குத் தாழ்ந்திராவிடில் அவர், உயிர்த்துடிப்புள்ள சிந்தனை உள்ளம் தன்னைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளதை உணருவார். அது இந்தப் பூமியின் மிகச் சிறந்த, மிகத் தூய்மையான மைந்தர்களின் உயிர்ச் சிந்தனையாகும். அந்த மைந்தர்கள் நூற்றாண்டுகளாக மனிதனை மிருக உணர்ச்சி நிலையிலிருந்து தெய்வநிலைக்கு உயர்த்தப் பணிபுரிந்தார்கள். அவர்களது முதல் தோற்ற காலத்தைக் கண்டுபிடிப்பதில் சரித்திரம் தோல்வியுற்று விட்டது.

இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம். நீதிநெறி ஒழுக்கத்துக்கும் ஆத்மீகத்துக்கும் புனிதமான இடம். தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. மிருக இயல்பாகிற ஆடையை மனிதன் கழற்றி எறிந்து விட்டு அமர ஆத்மாவாகப் பிறப்பு இறப்பு அற்றவனாகவும், எப்பொழுதுமே அருள் பெற்றவனாகவும் விளக்கம் பெற்று எழுந்து நிற்கத் தேவையான பயிற்சிக் களமாக விளங்கும் இந்த நாடு, புனித நாடாகும். மகிழ்ச்சியாகிற பாத்திரம் என்றுமே நிரம்பியிருந்த நாடு இது. அதைவிடத் துன்பமும் நிரம்பித் ததும்பியிருந்தது இங்கே. கடைசி முடிவாக மனிதன் இவையெல்லாம் வெறும் பொய்த் தோற்றம் எனக் கண்டுகொண்டான். முதன் முதலில், இங்கே தான் அவன் அதனைக் கண்டான். இங்கேதான் முதன் முதலாக மனிதன் தனது காலை இளமையிலே,  போகத்தின் மடிமீது கிடந்த போது சக்தி நிரம்பிப் புகழ் ஓங்கியிருந்த நிலையில், மாயையின் விலங்குகளைத் தகர்த்தெறிந்து வெளியேறினான்.

இங்கே, இந்த மனித சமூகக் கடலுக்கிடையே, சுகம்-துக்கம்; பலம்-பலவீனம்; செல்வம்-ஏழ்மை; மகிழ்வு-வருத்தம்; சிரிப்பு-கண்ணீர்; வாழ்வு-சாவு ஆகிய பலமான கடுஞ்சுழல்கள் ஒன்றையொன்று தாக்குவதன் இடையில் எல்லாம் உருகி இணைந்து, அமர சாந்தியும் அமைதியும் நிலவும் வண்ணம் துறவறத்தின் சிம்மாசனம் எழுந்தது.

இங்கே இந்த நாட்டில் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய பெரும் பிரச்சினைகளை முதன் முதலில் ஆணித்தரமாகப் பற்றிப் பரிகாரம் கண்டார்கள். வாழவேண்டுமென்ற தாகத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள். வாழ்க்கையை எப்படியாவது பாதுகாப்பதற்காக மனிதன் பித்துப் பிடித்துப் போராடி அதன் விளைவாகத் துன்பங்களைச் சேர்த்துக் குவித்துக் கொண்டான். இந்தப் பிரச்சினையும் ஆராயப்பட்டுத் தீர்க்கப்பட்டது. இந்த நாட்டில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதைப் போல அதற்கு முன்னர் எங்குமே தீர்க்கப்பட்டதில்லை. இனி வருங்காலத்திலும் தீர்க்கப் படாது. ஏனெனில் இங்கேதான் உண்மையாக உள்ள ஒரு பொருளின் தீய நிழல்தான் வாழ்க்கை என்று கண்டுபிடித்தார்கள்.

இந்த ஒரு நாட்டில்தான் சமயம் நடைமுறையில் வாழ்ந்து காட்டக் கூடியதாக உண்மையானதாக அமைந்தது. பிறநாடுகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் தம்மைவிட பலம் குறைந்த சகோதரர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கையின் போகங்களை அனுபவிப்பதற்காகக் கண்மூடித்தனமாகப் பாய்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் மனிதர்கள், ஆண்களும் பெண்களும், பேருண்மை ஒளியைத் தம் அனுபூதிச் செல்வமாகப் பெறுவதற்காகவே துணிவுடன் இறங்குகிறார்கள்.

இங்கே, இந்த நாட்டில் மட்டுமே, மனித உள்ளமானது மனிதர்களை மட்டுமல்ல, பறவைகளையும், மிருகங்களையும், செடி கொடிகளையும் தன்னுடன் சேர்த்து அரவணைக்கும் அளவுக்கு விரிவடைந்தது. மிக உயர்ந்த கடவுளர் முதல் சிறு தூசு வரை மிக உயர்ந்தோரும் மிகத் தாழ்ந்தோரும், எல்லோருமே மிக விரிவாக அகன்று, நீண்டு, ஓங்கி வளர்ந்த மனித உள்ளங்களில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் இங்குமட்டுந்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து எல்லாமே தொடர்புடைய ஒரே பொருள் தான் எனவும், பிரபஞ்சத்தின் நாடித் துடிப்பு, தன் சொந்த நாடித் துடிப்புதான் எனவும் கண்டார்கள்.

“சாது ஹிந்து”

நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை. “சாது ஹிந்து” என்ற சொல் வசைச் சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப் பெறுகிறது. ஆனால் ஒரு நிந்தனைச் சொல்லில் எப்பொழுதாவது அருமையான ஓர் உண்மை மறைந்திருக்குமாயின், அப்படிப்பட்ட சொல்தான் இந்தச் “சாது ஹிந்து” என்ற சொல். எப்பொழுதுமே “சாது ஹிந்து” கடவுளின் அருள்பெற்ற குழந்தை ஆவான்.

முற்காலத்திலும், இக்காலத்திலும், மிக்க பெருமை வாய்ந்த கருத்துக்கள் வலிமை வாய்ந்த பெருமை மிக்க இனத்தவரிடமிருந்து தோன்றி வந்துள்ளன. முற்காலத்திலும் இக்காலத்திலும் ஆச்சரியமான கருத்துக்கள் ஓர் இனத்திலுருந்து மற்றோர் இனத்துக்குக் கொண்டுசேர்க்கப்பட்டு வந்துள்ளன. முற்காலத்திலும், இக்காலத்திலும், பேருண்மைகள், சக்தி ஆகியவற்றின் விதைகள், முன்னேறிச் செல்லும் தேசீய வாழ்க்கை அலைகளால் வெளிநாடுகளில் விதைக்கப் பெற்றன. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள்! அக்கருத்துக்கள் யுத்த பேரிகைகளுடன், அணி வகுத்துச் செல்லும் போர்ப் படைகளின் துணையுடன் சென்று பரவின. ஒவ்வொரு கருத்தையும் இரத்த வெள்ளத்தில் ஊறவைக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லையும் லட்சக்கணக்கானவர்களின் புலம்பலும், அநாதையாக்கப் பட்டவர்களின் அலறலும், விதவைகளின் கண்ணீரும் பின் தொடர்ந்து சென்றன. முக்கியமாக மற்ற நாடுகளின் வரலாறு இதனைக் கற்பிக்கின்றது.

கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப் புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்று வரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணிவகுத்து வெளியே சென்றன. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆரம்பத்தில் சாந்தியும் முடிவில் வாழ்த்தும் சேர்த்துக் கூறப்பட்டது. நாம் ஒருபோதும் பிற நாடுகளைப் பலாத்காரமாகப் பிடித்ததே இல்லை. அதன் காரணமாகவே பேரருள் பெற்று வாழ்கின்றோம்.

அமரபாரதம்:

முன்னொரு காலத்தில் பெரிய கிரேக்கப் படைகள் அணி வகுத்து வரும் ஒலிகேட்டு உலகம் நடுங்கியது. ஆனால் கிரேக்கர்களின் அந்தப் பழமையான நாடு அடியோடு அழிந்து விட்டது. பின்னால் ஒரு கதை சொல்லக்கூட எஞ்சியிராத நிலையில், நிலப் பரப்பிலிருந்து அது மறைந்து விட்டது. ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் கழுகுக் கொடி உலகின் பெருமை வாய்ந்த தேசங்கள் அனைத்தின் மீதும் பறந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோம் நாட்டின் சக்தியை மக்கள் உணர்ந்தார்கள். மனிதகுலம் தலைதூக்க முடியாதபடி அந்தச் சக்தி அழுத்தி வந்தது. ரோமின் பெயர் கேட்டு உலகமே நடுங்கியது. ஆனால் அவர்களின் காபிடலைன் மலை (புராதனக் கோயில்) இன்று இடிபாடுகளின் குவியலாகத்தான் இருக்கிறது. சீஸர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலை பின்னுகின்றன. மற்ற நாடுகளும் இது போலவே புகழோடும் சிறப்போடும் தோன்றி மறைந்தன; சில மணி நேரம் ஆரவாரக் களிப்புடன், சுகபோகம் பெருகி வாழ்ந்து, பிறரை ஆக்கிரமித்துத் தீய முறையான தேசீய வாழ்வில் மூழ்கி, நீர்ப் பரப்பின் மீது தோன்றும் குமிழிகள் போல மாய்ந்து மறைந்தன.

ஆயினும் இன்றும் நாம் வாழ்கிறோம். இன்று மனு மீண்டும் வந்தால்கூட திகைப்படைய மாட்டார். இந்த நாடு அவருக்குப் புதிதாகத் தோன்றாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒழுங்குறச் சீர்படுத்தப் பெற்று, சிந்தித்து அமைக்கப்பட்டு வந்த அதே சட்டங்கள் சிற்சில இடங்களில் மட்டும் மாற்றம் பெற்று இன்றும் புழக்கத்தில் உள்ளன. நமது முன்னோர்களின் நுண்ணிய பகுத்தறிவின் விளைவாகவும் பல நூற்றாண்டுகளின் அனுபவ வாயிலாகவும் தோன்றிய பழக்கவழக்கங்கள் சாசுவதமானவை போல் அப்படியேயிருக்கின்றன. அன்றியும் காலம் போகப்போக, அவற்றை துரதிர்ஷ்டம் தாக்கத் தாக்க, அந்தத் தாக்குதல்கள் ஒரே ஒரு பலனைத்தான் உண்டாக்கினதாகத் தோன்றுகிறது – அஃதாவது, அப்பழக்க வழக்கங்கள் மேலும் வலிமை பெற்று நிலைத்துவிட்டன. இதற்கெல்லாம் மையப்புள்ளி, இரத்த ஓட்டத்தின் ஊற்றான இருதயம், தேசீய வாழ்க்கையின் ஊற்று, நமது சமயம்தான். உலகில் நான் பெற்ற அனுபவத்துக்குப் பிறகு கூறுவதை நம்புங்கள்.

பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது பழைய நிலையிலேயே வாழ்கிறது. அதன் வாழ்க்கை ஆத்மாவின் வாழ்க்கையைப் போன்று ஆரம்பமும் முடிவும் அற்று, அமர நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டின் புதல்வர்களே நாம்.

(தொடரும்)

அடுத்த பகுதி –>

5 Replies to “எழுமின் விழிமின் – 3”

 1. //ஞானமானது வேறு எந்த நாட்டுக்கும் செல்லுமுன் இந்தப் புராதன பூமியையே தனது வீடாகக் கொண்டிருந்தது.// என்கிற சொற்றொடர், ஸ்வாமி விவேகானந்தரின் உள்ளக்கிடக்கையைத் தெளிவுப் படுத்துகிறது.

  இங்கு ஆரியரின் வருகை மற்றும் ஆரியரின் தோற்றம் பற்றிய எல்லாம் அடிபட்டுப் போகின்றன. ஏனெனில் ‘எழுமின் விழிமின் 2’ ல், ‘ஆரியர் இந்தியரா அல்லது உலகின் வேறு ஏதோ ஒரு பகுதியிலிருந்து வந்தவரா என்கிற விவாதம் தேவையற்றது’ என்கிற பொருளில் ஸ்ரீ ஸ்வாமிஜி கருத்தளித்திருப்பது புரிகிறது.

  ‘ஆரியம்’ என்பதை நல்லதொரு நாகரீகமாகவே அவர் எடுத்தாண்டிருக்கிறார் எனப் புரிகிறது. இதில் இன்று, நேற்றுப் பிறந்த மதங்களோ , மொழிகளோ சண்டையிட என்ன இருக்கிறதென எனக்குப் புரியவில்லை.

  உலகில், அன்றைய நிலையில், மிகச் சிறந்த நாகரீகமாக ஸ்வாமிஜி அவர்களால் குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய நாகரிகமே. அந்த ஞானம் எல்லா நாடுகளுக்கும் முன்னால் இந்தியாவிலிருந்தே பிற இடங்களுக்குப் புறப்பட்டது என்னும்போது, வெளி நாடுகளிலிருந்து நாகரீக வருகை இங்கு எங்கே?

 2. எந்தத் தலைப்புக்கு மறு மொழியிடப்பட்டது என்று தெரிந்து கொள்ளச் சிரமமாயிருக்கிற இந்த வகை அமைப்பு வேண்டாமே. முந்தைய வடிவமைப்பில் தலைப்புக்கள் தெரிந்தன. இப்போதையதில் மறுமொழியாளர் பெயர் தான் தெரிகிறதேயன்றித் தலைப்புத் தெரியவில்லை. மாற்றலாமே.

 3. ‘உண்மைப்பொருளின் தீய நிழல்தான் வாழ்க்கை’

  ‘கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே, இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப் புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்று வரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணிவகுத்து வெளியே சென்றன’

  ‘அப்படிப்பட்ட நாட்டின் புதல்வர்களே நாம்.’

  இதன் பெயர் தீர்க்க தரிசனம். இது போலச் சொல்ல ஸ்வாமி விவேகானனந்தரால்தான் முடியும். நாமும் சொல்வோம். நலம் பெறுவோம்.

 4. இந்து மதம் என்றும் வாழும்.உலகுக்கு நல் வழி காட்டும்.நாம் யாரையும் பாவிகள் என்று சொல்வதில்லை .நாம் யாருக்காகவும் மனித வெடிகுண்டுகளாக மாற வேண்டியதில்லை.தெரு முனையில் இருக்கும் ஒவ்வொரு கோயிலும் ஒரு சிலருக்கு வாழ்வாதாரம் தரும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது .ஒரு பூக்காரியின் குடும்பம் பிழைக்கிறது.இதுவே நம் பலம்.வீழ்த்த முடியாத பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *