அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

வ்வொரு மீட்டலிலும் சுருதியும் லயமும் ஜீவனும் சேர்த்து கோடானு கோடி சங்கீத ரசிகர்களின் உள்ளங்களை மீட்டிய அந்த உயிரின் இழை அறுந்து விட்டது. 1978ல் நம் இசை பிரபஞ்சத்துக்குள் வந்த மாண்டலின் என்ற வாத்தியம் எப்போதைக்குமாக ஆழ்மௌனத்தில் ஆழ்ந்து விட்டது. ஆனால் அது உயிர்ப்பித்து நடமாட விட்ட ஸ்வரங்களுக்கு அழிவில்லை. அவை என்றென்றும் இந்தப் புவியின் இசை மண்டலத்தில் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கும்.

ஆகஸ்டு 9 அன்று பெங்களூரில் உன்னதி அரங்கில் மகளோடு அமர்ந்து அவரது கச்சேரியைக் கேட்ட அந்தப் பசும் நினைவு கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் காலத்தின் கொடுங்கரம் ஸ்ரீனிவாஸை இந்த உலகத்திலிருந்து மறைத்து விட்டது. 45 வயதில் அவரது திடுக்கிடும் மறைவு பெரும் அதிர்ச்சி தருகிறது.

அவரது குடும்பத்தினரின், எண்ணற்ற இசை ரசிகர்களின் துயரத்திலும், இரங்கல்களிலும் இணைகிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

யுகங்களுக்கு ஒருமுறை தோன்றும் அமர கலைஞன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். அவர் புகழ் வாழ்க.

mandolin_srinivas

மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் தமிழகத்தின் கலைச் சொத்து என்பதில் யாருக்கேனும் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? பிரதமர் இரங்கல் தெரிவித்தார், தமிழ்நாடு முதல்வரும் ஆளுனரும், இன்னும் சில அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து விட்டனர். ஆனால், இவ்வளவு பெரிய ஒரு மகத்தான கலைஞனின் நினைவுக்கு செலுத்தப் படும் மரியாதை என்பது அவ்வளவு மட்டும் தானா? அவரது இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என்றோ அல்லது நடைபெற வேண்டும் என்றோ ஒருவர் கூட வாயைத் திறக்கவில்லையே என்று கேட்கிறார் நண்பர் Maayadhari Mysraj. அவரது ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் மரணமடைந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் இறுதிச் சடங்கு  கர்நாடக மாநில அரசு மரியாதையுடன் நடந்தது. முதல்வரே நேரில் கலந்து கொண்டார். எந்த ஒப்பீட்டின் படியும் யு.ஸ்ரீனிவாஸின் கலை சாதனையும், அவரது பிராபல்யமும் கூட, அனந்த மூர்த்திக்கு சிறிதும் குறைந்ததல்ல.. சொல்லப் போனால் பல மடங்கு அதிகமானது. மொழி, பிராந்திய, தேச எல்லைகள் கடந்தது. இந்த மகா கலைஞனின் மறைவுக்கு கலை உலகம் முழுவதுமே கண்ணீர் உகுக்கிறது. லதா மங்கேஷ்கர், தபலா ஜாகீர் உசைன் தொடங்கி இளையராஜா வரை தங்கள் இரங்கல்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்..

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது பெற்றிருந்தார் என்பதால் அவரது இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை கிடைத்தது. மற்றபடி, இது வரை தமிழ் நாட்டில் அரசியல்வாதி அல்லாத, சினிமாக் கலைஞர் அல்லாத எந்த சாதனையாளருக்காவது மரணத்தின் போது அரசு மரியாதை கொடுக்க பட்டிருக்கிறதா? என் நினைவு தெரிந்து இல்லை. நமது மாநில அரசின், சமூகத்தின் கலாசார மொண்ணைத் தனத்தின் அளவு அத்தகையது.

இந்தக் கலைஞனின் மரணத்தை ஒரு சாக்காக வைத்தாவது அதை மாற்றுவோம். இதை தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையாகவே முன் வைப்போம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

மைசூர்: 16 வயதில் கச்சேரி – 1985

நேர்காணல் (சன் டி.வி) – ஜூலை 2014

7 Replies to “அஞ்சலி: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்”

 1. ம்ம்ம்ம்ம், அவர் வந்த வேலை முடிந்துவிட்டது. இறைவன் அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டான். 🙁 அதிர்ச்சி கலந்த வருத்தம் தான். இன்னும் மறையவில்லை.

 2. மிகுந்த மன வருத்தம் அளிக்கும் செய்தி.

  எல்லைகளைக் கடந்த இவரது இசை அழியாது வாழும்.

 3. மகத்தான மனிதர்கள் நெடு நாள் வாழ்வதில்லை என்ற கூற்று மாண்டலில் ஸ்ரீ நிவாஸ் அவர்கள் விடயத்தில் உண்மையாகிவிட்டது. அந்த அமர கலைஞனுக்கு தமிழக அரசுமரியாதையோடு இறுதிசடங்குகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்ற ஸ்ரீ ஜடாயு அவர்களின் ஆதங்கம் நியாயமானது. ஒரு கலைஞரால் தலைமையேறு நடத்தப்படும் தமிழக அரசு இதை உணராதது நமது துரதிர்ஷ்டமே.
  நாதவிந்துகலாதி நமோ நமோ
  சிவசிவ

 4. சந்த வசந்தத்தில் கண்டது (இயற்றியவர்: வெண்பா விரும்பி)

  (அறுசீர் விருத்தம் )

  ஆண்டவனின் கீதமிதோ எனக்கேட்போர் வியப்புறுமாறழகு கூரத்
  தாண்டவமா டெழு சுரத்தாற் பலசிறப்பார் பண்ணிசையைத் தந்திமீட்டி
  மாண்டலின்வாய்த் தந்துவந்த புகழ்ச்சீனி வாசாபார் வருந்த இன்று
  மாண்டதுன துடலாயின் நினக்குரிய தனிப்பெருஞ்சீர் மறையா தீண்டே

  (வேறு)

  (நேரிசை வெண்பா)

  வெல்லு மதித்திறனு மேடையாண் மேதையுஞ்
  சொல்லி லடங்காச் சுநாதமும் – புல்லவந்த
  பூமே வனையின் புதல்வனிவன் போலொருவன்
  பூமே லெழுவதெப் போது

 5. எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனாலும் நான் கேட்ட ஒரே இசை நிகழ்ச்சி ஸ்ரீனிவாசன் மாண்டலின் இசை தான். ஆனால் நம் நாட்டில் அரசு மரியாதை வேண்டும் என்றால் ஒரே வழி சினிமா சினிமா தான். வாழ்க தமிழ் சினிமா! வாழ்க சினிமா ரசிகர்கள். கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கஷ்டப்பட்டு டி. எம். எஸ். பாடிய பாட்டுக்கு வாய் அசைத்த “எம், ஜி, ஆர்.” நம் முதல்வர்.

  வாழ்க தமிழ் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *