– கிரைம் நாவல் மன்னர்
ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்
தமிழின் முன்னணி எழுத்தாளரும் கிரைம் நாவல் மன்னருமான
திரு. ராஜேஷ்குமார் அளித்த சிறப்பு நேர்காணலின் இரண்டாம் பகுதி இது…
காண்க: முதல் பகுதி
உங்களது சமகால எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுடன் உங்கள் உறவு எப்படி?
என்னைப் பொருத்த வரை நான் யாரையுமே போட்டியாகக் கருதவில்லை. அவர்கள அனைவருமே என்னைப் பார்த்து பிரமித்தனர். ஒருமுறை சுரேஷ்- பாலா (சுபா) இருவருமே என்னிடம் கையில் ரேகை பார்த்தார்கள். ஏன் என்று கேட்டபோது, “இவ்வளவு எழுதுகிறீர்களே, கையில் ரேகைகள் இருக்கிறதா, அழிந்துவிட்டதா என்று பார்த்தேன்” என்றார்கள்.
பலவிதக் கருத்துக்களில், விதவிதமாக எழுதுவது எப்படி கேட்கும் பல எழுத்தாளர்கள், என்னை எழுத்து இயந்திரம் என்று வர்ணிப்பார்கள். எனது ஆயிரமாவது புதினத்தை (டைனமைட் 98) எழுதியபோது பட்டுக்கோட்டை பிரபாகர், “ராஜேஷ்குமாரின் புதினங்களின் தலைப்புகளை எழுதினாலே நீண்டநேரம் ஆகும். எப்படி இவற்றை எழுதுகிறார்?” என்று பாராட்டினார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எனது நலம் விரும்பி. அவர் என்னிடம் ஒருமுறை சொன்னார்: “ராஜேஷ்குமார் நீ வாசகர்களைப் படிக்க வை; பிறகு நாங்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொள்கிறோம்” என்று. ஆரம்பநிலை வாசகர்கள் என்னிடம் துவங்கி பிற்பாடு மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் படிப்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சுஜாதா ஒருமுறை கூறுகையில், “ராஜேஷ்குமார் வேகமாக எழுதுகிறார். அதே சமயம் விவேகமாகவும் எழுதுகிறார்’’ என்றார். எனது வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் அவர்.
இந்த இலக்கியப் பயணத்தில் உண்மையில், என்னுடன் ஓடி வந்தவர்கள் யார் என்றோ, எனக்குப் பின்னால் ஓடி வருபவர்கள் யார் என்றோ பார்க்கவே நேரமின்றி நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்கு முன்னே யாரும் இல்லை என்பது தான்.
உங்களது புதினங்களில் துப்பறிவாளராக வரும் விவேக், அவரது மனைவி ரூபலா, காவல்துறை அதிகாரி கோகுல்நாத் ஆகியோரை எவ்வாறு உருவாக்கினீர்கள்?
எனது புதினங்களில் தொடர்ந்து வரும் கதாபாத்திரங்கள் அவர்கள். சங்கர்லாலின் தாக்கம் இதில் உண்டு. குற்றப் புலனாய்வில் ஈடுபடும் நிபுணர் ஒருவரை கதையில் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது காவல்துறையில் உள்ள எனது நண்பர் விவேகானந்தனிடம் பல ஆலோசனைகள் பெற்றுப் பயன்படுத்தி வந்தேன். எனவே அவர் பெயரைப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன்.
தவிர, நான் சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தன். நான் படித்ததே ராமகிருஷ்ண வித்யாலயம் பள்ளியில் தான். கோவையில் தேவாங்கர் பள்ளி அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் எனது வாழ்வில் முக்கிய இடம் வகிப்பது. அங்குதான் இலவச தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்து முன்னேறினேன். அங்கு படிக்கும்போது ராமகிருஷ்ணர் பற்றிய பிரார்த்னைகளைப் பாடுவோம். அப்போதே சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. அவரது உபதேசங்களே என் வாழ்க்கையில் முன்னேற உந்துசக்தி. எனவே விவேகானந்தர் நினைவாகவும், எனது நண்பருக்கு நன்றிக்கடனாகவும் அவர் பெயரைச் சுருக்கி ‘விவேக்’ என்று எனது புலனாய்வு நிபுணருக்கு பெயர் சூட்டினேன். அவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
சில வருடங்கள் கழித்து விவேக்கிற்கு திரும்ணம் செய்வதாக ஒரு புதினத்தில் எழுதியபோது அவரது மனைவியாக உருவாக்கப்பட்டவர் ரூபலா. இப்பெயர் எனது வாசகி ஒருவரது பெயராகும். ஒருமுறை மதுரை சென்றபோது விடுதி ஒன்றில் வரவேற்பாளராக இருந்த ரூபலா என்ற பெண்ணைச் சந்தித்தேன். அவர் எனது வாசகி என்பது தெரியவந்தது. விடுதியில் இடம் இல்லாதபோதும் எனக்காக சிரமப்பட்டு ஓர் அறையை எனக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். அப்போது எனது பெயரை உங்கள் புதினத்தில் மறக்க முடியாத பெயராகக் கொண்டுவர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று அவரது பெயரையே விவேக்கின் மனைவியாக்கினேன். ஆனால் அதன்பிறகு அந்தப் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. அவர் அங்கிருந்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்கள். அவர் எனது கதையில் தனது பெயர் சேர்க்கப்பட்டதைப் படித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது எனக்கு வருத்தம் தான். இதையே, ‘கல்கி’ வார இதழில் இரண்டாண்டுகளுக்கு முன் ‘எங்கே அந்த ரூபலா?’ என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக எழுதினேன். இன்றும் அந்த வாசகியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதேபோல, காவல்துறையில் சிபிசிஐடி அதிகாரியாக கோகுல்நாத், இளமைத் துடிப்பான விஷ்ணு கதாபாத்திரங்களை தேவைக்கு ஏற்ப உருவாக்கினேன். ஒரு சுவாரசியமான சம்பவம். விவேக்- ரூபலா திருமணம் குறித்து நகைச்சுவையாக ஓர் அறிவிப்பை நண்பர் ஜீயேவும் நானும் திட்டமிட்டு ‘கிரைம்’ நாவலில் வெளியிட்டோம். அதை உண்மையென்று நம்பி ஆயிரக் கணக்கில் பலநூறு வாசகர்கள் மொய் அனுப்பினர். அவற்றை எல்லாம் திருப்பி அனுப்பினோம். அந்த அளவிற்கு விவேக்- ரூபலா கதாபாத்திரங்கள் வாசகர்களுடன் ஒன்றிக் கலந்துவிட்டன.
சிறுகதை, புதினம் – இதில் எதை எழுதுவது சிரமம்?
சிறுகதை தான். ஏனெனில், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கதைக் கருவைச் சுற்றிவந்து கதையை எதிர்பாராமல் முடித்துவிடுவதென்பது சிரமம். அது கிட்டத்தட்ட மருத்தை அடைத்திருக்கும் ‘கேப்சூல்’ போன்றது. ஆனால் புதினத்தை நீங்கள் விருப்பம் போல வளர்க்கலாம். கால்பந்தாட்ட மைதானத்தில் பந்தை உதைத்தபடி அங்குமிங்கும் கொண்டுசெல்வது போல, கதைக் கருவைப் பின்னிப் பிணைத்து, சம்பவங்கள், திருப்பங்களை உருவாக்கி, வாசகரைத் திகைக்கச் செய்யலாம். புதினத்தில் புதிய பாத்திரங்களை அறிமுகம் செய்யலாம். சிறுகதையிலோ, குறைந்த கதைமாந்தர்களே போதும்.
நீங்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் உங்களிடம் இருக்கின்றனவா?
இல்லை. நான் ஆரம்பகாலத்தில் எழுதும்போது இந்த அளவிற்கு வளர்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. காலம் செல்லச் செல்லத் தான் எனது எழுத்துகளை பத்திரப்படுத்துவதன் அவசியம் புரிந்தது. இதுவரை 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 1,500க்கு மேற்பட்ட புதினங்களையும் எழுதி இருக்கிறேன். ஆனால், இவற்றில் சுமார் 300 புதினங்கள் இப்போது என்னிடம் இல்லை. அவற்றை வெளியிட்டவர்களில் பலரும் இப்போது இல்லை. ஆனால், நான் எழுதிய படைப்புகளின் பட்டியல் என்னிடம் உள்ளது.
எனது வெற்றிக்கு பென்னும் பெண்ணும் தான் காரணம்
சாதனை எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது வெற்றிக்கு பென்னும் (PEN), பெண்ணும் (மனைவி) தான் காரணம் என்கிறார். “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்; எனது வெற்றிக்குப் பின்புலமாக இருப்பவர் எனது மனைவி தனலட்சுமி தான்” என்கிறார். அவரது மனைவியோ, ஒன்றரை மணிநேரம் நீண்ட கணவரின் நேர்காணலின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலுடன் கேட்டபடி கதவருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார்.
இவர்களது அன்பான இல்லறத்தின் கனிகளாக, கார்த்திக்குமார், ராம்பிரகாஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் வங்கியிலும், இன்னொருவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் சென்னையில் பணிபுரிகின்றனர்.
ரங்கசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனான ராஜகோபால் (பிறந்த தேதி: 20.03.1947) எழுத்துலகில் ராஜேஷ்குமார் ஆனது தனிக்கதை. வாழ்க்கையில் வெல்ல தனி பாணி மட்டுமல்ல, பிரத்யேகப் பெயரும் தேவை என்பதை ராஜகோபால் உணர்ந்திருந்தார்; ராஜேஷ்குமாராக மாறினார்.
இவரது எழுத்துலக வாரிசாக குடும்பத்தில் யாரும் உருவாகவில்லையா என்று கேட்டால், “எழுத்து இறையருள், அதைத் திணிக்க முடியாது” என்கிறார் ராஜேஷ்குமார். ஆனால், தனது மகன்வழிப் பேரனான ஸ்ரீவத்சனிடம் கதை சொல்லும் திறமை ஒளிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறார்.
“எனது மரபணு அவனிடம் இருக்கலாம். அவன் பள்ளியில் தானாகக் கூறிய ஒட்டகச் சிவிங்கி கதையைக் கேட்டு விசாரித்தறிந்த சென்னை பள்ளி நிர்வாகத்தினர், ராஜேஷ்குமாரின் பேரன் அவன் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்த்துடன், என்னை அவர்களது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தனர். பேரனால் கிடைத்த கௌரவம் அது” என்று நெகிழ்கிறார்.
இவ்வளவு எழுதி இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. எனது எழுத்துலக வாழ்வு திருப்திகரமானது. 40 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் என்னை பத்திரிகைகள் எழுதச் சொல்லி நாடி வருவதே எனக்கான அங்கீகாரம் தான். தமிழக அரசின் கலைமாமணி விருது 2009-ல் எனக்கு முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. இது தவிர நான் விருதுகளை நாடிச் செல்வதில்லை.
இப்பொதெல்லாம், விருதுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டுவிட்டன. நான் விருதுகளை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனது வாசகர் ஒருவர் அஞ்சல் அட்டையில் எனக்கு எழுதும் கடிதத்தை விட விருது எனக்குப் பெரிதல்ல. எனது கதையால் வாழ்க்கையில் முன்னேறியதாக பல வாசகர்கள் எழுதும்போது எனக்கு மிகுந்த திருப்தி உண்டாகிறது. அதுதான் எனக்கு மகத்தான விருது. இதைவிட நான் எழுத்துலகில் என்ன சாதிக்க வேண்டும்?
குமுதம் வார இதழில் எனது முதல் தொடர்கதை 1987-ல் ‘ஜனவரியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை’ வெளிவந்தது. இப்போதும் (2014) அதே இதழில் தொடர்கதை எழுதி வருகிறேன். பல தலைமுறைகளைத் தாண்டியும் வாசகர்களை ஈர்க்கும் சக்தி இருப்பதே எனக்கு பெருமை தான். வாசகர்களுக்கு எனது தேவை இருக்கும் வரை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுவேன்.
எனது 1,500 புதினங்கள் எழுதிய சாதனையை கின்னஸில் பதிவு செய்ய வேண்டும் என்று நண்பர்கள் கூறியதால் அதற்கு முயன்றேன். அப்போது தான் அதற்கு பணம் செலுத்திக் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதுவும் ஒருவகை வர்த்தகமாகவே தெரிந்தது. எனவே அம்முயற்சியையும் கைவிட்டுவிட்டேன். வாசகர்களின் பிரியமே எனக்கான மதிப்பீடு.
சின்னத்திரையில் உங்கள் அனுபவம் குறித்து…
முதன்முதலில் பொதிகை தொலைக்காட்சியில் தான் எனது புதினங்கள் ஒருமணி நேரத் தொடராக சின்னத்திரை வடிவம் பெற்றன. அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் பவானி தொடர் வந்த்து. பிறகு விஜய் தொலைக்காட்சியில் நண்பர் லேகா ரத்னகுமார் தயாரிப்பில் ‘நீ எங்கே என் அன்பே?’ வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘இருட்டில் ஒரு வானம்பாடி, அஞ்சாதே அஞ்சு’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் வெளிவந்தன. கடந்த இரண்டாண்டுகளாக, கலைஞர் தொலைக்காட்சியில் ‘சின்னத்திரை சினிமா’ என்ற தலைப்பில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணிவரை 2 மணிநேரம் ஒளிபரப்பாகும் வகையில் எனது புதினங்கள் தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூறு வாரங்களை எட்ட உள்ள இத்தொடரால் புதிய வாசகர்கள் பலர் கிடைத்து வருகின்றனர்.
உங்கள் புதினம் ஒன்று திரைப்படமாக தயாரிக்கப்பட்டதே?
திரைப்படத் துறையில் நான் அதிக கவனம் கொடுக்காததற்கு அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதே காரணம். ஆயினும் எனது இரு புதினங்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. நண்பர் நாகா வெங்கடேஷ் தயாரித்த ‘அகராதி’, கோவை நண்பர் தயாரித்த ‘சிறுவாணி’ ஆகிய திரைப்படங்கள் வெளியிடத் தயார்நிலையில் உள்ளன. தவிர நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளேன். அந்தப்படம் அநேகமாக முதலில் வெளியாகும். அதைத் தொடர்ந்து பிற படங்களும் வெளியாகும். அதன்பிறகு பெரிய திரையிலும் எனது பயணம் தொடரும்.
குற்றப் புனைவுப் புதினங்கள் இலக்கியமல்ல என்று இலக்கியவாதிகள் சிலர் கூறுவதை அறிவீர்களா?
இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் 64 வயதிலும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு சிறந்த நடிகர் என்று விருது கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் மனங்களில் அவர் தான் என்றும் சூப்பர்ஸ்டார். யாருக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும்; யாருக்கு எது சிறப்பாக வருமோ அதுதான் வரும். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் அண்மைக்கால எழுத்தாளர்களையே படிப்பதில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமானால், கெட்டதைச் சொல்லி அதன் விளைவைச் சொல்லி எச்சரிக்க வேண்டும். அதையே எனது குற்றப் புனைவுக் கதைகளில் சொல்லி வருகிறேன். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்; தப்பு செய்தவன் தண்டனை பெற வேண்டும் என்பதே எனது கதைகளின் நீதி. இதனைக் கொச்சைப்படுத்துவோர் குறித்து எனக்கு கவலையில்லை. பாமரரையும் படிக்கவைக்கும் எழுத்தாளனாக இருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.
சாஹித்ய அகாதெமி விருது சர்ச்சைகள் குறித்து…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உண்டு. சாஹித்ய அகாதெமிக்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதன் விருதுகள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நான் தான் விருதுகளை நாடிச் செல்வதில்லையே? எனவே இதுபற்றி எனக்கு எந்தக கருத்தும் இல்லை; வருத்தமும் இல்லை.
தமிழ் பத்திரிகையுலகப் பிதாமகர்களான எஸ்.ஏ.பி.அண்ணாமலை, சாவி, விகடன் பாலசுப்பிரமணியம், இதயம் மணியன் போன்ற ஆலமரங்களின் நிழலில் வளர்ந்தவன் நான். குத்துச்செடிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இறைவன் எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டான். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரைகள்…
எழுத்தாளனுக்கு எப்போதும் ஒரு தேடல் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கதைகளுக்கான கரு புதைந்திருக்கிறது. அதேபோல விடாமுயற்சியும் கடும் உழைப்பும் அவசியம்.
நான் கோவையிலிருந்தபடியே இத்தனைகாலம் எழுதி வந்திருக்கிறேன். எழுத்துத் துறைக்கு சென்னையே தலைமையிடமாக இருந்தாலும், எனது திறமையை நம்பி கோவையில் இருந்தபடியே சாதித்தேன். திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் உலகம் அவர்களைத் தேடி வரும்.
நான் எழுதத் துவங்கியபோது என்னை நகலெடுத்து பலர் எழுத முயன்று தோற்றார்கள். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நடையை, தனி பாணியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கதை சொல்லும் பாணியில் வாசகர் மனதைக் கவர்பவரே வெற்றி பெற முடியும். அதேபோல எடுத்தவுடன் புதினம், தொடர்கதை என்று விண்ணுக்குத் தாவ முயற்சிக்க்க் கூடாது. சிறுகதையில் தேர்ச்சி பெற்றபின், மெல்ல அடுத்த நிலை நோக்கி வளர வேண்டும். அவசர அணுகுமுறை இத்துறையில் நிலைக்க சரியான வழியல்ல.
தவிர யதார்த்தம் என்ற பெயரில் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் அள்ளித் தெளிக்கக் கூடாது. சமுதாயத்தைச் சீரமைக்க விரும்பும் நமது எழுத்தில் ஒரு நாகரிகம் இருந்தாக வேண்டும்.
(நிறைவு)
.
நேர்காணல் உதவி, புகைப்படங்கள்: கேசவப்பிரியன், கோவை.
.
பேட்டியின் இரண்டு பகுதிகளும் அருமை.நன்றி.
nandru.