கொலைகாரக் கிறிஸ்தவம் – 9

பின்னர் 1812-ஆம் வருடம் இன்குசிஷன் விசாரணைகளை மொத்தமாக நிறுத்திட முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த ஆவணங்களை என்ன செய்வது என்கிற சிக்கலில் ஆழ்ந்தார்கள் போர்ச்சுகல் அதிகாரிகள். கோவாவின் வைசிராயாக இருந்த கோண்டே-டி-சார்டெஸாஸ், டிசம்பர் 20, 1812-ஆம் தேதி போர்ச்சுகல் அரசருக்கு அனுப்பிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்,

இன்குசிஷன் விசாரணைகள் குறித்தான நூற்றுக்கணக்கான ஆவணங்கள் மிக அதிகப்படியாக இங்கு தேங்கியிருக்கின்றன. அவற்றை வைப்பதற்கு இடமில்லாமல் அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே அந்த ஆவணங்கள் அனைத்தையும் பெரிய சாக்குப் பைகளில் அடைத்து, அந்த சாக்குகளின் மீது இன்குசிஷன் முத்திரையைப் பதித்து, பின்னர் அவற்றை அரசின் ஆயுதக்கிடங்கில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். அந்த அறை மூன்று வெவ்வேறு சாவிகள் கொண்டு பூட்டப்பட்டது. அதில் ஒரு சாவி என்னுடனும், இன்னொரு சாவி அரசாங்க அலுவலகத்திலும், மூன்றாவது சாவி கப்பல்படை கண்காளிப்பாளரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என நான் கருதுகிறேன். ஏனென்றால் புனித இன்குசிஷன் விசாரணைகள் குறித்த அத்தனை நடவடிக்கைகளும் இந்த ஆவணங்களிலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த ஆவணங்கள் இல்லாமல் எதிர்வரும் எல்லா பிரச்சினைகளையும், தவறான குற்றச்சாட்டுகளையும் களைந்தெரிய மிக உதவிகரமாக இருக்கும். எனினும் மகாகனம் பொருந்திய அரசர் இத்தனை பெரிய ஆவணக்காகிதங்களை என்ன செய்யவேண்டும் எனக்குத் தெரியப்படுத்தவேண்டுகிறேன்.  மேலும் இந்த ஆவணங்களை வேறு எவரும் பார்வையிட்டுவிடக்கூடாது என எனக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவைகளை உடனடியாக தீயிலிட்டு எரிப்பதே உசிதமானதாக இருக்கும் என்பது என் எண்ணம்

அதற்குப் பதில் அனுப்பிய போர்ச்சுக்கள் அரசன் தனது செப்டம்பர் 27, 1813-ஆம் தேதியிட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது,

நீங்கள் சொன்ன அந்தப் பெரும் இன்குசிஷன் விசாரணைகள் குறித்த ஆவணங்களைத் தகுதிவாய்ந்த எவரேனும் படித்துப் பார்க்காமல் எரிப்பது சரியான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.  இருப்பினும் வேறு யாரையும் இந்த ரகசிய ஆவணங்களுக்குப் பொறுப்பாளராக வைப்பதற்கும் அரசர் ஒப்பவில்லை.  எனவே மேன்மைதங்கிய அரசர் இந்த ஆவணங்களை யாரேனும் படித்து, அவற்றில் முக்கியம் அல்லது முக்கியமற்றவை எனக் கருதப்படுபவைகளைத் தனித்தனியே பிரிக்கவும், அவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு முக்கியமல்லாத ஆவணங்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தலாம் எனவும் உத்தரவிடுகிறார். பிரித்தெடுக்கப்பட்ட பிற முக்கிய ஆவணங்களை அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கவும் வேண்டும்

இந்த உத்தரவின்படி, கோவா இன்குசிஷன் விசாரணை குறித்த ஆவணங்களைப் படித்துப் பார்த்து தரம்பிரிக்கும் வேலை பாதிரி தோமஸ்-டி-நோரன்ஹா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால் அவர் எவ்வாறு அந்த ஆவணங்களைத் தரம்பிரித்தார் என்கிற தகவல் இல்லை.

அதனைக் குறித்து ஆராயும்,  A Inquisicao de Goa என்கிற புத்தகத்தை எழுதியவருமான அண்டோனியோ-டி-பையாயோ, அந்த ஆவணங்கள் தரம்பிரிக்கப்பட்டு போர்ச்சுகலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்.

அதற்கும் மேலாக, அந்த ஆவணங்கள் குறித்த தடயம் எதுவும் கோவாவில் இன்றுவரை தட்டுப்படவில்லை. மர்மமாக அவை மறைந்துபோயின.

அவ்வாறு அந்த ஆவணங்கள் மறைந்தது ஆச்சரியப்படுகிற விஷயமில்லை. ஏனென்றால் இன்குசிஷன் விசாரணைகள் அனைத்தும் ரகசியத்தில் பொதிந்தவை.  ஒவ்வொரு விஷயமும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள் இல்லாமல் கோவா இன்குசிஷனின் கோரமுகத்தையும், அது எவ்வாறு இயங்கியது, எத்தனை அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டும், நெருப்பில் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள் என்பதினைத் தெரிந்து கொள்வது சாத்தியமே இல்லாத ஒன்று.

இருப்பினும் இன்குசிஷன் கொடூரங்கள் கோவாவில் நடந்து கொண்டிருக்கையில் அங்கு வாழ்ந்த பிற நாட்டவர்கள் எழுதிய குறிப்புகள் இன்குசிஷனின் கோரமுகத்தைக் குறித்து அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன.

உதாரணமாக, பிரெஞ்சுப் பயணியான மருத்துவர் டெல்லோன் (Dr. Dellon) இன்குசிஷன் காலகட்டத்தில் கோவாவில் மூன்றுவருட காலம் சிறைக் கைதியாக இருந்தார். அவர் எழுதிய குறிப்புகளைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

 1649-ஆம் வருடம் பிறந்த டாக்டர் டெல்லோன் பிரெஞ்ச் ஈஸ்ட் இண்டியா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மார்ச் 20, 1668-ஆம் வருடம் இந்தியாவை வந்தடைந்தார். இந்தியாவில் சிறிது காலம் பிரெஞ்ச் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் கப்பல்களிலும், தொழிற்சாலைகளிலும் மருத்துவராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். 1673-ஆம் வருடம், தலைச்சேரியில் அவர் பணிபுரிந்து கொண்டிருக்கையில், அங்கிருந்த தொழிற்சாலை மேலாளருடன் கருத்து வேறுபாடு கொண்டு போர்ச்சுக்கீசியப் பகுதியான டாமனுக்குச் சென்று, அங்கு மருத்துவராக வேலை செய்யத் துவங்கினார்.

டாமனில் நான்கைந்து மாதம் பணிபுரிந்தபிறகு இன்குசிஷன் அதிகாரிகளால் 1674-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இன்குசிஷன் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த கோவாவில் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பாதாளச் சிறையில் ஐந்து வருடங்கள் சிறத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. 1677-ஆம் வருடம் இன்குசிட்டர் ஜெனரலால் மன்னிப்பு வழங்கப்பட்டு உடனடியாக பிரான்ஸிற்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்.

டாக்டர் டெல்லோன் இந்தியாவில் தனது அனுபவங்களைக் குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் முதலாவது புத்தகமான Relation d’un Voyage fait aux Indes Orientales 1785-ஆம் வருடம் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்டது. பல பதிப்புகள் கண்ட அந்தப் புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Voyage to the East Indies என்கிற பெயரில் இங்கிலாந்திலிருந்து வெளியிடப்பட்டது.  இன்னொரு புத்தகமான Relation de l’Inquisition de Goa 1687-ஆம் வருடம் பதிப்பிக்கப்பட்டது.

டெல்லோன் இந்தியாவில் இருக்கையில் இரண்டு முறைகள் கோவாவிற்குச் சென்றிருக்கிறார். முதலில் அவர் மங்களூரிலிருந்து வடக்கே பயணம் செய்து கோவாவிற்குச் சென்றார். இரண்டாவது முறை அவர் டாமனில் கைது செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக் கைதியாக கோவாவிற்குக் கொண்டுவரப்பட்டார். அவரது புத்தகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் அவரது கோவா பயணத்தைக் குறித்து விளக்குகின்றன.

அத்தியாயம் பத்தில் டெல்லோன் கோவாவில் நடந்து கொண்டிருந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்,

அந்தப் பெரிய சர்ச்சிற்கு எதிர்ப்புறம் இருக்கும் பிரம்மாண்டமான மைதானத்தின் நடுவில் அந்தப் பண்ணை வீடு இருந்தது. அந்த வீட்டின் பெயரைக் கேட்டாலேயே ஆயிரக்கணக்கானவர்கள் நடுநடுங்கினார்கள். அதுவே இன்குசிஷன் விசாரணைகள் நடந்த இடம். அந்த இடம் போர்ச்சுக்கீசிய மொழியில் Santa Casa or Casa do Santo Oficio என அழைக்கப்பட்டது.

அதே புத்தகத்தில் அவர் தனது இரண்டாவது கோவா பயணத்தைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார்,

பாஸைம் என்கிற இடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்கவைக்கப்பட்ட நாங்கள் பின்னர் கோவாவை நோக்கிக் கப்பலில் பயணித்து ஜனவரி பதினான்காம் தேதி இரவு கோவாவை வந்தடைந்தோம்.  இதற்கு முன்னர் நான் கோவா வருகையில் அங்கு வசித்த என் நண்பர்களின் உதவியுடன் கோவா கடற்கரைக்குச் சென்று பார்த்ததுவும் பின்னர் அவர்களின் உதவியுடன் மூன்று வருடங்கள் அந்த நகரில் வசித்ததுவும் குறித்து முதலிலேயே எழுதியுள்ளேன்.

நான் ஃப்ரான்ஸிற்கு வந்து எட்டாண்டுகள் கழித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். மிகுந்த தயக்கத்துடன் இதனை எழுதி முடிக்க எனக்கு நான்காண்டுகள் ஆனது.  புனித சர்சிற்கு எதிராக எதுவும் எழுதிவிடுவேனோ அல்லது அங்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிடுவேனோ என்கிற அச்சத்துடனேயே இதனை எழுதியிருக்கிறேன்….

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *