“ஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே பேசினார். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள அற்புதமான வெற்றியை ஒட்டி அவர் நிகழ்த்திய உரை இது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியும் நடத்திய பிரசாரங்களை மீறி, வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையே..
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த உ.பி, உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது பாஜக. 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதியில் வென்ற மகிழ்ச்சி பாஜக தொண்டர்களின் பூரிப்பில் தெரிகிறது.
403 எம்.எல்.ஏ.க்களுடன் நாட்டின் மிகப் பெரிய சட்டசபையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. 15.02 கோடி வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது; 61 % வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில், ஊடகங்களின் ஒருசார்பு, எதிர்க்கட்சிகளின் ஜாதி அரசியல், அரசுக்கு எதிராக மக்களிடம் காணப்படும் வழக்கமான அதிருப்தி, விவசாயிகளின் தொடர் போராட்டம், சிறுபான்மை மக்களை பாஜகவுக்கு எதிராகத் திரட்டிய சமாஜ்வாதி கட்சியின் மதவாத அரசியல் ஆகிய பல அம்சங்களையும் தாண்டி, பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. 2017 தேர்தலில் தனித்து 312 தொகுதிகளிலும் கூட்டணியாக 325 தொகுதிகளிலும் வென்றிருந்த பாஜக, தற்போது தனித்து 255 தொகுதிகளிலும், கூட்டணியாக 273 தொகுதிகளிலும் வென்றுள்ளது. சுமார் 50 தொகுதிகளை இழந்திருந்தாலும், பாஜகவின் வாக்கு சதவிகிதம் 2017இல் 39.67 % ஆக இருந்தது தற்போது 41.29 % ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸும் பலத்த அடி வாங்கி இருக்கின்றன. இக்கட்சிகள் பெற்றிருந்த வாக்குகளை பாஜகவும் சமாஜ்வாதியும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. பாஜக – சமாஜ்வாதி கட்சிகளிடையிலான இருமுனை யுத்தமாக தேர்தல் களம் மாறிவிட்டபோது, மக்கள் பிற கட்சிகளை லாகவமாகத் தள்ளி வைத்தார்கள். பட்டியலின மக்களைப் பகடையாக்கி அரசியல் நடத்திவந்த மாயாவதிக்கும் மிகச் சரியான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் அகிலேஷ் யாதவ், பல்வேறு ஜாதிக் கட்சிகளைக் கொண்ட வானவில் கூட்டணியை அமைத்திருந்தார். வழக்கமான யாதவ்- முஸ்லிம் வாக்கு வங்கியும் அவருக்கு சாதகமாக இருந்தது. உ.பி.யில் சுமார் 120 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் உள்ளனர். தவிர, மேற்கு உ.பி.யில் செல்வாக்கு மிகுந்தவரான, விவசாயிகளான ஜாட் மக்களின் ஆதரவு பெற்ற ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியையும் சேர்த்துக் கொண்டார். பாஜகவில் வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து தாவிய பல பாஜக தலைவர்களுக்கும் அகிலேஷ் வாய்ப்பளித்தார்.
காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு பிரியங்கா வதேராவைக் களமிறக்கி வேடிக்கை காட்டியது. அவரும் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஒப்பித்து தான் ஒருஹிந்து என்பதை நிலைநாட்டப் பாடுபட்டார். ஊடகங்களோ, முதல்வர் ஆதித்யநாத் மறுமுறை வெல்ல மாட்டார் என்று பலவகைகளில் பிரசாரம் செய்தன. கடந்த 40 ஆண்டுகளில் உ.பி.யில் ஆட்சியில் இருந்த கட்சி மறுபடி தேர்தலில் வென்றதில்லை என்றும்கூட பிரசாரம் செய்யப்பட்டது. அதற்கு, “அதை மாற்றவே நான் வந்தேன்” என்று பதிலடி கொடுத்தார் யோகி ஆதித்யநாத்.
சென்ற ஆண்டு முழுவதும் தில்லி எல்லையில் நடந்த, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும், லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சரின் மகன் சென்ற வாகனம் மோதியதில் 4 பேர் பலியானதும், மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு பெரும் சேதம் விளைவிக்கும் என்று ஊடகங்கள் சிந்து பாடின. ஆனால், 44 தொகுதிகள் கொண்ட அந்தப் பகுதியில் பாஜக 30 இடங்களை வென்றிருக்கிறது. குறிப்பாக லக்கிம்பூர் வட்டாரத்தில் உள்ள 4 தொகுதிகளையும் பாஜக வென்றது.
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ருஹேல்கண்ட், கிழக்கு உ.பி. பகுதிகளில் சமாஜ்வாதி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொரதாபாத், மீரட் நகரங்களும் அக்கட்சிக்குக் கைகொடுத்தன. எனினும், ஆக்ரா, காஸியாபாத், கான்பூர், அலிகர் போன்ற இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. அதாவது பெருமளவிலான (80 % முஸ்லிம்கள் வாக்களித்ததாகத் தெரிகிறது) இஸ்லாமியர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த போதும், பாஜகவுக்கு சில இடங்களில் வாக்களித்திருக்கிறார்கள் (சுமார் 20 %; குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள்) என்பதையே இவை காட்டுகின்றன. ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு இதில் பெரும் பங்குண்டு. இஸ்லாமியப் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு விழக் காரணம், முத்தலாக் தடைச் சட்டம் தான்.
தவிர, சமாஜ்வாதி கட்சியின் அதீத இஸ்லாமிய சார்புக்கு எதிராக பாஜக பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைத்துவிட்டது. இதுவே இந்த வெற்றியின் மிக முக்கியமான அடித்தளம். இதைப் புரிந்துகொண்டதால் தான் இடதுசாரி அறிவுஜீவிகள் பத்திரிகைகளில் புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால், சமாஜ்வாதி கட்சியின் இஸ்லாமியச் சார்பு மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான போக்கிற்கு ‘மதச்சார்பின்மைச் சான்றிதழ்’ வழங்குபவர்களும் இவர்களே. இனியும் நாட்டு மக்கள் இவர்களின் மாய்மாலங்களை நம்பப் போவதில்லை என்பதே உ.பி. தெளிவாகச் சொல்லியிருக்கும் சேதி.
அயோத்தியில் ராமபிரானுக்கு ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டியது, வாரணாசி விஸ்வநாதர் கோயில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது ஆகிய சாதனைகளும் வெற்றிக்குப் பெரும் காரணியாகி உள்ளன. ஹிந்துத்வ ஒருங்கிணைப்பு மட்டுமல்லாது, மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய சமூகநலத் திட்டங்களும் தேர்தலில் எதிரொலித்தன. இத்திட்டங்களின் பயனாளிகளாக பெரும்பாலான மக்கள் இருந்ததால், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரம் செல்லுபடியாகவில்லை.
அதேபோல, யோகியின் அரசு, குண்டர்களையும் சமூகவிரோதிகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது. முந்தைய அகிலேஷ் யாதவ் ஆட்சியில் நிலவிய குண்டர் சாம்ராஜ்யத்தை நினைத்தாலே இப்போதும் உ.பி. மக்களுக்கு குலைநடுக்கம் ஏற்படுகிறது. அதுவும் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். தவிர, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் ‘டபுள் என்ஜின்’ போல அரசு நிர்வாகம் செயல்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிரசாரமும் நல்ல பயன் அளித்திருக்கிறது. இந்தக் கருத்து, பஞ்சாப் தவிர்த்த பிற மாநிலங்களிலும் எதிரொலித்திருக்கிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, கடந்த ஆறுமாத கால பாஜக தொண்டர்களின் இடையறாத களப்பணி. கரோனா தொற்றுக் காலத்தில் பாஜக செய்த நல உதவிகள் மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தி இருந்தன. அதையே வாக்குச்சாவடி மட்டத்தில் விரிவுபடுத்தினார் அமித் ஷா. அந்தக் களப்பணியே பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறது.
உத்தரகண்ட், கோவா, மணிப்பூர்:
இதேநிலைதான் அருகில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்திலும். அங்கு ஆட்சி மீதான அதிருப்தியைப் போக்க கடைசிக்கட்டத்தில் முதல்வர்கள் மாற்றப்பட்டார்கள்; அதற்கு கட்சியினரும் கட்டுப்பட்டார்கள். அதன் விளைவாகவே, தோல்வி முகட்டிலிருந்த அம்மாநிலத்தில் பாஜக வெல்ல முடிந்திருக்கிறது.
82.38 லட்சம் வாக்காளர்கள் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் 65.37 % வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47ஐ வென்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது பாஜக. முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி தோற்றபோதும், சென்ற தேர்தலில் வென்ற இடங்களில் சிலவற்றை இழந்தபோதும், பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதற்கு ‘மோடி மேஜிக்’ தான் காரணம் என்று இப்போது தொலைக்காட்சி ‘நியூஸ் சேனல்கள்’ செய்தி வாசிக்கின்றன.
தேர்தல் நடந்த மற்றொரு மாநிலமான கோவா மாநிலம், வித்தியாசமான மக்கள் பரவலைக் கொண்டது. 11.56 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறிய மாநிலமான . இங்கு கிறிஸ்தவ மக்கள் அதிகம்; சர்ச்சின் செல்வாக்கும் உண்டு. சென்ற தேர்தல் வரையிலும் அங்கு பிரதானமான தலைவராக இருந்த மனோகர் பாரிக்கர் கிறிஸ்தவ மக்களுடன் நல்லுறவையும் இணக்கமான தொடர்பையும் கொண்டிருந்ததால் தான் பாஜக அங்கு வெல்ல முடிந்தது. இம்முறை அவரது மறைவுக்குப் பிறகு பாஜகவின் புதிய முதல்வரான பிமோத் சாவந்த்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பட்டது.
ஆனால், இந்தச் சவாலைத் திறம்படக் கையாண்டு வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார் சாவந்த். வேட்பாளர் தேர்வில் அவர் காட்டிய உறுதியும், அனைத்து மக்களுக்கான அரசை அவர் நடத்திய விதமும், எதிர்க்கட்சிகள் பலகூறாகப் பிரிந்து போட்டியிட்டதும், பாஜகவுக்கு சாதகமாயின. திரிணமூல் காங்கிரஸ்- மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி கூட்டணி, காங்கிரஸ்- கோவா முன்னணி கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை சுயலாபக் கணக்கில் போட்டியிட்டன. 79.6 % வாக்குப் பதிவானது. பாஜக அங்கு சென்ற தேர்தலைவிட அதிகமாக வென்று, 40இல் 20 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சியைத் தொடர உள்ளார் சாவந்த்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சென்ற தேர்தலில் பெற்ற இடங்களை விட அதிகமாக பாஜக பெற்றதில் முதல்வர் பிரேன் சிங்கிற்குப் பெரும் பங்குண்டு. 20.56 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட மணிப்பூர், பிரிவினைவாதிகளால் சூழப்பட்டது. இங்கு கிறிஸ்தவர்களும் அதிகம்; சர்ச் செல்வாக்கும் அதிகம். இங்குதான் அதிக அளவில், 89.06 % வாக்குப் பதிவானது. இங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக தனித்தே 32 இடங்களில் வென்றிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியைத் தேர்வு செய்வதையே இம்மாநில மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதாக இப்போது விளக்கம் அளிக்கிறார்கள் மேஜை அரசியல் நிபுணர்கள். அவர்களது ‘வயிற்றுப் பொருமல்’ குணமாக இன்னமும் பல மாதங்கள் ஆகலாம்.
பஞ்சாபில் புதிய மாற்றம்
பஞ்சாபில்தான் திருப்புமுனை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2.13 கோடி வாக்காளர்களைக் கொண்ட எல்லைப்புற மாநிலமான பஞ்சாப் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. நாட்டிலேயே வசதியான விவசாயிகள் அதிகமுள்ள இங்கு 72 % வாக்குகள் பதிவாகின. இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மிகப் பரிதாபமாகத் தோல்வியுற்று, அந்த இடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடித்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தான் காரணம் எனில் மிகையில்லை.
பஞ்சாபில் நல்ல முறையில் ஆண்டுவந்த முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை சித்துவின் நிர்பந்த்துக்காக நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தலித் சீக்கியர் என்ற பெயரில் சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் நியமித்தார். அதேசமயம், சித்து மாநில முதல்வருடன் ஒத்துப்போகவே இல்லை. கட்சிக்குள் உட்பூசல், கேப்டன் அமரீந்தர் சிங்கை நீக்கியதால் எழுந்த அதிருப்தி ஆகியவற்றை காங்கிரஸால் போக்க முடியவில்லை.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த ஓராண்டுக்கால விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப் விவசாயிகளால் தான் நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இருந்தனர். அதனை ஆரம்பத்தில் கொம்பு சீவி ஆதரித்த காங்கிரஸ் கட்சி அதன் பலனை தற்போது அனுபவிக்கிறது.
தொடர் போராட்டத்தால் அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டபோதும், மத்திய அரசு மீதும் பாஜக மீதும் பஞ்சாப் விவசாயிகளின் கோபம் தணியவில்லை. அதேசமயம், அவர்களை புதிதாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி அரவணைத்தது. மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதளம் வாரிசு அரசியல், ஊழல் புகார்களால் செல்வாக்கிழந்ததும், உள்கட்சிப் பூசலால் காங்கிரஸ் நிலைகுலைந்த்தும், ஆம் ஆத்மி கட்சியை நோக்கி மக்களைத் திருப்பிவிட்டன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் கட்டற்று நிகழ்த்தப்பட்ட துஷ் பிரசாரம், பாஜக கூட்டணிக்கு சுமையானது. பாஜகவும் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியும், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்சாவின் சம்யுக்த அகாலிதளம் இணைந்த கூட்டணியால் பஞ்சாப் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை. இக்கூட்டணியில் பாஜக மட்டுமே 2 இடங்களில் வென்றது. ஆனால், அதன் வாக்கு சதவிகிதம் 5.4 % லிருந்து 6.60 % ஆக உயர்ந்திருக்கிறது.
ஆளும் காங்கிரஸ் தள்ளாடிய நிலையில், பிற எதிர்க்கட்சிகள் மீது மக்களின் நம்பிக்கை குறைந்த நிலையில், கவர்ச்சிகரமான அதீதமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92ஐ வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் சரியானவையா என்ற கேள்வி இப்போதைக்கு சாரமற்றது. அதன் அதீத தேர்தல் வாக்குறுதிகளே அக்கட்சி சுமந்துகொண்டிருக்கும் பெரும் சுமை. பஞ்சாப் தில்லியல்ல என்ற உண்மையை கேஜ்ரிவால் மிக விரைவில் உணரக் கூடும். எனினும், அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இலவச அறிவிப்புகளும், முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் நிறுத்தப்பட்டதும், மாற்று அரசியல் கோஷமும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகி உள்ளன. இதன்மூலமாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து என்ன?
மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மேலும் வலுவைக் கூட்டி இருக்கின்றன. தேசிய அளவில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் அதன் இடத்தை இழந்துவிட்டதையும், அந்த இடத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் நகர்வையும் இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் மொத்த சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை: 710. இதில் பாஜக 356 தொகுதிகளையும் (2017இல் 406), சமாஜ்வாதி கட்சி 111 தொகுதிகளையும் (2017இல் 47) ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளையும் (2017இல் 20), காங்கிரஸ் 55 தொகுதிகளையும் (2017இல் 140) பெற்றிருக்கின்றன. இது அரசியல் கட்சிகளின் மாறி வரும் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. தவிர, அடுத்து நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் கரம் ஓங்கி இருக்கும் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி முயற்சிகளில் அரவிந்த் கேஜ்ரிவாலும், அகிலேஷ் யாதவும் வரும் நாட்களில் முக்கியத்துவம் பெறுவார்கள்; ராகுலும் பிரியங்காவும் இதுவரை பெற்றிருந்த முக்கியத்துவத்தை இழப்பார்கள். தேசியக் கட்சியான காங்கிரஸ் அழிவதும் புதிய கட்சிகள் அந்த இடத்தை நிரப்ப உள்ளதும் தான் இத்தேர்தல் தரும் சமிக்ஞை. பாஜகவை பிற கட்சிகள் வெல்லும் வாய்ப்பு அண்மையில் இல்லை என்பதும் மக்கள் அளித்துள்ள அறிவிப்பு.
இவை அனைத்தையும் விட முக்கியமான ஓர் அம்சம் உண்டு. இந்த 5 மாநிலங்களில் போட்டியிட்ட எக்கட்சியும் வாக்காளர்களைக் கவர பணமோ, பரிசுப் பொருளோ கொடுக்கவில்லை. வாக்காளர்களும் பணம் கேட்டு கட்சிகளை நச்சரிக்கவில்லை. பணபலமும் கையூட்டும் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியல் களத்துக்கு இதில் கற்க வேண்டிய ’மானமிகு’ பாடம் உண்டு.
One Reply to “5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் வெற்றி பவனி!”