நகரத்துப் பூனைகள்
ஹரி கிருஷ்ணன்
முன்னால் குடியிருந்த மோகன் வளர்த்ததாம்
தன்னால் நுழைந்து தலைநீட்டப் – பின்னால்
அயாவ்என்று பிள்ளாண்டான் ஆசையாய்க் கூவ
மியாவொன்று வந்ததிந்த வீடு.
நின்றால் முழங்காலில் நீட்டி முகம்தேய்க்கும்
சென்றஇடம் எல்லாம் திரியவரும் – தின்றாலோ
வால்குழைத்துத் தட்டருகே வாய்நீட்டும். பூனையுடன்
பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.
நீடுதுயில் கொள்ளும்; நிறுத்திவைத்த வண்டியின்கீழ்
கூடும்; குடிநகரும்; குட்டிபெறும் – வீடெல்லாம்
துள்ளி இறையும் துளிப்புலியைக் கையிரண்டில்
அள்ளவுந்தான் ஆகுமல்லோ அங்கு?
தரைவாசம் நெஞ்சில் சலித்துவிட்டால் தாவி
மரவாசம் செய்து மறைவார் – குருயாரோ?
என்னதவம் அங்கேநீர் ஏற்கின்றீர் !
யோகுதுயில் தன்னைக் கலைக்கும் எலி.