”A thing of beauty is joy for ever” என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதைவரி உண்டு. அழகு நமக்கு இன்பம் அளிக்கிறது.எந்தப்பொருளில் அழகு இல்லையோ அதில் நமக்கு இன்பம் இருப்பதில்லை. இன்பம் இல்லாத பொருட்கள் எல்லாம் சுமையாகவே மாறிவிடுகின்றன. நம் மன நிலை வளரவளர வேற்றுமைகளையும், குறுகிய மனப்பான்மையையும் அறவே ஒழித்துவிட்டு அழகின் உண்மையை உணரமுடியும். மனம் பக்குவம் அடைந்து விட்டால் அழகிலே உண்மையையும் உண்மையில் அழகையும் சுலபமாகக் காண முடியும்.
கவிஞரும் ஞானியும் சிந்தனையாளருமான எமர்ஸன் ”தூய உள்ளங்களில்தான் அழகு வந்து குடியிருக்க முடியும். களங்கம் நிறைந்த உள்ளங்களில் கற்பனைத் திறனோ அழகோ நிலைத்து நிற்க முடியாது” என்று கூறுகிறார்.
பழந்தமிழ் நூல்கள் கூறும் அழகு:
நமது பழந்தமிழ் நூல்கள் அழகைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போம்.
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
“தலைமயிரை விதவிதமாகச் சீவி முடித்துக் கொண்டை போட்டிருக்கும் அழகும் அழகல்ல. விதவிதமான அலங்கார வேலைப்பாடுள்ள முந்தானை அழகும் அழகல்ல. மஞ்சள் பூச்சினால் ஏற்பட்ட மங்களகரமான அழகும் அழகல்லவாம். நல்லவராய் உள்ளோம் என்ற சிறப்போடு கல்வியறிவு என்னும் உயர் அழகோடு திகழ்வதே உண்மையான அழகு” என்கிறது நாலடியார்.
அணி என்ற சொல்லுக்கும் அழகு என்று பொருள்.புலவர்கள் தம் கற்பனை ஆற்றலாலும் மொழிப் புலமையாலும் அழகு சேர்த்து செய்யுள் இயற்றுகிறார்கள். செய்யுளில் காணப்படும் அழகு, அணி என்று சொல்லப்படுகிறது. எது அழகு அல்லது அணி என்பதை நான்மணிக் கடிகை இப்படிக் குறிப்பிடுகிறது.
நிலத்துக்கணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துகணியென்ப தாமரை-பெண்மை
நலத்துகணியென்ப நாணம், தனக்கணியாம்
தான் செல் உலகத்தறம்.
(தான் செல் உலகத்தறம்: தான் கடைப்பிடிக்கும், உலகிற்கு நன்மை செய்யும் தருமம்)
முருகன் அழகு தூய அழகு
நம் நாட்டிலே சைவத்திலும் வைணவத்திலும் அழகுத்திருமேனி உடையவர்களகக்
கந்தனும் கண்ணனும் திருக்கோலம் கொண்டு விளங்குகிறார்கள். முருகன் என்ற சொல்லுக்கே பேரழகுடையவன் என்று பொருள். முருகு என்றாலே அழகு, இளமை,மணம் எல்லாவற்றையும் குறிக்கும். இந்த நான்கிலும் சிறந்து விளங்குவதால் கந்தனுக்கு முருகன் என்ற திருநாமம் உரியதாயிற்று.
முருகனின் பேரெழிலில் ஈடுபட்ட குமரகுருபரர்,
“இழுமென் அருவி சொரியும் இமய முதல்வி புதல்வன் வருகவே
இயலும் நடையும் வடிவும் அழகும் எழுத அரியன் வருகவே
ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே
ஒருவன் இருவரொடு கை தொழுநல் உபய சரணன் வருகவே
விழுது விடு வெண்நிலவு பொழியும் நகையன் வருக வருகவே
விளரி பயிலும் அளியும் ஞிமிறும் விரவு குமரன் வருகவே
மழலை முதிர முதிரும் மதுர வசனன் வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே”
என்று அழைக்கிறார்.
(இழுமென் அருவி – பேரொலியுடன் வீழும் அருவி; கமல வதனன் – தாமரை போன்ற முகமுடையவன்; ஒருவன் இருவரொடு – ஒப்பற்ற சிவனார் பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரோடும் கூடி; உபய சரணன் – இரு திருவடிகளை உடையவன்; நகையன் – புன்சிரிப்புடன் கூடியவன்; விளரி பயிலும் அளி – விளரி என்ற ராகத்தைக் கற்றுப் பாடும் வண்டு; விரவு – சூழப்பட்ட; மதுர வசனன் – இனிய சொற்களை உடையவன்; பரிதி புரியின் மருவு – பரிதிபுரி என்று வழங்கப் படும் புள்ளிருக்கு வேளூர் என்ற தலத்தில் உறையும்)
அருணகிரிநாதர் கேட்கும் நாலாயிரம் கண்கள்:
திருப்புகழ் பாடிய முருக பக்தரான அருணகிரிநாதர் திருச்செங்கோடு செல்கிறார்.அங்குள்ள முருகப்பெருமானுடைய பேரெழிலைக் கண்டு பேரானந்தம் அடைகிறார். ஆனாலும் அவருக்கு ஒரு குறை. இந்தப் பேரழகனின் பேரழகைப் பார்க்க இரண்டு கண்கள் தானே இருக்கின்றன, இன்னும் பல கண்கள் இருந்தால் இந்த முருகப் பெருமானை இன்னும் நன்றாக அனுபவிக்கலாமே என்று தோன்றுகிறது.
“சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே”
இந்த பிரமதேவனுக்குத் தான் எவ்வளவு கஞ்சத்தனம்! கொடுத்தது தான் கொடுத்தான் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்திருக்கக் கூடாதா? இந்தப் பேரழகன் செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண்களையாவது கொடுத்திருக்கக் கூடாதா என்று அங்கலாய்க்கிறார். முருகன் அழகு அவரை அப்படிப் பேச வைக்கிறது!
சூரன் கண்ட அழகு:
பக்தர்கள் முருகனைப் போற்றிப் பரவுவது இயல்பு.ஆனல் பகைவனும் போற்றும் அழகனாக முருகன் விளங்குவதைப் பார்க்கலாம். சூரபத்மனின் எதிரே முருகன் வந்து நின்ற போதும் கூட யாரோ ஒரு குழந்தை வந்திருக்கிறது என்று நினைத்தானே தவிர அவனுடைய பேரழகைக் காணும் ஆற்றல் அவனுக்கு இல்லை. அதை உணர்ந்த முருகன் மிகப்பெரிய திரு உருவத்தை எடுத்துத் தன் அழகு சூரனுக்குப் புலப்படும்படி செய்தான். எல்லைகாண முடியாத அந்தப் பேரழகை அனுபவித்து வியந்து பேசுகிறான் சூரன்.
“உலகம் மன்மதனைப் பேரழகன் என்று கொண்டடுகிறதே! அந்த மன்மதன் இந்தப் பேரழகனுக்கு முன்னால் நிற்க முடியுமா? இவன் திருவடியில் உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம்கோடி மன்மதர்களுடைய அழகு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா?” என்று அதிசயிக்கிறான்.
ஆயிரகோடி காமர் அழகெல்லாந்திரண்டு ஒன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்
தூய இவ்வெழிலுக்கு ஆற்றாதென்றிடின், இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்கெல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்?
இதற்கு முன் அசுரத்தன்மையோடு இருந்தவனை முருகனுடைய பேரழகு கவர்ந்து அவன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவன் கண்களில் இருந்த மாசு அகன்று விட்டது. அந்த அழகு தூய அழகு. உள்ளத்தை உருக்கும் அழகு.
அழகில் இரண்டு வகை உண்டு – ஒன்று தூய அழகு, மற்றொன்று மாய அழகு. சில அழகு புறக்கண்ணில் பட்டதுமே தூய எண்ணங்களை மனதில் உண்டாக்கும். பொதுவாகவே சின்னக்குழந்தைகள் தன் பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்போது நம் மனதில் ஆனந்தம் உண்டாகிறது. கள்ளமில்லாச் சிரிப்பு அது. சில அழகுகள் கெட்ட எண்ணத்தை உண்டாக்கும். அவை மாய அழகு.
குழந்தை முருகன் தூய பேரழகுடையவன். அதைத் தூய இவ்வெழில் என்று சொல்கிறான். அந்தத்தூய பேரெழில் சூரன் உள்ளத்தில் இருந்த அக இருளை,அறியாமை இருளை, அஞ்ஞான இருளை அகற்றி புதிய ஞானத்தை உண்டாக்கி விடுகிறது.
இராமன் அழகு, அழியா அழகு:
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனின் அழகைச் சொல்ல விழைகிறார். ஆனால் சொல்ல முடியாமல் திகைக்கிறார். இவ்வளவுக்கும் அப்பொழுது இராமன் ஆடை ஆபரணங்களையோ, பட்டுப் பீதாம்பரங்களையோ அணிந்திருக்கவில்லை. வெறும் மரவுரி மட்டுமே தரித்திருக்கிறான். இராமனுடைய மேனியில் பட்ட சூரியன் ஒளி, இராமனுடைய மேனி ஜோதியில் மறைந்து போகிறதாம். இராம ஜோதி, சூரிய ஜோதியை விஞ்சி விடுகிறது.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவென்தொர் அழியா அழகுடையான்
மை அடர்ந்து கறுப்பு நிறம் உடையது. அது அடர்ந்த கருமைக்கு உவமை. மரகதம் பசுமைநிறம் படைத்து குளிர்ச்சி தருவதால் நிறத்தோடு, தண்மை குளிர்ச்சிக்கும் ஒப்பாக ஆனது. மறிகடல் நீலநிறம் உடையதாய் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அது இராமனுடைய இயங்கும் தன்மைக்கு உவமையானது. மழைமுகில் கறுப்பு நிறமும் தண்ணீர் என்னும் பயனும் உடைய காரணத்தால், உயிர்களுக்கு நன்மை செய்வதால் உவமையானது. கருமையும், தண்மையும் இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இந்நான்குமே ஒன்றாக அமைந்த இராமனுக்கு உவமை காண முடியாமல் ”ஐயோ”என இரக்கம் மேலிட முடிக்கிறார். ஆனால் அதுவே இராமனுடைய பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆனது.
இராமன் அழகு அழியா அழகு. அந்த அழகு சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரைப் பூவைப் போன்றது. என்றும் வாடாத, அழியாத அழகு.
வடிவும் முடிவும்:
கம்பன் கண்ட அழகு இப்படி என்றால் மிதிலை நகர்ப் பெண்கள் இராமனை எப்படிக் கண்டார்கள்?
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
மிதிலை நகரில் இராமன் உலா வருகிறான். சீதை மணாளனைப் பார்க்கும் ஆவலில் மிதிலைப் பெண்கள் வந்து மொய்க்கிறார்கள். இராமனுடைய தோளைப் பார்த்தவர்கள் அந்தத் தோளின் அழகில் ஈடுபட்டவர்களாய் அந்தத் தோளிலிருந்து தம் கண்களை எடுக்கமுடியாமல் அதன் அழகிலே தேனுண்ட வண்டுபோல் மயங்கிவிட்டார்கள். சரி, அவனுடைய தடக்கையைப் பார்த்தவர்கள் என்ன செய்தார்கள்? அவனுடைய இடது கையைப் பார்த்தவர்கள் வலது கையைப் பார்த்தார்களா? இல்லையே! முதலில் பார்த்த இடது கையிலிருந்து கண்ணை எடுக்கவே இல்லையே! இராமனின் திருவடியைப் பார்த்தவர்கள் நிலையும் இதே தான். அப்படியானால் மிதிலைப் பெண்களில் யார் தான் இராமனின் அழகை முழுமையாகப் பார்த்தார்கள்?
“வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?” என்ற கேள்வியோடு நிறுத்துகிறார் கம்பர்.
மதனன் வரைந்த சீதை:
இந்த சுந்தர இராமனை மணக்கப் போகும் சீதை எப்படியிருந்தாள்? அழகுக்குத் தலைவன் மன்மதன். அவன் சீதையின் உருவத்தை வரைய நினைக்கிறான். எதை வைத்து வரையலாம் என்று யோசிக்கிறான். சீதையின் உருவத்தை வரையப் போவதால் சாதாரண வர்ணத்தால் வரைவதை விட அமுதத்தால் வரைந்தால் தான் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறான். அமுதத்தில் தூரிகையைத் தோய்க்கிறான். எப்படி வரைவது, எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்று திகைக்கிறான். இதற்குள் பிரஷ்ஷிலிருந்த அமுதம் காய்ந்து போய் விடுகிறது. எனவே மீண்டும் அமுதத்தில் தோய்த்துக் கொள்கிறான். மறுபடியும் திகைப்பு! இதற்குள் தூரிகை காய்ந்து போய்விடுகிறது. சரி, மன்மதன் எப்பொழுது எப்படி வரைந்து முடித்தான்? மன்மதன் இன்னும் வரையவே ஆரம்பிக்கவில்லையே! ஏன்? சீதையின் அழகு அப்படிப் பட்டது!
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை
யாது?எனத்திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத வொண்ணாச்
சீதை அவள்! கன்னி மாடத்தில் சதகோடி மின்னல்கள் சேவிக்க ஒரு மின்னல் கொடி
போலிருந்தாள் என்று அவளை அறிமுகம் செய்கிறான் கம்பன்.
அனுமனின் பெருந்தெய்வம்:
இதே சீதை அசோக வனத்தில் எப்படியிருந்தாள்? சொல்லின் செல்வன் அனுமன் வாயிலாகவே கேட்போம்.
விற்பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்டேன்
பெண்களுக்குரிய ஒப்பற்ற சிறந்த குணங்கள் பொறுமை, கற்பு என்பவைகள். அக்குணங்கள் அனைத்தும் ஒன்றாக்கூடி பிராட்டியிடம் சேர்ந்து அவை பெருமை அடைந்தன. களி நடம் புரிந்தன.
தவம் என்பது தன்னைத்தான் கொண்டு ஒழுகும் நெறி. பெருந்தவம் என்பது கணவனுடைய வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து கற்பு நெறி வழுவாமல் இருப்பது. நற்பெருந்தவம் என்பது தன்னைப் பிறர் பிரித்த நிலையிலும், துன்புறுத்திய நிலையிலும் தனது குடிமை, பொறுமை கற்பு இவைகளுக்குக் குறைவு நேராமல் ஒழுகுவது. சீதா பிராட்டி அசோக வனத்தில் நற்பெருந் தவத்தளாக விளங்குவதைக் குறிப்பிடுகிறான் அனுமன். இப்படி விளங்கும் சீதையை தெய்வம் என்றே குறிப்பிடுகிறான்:
உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற
மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந் தெய்வம்!ஐயா!
ஒரு நல்ல பெண்மணி, மனைவி, மருமகள், மகள் என்ற உறவுமுறைகளுக்கு உரியவளாக இருப்பாள். சீதா பிராட்டி அந்தந்த உறவுமுறைகளெல்லாம் தன் மூலம் சிறப்பு அடையும் படியாக விளங்கினாள். மனைவி, மருமகள், மகள் என்ற அளவில் தன் கணவனுக்கும், மாமனாருக்கும், தந்தைக்கும் பெருமை சேர்க்கும் நிலையில் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். அது இப்போது சிறைவாழ்க்கையிலும் வெளிப்படுகிறது. இதுவரை மற்றவர்களுக்கு உறவு முறையால் பெருமை சேர்த்த பிராட்டி எனக்குப் பெருந்தெய்வமாகக் காட்சி தந்தாள் என்கிறான் அனுமன்.
இப்படி பெருந்தெய்வமாகக் காட்சி தந்த சீதை எந்தச் சூழ்நிலையில் இருந்தாள்? கணவனிடமிருந்து வஞ்சகமாகப் பிரிக்கப் பட்டு, தன்னந்தனியளாய், அரக்கியர் கூட்டங்களுக்கு நடுவே மாற்றான் சிறையில் வாடிக்கொண்டிருந்தாள். அந்த நிலையிலும் அவள் பெருந்தெய்வமாகக் காட்சியளிக்கக் காரணம் அவளுடைய அக அழகே. இராமனையே முழுமுதல் தெய்வமாகக் கொண்டிருந்த அனுமன், சீதாதேவியை ‘என்பெருந் தெய்வம்’ என்று இராமனிடமே சொல்கிறான் என்றால் அதற்குக் காரணம் சீதையின் அக அழகே.
அசோகவனத்திலே சீதை புகை படிந்த ஓவியம் போலிருந்தாள் என்பான் கம்பன். அனுமனின் நுண்ணறிவு அதையும் தாண்டி அவள் அக அழகைக் கண்டு பிடித்துவிடுகிறது.
(தொடரும்…)
மிக அருமையான கட்டுரை. பல்வேறு இலக்கியச் சான்றுகளையும் அளித்து தெய்வீக அழகின் வசீகரத்தையும், அதன் பல பரிமாணங்களையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
முருகன், ராமன், சீதை மற்றும் அனைத்து தெய்வத் திருவுருவங்களையும் நாம் தரிசிக்கும்போதும், வழிபடும்போதும், அந்த விக்கிரகங்களில் வெளித் தோன்றும் அழகை மட்டுமல்ல, அந்த தெய்வ வடிவங்கள் உணர்த்தும் தத்துவங்களையும், வாழ்க்கை நெறிகளையும் சேர்த்தே மனதில் சிந்தித்து தியானிக்க வேண்டும், அதுவே சிறப்பான வழிபாடு என்பதும் இந்தக் கட்டுரை சொல்லும் செய்தியில் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
அழகைப் பற்றி ஒரு அழகான அலசல்!
மிகச் சிறந்த பல செய்திகளைச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துகள்.
அன்புடன்,
குமார்(சிங்கை)