ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்

மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

குமரகுருபரர் ஐந்தாண்டு வரையிற் பேச்சின்றி ஊமைபோல இருந்து வந்தனர். அதுகண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல்பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப் பெற்ற இவர், அப்பெருமான் விஷயமாகக் கந்தர் கலிவெண்பா என்ற பிரபந்தத்தைப் பாடினார். அப்பால் தம் ஊரிலெழுந்தருளியுள்ள ஸ்ரீ கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் என ஒரு பிரபந்தம் இயற்றினார். இவருக்குக் குமாரசுவாமிக் கவிராயரென ஒரு தம்பியார் இருந்தனர்.


குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞானசாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார்; மருவுக்கு வாசனை வாய்த்தாற்போன்று பக்தி ஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. அப்பால் பல சிவ தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத்தொடங்கினர். மதுரையிலே சில காலம் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ மீனாட்சியம்மையின் திறத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

அதனை அரங்கேற்றுகையில் ஸ்ரீ மீனாட்சியம்மையே குழந்தையுருவாக எழுந்தருளி வந்து கேட்டு மகிழ்ந்தனரென்றும், குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த முத்துமாலை யொன்றை எடுத்து இவருக்கு அணிந்துவிட்டு மறைந்தனரென்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத்தமிழைக் கேட்டு மனமுவந்த திருமலை நாயக்கர் குமரகுருபரருக்கு பலவகையான ஸம்மானங்களை அளித்து வழிபட்டனர். குமரகுருபரர் பின்னும் சிலகாலம் மதுரையிலே தங்கி மதுரைக்கலம்பக மென்னும் பிரபந்தத்தை இயற்றினார். பிறகு சோழநாட்டு ஸ்தலங்களைத் தரிசிக்கத் தொடங்கித் திருவாரூருக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ தியாகப்பெருமானைத் தரிசித்துக்கொண்டு சிலகாலம் இருந்தனர். அக்காலத்தில் திருவாருர் நான்மணிமாலை யென்னும் பிரபந்தத்தை இவர் இயற்றினார்.

சிவஞான வுபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு வரவர அதிகமாயிற்று. தமக்குரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண்புகவேண்டுமென்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் 4-ஆம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை யறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியரென்பதை இவர் தேர்ந்தனர். அப்பால் தமக்குத் துறவுநிலை யருள வேண்டுமென்று அத்தேசிகர்பால் குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் ஸ்தல யாத்திரை செய்துவரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார் காசியாத்திரை செய்துவரும்படி கட்டளையிட்டனர். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமேயென்று கவன்ற குமரகுருபரரை நோக்கிச் சில காலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.

ஞானாசிரியர் கட்டளைப்படி சிதம்பரத்துக்கு இவர் பிரயாணமாகி இடையே ஸ்ரீ வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி விஷயமாக ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் சிதம்பர மும்மணிக் கோவையென்னும் பிரபந்தம் இவரால் இயற்றப்பெற்றது. அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உளவாகும் துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் ”காசியினிறத்த னோக்கி” (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார். அவ்வடிகள், தம்மை ஆசிரியர் காசிக்குச் செல்லப்பணித்ததும் அதன் அருமையைத்தாம் விண்ணப்பித்துக் கொண்டபோது சிதம்பரவாசம் செய்யும்படி கட்டளையிட்டதுமாகிய நிகழ்ச்சிகளின் நினைவிலிருந்து எழுந்தனவென்றே தோன்றுகிறது.

சிவநேசச் செல்வர்களும் தமிழறிவுடையவர்களுமாகிய சில அன்பர்கள், ”யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் ஜைன சமயச் சார்புடையனவாக விருத்தலின், அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக ஸ்ரீ நடராஜப் பெருமான் விஷயமாக செய்யுட்களை இயற்றித்தர வேண்டும்” என்று பிரார்த்திக்க இவர் அங்ஙனமே சிதம்பர செய்யுட் கோவை யென்னும் பிரபந்தத்தை இயற்றி அளித்தார்.

இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே நீதிநெறி விளக்க மென்னும் நீதிநூலும் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்றுதோற்றுகின்றது. அந்நூலுக்குச் சிதம்பரம் நடராஜப் பெருமானது துதியை முதலிற் காப்பாக அமைத்திருத்தல் இதற்கு ஓர் ஆதாரமாகும். திருமலைநாயக்கரது வேண்டுகோளின்படி மதுரையில் இருந்தபொழுதே இது பாடப்பெற்றதென்றும் கூறுவதுண்டு.


சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்துவந்த குமரகுருபரர் பின்பு தம் ஞானதேசிகர்பாற் சென்று தம்முடைய வேட்கையை மீண்டும் விண்ணப்பித்துக் கொண்டனர். இவருடைய பரிபக்குவத்தை யறிந்து ஞானதேசிகர் இவருக்குக் காஷாயம் உதவினர். அதுமுதல் இவர் குமரகுருபர முனிவரென வழங்கப் பெறுவாராயினர். அப்பொழுது தம் ஞான தேசிகர் விஷயமாகப் பண்டார மும்மணிக் கோவை யென்ற பிரபந்தம் ஒன்றை இயற்றினர்.


அப்பால் ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். அப் பாதுஷாவின் தாய் மொழியாகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள வேண்டுமென்றெண்ணிச் சகலகலாவல்லி மாலை யென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவினிடம் பேசிப் பழகினார்.

அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின்படியே இவர் காசியில் இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார்.

(இங்கே “பாதுஷா” என்று குறிக்கப் படுபவர் இஸ்லாமிய கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ. பலமொழிகளில் வித்தகராகவும், நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப் பட்டவராகவும் விளங்கிய பட்டத்து இளவரசர் தாரா ஷுகோ இந்துமதத்தின் பால் ஆர்வமும், மதிபும் கொண்டிருந்தார். காசியின் பண்டிதர்களிடம் உபநிஷதங்கள் உள்ளிட்ட பல நூல்களை சம்ஸ்கிருதத்திலேயே கற்றுத் தேர்ந்து, அவற்றை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கவும் செய்தார். பிற்காலத்தில் மேற்குலகில் இந்து ஞானத்தின் பரவலுக்கு இந்த மொழியாக்கங்களே பெரிதும் உதவின. அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரகடனமாக “உலகம் முல்லாக்களின் சத்தங்களில் இருந்து விடுதலை பெறட்டும்” என்ற வாசகத்தை உரைத்த தாரா ஷுகோ “இஸ்லாமுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக” குற்றம் சாட்டப்பட்டு, அன்றைய முகலாய அரசின் காஜிகள், மவுல்விகளால் ஷரியத் சட்டப் படி மரண தண்டனை விதிக்கப் பட்டு, ஔரங்கசீபின் அரசாணையால் கொல்லப் பட்டார்)

குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த ஸ்ரீ விசுவலிங்கப் பெருமனை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து நைமித்திகங்களும் குறைவற நடக்கும்படி செய்தார். கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைந்திருந்தன ரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலய முதலியன கட்டுவித்து நித்திய டைமித்தியங்கள் நடத்தச் செய்தனரென்றும் இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன வென்றும் சிலர் கூறுவர்.

குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.

குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தருமபுரம் வந்து ஞானாசிரியரைத் தரிசித்து மீட்டும் காசிக்கே சென்று வாழ்ந்து விளங்கியிருந்து ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திருதியையிலே சிவபெருமான் திருவடி நீழலிற் கலந்தனர்.

தட்டச்சு உதவி: ஜயக்குமார்

கட்டுரை, படங்கள் : ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.

20 Replies to “ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா”

  1. அன்புள்ள தமிழ் இந்து குழுவினருக்கு..

    அருமையான முயற்சி இந்த வலைத்தளம். பல நல்ல தகவல்களுடன் மற்ற தளங்களில் கிடைக்காத அரிய தகவல்களையும் கொண்டுள்ளது உங்கள் வலைத்தளம். குமரகுருபரரின் வாழ்க்கையினை உ.வே.சா. அவர்கள் சொல்லக்கேட்டதுபோல இருந்தக்டு இந்தப் பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ஸ்ரீதர்

  2. மிக்க நன்றி.
    இது போன்ற ஞானிகள் வாழ்ந்த தமிழகத்தில் இன்று நாத்திக வாதமும் ஹிந்து எதிர்ப்பு கூச்சலும் நிறைந்திருப்பது ஒரு கெட்டக் காலம். சீக்கிரமே விடிவுக் காலம் பிறக்கட்டும். இடைவிடாத முயற்ச்சி செய்வோம்.

  3. aiya,kumara kurubara swamigalai patriya pala thagavalgalai arindu kondom. thangal inaiya thalathirku migavum nanri.

    ravi

  4. குமார குருபரர்,அருணகிரிநாதர்,பட்டினத்தார்,சேக்கிழார்,கம்பர்,வில்லிபுத்தூரார்,இராமலிங்க வள்ளலார்,அந்தகக் கவி வீர ராகவ முதலியார்,ஓட்டக் கூத்தர்,பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், கவி காளமேகம்,பனிரெண்டு ஆழ்வார்கள்,அறுபத்து மூன்று நாயன்மார்கள்,புகழேந்திப் புலவர்,ஔவையார்- தமிழையும், தெய்வீகத்தையும் கலந்து அமுது படைத்த ஆன்றோர்கள் ,சான்றோர்கள் எவ்வளவு பேர் இந்த மண்ணில்.இந்த மண்ணுக்கு வணக்கம்.

  5. ஸ்ரீ குமரகுருபரரின் வாழ்கை வரலாறு எனது மகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் எனது நமஸ்காரதுடன் நன்றியை
    தெரிவிகிறோம்

  6. ‘ஓங்காரமாகிய உயர் குஹன் அருளால் தீந்தமிழ் தர வரு தெய்வக் குழவி ‘. இத்தமிழ்த் தொடரின் இனிமைதான் என்னே..! இப்படங்கள் பழமை மாறாமல் அவற்றின் அடி வசனங்களோடு என்றும் இருக்கட்டும். புதிய ஆக்கங்களைத் தரக் கட்டுரையாளருக்கு ஸ்ரீ செந்தில்நாதன் அருளட்டும்.

  7. Happy to read about the article since I did my education from 1st Std to BCom at Srivaikuntam in the name of Sri KGS Primary School Sri KGS Hr.Sec.Schoo, and Sri KGS Arts College

  8. வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
    செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
    அணிவார்க்கு மேவ வராதே வினை

    என்ற பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? உதவுங்களேன்

  9. தாய்த்தமிழில் தருமபுர ஆதீன வழிவந்த தவப்புதல்வர் தெய்வப்புலவர் பல உய்யும் நெறி களை உயர்தமிழில் தெய்வமே திகைக்கும் ,உவக்கும் வகையில் அருளியுள்ளதை நாம் அனுபவிக்கும் பேறுபெற்ற தமிழறிந்த தலைமுறையினராக
    உதித்துள்ளது மதிக்கத்தக்கது ..குமரகுருபரர் வருகைபருவ பாடலை ”தொடுக்கும்-கடவுட் பழம்பாடல் “”வேதம்””பாடியுள்ளதைகேட்க தாய் எத்தனைமுறை வேண்டுமானாலும் வருவாள் ”அகந்தைக்கிழங்கை அகழ்ந்து எடுத்துவிட்டு வருவாள்”
    தெவிட்டாத தெள்ளமுது ”உரிய பதிப்புக்கள் உலகெங்கும் கிடைக்கசெய்வோம்
    பணிவுடன்…VENGATASUBBAREDDY

  10. தாரா ஷுகோ தான் குமர குருபரருக்கு உதவிய முஸ்லிம் மன்னனின் பெயர் என்பதை தமிழ் ஹிந்து வலைத் தளம் மூலம் தான் அறிந்தேன். மிகச் சிறந்த பனி செய்து வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்புடன் திருப்பூர் கிருஷ்ணன்

  11. kumara guruparar is said to have gone riding on a lion to meet Delhi padusha. pl. confirm and if confirmed add to text

  12. Thanks to all those people who are behind this website. This page on kumarakurubar was extremely useful to my son. In times where our history is fading websites like this are useful to introduce our children to them easily.

  13. அன்புடன் ஆதித்யன்
    மிக்க நன்றி. இக்கால தலைமுறைக்கு நவரத்தினங்களை சோ்த்து தந்துள்ளீா்கள்.
    கோடி புண்ணியம் தங்களுக்கு. வாழ்க வளமுடன்.

  14. the details of samadi may be more useful for general comparision of saints. Will it possible to explain final samadi moments, Is there any detail available?

  15. குமரகுருபர தெய்வத்தை தமிழை காசியிலே படரவிட்ட மாணிக்கத்தை பற்றி மேலும் அறிய பெருந்தகை உ வே சா அய்யா கட்டுரை அற்புதம்.அவருடைய பாடலுக்கு விளக்கஉரை எழுத முயல்கிறேன்.அவருடைய ஆசி கிடைக்க அவரை பணிகிறேன்

  16. I returned from Kashi Yathra yesterday(3rd March2018). Apart from the visit to Kashi, Prayag, Gaya, the incidents repeatedly coming to my memory with reverence are, STAYING AT KUMARASAMY MUT,ALMOST WITH STAR HOTEL ATMOSPHERE AND SERVICE; TAKING PART IN COMPLETE ABISHEGA (MEANIG ALONG WITH THE GURUKKALS WE ALSO JOINED IN THE PERFORMNCE OF ABISHEK)AND AARTHI AND ITS FULLY TAMIL AMBIENCE. IT IS REALLY REJUNAVATING.
    MAY LORD KETHARISWAR, MA GOWRI, LORD VISHVANATH, MA VISHALAKSHI, BLESS ALL.

  17. The information about Sri Kumaragurupara swamigal are very useful to me to teach my students.

  18. ஸ்ரீகுமரகுருபரர் அவர்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  19. Greetings to Editorial team.
    Thanks for publishing Dr U Ve Su Iyyah article on Sri Kumaragurupara Desikar article to propagate Tamil Spiritual Liteature for all readers benefit.
    Om Saravana Bhava

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *