மைக்கேல் ஜாக்ஸன் – மீட்பரைத் தேடி

“நீயே கூறு, எனக்கு அளிக்கப்பட்ட உரிமைகளால் இங்கு என்ன நடந்துவிட்டது?
நான் கண்ணுக்கு தென்படாதவன் என்று எண்ணி என்னை அலட்சியப்படுத்திகிறாயா?
நீ உறுதியளித்தது எனக்கான சுதந்திரத்தை, ஆனால்
நானோ இன்று அவமானத்தின் பாதிப்பிலேயே வாழ்ந்து தளர்வடைகிறேன்
அவர்கள் என்னை மோசமான முத்திரைகளால் ஒதுக்குகிறார்கள்
நானும் இந்த மண்ணில் பிறந்தவன் தானா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது”

mj01கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறுப்பையும், விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் எதிர்த்து கிளம்பிய ஒரு கலகக்குரல் இது. மைக்கேல் ஜாக்ஸன்.

ஒரு எஃகு தொழிற்சாலையில் பணிபுரியும் எளிய தொழிலாளியின் மகனாக, ஒரு வறிய குடும்பத்தில் ஜாக்ஸன் பிறந்தார். சிறு வயதில் தன் தந்தையின் கொடூர தண்டனைகளுக்கு பழக்கப்பட்டிருந்த ஜாக்ஸன், பள்ளியில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றிருந்தார். தன் சகோதரர்களுடன் இணைந்து அவர் நடத்திய இசைக் குழு, அவரின் இசைத் திறமையை மேலும் மெருகூட்டியது. Jackson 5 என்று அழைக்கபட்ட அக்குழு பெரும் புகழ் அடைந்தது. குறிப்பாக ஜாக்ஸனின் திறமை வெகுவாக புகழப்பட்டது. 10 வயது நிரம்பிய காலத்திலேயே “அபூர்வ இசைத் திறமை கொண்ட இளம் மேதை” என புகழப்பட்டார். தனது சகோதரர்களுடன் இணைந்து அவர் வெளியிட்ட பல இசைத்தட்டுக்கள் அவரது கீர்த்தியை உலகெங்கும் கொண்டு சென்றது.

அவரின் உன்னத படைப்பாக குறிப்பிடப்படும் “Thriller” 1982-ல் வெளியானது. இனவெறுப்பு மிகுந்திருந்த அன்றைய காலங்களில் MTV போன்ற பிரபல நிறுவனங்கள், ஜாக்ஸனை கறுப்பு அமெரிக்கர் என்ற காரணத்தால், அவரின் படைப்புகளை ஆதரிக்க மறுத்தன. ஆனால், “Thriller” வெளியான பிறகு அவர் திரும்பி பார்க்கவேயில்லை. ஜாக்ஸனின் புகழ் உலகெங்கும் பரவியது. அவர் வெளியிட்ட இசைத் தொகுப்புகள் அனைத்தும் பெரும் வெற்றி அடைந்தன. புகழும், பணமும் அவரை தேடி வந்த வண்ணம் இருந்தன. பின்னாளில், அதே MTV நிறுவனம் ஜாக்ஸனுடன் இணைந்து பல இசைத் தட்டுகளை தயாரித்து வெளியிட முன்வந்தது.

தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் ஜாக்ஸன் ஒரு சூப்பர்மேனாக முன்னிருத்தபடுவார். அவர் அணிந்த பிரத்யேக காலணி புவியீர்ப்பு விசை குறித்த எந்த கவலையுமின்றி அவர் இஷ்டத்திற்க்கு தன் உடலை சாய்க்கவும், நடனமாடவும் உதவி புரிந்தன. கற்பனைக்கு கூட எட்டாத வேகத்தில் அவரது பாதங்கள் சுழலும். வேகமாக தன்னையே சுழன்று, ஒரு எதிர்பாராத தருணத்தில் காலணி முனையில் மட்டும் நிற்கும் ஜாக்ஸனின் நடனம் அசாதாரணமான ஒன்று. ஒரு கட்டத்தில், தனிப்பட்ட வாழ்விலும் ஜாக்ஸன் எந்த வித புவியீர்ப்பு விசையையும் குறித்து கவலைப்படவில்லை. அவரே எதிர்பாராத புகழ் அவரை சற்றே நிலை தடுமாற செய்தது. தனது ஆரம்ப கால பாடல்களில், உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசிய ஜாக்ஸன், ஒரு கட்டத்தில் பாலுணர்வை மட்டுமே மையப்படுத்தி தனது ஆக்கங்களை வெளியிட்டார். இனப்பிரச்சினை, குழந்தைகள் நலன், அடக்குமுறை குறித்த கலகக் குரலாக ஒலித்த ஜாக்ஸனின் குரல், மெல்ல அதை விட்டு விலகி, தனது நடனங்களில் பாலுணர்வை தூண்டும் சைகைகளை முன்னிருந்தினார்.

ஜாக்ஸனின் இந்த மாறுதல்கள் அவரது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. புவியீர்ப்பு விசையையும் மீறி மேலே பறந்து கொண்டிருந்த ஜாக்ஸன் தன் காலடியின் மண் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்படுவதை உணரவில்லை. சிறுவர்களை வன்புணர்ந்ததாக குற்றஞ்சாட்டபட்ட ஜாக்ஸன், ”தனது பாடல்களில் செமிதிய மதங்களின் மீதான வெறுப்பை தூண்டுகிறார்” எனும் பழியையும் சுமக்க நேர்ந்தது. தன் தனிப்பட்ட உறவுகளால் அவர் அடைந்த மனமுறிவுகளும் சேர்ந்து அவர் மீது பெரும் பாரமாக அழுத்தியது. போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்து, பின் தீவிர அடிமையானார்.

கலைஞர்களின் ஆதார சக்தி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று சொல்லப்படுவதுண்டு. அது அடங்காமல் பீறிடும் போது அது அவர்கள் உடலையே சீரழிக்கும், ஆளுமையை சிதைக்கும் என்பார்கள். எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும். தன் வீழ்ச்சியின் தருணங்களில் தனக்கான மீட்பரைத் தேடி அலைந்த ஜாக்ஸன், இறுதிவரை தனக்கான ஒரு கிளையை தேடி அடைந்துவிட முடியவில்லை.

7 Replies to “மைக்கேல் ஜாக்ஸன் – மீட்பரைத் தேடி”

  1. மைக்கெல் ஜாக்சனது இழப்பு எதிர்பாராதது.. அவரைப் பற்றிய கடந்த பல வருடங்களாக வந்த தகவல்கள் எல்லாம் அவரது இமேஜை உடைத்தன.. இறுதியாய் நிம்மதியாய்ச் சாய்ந்துகொள்ள ஒரு இடமின்றி மன அழுத்தம் காரனமாஅய் இருந்திருப்பார். இவரையும் ஒரு பேரும் தொகைக்கு மதம் மாற்றி விட்டு பார்த்தாயா எங்கள் மதம்தான் சிறந்தது என ஒரு கூட்டம் குதூகலித்தது.. பாவம்.. தவறான பாதையில் சென்ற மைக்கேல் ஜாக்சன் இறுதியில் புகழ் மங்கிய காலத்தில் இறக்க நேஎர்ந்தது அவரது துரதிருஷ்டமே..

  2. மிக அருமையாகவும், நடுநிலமையுடனும், விஷயம் தெரிந்த ஒருவராலும் எழுதப்பட்டுள்ளது. ஒரு இந்துத்வத்தனமான கட்டுரை இது.

  3. ஒரு இந்துத்வத்தனமான கட்டுரை என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், அந்த மனிதரை அவரின் சிறப்புகளுக்காகப் பாராட்டுவதாகவும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை அலசுவதாகவும் இந்தக் கட்டுரை இருக்கிறது.

    அப்படி இல்லாமல் மைக்கேல் ஜாக்ஸன் என்று போடுவதா இல்லை மிக்கேயீல் என்று ஒரு பக்கம் போடுவதா என்று குழப்பமாம். எவனாக இருந்தால் என்ன கேவலம் ஒரு இசையை வைத்து வாழ்ந்தவன்தானே. அவனைப் பற்றி எழுதுவது, இசையை கேட்பதைக் காட்டிலும், ஓவியங்களை ரசிப்பதைக் காட்டிலும் என் உடலை சீழினால் நிரப்புவேன் என்று சொன்ன கடவுளின் கடைசி தூதருக்கு எதிரானதா இல்லையா என்று மிகப்பெரிய பேச்சுப்போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். தக்கியாவிற்காகவாவது இதைச் சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவதாகவும் கேள்வி. இன்னொரு பக்கம் மதம் மாறியவனுக்குப்போய் ….. …. …. … என்று எண்ணமாம்.

    எந்த மதத்தைச் சேர்ந்தவனானால் என்ன, அவனுக்குள் மனிதம் இருக்கிறது என்று நம்பும் இந்துத்துவம் அன்னாரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறது.

    எந்த மன உளைச்சலும் இல்லாத மைக்கேல் ஜாக்சன்கள் உலகில் உண்டாகட்டும். இசை வாழ்க ! கலை வாழ்க !

  4. எல்லாம் சரி. மைக்கேல் ஜாக்சனுக்கு நமது மனமார்ந்த இரங்கல்.
    இந்த ஜாக்சனால், நமது தமிழகத்தைச் சேர்ந்த “ஜீவி” யின் ஆவி இந்த ஜாக்சனை மன்னிக்குமா என்பது யாராலும் சொல்லமுடியாது.
    ஜாக்சனால் ஏமாற்றப் பட்டுச் சொத்துசுகம் முழுதும் இழ்ந்து, முடிவில் தன் வாழ்வையே முடித்துக்கொண்ட “ஜீவி”யின் ஆவி ஜாக்சனைச் சுற்றிக்கொண்டே இருந்திருக்கும்.

  5. // ”தனது பாடல்களில் செமிதிய மதங்களின் மீதான வெறுப்பை தூண்டுகிறார்” எனும் பழியையும் சுமக்க நேர்ந்தது. //

    செமித்திய மதங்கள் கலையையும் கலைஞர்களையும் உண்மையில் மதிப்பதில்லை. தங்கள் மதப்பிரசாரக் கருவிகளாக மட்டுமே அவர்களைப் பார்க்கின்றன. அவர்கள் தங்கள் சுயத்தை வெளிப்படுத்தத் தொடங்குகையில் உடனே அவர்களைப் பாவிகள், துரோகிகள் என்று பழிக்க ஆரம்பித்து விடும் அந்த மத பீடங்கள்!

    // தன் தனிப்பட்ட உறவுகளால் அவர் அடைந்த மனமுறிவுகளும் சேர்ந்து அவர் மீது பெரும் பாரமாக அழுத்தியது. போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்து, பின் தீவிர அடிமையானார். //

    இங்கு ஜாக்சனின் இந்த நிலையை நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ரஜினியும் இது போன்ற ஒரு சூழ்நிலைக்குப் போக இருந்தவர் இந்து ஆன்மிக நெறிகளாலும், அன்பான மனைவி, குடும்பம் (இந்து கலாசாரத்தின் கனிகள்) ஆகியவற்றின் அரவணைப்பாலும் காக்கப் பட்டார், மீட்கப் பட்டார். இன்று ஒரு நடிகராக, கலைஞராக மட்டமின்றி நல்வாழ்க்கை வழிகாட்டியாகவும் காணப் படுகிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

    // எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும். //

    இந்த வரி நான் மேலே கூறிய விஷயத்தை அருமையாகத் தொட்டுக் காட்டி விட்டது.

    சுருக்கமாக எழுதப் பட்டுள்ள அருமையான கட்டுரை ஹரி வெங்கட். பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதுங்கள்.

  6. //சுருக்கமாக எழுதப் பட்டுள்ள அருமையான கட்டுரை ஹரி வெங்கட். பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதுங்கள்//

    வழிமொழிகிறேன்.

    அன்புடன்
    நடராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *