வையகம் இதுதானடா

அயோத்தி கோயில் பிரச்சினை பெரிதாகி இருந்தது. பல நூறு வருடங்கள் கழிந்து வெளி மாநிலத்தாருக்கும் பிரச்சினை தெரிய வந்தது.

எப்படிப் பத்திரிக்கைச் செய்திகளோ அப்படியே பேச்சுக்கள். பரபரப்பு உணர்வு தாண்டாத பழகிப்போன வார்த்தைகளில் வழக்கமான தகவல் தொனிகள் வழிந்தோடின. எந்தப் பிரச்சினையையும் வெறும் கோஷங்களுடன் அணுகுவதைத் தாண்டி தகவல் தெரியும் வாய்ப்பு இல்லை. மூன்று தலைமுறை தமிழ் பெருசுகள் இந்தப் பிரச்சினை பற்றியும் இப்படித்தான் பேசினர்:

“பகுத்தறிவோட சிந்திக்கணும். நாட்டில எவ்வளவு பிரச்சின இருக்குதுங்க. அத விட்டுப்புட்டு இந்த முட்டா சாமியாருங்க அவனுங்க கோயில இடிச்சிட்டு இவனுங்க கோயில கட்டணும்கிறானுங்க”

ஆனால், அடுத்து வந்த இளைய தலைமுறை வேறுபட்டு யோசிக்க வாய்ப்பு இருந்தது. பத்திரிக்கைகளையும், மேடை கோஷங்களையும் தாண்டி மனித இயல்பிலேயே இருந்த அறிந்து கொள்ளும் ஆர்வம் கேள்விகள் கேட்டது.

“எதுக்கு இருக்கிற கோயில இடிச்சிட்டு, இன்னொரு கோயில கட்டணும்கிறானுங்க?”

“அது முசுலீம்க கண்ட்ரோல்ல இருக்கிற கோயிலு. அத இடிக்கணும்கிறானுங்க.”

“அடப்பாவிகளா. கோயிலப் போயா இடிக்கணும்கிறானுங்க. இவனுங்க என்ன சாமியாருங்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏற்கனவே அது இந்து கோயிலா இருந்துச்சாம். அத துலுக்கமாருங்க இடிச்சிட்டு முசுலீம் கோயில கட்டிட்டானுங்க போல. ஆனாக்க, அப்பருந்தே யாருமே கும்பிடாம பூட்டித்தான் கிடந்துச்சாம். இந்த சாமியாருங்க அந்த கோயில இந்துக்களோட கோயிலா இப்ப மாத்தணும்கிறானுங்க.”

“என்னண்னே சொல்றீங்க. மொதல்ல முசுலீம்க எதுக்கு இந்துக் கோயில இடிச்சாங்க. அண்ணன் தம்பியா பளகறோம்னுல்ல நினைச்சேன்”

இந்தக் கேள்வி அந்த மூன்று தலைமுறை பாரம்பரியத்திற்குப் பிடிக்கவில்லை. அவர்களது கற்பனைக் கோட்டைகள் சுவரே இல்லாமல் இருப்பதை இந்தக் கேள்விகள் தடவிப் பார்க்கச் செய்தன. பதில் சொல்ல முடியாத கோபம். சொல்லும் சால்ஜாப்புக்களின் வெறுமை உறுத்தியது. வன்மத்தை அதிகரித்தது. ஜாதி வெறி அரசியலாக இருந்த பார்வை சாமியார்களை வெறுக்கும் பார்வையாக மாற ஆரம்பித்தது. மக்கள் சாமியார்களை வெறுத்தனர். அதேசமயம் பார்வையில் படும் கோயில்களைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

பேசியவர்கள் ஊரிலேயே பல பழங்கால கோயில்கள் சிதிலமடைந்து இருந்தன. நிலக்கோட்டையிலும் இடிந்த கோயில்கள் அனேகம். அங்கே இருந்த மிகப்பெரிய பழமையான சிவன்கோயில் இடிக்கப்பட்டு இப்போது ஹோட்டல் நடக்கிறது. பரோட்டா சால்னா எச்சில் இலைகளை எறிந்துவிட்டு, கைலியில் கையைத் துடைத்துக்கொண்டு மக்கள் போய்க்கொண்டே இருப்பார்கள். கோயிலுக்குச் சொந்தமான மிகப்பெரிய குளம் மூடப்பட்டு கடைகள் கட்டப்பட்டுவிட்டன. குளத்தின் எதிரே, அந்த ஊர் சிறுவர்களிடம் கனவுகளை விதைத்த, ஒரு பாட்டியின் மடிபோல உறவுகொண்ட லைப்ரரி கட்டிடமும் இடிந்துவிட்டது. பழமையான நாயக்கர்கால கட்டிடம் அது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மற்றொரு பெரிய கட்டிடத்தில் இன்னுமும் மாநகராட்சி லஞ்சம் வாங்கிக்கொண்டிருக்கிறது. அதன் அருகிலேயே அரசமரத்தடிப் பிள்ளையாரும், ஒரு பெரிய கிணறும். எட்டாம் (அல்லது ஏழாம்) ஜார்ஜ் மன்னர் பிறந்த நாளுக்கோ, முடிசூட்டியதற்கோ, ஜலதோஷம் நின்றதற்கோ, அல்லது இந்தியாவிற்கு விஜயம் செய்ததற்கோ எழுப்பப்பட்டு, இன்னமும் இருக்கின்றன அந்தப் பெரியகிணறும், பிள்ளையாரும். ஆனால், இவற்றைச் சுற்றி வரலாறு பற்றி எந்த அறிவும் உணர்வும் இன்றி மக்கள் மலம் கழிக்கிறார்கள்.

இருந்தாலும் நிலக்கோட்டை முக்கியமான வியாபார தலம். பெரியகுளம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் போன்ற பெரிய ஊர்களும், அணைப்பட்டி, அம்மயநாயக்கனூர் போன்ற சிறிய கிராமங்களும் வியாபரங்களுக்காக ஒன்று கூடும் இடம். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படக் காரணமாக இருந்தது ஆற்காட்டு போர். அந்த ஆற்காட்டுப் போரின் கடைசிச் சண்டை அம்மய நாயக்கணூரில்தான் நடந்தது. ஆனால், யாருக்கும் அது தெரியாது. அணைப்பட்டியும் பிரபலமான கிராமம். அந்த ஊர் அணைதான் பெயர்காரணம். அங்கே இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தம். ஒரு பெருவெள்ளத்தில் வந்து சேர்ந்த ஆஞ்சநேயர் சிலைக்குக் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

வைகையில் வெள்ளம் வந்தது என்பதே நம்ப முடியாதது. இதில், இரண்டு ஆளுயர ஆஞ்சனேயரையும் அடித்துவந்தது என்பது கொஞ்சம் ஜாஸ்திதான். இருந்தாலும், இதுதான் புராணம். ஆற்றங்கரையிலேயே கோயில். வெள்ளம் வந்தால் ஆஞ்சநேயர் கோயிலோடு மூழ்கிவிடுவார். வெள்ளம் வடிந்ததும் அர்ச்சகர்கள் வந்து ஆஞ்சநேயருக்கு நைவேத்தியம் வைப்பார்கள். அதுவரை ஆஞ்சநேயர் சாப்பாட்டிற்கு என்ன செய்வார் என்று தெரியவில்லை. ஆஞ்சநேயருக்கு வடை பிடிக்கும். மத்ஸ்யம்? தெரியவில்லை. ஜல உலகத்துத் தெய்வ ரகசியம்.

இதுபோன்ற பல கிராமங்களையும், சுற்றியுள்ள தற்போதைய நகரங்களையும் நாயக்க ஜமீந்தார்கள் ஆண்டார்கள். கூளப்ப நாயக்க ஜமீந்தாரின் நிலக்கோட்டை அரண்மனையும் மழையில் இடிந்துபோய்விட்டது. இருப்பது இந்த ஜமீந்தார் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு புத்தகம். அதுவும் இடிந்து போன லைப்ரரியின் ஏதோ ஒரு மூலையில். ஜெயக்குமாரைப் போன்ற லைப்ரரி பிசாசுககளுக்கு மட்டுமே இந்த புத்தகங்கள் கண்ணில்படும். லைப்ரரி அப்போது நால்ரோடில் இருந்தது. நால்ரோட்டைத் தாண்டி நேராகப் போனால் சின்ன பாலம் வரும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டியது. ஆனால், அதிலும் வெடிகுண்டு வைத்தார்கள்.

வளவன்திருமா மற்றும் பாண்டியன்ஜான் குழுக்களில் இருந்தவர்கள் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஆண்டவர் சாட்சியாக மார்தட்டினர். மக்களிடம் ஓட்டுக் கேட்டனர். ஒரு நாள் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே நடுரோட்டில் திடீரென்று ஒரு நாள் காலை 12 அடி உயரத்தில் அம்பேத்கார் சிலை திடீரெனத் தோன்றியது. பாரா-மிலிட்டரி போலீஸ் வந்து என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்கள் கழிந்தன. வத்தலக்குண்டு-பெரியகுளம்-மதுரை பஸ்கள் போகமுடியவில்லை. நிலக்கோட்டை ரிசர்வ்ட் தொகுதி. கர்த்தர் பீடித்த கரும பூமி. இருந்தாலும், சுற்றி இருந்தவர்களில் ஆதிக்க சாதியினரும் கணிசம். நால்ரோட்டில் நடந்த சாதிச்சண்டை, அதனால் நடந்த துப்பாக்கிச் சூடு அதை ஒரு கலவரபூமியாக ஆக்கின. கருமம் பீடித்த பூமி கலவர பூமியானது இயல்பான வளர்ச்சிதான். சண்டையை ஆரம்பித்துவிட்டு உண்டையைச் சாப்பிட அரசியல்வாதிகளும், ஆண்டவன் கட்டளைப் படி அவர்களை வளர்த்துவிட்ட மத அமைப்புகளும் காத்திருக்கின்றன.

தலைவலியும், தலை வெட்டுகளும் மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக நால்ரோட்டில் இன்னொரு போலிஸ் ஸ்டேஷனே ஆரம்பித்தார்கள். ஒரு சின்ன ஊரில் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கும் பெருமை இந்தியாவில் இந்த ஊருக்குத்தான் உண்டு. நிலக்கோட்டை நால்ரோட்டில், போஸ்ட் ஆஃபீசுக்குப் பக்கத்தில் ஒரு டெலிஃபோன் பூத் போல அது இருக்கும். கொடைக்கானல் போகும்போது, பேருந்தில் இருந்தே இந்தப் போலீஸ் ஸ்டேஷனை தரிசித்துப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம். இன்றைய சம்பவங்கள் நாளைய வரலாறு. நாளை மறுநாள் அவையே புனிதக் கதைகள்.

அப்பேற்பட்ட இந்திய வரலாற்றுப்படி, கெட்டதை நிறுத்தவும் நல்லதை ஆரம்பிக்கவும் இந்தியாவில் எப்போதும் இந்து சாமியார்கள்தான் அடிக்கல் நாட்டுவார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு சாமியார்தான் முன்வந்தார். அந்த ஊர் பெரியவர்களைப் பார்த்துப் பேசினார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

“இங்கே சாதிவெறியும், மதவெறியும் ஜாஸ்தியா இருக்கு. வாழ்க்கையில படிச்சு முன்னேறத விட்டுட்டு குண்டு வைக்கிறது, அடிதடின்னு மனுஷா வீணாப் போறா. ஊர் சுபிட்சமா இருக்கணும்னா ஒண்ணு கோயில் கட்டணும். இல்லன்னா பள்ளிக்கூடம் கட்டணும். இப்போதைக்குத் தேவை பள்ளிக்கூடம். அதனால ஜாதி மத வித்தியாசம் பார்க்காம எல்லாரும் ஒத்துமயா படிக்க ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துங்கோ. அடுத்த தலமுறயாவது ஒத்துமயா முன்னேறட்டும்.”

தலித்துகளைச் சேர்த்துக்கொள்வதாக இருந்தால் மட்டுமே மடம் உதவி செய்யும் என்பதை வற்புறுத்திச் சொன்னார். ஒத்துக்கொள்ள வைத்துப் பள்ளிக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டிவிட்டுப் போனார்.

அவர் வந்தபோது சட்டையெல்லாம் போடாமல், பஞ்சகச்சத்தை ஞாபகப்படுத்திக் கட்டிக்கொண்டு, கண்ணீர்மல்க நின்ற சில பெருசுகள் அவர் போனபின்னால், “சேரிக்குப் போன சந்நியாசிக்கு என்ன பிராயச்சித்தம் தெரியுமோ? ஒரு மண்டலம் சாணவரட்டி எரியவச்சி அந்த அக்னியிலதான் உக்காரணும். பஞ்சகவ்யம் மட்டும்தான் ஆகாரம். சாணிக் கரைசலில்தான் குளிக்கணும். இப்ப நடக்கிறதப் பாரு. கலிகாலம் முத்திடுத்து” என்றனர். இந்தப் பேச்சுக்களை தலித்துகளை வெறுக்கிற மற்ற உயர்ஜாதியினரும் வரவேற்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பின்பு ஜெயேந்திர சுவாமிகள் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அப்போது பிரச்சினை தீர வேறு ஏதும் நல்ல வழி தெரியவில்லை. பள்ளிக்கூடத்திற்கு சங்கர வித்யாலயா என்று பெயர் சூட்ட முடிவாயிற்று. எடுத்து நடத்த சரியான ஆட்களைத் தேடினார்கள்.

இதற்கிடையில் அரசாங்கத் தரப்பிலிருந்து நிலக்கோட்டைக்கு முரட்டுத்தனமான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள். குண்டுவெடித்த நால்ரோட்டுப் பாலத்தில் யாரும் உட்காரக்கூடாது என்று சட்டம் போட்டார்கள். யாரும் போக முடியாதபடி ஒரு சிவன் கோயிலும், உட்கார்ந்து பேச முடியாதபடியாக ஒரு பாலமும். ஊருக்கு ஊர் இப்போது நடப்பதுதான்.

temple_mantapஒரு சிவன் கோயில் என்றா சொன்னேன்? தப்பு தப்பு. கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். சிவ சிவா. நிலக்கோட்டையில் ஒன்றல்ல மூன்று சிவன் கோயில்கள் உருப்படாமல் இருந்தனவாம். ஊரைத் தாண்டி வெள்ளைத்தாதன்பட்டிக்கு முன்னால் மதுரை ரோட்டின் வலது பக்கம் ஒரு கோயில். நிலக்கோட்டை நால்ரோட்டில் ஓட்டலுக்கு வாக்கப்பட்ட ஒரு கோயில். மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த பெருமாள் கோயிலில் ஒரு சன்னிதி. எல்லாக் கோயில்களுமே நாயக்கர்கள் கட்டியது.

லைப்ரரியிலிருந்த ஒரு புத்தகத்தால் கோயில்கள் பற்றியும், அந்தக் காலத்து கட்டிடங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஜெயக்குமாருக்கு அப்போது ஏற்பட்டது. அந்த புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை.

இரண்டாவது சுரங்கம் மாரியம்மன் கோயிலருகில் உள்ள பெருமாள் கோயிலில் அம்மன் சன்னிதியில் இருக்கிறது. பெருமாளுக்கு பின்னால் சிவன் சன்னிதி ஒன்று இருக்கிறது. லிங்க வடிவினர். பெருமாளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டிய நிலைமை இந்த சிவனுக்கு. ஆனால், வெள்ளைத்தாதன்பட்டியை அடுத்து இருக்கும் சிவன் அப்படியில்லை. தனிக் கோயில். பக்கத்திலேயே ஒரு அம்மன் கோயிலும், ரோடைத் தாண்டினால் வலது பக்கம் என்ன தெய்வம் என்று தெரியாத ஒரு கோயிலும். எல்லாமே இடிந்துதான் இருந்தன.

வெள்ளைத்தாதன்பட்டி சிவன் லிங்க வடிவினன். கர்ப்ப கிரகத்திற்குள் போனால் லிங்கம் உங்கள் இடுப்பு உயரம். இந்தக் கோயில் இருக்கும் இடம்தான் ஆதி நிலக்கோட்டை. உண்மையில் நிலக்கோட்டையின் நிஜப் பெயர் “நிலையான கோட்டை”. பஞ்சாயத்து போர்டின் ஆரம்ப கால ரெக்கார்டுகளில் இப்படித்தான் இருக்கிறது என ஜெயக்குமாரிடம் ஒருவர் சொன்னார். இதை ஆண்டு வந்த கம்பள நாயக்கர்கள் சோழி போட்டுப் பார்த்ததில் இந்தப் பெயர் வைக்கும்படி வந்ததாம். இப்போது போனால் கோட்டை சுற்றுப்புற மதிலை மட்டும்தான் பார்க்க முடியும். கூளப்பநாயக்கன் அரண்மனையும் மழையில் இடிந்தாயிற்று.

அந்த அரண்மனையைச் சுற்றித்தான் நவீன காலத்து கிராமத்து ராஜா ஒருவர் தனது சீமைப் பெருமையை உழக்கிற்குள் கிழக்காகக் காட்ட ஒரு சினிமா எடுத்தார். படம் எடுக்கிறேன் பேர்வழி என்று வந்த அந்த சினிமா யூனிட்காரர்கள் அந்த அரண்மனையில் இருந்தவர்கள் வழிபட்டு வந்த பழங்கால வாட்கள், வேல்கள், குத்தீட்டி, சிறிய கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அது வேறு கதை. சிவன் கோயிலுக்கு வருவோம். இந்த சிவன் கோயில் இருந்ததே யாருக்கும் நினைவில்லை. பல வருடங்களாக பூட்டியே கிடந்த கோயிலுக்கு விமோசனம் வந்தது. பள்ளிக்கூடத்தில் ஜெயக்குமாரோடு ஒன்றாகப் படித்த ஒருவரின் மூலமாக.

சிறுவனாக இருக்கும்போதே மாரிமுத்துவிற்கு அரசியல் சகவாசம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். தோழர்களுக்கு டீ, பீடி வாங்கிக்கொடுத்துக்கொண்டு புரட்சி செய்ய கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தார். மீதி நேரங்களில் அவர் வீட்டின் வழியாகப் பள்ளிக்குப் போன ஜெயக்குமாரை “ஆந்தை, ஆந்தை” என்று தினமும் கேலி செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் கோபம் கொப்பளிக்க சக மாணவர்களிடம் “இன்று அவனை நன்கு உதைக்கப் போகிறேன். எவனாவது வாத்தியாரிடம் சொன்னீங்க, செத்தீங்க” என்று சொன்னபோதுதான், ஒரு நல்ல ஞானோபதேசத்தை அவர்கள் ஜெயக்குமாருக்குச் சொன்னார்கள்.

“டேய், மாரிமுத்து கம்யூனிஸ்ட் கட்சியில இருக்காண்டா. அவன் மேல கைய வச்ச, அவ்வளவுதான், கட்சிக்காரங்க எல்லாரும் ஒன்னா ஒதைக்க வருவானுங்க”.

ஜெயக்குமாரின் வீரம் ஞானம் பெற்றது. அன்றிலிருந்து, ரோடு திரும்புவதற்கு முன்னால் வீட்டு வாசலில் மாரிமுத்து இல்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் ஒரு ஓட்டமாய் ஓடி அந்த வீட்டைத் தாண்டி விடுவான். கம்யூனிஸப் புரட்சியை ஜெயக்குமாரின் கெரில்லாப் போர் முறை வென்றது.

அப்புறம் பல வருடங்கள் கழித்துப் பார்த்தால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட தோழர் மாரிமுத்து, துறவி மாரிமுத்தாக வந்து நின்றார்.

sadhu_sleeping_75a40மதுரை ஆதீனத்திலோ அல்லது வேறு எங்கேயோ சந்நியாசம் பெற்றுக்கொண்டதாகச் சொன்னார். துறவு மேற்கொண்டுவிட்ட பிறகு ஒரு களை வந்து சேர்ந்திருந்தது. துறவில் தீவிரத்தோடு இருப்பதையும் உணர முடிந்தது. பல விரதங்களை மேற்கொண்டிருந்தார். சமைத்த உணவு எதையும் உண்பதில்லை. ஏதேனும் பச்சிலைகள், பழங்கள் இவையே உணவு. பல சமயங்களில் வெறும் அருகம்புல்லை அப்படியே சாப்பிடுவார். காலில் செருப்பணிவதில்லை. எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். அவரும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரான பெருமாள் என்பவரும் ஒரே வீட்டில் வசித்துவந்தார்கள். தமிழ்நாட்டில் அரசாள்வது பிணந்திண்ணிகளாக இருக்கும்போது இந்த சகவாசம் செல்லுமா?

அயோத்தியில் பூட்டிக்கிடந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள். காத்துக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ கொல்றாங்களே” போஸ் கொடுத்துவிட்டு, இந்தியா முழுவதும் இந்துக்களை வெட்டினார்கள். அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்காரர்களை கைது செய்தது.

போலீஸ் வந்தபோது பிரச்சாரகர் வீட்டில் இல்லை. வீட்டில் துணி துவைத்துக்கொண்டிருந்த சாமியாரை, அயோத்தி கோயிலை இடித்ததாகச் சொல்லி சிறையில் வைத்துவிட்டது போலீஸ். பெருமாள்ஜி தலைமறைவாக இருந்தவாறே இவரை விடுதலை செய்ய முயற்சிகள் செய்தார். பிரச்சினை தீர்ந்தவுடன் சாமியாரை வெளியே விட்டுவிட்டார்கள். ஆனால், ஜெயிலுக்குப் போன கோபத்தில் இவர் பெருமாள்ஜியோடு இருந்த உறவையே முறித்துக்கொண்டு விட்டார். இவரைப் பற்றி பேசினால் பெருமாள்ஜியும், “போலீஸ்காரனிடம் இந்த சாமியார் சாப்பிட ரெண்டு கட்டு வைக்கப்புல் கேட்டாராம்” என்று அவருடைய கோபத்தையும் காட்டினார். சாமியார் சிவ பக்தர்தான். ஆனால், நந்தி பகவான் இல்லை. அருகம்புல் வைக்கோற் புல்லானது புரிந்தது. கோபம், பாபம், சண்டாளம். ஆண்டவர் கட்டளைப்படி பிரச்சினை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சாரகர் ஊரையும், வீட்டையும் காலி செய்துகொண்டு எங்கோ போய்விட்டார். சாமியார் தங்க வழி? சிவ பெருமான் வெள்ளைத்தாதன்பட்டியில் தன் இருப்பிடத்தைக் காட்டினான்.

அந்தக் கோயிலின் பூட்டிற்கு சாவியை யார் வைத்திருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து, வாங்கி, அந்தக் கோயிலிலேயே தங்க ஆரம்பித்தார். அப்போது அவரைக் காண அடிக்கடி ஜெயக்குமார் செல்வதுண்டு. கர்ப்பகிருகம் வரைக்கும் நட்பினால் அனுமதிப்பார். ஐயனுக்கு அபிசேகம் செய்யும் பாக்கியமும் கிட்டியிருக்கிறது. கோயில் தியானம் செய்ய ஏற்ற இடம். உள்ளே நுழைந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிடும். சடாரென்று மனம் குவியும். யாராக இருந்தாலும் இதே அனுபவம்தான். அனுபவம் கொடுத்து என்ன செய்ய? பாழடைந்த கோயில்தானே. அந்தக் காலத்து அரசர்களின் தெய்வமாக இருந்தாலும் இந்தக் காலத்து அசுரர்களின் தெய்வம் இல்லையே இந்த சிவன்.

எனவே கோயில் எப்போது வேண்டுமானாலும் முற்றிலும் இடியும் வகையில் இருந்தது. கூரையிலுள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பித்தன. பார்த்தார் சாமியார். கூரை இடிந்தால் கைலாசம்தான். கைலாசத்திற்கு தான் போக ஆசைப்படாமல் கைலாசத்தை இங்கே கொண்டு வர ஆசைப்பட்டார். ஊர் முக்கிய புள்ளிகளை ஒவ்வொருவராய் பார்த்தார். பக்கத்து ஊர்களில் இருந்து வரும் கிராமவாசிகளுக்கு நல்லது சொன்னார். விஷக்கடிகளுக்கு மந்திரித்தார். குறி பார்த்தார். முதலில் கோயில் கூரைக்கு முட்டு கொடுத்தார். பின்னர், கூரைச் செங்கற்கள் விழாத வண்ணம் சிமெண்ட் பூச ஏற்பாடு செய்தார். கொஞ்சம்பேர் வர ஆரம்பித்தார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் சட்டென்று அமைதி தரும் தலம் அல்லவா? அதிலும், அலங்காரம் செய்துகொண்டு இருளான சூழலுக்குள் எரியும் தொங்கு விளக்கின் ஒளியில் கைலாசநாதராகவே சிவன் தெரிவார். கூட்டம் அதிகரித்தது. அங்கே ஒரு கல்லில் வட்டெழுத்துக்களில் ஏதோ எழுதியிருந்தது. ஒருமுறை “இந்தக் கோயில் பற்றிய வரலாறு தெரிந்துகொள்ள வேண்டோமே? இந்தக் கல்வெட்டைப் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியினருக்குத் தெரிவிக்கலாமா?” என்று ஜெயக்குமார் கேட்டபோது பதறிப்போன சாமியார் கலவரத்தோடு “ஐயோ, வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். காணாமல் போன கோயில் என்பதால் வரலாறு யாருக்கும் தெரியவில்லை. சாமியார் அவராகவே ஒரு பெயரை சிவனுக்குச் சூட்டினார் – மேட்டு மல்லீஸ்வரர் என்று திருநாமம் பெற்றார் சிவன். சிவனுக்கும் மறுபிறவிச் சங்கிலி. சங்கிலி முழுவதும் மாறிப்போன வரலாறுகள்.

ஆதீனத்திலிருந்து துறவு பெற்றவர் என்பதால் சாமியார் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ் கற்க ஆரம்பித்தார். தமிழில் பாடல்கள் எழுதுகிறேன் என்று ஜெயக்குமாரிடம் காட்டுவார். தப்பும் தவறுமாய் இருக்கும். ஜெயக்குமார் அதை சொல்லியும்விட்டார். அப்புறம் அவரது திருவாசக முயற்சிகள் பற்றி ஜெயக்குமாருக்கு அவர் தெரிவிப்பதில்லை. ஆனால், மனிதர் நல்ல பக்தர். தத்துவப் பிடிப்புள்ளவர். அவர் ஆதீனமாகப்போகிறார் என்றெல்லாம் புரளிகள் எழுந்தன. பெரிய மனிதர்கள் கோயிலுக்கு வர ஆரம்பித்தார்கள். குட்டைச் சுவராக இருந்த கோயில் சரி செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு அழகானது. கும்பாபிசேகமும் நடத்தினார் சாமியார்.

அவருடைய கோயிலுக்கு வர ஆரம்பித்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பயந்துபோய் மாரியம்மன் கோயிலிலும் ஒரு சிவலிங்கம் எழுந்தது — டிஸ்கோதெக்கில் ஆடும் பரதநாட்டியம்போல. மாரியம்மன் கோயிலுக்கு வருபவர்களுக்கோ நவக்கிரக சன்னிதியை சுற்றுவதற்குமுன் சுற்றவேண்டிய மற்றொரு இடமாக இந்த புதிய சிவலிங்கம் ஆயிற்று. அங்கிருந்த மாரியம்மன்தான் முதல் தெய்வம். சக்தியுள்ளவள். எனவே, அங்கே புதிதாய் எழுந்த சிவனை சீந்துவோர் அதிகம் இல்லை. பழமை மிகுந்த இந்த மேட்டுமல்லீசுவரர் கோயிலின் ஈர்ப்பு சொல்லி மாளாது.

ஆக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மேட்டு மல்லீஸ்வரர் வளர்ந்துகொண்டே போனார். சிவனுக்கான விசேட தினங்கள் அனைத்தும் சிறப்பாய் செய்தார் சாமியார். பூஜைகள் என்ன, புனஸ்காரம் என்ன என்று போட் போடென்று போட ஆரம்பித்தார். திருவிழாக்கள் வேறு சீராக வர ஆரம்பித்தன. இதையெல்லாம் பார்க்கும்போது பலரது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். கோயில் வளர ஆரம்பித்தபின் லக்ஷ்மியும் சாமியாரிடம் சேர ஆரம்பித்தாள். சாமியார் ஒரு பழைய அம்பாசடர் காரை செகண்ட் ஹேண்டாகவோ, தேட் ஹேண்டாகவோ வாங்கினார். காரில் போகும்போது தெரிந்தவர்களைப் பார்த்துவிட்டால், ஒரு குழந்தையின் குதூகூலத்துடன் “சாமீஈஈஈஈ, எப்படி இருக்கே” என்று கத்துவார். டாட்டா காட்டிச் சிரிப்பார்.

அவருடைய நிர்வாகத் திறனைப் பார்த்த சிலபேர் ஜெயேந்திரர் அடிக்கல் நாட்டிய பள்ளிக்கூட வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடம் கட்ட இவரும் முதல் போட்டார். கொஞ்சம் கொஞ்சமாய் வேலைகள் ஆரம்பித்தன. மிக மிக மிக மிக மெதுவாய். பள்ளி கட்ட விரும்பிய பல பேர் காசு பார்க்க ஆசைப்பட்டார்கள். குழப்பங்கள் எழுந்தன.

சாமியார் பிரச்சினைக்குள் இழுபட விரும்பவில்லை. கொடுத்த காசைத் திருப்பித் தரச்சொல்லி தொந்தரவு செய்து முழுப்பணமும் கிடைக்காமல் கிடைத்தவரை பிழைத்தேன் என இருந்துவிட்டார். அவரைப் பற்றி பலர் குறை சொல்ல ஆரம்பித்தார்கள். காசுக்காக அலைகிறார் என்கிற கெட்ட பெயர் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஜெயக்குமார் அமெரிக்கா போய்விட்டான். பாதுகாப்பான அமெரிக்க சூழ்நிலை பிடித்துப்போனதால், நிலக்கோட்டைக்குத் திரும்பி வரவே பிடிக்கவில்லை. பல வருடங்கள் கழித்து வந்தபோது நண்பரான சாமியார் ஊரில் இல்லை. ஓடிப் போய்விட்டார். எங்கோ தலைமறைவாகிவிட்டார்.

“ஒரு பெண்ணோடு ஓடி விட்டார்”, “கோயிலுக்குள் பெண்களை நிர்வாணமாக சிவனுக்கு அபிஷேகம் செய்யச் சொல்லி வீடியோ எடுத்தார்”, “ப்ளூ ஃபில்ம் எடுத்தார்” என்றெல்லாம் புரளிகள். மலைப் பிரசங்கங்கள். பொய்.

அவர் அப்படிப்பட்டவர் இல்லைதான். ஆனால், எந்த மக்கள் அவரால் எழுந்த கோயிலால் பலன் அடைந்தார்களோ அதே மக்கள் அவரைப் பற்றித் தூற்றவும் தயங்கவில்லை. தங்களைப் போல, தங்கள் வாழ்க்கை முறை போல இல்லாமல் மாறுபட்டு வாழ்பவர்களை இழிவு செய்யவே காத்திருக்கிறார்கள். திருமணம் செய்துகொண்டு திருட்டுத்தனம் செய்பவர்களை ஏற்கும் உலகத்தால் திருமணம் செய்யாமல் இருப்பவர்களை ஏற்கமுடிவதில்லை. அவர்கள் ஒழுங்காய் இருந்தாலும் குறை சொல்லுவார்கள். இல்லாவிட்டால் கேப்பையில் தேன் நக்குவார்கள். எப்படி இருந்தாலும் ஏசும் ஊரார்.

அந்த ஊராருக்கு அருள் பாலிக்க மற்றொரு சிவன் கோயில் அக்கிரகாரத்துக்கு அருகேயே இருக்கிறது. அம்மாவின் ஒக்கலில் இருந்தவாறே அந்த நடராசர் கோயில் திருவாதிரை விசேஷங்கள் பார்த்த ஞாபகம் ஜெயக்குமாருக்கு இருக்கிறதாம். கோயில் திருவாதிரைக் களி மிகச் சுவையான பிரசாதமாம். அப்புறம் ஒரு பெரியதனக்காரர் அந்த கோயிலை புணருத்தாரணம் செய்கிறேன் பேர்வழி என்று, கோயிலை இடித்து, நடராஜரை பக்கத்தில் இருந்த ஒரு சிறிய அறையில் சிறை வைத்தார். கோயிலை தரைமட்டமாக்கியபின் அஸ்திவாரம் தோண்டுகிறேன் என்கிற பெயரில் மூலவர் இருந்த இடத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த ரத்தினங்களையும், வைடூரியங்களையும் லவட்டிக்கொண்டதாக இன்னமும் புரளி இருக்கிறது. கிடைத்ததில் பங்கு கொடுத்தாரோ இல்லையோ தெரியவில்லை. கொடுத்திருந்தால் கெட்ட பெயர் வந்திருக்காது. கோயில் இடிந்தது இடிந்ததுதான். பாழாகிப் போனதுதான் மிச்சம்.

வைரங்களும், வைடூரியங்களும் எடுத்தும் என்ன ப்ரயோஜனம்? ஊர் தனவந்தர்களில் ஒருவராக இருந்த இவரின் தொழிலும், குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, இப்போது ஏதோ ஜீவனம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிவன் சொத்து குல நாசம் என்று ஊரார் சொல்லிக்கொள்வதோடு சரி. சிவனிடம் கொள்ளையடித்தவருக்கும் உதவவில்லை. ஓட்டாண்டியான சிவனையும் கவனிக்கவில்லை. இன்னும் மோசமானது நடராஜனின் நிலைமை. ஊரார்.

nataraja_shadowபாழான கோயிலுக்காவது பூசாரி இருக்கலாம். இல்லாத கோயிலுக்கு ஏது பூசாரி? காசியில் இருந்து வந்ததாகச் சொல்லிக்கொண்ட ஒரு வட இந்திய பிராமணரை பூசாரியாக வைத்தார்கள். அவருடைய நிலை சவண்டி பிராமணனுக்குக் கொஞ்சம் மேலே. ஆரம்பத்தில் தீபாராதனை காட்டி கிடைக்கும் தட்சணையில் பிழைப்பை நடத்தினார். நடராஜருக்கே வெறும் சின்ன அறையை இந்த நிலக்கோட்டைக்காரர்கள் ஒதுக்கியிருக்கும்போது அழுக்காய் நாறும் இந்த பூசாரிக்கு எங்கு வாசம்? இடிபட்டது போக மிஞ்சியிருந்த நடரேழியில் கொஞ்ச நாட்கள் தங்கினார். கொஞ்ச நாள்தான். அப்புறம்? அவருடைய அழுக்கான வேட்டியும், சட்டையும், நடராஜர் அடைந்து கிடைந்த அறையிலேயே தங்க ஆரம்பித்தன. அவரும்தான். நடராஜருக்கும் வேறு வழியில்லை. பூசாரிக்கும் வேறு வழியில்லை. வழியில்லாத இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சகித்துக்கொண்டனர். ஏற்கனவே நடராஜர் காலைத் தூக்கிக்கொண்டு நிற்பதால் இந்த பூசாரி புரண்டு படுக்க வசதியும் ஆயிற்று.

உதவுவதைவிட அறிவுரை சொல்லுவதும் மட்டம் தட்டுவதும் சமூகத்திற்கு எளிது. இந்த பிராமணருக்கு ஒழுங்காய் சுலோகம்கூட சொல்லத் தெரியவில்லை என்பதை ஓரளவு சுலோகம் சொல்லத் தெரிந்த பிராமணர்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள். ஓரளவு மரியாதையான உத்தியோகமும், பிறந்துவிட்டதாலே எளிதாய் கிடைத்துவிட்ட சாதியின் பெருமையும், பீற்றிக்கொள்ள வேறு எதுவும் இல்லாதவர்களுக்கு ஏளனம் செய்வதும் எளிதாய் லபிக்கிறது. நாலு சுலோகங்கள் சொல்லத் தெரிந்துவிட்டாலே ப்ரம்ம ஞானம் கிடைத்த பிம்பம். கரும்பு இல்லாத ஊரில் இலுப்பைப்பூக்கள்தான் சக்கரை. இலுப்பைப்பூக்கள் பூசாரியை ஏளனமாய் நடத்தின. ஆனால், எதையும் உபயோகிக்கும் உலகமாயிற்றே இது. நடராஜரை கவனிக்க வந்த பிராமணன் தெவச பிராமணன் ஆனார்.

ஒருமுறை பாட்டியின் திவசத்திற்கு சாப்பிட கூப்பிட ஜெயக்குமார் போனான். சடாரென்று சட்டையை மாட்டி, வேட்டியை உதறிக்கட்டிக்கொண்ட பூசாரி, ஒன்றும் பேசாமல் நடராஜர் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்துவிட்டார். தப்பாக ஏதேனும் சொல்லிவிட்டேமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, சுவாமியின் பின்பக்கத்தில் வைத்திருந்ததை எடுத்து தான் உபயோகிப்பதற்காக வெளியே எடுத்துப்போட்டார் பூசாரி.

செருப்பு.

மாட்டிக்கொண்டு “வாடா, அம்பி போலாம்” என்று அழைத்தவாறே நடக்க ஆரம்பித்தார். அகிலம் காப்பவன்தான் பிய்ந்த செருப்பையும் காத்துக்கொண்டிருந்திருக்கிறான். உள்ளே உற்றுப்பார்த்ததில் அவன் காலைத் தூக்கி வைத்திருப்பதற்கு வேறு காரணங்களும் தெரிந்தன. பூசாரியின் கிழிந்த பாய், தலையணை, கௌபீனங்கள், பறக்கிற கரப்பான் பூச்சிகள், ஓடுகிற எலிகள். “அடப் பாவி, எப்படியடா இப்படி இருக்கிறாய்?” என்று அவனைப்பார்த்துக் கேட்டுவிட்டு இந்த ஐயரோடு வீட்டுக்கு நடையைக் கட்டினான் ஜெயக்குமார். சிவன்தான் கோபக்காரனாயிற்றே. சொன்னது அவனுக்கு “சுருக்கென்று” தைத்திருப்பது கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய வந்தது.

பக்கத்தில் ஓட்டல் நடத்திவந்தவருக்கு ஓட்டல் பெரிதாக வேண்டும். கோயில் நிலமோ சிதம்பர ரகசியமாய் வானம் பார்த்து கிடந்தது. கோயிலோடு இருந்த பெரிய கிணற்றை ஏற்கனவே தூர்த்து மூடியாயிற்று. கோயில் நிலத்தை எனக்குக் கொடு நான் சிறிதாக கோயில் கட்டுகிறேன் என்று தாக்கீது போட்டார். யார் யாரையோ பிடித்ததில் கோயில் நிலம் ஓட்டலுக்குப் போனது. எதிர்த்தாற்போல இருந்த அரசமரத்தடியில் காற்று வாங்கிக்கொண்டிருந்த பிள்ளையாரை விட கொஞ்சம் உயரமாய் ஒரு கோயிலும் எழுந்தது. அந்த சிறிய கோயிலுக்குள் அகிலாண்டேஸ்வரன் இப்போது நர்த்தனம் ஆடுகிறான். ஆள் நல்ல அழகன். ஐம்பொன் நிறத்தில் ஆடுகிற வேகத்தில் ஜடை சொடுக்கினாற்போல காற்றில் பறக்கும்; ஆனால், இவன் ஆடுகிற களைப்பே இல்லாமல் புன்னகையை சிந்துவான். மனுஷாளுக்கு நல்ல மனது இருக்கிறதோ இல்லையோ, அழகை ரசிக்கும் குணம் இருக்கிறது. எனவே, இப்போது அவனுக்கு இரண்டு வேளை சாப்பாடு. ஓட்டல்காரர் தயவு.

ஆனால், அவனும் சுயநலவாதிதான். பிட்டையும் தின்றுவிட்டு பிரம்படியும் கொடுத்தவன். அதனால் தன்னைக் கவனித்துக்கொள்ள இப்போது வேறு ஒரு நல்ல பூசாரியையும் ஏற்பாடு செய்துகொண்டுவிட்டான்.

பல வருடங்கள் கழித்து வந்த ஜெயக்குமார் பழைய பூசாரி என்ன ஆனார் என்று விசாரித்தான்.

“தெவசத்துக்கு வருவாரே அந்த ஐயரா?”

“ஆமாம்.”

“ஹ்ம், யாருக்குத் தெரியும். ஒருவேளை காசிக்கே போயிருச்சோ என்னவோ.”

நிலக்கோட்டையில் மனுஷாளுக்கும் தெய்வத்திற்கும் ஒரே குணம்தான் போல.

7 Replies to “வையகம் இதுதானடா”

  1. Hello Panithuli

    Pinni pedal edukureenga. i enjoyed reading the whole article. Your style (sarcastic but with lot of essence) resembles somebody very famous.

    BTW, who is that swamiyar sleeping next to the dog ? Is he that Tholar / Thuravi Marimuthu ?

  2. ஐயா பனித்துளி, எப்படிங்அ ஐயா இந்தசெதிகளும் இந்த எள்ளல் நடையும் உங்களுக்குக் கைவந்தன. ஒவ்வொரு இடுகையும் அசத்தலாக இருக்கின்றன

  3. @ who is that swamiyar sleeping next to the dog ? Is he that Tholar / Thuravi Marimuthu ?

    அவரைப் போலத்தான் இருக்கிறது. ஆனால், படத்தில் இருப்பவர் அவர் இல்லை.

    நன்றி.

  4. அட்டகாசமான கதை. உள்குத்து மேல் உள்குத்து.

    பனித்துளி வழக்கம்போல கலக்குகிறார்.

  5. //”அயோத்தியில் பூட்டிக்கிடந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டார்கள். காத்துக்கொண்டிருந்தவர்கள், “ஐயோ கொல்றாங்களே” போஸ் கொடுத்துவிட்டு, இந்தியா முழுவதும் இந்துக்களை வெட்டினார்கள். அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ்காரர்களை(உத்தம புத்திரர்களை) கைது செய்தது”//

    ஆகா…. என்ன நயமான எழுத்து..ம்ம் …
    இந்தியாவிலும்,எத்தனையோ கோவில்கள்(கட்டடங்கள்) ஜாதி பிரச்சனைல பூட்டிதான் கடக்கு..அத இடிச்சு மசூதி கட்ட வேணாம்,வேற ஏதாவது கட்டினாலும்,பனித்துளி,இப்படித்தான் எழுதுவாரோ..கேப்புல மசூதிய இடிச்சத நல்லாவே ஞாயபடுத்துறீங்க..

    இதுக்கு,ரிப்ளை வேற,வெறித்தனமா..

    //பெரியசாமி பிள்ளை
    8 August 2009 at 5:03 pm
    அட்டகாசமான கதை. உள்குத்து மேல் உள்குத்து//

    அவரே சொல்றாரு கதைன்னு ….
    ஆமா கத தானே…..

  6. தமிழ் ஹிந்துவை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது! நானும் படித்து நண்பர்களுக்கும் சொல்லி வருகிறேன்! அருமை! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *