பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்

சுதந்திரப் போராட்டம் என்று சொன்னாலே மகாத்மா காந்திஜியின் ஞாபகம் வருவதுபோல், வைக்கம் போராட்டம் என்று சொன்னாலே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஞாபகம் தான் வருகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொன்னாலே நேதாஜி, வ.உ.சி. பாரதியார், போன்றவர்கள் ஞாபகத்தில் வருகிறார்கள். அதேபோல் வைக்கம் போராட்ட வீரர்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தவிர வேறு யாராவது பெயர் நமக்கு ஞாபகம் வருகிறதா?

யார் பெயரும் ஞாபகம் வராது.

kesavamenonஒருவேளை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான் வைக்கத்திலே போராடினாரா? இல்லையே கே.பி. கேசவமேனன், டி.கே. மகாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலபேர் போராடி சிறை சென்றார்களே- அவர்களின் பெயரெல்லாம் வெளிவராமல், வைக்கம் போராட்டமே ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் துவக்கப்பட்ட மாதிரி எல்லோராலும் பேசப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் மற்ற தலைவர்களுடைய பங்கை மறைத்து ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை மட்டும் முன்நிறுத்துகின்றனர். காரணம் வைக்கம் போராட்ட வெற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நினைப்பு அவர்களை எந்த அளவுக்கு பொய் சொல்வதிலும், குழப்பத்திலும் கொண்டுபோய் விட்டிருக்கிறது தெரியுமா? அந்த விபரங்களை சற்று பார்ப்போம்.

”வைக்கம் போராட்டத்தில் 19 பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தரால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு, சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்,” என்று சாமி சிதம்பரனார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களிடமே காட்டி, அவர் சொன்ன திருத்தங்களை ஏற்று பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்ட, ”தமிழர் தலைவர்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

”எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்” என்று ”வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார்” என்ற தம் புத்தகத்திலே கூறுகிறார்.

இந்த இரு நூல்களிலும் இரு வேறுபட்ட பெயர்களை ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்.

வைக்கம் போராட்டத்தின் வெற்றி வீரர் என புகழப்படும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு யார் கடிதம் அனுப்பியது என்பதிலே கூட குழப்பம் போல் தெரிகிறது. தனக்குக் கடிதம் அனுப்பியது குரூர் நீலகண்ட நம்பூதிரியா? அல்லது கேசவமேனனா என்று சொல்வதில் குழப்பம் ஏன்?

காந்திஜியின் பங்கு

18-10-1973 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வைக்கம் பற்றி கூறுகிறார்:-

”காந்திதான் இதை செய்ய வேண்டாம் என்று சொன்னவர், காந்திக்கு இதில் சம்பந்தமே இல்லை”
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)

வீரமணி கூறுகிறார்:-

”வைக்கம் போராட்டத்தில் – முதலாவது உண்மை என்பது அந்தப் போராட்டத்தினைக் காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது”.

”காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதுதான் உண்மை”. 

”போராட்டத்தின் தொய்வுக்குக் காரணமென்ன என்றால் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே காங்கிரசில் காந்தியாரின் ஆதரவைக் கோரினார்கள். காந்தியார் தம்முடைய ஆதரவைத் தரவில்லை என்பது மட்டுமின்றி போராட்டத்தின் எதிரிகள் சொன்னதையே ஒரே பக்கமாகக் கேட்டுக் கொண்டார்”.
(நூல்:- வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)

 

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர் சின்னக் குத்தூசி கூறுகிறார்:-

”வைக்கம் போராட்டம் காந்தியடிகளின் கட்டளைப்படி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அந்தப் போராட்டத்தை காந்தியடிகளே ஆதரிக்கவில்லை”.
(நக்கீரன் 31-04-1999)

 

இவ்வாறு காந்தியடிகளைப் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கர் முதல் அவருடைய சீடர்கள் வரை வைக்கம் போராட்டத்தில் காந்தியடிகளுடையப் பங்கை மறைத்து அவதூர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பொய் பிரச்சாரம் உண்மைதானா? என்பதைப் பார்ப்போம்.

”பெரியாரியம்’‘ என்ற ஒரு நூலுக்கு தலைப்பிட்டு, ‘வைக்கம் அறப்போர் பவழவிழாக் கருதரங்க மலர்’ ஒன்றை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த மலரில் ‘வைக்கம் அறப்போர் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்று தலைப்பிட்டு முனைவர் அ.கா.காளிமுத்து அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் காந்தியடிகளுடைய பங்கை மற்ற நூல்களின் துணை கொண்டு எழுதியுள்ளார். ஆதலால் வைக்கம் போராட்டத்திலே காந்தியடிகளுடைய பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

டி கே மாதவன்
டி கே மாதவன்

”(வைக்கம்) பிரச்சனையை அரசியல் ரீதியாகப் போராட வேண்டுமென்பதற்காக திரு.டி.கே. மாதவன் போன்ற ஈழவத் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரசு சபையை அணுக விரும்பினார். அதற்காக அக்கட்சியின் ஓத்துழைப்பை நாட, அச்சமயத்தில் நெல்லையில் தங்கியிருந்த காந்தியடிகளிடம் டி.கே. மாதவன் இப்பிரச்சனையை எடுத்துச் சென்றார். காந்தியடிகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தாலும் உடனடியாக இது பற்றி முடிவு எடுக்க விரும்பவில்லை.

பின்னர் சில நாட்கள் கழித்து காந்தியடிகள் டி.கே.மாதவனுக்கு ஒரு தந்தி மூலம் ஈழவர்களும் மற்றைய கீழ்ச்சாதியினரும் கோவில்களில் நுழைய எல்லாவித உரிமையும் உண்டு என்று செய்தியனுப்பினார். இச்செய்தி கேரளமக்களின் கவனத்தை ஈர்த்தது. முற்போக்கு எண்ணம் உள்ள வைதீகர்கள் கூட இதை ஆதரித்தனர்” என்று எழுதுகிறார் அ.கா. காளிமுத்து. அதனால் வைக்கம் பிரச்சனைக்கு காந்தியடிகள் 1922-23லேயே ஆதரவு கொடுத்திருக்கிறார் என்பது தெளிவு.

மேலும் அவர் எழுதுகிறார்:-

”டி.கே. மாதவன், கே.எம்.பணிக்கரின் உதவியுடன் 1923ஆம் ஆண்டில் கூடிய காக்கி நாடா காங்கிரசு மகாசபைக்கு இப்பிரச்சனையை (வைக்கம்) எடுத்துச் சென்றார். காந்தியடிகள் காங்கிரசு மகாசபையை தீண்டாமை ஓழிப்பு போன்ற ஆக்கரீதியான செயல்களில் ஈடுபடும்படி அறிவுரை கூறியிருந்தார்.

அதன்படி இப்பிரச்சனை கேரளத்தில் தோன்றியதும் இந்திய தேசிய காங்கிரசு மகாசபை. கேரள காங்கிரசு மகாசபைக்கு இதில் ஈடுபடும்படி அனுமதியளித்தது. அதற்குப் பின்னர் 1924 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 24-ம் நாள் எர்ணாகுளத்தில் கூடி கேரள காங்கிரசு தீண்டாமை ஓழிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தியது…

இக்குழு வைக்கம் என்ற ஊரை தேர்ந்தெடுத்து கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் தாழத்தப்பட்டோர் செல்ல உரிமை பெறுவதற்காக நடத்தும் போராட்டத்தை அறிவித்தது”.

இதன் மூலம் தெரிவதென்ன?

God is Truth
God is Truth

டி.கே.மாதவன் முன்முயற்சி எடுத்தாலும் 1924லேயே வைக்கம்  போராட்டத்தை நடத்தவும், அதற்காக ஒரு குழுவும் அமைத்தது காங்கிரசு மகாசபை, அதற்கு காந்திஜி ஆதரவு இருந்தது.

‘வைக்கம் போராட்டத்தினை காங்கிரஸ் தலைமை ஆதரிக்க மறுத்தது. காந்தி எதிராக இருந்தார். காந்திஜி ஆதரவுத் தரவில்லை என்று பொய் சொல்லி தன்னுடைய வெறுப்பை, ஆத்திரத்தை உண்மையிலேயே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவளித்த காங்கிரஸ் மீது காட்டுகிறார்.

வீரமணி எழுதிய ‘வைக்கம் போராட்ட வரலாறு’ என்ற நூல் காந்தியடிகளை தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அதில் காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தை நிறுத்தும்படி கூறியதற்கு, கே.பி. கேசவமேனன் எழுதிய கடிதம் உள்ளது. ஆனால் காந்தியடிகள் அனுப்பிய கடிதம் இல்லை. அதுமட்டுமல்ல கே.பி.கேசவமேனனுக்கு காந்தியடிகள் அனுப்பிய முதல் கடிதமும் மறைக்கப்பட்டுள்ளது. அந்த முதல் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்?

கே.பி. கேசவமேனன் தன்னுடைய சுயசரிதையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கேசவமேனன் கூறுகிறார்:-

”மகாத்மா காந்திக்கு வைக்கத்தின் நிலைகுறித்தும் எங்களைச் சத்யாக்ரஹம் செய்யத் தூண்டும் சூழலைக் குறித்தும் விவரித்து ஒரு கடிதம் எழுதி, அதற்கு அவருடைய ஆசிகளையும் கோரியிருந்தோம். அதற்கு அவர் வரைந்த கடிதம்:-

அந்தேரி
19-03-24

அன்புள்ள கேசவமேனன்:-

தங்கள் கடிதம் கிடைத்தது. தாங்கள் குறிப்பிடும் தங்களுடைய பிரதேச மக்களின் நிலை இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் வருந்துதற்குரிய தென்பதை நான் அறிவேன். நீங்களும் கூறுவதுபோன்று அவர்கள் தீண்டாதவர் மட்டுமல்ல. சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியது! நமக்கு இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்றால் அதில் எனக்கு ஆச்சரியம் தோன்றவில்லை.

நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீரவேண்டும். தடை விதிக்கப்பட்ட காலையில் கேரளக் காங்கிரஸ் கமிட்டியினர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து ஓர் ஊர்வலம் வரவேண்டுமென்று கருதுகிறேன். இது ஒருவகை சத்யாக்ரஹம். இதில் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்குரியதாகக் கூற வேண்டியதொன்றுமில்லை. நம்முடைய மக்களே உங்களை எதிர்த்தாலும் கூட நீங்கள் எதிர்க்க வேண்டாம்.

நீங்கள் அமைதியுடன் அடியேற்கவேண்டி வந்தாலும் ஏற்றுப்பொறுத்துக் கொள்ளவேண்டும். இந்த சத்யாக்கிரஹத்தில் பங்குபெறும் அனைவருக்கும் இக்கருத்தை வலியுறுத்தி அவர்களும், இதில் பூரண நம்பிக்கை கொண்டு நிறைவேற்றச் சித்தமாகும் வண்ணம் முயலவேண்டும். ஒரு தடவைக்குச் சிலரே சென்றால் போதும்.

ஆனால் அமைதியுடனும் பணிவுடனும் நடப்பவர்களாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விதிகளைப் பங்குகொள்ளும் எவரேனும் ஒப்புக்கொள்ளவில்லையெனில், யாத்திரையை நிறுத்திவிடத் தயங்கலாகாது. இத்தகைய பண்பாட்டுக்கு மாறாக இருப்பவர்களையும் நாம் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் நாம் இன்னும் ஈடுபடவில்லை. அதனால் கவனத்துடன் பணிபுரிய வேண்டியது மிகுந்த அவசியம்.

இச்செயல் அவ்வளவு எளிதானதல்ல. நான் இங்கே நோய்ப்படுக்கையில் இருந்தவாறே உங்களுக்கு கருத்தூன்ற வேண்டிய விஷயத்தை நினைவூட்டி, உங்களுடைய முயற்சிக்கு முழு வெற்றி கிடைக்கட்டுமென ஆசி மொழிந்து இப்போது விடைபெறுவது நலமென்று கருதுகிறேன்.

எம்.கே. காந்தி

(நூல்: கே.பி.கேசவமேனன் எழுதிய ‘கடந்தகாலம்’)

வைக்கம் போராட்டம் 30-03-1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் காந்தியடிகள் 19-03-1924 ஆம் ஆண்டு அன்றே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

காந்திஜியின் இந்த கடிதம் நமக்கு உணர்த்துவதென்ன?

அவரின் ஆசியோடு, ஆதரவோடு நடத்தப்பட்ட போராட்டம் என்பதைத்தானே! ஆனால் காந்திஜி ஆதரிக்கவில்லை என்று பொய் சொல்லி திரிகின்றார்களே பகுத்தறிவுவாதிகள் – வரலாற்றை திரித்துக் கூறுவதே சிலருக்குப் பிழைப்பாகிவிட்டது என்று கூற இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

 

முனைவர் அ.கா.காளிமுத்து கூறுகிறார்:-

“0-03-1924 ஆம் நாள் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தைத் தீவிரப்படுத்த கேரள மாநில காங்கிரசு கேரளத்தில் உள்ள பல இடங்களிலும் பிரச்சாரங்கள் செய்தது. காந்தியடிகள் இப்போராட்டத்தை மிக அமைதியாக நடத்தும்படி செய்தி அனுப்பினார். காந்தியடிகளின் முடிவை மதன்மோகன் மாளவியா, சுவாமி சகஜானந்தா போன்ற அகில இந்தியத் தலைவர்களும் ஆதரித்துச் செய்திகள் அனுப்பினார்”
(நூல்: பெரியாரியம்)

 

வைக்கம் போராட்டத்தை காந்தியடிகள் ஆதரித்தமைக்கும் இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒருவேளை சிலருக்கு சந்தேகம் வரலாம். காந்தியடிகள் உண்மையிலேயே ஆதரவு கொடுத்தாரா? இல்லையா? இப்படி சந்தேகப்படுபவர்களுக்காக…

மேலும் சில ஆதாரங்கள்….

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் ”சுயமரியாதை இயக்கம்’‘ என்ற நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் அணிந்துரையும், கல்வி அமைச்சராக இருந்த க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துரையும், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்கள் பாராட்டுரையும் வழங்கியுள்ளனர்.

அந்த நூலில் மங்களமுருகேசன் கூறுகிறார்:-

”கேரள காங்கிரசுத் தலைவரான ஜார்ஜ் ஜோசப், காங்கிரசுத் தலைவரான காந்தியடிகள் யோசனையின் பேரில் அறப்போரை நிறுத்திவைத்து மீண்டும் தொடங்கினார். கேசவமேனன், டி.கே.மாதவன் ஆகியோர் ஏப்ரல் 9ம் நாள் கைதாயினர். பம்பாயிலிருந்து காந்தியடிகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.”

 

ஆக காந்திஜியின் ஆசி இருந்திருக்கிறது என்பது உண்மை

காந்திஜி வைக்கம் போராட்டத்தை நிறுத்தும்படி நடுவில் கூறிவிட்டார் என்று கதறுகின்றனர் பகுத்தறிவாளர்கள். ஆனால் காந்திஜி நிறுத்தும்படி சொல்வதற்கு முன்னாலேயே வைக்கம் போராட்டத்தை இரண்டு நாள் நிறுத்திதான் வைத்திருந்தார்கள் காந்தியடிகளைக் கேட்காமலேயே இதை கே.பி.கேசவமேனன் கூறுகிறார்: உயர் வகுப்பாரின் ஆதரவைப் பெறுவதற்கு இரண்டு நாட்கள் சத்யாகிரஹத்தை நிறுத்திவைத்தேன் இந்நிலையில் மகாத்மா காந்தி மற்றொரு கடிதம் எழுதினார்.

அது இது தான்.

அந்தேரி – ஏப்ரல் 1

உங்களுடைய சத்யாக்கிஹத்தைக் குறித்து சில செய்திகளை என்னிடம் கூறுவதற்காக மிஸ்டர் சிவராமய்யரும், மிஸ்டர் வாஞ்சீசுவர ஜயரும் இங்கு வந்திருக்கின்றனர். தாழ்ந்த சாதிக்காரரும் அங்கு செல்வதற்கு உரிமையளிக்கப்படவேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதற்கு இசையவில்லை. எனினும் கோயிலையும் அதன் வழிகளையும் பற்றிய பொறுப்பும் உரிமையுள்ள அறங்காவலரிடமும் பிற அந்தணர்களிடமும் எடுத்துக்கூறி உணர்த்துவதற்குச் சில நாட்களாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மாதத்தில் அங்கு மாளவியாஜி வருவாரென்று அறிகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நீங்களும், கோயில் உரிமையாளரும் மாளவியாஜியை நடுவராக வைத்துக்கொண்டு பேசி முடிவு காணவேண்டியும் அவருடைய தீர்ப்பை ஒரு குறித்த காலத்துக்குள் வெளியிடவும், பிராமணர் அதற்கு இசைந்தால், இந்த நடவடிக்கைக்கு நடுநிலையாளர் இடைப்பட்டுப்பேசி முடிவு காண்பதற்கு தீர்மானம் செய்திருக்கிறபடியால், சத்தியாக்ரஹம் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதென்று அறிவித்து நிறுத்திவைக்கும்படி நான் யோசனை கூறுகிறேன்.

மேற்கூறிய இரு சகோதர்களும், என்னிடம் அறிவித்த முக்கியமான செய்திகளை உண்மை என்ற நம்பியே நான் உங்களுக்கு இத்தகைய அறிவுரை கூறுகிறேன். இந்த சீர்த்திருத்தம் சம்பந்தப்பட்ட முயற்சிகளை நிறைவேற்றுவதில் அவர்களும் நம்மைப் போன்றே ஆர்வத்துடனிருப்பதாகக் கூறுகின்றனர். அது உண்மையானால் நாம் அவர்களையும் நம்முடைய கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் என்ற வகையில் நம்மோடு இணைத்துக்கொள்ள நட்புறவும் இணக்கமும் காட்டவேண்டும்.

என்றும் உங்களுடைய உண்மையுள்ள
எம்.கே. காந்தி

(நூல்: கடந்த காலம்)

காந்திஜி எதிர்தரப்பினர் சொன்னதை நம்பியே இந்த கடிதத்தை எழுதுகிறார்.

சில நண்பர்கள் சொன்னதையடுத்து உயர்வகுப்பாரின் ஆதரவைப் பெறுவதற்காக வைக்கம் போராட்டத்தை நிறுத்தினார் கே.பி. கேசவமேனன். ஆனால் இதை யாரும் விமர்சிக்கவில்லை. அவர் செய்தது சரி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இதையே காந்திஜி சொன்னால் காந்திஜி தடுத்துவிட்டார் என்று வீரமணி குற்றம் சாட்டுகிறார். இந்த கடிதத்திற்குப் பிறகுதான் வீரமணி குறிப்பிட்ட கடிதம் கே.பி.கேசவமேனன் எழுதுகிறார்.

மேலும் வீரமணி கூறுகிறார்: ”கேசவ மேனனின் இந்த விளக்கக் கடிதத்திற்குப் பிறகும் காந்தியடிகள் உண்மை நிலையை ஒப்புக்கொள்ளவில்லை.”
(நூல்: வைக்கம் போராட்ட வரலாறு)

ஆனால் அ.கா. காளிமுத்து கூறுகிறார்:-

”தம்மை சந்திக்க வந்த வைதீகப் பிராமணர்கள் கூறிய செய்தியைக் கேட்டவுடன் வைக்கம் அறப்போரைச் சிறிது காலம் தள்ளிவைக்கும்படி கூறினார். பின்னர் போராட்டக்குழு காந்தியடிகளிடம் வைக்கம் போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துக் கூறியவுடன் போராட்டத்தை நடத்தச் சம்மதித்துள்ளார். இதன் பின்னர்தான் நிறுத்தி வைக்கப்பட்ட போராட்டம் மீண்டும் துவங்கியது.”
(நூல்: பெரியாரியம்)

வீரமணி சொல்வது உண்மை என்றால் அ.கா.காளிமுத்து ‘பெரியாரியம்’ நூலில் கூறுவது பொய்யாகும். ஆனால் பெரியாரியம் நூல் வைக்கம் போராட்ட பவழ விழாவுக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் அதில் அதிக நம்பகத்தன்மை இருக்கும் என்று நம்பலாம். வீரமணி சொல்வதிலேயே நிறைய பொய்கள் இருப்பதை பார்த்தோம். இந்த விமர்சனத்தையும் அந்த வகையிலேயே சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஒரு விமர்சனம் கூறப்படுகிறது.

அதாவது காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தில் வெளிமாநிலத்தவர் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுத்துவிட்டார் என்று பகுத்தறிவுவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் காந்திஜி அந்தகெட்ட எண்ணத்துடன் தடுக்கவில்லை. கேரளமக்களே போராடினால் அதற்கு அரசாங்கமே தலைசாய்க்கும். கேரள மக்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டாம் என்று அரசாங்கம் நினைக்கும் என்ற காரணத்தினால்தான் காந்திஜி அவ்வாறு கூறினார்.

இங்கே இன்னொன்றையும் கூறவேண்டும். அதாவது சித்தூர் மாவட்ட பிரச்சனை வந்தபோது தி.மு.க சித்தூரில் உள்ளவர்கள் மட்டுமே கலந்துக்கொள்ளலாம் என்று கூறியது. எல்லா மாவட்டத்தில் உள்ளவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறவில்லை. சித்தூர் மாவட்ட பிரச்சனையில் அங்குள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று தி.மு.க கூறியது சரியென்றால், வைக்கம் போராட்டத்தில் கேரள மக்களே கலந்து கொள்ளவேண்டும் என்று காந்திஜி கூறியதும் சரிதான். தி.மு.க வை குறைகூறாதவர்கள், காந்திஜியை குறைகூறுவது உள்நோக்கம் கொண்டது என்பதை அறியலாம் நாம். ஆனால் காந்திஜி வெளிமாநிலத்தவர் கலந்துகொள்ளக்கூடாது என்று சொன்னதுடன் வேறொன்றையும் கூறினார்.

 

அதையும் கா.காளிமுத்துவே கூறுகிறார்:-

”காந்திஜி மலபார் பகுதி சென்னை மாநிலத்தோடு இருப்பதால், அம்மாநிலத்தில் உள்ள தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நடத்தலாம் என்று கூறியமையால் போராட்டக்குழுவின் முக்கிய தலைவர்களான ஜார்ஜ் ஜோசப்பும், கேசவமேனனும் சேர்ந்து கையெழுப்பமிட்டு ஒரு கடிதம் எழுதி பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு அனுப்பி தலைமை தாங்கும்படி அழைப்பு விடுத்தனர்”.
(நூல்:- பெரியாரியம்)

காந்திஜிக்கு தடுக்கும் எண்ணம் இருந்திருந்தால் சென்னை மாநிலத்தவர் கூட கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே அந்த எண்ணம் அவருக்கு இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.

காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்று சொல்கிறார் வீரமணி. ஆனால் கா.காளிமுத்து கூறுகிறார்:-

“கேரள காங்கிரசு அமைத்துள்ள போராட்டக்குழுவில் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கும் கலந்த கொண்டார். காந்திஜியின் ஆலோசனைப்படி அக்குழுவில் பெரியார், டாக்டர் எம். பெருமாள் நாயுடு, மன்னத் பத்மனாபன், கோவை அய்யாமுத்து கவுண்டர், இராமகிருஷ்ணதாஸ், கோவிந்த சாணார் ஆகியோர் அங்கத்தினர்களாக இருந்து செயல்பட்டனர்”.
(நூல்: பெரியாரியம்)

காந்திஜியின் ஆலோசனைப்படித்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் குழுவில் கலந்துக்கொண்டார் என்கிறது வைக்கம் போராட்ட பவழவிழா மலர்.

இதிலே முக்கியமான விஷயம் வேறு ஒன்று இருக்கிறது. அதாவது திராவிடர் கழகம், பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கும் அளவுக்கு பெரியாரின் மீது பக்தி கொண்ட பிரபல எழுத்தாளர் சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:-

”எந்தத் தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியடிகள் அவரை (பெரியாரை) வைக்கம் போகச் சொன்னாரோ, அதே கொடுமை இங்கே தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் இயக்கத்தின் ஆதரவுடனே ஊக்கப்படுத்தப்பட்ட அக்கிரமத்தைக் காண்கிறார்.”

அதே நூலில், ”இன்னொரு விஷயம், வைக்கம்போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் நாட்டிலே இருந்து பெரியாரைக் குறிப்பாக தேர்ந்தெடுத்து காந்தியடிகள் அனுப்பிவைத்தார் என்றால் அதற்கொரு முக்கிய காரணமுண்டு” என்றும்

”கை முதல் இழந்தும் காராகிரகம் புகுந்தும் கொண்ட கடமைக்கு உழைக்கும் குடும்பம் அது என்பதால்தானே காந்தியடிகள் தீண்டாமை ஓழிப்புப்போருக்கு தீண்டோள் தட்டி புறப்படுக என பெரியாரை வைக்கத்திற்கு வாழ்த்தி அனுப்பினார்” என்று எழுதியுள்ளார்.

அதாவது லட்சோபலட்சம் மக்கள் படிக்கக்கூடிய தினகரன் ஞாயிறு மலரில் தொடர் கட்டுரைகளாக, காந்தியடிகள் தான் வைக்கத்திற்கு பெரியாரை வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார் என்று எழுதுகிறார் என்றால் பொய்யாகவா எழுதியிருப்பார்? இச்செய்தி பொய் என்றால் அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட வீரமணியிடம் இருந்து வரவில்லையே ஏன்?

இவற்றை எல்லாவற்றையும் விட முக்கிய ஆதார நூல் ஒன்று உள்ளது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட, பெரியாரின் சீடர் கோவை சி. அய்யாமுத்து ‘தனது வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார்:-

”ஒன்றே குலம்-ஒருவனே தெய்வம் எனும் சீரிய நெறியைப் பரப்பி வந்த வரக்கலை ஸ்ரீநாராயண குரு சுவாமிகள் எனும் ஈழவ சமுதாயத்தலைவரின் ஆசியும், மகாத்மா காந்தியின் பேராதரவும் அந்தச் சாத்வீக சமருக்குக் கிடைத்தது”.

….இது வீரமணி எழுதியிருக்கின்ற வைக்கம் போராட்ட வரலாறு நூலிலேயே இருக்கின்றது.

 

இதுபோன்ற எண்ணற்ற ஆதாரங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வைக்கம் போராட்ட முடிவிலேயும் காந்திஜியின் பங்கு உள்ளது.

 

அ.கா.காளிமுத்து கூறுகிறார்:-

”கேரள காங்கிரஸ் கமிட்டியும் வைக்கம் சத்தியாக்கிரக் குழுவும் காந்தியடிகள் இப்பிரச்சனையில் ஈடுபடும்படி விரும்பியது. அதன்படி காந்தியடிக்ள 1925ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8ம் நாள் திருவனந்தபுரம் சென்றார். காந்தியடிகள் திருவாங்கூர் இராணியுடன் வைக்கம்போராட்டம் பற்றி நடத்திய சமரசப் பேச்சில் பிட் என்ற ஆங்கிலேயே அதிகாரி, திவான் இராகவ அய்யங்கார் மற்றும் வைதீகர்கள் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் திருவாங்கூர் இராணியார் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்கு உரிமை வழங்கச் சம்மதித்தார். அதன் பின்னர் காந்தியடிகள் பெரியாரிடத்தில் இதைத் தெரிவித்தார். பெரியாரும் காந்தியடிகளின் முயற்சிக்கு ஓப்புதல் தெரிவித்தார்.”
(நூல்: பெரியாரியம்)

இதை ஈ. வே. ராமசாமி நாயக்கரே ஒப்புக்கொள்கிறார். ஆதலால் காந்திஜி எல்லோரையும் அரவணைத்து சென்றிருக்கிறார். காந்தியடிகள் நினைத்திருந்தால் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கேட்காமலேயே ஒப்புதல் கொடுத்திருக்கலாம். ஆனால் காந்தியடிகள் அதுபோல தன்னிச்சையாக எதையும் செய்யவில்லை, செய்யவிரும்பவில்லை என்பதுதான் இதன் மூலம் உணரப்படும் செய்தி. உண்மையை எப்பொழுதும் மறைக்க முடியாது. எத்தனை வீரமணிகள் வந்தாலும் காந்தியடிகளுடைய பங்கை மறைக்கமுடியாது.

இதிலே இன்னொரு குற்றச்சாட்டு.

வைக்கம் போராட்டம் பற்றி காந்தியடிகள் தமது ‘யங் இந்தியா’வில் எழுதும் போது ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்து எழுதிவிட்டார். அதாவது வைக்கம் போராட்டத்திலேயே ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பங்கு என்னவென்று யாருக்கும் தெரியக்கூடாது என்ற காரணத்திற்காக காந்தியடிகள் பெரியாரின் பெயரை எழுதவில்லை என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்கள் பல காலமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இதுவாவது உண்மையா?

இல்லவே இல்லை. இதோ ஆதாரம்!

திரு. காமராசர் கூறுகிறார்:-

kamarajar”மகாத்மா, சமஸ்தானத்தின் அடங்குமுறைப்போக்கை வன்மையாகக் கண்டித்துப் பெரியாரது செயலை வெகுவாகப் பாராட்டி எழுதினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள தடையை பெரியார் கோரிக்கைப்படி நீக்காவிட்டால் பெரும் போராட்டம் துவங்கும் என்று மகாத்மா எச்சரிக்கை செய்தார்.

… இது வீரமணி எழுதிய வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்திலேதான் இருக்கிறது. மகாத்மா பெரியாரை பாராட்டி எழுதியிருக்கிறார் என்று வீரமணியே தன்னுடைய நூலிலே தொகுத்திருக்கிறார்.

இந்த ஆதாரம் போதாதவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரம்!

ஈ. வே. ராமசாமி நாயக்கர் தமது ‘குடியரசு’ (02-05-1925) முதல் இதழில் காந்தியடிகள் தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டு அதை மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கிறார். அது வருமாறு:

”திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்வதைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கிறேன்”.

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இச்செய்தி, வைக்கம் போராட்டத்திலே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பெயரை காந்தியடிகள் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் என்பது தானே! எல்லாவற்றுக்கும் ஈ. வே. ராமசாமி நாயக்கரையே பயன்படுத்தும் இவர்கள், இதில் மட்டும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ‘குடியரசு’ இதழை மறைத்ததேன்?

வைக்கம் போராட்டத்தில் வீரமணியினுடைய ஈ.வே. ராமசாமி நாயக்கர் பக்தி எந்த அளவுக்கு போயிருக்கிறது தெரியுமா?

”கால்களில் விலங்குச்சங்கிலி போட்டு சாதாரண கைதி போல, வைக்கத்திலே தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையிலே இருந்தார்” என்று வீரமணி கே.பி.கேசவமேனன் தன்னுடைய மலையாள சுயசரிதையில் கூறுவதாகக் கூறுகிறார்.

ஆனால் இது கூட உண்மையில்லை. கே.பி.கேசவமேனன் மலையாளத்தில் எழுதிய நூல் ‘கழிஞ்ஞ காலம்’. இதை தமிழில் மொழிபெயர்த்து நேஷனல் புக் டிரஸ்ட் ‘கழிந்த காலம்’ என்று வெளியிட்டுள்ளது. அந்த நூலியே இப்படியொரு செய்தி இல்லவே இல்லை.

இப்படி பொய்மேல் பொய் சொல்லி வருகிறார்களே காரணம் என்ன? வைக்கம் போராட்டத்தினுடைய வெற்றி காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும் போய்விடக்கூடாது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டுமே அந்த வெற்றி சேரவேண்டும் என்ற கேவலமான ஆசைதான். காந்திஜியினுடைய பங்கை சொன்னால் எங்கே வைக்கம் வீரர் பட்டம் போய்விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்! உண்மை தானே!

(தொடரும்…)

5 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 16: வைக்கம் போராட்டம்”

 1. //காந்தியார் வைக்கம் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதுதான் உண்மை”.

  ”போராட்டத்தின் தொய்வுக்குக் காரணமென்ன என்றால் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே காங்கிரசில் காந்தியாரின் ஆதரவைக் கோரினார்கள். காந்தியார் தம்முடைய ஆதரவைத் தரவில்லை என்பது மட்டுமின்றி போராட்டத்தின் எதிரிகள் சொன்னதையே ஒரே பக்கமாகக் கேட்டுக் கொண்டார்”.
  (நூல்:- வைக்கம் போராட்ட வரலாறு – வீரமணி)//

  இந்தக் கட்டுரையை அவசரத்தில் படிக்கும் நண்பர்கள் முழுவதயும் படிக்காமல் மேம்போக்காகப் படித்து விட்டு, இங்கே “காந்தியார், காந்தியார்” என்று குறிப்படப் படுவது அன்னையார் சொக்கத் தங்கம் அவர்களையோ என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

  எங்கள் தளபதியார் மானமிகு வீரமணியார் மத்திய அரசோடு நல்லுறவைப் பேணுபவர், அன்னையார் சொக்கத் தங்கம் அவர்களை சிம்பிளாக, “காந்தியார்” என்று மரியாதை இல்லாமல் அழைக்கும் அளவுக்கு நாகரீகம் இல்லாதவர் அல்ல என்பதை கூறிக் கொள்கிறேன்.

  இதை வைத்து அன்னையார் சொக்கத் தங்கம் அவர்களை எங்கள் தளபதியார் “காந்தியார்” என்று கூறி விட்டதாக யாரும் சதி செய்ய நினைத்தால், அது நடைபெறாது, என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

  நான்கு மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் தளபதியார் அன்னையாரின் வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசினார் என்ற உண்மையை விளக்கி, பார்ப்பன சூழ்ச்சியை முறியடிப்போம் என்று எச்சரிக்கிறேன்.

  உலகத் தமிழைனத் தலைவர் வாழ்க!

  உலகத் தமிழினத் தளபதி மானமிகு தளபதியார் வாழ்க!

  அன்னையார் சொக்கத்தங்கம் வாழ்க!

 2. வைக்கம் வீரர் என்று சொல்வதில் ஒரு வித அழகு இருக்கிறது.
  பகுத்தறிவு பகலவன் என்பது போல் .
  எல்லாம் ஒரு எதுகை மோனை தான்.
  இவ்வளவு சிரமப்பட்டு ஒரு பட்டத்தை யோசித்த பின் ,அதை யாருக்கோ எப்படி விட்டுக்கொடுப்பதாம்?
  பட்டங்கள் இன்றி ஒரு தமிழகத்தலைவர் எப்படி வாழ்வதாம்?
  ஏன் சார் இப்படி அவங்களை படுத்தி எடுக்கிறீங்க?!
  jokes aside, கட்டுரை அருமை.

 3. A few years back, when sonia gandhi came to kerala & gave a speech on the vaikkom movement, not a mention was made of EVR.

  Someone must have told her the truth, hence she spoke correctly.

  It raised the ire of the DK ists here.

  Strangeley, our self confessed EVR loyalist “mu.ka” maintained silence.

  Koottani dharmamo?

 4. உண்மைக்கு மாறான தகவல்கள் நிறைய உள்ளன.
  கேசவமேன்ன் அவர்களின் கடந்த காலம் பதிவில் 10ஆம் அத்தியாயம் பெரியாரின் சிறை வாழ்க்கை குறிப்பு வருகிறது.தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரும் ஈரோடு முனிசிபல் சேர்மனாக இருந்தவரும் ஒரு பெரும் செல்வரும்,உத்தம தேசாபிமானியுமான இராமசாமி நாயக்கர் காலில் சங்கிலியும்,சிறைக் கைதிகள் தொப்பியும் முட்டு வரைக்குமான வேஷ்டியும்
  கழுத்தில் மரத் தாலியும் அணிவித்திருந்தார்கள்.இராஜகோபாலாச்சாரியார் அவர்களும் இதை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார்.அறிக்கை பழ.அதியமானின் வைக்கம் போரட்டத்தில் வெளி வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *