மூலம்: எம்.டி.நளபத்
தமிழில்: ஆழிநோக்கி
பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, ஏற்கனவே இழப்பில் இயங்கும் ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானம் ஒன்றை பயணத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதை பிரதமரின் பிரத்யேக பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதே போன்ற மற்றொரு விமானம் ஆயத்த நிலையில் வைக்கப்பட வேண்டி இருக்கிறது. மேலும் பிரதமருடன் அதிகாரிகள், செய்தியாளர்கள் என 200 பேர் செல்லுகிறார்கள். ஐரோப்பாவிற்கு அவர் பயணம் மேற்கொண்டபோது குறிப்பாக உலகிலேயே மிகவும் செலவுபிடிக்கக் கூடிய நகரங்களில் ஒன்றுக்கு சென்றபோது மிகுந்த செலவை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். கோபன்ஹேகனில் சராசரியாக ஓட்டல் அறை ஒன்றின் தினசரி வாடகை 600 டாலருக்கும் அதிகமாகும். இந்த புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது.
சூரிய சக்தியும் காற்று சக்தியும் 36 ஆயிரம் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடன் வந்த 90 ஆயிரம் பேருக்கும் மின்சக்தி வழங்கியிருக்க முடியும். கோபன்ஹேகனில் உள்கட்டமைப்புச் செலவு மிக மிக அதிகம். அதைத்தான் பிரதிநிதிகள் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. புவிகாப்பு மாநாட்டை மிகவும் ஆடம்பரமான சூழலில் அதிக செலவுபிடிக்கக்கூடிய சூழ்நிலையில் நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கதல்ல. ஆனால் அதே நேரத்தில் இதைப்பார்த்து ஆச்சரியப்படவேண்டியதும் இல்லை. ஏனெனில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பருவ நிலை மாற்றத்தை வளரும் நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அதிகசெலவு பிடிக்கக்கூடிய, அதே நேரத்தில் பொருத்தமற்ற தொழில் நுட்பத்தை வளரும் நாடுகள் மீது வளர்ச்சி அடைந்த நாடுகள் திணிக்க முற்படுகின்றன. டிசம்பர் 7 – 18 பருவநிலை உச்சி மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டால் மின்சார செலவு அதிகமாகியுள்ளது. கரியமில வாயு அதிகமாக வெளியாகியுள்ளது. இதை வேறொரு இடத்தில் நடத்தியிருந்தால் மின்சார செலவைக் குறைத்திருக்க முடியும். கரியமிலவாயு வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தியிருக்கமுடியும்.
40 ஆயிரம் டன் வாயு இந்த உச்சி மாநாட்டின் செயல்பாடு காரணமாக வெளியேறியுள்ளது என ஒரு மதிப்பீடு கூறுகிறது. வேறு சில மதிப்பீடுகள் 1,05,000 டன் வாயு வெளியேறியிருக்கக்கூடும் என்று கூறுகின்றன. கரிமத்தை வெளியேற்றும் விமானங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் டென்மார்க் தலைநகரில் வந்து குவிந்தனர். வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, ஏழை நாடுகளில் வசிப்போர் படும் அவதியைப் பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. ஏழை நாடுகளில் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அது நசுக்கப்பட்டது. கோபன்ஹேகனுக்கு செல்ல விசா அளிக்கப்பட்ட போதிலும் கூட அங்கு சுமார் 2 வாரகாலம் தங்கினால் ஆகக்கூடிய செலவை சமாளிக்கக்கூடிய நிலையில் ஏழை நாடுகளில் பிரதிநிதிகள் இல்லை. அரசுசாரா அமைப்புகளில் வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவானவற்றை மட்டுமே பெருமளவில் அழைத்திருந்தனர். இதில் இடம்பெற்றிருந்தவர்கள் வளர்ந்த நாடுகளின் குரலாகவே தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். வளர்ந்துவரும் நாடுகள் சார்பில் முறையான கருத்தைப் பதிவு செய்ய முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
குறைந்த செலவு பிடிக்கக்கூடிய இடத்தில் விசா போன்ற கெடுபிடிகள் அதிகமாக இல்லாத இடத்தில் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தால் ஏழை, எளிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாராளமாக கலந்து கொண்டிருக்கமுடியும். கோபன்ஹெகன் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொண்டவர்களின் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வளர்ச்சி அடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே. அவர்களுக்கு கோபன்ஹேகன் என்பது அவர்கள் வீட்டு கொல்லையைப்போன்றதுதான். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு கோபன்ஹேகன் என்பது எட்டாக்கனியாகும்.
இந்த உச்சி மாநாடு போபால் நகரில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
யூனியன் கார்பைடு நிறுவனம், 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியேற்றிய விஷவாயு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிகொண்டதுடன் நிற்கவில்லை. சுமார் 2 லட்சம் பேர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்களது உள் உறுப்புகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அங்கு பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊனமாகவே இருந்தன. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த விபத்துக்குக் காரணம் என்பதை ஒத்துக்கொண்டுள்ளது. விபத்துக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. எனினும் இவர்தான் இதற்கு பொறுப்பு என்று யாரையும் சுட்டிக்காட்டவில்லை. அப்போது யூனியன் கார்பைடு தலைவராக இருந்தவர் வாரன் ஆண்டர்சன். அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அமெரிக்க அரசும் இந்திய அரசும் அறிவித்துவிட்டன. அவர் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு இடத்தில் சௌகரியமாக ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். இது ஒன்றும் மூடுமந்திரமானதல்ல. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது நன்கு தெரியும். 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி பலர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் முதலிடத்தில் இருந்தவர் வாரன் ஆண்டர்சன். முறைப்படி குற்றச்சாட்டை பதிவு செய்ய மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 40 கோடி டாலரை போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதுவே அமெரிக்காவில் நடந்திருக்குமானால் இழப்பீட்டுத் தொகை இதைவிட அதிகமாக நிர்ணயிக்கப் பட்டிருந்திருக்கும். எனெனில் மக்களின் உயிருக்கு அங்கு இதைவிட கூடுதல் மதிப்புண்டு. இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் இழப்பீடு பெறாமல் இருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் அசிரத்தைதான் இதற்கு காரணம். இந்தியாவில் இப்படி அதிகாரிகள் அசிரத்தையாக இருப்பது அசாதாரணமானது அல்ல.
கோபன்ஹேகன் மாநாட்டில் கூடிய பிரதிநிதிகளின் உண்மையான செயல்திட்டம்தான் என்ன? விலை அதிகமான தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் தலையில் வளர்ந்த நாடுகள் கட்டுவதுதான். அணுசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாற்று சக்தி என்ன என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை. வளரும் நாடுகளின் பொருளாதார, சமூக பூகோள நிலைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற தொழில்நுட்பங்களை வழங்கவேண்டும் என்பதில் யாருக்கும் அக்கறை இல்லை. வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் வருடந்தோறும் ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு நன்கோடை தரப்போவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாக்குறுதி நிபந்தனையற்றது அல்ல. விலை உயர்ந்த தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் பின்பற்ற வேண்டும் என்பது நிபந்தனையாகும். இப்படி நிபந்தனையுடன் கூடிய நன்கொடை உண்மையில் நன்கொடையே அல்ல. எந்தவித நிபந்தனையும் இன்றி, பிரதிபலனை எதிர்பாராமல் அளிக்கப்படுவதுதான் நன்கொடையாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் சில அணுசக்தி உற்பத்திக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. இதை வளர்ந்துவருகிற நாடுகளுக்கு அளிக்க முன்வருகின்றன. இதனால் உண்மையில் அதிக ஆதாயம் அடைவது வளர்ந்த நாடுகள்தான். இந்த அணுசக்தி ஈனுலைகளை விற்பதன்மூலம் வளர்ந்த நாடுகளுக்கு கோடிக்கணக்கில் ஆதாயம் கிடைக்கும். அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. சுமார் இரண்டாயிரம் கோடி டாலர் அளவுக்கு இதற்காக செலவிடவேண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த செலவு பிடிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கி வைத்துள்ளது. இதை சர்வதேச அளவில் அது விற்பனை செய்யமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல்வேறு வகையிலும் முட்டுக்கட்டைகள் போட்டுள்ளன.
இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்றும் ஆசியாவில் மகத்தான இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ரீதியான ஒத்துழைப்பு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் இன்றைய நிலவரமாகும். இந்த மூன்று நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து அணுசக்தி ஈனுலைகளை அமைத்தால் அது வளரும் நாடுகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவை கூட்டாக சேர்ந்து ஏர்பஸ்ஸை உருவாக்கியதை போல இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நவீனரக விமானங்களை உருவாக்கினால் அது திருப்புமுனையாக அமையும். அணுசக்தி பிரச்சினை மட்டுமல்லாமல் பசுமை தொழிழ்நுட்பமும் பிரச்சனையாகவே உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது என்று சொல்லி, பருவ நிலையைக் காக்கவேண்டும் என்று கூறி, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்வதுடன் வளரும் நாடுகளை எழுச்சியுறாமல் முடக்கி நசுக்கப்பார்க்கின்றன.
(தொடரும்)
நன்றி: விஜயபாரதம் (1-1-2010) இதழ்
அருமையான கட்டுரை! இன்றுடன் படிக்க முடிந்தது! என்று தான் புரிந்து கொண்டு நடந்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ, அன்று தான் நன்மை!