எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
சரி. பகவத் கீதை சாதியை கடவுளே உருவாக்கியதாக கூறுகிறதே? ‘சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என சொல்லி சாதியத்தை நியாயப் படுத்துகிறதே?
உண்மையில் பகவத் கீதை சாதியத்தை எதிர்க்கும் முக்கிய நூலாகும். பகவத் கீதை அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்தது ஆகும். சிசு பாலன் போன்ற சாதிய வெறி கொண்டவர்களை எதிர்த்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.
கீதையில் சீடனான அர்ஜுனன் தருமம் என்பது குலத்தைச் சார்ந்தது என்று தவறாகக் கூறுகிறான். உதாரணமாக, “குலம் அழிவடைவதால் நித்தியமான குல தருமம் கெடுகின்றது. இதனால் வம்சத்தில் மீந்திருப்பவர் அறமற்ற பழக்கங்களில் ஈடுபடுவர்.” (கீதை 1:39) என அர்ஜுனன் கூறுகிறான். மீண்டும் தொடர்ந்து, அறம் என்பது குலத்தூய்மையுடன் தொடர்புடையது என்று கூறுகிறான் (1:40). வர்ணக் கலப்பினால் குலதர்மம், சாதி தர்மம் ஆகியவை அழியும் என்று கூறுகிறான் (1:42). ஆக, அர்ஜுனன் முழுக்க முழுக்க பிறப்படிப்படையிலான சாதிய வாதத்தையே தர்மம் என முன் வைக்கிறான்.
அர்ஜுனன் முன் வைக்கும் வர்ண அமைப்பானது பிறப்படிப்படையில் அமைந்தது. உயர்ந்த குலத்தவர் தாழ்ந்த குலத்தவர் குலப்பெருமை ஆகியவை கொண்டது.
இதனை பகவத் கீதை முழுக்க குருவான ஸ்ரீகிருஷ்ணர் மறுக்கிறார். ‘குல தர்மம்’ எனும் பதத்தையே கிருஷ்ணர் பயன்படுத்தவில்லை. மாறாக ‘ஸ்வதர்மம்’ என்ற கருத்தையே அவர் எடுத்துரைக்கிறார். இந்த ஸ்வதர்மம் எப்படி ஏற்படுகிறது என்பதனைக் கூறுகையில் கிருஷ்ணர் அது பிறப்பினால் ஏற்படுவதில்லை மாறாக ஒருவரது குணத்தையும் அவரது செயல் வெளிப்பாட்டையும் பொறுத்தே அமையும் என்று தெளிவாகக் கூறுகிறார்.
மிகவும் தவறாக பிரச்சாரகர்களால் பொருள் சொல்லப்படும் அந்த பகவத் கீதை சுலோகம் உண்மையில் என்ன சொல்கிறது?
“சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகச:”
என்றே சொல்கிறது. மேலும் வர்ண அமைப்பினைப் பேசும் எந்த இடத்திலும் குலத்தையோ குல தர்மத்தையோ கீதை குறிப்பிடவே இல்லை. மாறாக சுபாவமும் குணங்களுமே ஒருவரது வர்ணத்தை முடிவு செய்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார் (18:41-44). உதாரணமாக, அந்தணனின் அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, விவேகம், அறிவு ஆகியவை அவனது சுபாவத்தின் தன்மையாக அமைகின்றதே அல்லாமல் அவனது குலப்பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை. எனவே பிறப்பு அடிப்படையிலான குலப்பெருமைக்கு அல்லது வர்ணாஸ்ரமத்துக்கு கீதையில் இடமேயில்லை.
சமுதாயத்தில் செயலாற்றும் போது அகங்காரம் இல்லாமல் அனைவரிடத்திலும் அழுக்காறற்ற நட்பும் கருணையும் கொண்டு செயல்படவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார் (12:14) மேலும், தன்னை உயர்குலத்தவன் என நினைத்து அதில் அகங்காரம் கொள்பவன் அசுர இயல்பு படைத்தவன் எனவும் அவர் வரையறுக்கிறார் (16:15).
இதனையே ஸ்ரீமத்பாகவதமும் கூறுகிறது: உயர் குலத்தவன் என தன்னை கருதுபவன் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தைக் கூறவும் தகுதியற்றவன் என குந்தி தேவி கிருஷ்ணரை துதிக்கும் போது கூறுகிறாள் (ஸ்ரீ மத் பாகவதம்: 1.8.22)
கீதை, புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிக் கூறினீர்கள். பிற்பட்ட காலங்களிலும் சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த அருளாளர்கள் இருந்தார்களா?
அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
சாணார்/நாடார் என்று பேச்சுவழக்கில் அழைக்கப் படும் சான்றோர் சமுதாயம், அந்நிய மதப் பிரச்சாரகர்கள் மற்றும் வெள்ளையர் ஆதிக்கக் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தது. அந்தச் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி, உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்குக் காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர்.
அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கும் அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கும் உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம்.
மேற்கத்திய மதங்களில் இறைத்தூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப் பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும்.
எனவே, அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என்று அடியார்கள் அவரைப் போற்றுவதைக் கேள்விப் பட்டவுடன், வெளிநாட்டு ஆதிக்கக் கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (அன்னிய மத தாக்கத்தினால்) ”அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா?” எனக் கேட்டான். அதற்கு சாஸ்திரி ஒருவர்,
“எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல
பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா”
என்று கூறினார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார் –
“பாணனாய்த் தோன்றி நிற்பார்; பறையனாய்த் தோன்றி நிற்பார்
குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்.”
பகவான் புத்தர், மகாவீரர் ஆகியோர், மகான் ஞானேஸ்வர், மகான் துகாராம், மகான் ஏகநாதர், மகான் ரவிதாஸர், மகான் ராமானந்தர் ஆகிய வடநாட்டு பெரியவர்களும் சாதியத்தை எதிர்த்து போராடியவர்கள் ஆவர். மகான் ஞானேஸ்வர் பகவத் கீதையை மராட்டி மொழியில் எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றார் . மகான் துகாராம் உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை மராட்டிய மொழியில் அபங்கங்கள் என்னும் எளிய பாட்லகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னாளில் ஜோதிபா புலே, சாகு மகராஜ் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், தலித் போராளிகள் மராட்டிய மண்ணில் தோன்றுவதற்கு இந்த அருளாளர்களின் உபதேசங்களும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றின என்றே சொல்லலாம். அண்ணல் அம்பேத்கரும் இந்த அருளாளர்களின் உபதேசங்களால் உந்துதல் பெற்றார்.
தேசிய வரலாற்றில், இந்திய சுதந்திரப் போரில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் வனவாசிகள் எத்தகைய பங்கினை ஆற்றியுள்ளனர்?
ராஜபுத்திர மங்கையான ராணி துர்காவதி கோண்ட் எனும் வனவாசி இன இளவரசனான வீர நாராயணனை காதல் திருமணம் செய்தார். மொகலாய ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடி வீரமரணம் எய்தினார்.
ராஜபுத்திர வீரர் மகாராணா பிரதாப சிங்குக்கு அடைக்கலம் அளித்தது பீல் (வேடர்) என்கிற வனவாசி சமுதாயமே. ராணா பிராதப சிங்குடைய சேனையுடன் இணைந்து மொகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த வனவாசி சமுதாயம் போராடியுள்ளது. சந்தாலர்கள் வெள்ளையரது ஆதிக்கத்தை எதிர்த்த மற்றொரு வனவாசிகள் வகுப்பினர்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைக்கு தேவர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே கலவரங்கள் தூண்டி விடப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் இந்த இருசமுதாயத்தினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்துள்ளதையும் நாம் காணலாம்.
இதோ ஒரு உதாரணம்:
வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட பாளையக்காரர் பூலித்தேவர். ஆர்க்காட்டு நவாப்பு அனுப்பிய துரோகப்பட்டாளமும் வெள்ளை கும்பனிப் பட்டாளமும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களை களம் பலவற்றில் எதிர்கொண்டு எதிரிக்கும்பலை புறங்கண்ட மறவர் பூலித்தேவர்.
1755 இல் மாபூசுக்கான் களக்காட்டு கோட்டையை கைப்பற்றினான். பின்னர் மதுரைக்கு சென்றான். அப்போது பூலித்தேவர் மார்த்தாண்டனுக்கு அக்கோட்டையைப் போராடி மீட்டுக்கொடுத்தார். பின்னர் அவர் நடத்திய தாக்குதல்களில் இரண்டு கும்பனி படை தளபதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புதூர் கோட்டை ஆர்க்காட்டு நவாபின் தம்பி ரகீம் என்பவனது கட்டுப்பாட்டில் இருந்தது. 2500 குதிரைப்படைகள், 3000 காலாட் படைகள் 30 ஆங்கிலேய அதிகாரிகள் என அவனது படை இருந்தது. திடீர் தாக்குதல் மூலம் இந்த கோட்டையை பிடித்தார் பூலித்தேவர். உயிர் தப்பி ஓடினான் ரகீம்.
இதனையடுத்து (இசபல்கான்) கான்சாகிப் என்பவன் பூலித்தேவர் மீது படையெடுத்து வந்தான்.
1759 நவம்பர் 6ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கூலிப்படைத் தளபதி கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பிய கான்சாகிப், வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான்.
துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான். இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்குப் பணத்தாசை காட்டித் தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் படையினர் பூலித்தேவரைத் தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப் பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக் கும்பலைத் தாக்கலாயினர்.
பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரத்திலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக் கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது.
வெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுகக் கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கும் வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரைப் புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறிய பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது.
பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார்.
பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)
இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.
பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.
(தொடரும்)
அருமையான கட்டுரை.. எழுதிய மூவருக்கும் வந்தனம்.
அப்புறம் இந்த வெள்ளைக்கார அடிவருடி ‘திராவிட, இஸ்லாமிய’ வீரன் மருதநாயகம், ஏழைகளுக்காகப் போராடிய உண்மைத் தமிழ் தலித் வீரன் வீரமுத்துகோனைப் பிடித்து, தமிழர்களுக்கு எச்சரிக்கையாக அவன் நடுத்தெருவில் தலையை பீரங்கியில் சிதறடித்த வீரத்தையும் எழுதி இருக்கலாம். இதுவும் பூலித்தேவனின் சமகாலத்திய நிகழ்ச்சிதனே
அர்ஜுனன் சொன்னது தவறு என்கிறீர்கள். சரி. ஆனால் மகாபாரதம் முழுதும் பிறந்த குலமே மீண்டும் மீண்டும் முக்கியப்படுத்தப்படுவது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஸ்வதர்மம் என்று பேசும் கண்ணன் கர்ணனை தவறாக பேசக்கூடாது என்று ஒரு போதும் பாண்டவர்களிடம் சொன்னதில்லை. இத்தனைக்கும் கர்ணனின் பிறப்பு ரகசியம் அவருக்கு தெரியும். கர்னணனை உயிர் நண்பன் என்று கொண்டாடும் துர்யோதனன் தன சொந்தக்காரப் பெண் யாரையும் அவனுக்கு மணம் செய்து கொடுக்கவில்லை. அவன் குடும்பத்தோடு மண உறவு கொள்ளவில்லை. குறை இருந்தும் பாண்டுவும், திருதராஷ்டிரனும்தான் வாரிசுகள். என்ன விதுரனையா வாரிசாக்குகிறார்கள்? இல்லை யுயுத்சுவுக்கு ஏதாவது உரிமை உண்டா? ஏகலைவன் ஜாதீய அநியாயத்தை பிரதிபலிக்காமல் எதை பிரதிபலிக்கிறார்? மகாபாரதம் பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதீய சமுதாயத்தையே முன் வைக்கிறது என்பது தெளிவான, மறைக்க முடியாத விஷயம், கண்ணனாக அப்படி சொல்கிறார், இப்படி சொல்கிறார் என்பது வெறும் சமாளிப்பு.
ஞானேஸ்வரும் துக்காராமும் சாதிக்கு எதிரானவர்கள் என்கிறீர்கள். ஆனால் ரவிதாசுக்கும் சோகாமேளருக்கும் நடந்தவற்றை யாரால் தடுக்க முடிந்தது? சோகாமேளரை அடிக்கும் உரிமை அர்ச்சகருக்கு எங்கிருந்து வந்தது? அவர் பிராமணர், சோகாமேளர் தலித் அவ்வளவுதானே? நந்தனார் தீயில் புகுந்து சுத்தமானால்தான் சிதம்பரத்துக்குள் போக முடியும் என்பதை எந்த நாயனாரால் மாற்ற முடிந்தது? ஆதி சங்கரரே எதிரில் வரும் சண்டாளனை நகர்ந்து போ என்றுதான் சொன்னாராம். அதற்கப்புறம்தானே அவன் யாரை நகர்ந்து போக சொல்கிறீர்கள் என்று கேட்பதும் சங்கரர் ஞானம் பெறுவதும்? நகர்ந்து போ என்று சொல்லும் உரிமை எங்கிருந்து வருகிறது? ஆனானப்பட்ட ராமானுஜராலேயே மூன்று நாள்தான் தலித்துகளுக்கு டைம் வாங்கிக் கொடுக்க முடிந்தது!
ஹிந்து சாஸ்திரங்களில் எல்லாவற்றையும் காணலாம், எதையும் நியாயப் படுத்தலாம். கீதையில் சதுர்வர்ணம். சரி சதுர்வர்ணம் என்றால் ஸ்வதர்மம் என்கிறீர்கள். மனு சாஸ்திரத்தை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அங்கேயும் ஸ்வதர்மமா?
பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதீயம் இந்தியாவில் இருந்தது/இருக்கிறது, இதற்கு வரலாற்று ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது இன்னும் தொடரக் கூடாது என்ற நிலை எடுப்பதே எனக்கு சரியாக படுகிறது. சமூக அநீதிகள் ஹிந்து மதத்தின் பகுதியே இல்லை என்று வாதிடுவது, சப்பைக்கட்டு கட்டுவது இதில் எல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது?
அன்புள்ள ஆர்.வி,
// ஆனால் மகாபாரதம் முழுதும் பிறந்த குலமே மீண்டும் மீண்டும் முக்கியப்படுத்தப்படுவது சொல்லித் தெரிய வேண்டியதில்லை//
// மகாபாரதம் பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதீய சமுதாயத்தையே முன் வைக்கிறது என்பது தெளிவான, மறைக்க முடியாத விஷயம், //
மகாபாரதம் வர்ண/ஜாதி அமைப்புகள் பற்றி நிலவிய பல்வேறு குரல்களையும், தரப்புகளையும் பதிவு செய்திருக்கிறது என்று கூறுவது தான் சரியாக இருக்கும். வர்ண அமைப்பில் உள்ள நெகிழ்வுத் தன்மைகள் குறைந்து வருவது பற்றிய சித்திரம் வேண்டுமானால் அதில் கிடைக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ஒரு நூலாக மகாபாரதம் பிறப்பு அடிப்படையிலான சாதி அமைப்பை *நிறுவவில்லை*.. உதாரணமாக, கர்ணன் வில் போட்டி அரங்கத்தில் பிரவேசிக்கும் கட்டத்தில், அவனது பிறப்பைச் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவிக்கப் படுகிறது.. உடனே, ”தூணில் நரசிங்கம் தோன்றவில்லையா? நாணல் புதரில் கிருபர் என்ற முனிவர் பிறக்கவில்லையா…மீனவப் பெண்ணுக்கு வியாசர் மகனாகவில்லையா” என்று ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, பிறப்பு தகுதியைத் தீர்மானிப்பதில்லை என்றூ பேசும் குரலும் அதில் பதிவாகியிருக்கிறது.. யுதிஷ்டிரனுக்கும் யட்சனுக்கும் இடையேயான புகழ்பெற்ற கேள்வி பதிலில், “பிராமணன் என்பதைப் பிறப்பு தீர்மானிக்கிறதா?” என்ற கேள்விக்கு, யுதிஷ்டிரனின் பதில் தெளிவாக “இல்லை” என்று கூறுகிறது..
ஏகலைவன் தன் சாதியால் புறக்கணிக்கப் படவில்லை -அது அரசியல் போட்டி மட்டுமே. யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில், கிருஷ்ணனுக்கு முதல்மரியாதை செலுத்தப் படுவதை எதிர்த்துப் பேசும் சிசுபாலன் அங்குள்ள பல மன்னர்களைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது ‘இதோ புகழ்பெற்ற நிஷாதராஜன் ஏகலைவன் இருக்கிறான், இவன் உன் கண்ணில் படவில்லையா‘ என்றும் கூறுகிறான். எனவே அரசபதவி என்ற அளவில் ஏகலைவன் கிருஷ்ணனை விட அந்தஸ்தில் *உயர்ந்தவனாகவே* இருந்தான் என்பது புலனாகும்.
// கண்ணனாக அப்படி சொல்கிறார், இப்படி சொல்கிறார் என்பது வெறும் சமாளிப்பு.//
இல்லை, கீதையின் கருத்தியல் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது, மகாபாரதத்தின் ஒரு பகுதியாயினும் கீதை ஒரு “சமூக சட்ட நூல்” அல்ல, தன்னளவில் முழுமையான தத்துவ நூல் அது. “உபநிஷத்தும், பிரம்ம வித்யையும், யோகசாஸ்திரமும், கிருஷ்ண-அர்ஜுன விவாதமும் ஆகிய” என்றே அது அடைமொழியிடப் படுகிறது. கீதையில் மொத்தமே 3 இடங்களில் தான் கிருஷ்ணன் வர்ணம்/சாதி பற்றிப் பேசுகிறான் – இந்த விஷயத்தில் கீதையின் தத்துவ சிந்தனையில் எந்தப் பிசிறும் இல்லை. அது குலம் சார்ந்த சாதி முறையை ஏற்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இது வெறும் சமாளிப்பு அல்ல.
இது பற்றி மேலும் விரிவாக “பண்பாட்டைப் பேசுதல்” (தமிழ்ஹிந்து வெளியீடு) புத்தகத்தில் ஒரு முழுக் கட்டுரையே உள்ளது.. “பகவத்கீதை என்னும் உண்மையான உதயசூரியன்”.. படித்து பாருங்கள்.
// மனு சாஸ்திரத்தை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அங்கேயும் ஸ்வதர்மமா? //
இந்தத் தொடரில் மனு சாஸ்திரம் நியாயப் படுத்தப் படவில்லை, முதல் பகுதியில், ஸ்மிருதிகள் தற்காலிகமானவை என்றும் அவற்றின் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள் தள்ளப் படவேண்டியவை என்றும் தெளிவாக சொல்லப் பட்டுள்ளது..
// பிறப்பை அடிப்படையாக கொண்ட ஜாதீயம் இந்தியாவில் இருந்தது/இருக்கிறது, இதற்கு வரலாற்று ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம், //
கண்டிப்பாக. அதை இந்தத் தொடர் மறுக்கவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் இந்த வரலாற்றுக் காரணங்களை அந்தந்தக் காலகட்டத்தில் உலகின் மற்ற சமுதாயங்களில் சாதியம் எவ்வாறு இருந்தது என்பதுடன் ஒப்பு நோக்குவது தான் சரியான கண்ணோட்டமாக இருக்கும்.. அந்த சூழலிலும் சாதியத்திற்கு எதிரான ஆன்மிகக் குரல்களும் எழுந்தபடியே உள்ளன என்பதையும் இத்தொடர் பதிவு செய்கிறது.
// ஆனால் அது இன்னும் தொடரக் கூடாது என்ற நிலை எடுப்பதே எனக்கு சரியாக படுகிறது. //
உண்மை.
// சமூக அநீதிகள் ஹிந்து மதத்தின் பகுதியே இல்லை என்று வாதிடுவது, சப்பைக்கட்டு கட்டுவது இதில் எல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது? //
ஹிந்து சமூக வரலாறு என்பது ஹிந்துமதத்துடன் பின்னிப் பிணைந்தது தான். ஆனால் அதுவே ஹிந்து மதம் அல்ல.
ஐன்ஸ்டின் எத்தனை திருமணம் செய்து கொண்டார் என்பதை வைத்து அவரது ரிலேடிவிட்டி தியரியைப் பற்றி கருத்துச் சொல்வது எப்படி இருக்கும்? அது போன்றது தான் ஹிந்து சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் ஹிந்துமதமே காரணம் என்று *ஊகித்து*, பின்பு அதை வைத்து ஒரு வரலாற்றைக் கட்டமைப்பது. இதைத் தான் ஹிந்து விரோதிகள் செய்கிறார்கள் – கீதையின் அதி உன்னதமான வாழ்க்கை தரிசனம், யோகம், தத்துவ விவாதங்கள் எதையும் பற்றி ஆழமாக சிந்திக்காமல், ஜாதிய அமைப்பை நியாயப் படுத்த எழுந்த நூல்தான் அது என்கிற வகையிலான அபத்தமான குறுக்கல்வாதக் கருத்துக்களை அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.
ஹிந்து சமூகம் மதத்தின் உள்ளுறை பொருளின் மீதுள்ள மதிப்பையும் தக்கவைத்துக் கொண்டு, அதே சமயம் சமூகச் சீர்திருத்தங்களையும் இயல்பாக ஏற்றுக் கொள்வதாகவே இருக்கிறது. சுருதி/ஸ்மிருதி என்கிற வேறுபாடே அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
//
நந்தனார் தீயில் புகுந்து சுத்தமானால்தான் சிதம்பரத்துக்குள் போக முடியும் என்பதை எந்த நாயனாரால் மாற்ற முடிந்தது?
//
வேர்சூடுமவர்கள் மண்ணையும் சேர்த்து சூடுவார்கள் என்பது போல – அப்படியே கலந்த பாணர் வரலாறும் உண்டே
Thanks Jatayu. Your replies are excellent.
I am not hearing anything on any plan to translate these articles in English. Any hesitations to do that ?
ஒருவர் தன்னை உயர்த்திக் கொள்ளுவதும், தாழ்த்திக் கொள்ளுவதும் அவரவர் கையிலேயே உள்ளது. ஆண்டவனின் கையில் இல்லை.
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண – கர்ம விபாகச ”
கடவுளே ஒரு மனிதனைப் பிறக்கும் போதே தாழ்மையானவன், கீழானவன் , அடிமையானவன் என்ற நிலையிலே படைப்பதாகக் கூறினால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆனால் கிருட்டினர் கூறியதை எல்லோரும் தங்களின் சுயனலத்திற்கக்காக திரித்துக் கூறிய நிலையில் கிருட்டினர் என்ன செய்ய முடியும்?
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.
ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.
இதையே வள்ளுவர்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்”
“பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
கருமமே கட்டளைக் கல்”
கூறியுள்ளார்.
கிருட்டினரும், வள்ளுவரும் கூறினால் என்ன? அதையும் நாம் சோதனைக்கு உள்ளாக்குவோம்.
கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை- மக்களுக்கு அவசியமானவை- மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் கெடுதல் விளைவிக்கக் கூடியவை- மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.
மக்களுக்கு அவசியமான கர்மாக்களை கூட இழிவான கர்மாவாக கருதுவது தவறு.
பிணம் எரிப்பது இழிவான செயலா? பிணம் எரிப்பது எவ்வளவு முக்கியமான செயல்.
இன்ஜினீயர் தன் வேலையை ஒரு வாரம் தாமதப் படுத்த முடியும். பிணம் எரிப்பவர் ஒரு நாள் தன் வேலையை தாமதப் படுத்த முடியுமா?
அதே பிணத்துக்கு அருகில் நின்று மணிக் கணக்கில் பிராமண புரோகிதர் ஓதுகிறார். மறுநாள் காலையில் வந்து சாம்பலை வைத்து இன்னும் பலதை ஓதி, அந்த சாம்பலையும் எடுத்திக் கொண்டு நதியில் கரைக்கும் போதும் இன்னும் ஓதுகிறார்.
இருவரும் அதே பிணத்துக்கு அருகில் நின்றுதான் தங்கள் தொழிலை செய்கின்றனர். ஆனால் புரோகிதர் தொழிலை உயர்வாகவும், சுடலைக் காப்பாளர் தொழிலை மட்டமாகவும் கருதும் பகுத்தறிவற்ற சமூகம் நம் சமூகம்.
பிராமணர் மகன் தான் வேதம் ஓத வேண்டும், சுடலைக் காப்பாளர் மகன் எரிக்க வேண்டும் என்று கூறுவது தான் பார்ப்பனீயம் எனக் கூறப் படுகிறது. அதை நாம் எதிர்க்கிறோம்.
புரோகிதர் ஓதாவிட்டால் புரோகித ர் ஓதாவிட்டால் வரும் கெடுதலை விட, சுடலைக் காப்பாளர் வேலை செய்யாவிட்டால் வூர் நிலைமை மோசம்.
இன்றைய உலகச் சூழலில் மென்பொருள் பணியாளர் வேலை வாய்ப்பு இல்லை. பணிப் பாதுகாப்பு உள்ள தொழில்கள் சுடலைக் காப்பாளரும், முடி திருத்துபவரும்தான். அடிப்படை சம்பளம் ரூபாய் 40,000 என நிர்ணயித்தால் பல பிராமணர் சுடலைக் காப்பார் வேலைக்கு மனுப் போட்டால் ஆச்சரியம் இல்லை.
கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.
ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில்,
இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.
ஆனால் நாம் ஆனால் நாம் கூற வருவது இந்தையெல்லம் விட முக்கியமான விடயம். எந்த செயலை செய்தாலும் அவர் அந்த தொழிலை எவ்வளவு திறமையுடனும், நாணயத்துடனும் செய்கிறார்கள் எனபதைப் பொருத்தே சமூகம் அவரை மதிக்கும்.
ஒரு தச்சர் நன்றாக மேசை தயாரித்துக் குடுத்தால் அவரைப் பார்ரட்டுகிறோம். ஒரு கணக்கர் திறமையுடன் செயல் படாவிட்டால் எந்த மதிப்பும் குடுப்பது இல்லை.
ஒரு பொறியாளர் அவர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பாலத்தை இடிந்து விழும்படிக் கட்டினால் அவர் பிராமணராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
ஒரு காவல் துறை அதிகாரி, அவர் கற்ப்பழிப்புக் கேசை மூடி அனியாயம் செய்தால் அவர் பிராமணராக இருந்தாலும், வேறு எந்த சாதியினராக இருந்தாலும் அவர் இழிவானவராகவே, கீழ்மையானவராகவே நான் கருதுவேன்.
எனவே ஒருவர் தன்னை உயர்த்திக் கொள்ளுவதும், தாழ்த்திக் கொள்ளுவதும் அவரவர் கையிலேயே உள்ளது. ஆண்டவனின் கையில் இல்லை.
எனவே குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் என்பது இயற்க்கையாக உருவாவது. ஆனால் அதை சுயனலமுடையோர், பிறப்பின் அடிப்படையில் என்று மாற்றி விட்டனர்.
ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் விதத்தின் அடிப்படையில் கூட வேறுபாடுகள் வேண்டாம்- வேண்டவே, வேண்டாம்- என்பதற்க்காகத்தான் நான், எல்லொரும் கனவானாக மாறும் வகையில், நல்லொழுக்கத்தில், நல்லெண்ணதில், அன்பின் அடிப்படையில் ஒன்றாக இணைவொம் என்று கூறுகிறென்.
நான்தான் உயர்ந்த சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுபவன் மிக இழிந்தவன்,
பிறர் வாயில் பீ தினிப்பவன் மிக இழிந்தவன்,
நிதானத்தை இழந்து காட்டுமிரான்டித் தாகுதலில் ஈடுபடுபவனும் மன முதிற்ச்சி அடைய வேண்டியுள்ளது.
அரசாங்க வேலையில் இருந்து மக்களிடம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பவன் மிக இழிந்த திருடன்,
இவர் போன்ற பலரையும், எல்லோரையும் பகுத்தறிவின் அடிப்படையில் கனாவானாக்கி, வள்ளுவர் பாராட்டும் படியான மனிதராக்கி ஒன்றினைப்போம்.
உலகின் பல பகுதிகளிலும் அடிமை- முறை மிக மோசமான அடிமை முறை இருந்துல்லது. அமெரிக்காவில் அடிமைகளுக்கு பிறந்த குழந்தைகள் எஜமானுக்கு சொந்தம் எஜமானிடம் பணம் இல்லை என்றால், அடிமை மனைவியை தனியாக விற்று விடுவான்.
அவர்கள் திருந்தி விட்டார்கள்.
நாம் இன்னும் திருந்த வேண்டியுள்ளது.
இந்து மதமோ, எந்த மதமோ, இனி சாதி வேறுபாடு இல்லை.
இருக்க முடியாது.
இந்த மனு என்பவர் ஒரு அரசன். இது உங்களுக்குத் தெரியும்.
மனு இந்து மதத்தை ஸ்தாபித்தவரோ, அல்லது இந்து மதக் கடவுளோ அல்லது வியாசர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போல ஒரு குருவோ அல்ல.
மனு ஒரு அரசர், இந்த நாட்டை ஆண்டவர். மனு போட்டது அரசாங்கக் கட்டளையே அல்லாமல் ஆனமீகக் கட்டளை அல்ல. அரசாங்கக் கட்டளை அவ்வப்போது மாறும்.
வேதங்களில் எந்த ஒரு இடத்திலாவது தாழ்த்தப் பட்டவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இதற்கான சான்றை வேதத்தில் இருந்தே காட்ட முடியுமா?
மனுவிற்கு முன்னும் இந்து மதம் இருந்தது.
மனுவிர்க்குப் பின்னும் இந்து மதம் இருக்கிறது.
புத்தருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
புத்தருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.
சங்கரருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
சங்கரருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது .
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இந்து மதம் பின்பற்றப் பட்டு வந்துள்ளது.
இப்போது இந்து மதம் நமது கையில் உள்ளது. இதை நமது விருப்பப்படி பின்பற்றுவோம்.
இப்போது இந்து மதம் மனுவின் கையில் இல்லை. எந்த தனிப்பட்டவரின் கையிலும் இல்லை.
இப்போதுள்ள இந்து மதம் நமது கையில் உள்ளது.
சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது நமது உறுதியான, மனப் பூர்வமான கொள்கை.
“அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),
சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),
கருண ஏவ ச (கருணையுடன் )
”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)
ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
என்பதுதான் இந்து மதத்தின் மிக அடிப்படையான வழிமுறை என்பதை மறுக்க முடியாது. This is also From the Bagavath Geethaa oNly
அஹங்காரம் இல்லாமல், எல்லா உயிர்களையும் சினேகமாக நினைப்பவன், சாதி வெறுபாடு பார்க்காத சமத்துவ வாதியாகத் தான் இருக்க முடியும். எனவே இந்து மதத்தின் அடைப்படை சமத்துவமெ.
எனவே நமது செயல் பாடு , வழி, அமைப்பு எல்லாமே சமத்துவ முறையில் தான் இருக்கும்- இதில் மாற்றம் இல்லை. இதுதான் நாங்கள் தெரிவிப்பது.
நான்காயிரம் வருடம் முன்பு மனு எழுதியதை வைத்து
இன்னும் அந்த நினைப்பிலேயே இருந்தால் என்ன செய்ய முடியும்.
இனி மேலும் மேலும் சமத்துவம் அதிகமாகி வேறுபாடுகள் குறையும். இனி யாரவது தானாக நான் கீழான நிலையில் இருக்கிறேன் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டால்தான் உண்டு. நாம் யாரையும் கீழாக விடப் போவதில்லை.
நாங்கள் இந்து மதத்தையும் ஒரு கருவியாக வைத்தே சமத்துவ சமூகத்தை சிறப்பாக நிறுவுவோம். அது முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது.
GK
I have reproduced certain paragraph from the article returned
by Prof. G.C.ASNANI, MSc., Ph.D. (United Nations Service, Retd.)
Caste System:
These proselytizing religions also accuse and nearly abuse Manusmriti for caste system. The underlying spirit behind Hindu religion codified by Maharishi Manu is that Religion is essentially a matter of self-discipline, self-culture, enriching of one’s inner self, realisation of divinity which lies dormant in every living being irrespective of creed, colour or caste and the manifestation of this divinity in our daily conduct of life. Anything found in Manusmriti contradicting this spirit is a later interpolation and manipulation for which we cannot blame Maharishi Manu. We can easily identify such manipulations. If somebody does not care to find out this truth, then also the great Maharishi Manu has clearly stated in his Manusmriti, which statement fortunately remains inside Manusmriti till today, that *if there is any statement in Manusmriti which is contrary to your conscience, please reject it outright and follow your own conscience*. Then, where is the justification for decrying Maharishi Manu as is customary for critics of Hinduism? Maharishi Manu tells you to follow your conscience inspite of whatever is written in this or that Book. Our salutations to this Maharishi Manu for this freedom! Anti-Hindu fanatics call Hindus as “MANU-VADIS”. Have they cared to read and understand Manusmriti, or they are just parroting what anti-Hindu missionaries have taught them to repeat and repeat? “Above every Book, follow your conscience” is the watchword of great Maharishi Manu; hundreds of salutations to Maharishi Manu who gave this freedom of thought, belief and action.
—-Prof. G.C.ASNANI, MSc., Ph.D. (United Nations Service, Retd.)
GK
நன்றாக அனுஷ்டிக்கப் படும் பிற தர்மத்தைக் காட்டிலும் சுமாராக செய்யப் படும் ஸ்வதர்மமே மேலானது என்றுதான் கண்ணன் சொன்னார்.
அதே கருத்தைத்தான் திரு. சேரனின் மாயக் கண்ணாடி என்னும் படத்திலே சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்வதர்மம் என்றால் அவரவர் செய்து வரும் தொழில் என்றுதான் அர்த்தம் – பிறப்பு அடிப்படையில் அமைந்த தொழில் என்று அர்த்தம் இல்லை.
ஒரு தொழிலில் வருமானம் வருகிறது என்றால் எல்லோரும் அந்த தொழிலுக்கு ஓடுகிறார்கள். இப்படி தான் ரியல் எஸ்டேட் துரையில் வாரா வாரம் பிளாட் விலை ஏறு கிறது என துபையில் எல்லோரும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஓடினார்கள். தேவைக்கு அதிகமான பில்டிங்குகளை கட்டி அந்த நாட்டின் பொருளாதாரத்தையே அழித்து விட்டனர்.
பால் பொருட்களுக்கு தட்டுப் பாடு என்றால், பால் விலை ஏறினால் எல்லோரும் அந்த தொழிலுக்கு ஓடுவார்கள். தேவைக்கு அதிகமான பால் உற்பத்தியாகி அந்த தொழிலும் கெடும், அந்த தொழிலை செய்யும் பலருக்கும் வேலை இல்லாமல் போகும்.
எல்லோரும் இளம் வயதில் ஒரு தொழிலை தேர்ந்து எடுத்து அந்த தொழிலை பயின்று அதிலே திறமையை வளர்த்து மக்களுக்கு உதவ வேண்டும்.
6 வருடம் டாக்டருக்கு படித்து பிறகு ஐ. ஏ. எஸ் அதிகாரி ஆகிறார். நாட்டுக்கு ஒரு டாக்டர் நஷ்டம்.
ஐ. ஏ. எஸ் அதிகாரி ஒருவரை உருவாக்க ஒரு டாக்டரை இழக்க வேண்டுமா?
//ஸ்வதர்மம் என்று பேசும் கண்ணன்//
ஸ்வதர்மம் என்றால் அவரவர் செய்து வரும் தொழில் என்றுதான் அர்த்தம் – பிறப்பு அடிப்படையில் அமைந்த தொழில் என்று அர்த்தம் இல்லை.
அமெரிக்காவில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்ட போது, மிகவும் பாதுகாப்பான வேலைகள் என்ன என்று ஆய்வு நடத்தி அவற்றில் ஒன்றாக முடி திருத்தும் பணியாளர், ஆசிரியைப் பணியாளர் என கண்டறிந்தனர்.
அதைக் கேட்டு எல்லோரும் எல்லோரும், முடி திருத்தும் வேலையிலும், ஆசிரியர் வேலையிலும் இறங்கினால் ஏற்கனவே அந்த வேலையை செய்பவருக்கும் வேலை இல்லாமல் போய் விடும்.
இதனால் தான் எல்லோரும் அவரவர் வேலையே செய்வதே நல்லது என சொன்னார்.
எல்லோரும் இளம் வயதில் ஒரு தொழிலை தேர்ந்து எடுத்து அந்த தொழிலை பயின்று அதிலே திறமையை வளர்த்து மக்களுக்கு உதவ வேண்டும்.
நாம் நம்முடைய தொழிலை மாற்றினால் நமக்கும் அந்த புதிய தொழில் புரியும் வரை கஷ்டம். இன்னும் அதிகமான பேர், தேவைக்கு அதிகமாக ஒரு தொழிலில் இறங்கினால் அந்த தொழில் படுத்து விடும். அந்த தொழிலை செய்யும் எல்லோருக்கும் பாதிப்பு உண்டாகும்.
எல்லோரும் ஆசை வலையில் சிக்கி, தொழில்களை மாற்றிக் கொண்டே இருக்காமல், தங்கள் தொழிலை செய்தால் பொருளாதாரமும் நிலைக்கும். தற்கொலையும் குறையும்.
திருச்சிக்காரன் உங்கள் பின்னூட்டம் அற்புதம்…
ஜடாயு அவர்களே,
ஆன்மிக ஜோதிடம் மட்டுமல்ல, நமது சாபக்கேடு. அறைகுறை அறிவுடையோர் எல்லாம் பேனா பிடித்து (அல்லது கணினி முன்னமர்ந்து) குங்குமம் போன்ற பத்திரிகைகளுக்கு கோவில்களைப்பற்றி ஆன்மீகக் கட்டுரை எழுதுவதும் நமது சாபக்கேடே.
தொண்டை நாட்டில் திருநின்றவூரில் வைதீகக் குலத்தில் அவதரித்த பூசலார் நாயனார் வேதம் நன்கு கற்றார். சிவனடியார்க்குத் தம்மாலான சேவை செய்தார். பரமசிவனுக்கு ஒரு கோவில் கட்ட விரும்பினார். அதற்கான பொருள் அவரிடம் இல்லை.
எனவே தமது மனத்தில் ஆகம விதிகளின் படி, தேர்ந்த ஸ்தபதிகளைக் கொண்டு பரமசிவனுக்குக் கோவில் கட்டினார். ஆகம விதிகளின் படி குடமுழுக்குச் செய்ய ஒரு நாளும் குறித்தார்.
அதே காலகட்டத்தில் பல்லவ மன்னனும் காஞ்சிப் பெருநகரில் ஈசனுக்கு, தேர்ந்த ஒரு கோவிலை வெகு சிறப்பாக எழுப்பினான். பண்டிதர்களைக் கலந்தாலோசித்து குடமுழுக்குக்கு நாளும் குறித்தான். அவன் குறித்த அதே நாளில்தான் பூசலாரும் தம் மனக்கோவிலுக்கு குடமுழுக்குக்கு நாள் குறித்திருந்தார்.
ஈசன் மன்னன் கனவில் தோன்றி அந்த நாளில் தாம் பூசலார் கோவில் குடமுழுக்குக்குச் செல்லவேண்டி உள்ளதால், வேறு நாள் குறிக்குமாறு கூற மன்னனும்மறுநாள் புறப்பட்டு, திருநின்றவூர் ஏகினான். அங்கே புதிதாக இறைவனுக்கு கோவில் ஏதும் எழும்பாதது கண்டு, பூசலார் குறித்து ஊராரிடம் விசாரித்தான். ஊராரும், பூசலாரின் அப்பழுக்கற்ற பக்தியைப்பற்றிக் கூறினர். மனனன் பூசலார் இல்லம் சென்று அவரிடம் தன் கனவு குறித்துக் கூற, பூசலார் இறைவன் தம் மீது கோண்ட கருணையை உணர்ந்து ஆனந்தப்பெருக்கினராகி, தம் மனக்கோவிலைப் பற்றி விவரித்தார். மன்னன் நாயனாரை விழுந்து வணங்கி, அவர் மனத்தில் நிறுவிய கோவிலை திருநின்றவூரில் நனவிலும் எழுப்பினான். இக்கோவில் “உள்ளத்தில் உறைபவன்” என்ற பொருள்பட ஹிருதயாலீஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைய அறைவேக்காட்டு ஆன்மீக எழுத்தாளர், இங்குள்ள இறைவனைக் கும்பிட்டால் இதய நோய் தீரும் என்று எழுத குங்குமம் பிரசுரிக்கிறது.
நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பதை விட உள்ளே அதிகம். இறைவனைப்போலவே!
அன்றினார் புரமெரித்தார்க் காலயம் எடுக்க எண்ணி
ஒன்றும் அங்கு தவாததாக உணர்வினால் எடுக்கும்்் தன்மை
நன்றென மனத்தினாலே நல்ல ஆலயந்தான் செய்த
நின்ற ஊர்ப்பூசலார் தம் நினைவினை உரைக்கலுற்றாம்.
— பெரிய புராணம்
//
“உள்ளத்தில் உறைபவன்” என்ற பொருள்பட ஹிருதயாலீஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைய அறைவேக்காட்டு ஆன்மீக எழுத்தாளர், இங்குள்ள இறைவனைக் கும்பிட்டால் இதய நோய் தீரும் என்று எழுத
//
🙂
இதே போல திருநெல்வேலி அருகில் வைத்தமாநிதி (மா நிதி வைத்தான்) என்பதை வைத்திய மா நிதி என்று மாத்தி ஆஸ்பத்தரியில் எல்லாம் மாட்டிவிட்டார்கள் அவரே ஒரு டாக்டராகவே ஆக்கியாச்சு
அன்புள்ள உமாசங்கர்,
நரசிங்கம் – யானைமலை கட்டுரையில் சொன்ன கருத்திற்கு இங்கு மறுமொழி போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. தட்ஸ் ஓகே.
// ஆனால் இன்றைய அறைவேக்காட்டு ஆன்மீக எழுத்தாளர், இங்குள்ள இறைவனைக் கும்பிட்டால் இதய நோய் தீரும் என்று எழுத குங்குமம் பிரசுரிக்கிறது. //
ஐயோ கொடுமை! இத்தகைய crackpot ஆசாமிகள் சொல்வதையெல்லாம் கூட நம்பும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது தான் இன்னும் பெரிய வேதனை.. இந்தக் கோவிலுக்கு நான் போயிருக்கிறேன் – அழகான கோயில்.
// ஆன்மிக ஜோதிடம் மட்டுமல்ல, நமது சாபக்கேடு. அறைகுறை அறிவுடையோர் எல்லாம் பேனா பிடித்து (அல்லது கணினி முன்னமர்ந்து) குங்குமம் போன்ற பத்திரிகைகளுக்கு கோவில்களைப்பற்றி ஆன்மீகக் கட்டுரை எழுதுவதும் நமது சாபக்கேடே. //
உண்மைதான். இன்னொரு விஷயத்தையும் கவனித்திருப்பீர்கள். தினசரிகளிலும் சரி, வாரப்பத்திரிகைகளிலும் சரி – ஆன்மிகம் பகுதியில் இந்து மதத்திற்கு என்று உள்ள இடத்தில் சுயலாப பலன்கள், ஜோதிட பரிகாரங்கள், கோயில்கள் பற்றீய அரைகுறைத் தகவல்கள் இவையே பெரும்பாலும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் அந்தந்த மதங்கள் கூறும் வாழ்க்கைக்குத் தேவையான “உபதேசம்” பற்றியே ஏதாவது எழுதப் பட்டிருக்கும் -பெரும்பாலும் இது நல்ல தமிழ்நடையிலும் இருக்கும்.
ஒரு சராசரி இளைஞனை/யுவதியை இதில் எது கவரும்? கண்டிப்பாக அரைவேக்காட்டு கோயில்/ஜோதிட சமாசாரம் அல்ல.
இந்து மதத்தின் அதி உன்னதமான வாழ்க்கை நெறிகளைப் பற்றியும், புராணங்கள், கோவில்கள் பற்றி அவற்றின் சாராம்சமான தத்துவ விளக்கங்களையும் சேர்த்தும் எழுதுவதற்கு இங்கு ஆட்களே இல்லாமலா போய்விட்டார்கள்? பின் ஏன் இதழ்கள் இந்து ஆன்மிகத்தை மட்டும் இப்படி ஒரு poor lilght ல் present செய்கின்றன? இந்தப் போக்கை மாற்ற வேண்டும்.
நல்ல கட்டுரை.இந்தக் கட்டுரையை எழுதிய- அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஜடாயு அவர்களே
உண்மைதான். நரசிங்கம் – யானைமலை கட்டுரையில்தான் மறுமொழி செய்வதாக நினைத்து செய்திருக்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும். தள நிர்வாகிகள் இதை அங்கே மாற்ற வழியிருந்தால் தயை கூர்ந்து செய்ய வேண்டுகிறேன்.
ஜடாயு அவர்களே,
உங்கள் மறுமொழிக்கு நன்றி, ஆனால் மகாபாரதம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்க முடியவில்லை. பாரதம் முழுவதும் தேடினாலும் ஸ்வதர்மத்தால் ஒருவனுடைய வர்ணம் மாறியது, அதை சமூகம் ஏற்றுக் கொண்டது என்று உள்ள ஒரு பாத்திரமும் இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். துரோணர், அச்வத்தாமாவின் ஸ்வதர்மம் போர், அரசு நிர்வாகம். (துரோணர் பாண்டவர் வனவாசத்தின் போது இந்திரப்பிரச்தத்தின் வைஸ்ராய்) அவர்களை யாரும் க்ஷத்ரியர்களாகவோ சூதரகளாகவோ கருதவில்லை. கர்ணன் பிறப்பால் க்ஷத்ரியன், வளர்ப்பால் சூதன், ஸ்வதர்மத்தால் க்ஷத்ரியன். கர்ணனும் அவன் குடும்பமும் சூதர் குலத்திலே மட்டும்தான் மணம் புரிய முடிகிறது. அவனை க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டது துரியோதனன் மட்டுமே. கர்ணனுக்கு பிறப்பால் மறுப்பு, பிறகு சில பேர் (துரியோதனன் மட்டுமே) எதிர்க்கிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். பிறப்பால் மறுப்பு எப்படி வந்தது? ஏகலைவனின் கட்டை விரல் அரசியல் விவகாரம் என்றால் துரியோதனின் ஆதரவு ஜாதி மறுப்பு தத்துவமா? அவ்வளவு ஏன், ராஜாவின் “சந்ததியினர்” மட்டுமே ராஜா ஆகவேண்டும் என்றுதானே பாண்டுவும், திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், கௌரவர்களும் பிறக்கிறார்கள்? மகாபாரதத்தின் வேர் சிக்கலே அதுதானே? விசித்ரவீர்யன் இறந்ததும் சரி யாருக்கு சிறந்த க்ஷத்ரிய ஸ்வதர்மம் இருக்கிறது என்றா தேடுகிறார்கள்?
ஏகலைவன் தன ஜாதியால் புறக்கணிக்கப்படவில்லை என்று எழுதி இருந்தீர்கள். இது தவறான தகவல். ஏகலைவன் மட்டுமல்ல, கர்ணனுக்கும் ஜாதியால் மட்டுமே துரோணர் பயிற்சி தர மறுக்கிறார். ராஜசூயத்தில் ஏகலைவன் இருந்தான் என்பது எனக்கு தெரியாத விஷயம், அதனால் அதைப் பற்றி பேசவில்லை. சிசுபாலன் பேசுவது கொஞ்சம் குழப்பமான விஷயம். கிருஷ்ணனும் சிசுபாலனும் cousins என்கிறார்கள், ஆனால் சிசுபாலன் கண்ணனை க்ஷத்ரியன் இல்லை என்று அவமானப்படுத்துகிறான். ஆனால் சிசுபாலன் மட்டும் க்ஷத்ரியனாம்!
யுதிஷ்டிரன் நச்சுப் பொய்கையில் சொல்வதை பற்றி எழுதி இருந்தீர்கள். கலைஞர் காந்திக்கு ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் புகழாரம் சூட்டுவார், அதனால் அவர் காந்தீயவாதி என்றா அர்த்தம்? என்ன சொல்கிறான் என்பதை விட என்ன செய்கிறான் என்பதல்லவா ஒருவனுடைய உண்மையான எண்ணத்தை நமக்கு காட்டுகிறது? யுதிஷ்டிரனின் எந்த செய்கை வர்ணம் ஸ்வதர்மத்தால் உருவாகிறது என்ற கருத்தை காட்டுகிறது? துரோணரும், அச்வத்தாமனும் அவனைப் பொறுத்த வரையில் பிராமணர்களே. கர்ணனை கண்டு பயம் இருந்தாலும் அவன் க்ஷத்ரியன் என்று ஒரு இடத்திலும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பிள்ளைகள் மேல் கொலை வெறியுடன் இருக்கும் பீமனும் திரௌபதியும் கூட யுயுத்சுவை கண்டு கொள்வதில்லை. ஆனால் விகர்ணன் மீது அன்பு இருந்தும் விகர்ணனை கொல்கிறான்! சரி கண்ணன் சொன்னால் அந்த காலகட்டத்தில், யாதவர்களிடம், பாண்டவர்களிடம், பல அரசுகளில், அப்பீலே இல்லை. கண்ணனும் எங்கேயும் யாராவது வர்ணம் மாறுவது சரி என்று சொன்ன மாதிரி தெரியவில்லையே!
ஒவ்வொரு சிறு பாத்திரமும் – உதங்கர், பரசுராமர், அரக்கு மாளிகையில் எரிக்கப்படும் பழங்குடியினர் என்று சொல்லிக் கொண்டே போகலாம் – பிறப்பால் ஜாதி, ஜாதியினால் ஏற்றத் தாழ்வு என்பதைத்தான் காட்டுகிறது. வேண்டுமானால் இப்படி சொல்லிக் கொள்ளுங்கள். மகாபாரத “காலத்தில்” பிறப்பே வர்ணத்தை நிறுவியது. ஆனால் சில வேளைகளில் பேச்சளவில் ஸ்வதர்மம் என்று சொல்லிக் கொள்வார்கள்.
நான் கீதையை முழுதாக படித்ததில்லை. படித்த வரையில் அது உன்னித்து படிக்க வேண்டிய சிந்தனைகள் கொண்ட நூல் என்று தெரிகிறது. என்றாவது படிக்க வேண்டும். பண்பாட்டை பேசுதல் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். படித்த பிறகு எப்போதாவது எழுதுகிறேன்.
ஒன்றே சிலவற்றை மட்டும் கூற விழைகிறேன்:
வரண-ஆசிரம தருமங்கள் பற்றிய குழப்பங்கள் தேக-ஆத்மா அபிமானத்தால் தான். முதலில்,
(1) இந்த “தேக-ஆத்மா அபிமானம்” என்றால் என்ன? அதை எப்படி விலக்குவது?
(2) மனித வாழ்க்கையின் குறிக்கோள் தாழ்ந்த பலன் ஆகிய ஐஸ்வரிய (material wealth) அனுபவமா, அல்லது வேறு ஏதாவதா?
(3) நம் ஆழ்வார்-நாயன்மார்களும் ஆச்சாரியார்களும் எப்படி வாழ்ந்து காட்டியுள்ளனர்? அவர்கள் கூறும் வைதீக வாழ்க்கை ஆவது யாது?
என்பவை பற்றி நிறைய கட்டுரைகளை எழுதினால் குழப்பங்கள் விளையாது. மேலும், அர்ஜுனனோ வேறு யாரோ சாதீயத்தை கடைபிடித்தார்களா என்ற விசாரம் இங்கு வேண்டாம். பகவத் கீதைக்கு அர்த்தம் சொல்பவர்கள் சங்கரர், ராமானுஜர் முதலிய பெரிய ஆச்சாரியார்களுடைய பாஷ்ய நூல்களை ஒட்டியே அர்த்தம் சொல்வது நன்று. சங்கரர், ராமானுஜர் – இவர்களுடைய கீதா பாஷ்யம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலவசமாக வலைதளத்தில் வழங்கி வருகின்றனர்: “Gita Supersite 2.0” என்ற தளத்தில் இவை உள்ளன. மேலும், கீதைக்கு 11 பாஷ்யங்கள் அந்த தளத்திலேயே சமஸ்கிருதத்தில் உள்ளன.
நன்றி,
கந்தர்வன்
கீதையின் கடைசி ஸ்லோகம்
’யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்த ர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம’
என்பது. அதன் முதல் ஸ்லோகம்
’ தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவா:
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ’
என்பது.
கடைசி ஸ்லோகத்தின் கடைசி வரியையும், முதல் ஸ்லோகத்தின் முதல் வரியையும் சேர்த்தால் வருவது “ மம தர்ம “ என்பது. அதாவது ‘எனது தர்மம்‘ என்பது. எனவே கீதையின் சாராம்சம் ‘ஸ்வதர்மம்’ – அவனவன் அவனது தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
GK
ஆர்.ஜி.கே அவர்களே ,
மனிதனின் ஸ்வதர்மம் முக்தி பெறுவது அதை பற்றி தான் கீதை பேசுகிறது என நினைக்கிறேன் – வைகுந்தம் (இல்லை எதோ ஒரு முக்தி நிலை) புகுவது மன்னவர்க்கு இயல்பே
//ராஜாவின் “சந்ததியினர்” மட்டுமே ராஜா ஆகவேண்டும் என்றுதானே பாண்டுவும், திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், கௌரவர்களும் பிறக்கிறார்கள்?//
யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவனே ராஜா ஆகவேண்டும் என்று பரதன் மாற்றிய வழக்கத்தை சந்தனு மீனவப் பெண் சத்யவதியின் மேல் கொண்ட காதல் நிறைவேற வேண்டும் என்று பீஷ்மரெடுத்த சபதம் மாற்றியது. மீண்டும் வாரிசுக்குதான் அரசுரிமை என்று மாறியது என்பதைப் பற்றியெல்லாம் கூட மகாபாரதம் பேசுகிறதே!
//
“உள்ளத்தில் உறைபவன்” என்ற பொருள்பட ஹிருதயாலீஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைய அறைவேக்காட்டு ஆன்மீக எழுத்தாளர், இங்குள்ள இறைவனைக் கும்பிட்டால் இதய நோய் தீரும் என்று எழுத
//
உள்ளத்தில் உறையும் இறைவன் என்று ஹிருதயாலீச்வரரைச் சொன்னால் சரி, அப்புறம் எதற்கு கோவில் என்று விட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் இதய நோய் தீரும் என எழுதியிருக்கலாம். இப்போ கூட்டம் அலைமோதும்ல?
armchaircritic,
அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மகாபாரதம் காட்டும் சமூகம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட சமூகம். அதுதான் அங்கே நெறி. பரதனுக்கு முன்பும் ராஜாவின் பிள்ளைதான் ராஜா. பரதனுக்கு பின்பும் அப்படித்தான். பரதன் கதையே வியாச மகாபாரதத்தில் உண்டா இல்லை பி.ஆர். சோப்ராவின் டெலிவிஷன் தொடரில் மட்டும் காட்டப்பட்டதா என்பதே எனக்கு சந்தேகம். நிச்சயமாக வில்லிபாரத்தத்தில் கிடையாது. அனேகமாக எல்லா மகாபாரதங்களுமே சந்தனுவுடன்தான் ஆரம்பிக்கின்றன, வெகு சில சந்தனுவின் அப்பா பிரதீபனை குறிப்பிடுகின்றன. பி.ஆர். சோப்ரா பரதன் கதையை இங்கே புகுத்திவிட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அவருக்கு ஷோவை நீட்டிக் கொண்டே போக வேண்டும். 🙂
ஜடாயு அப்படி இல்லை என்று நினைக்கிறார், அப்படித்தான் இங்கே எழுதி இருக்கிறார். அவர் கீதையில் ஸ்வதர்மம் என்று சொல்வதையும் யுதிஷ்டிரன் நச்சுப் பொய்கையில் பிராமணன் என்பவன் பிறப்பால் அல்ல என்று சொல்வதையும், கர்ணனை போட்டியில் அவமானப்படுத்தும்போது துரியோதனன் வீரம் உள்ளவன் க்ஷத்ரியன் என்று வாதிடுவதையும், ஏகலைவனின் கட்டை விரல் காணிக்கைக்கு ஜாதியை விட அர்ஜுனனை முதன்மையானவனாக ஆக்க வேண்டும் என்று எண்ணமே பிரதானம் என்றும் வாதிடுகிறார். எனக்கு பேசுவது சுலபம், பாரதத்தில் எங்கும் யாரும் ஸ்வதர்மத்தால் வர்ணம் மாறியதாக இல்லையே என்ற கேள்வி எழுகிறது.
//கூட்டம் அலைமோதும்ல?
பக்கத்துலேயே காப்பி அடிச்சு புனித இதய தேவன் ஆலயம் (holy heart Christ) புனித இதய அன்னை ஆலயம் கட்டிருப்பங்க அங்க தான் இபெல்லாம் கூட்டம் – attendence குடுத்தா அம்பது ரூவா – கோவிலுக்கு போன நீங்க தான் உண்டியள்ளையும் தட்டுலயும் காசு போடணும்
Sri Sarang
Swadharma: One’s own natural (innate) duty (dharma), based on their karma and samskara. One’s own prescribed duty in life according to the eternal law.
In the above sense only I have quoted.
RGk
//பரதன் கதையே வியாச மகாபாரதத்தில் உண்டா இல்லை பி.ஆர். சோப்ராவின் டெலிவிஷன் தொடரில் மட்டும் காட்டப்பட்டதா என்பதே எனக்கு சந்தேகம். நிச்சயமாக வில்லிபாரத்தத்தில் கிடையாது.//
எனக்கும் தெரியாது. ஆனால் அது original மகாபாரதத்தில் இல்லை என்று இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் அது உண்மை என்றே நம்புகிறேன்.
//கர்ணனுக்கும் ஜாதியால் மட்டுமே துரோணர் பயிற்சி தர மறுக்கிறார்//
மஹாபாரதம், ஸம்பவ பர்வம் 130ம் அத்தியாயம் சொல்வது இது:
Then Drona endued with great prowess taught the sons of Pandu (the use of) many weapons both celestial and human. And, O bull of the Bharata race, many other princes also flocked to that best of Brahmanas for instruction in arms. The Vrishnis and the Andhakas, and princes from various lands, and the (adopted) son of Radha of the Suta caste, (Karna[HK1] ), all became pupils of Drona.
More details available in https://tamilhindu.com/2008/11/mahabharata-discussions-002/
நல்ல லிங்க். கர்ணனுக்கு துரோணர் வில் வித்தை பயிற்சி தர மறுத்தார் என்றுதான் படித்திருக்கிறேன். ஒரு வேளை க்ஷத்ரியர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி என்று படித்து குழப்பிக் கொள்கிறேனா தெரியவில்லை. என்றாவது கங்குலி மொழிபெயர்ப்பை முழுதாக படிக்க வேண்டும்.
// மகாபாரதம் காட்டும் சமூகம் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட சமூகம் //
அன்புள்ள ஆர்.வி, விஷயத்தை அப்படி எளிமைப் படுத்திவிடமுடியாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தொழில்முறை வர்ண அமைப்பு இறுகி இறுகி பிறப்பின் அடிப்படையிலான சாதிய அமைப்பாக மாறுவது பற்றிய சித்திரம் தான் மகாபாரதத்தில் கிடைக்கிறது. பாரதம் முழுவதும் இந்த விஷயம் பற்றீ ஏராளமான இடங்களில் விவாதம் நடக்கிறது – முழுதும் ஏற்றுக் கொண்ட விஷயத்தை ஏன் விவாதிக்க வேண்டும்?
மேலும், நீங்கள் வாரிசு அரசுரிமையை இதோடு குழப்பிக் கொள்கிறீர்கள். க்ஷத்ரியன் என்பதானேலேயே அரசுரிமை கிடைத்து விடாது – அது ஒரு தொழில் முறை அடையாளம் மட்டுமே. வர்ணத்தைத் தேர்ந்தெடுத்தல் என்பதற்குப் பொருள் யார் வேண்டுமானாலும் அரசனாகலாம் என்பதல்ல. அரசுரிமைக்கு என்று விசேஷ சட்டங்கள் எல்லா பழம் சமூகங்களிலும் இருந்திருக்கின்றன். நான் மகாபாரத காலம் “ஜனநாயக அரசியல்” காலம் என்றும் சொல்லவில்லை.
பரதனுடைய கதை ஒரு விதிவிலக்கு.. மன்னன் கொடுங்கோலனாகும் பட்சத்தில் இத்தகைய விதிவிலக்குகள் பாரத நாட்டின் பழைய வரலாற்றில் நடந்துள்ளன (உதாரணம்: வேனன் என்ற தீய மன்னனை மக்களே கொன்று, ப்ருது என்பவை மன்னனாக்கியது போன்று).
இது பற்றி ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு தொடக்கமாக, டாக்டர் அம்பேத்கரின் Who are the Shudras படித்துப் பாருங்கள்.
கீதை பற்றி: அது “தன்னளவில் முழுமையான” தத்துவ நூல் என்று கூறினேன். வியாசர் என்கிற மகா கவிஞர், மகா முனிவர், மகா ஞானியின் மூலமாகவே நமக்கு அது கிடைத்துள்ளது. நீங்கள் மகாபாரதத்தில் வரும் அனைத்து சம்பவங்களையும், கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள் அனைத்தையும் வைத்து கீதையின் கருத்தியலோடு பொருந்தி வருகிறதா என்றெல்லாம் பார்ப்பது அர்த்தமற்றது.
ஒரு சமகால இலக்கியவாதி/தத்துவ அறிஞர் விஷயத்தில் இப்படி செய்யலாம். ஆனால் மகாபாரதம், புராணங்கள் ஆகியவை பல அடுக்காக வளர்ந்தபடியே வந்துள்ளன. அவற்றில் எந்தெந்தக் கூறுகள் வ்ரலாற்றுரீதியாக உண்மையானவை என்று தேடுவதே ஒரு மகா சிக்கலான ஆய்வுப் பிரசினை. அதை ஆய்வாளருக்கு விட்டுவிடுங்கள். மேலும், கீதை பற்றிய புரிதலில் அது பெரிதாக எதையும் பாதிக்கப் போவதுமில்லை.
மாறாக, கீதையை ஆறு தரிசனங்களின் ஒளியில் (சாங்கியம், வைசேஷிகம், யோகம்..), அதற்கு முன்பிருந்த உபநிஷதங்களில் ஒளியில் கற்பது சிறந்தது. பல்வேறு தத்துவக் கருத்துக்கள் உருத் திரண்டு எப்படி கீதையின் மாபெரும் “தரிசனமாக” ஆகிறது என்று பார்ப்பது பயனளிக்கும். கீதைக்கு உரை எழுதியவர்கள், அதனை செயல்முறை யோகமாக, வாழ்க்கை நெறியாக முன்வைத்தவர்கள் அனைவரும் இதைத் தான் செய்கிருக்கிறார்கள்.
// கீதைக்கு 11 பாஷ்யங்கள் அந்த தளத்திலேயே சமஸ்கிருதத்தில் உள்ளன.//
மனுஷன் மண்டை காய்வதற்கு வேறு வினையே வேண்டாம் :))
கீதை இன்று இந்து ஞானமரபில் மிகப் பிரபலமான நூலாக நிலைபெற்றிருக்கிறது. ஏராளமான உரைகள் வந்துவிட்டன. கீதையின் விசாலமான ஞானத் தேடலை அதன் அனைத்து வீச்சுகளோடும் முன்வைக்கும் உரைகளோடு கூட, குறுக்கல்வாதமாக்கும் உரைகள், குழப்படியான உரைகள், வார்த்தைகளுக்கு தப்பாக பொருள் தரும் உரைகள் இப்படிப் பலதும் கூட உண்டு.
கீதாபிரஸ் கோரக்பிரஸ் காரர்கள் மிகக் குறைந்த விலையில் தரும் தடிமனான தலகாணி கீதை உரையை (ஜயதயால் கோயந்தகா எழுதியது) ஒருவன் படிக்க நேர்ந்தால் சாதியம், தீண்டாமை, பழமைவாதம், வேண்டாத சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் கீதை போதிக்கிறது என்ற எண்ணம் கூட வலுப்பட்டு விடும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட ’பாஷ்ய’ உரைகள் மிக ஆதார பூர்வமானவை. ஆனால் தத்துவ அறிமுகமும் பயிற்சியும் இல்லாதவர்கள் நேரிடையாக வாசித்துப் புரிந்து கொள்ளக் கடினமானவை. எனவே அவற்றின் சாரத்தைக் குறைக்காமல், அதே சமயம் ஓரளவு எளிய நடையில் உள்ள உரைகளும் கண்டிப்பாகத் தேவையாகவே உள்ளன. (உதாரணமாக, சுவாமி சித்பவானந்தரின் தமிழ் உரை, சுவாமி சின்மயானந்தா ஆங்கில உரை இப்படி..)
இந்த சூழலில், கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்வதும் மிக மிக முக்கியமாகிறது. இத்திறக்கில் ஜெயமோகனின் இந்த அருமையான கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் –
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – https://www.jeyamohan.in/?p=35
அன்புள்ள ஜடாயு,
இந்த விஷயத்தில் நமக்குள் இசைவு ஏற்படப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. For the record, என் தரப்பை சுருக்கமாக இன்னொரு முறை சொல்லிவிடுகிறேன்.
மகாபாரதம் காட்டும் சமூகம் பிறப்பு-வர்ணம்-ஏற்றத்தாழ்வு என்ற கருத்து நெறியை உடையதுதான். பிறப்பை மீறி வர்ணம் மாறிய எந்த பாத்திரமும் அதில் இல்லை. ஸ்வதர்மம் எந்த வர்ணத்துடையதாக இருந்தாலும் சரி, மகாபாரத சமூகத்தின் கண்களில் பிறப்பே அவர்கள் வர்ணத்தை தீர்மானிக்கிறது. கர்ணன், துரோணர், அஸ்வத்தாமா என்று பல உதாரணங்கள் உண்டு. கீதையில் வர்ணம் பற்றி என்ன சொல்லி இருக்கிறது என்று எனக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால் ஸ்வதர்மம் பற்றி சொல்லி இருப்பது அந்த சமூகத்துக்கு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே.
இனி நீங்கள் சொல்லி இருக்கும் சில கருத்துகள் பற்றி:
கீதையின் கருத்தியலை பாரதத்துடன் பொருத்திப் பார்ப்பது அர்த்தமற்றது என்று எழுதி இருக்கிறீர்கள். நான் சரியாகத்தான் படித்தேனா என்று ஒரு முறைக்கு இரண்டு முறை செக் செய்ய வேண்டி இருந்தது. கீதை பாரதத்தின் உன்னதமான பகுதி, இந்திய தத்துவத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது. மகாபாரத சமூகத்துக்கு அது ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்லும் நான் கூட வர்ணம் பற்றிய பகுதியைத்தான் அப்படி நினைக்கிறேன். நீங்கள் கீதையின் கருத்தியல் – முழுவதுமா? – ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்கிறீர்களே!
க்ஷத்ரியனாக இருந்தால் அரசுரிமை கிடைத்துவிடாது என்று எழுதி இருந்தீர்கள். உண்மைதான். ஆனால் க்ஷற்றியனாக இல்லாவிட்டால் நிச்சயம் கிடையாது. அது ஒரு necessary but not sufficient condition. என்ன சூத்திரனையும் வைசியனும் பிராமனனுமா அரசாள முடியும்?
பிருது பற்றி எழுதி இருந்தீர்கள். தொன்மத்தின்படி வேனனின் தொடையைக் கடைந்து அதிலிருந்து பிருது கிளம்பி வந்தார் என்பதை நினைவூட்டுகிறேன். பிருது எங்கோ கிடந்த சூத்திரனோ வைசியனோ பிராமணனோ ஏன் க்ஷ்ற்றியனோ கூட இல்லை.
மகாபாரதத்தில் பல இடைச்செருகல்கள் இருக்கும்தான். இது ஒரிஜினல், எது இடைச்செருகல் என்று கண்டுபிடிப்பது கஷ்டம்தான். ஆனால் நாம் பேசும் விஷயங்கள் ஒரிஜினல் பாரதத்தின் பகுதி என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாம் எந்த obscure பாயிண்டையும் விவாதிக்கவில்லையே?
இசுலாம் மதத்திலும் உயா் குல பிறப்பு சிறப்பிக்கப்படுகின்றது. முஹம்மது இதற்கு முன்னா் நபிகள்பலா் தோன்றிய குலத்தில் – பரம்பரையில் பிறந்தாா் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆக இசுலாம் என்பதே உயா்குல சிறப்புதான்.