பயோகிராபி, படிக்கவும் எழுதவும் சுவராசியமான விஷயம் என்று விவரித்துக்கொண்டிருந்தேன். சுய சரிதை என்கிற அழகான வார்த்தை இருக்கும் போது ஆங்கிலம் எதற்கு என்று குறுக்கே ஒரு கேள்வி கேட்டார் நண்பர். நம்மைப் போன்ற சாமானியர்களின் வாழ்க்கையை, பெரிய வார்த்தைகளில் சரிதை என்றா சொல்லவேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்டவுடன் எழுந்து போய்விட்டார். உயர்வு நவிற்சி தரும் வார்த்தைகள்தான் தமிழில் எத்தனையெத்தனை?
கூச்சப்படாமல் உண்மையைத் திரிப்பதற்கும், எழுதுவதற்கும் பயோகிராபி என்கிற வார்த்தையே பொருத்தமாக இருக்கிறது. பயோகிராபி என்றாலே ஏதோ கௌரவத்துக்குரிய விஷயம் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொய்களும், புரட்டுகளும் இருப்பதால் ஆட்டோபயோகிராபியை யாரும் மதிப்பதில்லை. சத்திய சோதனைக்குப் பின்னர் உருப்படியான ஆட்டோபயோகிராபி வந்ததில்லை. இனியும் வராது என்று சர்வநிச்சயமாக சத்தியம் செய்கிறார்கள். ஆகவே, இது பயோகிராபிகளுக்கான காலம்.
எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரமாக, ஒரு தனிநபரைப் பற்றி எந்தச் சங்கடமும் இல்லாமல் பயோகிராபி எழுத முடியும். ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜேவியர் மோராவும் (Javier Moro) அப்படித்தான் நினைத்து எழுத ஆரம்பித்தார். புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் வெளிவரும் நேரத்தில் கிளம்பிய கூச்சலில் பயந்துபோய் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். புத்தகம், நிஜமல்ல; கதையாம்!
This is a novel based on the story of Sonia Gandhi and the Nehru family. Neither Sonia Gandhi nor any member of her family has provided information or has collaborated in this book. Dialogues, conversations and situations found therein are the product of the author’s own interpretation and do not necessarily reflect authenticity…
ஜேவியர் மோரோவின் சிவப்புப் புடைவை புத்தகம் 2008-இல் வெளியானது. இத்தாலி, பிரெஞ்ச், டச் மொழிகளில் வெளியிட்டபின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தயாரான நேரத்தில்தான் ஆரம்பமானது சர்ச்சை. “சிவப்புப் புடைவை- வாழ்க்கையே பதவிக்கான விலையாகும்போது” (The Red Sari: When Life is The Price of Power)– தலைப்பை விட புத்தகத்தின் சப்டைட்டில்தான் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
எல்லா பயோகிராபிகளைப் போலவே ஜேவியர் மோராவின் சோனியா பற்றிய பயோகிராபியும் அவரது சொந்த ஊரில் ஆரம்பிக்கிறது. ஏழைமையான குடும்பம், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள் தொடங்கி சொந்த ஊர் பற்றி விரிவாக அலசுகிறது. எட்விகே அண்டோனியோ அல்பினா மைனோ என்பதுதான் அவருக்கு வைக்கப்பட்ட பெயர். யம்மா! சும்மாவா சொன்னாங்க?!
எப்போதும் சிரித்தபடியே இருப்பதுதான் சோனியாவின் குணம். சின்ன வயதிலேயே ஆஸ்துமா, இருமல் உண்டாம். படித்து முடித்துவிட்டு ஒரு சேவகியாக இருக்கவேண்டும் என்பதுதான் சோனியாவின் விருப்பமாம். சோனியாவுக்கும் சரி அவரது அப்பாவுக்கும் சரி ரஷ்யாவின் மீது நிறைய பற்று இருந்திருக்கிறது. சின்ன வயதில் சோனியா பிரியமாக வளர்த்த நாயின் பெயர் ஸ்டாலின்!
இன்றும் சோனியாவை அவரது சொந்த ஊரில் பெரும் புரட்சியாளராக நினைத்துப் பெருமைப்படுகிறார்களாம். இத்தாலிக்கு வந்தாலும் ஆங்கிலத்தில் பேசி அந்நியப்பட்டு இருப்பதுதான் சோனியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் வருத்தம். 20 வருஷங்கள் இத்தாலியில் வாழ்ந்துவிட்டு சொந்த நாட்டின் அடையாளத்தை சோனியா துறந்திருப்பதால் அவர்களுக்கு ஏகப்பட்ட கோபமாம்.
இது நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம். போபால் விஷ வாயு சம்பவத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் அமெரிக்காவில் ஆண்டர்சன் வீட்டு வாசலிலேயே நாள்கணக்கில் காத்துக் கிடந்தது டைம்ஸ் சானல். இந்தியன் எக்ஸ்பிரஸ் போபால் பற்றி ஏகப்பட்ட கவர் ஸ்டோரி எழுதியது. இவர்களெல்லாம் சோனியா பிறந்த இத்தாலியின் லுசியானாவுக்கு ஏன் ஒரு விசிட் அடிக்கக்கூடாது? செய்ய மாட்டார்கள்.
ராஜீவ் காந்தியின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதி மரியாதை செய்தபோது சோனியாவை உள்ளே அனுமதிக்கவில்லை என்று புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யார் அனுமதிக்கவில்லை? எதற்காக அனுமதிக்கவில்லை என்பதைப் பற்றியாவது புத்தகத்தில் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் பரபரப்பு சேனல்களின் வேலை என்று ஜேவியர் முடிவு செய்துவிட்டாரோ என்னவோ?
ராஜீவ் இறந்தவுடன், காங்கிரஸ் தலைமை இவரை அரசியலுக்கு இழுத்தபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்தார் என்று விலாவாரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தவிதமான நெருக்கடி சோனியாவை அப்படியொரு முடிவெடுக்க வைத்தது என்பதற்கான பதில் இல்லை.
சோனியா பற்றி எதற்காக எழுதினார் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு ஏராளமான கதைகள் வைத்திருக்கிறார் ஜேவியர்.
“ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இறுதிக்கிரியை நடந்தபோது அதை டிவியில் பார்த்தேன். சோனியாவின் பார்வையில் ராஜீவ் குடும்பத்தைப் பற்றி எழுதினால் உலகெங்கிலும் உள்ள மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும். அதனால் எழுதுவது என்று முடிவெடுத்தேன். எப்போதும் சாதாரண இல்லத்தரசியாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைத்த சோனியா, சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியலுக்குள் நுழைந்து 2004-இல் தேர்தலில் வென்று 100 கோடி மக்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றவுடன் என்னுடைய புத்தகத்திற்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டது,” என்கிறார்.
சோனியாகாந்தியின் செய்தித் தொடர்பாளர் போல் ஜேவியர் பேசினாலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விடுவதாக இல்லை. சோனியா காந்தி பற்றி எழுத, அதன் ஆசிரியர் அனுமதி வாங்கவில்லை. புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பாக நிறைய விஷயங்கள் இருககின்றன. அதனால் எழுத்தாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக சிங்வி தெரிவித்தார்.
மாற்றம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே எப்படி சிங்விக்கு அது குறித்துத் தெரியும்? சிங்வி சட்டவிரோதமாகப் புத்தகத்தைப் பெற்றுப் படித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்போகிறேன் என்று ஜேவியரும் கோதாவில் இறங்கியிருக்கிறார்.
ஜேவியர் வார்த்தையில் சொல்வதானால், புத்தகம், 17 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்திருக்கிறது. சோனியாவைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவரது குழந்தைகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சோனியாவைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். ஆனால் சோனியாவிடமிருந்து அனுமதி கிடைப்பதில்லை. ஒருவேளை சந்தித்திருந்தால் இப்படியொரு புத்தகம் சுதந்திரமாக எழுதியிருக்க முடியாது என்கிறார் ஜேவியர். நம்பவே முடியவில்லை!
பயோகிராபி எழுதுவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்டவர் நம்மிடம் பேச சம்மதிக்கவே மாட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களும் சரியான தகவல்களைத் தரமாட்டார்கள். நாமே அலைந்து, தேடி, திரட்டியாக வேண்டும். ஏற்கனவே வெளிவந்த தகவல்களை வைத்து ஆராய்ந்து எழுதியாக வேண்டும். தன்னுடைய புத்தகத்தை ஓர் ஆழமான ஆராய்ச்சி என்று வர்ணிக்கிறார் மோரோ. ஆனால் எத்தகைய மேலோட்டமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு புத்தகத்தில் நிறைய உதாரணங்கள் உண்டு.
புத்தகத்தில் எந்தவொரு தகவலையும் சரிபார்த்து எழுத ஜேவியர் தயாராக இல்லை. இந்தியாவிலிருந்து வெளியாகும் நாளேடுகளின் பழைய புரோஃபைல்களில் கூட சோனியா பற்றிப் பல தகவல்கள் கிடைக்கின்றன. சோனியா காந்தி என்று கூகிளாண்டவரிடம் கேட்டால், கொண்டு வந்து கொட்டுவார். சுப்ரமணிய சுவாமி என்று கேட்டால் இன்னும்கூட சோனியா குறித்து மேலதிகத் தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.
“தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை,” என்கிற வார்த்தைகளைப் படிக்கும்போது நம்மூர் பயோகிராபர்கள் எவ்வளவோ தேவலை என்றே தோன்றுகிறது.
சோனியா இந்தியாவுக்கு வந்த பின்னர், வீட்டில் இருந்தபடி என்ன செய்தார் என்பது பற்றிய எந்த விபரங்களும் புத்தகத்தில் இல்லை. 1975 முதல் 1982 வரை ராஜீவ்காந்தி என்ன செய்தார் என்பதே இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும்போது சோனியா காந்தி பற்றிச் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. எதிர்பார்த்தது போலவே 1992 முதல் 1999 டீ பார்ட்டீ வரையிலான சோனியாவின் வாழ்க்கையும் புத்தகத்தில் இல்லை.
புத்தகத்திற்கு மனதைத் தொடும் தலைப்பு வைத்திருத்திருக்கிறார்கள். நேரு, லண்டனில் ஒரு பொருட்காட்சிக்குச் சென்றபோது கமலாவுக்கு ஒரு புடைவை வாங்கி வந்தாராம். அந்தப் புடைவையைத்தான் கல்யாணத்தின்போது இந்திரா காந்தியும் கட்டியிருந்தாராம். அதே புடைவையையே நீயும் கட்டவேண்டும் என்று ராஜீவ் சொன்னதால் சோனியாவும் அதே புடைவையை கல்யாணத்தின்போது கட்டிக்கொண்டிருந்தாராம். இந்தியர்களுக்கே உரிய இந்த சென்டிமெண்ட்தான் இந்தப் புத்தகத்தையும் சூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறது.
சிவப்புப் புடைவை புத்தகம், உலகெங்கும் இதுவரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இரண்டே வருஷங்களில் பத்தாவது பதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஜேவியருககு மார்கெட் இருக்கிறதோ இல்லையோ, இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களை எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு எழுதினால் பணம் கொட்டுமென்பதை ஜேவியர் புரிந்துகொண்டிருககிறார். கடைசியாக ஜேவியரின் அருள்வாக்கையும் படித்துவிடுங்கள்.
“இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். சோனியா காந்தியின் பார்வையில் சம்பவங்களை விவரிக்கவேண்டும் என்று நினைத்தேன். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை”
நிஜமல்ல, கதை என்று விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக மேற்படி அருள்வாக்கை அச்சடித்திருநதால் காங்கிரஸ் மேலிடமே மொத்தமாக வாங்கி எல்லோருககும் இலவசமாகக் கொடுத்திருபபார்கள், மன்மோகன் சிங் உட்பட.
குறை சொல்வது நோக்கமல்ல.
ஜேவியர் மோரா என்பது ஹாவியெர் மோரோ என்றிருக்க வேண்டும். இத்தாலிய, எஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய மொழிகளில் ja,jo ஹ ஹோ என உச்சரிக்கப்படவேண்டும்.,
எனக்கு என்னமோ இந்தபுத்தகம் ஒரு (Hero Worship) செய்யவும் கிருஸ்துவத்தின் பெருமையை நிலைநிறுத்தவும் மிகைப்படுத்தி காட்டிக்கொடுக்கும் ஒற்றர் பரம்பரையில் வளர்ந்த ஒரு சுயநலவாதியின் சுய சரித்திரம். (Slum dog Millinior) என்ற படத்தில் இப்படித்தான் இந்துக்களை மட்டமாக சித்தரித்து பணம் கொழித்தார்கள். இந்தபுத்தகத்திலும் மறைமுகமாக இந்துக்களையும் அவர்களது காலாசாரத்தையும் சாடியுள்ளாரகள். இது சோனியாவின் காந்தி/இந்து என்ற முகத்திரையை கிழித்துவிடும். இந்த சரக்கு அப்படீயே இந்தியாவில் விலைபோகாது என்று தெரியும். எனவே இந்திய பதிப்பகத்தில் மாற்றங்கள் பல செய்து வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த இந்திய பதிப்பு அதிக விலைபோவதற்க்காக முன்கூட்டியே செய்யப்படும் விளம்பரம் தான் இது. அதற்க்கு தமிழ் இந்துவும் உதவியிருக்கிறது.
உங்கள் மொழிபெயர்ப்பில், கிழக்கு வெளியீடாக இப்புத்தகம் தமிழில் எப்போது வெளிவரும்?
பொதுவாக பிரபலமானவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருப்பது மரபு. ஆனால் சிலர் வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது. நேரு குடும்பத்தில் ஜவஹர் வரை ஒரே இனத்தில் பெண் எடுத்தனர். அவரது பெண் இந்திரா இந்தியர்களில் ஒரு பிரிவில் ‘பார்சி’ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். வேறு வழியில்லாமல் நேருவும் ஒப்புக்கொண்டார். இந்திராவின் மகன் காஷ்மீரத்து பிராமணரா அல்லது பார்சியா? நேரு ஒரு நாத்திக வாதி. ஜாதிகளில் நம்பிக்கை இல்லாதவர். சரி! ராஜீவ் வேலைக்குப் போன இடத்தில் ஒரு உணவு விடுதியில் ஏற்பட்ட உறவு இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வல்லமையைத் தந்திருக்கிறது. அவரது தம்பி பரவாயில்லை ஒரு பஞ்சாபி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்திய உறவுக்கு அப்பால் நடந்த ஒரே திருமணம் ராஜீவின் திருமணம் மட்டும்தான். இதில் என்ன தவறு என்று நினைக்கலாம்? நீங்களும் நானும் இந்தத் தவறைச்செய்தால் தவறு இல்லைதான். அது முற்போக்கு என்று கூட எண்ணலாம். ஆனால் இந்த நாட்டில் நேரு குடும்பம்தான் நாட்டை ஆளத் தகுதியுள்ள குடும்பம் என்று அப்பாவி பொதுமக்களாலும், காங்கிரஸ் காரர்களாலும் நம்பப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டின் மரபு, உரிமை, அரசாங்க ரகசியங்கள் இவை வெளியே போக அனுமதிப்பது சரியான முடிவா என்ற ஐயம் தோன்றலாம். என்ன செய்வது? அந்நிய படையெடுப்புகள் இந்த நாட்டில் நடந்த போதெல்லாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் அந்நியனை நம்பி எமாந்திருக்கிறோம். இப்போது மட்டும் என்ன? மிகவும் விழித்துக் கொண்டோமா என்ன? அறியாமை, அடிமை புத்தி, வெள்ளைத் தோலுக்கு மண்டியிடும் கோழைத்தனம் இவையெல்லாம் நம்மை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அந்நியனுக்கு அடிமைகளாக வைத்திருந்தாலும் அதிசயப் பட ஒன்றுமில்லை. வாழ்க இந்திய தேசியம்.
தஞ்சை வெ.கோபாலன் ,
I don’t understand a single sentence you have written.
Feroz Khan who married Indira Khan was a Muslim and he practised Islam.
It is not Nehru/Indira ‘s duty to ensure Rajiv khan marry a Indian girl. Rajiv can marry anyone. To elect or not is Indian people’s duty.
It is not that ‘people are cheated by white skin’. They elect, they undergo, they experience and they re-elect.
எது எப்படியோ ,அந்தோனியோ மைநோவின் நிழல் பாரதத்தின் மீது படிந்திருக்கும் வரை நாட்டுக்கு ஆபத்தே.
முதலில் படை எடுத்தனர் ( முகலாயர்கள் ) பிறகு வியாபாரம் செய்தனர் ( கிழக்கிந்தியக் கம்பனி);பிறகு வெளியிலிருந்து அரசாண்டனர் ( பிரிட்டனின் மன்னர் ஆட்சியின் கீழ்) பிறகு அவர்களின் அடிமைகளான இந்தியர்கள் மூலம் ( நேரு ,ஆங்கிலப் படிப்பு படித்த ஹிந்துக்கள்) ஆட்சி செய்தனர்
கடைசியாக ஆண்டை குடும்பத்தில் நுழைந்து விட்டனர்.
இதுவே ஒரு சதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது
எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
ஆமிகோ, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன். என்னுடைய தளத்தில் திருத்திய பதிப்பு இடப்படும்.
ரெங்கதுரை, மொழிபெயர்ப்பு வரும் என்றும் தோன்றவில்லை. சோனியா பற்றிய சரியான புத்தகமாக இது இருக்காது என்பது என்னுடைய கருத்து.