முந்தைய பகுதிகள்:
தொடர்ச்சி…
வைதிக ஆக்கம் அல்லது மேனிலை ஆக்கம்
இந்துமதம் ஒருவரால் ஆக்கப்பட்டது அன்று. இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து இந்தப் புனித மண்ணின் சிந்தனை, அறிவு, அனுபவத்தோடு ஒட்டி வளர்ந்தது இந்துமதம். பிரம்ம சத் ஒன்றே உள்ளது, காட்சிப்படுவன எல்லாம் பொய்த்தோற்றம் எனக் கொள்ளும் மதம்கூட வியவகார நிலையில் உயிர்கள் பல; அவற்றின் அனுபவமும் பக்குவமும் வேறுபட்டிருக்கும் என உடன்படுகின்றது. புலன்கடந்த ஒன்றை அறிவதிலும் அதனை அறிய முற்படும் நெறியிலும் உயிர்களின் பக்குவத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வேறுபடுதல் இயல்பே. எனவே, இந்துமதத்தில் இயற்கை வழிபாடு, நீத்தார் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பல உருவ வழிபாடு என வழிபடுநெறிகளும், அவற்றிற்கு உரிய தோத்திரங்களும் மந்திரங்களும் பல்கிக் காணப்படுகின்றன.. சமுதாய அமைப்பு, தொழில், கல்வி , செல்வம் முதலியன ஒருவருடைய கடவுள் பற்றிய சிந்தனை மற்றும் வழிபாட்டுநெறிகளைக் கொண்டு செலுத்துகின்றன எனலாம்.
மேலோட்டமாகப் பார்க்கின்றபொழுது காணப்படுகின்ற வேற்றுமைகளினூடே, ஆழ்ந்து உற்று நோக்குபவருக்கு, இவற்றிடையே ஏதோ ஓர் இயைபு அல்லது ஒற்றுமை, நெருக்கம் ஊடுருவி இருப்பது தெற்றெனப் புலனாகும். அந்த ஒற்றுமை ஒருவரால் செயற்கையாகச் செய்யப்பட்டதன்று. இந்து சமுதாயத்தின் பல்வேறுவகைப்பட்ட சமய, வழிபாட்டுநெறிகளுக்கூடே உயிரோட்டமாக ஊடுருவி நிற்கின்ற அந்த ஒற்றுமையை இந்துத்துவம் அல்லது பாரதியம் என்போம். உயிரோட்டமான இந்துத்துவத்தின் வெளிப்பாடாகப் புறத்தோற்றத்தில் பாமரம்-வைதிகம், வேத்தியல்-பொதுவியல், பெருமரபு-சிறுமரபு, உயர்மரபு-இழிமரபு என்னும் இரட்டைகள் காணப்படுகின்றன.
வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. பாமரம், வைதிகத்தை நோக்கி முன்னேற, வைதிகம் பாமரத்தைத் தழுவி அணைத்துக் கொள்வதை, இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகிய இசை, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திலும் காணலாம்.
மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றிய நம் நாட்டவர்களும் பாமரம், வைதிகத்தை அல்லது வேத்தியலை நோக்கி முன்னேறுவதை– அதாவது, மேனிலையாக்கத்தை– இயல்பான இந்தப் பண்பாட்டு இயக்கத்தை, ‘சமஸ்கிருத மயமாதல்’, ‘பிராமணீயமாதல்’, ‘ஆரியமயமாதல்’ முதலிய கலைச்சொற்களால் அந்நியப்படுத்திவிட்டனர்.
படிப்பறிவில்லாத பாமரமக்கள் விடியற்காலையில் தொழிலுக்குச் செல்லுமுன், கிழக்கு நோக்கிச் சூரியனை வணங்கிச் சென்றனர். நிலாக் காய்ந்தால், நிலவிலுள்ள அமுதத்தை உண்டு பயிர்கள் தழையும் என நிலாப் பொங்கலிட்டு வழிபட்டனர். கதிரடிக்கும்போது, காற்று வீசாது போனால், களத்துமேட்டில், கல் வடிவில் உள்ள ‘மல்லாண்டை‘ தேவதையைக் கூடையினால் மூடி, புழுங்கச் செய்து காற்றை வரவைத்தனர். கிணறு வெட்டிப் புதுநீர் கண்டபோது, அந்தப் புதுநீரைக் கடவுளாக வணங்கி, அதனைப் பயன்படுத்து முன்னர் ஊர்ப்பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் செய்தனர். எழுத்தறிவில்லாத இந்தப் பாமர மக்கள் செய்யும் வழிபாட்டினை வைதிகர்கள் செய்யும் வழிபாட்டில் மந்திரமாகக் காண்கிறோம்.
பாமரமக்கள் செய்த இந்த வழிபாடு வைதிகமாக மேனிலை அடைந்தபோது, இவ்வியற்கையே சிவமூர்த்தமாக மந்திரத்தால் வழிபடப்பெற்றது. சிவன் பஞ்சபூதங்களை ஆசனமாகவும் மூர்த்தமாகவும் கொண்டு தான் மூர்த்திமானாகவும் அதனைக் கடந்தும் இருத்தலைக் காஞ்சிப் புராணம்,
பாரின் மேயினை பாரொரு வடிவினை பாரினுக் கறியொண்ணாய்
பாரும் மற்றையப் பாரிடைப் பொருளும்நின் ஆணையிற் பயில்வித்தாய்
நீரின் மேயினை நீரொரு வடிவினை நீரினுக் கறியொண்ணாய்
நீரும் மற்றையந் நீரிடைப் பொருளும்நின் ஆணையின் நிலைப்பித்தாய்
நெருப்பின் மேயினை நெருப்பொரு வடிவினை நெருப்பினுக் கறியொண்ணாய்
நெருப்பும் மற்றையந் நெருப்பிடைப் பொருளும் நின்னாணையின் நிறுவித்தாய்
மருத்தின் மேயினை மருத்தொரு வடிவினை மருத்தினுக் கறியொண்ணாய்
மருத்தும் மற்றையம் மருத்திடைப் பொருளும்நின் ஆணையின் வதிவித்தாய்
(மருத்து – வாயு)
விண்ணின் மேயினை விண்ணொரு வடிவினை விண்ணினுக் கறியொண்ணாய்
விண்ணும் மற்றையவ் விண்ணிடைப் பொருளும்நின் ஆணையின் நிறுவித்தாய்
கண்ணும் ஆருயிர் இருசுடர் எவற்றினும் இம்முறை கலந்தோங்கி
எண்ணி னாலறி வரும்பெரு முதல்வநின் இணையடி மலர்போற்றி”
(ஆருயிர் – புருடன், இருசுடர் – சூரிய சந்திரர்கள்)
எனப் பாடுகின்றது. இந்தப் பாடல்களில் பாமரமக்களின் இயற்கை வழிபாடு, இறைவனின் அட்டமூர்த்த வழிபாடாக வைதிகமாகின்றது.
கொங்கு நாட்டில் பட்டிப்பொங்கலின்போது, கால்நடைகளின் கால்களைக் கழுவி, “கால்கழுவு பட்டியாரே கால் கழுவு, உண்ணுண்ணு பட்டியாரே உண்ணுண்ணு, வாய்கழுவு பட்டியாரே வாய்கழுவு” என்று கூறிக்கொண்டு பொங்கலை ஊட்டுவர். பாமரரின் இக்கூற்றிலும் செயலிலும் ‘பாத்தியம், ஆசமனம், அர்க்கியம், நைவேத்தியம்’ ஆகிய வைதிகத்தின் அடையாளங்களைக் காணலாம்.
பாமர மக்கள் வழிபடும் சிறுதெய்வங்களும், அவற்றை வழிபடும் முறைகளும் மக்களின் பொருளாதார வாழ்க்கைப் பின்னணி, தொழில், நம்பிக்கை முதலியவற்றின் அடிப்படையிலேயே அமைகின்றன. ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ என வைதிகம் சிறுதெய்வ வழிபாட்டைப் போற்றாத போதிலும் இகழ்வதில்லை. படிநிலையில் சிறுதெய்வவழிபாடும் வேண்டியதே; உரிய பக்குவத்தில் சிறுதெய்வ வழிபாடும் ஒருபெருந்தெய்வ வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லும் என வைதிகம் சிறுதெய்வ வழிபாட்டினையும் படிநிலையில் ஏற்றுக் கொள்கிறது. இந்த நெறியில் தலபுராணங்களின் பங்கு அலாதியானது. சிறுதெய்வங்களை ஏதோ ஒருவகையில் பெருந்தெய்வங்களான சிவன், சத்தி, திருமால், திருமகள் முதலியோருடன் தொடர்புபடுத்திக் கதைபுனைந்து, சிறுதெய்வங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்றம் தந்து விடுகின்றன. நாளடைவில் சிறுதெய்வங்களும் வைதிகக் கடவுளராகி வேதநெறியில் வழிபடத் தக்கோராக மாற்றம் அடைந்துவிடுகின்றனர்.
மழைக் கடவுளாக மக்கள் கொண்டாடும் சிறுதெய்வமான மாரியம்மனைக் காஞ்சிப்புராணம் பரசுராமருக்குத் தாயும் சமதக்கினி முனிவருக்குப் பத்தினியுமாகிய இரேணுகா தேவியுடன் ஒன்றுபடுத்தி ஒருகதையைக் கூறுகின்றது. இரேணுகை பட்ட துயர் இக்காலத்திலும் அழகும் ஒழுக்கமும் வாய்ந்த பெண்களுக்கு அரசியல் செல்வாக்குடைய செல்வக்குமாரர்களால் தொடர்வதை இக்கதை நினைவுப் படுத்துகின்றது.
இளமையும் அரசுரிமையும் ஆற்றலும் நீங்கரு மடமையும்நிறைந்த கார்த்தவீரியார்ச்சனிடமிருந்து தன் இளமனைவியாகிய இரேணுகையையும் குடிப்பெருமையையும் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியாமல் சமதக்கினிமுனிவர் அவளைக் கொல்லும்படி ஆணையிட்டுப் பரசுராமரை ஏவுகின்றார். அந்த நிலையில் வலிமையற்ற ஏழைக்கு வாழ்க்கைப்பட்ட இளமையும் அழகும் வாய்ந்த பெண்ணின் அவலநிலையைக் காஞ்சிப் புராணம்,
அல்லலே பெண்ணெனப் பிறத்தல் ஆங்கதின்
அல்லலே இளமையிற் சிறத்தல் ஆங்கதின்
அல்லலே கட்டழகுடைமை ஆங்கதின்
அல்லலே இரவலர் சார்பின் ஆகுதல்
(இரவலர் சார்பினாதல் – ஏழைக்கு மனைவியாதல்)
என்று எடுத்துக் காட்டுகின்றது.
பரசுராமர் தந்தையின் ஆணையைக் கடவாமல் தாயைக் கொன்றுவிடுகின்றார். தாய்க்கொலை எனும் கொடிய பாவத்தைச் செய்யப் பரசுராமரைத் தூண்டிய தன் வெகுளியைச் சமதக்கினி முனிவர் நொந்து கூறுவது சிறந்த அறிவுரை.
வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்குந் தீவினை
வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால்
கார்த்தவீரியன் செய்தி அறிந்து சமதக்கினி முனிவரைக் கொன்றுவிடுகின்றான். பரசுராமர் தந்தை கூறியபடி தாயின் தலையையும் உடலையும் சேர்த்து, அவளை உயிர்ப்பிக்கின்றார். இரேணுகை கணவனை இழந்தமையால் வருந்தி பரசுராமர் கூறியபடி காஞ்சிபுரம் வந்து ஓர் இலிங்கம் தாபித்து வழிபடுகின்றாள். இறைவன் அம்மையுடன் எழுந்தருளுகின்றார். இரேணுகை இறைவனிடம், “ஐயனே, எண்ணிலாத துன்பங்கள் பட்ட யான், தூயநின் அருளால் மன்பதைக்கெலாம் வழிபடு தெய்வமாக விளங்க வேண்டும். அவரவர் விரும்பிய போகங்களை அவர்களுக்கு நல்கும் பேறு எனக்கு அருளவேண்டும். என்னால் தாபிக்கப்பட்டுள்ள இந்த இலிங்கத்தில் நீங்கள் என்றும் எழுந்தருளி வழிபடும் எவர்க்கும் கனிந்தருள் புரிய வேண்டும்!” என வேண்டினாள்.
இறைவனும் அவளுடைய வேண்டுகோளுக்கு இரங்கி, அவளுக்குத் தெய்வத் திருவுருக் கொடுத்து, “… எண்ணிய எண்ணியாங்கு எய்த, நண்ணி வேட்ட சால மிக்களிக்க” அருள்புரிந்தார். இரேணுகை பெற்ற தெய்வக் கோலம் மாரியம்மை எனப்படுகின்றது.
இந்தக் கதையினால் பாமரமக்களும் தத்தம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப உலகியல் பயன்களைக் கருதி அவர்களுடைய மனத்திற்கு உகந்த சிறுதெய்வங்களை வழிபடுகின்றனர் என்றும் அவர்கள் விரும்பிய உலகியற் பயன்களை அச்சிறுதெய்வங்கள் அளிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்றும் அந்த ஆற்றல்கள் அச்சிறுதெய்வங்கள் செய்த புண்ணியப் பயனாக ஒருபெருந்தெய்வத்தால் அளிக்கப் பெற்றவை என்பதும் பெறப்படுகின்றன.
எல்லையற்ற பரம்பொருளை உணரும் ஆற்றல் இல்லாத மக்கள் இரேணுகை (மாரியம்மன்) போன்ற சிறுதெய்வங்களை வழிபட்டு அவர்களின் வழி பெருங்கடவுள் அளிக்கும் நன்மையினைப் பெறுகின்றனர். அதனால் சிறுதெய்வவழிபாடும் அந்த அளவில் வேதநெறியே; இந்து மதமே.
இரேணுகை என்ற மாரியம்மன் மீது நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சிதர் அவர்கள், ‘கன்னட பங்களா’ என்னும் அரிய இராகத்தில், “ரேணுகா தேவி ஸம்ரட்சிதோஹம் அனிசம்..” எனத்தொடங்கும் அற்புதமான கீர்த்தனையை இயற்றியுள்ளார். (இந்தக் கீர்த்தனையை டி.கே.ஜெயராமன் அவர்கள் பாடியுள்ளார். பாடலைக் கேட்க இங்கே சுட்டவும்.) இதுவும் சிறுதெய்வ வழிபாட்டை வேதநெறி நின்ற பெரியோர்கள் தழுவிக் கொண்டதற்குச் சான்றாகும்.
(தொடரும்…)
// வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. //
அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் முனைவர் ஐயா. குலதெய்வ, இயற்கை தெய்வ வழிபாடுகள் இந்து மதம் சார்ந்தவை அல்ல என்ற துஷ்பிரசாரம் பலகாலமாகவே தமிழகத்தில் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் காஞ்சிப் புராணத்தை முன்வைத்துத் தாங்கள் இது பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்திருப்பது மிக அருமை.
// அந்த ஆற்றல்கள் அச்சிறுதெய்வங்கள் செய்த புண்ணியப் பயனாக ஒருபெருந்தெய்வத்தால் அளிக்கப் பெற்றவை என்பதும் பெறப்படுகின்றன.//
சமயரீதியாக இது உவப்பான விளக்கமே. ஆனால் தத்துவார்த்த ரீதியாக, எந்த தெய்வத்தையும் பிரம்ம சொரூபமாக வழிபடலாம். பரம்பொருளாகவே எண்ணி வணங்கலாம். (நெல்லை மாவட்ட கிராமப் புறங்களில் ’பிரம்மசக்தி’ அம்மன் என்ற அம்மன் உண்டு. தேவர்/மறவர் சமுதாயத்தினர் பலருக்கு இந்த அம்மன் குலதெய்வம்). பாண்டிச்சேரியில் தலித் மக்களின் சேரிக்குச் சென்ற பாரதியார் “உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா” என்று உலகநாயகியாகவே அங்குள்ள மாரியம்மனை என்ணிப் பாடினார், ஒரு குழுவின்/சாதியின் தெய்வமாக மட்டுமே என்ணி அல்ல.
தீட்சிதர் மாரியம்மன் பற்றி எழுதிய கீர்த்தனம் பற்றிய அரிய செய்தியைக் கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இது நான் கேள்விப் படாத விஷயம்.
இதே போன்று மரகதவல்லி என்ற அம்மனைப் பற்றியும் காம்போதி ராகத்தில் ஒரு அழகான கீர்த்தனம் பாடியிருக்கிறார் (மரகதவல்லீம்… மனஸா ஸ்மராமி). இந்த அம்மனது வழிபாடு தென் தமிழ்நாட்டில், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம். சாஸ்தா கோயில்கள் பலவற்றிலும் மரகதவல்லித் தாயாருக்கு சன்னிதி கோயிலுக்கு உள்ளேயோ, வெளியேயோ இருக்கும். திருமாலின் மோகினி அவதாரமே இந்த அம்மன்; அதனால் இவள் சாஸ்தாவின் தாய் என்றும் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கையும் ”ஹரி ஹ்ருதயாவேசினீம், ஹரிஹரசுத ஜனனீம் நளினீம்” என்று தனது கீர்த்தனையில் வைத்துப் பாடியுள்ளார் தீட்சிதர்.
மதிப்பிற்குரிய முனைவர் அவர்கள் அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். நமது பாரம்பரியம் மிக்க புராதனமான மதம் பலதரப்பட்ட சித்தாந்தங்களையும், சம்பிரதாயங்களையும், இன, மொழிக் கூட்டமைப்புக்களையும் உள்ளடக்கியது. இதனை எந்த ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளும் அடைக்க முயலக் கூடாது என்பதே எனது கருத்து. இந்தக் கருத்துக்கு உரம் சேர்ப்பது போன்ற உதாரணங்களைத் தந்திருக்கிறீர்கள்.
ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதரது முன்னோர்கள் வேலூரை அடுத்த திருவிரிஞ்சிபுரம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்கள். அவரது பாட்டனாரும் தந்தையும் ஏனையோரும் 1750 ஆம் ஆண்டு வாக்கில் முகமதியர் படையெடுப்புக் காலத்தில் அங்கிருந்து புலம் பெயர்ந்து திருவாரூர் சென்றடைந்தனர். இந்த ஊரில் உள்ள திருக்கோவில்களில் ஒன்று ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ மார்க்கசஹாயர் ஆலயம். இவரே தீட்சிதர் அவர்களின் குலதெய்வமும் ஆவார். ஸ்ரீ அப்பைய தீட்சிதருக்கும் ஸ்ரீ மார்க்கசஹாயரே குலதெய்வம் ஆவார். இந்த அம்பாளின் துதியாகவே
தீட்சிதர் ‘மரகதவல்லி மனஸா ஸ்மராமி’ என்று துவங்கும் கீர்த்தனையை எழுதினார்.
//சமயரீதியாக இது உவப்பான விளக்கமே. ஆனால் தத்துவார்த்த ரீதியாக, எந்த தெய்வத்தையும் பிரம்ம சொரூபமாக வழிபடலாம். பரம்பொருளாகவே எண்ணி வணங்கலாம். // நன்றி திரு ஜடாயூ உங்கள் கருத்து முற்றிலும் உண்மையே உங்களுடைய கருத்துக்குப் பின்வரும் சிவஞானசித்தியார்ப் பாடல் ஆதாரமாகிறது.”மனமது நினைய வாக்கு வழித்த மந்திரங்கள் சொல்ல, இனமலர் கையில்கொண்டு அங்கு இச்சித்த தெய்வம்போற்றி,சினமுதல் அகற்றிவாழும் செயல் அறமானால் யார்க்கும், முனம் ஒருதெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம் அன்றே’ நான்விரும்பிக் கேட்கும் தீட்சிதர் கிருதிகளில் தாங்கள் எடுத்துக் காட்டிய ‘மரகதவல்லீம்’ ஒன்று. தீட்சிதர் சாஸ்தாவைக் கொண்டாடும் வசந்தா ராகப் பாடல் ஒன்றும் உளது.’ஹரிஹரபுத்ரம் சாஸ்தாரம்’ எனும் அந்தக் கீர்த்தனையில் ‘ பாண்டிய, கேரள நாடுகளிச் செழிக்கச்செய்தவர் (பாண்ட்ய கேரளாதி தேஸ ப்ரபாகரம்) , என்று போற்றுகிறார் பாண்டியநாட்டு சைவவேளாலருக்கும் பிறருக்கும் சாஸ்தா குலதெய்வமாக வழிபடப் பெறுவது இக்கீர்த்தனையினாலும் வலியுறுத்தப் படுகின்றது..
நன்றி உமாசங்கர். முத்திசுவாமி தீட்சிதர் அவர்களுக்கும் பரமசாம்பவரான அப்பைய தீட்சிதர் அவர்களுக்கும் உள்ள தொடர்பு எனக்குக் கிடைத்த புதிய செய்தி
முனைவர் அவர்களுக்கு,
பரதெய்வம், சிறு தெய்வம் என்கிற விஷயம் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். ஐயப்பன் என்று கிராமத்தார் வணங்கும் தெய்வமும் சாஸ்தாவும் ஒன்றானதும் முனியயப்பன் முனீஸ்வரர் ஆனதும் கண்ணகி பகவதியானதும் (இலங்கையில் கண்ணகி கோயில்கள் அண்மைக்காலத்தில் மஹோத்ஸவாதிகள் செய்வதற்காக சிவகாமியம்பாள் கோயில்களாக்கப்பெற்றுள்ளன)இவை எல்லாம் விநோதமானது. ஆனால் இவற்றை நோக்கும் ஆய்வாளர்கள் யாவரும் இதை மேனிலையாக்கம் என்றும் பிராம்மணீயம் என்றும் கூச்சல் போடவே பார்த்திருக்கிறேன். தாங்களே சரியான முறையில் வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்.
இப்பார்வையில் மட்டுமே இன்னும் நீங்கள் தொடர்ச்சியாக சிலவற்றை விளக்கி எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் கிராமத்தெய்வங்கள் பற்றிய பல சந்தேகங்கள் எனக்கும் இருக்கிறது. இவற்றை எல்லாம் சரியான முறையில் தீர்க்க வல்லவர் தாங்களே…
தெய்வ வழிபாடுகளும் ஸ்தல புராணங்களும் பல்வேறுவகையாகவும் அவற்றில் மிகப் பல நம்பமுடியாதவகையிலும் இருப்பதற்குக் காரணம், அனேகமாக அவை பாமரமக்களால் தாங்கள் வழிபடும் கடவுளின் பெருமையை மிகைப்படுத்த வேண்டும் என்னும் ஆதங்கத்தால் உருவானதால்தான். சத்வகுணம் மிக்க பெரியோர் இவற்றைப் பெரிதாக எடுத்துக்கொண்டு இவை கூறும் கடவுள் புராண விவாதத்தில் ஈடுபடுவதே இல்லை.
உலகில் எவ்வுயிரும் இயற்கையின் தன்மையான முக்குணக் (சத்த்வ, ரஜஸ் தமோ குணக் கலவையே. மக்களின் செயல்களும் எண்ணங்களும் இககுணக் கலவையின் தாக்கத்தாலேயே அமைந்திருக்கும். இதை நாம் செய்கையாளர்கள் விஷயத்தில் மட்டுமின்றி எழுத்தாளர்கள் விஷயத்திலும் கண்கூடாகக் காணலாம். அவர்களின் எழுத்தின் தரத்தில் அவர்களின் குணக்கலவையின் தாக்கம் நிச்சயம் தெரியும். புராணக்கதைகளும் இவ்வாறே இருக்கும் சாத்யக்கூறுகள் மிக அதிகம்.
அது அவ்வாறாயின் பெரியோர்கள் புராணங்களை எழுதியது வீண் தானா என்னும் வினா நிச்சயம் எழும். புராண எழுத்தாளர்களின் முதல் நோக்கம் எவ்வகையிலாவது மக்களை இறைதத்வத்தின்பால் ஈர்த்து அவர்களை நற்செயல் புரியத்தூண்டுவதே. புராணக்கதையின் கதைப்பகுதியை அதிகம் காணாமல் அவற்றின் குறிக்கோளை மட்டும் எடுத்துக்கொண்டால் அவற்றில் காணப்படும் பல முரண்பாடுகளையும் பகுத்தறிவுக்கு ஒவ்வா விஷயங்களையும் தவிர்த்து விடலாம்.
விவேகானந்தர் ஒருமுறை கூறினார். “தெய்வம் என்பது ஒன்றுதான் இருக்கக்கூடும் என்பது பகுத்தறிவிற்கு விளங்கினாலும் ஏன் மாந்தர்களுக்குள் இறை உருவம் பற்றிய சர்ச்சைகள்? காரணம், தன் புலன்களுக்குப்புலப்படா இறைவனை தனது இயல்புக்கு ஏற்ப கற்பனை செய்து பார்ப்பது அவனின் இயல்பு. ஒருகால் ஒரு பூனை இறைவனை கற்பனை செய்துபார்க்குமாயின் தனது இறைவனை அது பூனை வடிவில்தான் கற்பனை செய்து பார்க்கும்”.
இதை நாம் நன்கு உணர்ந்துகொண்டால் இறை தத்வம் குறித்த தேவையற்ற கட்டுரைகளும் அதன் மீது எழும் வீண் விவாதங்களும் ஏற்படுத்தும் காலவிரயத்தையும் தவிர்க்கும் அல்லது குறைக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. நாம் பூனைகளா அல்லது மனிதர்களா என்பது நமது நடத்தையைப் பொறுத்தது. நாம் நடந்துகொள்ளும் பாங்கைப் பொறுத்தது அல்லவா?