முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி

சீர்மிக்க நம் செம்மொழியாகிய செந்தமிழில் எழுந்துள்ள நூல்களுள் பொய்யடிமையில்லாத நல்லிசைப் புலவர் நக்கீரனார் பாடியருளிய திருமுருகாற்றுப்படை சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இது சிறந்த ஒரு சமய நூலாகவும் பாராயண நூலாகவும் விளங்குகின்ற அதே வேளையில் ஈடிணையற்ற இலக்கிய நூலாகவும் மிளிர்கின்றது. சங்ககாலத்து நூல்களுள் இன்று நமக்குக் கிடைப்பவை  பத்துப் பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,  முல்லைப்பாட்டு , மதுரைக்காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பனவும் எட்டுத்தொகை நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்ற எட்டுநூல்களும் இறையனார் அகப்பொருள் மற்றும் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல்களுமே என்பது பல்வேறு பேரறிஞர்களும் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும்.

இந்தச் சங்கநூல்கள் தனிச்சிறப்பும் செம்மை மிக்க தமிழ் நடையும் கொண்டமைந்து விளங்கக் காணலாம். இச் சங்கநூல்களுக்கெல்லாம் கடவுள் வாழ்த்துப் போல அமைந்திருக்கக் கூடிய சிறப்பும் திருமுறைகளிலே பதினோராம் திருமுறையின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பெருமையும் கொண்ட அற்புதத் திருநூல் திருமுருகாற்றுப்படை.

சங்ககாலத்தில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் எழுந்துள்ளன. அவையாவன. திருமுருகாற்றுப்படை, பொருபாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பனவாம். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடையது. கூத்தரும், பாணரும், அவர்கள் முதலியவர்களும், தாம் ஒரு வள்ளலிடம் சென்று, பெருஞ்செல்வத்தைப் பெற்று, மீண்டு வரும் வழியில் எதிர்படும் இரவலரிடம் மறைக்காமல் தாம் பெற்ற செல்வத்தைக் கூறி, அவ்வள்ளலிடம் செல்லும் வழியை விளக்கி, தாம் சென்ற அவ்வழியாற் போகச் செய்தல் ஆற்றுப்படை எனப்படுகிறது. இந்த வகையில் அழியாச் செல்வமாகிய பேரின்பத்தைப் பெற விழையும் பெருமக்களை ஆற்றுப்படுத்துவதாக இருப்பது திருமுருகாற்றுப்படை. ஆக, இது ஒரு முந்துதமிழ்ப் பயண வழிகாட்டி.

சங்ககாலம் என்பதும் அக்காலத்தின் இலக்கியங்களின் பண்பும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியன. சங்ககாலப் புலவர்கள் அறிவொழுக்கங்களில் சிறந்தவர்களாகச் சான்றாண்மை மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்களைச் சான்றோர்கள் என்றும் அவர் தம் செய்யுள்கள் சான்றோர் செய்யுள் என்று கூறும் வழக்கும் ஏற்பட்டுள்ளன. அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற மனப்பாங்கு படைத்தவர்களாகவும் மக்களின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவர்களாகவும் அரசர்களை அஞ்சாது நின்று அறநெறியில் வழிநடாத்தும் பண்பு நிறைந்தவர்களாயும் இருந்துள்ளனர். அவர்கள் தம் வாழ்த்து மொழியையும் வாழ்த்துப் பாவையும் உரியவர்க்கே அன்றிப் பிறர்க்கு அளிக்காத் திண்மை உள்ளங் கொண்டவர்களாயும் விளங்கியிருக்கிறார்கள். அதாவது புகழுக்குரியவனையே அன்றிப் பிறரைப் பாடாதவர்களாயும் இருந்துள்ளனர். எனினும் ஜனன மரண சம்சார பந்தத்தில் சுழலும் மானிட ஜன்மங்களான அரசரை அவர்கள் பாடியிருக்கின்றனர். இவர்களின் இச்செயல்களிடத்திலிருந்து வேறுபட்டு இக்காலத்திலேயே சங்கத் தலைமைப் புலவராக விளங்கிய மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர் பிறவா இறவாப் பெரியோனாய முருகவேட் பெருமானைப் பாடிச் சிறப்பித்துத் தானும் சிறப்புப் பெற்றிருக்கிறார்.

திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணம் என்ன?

nakkeerar1 தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களுள் முதன்மை வாய்ந்ததாகவும் முதலில் தோன்றியதாகவும் கருதப்பட்டு வருகின்ற திருமுருகாற்றுப்படை இலக்கியம் எழுந்த வரலாறும் சுவையானது.  கடைச்சங்கப்புலவர் தலைவரான நக்கீரனாரின் கதை திருவிளையாடற் புராணத்திலும் இடம்பெறுகின்றது. அதாவது தருமி என்ற ஏழைப்புலவனுக்கு பொற்கிழி அளித்த மதுரையாண்டவன் மீனாள் பாகம் பிரியா தமிழ்ச் சொக்கனின் திருவிளையாடலில், அவனுடன் நேருக்கு நேர் நின்று வாதம் செய்து ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்டு, இறையனாரின் திருப்பாடலில் குற்றங்கண்டு, அதனால் அவர் தம் திருவிளையாடலால் திருநுதல் வெப்பச்சூட்டிற்கு இலக்காகி வெப்பு நோய் வருத்த, அது தீரும் பொருட்டும் தன் குற்றம் நீங்கும் பொருட்டும் பனிபடர் பெருமை கயிலை மாமலைக்குச் செல்லமுற்பட்டு, திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் பகற்பொழுதில் சிவபூஜை செய்தார். அப்போது ஒரு அதிசயம் இடம்பெற்றது.

மரத்திலிருந்து விழுந்த இலை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதி பறவையாக மாறிப் பறந்தது. இன்னோர் பாதி மீனாகி நீர்நிலையுள் ஓடி மறைந்தது. இதனைக் கண்ட நக்கீரார் சிவபூஜையிலிருந்து ஒரு கணம் தம்மை மறந்து இவ்வதிசயத்தில் மயங்கிப் போனார். இந்த மாயையைச் செய்து காட்டி சிவபூஜையிலிருந்து நக்கீரர் குழம்பக் காரணம் ஒரு பெண். வெறும் பெண்ணல்ல… கற்கிமுகி என்ற பெண்பூதம். சிவபூசையிலிருந்து தவறிய ஆயிரவரைப் பலி கொடுத்து ஒரு மஹாயாகத்தை ஆற்றக் காத்திருந்த அப்பூதம் முன்னரே தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரைப் பிடித்துத் தன் குகையில் அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆளுக்காகத் தேடிக் கொண்டிருந்தது. இப்போது நக்கீரரையும் பிடித்ததும் அது மிக்க மகிழ்ச்சியடைந்தது. ஆயிரவர் தொகை நிறைவு பெற்றது. மகிழ்ச்சியுடன் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. உள்ளே முன்னரே பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்கள் கதறினார்கள். நக்கீரரை நோக்கி அழுதார்கள். ‘நீர் வந்து எம் உயிரையும் கொண்டு போகிறீரே’ என்று புலம்பினார்கள். அனைவருக்கும் சமாதானம் சொன்ன நக்கீரர் வெற்றிக்கடவுள் வேற்படையுடைய தமிழ்க்கடவுள் முருகவேளை நோக்கி ‘திருமுருகாற்றுப்படை’ என்ற அதியற்புதச் சுந்தரச் செந்தமிழ் நூலை குகைச் சிறையிலிருந்து பாடினார்.

உலகிலேயே சிறையிலிருந்து எழுந்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே.

எல்லோரதும் இதயக்குகையாகிய  ‘தகராகாசத்தில்’ நீங்காது உறையும் குகனாகிய குமரன், கற்முகியின் குகை வெடிக்க, பூதம் அழிய, புலவர்கள் சிறை மீள, தன் திருக்கை வேலாயுதத்தைச் செலுத்தியருளினான். நன்றே நடந்தது. இப்படி ஆயிரவர்க்கு உயிர் கொடுத்த இலக்கியம் திருமுருகாற்றுப்படை. இது உடன் கொடுத்த உயிர். இன்று வரை அது எத்தனையோ ஆயிரவர்களுக்கு இவ்விலக்கியம் உயிரளித்து வருவதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.

நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாற்றுப்படை

குறிஞ்சி நிலத்தெய்வம் குமரன். அவனைச் சேயோன் என்று போற்றுகின்றது தொல்காப்பியம். பரிபாடலும் செவ்வேட் பெருமானின் செம்மை மிகு திறம் பேசுகின்றது. நக்கீரனார் உரைத்த இத்திருநூல் நூற்றுப் பதினேழு அடிகளால் இயன்றது. ‘தொடுக்கும் கடவுட் பழம் பாடல்’ என்று போற்றத் தக்கதாய் விழுமிய நடையும் மேம்பட்ட பொருட் செறிவும் கொண்டது. எவ்வழி நல்வழி? என்று வினவுவார்களுக்கு ‘இவ்வழி நல்வழி… இதில் செல்மின்’ என்று வழி சொல்வது திருமுருகாற்றுப்படை. இத்திருநெடும் பாட்டை நாள் தோறும் பாராயணம் செய்யும் இயல்பினர் பலர்.

நக்கீரர் தாம் உரைத்த நன் திருமுருகாற்றுப்படையைத்
தக்கோல நாள் தோறும் சாற்றினால்- முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த தெல்லாம் தரும்

என்பது இவ்விலக்கியத்துடன் இணைத்து பாடப்பெறும் இவ்விலக்கியப் பயன் பேசும் வெண்பா ஆகும்.  ‘உலகம்’ என்ற மங்கலச் சொல்லுடன் ஆரம்பிக்கும் இவ் விலக்கியம்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
புலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு

என்று ஆரம்பிக்கின்றது. ‘ஞாயிறைப் போல சுடர் வேல் கொண்ட சுந்தரன் முருகன். அவன் உலகெல்லாம் போற்றத்தக்க பெருமை வாய்ந்தவன். தமிழர்க்கு மட்டுமல்ல, அவன் உலகப் பெருந் தலைவன். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கல்லினுள் தோரைக்கும் கருப்பைப் புழுவிற்கும் புல்லுணர்வே தந்து போற்றும் தயாளன்..’ இவ்வாறான உணர்வு தோன்ற ஆரம்பமாகிறது திருமுருகாற்றுப்படை.

மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்’ என்று முருகனை பேசுவார் நக்கீரர். ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று பெருமானைக் காட்டும் திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலின் எழுச்சிக்கு நக்கீரார் தம் ஆற்றுப்படை நூலிலேயே அடித்தளம் இடுகின்றார். சமணம், பௌத்தம், கிறித்தவம், போன்ற எந்த ஒரு சமயமும் கடவுளை ஆணும் பெண்ணுமாகக் கண்டதே இல்லை. அதனை செம்மை வழி என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. அப்படியிருக்க இந்து மதம் மட்டுமே இவ்வாறு தமிழிலும் பேசும் வல்லமையை கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கைக்கொண்டு விளங்கும் பெருமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சான்றாயும் இந்நூல் காணப்படுகின்றது.

திருத்தல யாத்திரை செய்ய ஆற்றுப்படுத்திய நூல்

காதலுக்கும் போருக்கும் முதன்மை தந்தது சங்கத்தமிழரின் வாழ்வு. அதற்கு ஏற்றாற் போல காதற் தெய்வமாகவும் வெற்றித் தெய்வமாகவும் விளங்குபவன் முருகன். திருமுருகாற்றுப்படை அவனைப் பேசும் போது

இருபேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ் இணர்
மாமுதல் தடித்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்

என்று கூறும். பெருமான் மனிதஉடலும் விலங்கின் உடலும் இணைந்து உருவெடுத்த அசுரனாகிய பெரிய சூரனை, அவன் அஞ்சும் வண்ணம் சென்று, ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று, அசுரர்களுடைய கொட்டம் அழியும் படியாக, கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் வடிவாக அசுரன் உருமாறி நின்ற போது, அதன் அடிமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய அறிய முடியாத பேரறிவையும், பெரும் புகழையையும் உடைய செவ்வேலையுடைய அழகன் முருகன் என்று விளக்கிக் காட்டுவார்.

surasamharam

ஆறுமுகனுக்குகந்த ஆறுபடை வீடுகளுள் முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றில் இறைவன் முருகன் இயற்கையோடிணைந்த அருவுருவ நிலையில் விளங்கும் சிறப்பை விளக்கிய நக்கீரார் வெற்றியின் நகராகிய ‘ஜெயந்திபுரத்தை’ (திருச்செந்தூர்), அவனது இரண்டாவது படைவீட்டை நோக்கி ஆற்றுப்படுத்துகையில் வெற்றிக் களிப்பில் மகிழக்காணலாம். திருச்சீரலைவாய் என்ற செந்திலம் பதியாகிய அவ்வூரின் பெருமை பேச முற்படும் போதே பெருமானின் ஆறு திருமுகத்தின் வண்மையும் அவன் பன்னிரு கரத்திண்மையும் பற்றி சுவைபடப் பேசுகின்றார்.

மாஇருள்ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரித்தன்று ஒருமுகம்

என்று பெரிய இருள் நிறை இவ்வுலகு குற்றமின்றியிருக்க பலவகையான கதிர்களைப் பரப்பியது ஒரு முகம் என்பார். இவ்வாறாக ஆறுமுகத்தின் செய்கையையும் அழகுறப் பேசுவார். இவ்விடத்தில் எங்கும் அவர் பரந்த உலக நோக்கில் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசியிருப்பது ஈண்டு சிந்திக்கவும் போற்றவும் தக்கது. கதிர் என்ற சொல்லாட்சியில் முருகப் பெருமானின் புகழ்பெற்ற திருத்தலமான கதிர்காமம் ஈழநாட்டில் இருப்பதும் சிந்திக்கத் தக்கதாயுள்ளது.

இப்படியாக ஆறு திருமுகங்களின் செய்கையையும் சொல்லி வந்த நக்கீரனார்,

ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்குமே

என்று சொல்வதை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் சங்ககாலத்திலே வேதநெறியும் வேதநெறி நின்று யாகங்களை வைதீக தர்மத்துடன் நால்மறை முழங்க ஆற்றும் பண்பாடும் நிலவி வந்திருப்பதை தெளிவுறக் காட்டி நிற்கின்றது.

முதலில் ‘மறுவில் கற்பின் வாள்நுதல்’ என்று தேவயானையை காட்டிய நக்கீரர் இவ்விடத்தில் ‘குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளி’ என்று வள்ளியம்மையை போற்றிக் கூறுகின்றார். இதே போல முருகனின் பன்னிரு திருக்கரங்களின் செய்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். திருச்செந்தூரை ‘உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்’ என்று போற்றித் துதிக்கிறார். முருகனின் மூன்றாவது படைவீடு பழனி என்று அறியப்படும் திருவாவினன்குடி. ஆங்கே உணவையும் உறக்கத்தையும் விடுத்து உண்மைப் பரம்பொருளான முருகனையே சிந்திக்கும் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்ட முனிவர் பெருமக்களாகிய ஞான தபோதனர்கள் பழனியாண்டவனைத் தேடிக் காண விழையும் காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கின்றார்.

அப்போது

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்

என்று அவர்களை விழித்துப் போற்றுவார். அத்துடன் ‘காமமொடு கடுங்சினம் கடந்த காட்சியர்’ என்றும் கூறுகிறார்.

இந்த இடத்திலேயே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளைப் பற்றியும் தேவேந்திரனைப் பற்றியும் புகழ்ந்துரைத்துப் போற்றி சிறப்பிக்கின்றார் நக்கீரனார். இப்படியே பலவற்றையும் சொல்லி ‘ஆவினன் குடி அசைதலும் உரியன்’ என்று சொல்லுவார்.

வைதீகமும் கிராமியமும் வணங்கும் வள்ளல்

சைவ உலகம் நக்கீரரை அவர் தம் பெருமையைக் கருத்தில் கொண்டு ‘நக்கீர தேவ நாயனார்’ என்று கூறிப் பெருமை செய்கின்றது. முருகப் பெருமானின் நான்காவது படைவீடு திருவேரகம் என்ற சுவாமிமலை. கும்பகோணத்திற்குச் சமீபமாக உள்ள இத்திருத்தலத்தில் பெருமான் தகப்பன் சாமியாகக் காட்சி கொடுக்கிறான். இச்சாமிநாதனைச் சொல்ல வந்த நக்கீரர் அந்த இடத்தில் வைதீக வேத தர்மம் பற்றி மிகச்சிறப்பாகச் சொல்கிறார்.

இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

தந்தை, தாய் வழியாக இருவர்க்கும் உரிய கோத்திரமாக தனித்தனியே ஆகக் குறைந்தது இரண்டிரண்டு முனிவர்களையேனும் சட்டிக் காட்டும் பலவாக வேறுபட்ட தொல்குடி (பாரத நாட்டினர் தாம் முனிவர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிப் பெருமை கொள்பவர்கள்).

மூன்று வகை குறித்த முத்தீச் செல்வம்

மூன்றுவகையான யாகாக்னியைப் போற்றுவதையே செல்வமாகக் கொண்டவர்கள்

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

மூன்று புரிகளைக் கொண்ட மூன்று நூல்களை (பூணூல்களை) அணிந்தவர்கள் இவ்வாறாக வைதீக, வேத, வேதாங்க தர்மம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே (சங்ககாலத்திலும் அதற்கு முன்னதாகவுமே) தென்னாட்டில் செழித்திருந்ததைப் பதிவு செய்யும் நக்கீரர் சரவணபவனின் ஷடாட்சர மஹாமந்த்ர மகிமையையும் இங்கு சொல்லாமற் சொல்கிறார்.

murugan1 வைதீக வழக்கில் வடிவேலன் வணக்கம் சொன்ன நக்கீரர் அடுத்து ஐந்தாம் படைவீடாக சுதந்திர மயமான குன்றுதோறாடலைச் சொல்ல வருகையில் கிராமிய வணக்கத்தையும் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.

திருவேரகத்தைப் பாடும் போது அந்தணர் போற்றும் மந்தி ரரூபமாக வேதத்தின் விழுப்பொருளாய் முருகனைக் காட்டும் பெருமானார் அனுபூதிமான்களுக்கே அல்லாமல், மலை வாழ் வேடருக்கும், அவர்கள் போன்ற அடிநிலை மக்களுக்கும் எளியனாய் வந்து முருகன் அருளும் தன்மையைப் போற்றி செய்கிறார். முருகன் எழுந்தருளியுள்ள மலைகள் யாவும் இதனுள் அடங்கும் எனினும் சிறப்பாக ‘புயற்பொழில் பயற்பதி நயப்படு திருத்தணி’ என்ற திருத்தணிகையை இன்று ஐந்தாவது படைவீடாகக் கொள்வாரும் உளர்.

ஆறாவது படைவீடாக பழமுதிர்ச்சோலை கூறப்படுகின்றது. மாவிளக்கேற்றி சிவந்தமாலைகள் சாற்றி மலர்கள் தூவி செந்தமிழால் பாடி பரமதயாளனாகிய பக்திசுலபனான பரமன் முருகனை வழுத்தும் பாங்கு இங்கு சொல்லப் படுகின்றது. தூபம் காட்டி குறிஞ்சிப் பண்ணிசைத்து முருகனை வழிபடுவது பழைய காலத்தமிழர் மரபு. அதனையும் நக்கீரர் இங்கே சொல்கிறார்.

வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே

என்று நிறைவு செய்கிறார். அதாவது தன்னை விரும்பி வழிபடும் அன்பர்கள் தாம் விரும்பியது நிறைவேறி வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமான விஷயங்களாகும் என்கிறார்.

முருகனைப் போற்ற ஒரு முந்துதமிழ் மாலை

‘முந்து தமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி’ என்று அருணகிரிநாதர் சாற்றுவார். முந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்லாகும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும்.

‘வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ’
‘வானோர் வணங்கு வில் தானைத் தலைவ’
‘மாலை மார்ப, நூலறி புலவ’
‘வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ’
‘அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக’
‘பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே’
‘மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி’
‘சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி’
‘போர்மிகு பொருந! குரிசில்!’
‘சேண் நின்று இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர் சோலை மலைக் கிழவோனே’

என்றும் சொல்லி இத்திருமுருகாற்றுப்படை நூலை முழுமையாக்குகிறார். பழமுதிர்சோலையில் கண்ணனும் கந்தனும் (இரு கள்ளழகர்களும்) கலந்து நிற்கும் எழிலை வர்ணிப்பதுடன் இந்நூல் பூரணத்துவம் பெறுவதாகவும் கொள்ளமுடிகின்றது. முருகாற்றுப் படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.

சுத்த ஜலத்தினால் திருமுழுக்காட்டி, நெய்வேதனங்கள் சமர்ப்பித்து, சோடசோபசாரம், ராஜோபசாரம், முதலியவற்றையெல்லாம் செய்து பகவான் ஸ்கந்தனை ஆயிரம் நாமத்தால் அர்ச்சித்து சகல வாத்திய கீத நிர்த்தன உபசாரங்களுடன் ஊர்வலம் செய்வது எல்லோருக்கும் இலகுவில் செய்யவல்லதல்ல. அப்படிச் செய்யாத போதும் ‘திருமுருகாற்றுப்படையை’ ஓதினால் போதுமாம். அவன் அருள் நிறைவாகக் கிடைக்கும்.

பரங்குன்றில் பன்னிரு கைக்கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண் குளிரக் கண்டு – சுருங்காமல்
ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற்றுப் படையைப்
பூசையாக் கொண்டே புகல்

ஐப்பசித் திங்களில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகவுள்ள உயரிய நல்ல வேளையில் கந்தவேற் பெருமானைப் பாட, போற்ற நல்லதொரு பாமாலையான இதனைப் பாடிப் பரவுவோம்.

தமிழுக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு மிக ஆழமானது என்பதை நிரூபிக்க கிடைத்த அற்புதப் பொக்கிஷமான, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் அப்பால் புராதனமும் இலக்கியச் செழுமையும் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழும் திருமுருகாற்றுப்படை என்ற ஞானக் கருவூலத்தை, அதன் புகழை உலகெங்கும் பரப்புவோம்.

41 Replies to “முருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி”

  1. அருமையான கட்டுரை.. பழந்தமிழ் பக்தி நூலின் பெருமையை அழகு தமிழில் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.

    அதோடு, அறுபடை வீடுகளையும் சித்திர வடிவில் அடுத்தடுத்து வருமாறு தமிழ்ஹிந்து கண்குளிர முகப்புச் சித்திரமாக (பேனர்) போட்டு முருகன் புகழ்பாடுகிறது. அற்புதம்!

    வெற்றிவேல் வீரவேல்.

  2. Pingback: Indli.com
  3. கந்தர் சஷ்டியின்போது திருமுருகாற்றுப்படை என்னும் ஞானக் கருவூலத்திற்கு நல்லதொரு அறிமுகம். பொருள் கூறிய இடத்தில் ஒரு சிறிய திருத்தம் தேவைப்படுகின்றது
    “அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி’ என்றதொடருக்கு,. ‘ ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்று, அசுரர்களுடைய கொட்டம் அழியும் படியாக’ என்று பொருள் எழுதியுள்ளீர்கள். இந்தத் தொடருக்கு ‘ சூரன் பதுமன் என்னும் இரண்டு பெயர்களையுடைய வடிவமாகிய ஒருபெரிய சரீரம் அற்று வேறாகும்படி அச்சம் தோன்ற நெருங்கி’ எனப் பொருள் கொள்ள வேண்டும். முருகன் சூரசம்மாரத்தின்போது ஆறு வேறு வடிவங்கள் தாங்கிய செய்தி கந்தபுராணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை

    திருமுருகாற்றுபடையைப் பாராயணம் செய்வோருக்கு இந்தத் தமிழ்மறையை எப்படி ஓதுதல் வேண்டும் என முருகன் அடியாரில் முதலாமவராகிய அருணகிரிநாதப் பெருமான்,
    “கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டும்
    கீரரியல் கேட்ட கிருபைவேளே” என்று கூறுகின்றார். திருமுருகாற்றுப்படையை உரைநடைபோல வாசித்தலாகாது. வேதம் ஓதுதல்போல இசைகூட்டிப் பாராயணம் செய்ய வேண்டும் என்பது கருத்து.
    தங்கள் நாட்டில் சஷ்டிவிரதம் கடைப்பிடிப்பது பற்றியும் வாய்ப்பு இருக்கும்போது எழுத வேண்டுகின்றேன்.

  4. அருமையான கட்டுரை சிறிது நேரம் வேலவன் தரிசன் செய்தது போல் இருந்தது .

    ம. மணிவண்ணன்
    புதுவை

  5. ” திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணம் என்ன? ”

    அறிய தந்தமைக்கு நன்றி

  6. தங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள்…

    || “அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி’ என்றதொடருக்குஇ. ‘ ஆறுவேறு வடிவங்கள் தாங்கி நின்றுஇ அசுரர்களுடைய கொட்டம் அழியும் படியாக’ என்று பொருள் எழுதியுள்ளீர்கள். இந்தத் தொடருக்கு ‘ சூரன் பதுமன் என்னும் இரண்டு பெயர்களையுடைய வடிவமாகிய ஒருபெரிய சரீரம் அற்று வேறாகும்படி அச்சம் தோன்ற நெருங்கி’ எனப் பொருள் கொள்ள வேண்டும் ||

    இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். இது போலவே நுண்ணிய வகையில் வேறு சொற்றொடர்களுக்கும் சீர்மிக்க சிந்தனை இருப்பின் தெரிவிக்கும் வண்ணம் வேண்டுகிறேன். வேதப்பொருள் போல நுண்ணிய கருத்துக்கள் கொண்ட முருகாற்றுப்படையை ஆழமாக ஆழமாகச் சிந்திக்கச் சிந்திக்க பல்வேறு கருத்துக்களை அறிய முடியும். ஆக, சிறியேன் சிற்றிவு கொண்டு அறிந்ததையே எழுதியுள்ளேன். மேன்மேலும் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ||தங்கள் நாட்டில் சஷ்டிவிரதம் கடைப்பிடிப்பது பற்றியும் வாய்ப்பு இருக்கும்போது எழுத வேண்டுகின்றேன்||

    முனைவர் அவர்கள் இலங்கையில் நிகழும் சஷ்டி விரதம் பற்றி அறிய விரும்புகிறார் என்று நினைக்கிறேன். நான் பூஜிக்கும் நீர்வை முருகனாலயங்களில் இவ்விழா…மிக மிக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தினமும் அபிஷேக அலங்காரங்கள் ஸ்வாமி வீதியுலா உண்டு. கந்தபுராணத்தின் யுத்தகாண்டம் முழுமையாக இந்த ஆறுநாட்களில் பாராயணம் செய்யப்பெறுகின்றது.

    இதை விட இலங்கையில் நீர்வேலியிலேயே நாளை( ஸ்கந்த பஞ்சமி) மதிய வேளையில் விஸ்வரூபதரிஸனக் காட்சி என்ற திருப்பெருவடிவக் காட்சி இடம்பெறுகிறது. மாலையில் வேல் வழங்கும் காட்சியும் இடம்பெறும். அம்மையிடம் முருகவேள் வேல் பெறுவதாக இங்கு காண்பிக்கப்பெறுகின்றது.

    இதை விட சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் என்பனவும் நிகழும். நீர்வேலியில் இவ்விழாவை மஹோத்ஸவமாகவும் கொடியேற்றம், யாகபூஜை, போன்றனவுடனும் கொண்டாடுகிறோம். ஏழு நாள் மஹா உத்ஸவமாக நடைபெறும் இவ்விழாவின் நிறைவில் தீர்த்த உத்ஸவமும் நடக்கிறது. (இது நீர்வேலியின் நிலை மட்டுமே… பிற இடங்களில் கொடியேற்றும் வழக்கம் இல்லை.) என்ற போதிலும் கிரியைகளை விட இவ்விழாவில் பக்திபூர்வமாக விஷயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பெற்று வருகின்றது.

    மற்றப்படி இலங்கையில் துளி நீர் கூட விடாமல் ஆறு நாட்களும் விரதம் அனுஷரிக்கிற அடியவர்கள் நிறைய இருக்கிறார்கள். நிறைவாகச் சொல்வதானால் இது தவக்காலம். இது இலங்கையில் இந்துக்களைப் பொறுத்த வரையில் மஹா பரிசுத்தமான காலம்.

    முருகனின் வேலாயுதத்தை நம்பி வாழ்வோம். திருமுருகாற்றுப்படை வெண்பாவும் இதனைச் சொல்கிறது. ஸ்கந்தஷஷ்டி உத்ஸவத்தில் இதனை கண்டு கொள்ளலாம்.

    ‘வீரவேல் தாரை விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல் -வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே துணை’

    ‘வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ’

  7. சு பாலச்சந்திரன்

    அன்புள்ள திரு மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு,

    இறைவழிபாடு பற்றிய தகவல்களை தொகுத்து எழுதுவது மிகவும் சிரமமான பணியாகும். அதனை விடக்கடினம் யாதெனில் அத்தகவல்களை சுவைபட தொகுப்பது. இந்த அற்புதமான தொகுப்புக்கு நன்றிகள் பல உரித்தாகுக. எம்பெருமான் முருகனின் இரு துணைவியாராக குறிப்பிடப்படும் தெய்வயானையும், வள்ளியும் தத்துவ தரிசனத்தில் முறையே கிரியா சக்தியாகவும் , இச்சா சக்தியாகவும் கருதப்படுகின்றனர்.

    போர் என்ற கிரியையை முருகப்பெருமான் செய்ததால் அவருக்கு பரிசாக கிடைத்தது கிரியா சக்தியாகிய தெய்வயானை. அவர் கொண்ட இச்சை காரணமாக அவருக்கு கிடைத்த சக்தி வள்ளி என்னும் இச்சாசக்தி. முருகபெருமான் இச்சாசக்தியும், கிரியாசக்தியும் ஒருங்கிணைந்த ஞானசக்தியாக விளங்குகிறார். மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருக்கவேண்டிய தத்துவத்தை விளக்குவதே முருகப்பெருமானின் இந்த திருவிளையாடல் ஆகும். மனித இனத்துக்கு இச்சையுடன் கூடிய கிரியைகள் மூலமே அற்புதமான ஞானம் பிறக்கிறது என்ற உண்மையை அனைவரும் உணர கந்தன் காட்டும் வழி தன்னிகரற்றது.

  8. இனிய தமிழில் திருமுருகாற்றுப் படையின் சிறப்புக்கள் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சர்மா அவர்களே. உங்கள் வாக்கியங்கள் பல இடங்களில் நீள நீளமாக இருக்கின்றன. அவற்றைப் பிரித்து எழுதினால் படிப்பதற்கு இன்னுமே எளிதாக இருக்கும்.

    // சைவ உலகம் நக்கீரரை அவர் தம் பெருமையைக் கருத்தில் கொண்டு ‘நக்கீர தேவ நாயனார்’ என்று கூறிப் பெருமை செய்கின்றது. //

    வரலாற்று ரீதியாக இந்தக் கருத்து தவறானது.

    சங்ககாலத்தில் வாழ்ந்த நக்கீரர் தான் திருமுருகாற்றுப் படையை எழுதியவர்.

    இடைக்காலத்தில் (பிற்காலச் சோழர் காலம் : 8-10 ம் நூற்றாண்டுகள்) வாழ்ந்த இதே பேர் கொண்ட இன்னொரு சிவனடியார் நக்கீரதேவ நாயனார். கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திரு ஈங்கோய்மாலை எழுபது, திருக்கண்ணப்பதேவர் திருமறம், திருக்கழுமல மும்மணிக்கோவை போன்ற பிரபந்தங்களை எழுதியவர் இவர். இந்தப் பிரபந்தங்கள் பதினோராம் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கின்றன.

    ஒரே பெயர் கொண்டிருந்த காரணத்தினால் பழைய நக்கீரரின் நூலையும் இத்திருமுறையில் நம்பியாண்டார் நம்பிகள் இணைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.. எதுவாயினும், திருமுறைகளில் இடம்பெறத் தகுதியான பக்தி நூல் இது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

    இந்து சமய வரலாற்றில் வியாசர்(கள்), அகஸ்தியர்(கள்), நாரதர்(கள்), ஔவையார்(கள்) என்று பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல மனிதர்களை ஒரே பெயரால் குறிப்பிடும் மரபு இருந்திருக்கின்றது. இதனால் பல குழப்பங்களும் நேர்கின்றன. வரலாற்று ரீதியாக பிரித்து இனம் கண்டு கொள்வது சில பேர் விஷயத்தில் எளிது. சில பேர்கள் விஷயத்தில் மிகக் கடினம்.

  9. நக்கீரர் பெருமானின் திருமுருகாற்றுப்படையினைப் பற்றிய கட்டுரையை ஸ்கந்தஷஷ்டிக் காலத்தில் சிறப்பாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்….

    திருமுருகன் பெருமை பேசும் பிற இலக்கியங்கள் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வெளிவர வேண்டுகிறேன்.

    கந்தஷஷ்டியை அடுத்து திருக்கார்த்திகை விழாவும் வருவதும் சிந்திக்கத்தக்கது. இவ்விழாவும் முருகனுக்கு உகந்ததல்லவா?

  10. நன்றி திரு சர்மா அவர்களே. உங்களுடன் சேர்ந்து ஈழத்தில் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது போலிருந்தது தங்கள் மறுமொழி. நிறைய செய்திகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்

  11. அன்புள்ள ஜடாயு,

    வரலாறு என்பது அவ்வப்போது ஆளும் வர்க்கத்தினரின் அடிவருடிகள் அவர்களின் எச்சில் எலும்புகளுக்கு பதில் சேவையாக எழுதிவைத்த புளுகு மூட்டை. அதில் சில உண்மைகளையும் அவர்கள் கலந்து எழுதுவது ஏனெனில் , வரலாறு உண்மையாய் இருக்குமோ என்ற சந்தேகமாவது படிப்பவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற ஆதங்கத்தினால் தான். மனித இனம் தோன்றிய நாள் முதல் ஒவ்வொரு இனமும் மாற்றாரை கொடுமைப்படுத்தி அழித்து அவர்களின் மொழி, கலாச்சாரம், இலக்கியம், வழிபாட்டு குறியீடுகள் இவற்றை அழித்து தங்கள் முட்டாள் தனத்தையும் வெறியையும் நிலைநாட்டியுள்ளனர். எனவே பல அவ்வையார்கள், பல நக்கீரர்கள், பல நாரதகர்கள் மற்றும் பல வியாசர்கள் என்று இந்த பட்டியல் சரியான கால வரையறை தெரியாமல் குழம்பத்தான் செய்யும். எனவே கருத்துக்களுக்கு மட்டும் முக்கியம் அளித்து அவர் எந்தக்காலம் என்பதற்கு முக்கியம் அளிக்காமல் இருப்பதே குழப்பத்தை தவிர்ப்பதற்கு ஒரே வழி. காலத்தால் முற்பட்டது என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்து, நாம் எதையும் கொண்டாடமுடியாது. காலத்தால் சமீபமானது என்பதற்காக எதையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

  12. // எனவே கருத்துக்களுக்கு மட்டும் முக்கியம் அளித்து அவர் எந்தக்காலம் என்பதற்கு முக்கியம் அளிக்காமல் இருப்பதே குழப்பத்தை தவிர்ப்பதற்கு ஒரே வழி. காலத்தால் முற்பட்டது என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்து, நாம் எதையும் கொண்டாடமுடியாது. காலத்தால் சமீபமானது என்பதற்காக எதையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. //

    அன்புள்ள பாலச்சந்திரன், தத்துவ ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. காலம் என்பது ஒரு பெரும் சுழற்சி என்பதைத் தங்கள் மெய்யுணர்வில் கண்டுணர்ந்ததால் தான் நமது பண்பாட்டில் வரலாற்றையும் கூட தொன்மங்களிலும், புராணங்களிலும் பொதிந்து வைத்தனர். இந்து சமூகம் கடந்த காலத்தின் கட்டுப்பாடுகளையும் கசப்புணர்வுகளைக் கடந்து சென்று, காலாகாலத்திற்கும் நிற்கும் அறங்களையும், விழுமியங்களையும் போற்றும் தன்மையைப் பெற்றது இதனாலேயே என்று கூட சொல்லலாம்.

    ஆனால் ஆய்வு நோக்கில் நாம் வரலாற்றுப் பார்வையைத் தவிர்க்க முடியாது. ஆய்வாளன் ஒரு மலரைக் கண்டு, முகர்ந்து சூடி மகிழ்பவன் மட்டுமல்ல, அதன் இதழ்களை மைக்ரோஸ்கோப்பில் வைத்து அவற்றின் உள் அமைப்புகளை விளங்கிக் கொள்ள முயல்பவன் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நமது பண்பாட்டை வரலாற்று நோக்கில் நாம் அணுகுவதை முற்றாகத் தவிர்த்தால் பிறகு மேற்கத்தியர்களின் காலனியப் பார்வையையே முழு உண்மையாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுவோம்.

  13. அன்புள்ள ஜடாயு,

    அற்புதமாக விளக்கம் தந்துள்ளீர்கள்.நன்றி. இந்த கந்த சஷ்டி பெருநாளில் முருகன் தத்துவம் என்ன என்று கேட்ட ஒரு பக்தருக்கு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அளித்த பதிலை நினைவு கூறுகிறேன்.

    “இறைச்சக்தியின் படைப்பில் தோற்றமும் மறைவும் கிடையாது.ஒரு பொருள் மற்றும் ஒரு சக்தி என்று இருப்பவை வேறொரு பொருள் அல்லது சக்தியாக உருமாறுகின்றன. அழிவு என்பது தோற்றத்தில் மாற்றமே. சிரஞ்சீவி வரம் பெற்ற சூரபதுமன் கந்தனின் கையிலுள்ள சக்திவேலால் அசுரவடிவம் நீங்கப்பெற்று மயிலாகவும் , சேவலாகவும், புதுவடிவம் பெறுகிறான்.”
    என்று வாரியார் ஸ்வாமிகள் குறிப்பிட்டது நினைவில்மிக பசுமையாக உள்ளது.

    நவீன இயற்பியலும் ( புதிய பௌதிகம்) இந்த உண்மையை சமீப காலங்களில் ஆராய்ச்சி மூலம் கண்டுகொண்டு, எதிர்மின்னோட்டம் பெற்ற எலேக்டிரானை நேர்மின்னோட்டம் பெற்ற பாசிட் ரான் என்று மாற்றி சோதனைச்சாலையில் பரீட்சித்து நிரூபித்துள்ளது. இதிலிருந்து ஒரு வகை சக்தியை வேறுவகை சக்தியாக உருமாற்றம், சக்திமாற்றம் செய்யமுடியும் என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. எனவே ஆன்மிகம் என்பதும் அறிவியல் என்பதும் பெயர்கள் வேறானாலும் அடிப்படை ஒன்றே ஆகும், இரண்டும் ஒன்றை ஒன்று அரவணைத்து சென்றால் மிக பெரிய அற்புதங்களை விளைவிக்க முடியும்.

    இறை அருளாளர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த உண்மைகள் தற்போது விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் சிறிது சிறிதாக நிரூபிக்க படுகின்றன.

  14. // வரலாறு என்பது அவ்வப்போது ஆளும் வர்க்கத்தினரின் அடிவருடிகள் அவர்களின் எச்சில் எலும்புகளுக்கு பதில் சேவையாக எழுதிவைத்த புளுகு மூட்டை //

    இப்படி வரலாற்று ஆராய்ச்சியைப் புறக்கணிப்பது இந்து சனாதன தருமத்திற்குக் counter productive என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் ஒரு கருத்தை முன்வைத்தால் அதிலிருந்து வேருபடுபவர் அதற்கு எதிரான ஆதாரத்தைப் பொறுமையாக, அறிவுப்பூர்வமாக, ஆராய்ச்சி பூர்வமாக முன்வைக்கவேண்டும். இப்படி ஒரு நலமான விவாதத்தைச் செய்யாமல் “ஆளும் வர்க்கத்தினரின் அடிவருடிகள்” என்று ஒரு தொகையாக வரலார்ராராய்ச்சியைத் தூஷிப்பது சரியன்று.

    அப்படிச் செய்வதும் இடதுசாரிகளால் கையாளப்படும் ஒரு கீழ்த்தனமான யுக்தியை ஹிந்துக்களும் ஏற்றுக்கொண்டதாகி விடும் – அவர்களும் “ஆளும் வர்க்கத்தினரின் அடிவருடிகள்” என்ற அடிப்படையில் தான் அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகளை மறுக்கின்றனர்.

    // எனவே கருத்துக்களுக்கு மட்டும் முக்கியம் அளித்து அவர் எந்தக்காலம் என்பதற்கு முக்கியம் அளிக்காமல் இருப்பதே குழப்பத்தை தவிர்ப்பதற்கு ஒரே வழி //

    அப்படி கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தால் பரவாயில்லையே, சிலர் அதை வரலாறு என்று நம்பியும் விடுகிறார்கள். அப்படி இருப்பவர் உண்மையை அவர்முன் வைத்தால் சீறுகின்றனர். அல்லது மனம் உடைந்து ‘இவ்வளவு நாள் இதைப் போய் நம்பி இருந்தோமே’ என்று ஏமாற்றம் அடைகின்றனர்.

    ஒரு உதாரணம் கூறுவதென்றால்… தற்போது சங்கரமடங்களால் பெரிதும் பிரகடனப்படுத்தப்படும் சங்கரவிஜய nooRkaLai வெறுமென ‘சங்கரரைப் பற்றிப் புகழ்வதற்காக எழுந்த ஒரு exaggerative description கொண்ட நூல்’ என்று எடுத்துக்கொள்ளாமல் அதையே வரலாறு என்று பலர் நம்புகின்றனர். அப்படி நம்புவதில் பெரிய ஆபத்து இருக்கிறது. ஏனெனில், அந்நூலை ஒரு வரலாற்று நூலாக எடுத்துக்கொண்டால் பல அபத்தங்கள் விளையும்… சங்கரர் காலத்திற்குப் பல பத்தாண்டுகள்/நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக அறியப்படும் பாஸ்கராச்சாரியார், உதாயனர், அபிநவகுப்தர், ஸ்ரீஹர்ஷர் முதலானோருடன் சங்கரர் வாதம் செய்ததாக அந்நூலில் வருகிறது. அந்நூலை வரலாறாக ஏற்கவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், “அப்படிப் பெயர் வைத்துக்கொண்டவர்கள் பல பேர் இருந்திருக்கலாம்” என்று சப்பைக்கட்டுகின்றனர். இது ஒரு அவல நிலையல்லவா?

    வரலாற்று ஆராய்ச்சி என்பது நமது பண்பாட்டைப் பேணுதற்கு முக்கியமான அம்சமாகும். நடுநிலை நின்று அதைச் செய்து ஹிந்துக்களுக்கு மத்தியில் அதைப் பிரகடனம் செய்வது அத்தியாவசியம். அப்பொழுது தான் நம் கலாச்சாரத்தை ஒரு zoo புலி சிங்கத்தைப் பார்ப்பது போல வெறும் கண்காட்சிப் பொருளாகப் பார்த்துவிட்டு மனம்போனபடி எழுதிப் புத்தகங்களையும் கட்டுரைகளையும் பதிப்பிப்பதை அந்நிய ஹிந்துவிரோத சக்திகள் நிறுத்தும். ஏனெனில், ஆதாரப்பூர்வான ஆராய்ச்சி அடிப்படையில் வஜ்ரம் போன்ற திடமான, அதே சமயம் நியாயமான நடுநிலையான எதிர்வாதங்களை வைத்தால் குள்ளநரிகள் ஓடிவிடும்.

  15. சு பாலச்சந்திரன்

    அன்புமிகு ஜடாயு,

    மிக நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள் பல உரித்தாகுக.

    மேற்கத்தியர்களின் காலநீயப்பார்வை பற்றி நாம் பயப்படத்தேவையில்லை. ஏனெனில் 1917 ஆம் ஆண்டிலிருந்து உலகை பல கோணங்களிலும் ஆட்டிப்படைத்த கம்யூனிசம் எண்பதுகளில் தலைகீழ் மாற்றம் பெற்று, இன்று சீன, ரஷ்ய கொள்கைகளில் எவ்வளவோ மாற்றம் வந்துள்ளதை நான் கண்கூடாக பார்க்கிறேன்.

    பொய் வரலாறுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை. அவை அந்த நாடுகளுக்கு தீய விளைவுகளையே தரும் என்பது உறுதி. எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம் ( யத் பாவம் தத் பவதி) என்ற சான்றோர் வாக்கு என்றும் மாறாது.

  16. அன்புள்ள ஜடாயு அவர்களே,

    // உங்கள் வாக்கியங்கள் பல இடங்களில் நீள நீளமாக இருக்கின்றன. அவற்றைப் பிரித்து எழுதினால் படிப்பதற்கு இன்னுமே எளிதாக இருக்கும். //

    உங்களுடன் ஒரு கருத்து வேறுபாடு இவ்விஷயத்தில்… சர்மா அவர்கள் இலங்கையில் தமிழராக வசிப்பவர் என்று தெரிகிறது. ஒருவேளை அவரது இந்த நடை அல்லது பாணி அதன் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. கட்டுரையில் உள்ள தமிழ் நடை அழகாக இருக்கிறது, மிகவும் அனுபவித்து எழுதியுள்ளார் என்றே நினைக்கிறேன். ஆங்காங்கு சமஸ்கிருத சொற்களையும் இடத்திற்கு ஏற்ப இட்டிருப்பதும் என் கருத்தில் சிறப்பாகவே உள்ளது. முக்கியமாக அவ்வப்போது இம்மாதிரி அனுபவப் பூர்வமான கட்டுரைகளில் கடினமான தமிழையும் வாசகர்கள் படித்துத் தம் தமிழ் அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். ஆகையால், இம்மாதிரி கடினமான சொல்லாட்சியையும் சொற்றொடர் அமைப்புகளையும் உள்ள கட்டுரைகள் ஊக்குவிக்கப்படவேண்டியவை என்பதே என் தாழ்ந்த கருத்து. ஆனால், இதுவும் இடத்திற்கு ஏற்றாற்போல், கட்டுரையின் கருப்பொருளுக்கு ஏற்றாற் போல் மாற வேண்டியது தான். மிகவும் டெக்னிக்கலான தர்க்கரீதியான விஷயங்களையோ, முக்கியமான செய்தி அறிவுப்பையோ முன்வைக்கும் கட்டுரைகள் இலகுவான நடையில் அமைய வேண்டியது தான். இதுவும் என் சொந்தக் கருத்தே.

    இன்று ஒரு சராசரி இந்தியத் தமிழனுடைய தமிழறிவையும், இலங்கைத் தமிழருடைய தமிழறிவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் நாட்டில் “தமிழ்த் தொண்டு” செய்துவருவதாகக் கூறிவரும் அயோக்கியர்கள் உண்மையில் நம் மொழியைச் சீரழித்து வருகின்றனர் என்று தெரிகிறது.

  17. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள். இந்த கட்டுரை தமிழ் சமூகத்துக்கு நீங்கள் கொடுத்த பரிசு.

  18. அன்புள்ள கந்தர்வன்,

    தாங்கள் சுட்டிக்காட்டிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. சரித்திரம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக தூஷிப்பது என் நோக்கமல்ல. சரித்திர ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது என்பதும் என் கருத்தன்று. ஆனால் இன்றும் என்றும் சரித்திரம் என்பது ஆளும் அரசுக்கட்டிலில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தால் வளைத்து, திசை திருப்பி , தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுத வைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மாற்றுக்கருத்துக்கள் சரித்திரத்தில் பதிய அனுமதிப்பது என்பது ஜவஹர்லால் நேரு, மொரார்ஜி தேசாய், வல்லபாய் படேல் போன்றவர்கள் காலத்தில் இருந்தது. இப்போது இந்நிலை மாறிவிட்டது. அரசுகள் வெளியிடும் சரித்திரப்புத்தகங்கள் ஆள்வோரின் மனநிலை அறிந்து , ஆளும் கட்சிக்கு ஏற்றவாறு தக்க புதிய பாடங்களை சேர்ப்பதும், பழைய பாடங்களை நீக்குவதும் நடை பெறுகிறது. வெள்ளையர்கள் எழுதிய பொய் சரித்திரங்களால் தான் நம் நாட்டில் அடிக்கடி தேவையில்லாத சண்டைகள் உருவாகின்றன.

  19. @Gandarvan
    //தற்போது சங்கரமடங்களால் பெரிதும் பிரகடனப்படுத்தப்படும் சங்கரவிஜய nooRkaLai வெறுமென ‘சங்கரரைப் பற்றிப் புகழ்வதற்காக எழுந்த ஒரு exaggerative description கொண்ட நூல்’ என்று எடுத்துக்கொள்ளாமல் அதையே வரலாறு என்று பலர் நம்புகின்றனர். //

    Do you mean to say there is no history in that? if you think there could be some history in that can you list few incidents which you think could be real incidents and few which are just exaggerations?

    //சங்கரர் காலத்திற்குப் பல பத்தாண்டுகள்/நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக அறியப்படும் பாஸ்கராச்சாரியார், உதாயனர், அபிநவகுப்தர், ஸ்ரீஹர்ஷர் முதலானோருடன் சங்கரர் வாதம் செய்ததாக அந்நூலில் வருகிறது. அந்நூலை வரலாறாக ஏற்கவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், “அப்படிப் பெயர் வைத்துக்கொண்டவர்கள் பல பேர் இருந்திருக்கலாம்” என்று சப்பைக்கட்டுகின்றனர். இது ஒரு அவல நிலையல்லவா?//

    Which are these sankara vijayas that talk about this? At least from Kamakoti site, we can see that Sri Advaitanandabodhendra Saraswati (48th Acharya) debated with Sri Harsha and Abhinava Gupta. As for Bhaskaracharya, Mahaswamigal says he lived around 800 years ago while discussing about Jyotisham.
    One should not make sweeping allegations against traditional institutions like Sankara Mathams without proper evidence. This is no better than the British who ignored Puranams but took the kings’ years of rule as mentioned in them as true.

  20. நண்பர் பாலச்சந்திரன் அவர்களே,

    நான் தவறாகப் புரிந்துக்கொண்டிருந்தால் மன்னிக்கவும். வரலாற்று ஆராய்ச்சி இல்லாமல் அவரவர் தம் மனம்போனபடி நம் சமயப் பெரியோர்கள் சரிதத்தைக் கூறி வருகின்றனர். அந்த ஆதங்கத்தினால் எழுதினேன். இருப்பினும் நான் சொன்னதன் கருப்பொருளுக்கு நீங்கள் உடன்பட்டது மிக்க மகிழ்ச்சி. சிலரிடம் இப்படிச் சொன்னதற்கு நான் “அதிகப் பிரசங்கி” என்று பட்டம் வாங்கிக்கொண்டேன்.

  21. Dear Kumudan,

    Since you asked, Madhaviya Sankaravijayam talks about Sankara debating with Bhatta Bhaskara (not Bhaskaracharya – I stand corrected), Sriharsha, and Abhinavagupta.

    The point is not about raising controversies between books or mutts. That was just one example. There is nothing wrong in having texts that glorify Sri Adi Sankara or any other personality, but it has to be understood as just that. I did not make any allegations about mutts, but some followers insist that these texts are perfectly historical. That’s when it gets problematic. I hope you get the point. This is what I had wrote, if you read carefully:

    //
    ‘சங்கரரைப் பற்றிப் புகழ்வதற்காக எழுந்த ஒரு exaggerative description கொண்ட நூல்’ என்று எடுத்துக்கொள்ளாமல் அதையே வரலாறு என்று பலர் நம்புகின்றனர். அப்படி நம்புவதில் பெரிய ஆபத்து இருக்கிறது.
    //

    I was referring to ill-informed lay followers in the above.

  22. திரு மயூரகிரி சர்மா அவர்களது இந்தக் கட்டுரை மிக அருமை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வண்ணம் எழுதியிருக்கிறார். அவரது இயல்பான நடையை மாற்ற வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து.

    மயூரகிரி என்பது இலங்கையில் உள்ளதா? இதன் சிறப்பு யாதென ஒரு ஐயம். தீர்ப்பாரா கட்டுரை ஆசிரியர்?

    நமது இலக்கியங்கள் அத்தனையுமே ஆங்காங்கே சரித்திரத்துக்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளன. அவற்றைப் பகுத்து எடுத்து ஆள்வதுதான் நமது வரலாற்றை நிலைநிறுத்திப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும். நம்மவர்களே குழப்பியதால்தான், ஆதிசங்கரரின் காலம், புத்தரின் காலம் முதலியவற்றை இன்னமும் அறுதியாக நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

  23. // நம்மவர்களே குழப்பியதால்தான், ஆதிசங்கரரின் காலம், புத்தரின் காலம் முதலியவற்றை இன்னமும் அறுதியாக நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.
    . //

    ஆதி சங்கரர் காலத்தைத் திடமாக CE 700-௭௫௦ என்று காட்டமுடியும் என்று நினைக்கிறேன். இதற்கு விளக்கம்:

    (1) ஆதி சங்கரர் தர்மகீர்த்தி என்னும் பௌத்த சிந்தனையாளர் எழுதியதை மேற்கோள் காட்டியுள்ளார். அவர் சீடர் சுரேஷ்வரச்சரியர் தம் வார்த்திகத்தில் தர்மகீர்த்தியைப் பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

    (2) வாசஸ்பதி மிஷ்ரா என்பவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்ர பாஷ்யத்தை விரிவாக விளக்கியுள்ளார்.

    (3) இவ்விருவரும் – அதாவது தர்மகீர்த்தியும் வாசஸ்பதி மிஷ்ராரும் தமது காலத்தை முறையே CE 650 என்றும் CE 841 என்றும் தெளிவாக எழுதியுள்ளனர்.

    (4) வாசஸ்பதி மிஷ்ரர் சங்கரருக்கு அண்மையில் இருந்த பேதாபேத மதத்தவராகிய பாஸ்கராச்சாரியாரின் வாதத்தைக் கண்டித்துள்ளார்.

    (5) இதிலிருந்து, சங்கரர் காலத்திற்கு upper limit CE 700 என்றும், lower limit CE 800 என்றும் அறியப்படுகிறது.

    ஆர்வமிருந்தால் இது குறித்து விரிவாக எழுதுகிறேன்.

  24. திரு கந்தர்வன் அவர்களே,

    ///நம்மவர்களே குழப்பியதால்தான், ஆதிசங்கரரின் காலம், புத்தரின் காலம் முதலியவற்றை இன்னமும் அறுதியாக நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.///
    ///ஆர்வமிருந்தால் இது குறித்து விரிவாக எழுதுகிறேன்.///

    “நம்மவர்களே குழப்பியதால்தான்” என்று நான் எழுதியவற்றை உடனடியாக நிரூபித்ததற்கு மிக்க நன்றி.

    என்னிடம் ஆர்வம் மட்டுமல்ல, அசைக்கமுடியாத ஆதாரங்கள் பலவும் ஆதிசங்கரரின் காலம் பொதுசகாப்தத்துக்கு 482 ஆண்டுகளுக்கு முன்னர் என்று நிரூபிக்க ஏதுவாக உள்ளன. முக்கியமாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை எந்தவிதத்திலும் குழப்ப முடியாது. வேதப் பிரமாணம் இல்லை, இதை ஏற்கமாட்டேன், அதை ஏற்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல வழியில்லாத கற்களாலான ஆதாரங்களும் உள்ளன. ஆனால், இந்தத் தளத்தில் அதை விவாதிக்க விருப்பமில்லை. நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் விவாதத்தை வைத்துக் கொள்ளுவோம். நேருக்கு நேர் முகத்தைப் பார்க்காமல் வாதம் செய்வது விடை தராது என்பதை உணரவும். ஆதிசங்கரரின் காலம் கிறிஸ்துவுக்குப் பின்னர் 700 ஆண்டுகள் என்று சிலர் சொல்லிவருவதால், தாமஸ் நமக்கு சித்தாந்த அறிவு புகட்டியதிலிருந்து, முகமது நமது ஆதிசங்கரருக்கே அத்வைதம் சொல்லித்தந்ததிலிருந்து (இவ்வாறெல்லாம் பிரமதத்டினரும் நமது விரோதிகளும் சொல்லிவருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்) எல்லாவிதமான கட்டுக் கதைகளும், அவதூறுகளும் வரக் காரணமாக இருப்பதை உணர்ந்தால் சரி.

  25. Sriman Gandarvan,

    I know there are few factual errors in Madhaviya Sankara Vijayam. Since you used “sankara mathangal”, “sankara vijaya noorkal” in plural, i responded.

    Kanchi Mahaswamigal says there are few discrepancies across sankara vijayams. These are due to lack of communication at that time and was written at different times. There are few sankara vijayams which are lost for ever. We need to carefully analyse whatever available to us to arrive at a proper date.

    About Sankara’s date, there are lot of evidences for the period 509-477 BCE. We may debate on this on a separate thread else we’ll lose the track of the message of this current thread.

    Note: I respect all the sankara mathams and their acharyas equally without any bias. I’ve the books from Kanchi and sringeri mathams and also their chitra pathams in my puja room.

  26. சங்கரர் காலம் குறித்து கந்தர்வன் கூறியுள்ளதுடன் முழுவதும் உடன்படுகிறேன். அனேகமாக எல்லா வரலாற்று அறிஞர்களும், பெரும்பாலான சம்பிரதாய சமய அறிஞர்களும் தற்போது சங்கரரின் காலம் இது தான் என்று ஏற்றுக் கொள்கின்றனர்.

    சங்கர விஜய நூல்களில் “விக்ரமாதித்தன் அரசேற்ற நாளிலிருந்து இத்தனையாவது வருடம்” என்று சொல்லியிருப்பது எந்த விக்ரமாதித்யனை என்று கண்டுகொள்வது ஒரு வரலாற்றுப் புதிர். உஜ்ஜயினை ஆண்ட விக்ரமாதித்தன் போக சாளுக்கிய, ஹொய்சள மன்னர்களும் தங்களை அந்தப் பேரால் அழைத்துக் கொண்டனர். எனவே மாதவீய சங்கர விஜயம் சொல்லும் விக்ரம வருடம் இந்தமன்னர்களில் ஒருவரைக் குறித்திருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். எனவே சங்கர விஜய இலக்கிய சான்றுகளே கூட 700 – 800 CE காலத்திற்கு வலு சேர்க்கின்றன.

    உமாசங்கர், குமுதன் ஆகியோர் கூறுவது போல, சங்கரர் காலத்தை 2500 வருடம் அல்லது அதற்கும் முன்பு கொண்டுசெல்வது ஒரு ஐதிகம் மட்டுமே. அந்த ஐதிகத்துடன் உடன்படும் எந்த வரலாற்று ஆதாரங்களும் இதுவரை தரப்படவில்லை. சான்றுகளாக அளிக்கப் படுபவை அதி-ஊகங்கள் மட்டுமே. .

    மேலும், பண்டைய இந்திய வரலாற்றில் வேறு பல சான்றோர்களுடைய காலகட்டத்தையும் (புத்தர், தர்மகீர்த்தி, நாகார்ஜுனர், காளிதாசர், பர்த்ருஹரி…) கணக்கில் கொண்டே சங்கரரது காலம் கணிக்கப் பட வேண்டும். இந்த 2500 வருடம் முன்பு என்ற கணக்குப் படி சங்கரர் புத்தருக்கே சமகாலத்தவராக, ஏன் முற்பட்டவராகக் கூட ஆகி விடுவார் :)) (பிறகு அதை சரிக்கட்ட புத்தர் காலத்தை ஆயுரம் வருடம் முன்பு நகர்த்த வேண்டும்)! அதனால் தான் வரலாற்று அறிஞர்கள் இந்த ஐதிகக் கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

    காஞ்சி பரமாசாரியார் ஒரு மகான், ஞானி, சமய, தத்துவ சாஸ்திர விற்பன்னர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் சொன்னார் என்பதாலேயே ஒரு ஐதிகம் வரலாற்றுக் கருத்தாகி விட முடியாது.

  27. //
    About Sankara’s date, there are lot of evidences for the period 509-477 BCE. We may debate on this on a separate thread else we’ll lose the track of the message of this current thread.
    //

    I am planning to write an article to show from Sankara’s own works, texts, and cross references that it is not possible that Adi Sankara could have written his works before 700 CE and after 750 CE.

    Shri Umashankar has expressed his unwillingness to share his reference with us, but I guess you are interested. I am all ears, and we can debate it out in that article.

    I agree that we are side-tracking on this thread and so we can discuss this later.

  28. // ஆதிசங்கரரின் காலம் கிறிஸ்துவுக்குப் பின்னர் 700 ஆண்டுகள் என்று சிலர் சொல்லிவருவதால், தாமஸ் நமக்கு சித்தாந்த அறிவு புகட்டியதிலிருந்து, முகமது நமது ஆதிசங்கரருக்கே அத்வைதம் சொல்லித்தந்ததிலிருந்து (இவ்வாறெல்லாம் பிரமதத்டினரும் நமது விரோதிகளும் சொல்லிவருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்) எல்லாவிதமான கட்டுக் கதைகளும், அவதூறுகளும் வரக் காரணமாக இருப்பதை உணர்ந்தால் சரி //

    உமாசங்கர், தாமஸ் புரட்டர்கள் தங்கள் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அதை தாமஸோடு தொடர்பு படுத்துகிறார்கள் என்பதற்காக, நாம் சங்கரருடைய காலத்தை முன்னுக்கு நகர்த்த வேண்டும் என்று சொல்கிறீர்களோ? :)) உங்களது தர்க்கம் வினோதமாக இருக்கிறது!

    சம்பந்தர், மாணிக்கவாசகர், மெய்கண்டார், ராமானுஜர் இவர்களுக்கெல்லாம் தாமஸ் உபதேசம் செய்தார் என்று கூட தாமஸ் புளுகுமூட்டைக் காரர்கள் அவிழ்த்து விடுகிறார்கள்? அதற்காக, இவர்கள் காலத்தையெல்லாம் கி.முவுக்கு நகர்த்த முடியுமா?

    நமது தரவுகள் தீவிரமான ஆய்வுகள் மற்றும் வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு “உண்மை”யைத் தேடுவதாக இருக்க வேண்டுமே அன்றி அதி-ஊகங்களை வைப்பதாக இருக்கக் கூடாது.

    ஒரு சில பண்டிதர்களுக்கு சங்கரர் கிறிஸ்துவுக்கும் முற்பட்டவர் என்று காண்பிக்க வேண்டும் என்று ஆர்வக்கோளாறு ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது ஞானிகள் என்றால் மிகப் பழைய காலத்தவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒரு complex இருந்திருக்கலாம்.. இவற்றால் உந்தப் பட்டு “கி.மு சங்கரர்” கருத்தாக்கத்தை அவர்கள் உருவாக்கியிருந்திருக்கலாம்.

    சுவாமி தபஸ்யானந்தர் தனது Sankara Dig-Vijaya (ரா.கி மடம் வெளியீடு) நூலின் நீண்ட முன்னுரையில் சங்கரர் காலம் குறித்த இந்த சர்ச்சைகளை விரிவாக அலசுகிறார். இறுதியில் பொ.பி 7-8ம் நூற்றாண்டு என்பதே தான் ஏற்றுக் கொள்ளும் கருத்து என்றும் பதிவு செய்கிறார்.

  29. திரு உமாசங்கர் அவர்களே,

    கிறித்தவ-இசுலாமிய மதவெறியர்களும் மேற்கத்திய இந்து விரோதிகளும் என்ன சொல்லுவாரோ சொல்லட்டும். அதற்காக நாம் சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டாம். காய்தல் உவத்தல் இல்லாமல் ஆராய்ந்தால் சங்கரர் காலம் தெரிய வரும். நம்முடைய மதாபிமானத்தையும் அபிநிவேசத்தையும் சற்று ஒதுக்கி விட்டு நடுநிலையாக, starting from a blank paper ஆராய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    மேற்கொண்டு இங்கு விவாதிக்க ஆர்வமில்லை என்றால் விட்டுவிடுவோம்.

  30. //காஞ்சி பரமாசாரியார் ஒரு மகான், ஞானி, சமய, தத்துவ சாஸ்திர விற்பன்னர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் சொன்னார் என்பதாலேயே ஒரு ஐதிகம் வரலாற்றுக் கருத்தாகி விட முடியாது.//

    HH has discussed about this in extensive details in deivathin kural along with history. Whenever HH gets into a subject, HH delves deep into it. Except Sringeri matham, all other mathams places Sankara in BCE.

    We need to study the history as it is and not just to prove something is old or new. Obviously it is not the motive of HH.

    I actually wanted to end my comment after replying to Gandarvan but had to respond as there was a reference to HH.

    This is my last post on this topic in this thread.

  31. திரு ஜடாயு அவர்களே

    ///தாமஸ் புரட்டர்கள் தங்கள் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அதை தாமஸோடு தொடர்பு படுத்துகிறார்கள் என்பதற்காக, நாம் சங்கரருடைய காலத்தை முன்னுக்கு நகர்த்த வேண்டும் என்று சொல்கிறீர்களோ? :)) உங்களது தர்க்கம் வினோதமாக இருக்கிறது//

    நான் அப்படியா சொன்னேன், இல்லை. ஆதி சங்கரரின் காலத்தை நம்மவர்களே குசப்புவதால் அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் என்றேன். அவர்கள் இவ்வாறு சொல்வதால் ஆதி சங்கரரின் காலத்தை முன்னதாக ஆக்க நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? தாங்கள் தவறாக என் கருத்தைப் புரிந்துகொடீர்களா? அல்லது எனது இந்தக் கருத்தில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பதால் அப்படிப் புரிந்துகொள்கிறீர்களா?

    /// (பிறகு அதை சரிக்கட்ட புத்தர் காலத்தை ஆயுரம் வருடம் முன்பு நகர்த்த வேண்டும்)! ///

    புத்தரின் காலத்தை நீங்கள் மாற்றி அமைக்க விரும்பாததால் சங்கரரின் காலத்தை கி.பி. 700 என்று அமைக்க விரும்புவதைப் போலல்லவா எழுதுகிறீர்கள்?

    ///உமாசங்கர், குமுதன் ஆகியோர் கூறுவது போல, சங்கரர் காலத்தை 2500 வருடம் அல்லது அதற்கும் முன்பு கொண்டுசெல்வது ஒரு ஐதிகம் மட்டுமே. அந்த ஐதிகத்துடன் உடன்படும் எந்த வரலாற்று ஆதாரங்களும் இதுவரை தரப்படவில்லை. சான்றுகளாக அளிக்கப் படுபவை அதி-ஊகங்கள் மட்டுமே. .///

    கல்வெட்டுக்கள், விக்கிரகங்கள் என்பவற்றை ஆதாரங்களாக ஏற்பதில்லையா? தொல்பொருள் ஆராய்ச்சியை வைத்துத்தானே அயோத்தி வழக்கே இப்போது தீர்ப்பாகியிருக்கிறது? இவை மட்டுமல்ல, சில வரலாற்று அறிஞர்களின் ஆராய்ச்சித் தொகுப்பே இருக்கிறது, வெறும் ஐதீகம் என்றால் எப்படி வரிசையாக அத்தனை சங்கராச்சாரியர்களின் பெயர், பிறந்த இடம், பிறந்த ஆண்டு, முக்தியான இடம், முக்தியான ஆண்டு எவற்றை காஞ்சி மடம் வெளியிட முடியும்? இத்தோடு நில்லாது, அந்த வரலாற்று ஆதாரத்துக்கு வலு சேர்க்கும் விதமாக சில அதிஷ்டானங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றனவே. மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொண்டால், வரலாற்று ஆதாரங்கள் அடங்கிய புத்தகங்களை அனுப்பத்தயார்.

    சங்கரர் என்றபெயரில் பலர் இருப்ந்திருக்கிரார்கள் என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் எல்லாரையும் பாரம்பரியமாக சங்கராச்சாரியார் என்று சங்கர மடங்களில் வழங்கி வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தை சில வரலாற்றரிஞர்கள் சரியாக உணரவில்லை என்பதே உண்மை. இதிலே எங்கே வந்தது ஐதீகம்?

    இந்த விஷயத்தில் மேலும் வாதம் செய்ய நான் விரும்பவில்லை.

  32. திரு ஜடாயு அவர்களே

    ///நமது தரவுகள் தீவிரமான ஆய்வுகள் மற்றும் வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு “உண்மை”யைத் தேடுவதாக இருக்க வேண்டுமே அன்றி அதி-ஊகங்களை வைப்பதாக இருக்கக் கூடாது. ///

    நான் சொன்னதும் சொல்வதும் தீவிர ஆய்வுக் கட்டுரைகளைப்படித்த பின்னரே. இந்தப் புத்தகங்களில் எந்த ஊகமும் இல்லை. எனக்கு வீண் வாதங்களிலோ விதண்டாவாதங்கழிலோ ஆர்வமும் இல்லை, அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் நமது மதத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உள்ளது. பொத்தாம் பொதுவாக இப்படி நீங்கள் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  33. தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்…

    எனது வாக்கியங்கள் மிக நீளமாக இருப்பதாக எழுத்துத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஜடாயு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சில பெரிய வாக்கியங்களை இரண்டு மூன்று வாக்கியங்களாக பிரித்து எழுதியிருக்கலாம் என்றே தற்போது நானும் கருதுகிறேன். எதிர்வரும் காலத்தில் இவ்விடயத்தில் கவனம் செலுத்த முயல்கிறேன்.

    அதே வேளை கந்தர்வன், உமாசங்கர் ஆகியயோர் குறிப்பிடுவது போல தமிழ் எழுத்து நடையில் இலங்கையின் தாக்கம் நிச்சயமாக சிறிதேனும் இருக்கும் என்றே நம்புகிறேன். இக்கட்டுரையில் நல்ல தமிழ் நடை பாவிக்கப்பெற வேண்டும் என்றே நானும் கருதினேன். ஏனெனில் இது பழைமையும் சிறப்பும் நயமும் மிக்க தமிழிலக்கியம் சார்ந்த கட்டுரை.. ஆயினும் இன்னும் சிறிது தெளிவான அதே வேளை ஆழமான தமிழ் நடையை பாவித்திருக்கலாம் என்று கூட இப்போது தோன்றுகிறது.

    ஜடாயு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல நக்கீரர் சார்ந்த குழப்பம்…. இன்னும் ஆய்விற்குரியது. கயிலை பாதி காளாத்தி பாதி அந்தாதி பாடியவர் எந்த நக்கீரர்? நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தால் அதனைத் தணிக்க கைலை நோக்கி சென்ற நக்கீரருக்கு காளாத்தியில் இறைவன் கைலைத்தரிசனம் தந்ததாகத் தான் பலரும் இன்று வரை நம்புகிறார்கள். அப்போது அவர் பாடியதாகத் தான் இந்த அந்தாதியையும் கருதி வருகிறோம். நம்பியாண்டார் நம்பிகள் கூட இந்த இடத்தில் குழம்பியிருக்கலாம் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். நான் எதனையும் சரி என்று சொல்லவில்லை. இன்னும் இவ்விடயம் ஆய்விற்குரியது.

    வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியுள்ள அனைவருக்கும் நன்றிகள். வயதிலும் அனுபவத்திலும் சிறியவனான என்னை தங்களின் எழுத்துக்களே ஊக்குவித்து வருகின்றன.

    ஆதி சங்கரர் காலம் பற்றிய தெளிவான முடிவுகள் வெளிவர வேண்டும் என்பதே எனது ஆவலும். முக்கியமாக சிருங்கேரி மற்றும் காஞ்சி சங்கர மடங்களின் பதிவுகளில் பாரிய இடவெளி காணப்படுவது சாதாரணமான விஷயமல்ல… எனவே கால தாமதம் செய்யாமல் சங்கரர் காலத்தை தெளிவாக வரையறுக்க வேண்டியது அவசியம். அதற்கு வணக்கத்திற்குரிய சங்கராச்சார்யார்கள் உள்ளிட்ட சங்கர வேதாந்திகள் மற்றும் அனைத்து இந்துக்களும் காய்தல் உவத்தலற்ற பங்களிப்பாற்ற வேண்டும். ஆதற்காக கேவலமான விவாதம் செய்யலாகாது. ஒரு மஹாபுருஷரது காலத்தை ஆராய்கிறோம் என்ற மனப்பாங்குடன் அதனைச் செய்வது அவசியம்.

  34. \\நன்றி திரு சர்மா அவர்களே. உங்களுடன் சேர்ந்து ஈழத்தில் சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது போலிருந்தது தங்கள் மறுமொழி. நிறைய செய்திகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்\\

    இலங்கையில் நடைபெறும் ஸ்கந்தஷஷ்டி விழா பற்றிய தகவல்களையும் புகைப்படக்காட்சிகள் சிலவற்றையும் இணையத்தளங்களில் கண்டு களிக்கலாம். முக்கியமாக நம் யாழ்ப்பாணத்து நீர்வையூர் செல்வக் கதிர்காம ஸ்வாமி ஆலய திருப்பெருவடிவக்காட்சி, வேல்வழங்கும் வைபவம் போன்றவற்றை நீர்வேலி இணையம் ( http://www.neervely.com) என்ற இணைய முகவரியில் இணைத்திருக்கிறார்கள். விரும்புகிறவர்கள் கண்டு மகிழலாம்.

  35. // வரலாறு என்பது அவ்வப்போது ஆளும் வர்க்கத்தினரின் அடிவருடிகள் அவர்களின் எச்சில் எலும்புகளுக்கு பதில் சேவையாக எழுதிவைத்த புளுகு மூட்டை //
    வரலாற்றில் சிலர் எச்சில் எலும்புக்கு எதிர்ச்சேவை செய்திருக்கலாம். அதற்காக வரலாறே எச்சிலுக்கு எதிர்ச்சேவை என்பது சரியல்ல.
    எம்பொண்டாட்டி பச்சச்சீல கட்டிருப்பா, அதுனால பச்சச்சீல கட்டிருந்தா எம்பொண்டாட்டி தான்னு சொல்ற மாதிரி இருக்குங்க. அது முறையான தர்க்கம் இல்லீங்க.

    நிற்க. ஆதி சங்கராச்சாரியாரின் காலம் பற்றித் தெளிவான முடிவுக்கு இன்னும் வர முடியவில்லை. கீழ்க்கண்ட link சற்றே உதவினாலும் முடிவு என்று எதையும் அறுதியிடவில்லை. இதில் வரலாற்றைத் தெளிய நாம் அதிகம் உழைக்கவேண்டும்.
    https://www.indiadivine.org/audarya/hinduism-forum/187608-dating-adi-shankara.html

  36. //ஆதி சங்கரர் காலம் பற்றிய தெளிவான முடிவுகள் வெளிவர வேண்டும் என்பதே எனது ஆவலும். முக்கியமாக சிருங்கேரி மற்றும் காஞ்சி சங்கர மடங்களின் பதிவுகளில் பாரிய இடவெளி காணப்படுவது சாதாரணமான விஷயமல்ல… எனவே கால தாமதம் செய்யாமல் சங்கரர் காலத்தை தெளிவாக வரையறுக்க வேண்டியது அவசியம். அதற்கு வணக்கத்திற்குரிய சங்கராச்சார்யார்கள் உள்ளிட்ட சங்கர வேதாந்திகள் மற்றும் அனைத்து இந்துக்களும் காய்தல் உவத்தலற்ற பங்களிப்பாற்ற வேண்டும். //

    //ஆதி சங்கராச்சாரியாரின் வரலாற்றைத் தெளிய நாம் அதிகம் உழைக்கவேண்டும்//

  37. தமிழ்ச் சங்கநூல்களுடன் இந்துதர்மத்திற்குள்ள தொடர்பியல் பற்றிய ஆய்வுகள் மேன்மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இக்கட்டுரை புலப்படுத்தி வருகின்றது.

  38. இலங்கையில் முருகவழிபாடு மிகச்சிறப்புற்றிருப்பதாகக் கொள்ளப்டுகின்றது. அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப்பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. அவை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பெற வேண்டும்.

  39. மிக அருமையான கட்டுரை இது. முருகக் கடவுளின் வழிபாட்டுக்கு மிகவும் உதவக் கூடியது. எழுதியவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *