அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும். இத்தகு அருளாளரின் வரலாறு மட்டும் மிகவும் குழப்பமானதாயும், தெளிவற்றதாயும் இருக்கிறது. இதை விட அவலம் யாதென்றால் தேவையற்றதும் வீணானதுமான இந்து தத்துவார்த்தங்களுக்கு முரணான அபவாதங்களும் அருணகிரியாரின் பெயரில் திணிக்கப் பட்டிருக்கிறமையையும் பார்க்கிறோம்.
அருணகிரிநாதரின் காலமாக எதனைத் தீர்மானிக்கலாம் என்பது குறித்தும் பல்வேறு அறிஞர்களிடையே கருத்துப் பேதமுண்டு. ஆனால் திருப்புகழில் கந்தபுராண அரங்கேற்றம் பற்றிய செய்தி இருக்கிறது.
முற்பட்ட இலக்கண நூலிடை,
தப்புற்ற கவிக்கெனவே அவை,
முற்பட்டு புதுத்துறை மாறிய புலவோனே
இதன் மூலம் அருணகிரியார் கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சார்யாருக்கு பின் வந்தவர் என்று கருதலாம். அது போலவே, அருணகிரியார் காளமேகப்புலவரையும் ஓரிரு திருப்புகழ்களில் சிறப்பித்திருப்பதால் அவருக்கு பின் வந்தவர் அல்லது அவர் காலத்தவராயிருக்க வேண்டும். ஆனாலும் இவைகளை விடச் சிறப்பாக, 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவனான பிரபுடதேவ மகாராஜனைப் பற்றி இவர் பேசுவதால் அவன் காலத்தவர் என்று கருதலாம்.
‘அதல சேதனாராட’ என்ற திருப்புகழில் அருணகிரிநாதர் ‘உதய தாம மார்பான பிரபுடதேவமாராஜன் உளமுமாட வாழ்தேவர் பெருமாளே’ என்று அது அமைந்திருக்கிறது. ஆக, அருணகிரியார் காலம் 15ம் நூற்றாண்டிற்குரியது. அவர் காலத்தில் இலங்கையில் முருக வழிபாடு சிறப்புற்றிருந்திருக்கிறது. அவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் முதலிய தலங்களைப் பாடியிருப்பதால் இது புலனாகும். ஆகவே அவர் போர்த்துக்கீசியர் இந்தியா- இலங்கையில் தமது ஆட்சியை நிறுவ முன் பிறந்தவர் என்பதும் தெளிவு. ஆக, அவர் காலம் 15ம் நூற்றாண்டே.
அருணகிரிநாதருக்கு முற்பிறவி என்று கூட ஒரு கதை இருக்கிறது. அதுவும் பரவலாக வழங்கி வருகிறது. அது இவ்வாறு உள்ளது. அகத்திய மாமுனிவர் வளர்த்து வந்த நாய் ஒன்று தேவேந்திரனாக மாறியதாம். அது பிறகு அர்ஜூனனாகியதாம். பின்பு அதுவே கண்ணப்ப நாயனாராக பிறவி எடுத்ததாம். பிறகும் அது நக்கீரராயும் பிறவி எடுத்து கடைசியாக அருணகிரிநாதராயும் பிறந்ததாம். இந்தக் கதையை தண்டபாணி சுவாமிகள் என்கிற முருகபக்தர் தாம் இயற்றிய அருணகிரிநாதர் புராணத்திலும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
இது மிக முரணானது. மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனால் கீதோபதேசம் அருளப்பட்டவனான பார்த்தனாகிய அர்ஜூனன் மீண்டும் பிறந்தான் என்று கருதுவது இந்து சமய நம்பிக்கைக்கே முரண். அது போல பெரிய புராணத்திலும் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாச்சார்யராலும் இன்னும் மாணிக்கவாசகர் முதலிய அருளாளர்களாலும் முக்தி நிலை பெற்றவர் என்றே துணிந்து கூறப்பட்ட புனிதரான கண்ணப்பதேவர் மீண்டும் பிறந்தார் என்கிறதும் சைவ சித்தாந்த மரபிற்கும் அவர் தம் பெருமைக்கும் இழுக்காகும். நக்கீரர் என்பது பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அது இன்னும் பெருங்குழப்பங்களுக்கே வழி செய்யும்.
ஆக, இது போலவே அருணகிரிநாதருடைய வாழ்க்கை வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிற வேதனையான நிலையைக் காண்கிறோம். இது போலத்தான் பட்டினத்தார் என்ற துறவற சீலருக்கும் உருத்திரகணிகை ஒருவருக்கும் சிவாலயம் ஒன்றில் உண்டான (கள்ள) தொடர்பால் அருணகிரியார் பிறந்தார் என்றும் இப்புராணம் சொல்கிறது. இதுவும் மேற்படி தண்டபாணியடிகள் பெற்ற கனவில் சொல்லப்பட்ட செய்தி தானாம். இது எவ்வளவு கேவலம்? வீணே இருந்த பட்டினத்தடிகள் இங்கு கொண்டு வந்து சேர்த்த விபரீதத்தை என் சொல்ல..? அது போக.. அருணகிரிநாதர் காலம் என்ன? பட்டினத்தார் காலம் என்ன?
அருணகிரியாரும் தம் திருப்புகழ் ஒன்றில்
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை,
குயில் போற் பிரசன்ன மொழியார்கள்,
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்ததென்ன,
குரு வார்த்தை தன்னை உணராமல்…
என்று பாடுவதனூடாக அவர் நற்குடிப்பிறப்புடையார் என்றும் அறியலாம். ஆக, மேற்கூறிய செய்தி மிக மோசமான கட்டுக்கதை எனலாம். இதற்குப் பிறகு வருகிற பிரச்சினை அவர் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பது.. இது நமக்கு அவ்வளவு அவசியமல்ல. இறையுணர்வு பெற்ற அருளாளர்கள் எக்குலத்தில் பிறந்தாலும் அவர் தம் இறையுணர்வையே போற்றிட வேண்டும். ஆனால் அவர் பிராமணர் என்றோ அல்லது தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றோ கருதுவதற்கும் இடமில்லை.
எப்படியோ, அருணகிரிநாதர் நல்ல கட்டமைப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பது ஒன்றே நாம் கண்டு கொள்ளக்கூடியதாகும். இதை விட ஒரு சிலர் கன்னிகையான முத்தம்மை என்ற கன்னிகைக்கு இறையருளால் ஆண் தொடர்பின்றி (யேசு கிறிஸ்து போல ?!?) அருணகிரியார் பிறந்தார் என்றும் சொல்லுகிறார்கள். இதுவும் இங்கு ஏற்பதற்குரியதாகவில்லை.
நாம் முன் சொன்ன அருணகிரிநாதர் புராணத்தில் அருணகிரிநாதரின் ஜன்மதினமாக புரட்டாதி உத்தரமும் தனுர் லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனிப் பூரணையையும் அருணகிரிநாதர் விழாவாக இலங்கையில் சில அன்பர்கள் கொண்டாடி வருகிறார்கள். உண்மை எதுவென்று தெளிய இயலாதிருக்கிறது. எது எவ்வாறாகிலும் தமிழ்ச் சந்தக் கவியாகிய அருணகிரிநாதருக்கு எல்லோரும் ஒன்றுபட்டு, ஒரு நாளில் முக்கியமாக முருக பக்தர்கள் பக்தி விழாவும் இசை ஆர்வலர்கள் தியாகராஜ சுவாமிகளுக்குச் செய்வது போல இசை விழாவும் எடுப்பது அவசியமாகும்.
இது போலவே. அருணமுனிவர் பற்றி இன்னும் பல செய்திகளும் வழங்கி வருகின்றன. அவர் தம் திருப்புகழில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதைக் கண்டு அவர் பிராமணர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது சிறிதும் ஆதாரமற்றது. அவர் எங்கும் தான் அந்தண மரபினர் என்று சொன்னதாகவே தெரியவில்லை. அது தவிர, சிலர் சம்ஸ்கிருதத்தில் பாகவதசம்பு, சாளுவாப்யுதயம் முதலிய நூல்கள் எழுதிய சோணாத்ரிநாதரும் இவரும் ஒன்று என்று கூட மயங்குகிறார்கள். இது உண்மையில் தவறு என்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
எவ்வாறாகிலும் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அத்துடன் அவருக்கு திருவண்ணாமலையுடன் தன் வாழ்வில் நெருக்கமான தொடர்பு இருந்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட பெருமகனார் தம் திருப்புகழில் ஓரிடத்தில் கூட கிரிவலம் பேசாமையும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.
எவ்வாறானாலும் அருணகிரிநாதர் தமது இளமைப்பருவத்தில் கீழான நடத்தையில் ஈடுபட்டார் என்கிற கருத்தை ஏற்காமல் இருக்க இயலாது. இதைத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்ற பெருமக்களும் அங்கீகரித்திருப்பதால் அதை நாமும் ஏற்கலாம். முக்கியமாக, திருப்புகழ் பாடல்களில் பல்வேறு இடங்களிலும் பெண்கள் பற்றியும் பெண்களால் தாம் பட்ட அவலங்கள் பற்றியும் ஒழுக்கம் கெட்டவர்களாக ஆண்களை மயக்கும் பெண்களின் அவயவங்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் பற்றியும் பலவாறாகப் பேசுவதால் அவர் பெண்கள் மீது தீராத காமம் கொண்டு அலைந்தார் என்று கருதுவது தவறில்லை என்றே தோன்றும். உதாரணமாக,
மானார் கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து
கைப்பொருளே இழந்து அயர்வாயே
இவ்வாறு ஏராளமான திருப்புகழ்களைப் பார்க்கலாம். அத்தோடு இவர் இக்காலத்தில் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசினார் என்பதையும், மது மாது மாமிசம் போன்ற தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார் என்றும் தெரிகிறது.
ஆனால், இவ்வாறான கேவலமான வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்த நிலையில் வாழ்வில் விரக்தியுற்று தான் பிறந்து, வளர்ந்து வாழும் ஊராகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார் என்பதையும் நம்புவதற்கு அகச்சான்றுகள் கிடைக்கின்றன. பாம்பன் சுவாமிகள் முதலிய எல்லா பெரியவர்களும் இதனை ஆமோதிப்பதாகவே தெரிகிறது.
அருணகிரிநாதர் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டவர் என்றும் கூறுவர். இதற்கும் திருப்புகழ்களில் ஆதாரம் காட்டுவர். இதை நம்மால் ஏற்கவும் மறுக்கவும் முடியவில்லை. ஆனால் அருணை முனிவர் துறவியாகவே இருந்திருக்க வேண்டும் என்று கருதுவதற்கு இல்லை. அவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போல, சேரமான் பெருமாள் போல, பெரியாழ்வார் போல, இன்னும் எத்தனையோ பெரியவர்கள் போல பிற்காலத்தில் சீரான- சிறந்த இல்லறம் பேணியிருக்கலாம்.
எனவே, தற்கொலைக்கு முயன்ற அருணகிரியை அருளாளனான முருகவேள் தன் திருக்கரத்தால் ஏந்தி காப்பாற்றினார். தமது திருக்கரத்தில் விளங்கும் ஞானவேலால் அவர் நாவில் எழுதி ஆசீர்வதித்தார். இந்நிகழ்வை ஏற்பதற்கும் முருகன் அருணகிரிக்கு உபதேசித்தார் என்பதற்கும் தக்க சான்றுகள் நிறையவே உண்டு.
அருணைநகர் மிசை கருணையோடருளிய மௌன வாசமும் இருபெரும் சரணமும் மறவேனே
என்றும் இன்னும் பிறவாயும் இவ்வாறு முருகன் அருளியதை அருணகிரியார் வியந்து பாடியிருக்கிறார். மேலும் கந்தரனுபூதியில்
‘சும்மா இருசொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே’
என்று பாடுவதனூடும், திருமுருகன் அருணகிரிக்கு ஜெபமாலை அருளியதாகவும் தெரிகிறது. அதை ‘செபமாலை தந்த சற்குருநாதா’ என்ற திருப்புகழ் வரி காட்டி நிற்கிறது. இது போல அருணகிரியாருக்கு வயலூரிலும் விராலிமலையிலும் அற்புத தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன.
இது போலவே சிதம்பரத்திலும் திருச்செந்தூரிலும் பெருமான் நிருத்த தரிசனம் காட்டியதாகவும் அருணகிரியார் பாடியிருக்கிறார்.
கொண்டநட னம்பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
வில்லிபுத்தூரர் என்பவருடன் அருணகிரி வாதம் செய்து வென்றார் என்றும் கூறுவர். இதன் பின் வில்லிபுத்தூரர் செய்த தவறை மன்னித்து அவருக்கு மேலான கருணை செய்தார் என்றும் வரலாறு உள்ளது. இதை வைத்தே ‘கருணைக்கு அருணகிரி’ என்ற பழமொழி உருவாகியிருக்கிறது. இது போலவே பிரபுடதேவராஜனுக்காக அருணகிரிநாதர் முருகதரிசனம் காட்டினார் என்கிற வரலாறும் உண்டு. இதற்கும் திருப்புகழ்களில் நிறைவான சான்றுகள் உள்ளன.
அது போலவே, இன்றைக்கு திருவண்ணாமலைக் கோயிலுக்குள் வாயிலை ஒட்டியே‘கம்பத்து இளையனார் சந்நதி’ என்ற அழகிய சிறிய முருகன் ஆலயத்தைப் பார்க்கலாம். இவ்விடத்திலேயே அருணகிரிநாதருடைய வேண்டு கோளின் படி பிரபுடதேவமாராசனுக்கு கந்தப்பெருமான் கம்பத்தில் (தூணில்) தோன்றி காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்று
அதிர வீசி வாதாடும் விடையிலேறுவாராட
அறுகு பூத வேதாளம் அவையாட
மதுரவாணி தானாட மலரில் வேதனாராட
மருவு வானுளோராட மதியாட
வனசமாமியாராட நெடிய மாமனாராட
மயிலுமாடி நீயாடி வரவேணும்
கதைவிடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாக
கதறு காலிபோய் மீள விஜயனேறு தேர் மீது
கனக வேத கோடூதி அலை மோதும்
உததி மீதிலே சாயும் உலகமூடு சீபாத
உவணமூர்தி மாமாயன் மருகோனே
உதயதாம மார்பார்பி ரபுடதேவமாராஜன்
உளமுமாட வாழ்தேவர் பெருமாளே
என்பது அப்போது அவர் பாடிய அற்புதப் பாடல். இப்பாடலைப் போலவே அவர் அருளிய அனைத்துத் திருப்புகழ்களும் சந்தம் நிறைந்து சிந்தை கவரும் சுந்தர மந்திரப் பெட்டகங்களாக விளங்குகின்றன.
இனி அருணகிரியார் கிளியுருக் கொண்டு விண்ணுலகம் சென்று கற்பக மலர் கொண்டு வந்தார் என்றும் அதன் பின் அப்படியே கிளி வடிவாக திருத்தணிகைக்குச் சென்று முருகன் தோளில் அமர்ந்து ‘கந்தரனுபூதி’ பாடினார் என்றும் சொல்லப்படும் செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கந்தரனுபூதி அவரது ஞானமுதிர்ச்சியில் பாடியது என்பது தெளிவாக அப்பாடல்களின் ஊடாகத் தெரிய வருகிறது.
அருணகிரியார் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவராயும் இருந்திருக்கிறார். அதற்கு அவர் ‘முந்து தமிழ் மாலை’ என்று சொல்வதே சான்று. எத்தனை மொழியிருப்பினும் அவற்றுள் முந்தி நிற்பதால் அருணகிரியார் தமிழுக்கு கொடுத்த சிறப்பு அடைமொழியோடு கூடிய பெயர் முந்து தமிழ். அருணகிரிநாதரது திருப்புகழ்களும் மற்றும் பிரபந்தங்களையும் ஆராய்ந்து கற்பது அவசியம். அவற்றில் அக்கால வழக்கங்கள் பலவும் கூட இடம்பெற்றிருக்கின்றன.
இராமாயணம் முழுவதையும் அருணகிரியார் திருப்புகழ்களில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளும் பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பற்றியும் பாடியிருக்கிறார். அருணகிரிநாதப் பெருமான் பாடிய பிரபந்தங்கள் யாவற்றையும் இக்கட்டுரையில் அலசின் கட்டுரை மிக விரியும். ஆக, அருணகிரிநாதப் பெருமானின் சிறப்புகள் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டுமாயில் அறிஞர்கள் இவ்வரலாற்றில் ஆங்காங்கே முளைத்து விட்ட களைகள் நீக்கி, உண்மையை உலகறியச் செய்ய வேண்டிய கடப்பாடுடையவர்களாகிறார்கள்.
‘எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளீர் சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ- பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்கும் செவி’
(ஒரு வெண்பா)
ஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.
சொல்லச்சொல்லத் தெவிட்டாத திருப்புகழ் ததும்பும் வ்யாசம் சமர்ப்பித்த தங்களுக்கு புன: நமஸ்காரம்.
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி …… யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி …… லணிவேனோ
என ச்ரத்தா பக்தி பொங்க தித்திக்கும் முத்தமிழினில் சரம் சரமாக பதினாயிரம் மாத்ருகா (மா க்ருதா என்ற பாட பேதமும் உண்டு) புஷ்பமாலைளாக சந்தக்கவிதைகளை அறுமுகக் கடவுளுக்கு பாத சமர்ப்பணம் செய்த வள்ளல் அருணகிரிப் பெருமானை ஆசந்த்ரார்கம் தமிழ் கூறும் நல்லுலகம் நினைவு கூறும்.
மனம் போனபடி அவ்வள்ளல்பெருமானின் சரித்ரம் சிதைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் பல. ஆராய்ச்சி பூர்வமாக ஆதார பூர்வமாக அருணகிரிப்பெருமானின் திவ்ய சரித்ரம் கிட்டாமை நம் துர்பாக்யம்.
பின்னும் தித்திக்கும் முத்தமிழினில் அவரருளிய திருப்புகழ்ப் பாக்கள் நிலையாத சமுத்திரமான சம்சாரத்தை கடக்க உதவும் தோணி. சோர்வுறும் நெஞ்சங்களுக்கெல்லாம் சோர்வைத்துடைத்து நினைத்ததை அளிக்கும் கல்பக வ்ருக்ஷம் திருப்புகழ்.
யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
ஏன்று இயம்புகிறார் அன்றோ!
வள்ளல் பெருமான் ஸர்வஜனப்ரியர். ராமாயணமும் பாரதமும் பாகவதமும் திருப்புகழில் உண்டு. சைவ பக்ஷமாய் பலப்பல திருப்புகழ். நாலிரண்டிதழாலே கோலிய என்ற திருப்புகழையும் தேவேந்திர சங்க வகுப்பையும் படிக்குங்கால் இவர் சாக்தரோ என தோன்றும்.
கண்ணனுக்கு பல பிள்ளைத்தமிழுண்டு. அவனுடைய குழந்தைப்பருவத்தை பாடித்தான் மாளுமோ!ஹிந்துஸ்தானத்து பாஷையனைத்திலும் கண்ணன் குழந்தைப்பருவத்தே செய்த திருவிளையாடல்களை பாடாத கவியிருக்க முடியாது. பின்னும் ராமபிரானுக்கு பிள்ளைத்தமிழுண்டோ அறிகிலேன்.
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிற்றுதித்த கருமாணிக்கத்தையந்த அன்னை கொஞ்சுவதை வள்ளல் அருணகிரி ” தொந்தி சரிய ” என்ற திருப்புகழில் பாடுகிறார்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்
மாயாபுரியாகிய ஹரித்வாரத்திலே வேகம்பொங்க ஒடும் பாகீரதி போன்றது சிர புராதன நித்ய நூதனமான தமிழும் ஸம்ஸ்க்ருதமும் கலந்த திருப்புகழ். அடங்காப்ரவாஹம் உடைய தேவகங்கையையை தனது தவத்தால் பக்தியால் ச்ரத்தையால் பூமண்டலத்திற்கு கொணர்ந்தான் பகீரதன். ப்ரயத்னமேதுமின்றி கட்டுக்கடங்கா பக்தியொன்றினாலேயே கந்தவேளின் நிஸ்ஸீம அருட்ப்ரவாஹத்தை கருணையே வடிவமான வள்ளல் அருணகிரி தமிழ்கூறும் நல்லுலகிற்கு அருளிச்செய்திருக்கிறார். துள்ளித் திரியும் கங்கையின் நடையையே ஒத்த திருப்புகழும் கங்கை போன்று திருப்புகழ் பாடும் அடியவரனைவரையும் பாவனமாக்குகிறது.
அசுர சக்திகள் பாரத வர்ஷத்தை குலைக்க எண்ணும் இத்தருணத்தில் கந்தனுடைய துஷ்ட நிகரஹத்தை அவனுடைய பராக்ரமத்தை வள்ளல் பெருமான் பாடியதை எண்ணாமலிருக்க முடியாது.
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் …… வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை …… யுடையோனே
விரிந்த பூமி பற்றி எரிய க்ரௌஞ்சகிரி நெரிந்து பொடிபட வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே; எழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே
என பாடுகிறார்.
பாரத வர்ஷத்தையும் ஏன் பூமண்டலத்தையே நிர்மூலம் செய்யும் மதபரிவர்த்தனம் ப்ரஷ்டாசாரம் போன்ற துஷ்க்ருத்யங்களை நிர்மூலம் செய்ய வெற்றிவேல் வீரவேல் நம் துணையிருக்கும். வள்ளல் அருணகிரி அருளிய திருப்புகழ் பாடும் நல்லுலகம் செழித்துத் தழைக்க அவன் வேல் துணையிருக்கும்
கந்தனைப்போன்றே கந்தனடியாரின் பெருமையும் பேசி மாளாது
வேலும் மயிலும் சேவலும் துணை.
நல்ல கட்டுரை. திரு மயூரகிரி சர்மா அவர்களின் சமயத்தின் மீதும், மொழியின் மீதும் உள்ள பற்று பாராட்ட படவேண்டியவைகள்.
//அருணகிரிநாதர் தமது இளமைப்பருவத்தில் கீழான நடத்தையில் ஈடுபட்டார் என்கிற கருத்தை ஏற்காமல் இருக்க இயலாது. முக்கியமாக, திருப்புகழ் பாடல்களில் பல்வேறு இடங்களிலும் பெண்கள் பற்றியும் பெண்களால் தாம் பட்ட அவலங்கள் பற்றியும் ஒழுக்கம் கெட்டவர்களாக ஆண்களை மயக்கும் பெண்களின் அவயவங்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் பற்றியும் பலவாறாகப் பேசுவதால் அவர் பெண்கள் மீது தீராத காமம் கொண்டு அலைந்தார் என்று கருதுவது தவறில்லை என்றே தோன்றும். //
இதற்க்கு எவ்வித அதரமும் இல்லை. அருணகிரிநாத சுவாமிகள் நம்மை போன்றவர்களுக்காக, நம்மை எச்சரிக்கும் வகையில் பாடிஉள்ளர்கள்.
இதை போலவே நம் மாணிக்கவாசக சுவாமிகளும் பல இடங்களில் பாடுகிறார்.
உதரணமாக,
“சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே”
“பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. ”
இதனால் அவர் பெண்கள் மீது காமுறு உற்றார் என கூறலாமா?
அவர்கள் அருளாளர்கள், நமக்காக இப்படி பாடி உள்ளனர்.
சிவ சிவ
அன்பர் மயூரகிரி ஷர்மா அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. தேனினும் இனிய கட்டுரையை வழங்கியமைக்கு தமிழ் கூறு நல்லுலகு முழுதும் தங்கள் போன்றவர்கட்கு கடப்பாடுடைத்து.
நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களும் வழக்கம் போல இனிய மடலை விமரிசனமாக தந்துள்ளார். உங்கள் இருவர் பணியும், மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல முருக பெருமான் அருள் பெருகட்டும்.
பெருமதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அவர்களுக்கு
தங்களின் விரிவான வியாசத்தைக் கண்டு அக மகிழ்கிறேன். தங்களுக்கு நன்றிகள் பல.. தாங்கள் குறிப்பிட்டுக் காட்டிய பல வரிகளும் கட்டுரையில் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டியனவே.. விரிவஞ்சி எழுதாமல் விட்ட மிக முக்கியமான பல திருப்புகழ் திருவடிகளை இங்கு தாங்கள் பதிவிட்டமைக்கு நன்றிகள் கோடி கோடி..
//எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்//
என்ற புகழ் மாலையைப் பார்ப்பவர் இது ஆழ்வார் பாடலோ அல்லது கம்பராமாயணச் செய்யுளோ என்று மயங்குவர்.. ஆனால் இது அருணகிரி வரி என்று அறிந்தார் வியப்பர். தங்களுக்கு மீள மீள நன்றிகள்..
மதிப்பார்ந்த சோமசுந்தரம் அவர்களுக்கு
//இதற்க்கு எவ்வித அதரமும் இல்லை. அருணகிரிநாத சுவாமிகள் நம்மை போன்றவர்களுக்காகஇ நம்மை எச்சரிக்கும் வகையில் பாடிஉள்ளர்கள்.//
தாங்கள் குறிப்பிடுவது போலவும் சிலர் கூறுகின்றனர். எனினும், அருணகிரியார் பெண்களின் உடலை வர்ணிக்கும் அளவுக்கு பிற அருளாளர்கள் வர்ணிக்கவில்லை. அத்துடன் இவரது வர்ணனையில் வர்ணிக்கப்படும்
உடலழகு காட்டி மயக்கும் பெண்கள் எல்லாம் விலை மாதர் ஆகவே, இப்படிச் சொல்ல வேண்டியிருகக்pறது. மாணிக்கவாசகர் போலன்றி அருணகிரியார் இத்தன்மையான கயமை மிக்க பெண்களின் பிடியில் சிக்கிய தன் சொந்த அனுபவத்தையே இங்கு குறிப்பிடுவதாகவே பலரும் கருதுவதால் நானும் இங்கு குறிப்பிட்டேன். ஆனாலும் இது பற்றி இன்னும் சிந்திக்கலாம் என்றே தோன்றுகிறது.
அடுத்து, இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டும். கந்தரனுபூதி அவர் அனுபூதி உயர் நிலையில் பாடியதாகும். ஆகவே, கிளியுருவில் இருந்து பாடியதாக கூறுவது சம்பிரதாயம். அதாவது கிளி, சொன்னதைச் சொல்லும் பழக்கமும் வழக்கமும் உடையது. அது போல முருகன் சொன்னதை நமக்காக கந்தரனுபூதியாக அருணகிரி மாமுனிவர் சொல்லியருக்கிறார் என்பதும் முருகனடியார்களின் நம்பிக்கை.
சர்மா ஐயா, அருணகிரியார் வரலாறு ஆதாரபூர்வமாக முழுமையாக எழுதப் படவில்லை என்று நீங்கள் சொல்வது மிக உண்மை. பல புதிர்கள் உள்ளன. தமிழ் & வரலாற்றுத் துறைகளில் படித்து ஆய்வு செய்யும் மாணவர்கள் கண்டிப்பாக இந்த சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு தேடல்களை செய்யலாம்.
இந்திய அரசு 1975ல் வெளியிட்ட தபால் தலையில் 1375 என்று இருக்கிறது. அவர்கள் 14ம் நூற்றாண்டு என்று கருதியதாகத் தெரிகிறது.
வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமசந்திரன் முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் அருணகிரியார் வங்காளத்தைச் சேர்ந்த கௌட தாந்திரீக சாக்த மரபின் சாதனைகளையும் புரிந்தவர் என்றும் அவரது சமய சமரசப் பார்வைக்கு அதுவே முக்கியக் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இணையத்தில் அக்கட்டுரை இப்போது தேடிக் கிடைக்கவில்லை, எங்காவது ஒளிந்திருக்கும்.. உங்களுக்கு அந்தக் கட்டுரை ஆர்வமளிக்கக் கூடும்.
இன்னொரு கட்டுரையில் அருணகிரியார் தொன்மையான் கௌமார மதஸ்தர்களான குஹ்யகர்கள் (குஹன் அடியார்) என்ற பிரிவினரின் முருக வழிபாட்டு மரபுகள் அறிந்தவர் (அல்லது அம்மரபில் வந்தவர்) என்றும் அவற்றைத் தன் பாடல்களில் இணைத்துப் பாடியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. அந்தக் கட்டுரை இங்கே –
கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
https://www.thinnai.com/?module=displaystory&story_id=60604074&format=print&edition_id=20060407
பிரம்மஸ்ரீ சர்மா அவர்களுக்கு,
கருணைக்கு அருணகிரியென்று உலகம் போற்றுவதற்குக் காரணம் அருணகிரியார் தாமுய்வதற்க்கன்றி திருப்புகழ் ஓதுவோர் அனைவரும் உய்வதற்கான கவி பாடும் ஆற்றலைத் தரும்படி வேண்டுவதாலாகும்.
“அன்பினாலே , ஏனோரும் ஓதுமாறு தீதற
நானாசு பாடி யாடி நாடோறும்
ஈடேறு மாறு ஞான போதகம் —- அன்புறாதோ” (ஆராதகாதல்)
ஓதும் பல் அடியாருங் கதிபெற
யானுன் கழலிணை பெறுவேனோ” (வாதந்)
தாங்கள் கூறியதுபோல் புலவர்புராணம் அருணகிரியார் வரலாராக்க் கூறுவனவெல்லாம் அவருக்குப் புகழ்சேர்க்காப் புனை கதைகளே. பாம்பன்சுவாமிகள் முத்லிய முருகனடியார்கள் அவற்ரைப் புறந்தள்ளினர்.
தமிழும் சமஸ்கிருதமும் அவருடைய பாடல்களில் சகவாழ்வு பெற்றன. ஆயினும் தமிழ்பால் அவருக்கு இருந்த தெய்வபக்தி குறிப்பிடத்தக்கது. முருகனை ‘மாதமிழ்த் த்ரய சேயே” எனத் துதிப்பது அறியத்தக்கது.
சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் எனத்தொடங்கும் பாடலில் செந்தமிழார் பகர் ஆர்வமீ என்ற தொடரைத் தவிர பிறவனைத்தும் வடசொற்களே. ஆயினும் அவை நாவுக்கும் செவிக்கும் நெஞ்சுக்கும் வெறுப்பேற்றவில்லை.
காதிமோதி வாதாடுவதற்கும். ஞாளிபோற் குரைப்பதற்கும் கற்றலைக் கண்டிக்கின்றார்.’ஓதுதமிழ்த் தேரா ருதாவனை’ எனும் திருப்புகழில், ‘நீதி சற்று மிலாகீத நாடனை’ அதாவது ஒழுக்கநெறி இல்லாத இசைப்பாடல்களை விரும்புவோரைக் கோமாள வீணர் என்று கண்டிக்கின்றார்.
அருட்கவி தவத்திரு ஸாதுராம் சுவாமிகள், ‘அருணகிரிநாதர் ஒரு சாக்தரா?’ எனும் தலைப்பில் நீண்டதொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அவருடைய கருத்துப்படி அருணகிரிநாதர் மட்டுமன்றி திருஞான சம்பந்தர் முதலிய பெரியோர்களும் “அந்த: சாக்த: பஹிஸ் சைவ: என்ற கெளலோபநிஷத் கோட்பாடின்படி வாழ்ந்தனர்.
தங்கள் கட்டுரை அருணகிரியாரைப் பலநோக்கில் சிந்திக்க வைத்தது.
திரு கிருஷ்ணகுமார் அவர்களின் மணிப்ரவாள உரைநடையும் சுவையாக இருக்கின்றது.
ஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்
\\\\\\\\\விரிவஞ்சி எழுதாமல் விட்ட மிக முக்கியமான பல திருப்புகழ் திருவடிகளை இங்கு தாங்கள் பதிவிட்டமைக்கு நன்றிகள் கோடி கோடி..\\\\\
ஐயன்மீர், பேசிற்றே பேசலல்லால் என்றபடிக்கு அடியார் பெருமையும் கந்தன் பெருமையும் பேசி மாளாது. மேலும் தங்கள் வ்யாசத்தின் கருப்பொருள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் வரலாறு சம்பந்தமானது. எனவே வ்யாசத்தின் முடிவில் தாங்கள் சொல்லியது போல் சொல்ல வேண்டிய செய்திகள் ஸமுத்ர துல்யம் இருக்கும். சைவம், வைஷ்ணவம், சாக்தம்,வேதாந்தம், நீதி சாஸ்த்ரம், ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் என திருப்புகழில் வள்ளல் பெருமான் சொல்லும் விஷயங்கள் கணக்கிலடங்கா.
திருப்புகழ் என்றவுடன் எனக்கு உடனே நினைவுக்கு வருவது அதில் அமைந்த மிக அரிதான சந்தப்பாடலான திருவெழுகூற்றிருக்கை. http://www.kaumaram.com என்ற தளத்திலிருந்து இப்பாடலை பதிவெடுத்து இணைத்துள்ளேன். ஒன்றிலிருந்து ஏழு எண் வரை ஒரு ரதத்தின் அமைப்பில் ரதபந்தமாக இந்த பாடல் அமைந்துள்ளது. ரதபந்தமாக சந்தத்தின் அமைப்பில் இவ்வரிதான பாடல் எழுதப்ப்ட்டிருப்பதையும் கீழே தமிழன்பர்கள் மற்றும் ஸ்கந்த பக்தர்கள் கண்டு பயனுறலாம். ரதபந்த சித்ரத்தை குறிப்பிட்ட சுட்டியில் கண்டு மகிழலாம்.
தமிழில் சைவ பக்ஷமாக ஒரு அரிதான சந்தத்தில் ஒரு பாடல் எழுதப்பட்டால் அதே சந்தத்தில் வைஷ்ணவ பக்ஷமான பாடலையும் காண இயலும்.
சில வருஷங்கள் முன் நான் கும்பகோண க்ஷேத்ரத்திற்கு சென்றபோது இந்த விஷயத்தை காண நேர்ந்தது.
ஸ்வாமிமலையில் ஸ்வாமிநாதஸ்வாமி தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த திருவேரக ஆலய சுவற்றிலே இந்த திருவெழுகூற்றிருக்கையை அழகான ரதபந்த சித்ரமாக எழுதியிருந்தனர்.
அதேபோல் சார்ங்கபாணிப்பெருமாளை தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த ஆராவமுதனது திருவிண்ணகரத்து சுவற்றிலே இதே போல ரதபந்தமான திருவெழுகூற்றிருக்கையையும் அருகிலே திருநாகேஸ்வரமா அல்லது வேறு சிவாலயமா என்று நினைவிலில்லை இதே போன்று சிவாலயத்திலும் திருவெழுகூற்றிருக்கை பார்த்ததாய் நினைவு உள்ளது.
முனைவர் ஸ்ரீ.முத்துக்குமாரஸ்வாமி மற்றும் ஸ்ரீ.கந்தர்வன் போன்ற சைவ வைஷ்ணவ மரபில் ஆழ்ந்த சான்றோர் இந்த அரிதான பாடல்களை நினைவு கூர்ந்து இத்தளத்தில் பதிக்க வேண்டும் என விக்ஞாபித்துக் கொள்கிறேன்.
இம்மூன்று பாடல்களும் ஒருங்கே பதிக்கப்பெறின் நிஸ்ஸம்சயமாக அவை ரத்னத்ரயமாக ஒளிரும்.
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.
[குறிப்பு:
இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . .
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1
மதிப்பிற்குரிய ஜடாயு மற்றும் முனைவர் மற்றும் கிருஷ்ண குமார் ஆகியவர்களுக்கு மனங்கனிந்த நன்றிகள்..
//தமிழ் & வரலாற்றுத் துறைகளில் படித்து ஆய்வு செய்யும் மாணவர்கள் கண்டிப்பாக இந்த சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு தேடல்களை செய்யலாம்.//
நிச்சயமாக… அருணகிரியார், வள்ளுவர்,ஓளவையார், கம்பர் போன்ற பெரியவர்கள் பேரில் ஏற்றப்பட்ட பொய்யான.. வரலாறு பற்றி நிறையவே ஆய்வு செய்யலாம்.
மேலும் அருணகிரியார் திருவடிவங்கள் எப்போது உருவாக்கப்படலாயின என்றும் தெரியவில்லை. அருணகிரியாரை தாடியோடு காவி கட்டிய முனிவராக சித்தரிக்கிறோம். ஆனால் சில இடங்களில் முக்கியமாக, சென்னை கந்த கோட்டத்திலாக இருக்க வேண்டும் இளமைத்தோற்றமுள்ள அருணகிரியின் திருவுருவம் இரகக்pறது.
சில இடங்களில் அபபர் பெருமானை போலவும் சில இடங்களில் அகத்தியர் போலவும் சில இடங்களில் சுந்தரர் போல அழகராகவும் அவரை சிற்ப வடிவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதனால் பிரச்சினை என்ன என்றால் அருணகிரியாருக்கு ஒரு வடிவம் சிறப்பாகக் கொடக்கப்படவில்லை. இக்குறையும் விரைவில் கழையப்பெற வேண்டும்.
//அருட்கவி தவத்திரு ஸாதுராம் சுவாமிகள்இ ‘அருணகிரிநாதர் ஒரு சாக்தரா?’ எனும் தலைப்பில் நீண்டதொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அவருடைய கருத்துப்படி அருணகிரிநாதர் மட்டுமன்றி திருஞான சம்பந்தர் முதலிய பெரியோர்களும் “அந்த: சாக்த: பஹிஸ் சைவ: என்ற கெளலோபநிஷத் கோட்பாடின்படி வாழ்ந்தனர்.//
இப்படி பலரும் தங்களுக்கு ஏற்ப ஆய்வு செய்யலாம். ஆனாலும் அருணகிரிநாதர் சமரசத்தை உடைய ஒரு நல்ல சைவ சித்தாந்தி என்றே சிறியேன் கருதுகிறேன். இதிலும் தவறிருக்கலாம்.
//சில வருஷங்கள் முன் நான் கும்பகோண க்ஷேத்ரத்திற்கு சென்றபோது இந்த விஷயத்தை காண நேர்ந்தது. ஸ்வாமிமலையில் ஸ்வாமிநாதஸ்வாமி தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த திருவேரக ஆலய சுவற்றிலே இந்த திருவெழுகூற்றிருக்கையை அழகான ரதபந்த சித்ரமாக எழுதியிருந்தனர்.//
ஆம்.. இரு மாதத்திற்கு முன் கும்பகோணம் சென்ற போது ஸ்வாமி மலையில் நானும் இத்திருவெழு கூற்றிருக்கையை கண்டேன். ஆம் அங்கு ரதபந்தமாக இதை அமைத்து நடுவில் ஸ்வாமிநாதப்பெருமானின் சித்திரத்தை அந்த தமிழ்க் கவிரதத்தில் ஏற்றி வைத்திருக்கிற அழகே அழகு..
ஆனால் சாரங்கபாணி சந்நதியில் உத்தர வாசல்- தக்ஷண வாசல் என்பதில் கவனம் செலுத்தி ஆராவமுதனின் அழகில் ஈடுபட்டதால் இதில் கவனம் செலுத்த இயலவில்லை. ஆனால் ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருவெழுகூற்றிருக்கையை அறிவேன். நான் நினைக்கிறேன் நிங்கள் சாரங்கபாணி சந்நதியில் கண்டது திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கையாக இருக்கலாம்.
படிப்பதற்கு அற்புதமாக இருந்தது திருப்புகழில் ஒரு சில பாடல்களை தவிர வேறெதுவும் அறியேன் இது போன்ற பல அறுபுதமான பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தால் என் போன்றவர்களக்கு மிக உபயோகமாக இருக்கும் தேவையில்லாத விஷயங்களை பிரசுரம் செய்யாமல் இது போன்ற அற்புத பாடல்களை வெளியிடலாம்.
//அருணகிரிநாத சுவாமிகள் நம்மை போன்றவர்களுக்காக, நம்மை எச்சரிக்கும் வகையில் பாடிஉள்ளர்கள். – ஸ்ரீ சோமசுந்தரம்//
இதுவே மிகச் சரியான பார்வை என்பது என் கருத்து. பிறரை நல்வழிப் படுத்தும் நோக்கத்துடனும் அதே சமயம் மனம் புண்படாதவாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பரிவினாலும் பிழையைத் தம்மீது சுமத்திக்கொண்டு பேசுதல் பெரியோர் அணுகுமுறை. நம் குடும்பங்களில் கூடப் பெரியவர்கள் சில சமயம் பிறரால் ஏதேனும் பிழை ஏற்பட்டு விட்டால் தவறு என்னுடையதுதான், நான் முன்னதாக கவனித்திருக்க வேண்டும் என்று பழியைத் தம்மீதே போட்டுக்கொள்ளும் பெருந்தன்மையைப் பார்க்கிறோம். ’சரணக் கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ’ என்று தவயோக சிரோன்மணியான அருணகிரி நாதர் பாடுவதிலிருந்தே அவர் நம்மைக் கடிந்துகொண்டு நல்வழிப்படுத்த முற்படுகிறார் என உணர்வதே முறை. காமம் இயற்கையும் தேவையும்கூட, ஆனால் மித மிஞ்சிய காமமும் முறைகேடான காமமும் தீமை விளைவிப்பவை என்பதை உணர்த்தவே ஒரு கோணத்தில் உடல் உறுப்புகளைச் சிறப்பித்தும் மறுகோணத்தில் அருவருப்பூட்டும் விதமாகவும் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். இந்தப் பாரவையே இவ்வகைப் பாடல்களைப் புரிந்துகொள்ள வேண்டிய முறை.. தற்சமயம் சிந்தனையாளர் ராமலிங்கர் என்ற நூலை எழுதி வருகிறேன். வள்ளலார் குறித்துக் கூறப்படும் இத்தகைய குறைபாடுகளுக்கும் நான் இக்கருத்தையே முன்வைத்துள்ளேன்.
-மலர்மன்னன்
ARUNAGRIYAR VALKIAI VARALARU ORU EXAMPLE OF YOUNG GENERATION
//நிங்கள் சாரங்கபாணி சந்நதியில் கண்டது திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கையாக இருக்கலாம்.//
மிகச்சரி. சாரங்கபாணி கோயிலில் அருணகிரிநாதரின் பாடல்களையா எழுதிவைப்பார்கள்?
விராலி மலை பற்றி ஒரு வரி கூட கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் தெறிக்கவில்லை. ஆனால் விராலி மலை படம் போடப்பட்டு இருக்கிறது. இஃது அருணகிரிநாதருக்கு விசேடமான கோயில். இங்குள்ள சுவரில்தான் திருப்புகழ் முழுவதும் கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கோயில்களிலும் உண்டு. எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம். திருச்சிக்கு பக்கத்தில் விராலி மலை. வயலூர், மதுரையிலிருந்து கழுகுமலை. அங்குள்ள கழுகாசலமூர்த்தி (முருகன்); திருச்செந்தூர் அவர் பாடிய பாடல்கள் அக்கோயில்களின் சுவரில் காணலாம்.
அருணகிரிநாதரின் பாடல்களில் மிதமிஞ்சிய வடமொழிக்கலப்பு இருக்கிறது என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது இங்கேயும். ஆனால் அஃது ஏன் என்று ஆராயப்படவில்லை. அவர் வாழ்ந்த காலத்தின் தாக்கம் . அவர் காலத்தில் ஹசால்யர்கள் என்னும் கன்னட அரசர்கள் திருவண்ணாமலை வரை பிடித்துக்கொண்டு ஆட்சி செய்தார்கள். பிரபுட தேவராயன் அவனே. அக்காலத்தில் தமிழ் ஒழிந்துகொண்டது. இலக்கியம் எழுதுவோர் மங்கினர். எஞ்சியவர்கள்அருணகிரிநாதரும் வில்லிபுத்துராழ்வாருமே. சிற்றிலக்கிய காலம். மேலும் படிக்க சதாசிவ பண்டாரத்தாரின் அண்ணமலைப்பல்கலைக்கழக வெளியீடு: தமிழ் இலக்கிய வரலாறு.
அருணகிரிநாதரின் வரலாறு வெளித்தெரியா மர்மம். பலருக்குப் பலவிதமாக. எல்லாருமே அடிச்சுவிடுகிறார்கள் எனலாம்.
எனினும் ஒன்று உறுத்துகிறது. அருணகிரிநாதருக்கு தாழ்குடி பிறப்பிட்டு விடுவார்களோ என்ற பயம்தான். அவரின் வாலிப கால நடத்தையே புனைகதை. சரி அதுவே உண்மையாக இருந்துவிட்டால் என்ன குறைந்துவிடும்?
மாறாக, இப்படி இருந்தவர் இப்படியானார்! அது முருகனின் கருணையப்பரப்புரை செய்கிறதே என்று சிந்திப்பாரில்லை.
இவரைப்பற்றி புனைகதைகள் என்றால் யாது நோக்கம்? அக்கதைக்கள் என்றிலிருந்து தொடங்கியதென்று தெரியாமல் அநாதிகாலம். அக்காலத்தில் இந்து மத எதிர்ப்பாளர்களே இல்லை.
தமிழ்மாணாக்க ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இவர் வாழ்க்கை வரலாற்றை எழுத எந்தவித ஆதாரங்களும் இல. அவரின் பாடல்கள் மட்டுமே. மேலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு தன்னிச்சையான இந்துமத ஆராய்ச்சி சாத்தியமில்லை. பலகலைக்கழகங்கள் ஊக்குவிக்க அஞ்சும்.
வணக்கம் ஐயா,
திருப்புகழ் மற்றும் அருணகிரிநாதர் தொடர்பான தங்களின் கட்டுரைகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் திருப்புகழில் முனைவர் பட்ட ஆய்வினை செய்ய தொடங்கி உள்ளேன். அதற்கு தங்களின் அனுபவமும் , ஆலோசனையும் தருமாறு வேண்டுகிறேன்.
மிக அருமையான பதிவு…..மிக்க நன்றி ஐயா!
When did Arunagiri Swamigal attain mukthi?
சரணக் கமலாலயத்தில்
அனைத்தும் அடங்கிவிடுகிறது….
அரை நிமிட தவமுறை தியானத்தில்
அருணகிரிநாதரின் முருகத் தத்துவம்….
நாவில் சரவணபவ மந்திரம்….
கமலாலயத்தில் சரணம்…
வாசியோகமெனும் தவமுறை தியானம்…
இந்த உடலில் மறைந்திருக்கிறது
முருகன் எனும் தியான தத்துவம்…
திருப்புகழைப் பாடப் பாட
கோபுர வாசல் எனும் வாய் மணக்கும்…
உள்ளமும் ஊனுடம்பும் சீவனும் கள்ளப் புலன்களும் அதிர்வலைகளால் கந்தமாகும்…காந்தமாகும்…தச வாயுக்களும் தச நாடிகளும் வெட்டவெளியில் இறையதிர்வுடன் இனிதே கலந்து திருவெழுகூற்றிருக்கை வடிவில் இவ்வுடல் தியானத் தேராகி சமாதி நிலையில் ஒடுங்கும்….அருணகிரிநாதரின் சந்தங்களை சொந்தமாக்கினால் தேகம் முருகனாகும்….
சரவணபவ….
திருவெழுகூற்றிருக்கை….
நன்றியுடன் நான்…