பிப்ரவரி 14, 2012. செவ்வாய்க் கிழமை. டி.பி. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை.
அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு ஒரு சிறிய நிகழ்ச்சி நடத்துவற்கு சில அமைப்புகள் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். அனுமதி மறுக்கப் பட்டு, நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப் பட்டது.
தடையை மீறி மக்கள் அங்கு குழுமினர். சிலரது கைகளில் அகல் விளக்குகள். சிலர் கைகளில் கறுப்பு வாசகங்களுடன் சிறிய அட்டைகள். எல்லார் முகங்களிலும் கவிந்திருந்த சோகம்.
அவர்கள் குழுமியிருந்தது அரசியல் ஊர்வலத்திற்கோ ஆர்ப்பாட்டம் செய்யவோ அல்ல. அமைதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக. ஆம், இதே சாலையில் உள்ள கே.ஆர்.எஸ் பேக்கரி முன்பு தான் 1998ம் ஆண்டு பிப்-14 அன்று குண்டுகள் வெடித்து அப்பாவி உயிர்களைக் காவு கொண்டன. பாஜக தலைவர் அத்வானியைக் கொல்லத் திட்டம் தீட்டி இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய அந்த வெறியாட்டத்தில் 80 உயிர்கள் குரூரமாக பலியாயின.

கோவை நகரின் வரலாற்றில் இருள் கவிந்த இந்த கருப்பு தினத்தை, அமைதி வேண்டி மலர் தூவி, விளக்கேற்றி தங்கள் நினைவில் கடந்து செல்ல விரும்பினர் நகரக் குடிமக்கள் சிலர். ஆர்.எஸ்.புரத்தில் குழுமிய 400க்கு மேற்பட்ட இத்தகைய அப்பாவி மக்களைத் தான் காவல் துறை கைது செய்தது.
பேரூர் பகுதியில் பலர் தலையை மொட்டையடித்து, நொய்யல் ஆற்றங்கரையில் நீர்க்கடன் செய்து அஞ்சலி செலுத்தினர். மேட்டுப் பாளையத்திலும் ஒரு சிறிய நிகழ்ச்சி நடந்தது.
1998 குண்டுவெடிப்பில் திமுக தமிழர்களும், இடது சாரி தமிழர்களும், எந்தக் கட்சியும் சாராத அப்பாவி தமிழர்களும் கூட மரணமடைந்தனர். ஆனால் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பொதுமக்களுடன் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ்.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவ சேனா, அனுமன் சேனை, விவேகானந்தர் நற்பணி மன்றம் ஆகிய இந்து அமைப்புகளின் தொண்டர்கள் மட்டுமே பெருவாரியாக கலந்து கொண்டனர். கைதானவர்களும் அவர்களே.
வலைப்பதிவர் பகுத்தறிவு கேட்கிறார்:
எல்லை தாண்டி செத்துப் போன தமிழர்களுக்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதி மூக்கு சிந்தி அழுபவர்கள் சொந்த மாநிலத்தில் சிதறிப் போன தமிழர்களை நினைவில் கூட வைக்காமல் போவதேன்?
நியாயமான கேள்வி. பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் குமுறல்களும், கதறல்களும் அடங்கிய வீடியோ காட்சிகளையும் அவர் இணைத்திருக்கிறார்.
1998 குண்டுவெடிப்பில் மரணித்தவர்கள் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எழுப்பியுள்ளனர்.
மிகவும் நியாயமான கோரிக்கை. இந்த நினைவுச் சின்னம், பயங்கரவாதத்தின் கோர முகத்தையும், அதனுடன் போராடி அதை வேரோடு களையும் மன உறுதியையும் என்றென்றும் தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்.
இந்த நினைவுச் சின்ன கோரிக்கைக்கு தமிழ்ஹிந்து தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. தமிழகம் முழுவதும் இதற்கான ஆதரவு திரள வேண்டும். அரசு இந்தக் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். உலகில் பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட ஒவ்வொரு நகரத்திலும் இத்தகைய நினைவுச் சின்னங்கள் உள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
நல்ல வேளை, இணையத்தில் போலி மதச்சார்பின்மை அரசியலின் வல்லாதிக்கம் இல்லை. அதனால் வலைத்தளத்தின் பேனரிலாவது தமிழ்ஹிந்து தனது சோகத்தை வெளிப்படுத்த முடிகிறது.
//
நல்ல வேளை, இணையத்தில் போலி மதச்சார்பின்மை அரசியலின் வல்லாதிக்கம் இல்லை. அதனால் வலைத்தளத்தின் பேனரிலாவது தமிழ்ஹிந்து தனது சோகத்தை வெளிப்படுத்த முடிகிறது.
//
இன்னும் கொஞ்ச காலம் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் இணையத்தையும் முடக்கி விடக் கூடும்…
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடதாட் செயின் என்ற வள்ளுவர் மொழிக்கிணங்க நினைவு சின்னம் வைபதட்கும் ஒரு நேரம் வரும் ..