நீலக் கடல் சூழ்ந்த குமரி முனையில் அதற்கிணையாக காவிக் கடலும் ஆர்ப்பரித்தது, சென்ற ஞாயிற்றுக் கிழமை (பிப்-13). ஆம், 70,000 மக்கள் பங்கு கொண்ட மாபெரும் இந்து சங்கமம் நிகழ்ச்சி அப்படித் தான் இருந்தது! மகேந்திர கிரி மலைத்தொடர்கள் பின்னணியில் கம்பீரமாக ஆசி வழங்க, சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் 16,000 பேர் அணிவகுத்து நின்றனர்.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டை வரவேற்கு முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் வெற்றி கரமாக நடந்து முடிந்தது. சங்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் ஜி, முன்னாள் நீதிபதி அரு.ராமலிங்கம் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆயிரமாயிரம் குரல்களிலிருந்து ஒத்திசைவுடன் எழுந்த ‘இந்த யுகம் இந்து யுகம்’ என்ற பாடல், இந்து எழுச்சியின் சங்கநாதமாக முழங்கி எதிரொலித்தது. நிகழ்ச்சி குறித்து சுவையான பதிவுகளையும் புகைப்படங்களையும் ஹிந்து சங்க செய்தி தளத்தில் காணலாம்.
தென் தமிழகத்திலிருந்து இன்னொரு செய்தி. உத்தப் புரத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சாதி பிரசினைக்கு சில மாதங்கள் முன்பு இந்து இயக்கங்களின் பெருமுயற்சியால் நிரந்தர தீர்வு ஏற்பட்டது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து தலித் சமுதாய மக்களை முத்தாலம்மன் கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களுமே கூடி வரவேற்று வழிபடச் செய்தனர். இதன் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரும் இந்த சாதி மோதல் தொடர்பாக தாங்கள் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த சமரச முயற்சியின் விளைவாக, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக அமைதியுடன் இணைந்து வாழ அம்மன் அருள் புரியட்டும்!
இணைப்பு என்பது பல விஷயங்களில் சாத்தியம், ஆனால் எல்லா விஷயங்களிலும் அல்ல. பொதுவாக கலைத் துறையையும் அறிவியல் துறையையும் இணைப்பது பிரம்ம பிரயத்தனமான விஷயம். ஆனால் கலை-அறிவியல்-சூழலியல் மூன்றையும் இணைத்திருக்கிறார் சுபத்ரா சுப்பிரமணியம் என்ற நடனக் கலைஞர். ஹிந்துக்களின் பழமையான ஆடல் கலையான பரதநாட்டியத்தையும், பிற நடன மரபு வடிவங்களையும் இணைத்து தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நடனநிகழ்வை இவர் உருவாக்கியுள்ளார். நடனத்தின் பெயர் Elixir (அமுத நீர்). ஆர்ட்டிக் ப்னிப்பாறைகள் முதல் ஹிந்து கோவில்களின் தெப்பகுளங்கள் வரை நீர்வளம் குறைவது குறித்து உணர்ந்த சுபத்ரா, பல ஐரோப்பிய பல்கலைக் கழகங்களிலும் முக்கிய நாடக மேடைகளிலும் தனது நடனத்தை அரங்கேற்ற, அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரத்தின் நியூ சயிண்டிஸ்ட் பத்திரிகை இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பிரசுரித்துள்ளது.
ஆனால் இந்தியா தன்னைச் சுற்றி நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளைக் கூட கவனிக்காமல் மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அருகில் உள்ள இஸ்லாமிய நாடு “மாலத் தீவுகள்”. இங்கு சமீபகாலமாக நடந்து வரும் அரசியல் “கிளர்ச்சியின்” ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சென்ற வாரம் ஒரு இஸ்லாமிய கும்பல் தலைநகர் மாஹேவில் உள்ள அருங்காட்சியகத்துக்குள் புகுந்து அங்கிருந்த புராதன இந்து, பௌத்த சிலைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டார்களாம். கலவரம் முடிந்த பின் திரும்பி வந்த அருங்காட்சியக காப்பாளர் 99% சிலைகள் காலி என்கிறார். சோமநாதபுரம் முதல் பாமியான் புத்தர்கள் வரை உலகின் கலைச்சின்னங்களைத் தகர்த்து ஒழித்த இஸ்லாமிய மதவெறியின் இந்த சமீபத்திய வெறியாட்டம் இந்திய அரசால் கண்டுகொள்ளப் படவே இல்லை. ஒரு உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப் பட்டு வந்த இந்த சின்ன தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து எவ்வளவு மோசமான பரிணாமத்தை எட்டியுள்ளது என்று நினைக்க பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
கர்நாடகத்தில் உடுப்பிக்கு அருகில் கடற்புறத்தில் உள்ளது செயின்ட் மேரீஸ் தீவு (St Mary’s Island). இதனை பரசுராம க்ஷேத்திரமாக அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். சமீபத்தில் கர்நாடக சட்டசபையைக் கலக்கிய காட்சிகள் குறித்து விசாரிக்கும போது இந்தத் தீவில் சில நாட்கள் முன்பு ஆபாச நடனப் பார்ட்டி நடத்தப் பட்டது தெரிய வந்தது. பரசுராம க்ஷேத்திரத்தின் புனிதம் கெட்டு விட்டது என்று சொல்லி, அதற்கு பரிகாரமாக வைதீக முறைப்படி ஹோமங்களை ஒரு குழு பெரிய அளவில் ஏற்பாடு செய்து நடத்தியது. ஹோமம் நடத்திய பார்ட்டி யார் தெரியுமா? உடுப்பி இளைஞர் காங்கிரஸ்!
சென்னைக்கு அருகில் மீஞ்சூரில் உள்ளது செயின்ட் மேரீஸ் பள்ளி. இப்பள்ளி நிர்வாகிகளை பிப்-14 அன்று காவல் துறையினர் கைது செய்தனர். காரணம்? பள்ளி ஆண்டு விழாவில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தி நாடகம் போட்டார்களாம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்து பெற்றோர்கள் இதைப் பார்த்து மனம் புண்பட்டு போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். தினத்தந்தி 14-2-2012 இதழ் தலையங்கத்தில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதி. பள்ளிகளில் கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்வது சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி கண்டித்துள்ளது. தினத்தந்திக்கு நமது பாராட்டுக்கள்!
இன்னொரு விஷயமும் கேள்விப் பட்டோம் – விழாவுக்கு சென்றவர்கள் கையோடு காமிரா எடுத்துச் சென்று நாடகத்தை பதிவு செய்திருந்தார்களாம். அதுவும் காவல் துறையின் பார்வைக்குக் கொண்டு செல்லப் பட்டது. அதன் பேரிலேயே இந்த நடவடிக்கை என்று கூறப் படுகிறது. சபாஷ் மீஞ்சூர் மக்களே! உங்கள் விழிப்புணர்வு தமிழகம் எங்கும் தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களிடம் பரவட்டும்!
இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது, அதை எப்படியாவது அடக்கி ஒடுக்குவதே போலி மதசார்பின்மை அரசியல் சக்திகளின் வாடிக்கை. மேற்கு வங்கத்தில் மக்களின் ஆதரவை பரவலாக பெற்று வளர்ந்து வரும் ஒரு அமைப்பு “ஹிந்து ஸம்ஹதி”. பங்களாதேஷில் இருந்து இஸ்லாமிய ஊடுருவல், மார்க்சிய அரசியலால் வங்கத்தின் இந்துப் பண்பாடு சிதைவது ஆகிய பிரசினைகளை முன்வைத்து பணியாற்றி வருகிறது இந்த அமைப்பு. பிப்-14 அன்று இந்த அமைப்பின் நான்காவது நிறுவன நாள் விழாவை நடத்துவதற்கு நீதி மன்றம் அளித்த அனுமதி உத்தரவை மீறி, ஆளும் கட்சியினரும், கல்கத்தா காவல் துறையும் அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை நடத்த விடாமல் இடையூறு செய்யத் தொடங்கினர். 15,000 மக்கள் அங்கு கூடியிருந்ததால், மக்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதலும் நிகழ்ந்தது. வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர் அதன் தொண்டர்கள். ஹிந்து ஸம்ஹதியின் தலைவர் தபன் கோஷ் அராஜகமான முறையில் கைது செய்யப் பட்டுள்ளார். ராமகிருஷ்ண மடத் துறவியர் உட்பட பல சமூகத் தலைவர்கள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீஅரவிந்தரின், விவேகானந்தரின், நேதாஜியின் பூமியில் இந்து உணர்வு மீண்டும் பொங்கி எழுந்து வருகிறது!
(வாரா வாரம் வரும்)
i love you tamil hindu by vetrivel,perur