அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
என்று பாடினார் பாரதி. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, 5000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் சக்தி படைத்த அக்னி-5 அதி நவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக இந்தியா நேற்று நடத்தி முடித்தது. விண்ணில் ஏவப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், வெண்புகையைக் கக்கியபடி சீறிப்பாய்ந்த அக்னி-5, முன் கூட்டியே திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. அதி நவீன அறிவியல் தொழில்நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா இதன் மூலம் நிரூபித்து விட்டது. இந்த வெற்றிக்குப் பின் உள்ள இந்திய இராணுவ ஆராய்ச்சிக் கழக அறிவியலாளர்களின் நிபுணத்துவமும் அயராத உழைப்பும், அவர்களுக்கு ஊக்கமளித்த உயரதிகாரிகளின் செயல்பாடும், ஒட்டுமொத்த இந்திய இராணுவ நிர்வாக அமைப்பின் செயல்திறமும் பாராட்டுக்குரியவை, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படும் வகையில் இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்தினை அவர்கள் உருவாக்கி அளித்துள்ளனர்.
விண்ணில் அக்னி-5 சீறிப்பாய்ந்த காட்சி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் மாபெரும் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் எழுப்பியது நிஜம். சீனாவில் உள்ள எந்தப் பகுதியையும், இந்த ஏவுகணை மூலம் இந்தியாவில் இருந்து தாக்க முடியும் என்பது சாத்தியப் பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் இந்தியாவின் இந்த வெற்றியை அக்காந்து பார்க்க ஆரம்பித்துள்ளது. மேற்குலக நாடுகள் இந்தியாவின் வெற்றியைப் பாராட்டி, இந்தியா எப்போதும் தற்காப்புக்காகவே ஆயுதங்களை உருவாக்குகிறதே அன்றி மற்றவர்களைத் தாக்குவதற்காக அல்ல என்ற உண்மையை தயக்கமில்லாமல் சொல்லி நற்சான்றிதழ் வழங்கியுள்ளன. சீன அரசாங்கம் இந்தச் செய்தி குறித்து விமர்சனம் ஏதும் செய்யாமல் அடக்கி வாசித்து, இரு நாடுகளுக்குமிடையில் எந்த ஆயுதப் போட்டியும் கிடையாது என்று இந்திய-சீன நட்புறவு கீதத்தைப் பாடியுள்ளது. சீன ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இந்தியாவின் ஏவுகணை 5000 கிமீ. தூரம் தான் போகும், சீனாவுடையது 20000 கிமீ. வரை போகும், எனவே இந்தியாவுடையது ஒன்றும் பெரிய சாதனை அல்ல என்று கெக்கலித்துள்ளன.
இந்திய ஊடகங்கள் பெரும்பான்மையாக இந்த வெற்றியை தேசிய பெருமிதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஊடாக, ஒரு சில அதீத சமூக அக்கறையும், மக்கள் நலமும் பீறிடுவதாகத் தங்களைக் கருதிக் கொள்வோரின் குரல்கள் ஏழை நாடான இந்தியாவுக்கு இதெல்லாம் அவசியமா என்று தங்கள் வழக்கமான பல்லவியைப் பாடத் தொடங்கியுள்ளன. சீனா மிகவும் நல்மனம் கொண்ட நாடு என்றும் அதன் ஆயுத வளர்ச்சி கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை என்றும் இவர்கள் உபதேசம் வேறு செய்கின்றனர். இத்தகைய போலிக் குரல்களை உதாசீனப் படுத்துவதே இந்தியா உருப்படுவதற்கான வழி. ‘சக்திமானையே மற்ற சக்திமான்கள் மதிப்பார்கள், கோழைகளை அல்ல’ என்பதை தொடர்ச்சியாக கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் முதல் கார்கில் போர் வரை நமக்கு உணர்த்தி வந்துள்ளன. வரலாறு கற்பித்த அந்தப் பாடங்களை நாம் மறக்காமலிருந்தால் தான் நமது சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும்.
வரலாறும் கலாசாரமும் திட்டமிட்டுத் திரிக்கப் பட்டு மக்கள் மனதில் அதைப் பதியவைக்க விஷமத் தனமான முயற்சிகளை ஒரு அரசே செய்யுமானால், சுயபிரக்ஞை கொண்ட ஒரு சமுதாயம் எப்படியும் அந்த முயற்சியை உடைத்தெறிந்து விடும். தமிழ்நாட்டுத் தமிழர் சமுதாயம் அந்த விஷயத்தில் உண்மையிலேயே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். கடந்த திமுக ஆட்சியில் அராஜகமாக தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு மாற்றப் பட்டு, அந்த கலாசார ஒழிப்பு செயல்பாடு அரசின் முழு ஆசியுடன் ஆரம்பித்தது. ஆனால் ஆட்சி மாற்றம் இந்த வரலாற்றுத் தவறைத் திருத்தி விட்டது. ஏப்ரல்-13 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமை வகிக்க, தமிழக அரசே மிகச் சிறப்பாக இந்த முறை தமிழ்ப் புத்தாண்டு விழாவை அமோகமாகக் கொண்டாடி மகிழ்ந்தது. விழாவில் பேசிய செல்வி ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு சித்திரையே என்பதற்கான பற்பல வரலாற்று, இலக்கிய, சோதிட, கல்வெட்டு ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்துப் பேசி பிரமிக்க வைத்தார். தனது அரசு ஏன் தமிழ்ப் புத்தாண்டு குறித்த முந்தைய அரசின் திரிபை முனைந்து சரி செய்தது என்பதற்கு அவர் அளித்த காரணங்களும் அருமையாக இருந்தன.
தங்கள் கட்சித் தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தும் பழைய திமுக அரசு போலன்றி, இவ்வருடம் சங்கப் புலவர் கபிலர், தமிழ்ப் பாட்டி ஔவை, தமிழ்த் தாத்தா உ.வே.சா என்று தமிழ் இலக்கிய தீபங்களின் பெயரில் தமிழக அரசு விருதுகள் அறிவித்திருக்கிறது. சந்தோஷம். இந்த விருதுகள் வழக்கம் போல அல்லாமல், உண்மையிலேயே தமிழ்த் தொண்டாற்றி தமிழ் ஆய்வுகளில் பங்களிப்போர்க்கும் வழங்கப் பட்டால் தான் அவற்றின் நோக்கம் நிறைவேறும். அதுவும் நடக்கும் என்று எதிர்பார்ப்போம். இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்! இதோடு நிறுத்தி விடாமல், தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களும், கலைச்சின்னங்களும் பல்வேறு வகையான சிதைப்புகளுக்கும், அழிவுகளுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாவதிலிருந்து காப்பதற்கு அவரது அரசு சீரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சென்னை தாம்பரத்திற்கு அருகில் உள்ள மதனபுரம் என்ற சிற்றூரில் பல காலமாக சீர்கெட்டுக் கிடந்த குளத்தை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர் குழுவினர் பாடுபட்டு நாள் முழுவதும் உழைத்துத் தூர்வாரினர். தாய்மார்கள், பள்ளிச் சிறார்கள் என்று பலரும் இடம் பெற்றிருந்த இந்தக் குழுவில் அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த 42 மாலுமிகளும் அடக்கம்! அவர்களது வழக்கமான பயணத்தின் ஒரு பகுதியாக சென்னையில் கரைதட்டிய கப்பலில் இருந்த மாலுமிகள் இப்படி ஒரு தன்னார்வ பணியில் ஈடுபட்டது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நமது வேலை மற்றும் பிற பணிகளுக்கிடையே வருடத்தில் ஒன்றிரண்டு நாட்களாகவது முழுமையாக சமூகப் பணிகளும் சுற்றுச் சூழல் பணிகளும் செய்ய வேண்டும் என்பதை இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.
கல்வி நிலையங்கள் மாணவர்கள் மனதில் தேசிய உணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்று தான் எல்லாரும் எதிர்பார்க்கிறோம். ஆனால் சில பள்ளிகள் வேண்டுமென்றே இதனைக் குலைக்கின்றன. சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி ஒன்றில், பிரார்த்தனை நேரத்தின் போது அபிராமி என்ற பள்ளி ஆசிரியை இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் மூன்றிலும் இருந்து பிரார்த்தனைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பிரார்த்தனைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மற்ற ஆசிரியர்கள் ஒலிபெருக்கியை அணைத்து விட்டனர். பிரார்த்தனையை நிறுத்த ஆணையிட்டனர். பிறகு அந்த ஆசிரியை மாணவர்களிடம் கடுமையாக நடந்தார் என்றும் பள்ளி விதிகளை மதிக்கவில்லை என்றும் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை சஸ்பென்ட் செய்தார் பள்ளித் தலைமை ஆசிரியை. இதனை எதிர்த்து இந்து முன்னணி பள்ளீ நிர்வாகத்திற்கு எதிராக போராட்டமும் செய்தது.
இந்த சம்பவம் மூலம் இந்தப் பள்ளி பல்லாண்டுகளாக முழுமையாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்டேட் பேங்கில் பணிபுரியும் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் தான் பல ஊர்களில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகள் நடத்தப் படுகிறன்றன. ஆனால் இவற்றில் முதலில் உட்புகுந்த சில கிறீஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேன்டும் என்பதை ஒரு எழுதப் படாத விதிபோல ஆக்கி விட்டிருந்தனர். இந்த சம்பவம் அங்கு படிக்கும இந்து மாணவர்கள், பணிபுரியும் இந்து பணியாளர்கள் ஆகியோரது பல நாள் உள்ளக் குமுறலை வெளிக் கொண்டு வந்துள்ளது. கிறிஸ்தவர்கள் தாங்கள் புகும் எல்லா நிறுவனங்களிலும் கிறிஸ்தவ மதப்பிரசாரத்தை நுழைக்கவும், நாளடைவில் அந்த நிறுவனத்தையே கைப்பற்றவும் திட்டமிடுகிறார்கள் என்பதை இத்தகைய செய்திகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
இன்னொரு தினமலர் செய்தி: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த குருசாமி என்பவரது குடும்பத்தை இரண்டு ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தனர் அங்குள்ள கிராம பஞ்சாயத்தினர். இதனால் விரக்தியடைந்த அவரது மகன் சமீபத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறினார். சொந்த கிராமத்தில் திருமணம் நடத்தாமல் வெளியூரில் நடத்தியதற்கு அபராதமாக, தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், இது குறித்து தமிழக முதல்வர் உட்பட பலருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் தன் மகன் மனமுடைந்து முஸ்லிமாக மாறியதாக குருசாமி கூறுகிறார். ஆனால் திருட்டுக்காகத் தான் அபராதம் விதிக்கப் பட்டது என்று ஊர்மக்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர். தமிழக அரசு இதனை விசாரித்து, உண்மையில் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.
சாதிய கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் மீறி ஒடுக்கப் படுவோர் தங்கள் வாழ்க்கையில் முன்னேற அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் செய்து தர வேன்டியது அரசின் கடமை. தலித்துகள் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் இதுவரை அரசையே நம்பி இருந்தனர். இதனால், அவர்கள் தொழில் தொடங்குவதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. தற்போது தலித்துகள் தொழில் தொடங்குவதற்கு பண உதவி செய்வதற்கென்றே, அரசு ஆதரவுடன் தலித் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பானது, புதிதாக “தலித் வர்த்தக உதவி நிதி’யை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக 35 தலித் தொழிலதிபர்கள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மேன்மேலும் தலித் தொழில் முனைவோர் உருவாக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அரசு பல நூறு கோடி ரூபாய்களை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவது அதன் கடமை. ஆனால் தனது மிகச் சொற்ப வருமானத்திலும் ஒரு பகுதியை மக்கள் நலனுக்காக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செலவழிக்கும் தர்மசிந்தை கொண்ட மக்கள் இன்னும் இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறார்கள்.
தனது வீட்டருகில் உள்ள பேருந்து நிலையத்தில் மக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காகக் காத்திருக்கும்போது கஷ்டப் படுவதை கவனித்து, தன் சொந்த செலவில் கூரை போட்டுள்ளார் ஹைதராபாத்தில் உள்ள சீனிவாசாச்சார்யுலு என்ற கோயில் அர்ச்சகர். இவரது அமைதியான பணியை கவனித்த சிலர் தாங்களே நன்கொடை தந்து இன்னும் பல பேருந்து நிறுத்தங்களிலும் இதே போன்று அமைக்க அவரை வேண்டியுள்ளனர். கோயில் வேலை ஒழிந்த நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வியும் கற்றுத் தருகிறார் இந்த ‘கூரை குருக்கள்’ !
தனது சமய அனுஷ்டானத்தை அமைதியாக செய்து வரும் கோயில் குருக்களை சமூக விரோதி போலவும், மதமாற்றங்களையும் பல்வேறு அடாவடிகளையும் பாலியல் அத்துமீறல்களையும் வழக்கமாக செய்து வரும் பாதிரியார்களை ஏதோ தூய்மையின், சேவையின் அடையாளமாகவும் சித்தரிக்கும் ஊடகங்களுக்காக இன்னொரு செய்தி –
விழுப்புரம் :விழுப்புரம் அருகே மதமாற்றம் செய்ய முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கோலியனூர் கிழக்கு பாண்டிரோடு, சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஜான் உதயகுமார், 38. இவர் விழுப்புரம் அருகே உள்ள சமத்துவபுரம் சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். 14ம் தேதி காலை அதே பகுதியைச் சேர்ந்த சுமதி, 30 என்பவரை சர்ச்சிற்கு அழைத்துள்ளார். வர மறுத்ததால் திட்டி, தடியால் தாக்கியுள்ளார்.அவர் மதம்மாற்றம் செய்ய முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஜான் உதயகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கோலியனூர் மக்களுக்கும், காவல்துறைக்கும் நமது பாராட்டுக்கள்.
கர்நாடகத்தில் உடுப்பி பகுதியில் சில கோயில்களில் மடே ஸ்னானம் என்ற சடங்கு கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. வைதீக பிராமணர்களுக்கு அன்னமிட்டு, அவர்கள் உண்டு முடித்தவுடன் அந்த எச்சில் இலைகளில் புரள்வதை ஒரு வகை வேண்டுதலாக அந்தப் பகுதி மக்கள் கடைப்பிடிக்கின்றனர். இதை யாரும் கட்டாயப் படுத்துவதில்லை, அம்மக்கள் தாமாக செய்கின்றனர். ஆயினும், சமூக ரீதியாக இழிவான இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சில மாதங்கள் முன்பு மாணர்கள் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புகளும் சமூக நல்லிணகத்திற்கு ஒவ்வாத இத்தகைய சடங்குகளைக் கைவிட வேண்டும் என்று கோரின. சமீபத்தில் கர்நாடகத்தின் பல மடங்களைச் சேர்ந்த 100 இந்து சாமியார்கள் சமீபத்தில் பெங்களூரில் கூடிய ஒரு கூட்டத்தில் மடே ஸ்னானம் சடங்கு தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்து சமூகத்தில் உள்ள பல்வேறு மூட நம்பிக்கைகளும் களையப் பட வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் துணை அட்டர்னி ஜர்னல் ஜெனரல் முஹம்மத் குர்ஷித் கான் சமீபத்தில் தில்லியில் சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் அடிக்கடி காணப்பட்டார். அங்கு வரும் பக்தர்களின் செருப்புகளைத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தார். காரணம்? 2010ம் ஆண்டு தாலிபான்கள் சீக்கியர்களின் கழுத்தை அறுத்து குரூரமாகக் கொலை செய்வது பற்றிய செய்திகளைப் படித்து மனம் பதறிய கான், பின்னர் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவராகி விட்டார். அந்தப் படுகொலைகளுக்கு பிராயச்சித்தமாகவே குருத்வாராவில் கைங்கரியம் செய்கிறாராம். இஸ்லாமிய மதவெறியும் அடிப்படைவாதமும் வன்முறையும் கோலொச்சும் பாகிஸ்தானில் கூட மனிதம் மறக்காத சில நெஞ்சங்கள் உண்டு என்று நிரூபித்திருக்கார் கான். வாழ்க!
இந்திய அரசு நிறைவேற்ற எண்ணியுள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு அளிக்கப் படும் என்று மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார். இவை மதக்கல்வி போதிக்கும் நிறுவனங்கள் என்பதால் மற்ற பள்ளிகளுக்கான விதிமுறைகள் இவற்றிற்குப் பொருந்தாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இது பற்றி என்ன நினைக்கிறார் என்று மேலே பறந்து கொண்டிருந்த பட்சிராஜனைக் கேட்டோம்.
‘ஹிந்துத்துவர்கள் இதை எதிர்க்க வேண்டும்’ என்றார். ஆச்சரியப் பட்டு ‘ஏன்’ என்றோம்.
புள்ளரசன் சொல்கிறார் – “யோசித்துப் பார். இதன் மூலம் கபில்சிபல் செய்ய விரும்புவது என்ன ? மதராசாக்களில் வேறு மதத்தவர்கள் கல்வி உரிமைகோரி வந்துவிடக்கூடாது. அப்படி உரிமை கோரினால், அரசாங்கம் தலையிட வேண்டி வரும். முஸ்லிம்கள் அரசாங்கத்தில் தலையிடலாம், ஆனால் அரசாங்கம் முஸ்லிம்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்பது நேருவிய-செக்யூலரிசம். ஆகவே, அந்தச் சட்டம்.
அதே போல, இந்துக்களில் அனைத்துப் பிரிவினரும் வேதக் கல்விக்கு உரிமை கோரி விடக்கூடாது எனும் சட்டம். வேதக் கல்வி பரவி விடக் கூடாது என்ற நல்லெண்ணம். இந்து மதத்துக் காரர்களே ஒதுக்கும் ஒன்றில் மற்ற மதத்தவர்கள் வந்து படிக்கப் போவதில்லை. அத்துடன், அரசாங்கத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத அமைப்புக்களாக அவற்றை நட்டாற்றில் விடவேண்டும்.
ஒரே சட்டத்தில் பல மாங்கய்கள்.”
சோனியா ஆட்டுவிக்கும் காங்கிரஸ் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது என்றால் அதை மிகவும் உன்னிப்பாகக் கழுகுக் கண் கொண்டு பார்க்கவேண்டும் என்பது சரிதான். ஏனென்றால் காங்கிரஸ் உண்மையிலேயே வினோதமான உள்முரண்கள் கொண்ட ஒரு கட்சி. ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டிக்கு எதிராக தீவிரமாக காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. “ஜகன்மோகன் கிறிஸ்தவர். அவர் ரெட்டியே அல்ல, அவரது குடும்பம் போன தலைமுறையிலேயே கிறிஸ்தவத்துக்கு மாறி ரெட்டிகளின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு விட்டது. எனவே அவரை ரெட்டிகள் ஆதரிக்கக் கூடாது” என்று பிரசாரம் செய்வது பாஜக காரகள் அல்ல, ஆந்திர காங்கிரஸ் தலைவர் திவாகர் ரெட்டி. சபாஷ்! உள்ளூர் ரெட்டி கிறிஸ்தவராவதே தன் சமூக கலாசாரத்திற்கு அழிவு என்று நினைப்பவர்கள் ஏன் இத்தாலிய கத்தோலிக்கரான சோனியா தங்களை அடக்கியாள்வதற்கு அனுமதிக்கிறார்கள்? என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்.
மதுரையில் வரும் ஏப்ரல் 28-29 தேதிகளில் தாமரை சங்கமம் என்ற மாபெரும் மாநில மாநாட்டை நடத்த தமிழக பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு, ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. “இந்த மாநாட்டில் நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்ற கட்சிகளையும், எங்கள் கட்சியின் தேசிய தலைமையும் கூட அசர வைக்கும்” என்று பெருமிதப் படுகின்றனர் ஏற்பாட்டில் களமிறங்கியுள்ள கட்சி உறுப்பினர்கள். வழக்கமான மாநாடு போல் இல்லாமல், வெளி மாநில பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி, சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலான மாதிரி வீடு, ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ள பொருட்களை குறைந்த விலையில் விற்கும் ஏற்பாடு என, பல புதிய விஷயங்கள் இந்த மாநாட்டில் இடம் பெறவுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டின் ஒரு பகுதியாக ‘தமிழ்த்தாய் யாத்திரை’ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாநாட்டுக்காக இணையதளம் ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது. பாஜகவின் இந்த மாபெரும் மாநாட்டை வேண்டுமென்றே தமிழக ஊடகங்கள் புறக்கணித்து இருட்டடிப்பு செய்கின்றன. தினமலர் மட்டுமே தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடுகிறது. தமிழ் ஊடகங்களின் இந்த அரசியல் தீண்டாமை ஆரோக்கியமானதல்ல.
இரு கழகங்களின் தோளில் சவாரி செய்வதே கடன் என்று இல்லாமல், தமிழகத்தில் தனிக்கட்சியாக காலூன்றி பா.ஜ.க. வளர்வது அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக, பண்பாட்டு நோக்கிலும் மிக முக்கியமானது. மதுரை மாநாடு பெரும் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு கபிலர் விருது பெற்ற பேரா. மணவாளன் அவர்களும், உ.வே.சா. விருது பெற்ற புலவர் செ. ராசு அவர்களும் தமிழாய்வில் ஈடுபட்டு நல்ல பல நூல்களை எழுதியுள்ளவர்களே.
குறிப்பாகப் புலவர் செ. ராசு, கருணாநிதி தை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது அதை எதிர்த்துத் தினமணியில் கடிதம் எழுதியவர். மாவட்ட ஆட்சியர் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், தன் கருத்தைத் திரும்பப் பெற அவர் ஒப்பவில்லை.
ஔவையார் விருதுபெற்ற பெண்மணியின் தகுதிதான் கேள்விக்குரியது.
அருமை!
நன்றி. ஹிந்துக்களின் ஒற்றுமை மேலும் தீவிரமாக வலியுறுத்தப் பட வேண்டும்.
வாழ்க பாரதம்.
///கடந்த திமுக ஆட்சியில் அராஜகமாக தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு மாற்றப் பட்டு, அந்த கலாசார ஒழிப்பு செயல்பாடு அரசின் முழு ஆசியுடன் ஆரம்பித்தது. ஆனால் ஆட்சி மாற்றம் இந்த வரலாற்றுத் தவறைத் திருத்தி விட்டது//
ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் முன்பாக ராமசாமி நாயக்கரின் உருக்கல்லை நட்டு வைத்தனரே கடந்த திமுக ஆட்சியில் அதை இந்தம்மா ஏன் இன்னும் எடுக்கவில்லை? வேறு யாரேனும் கோர்ட் மூலம் கேஸ் போட்டு உருக்கல்லை அகற்ற வேண்டிய நிலை வந்தால் அப்போது தான் முந்திக்கொண்டு வந்து கல்லை அகற்றி வீராங்கனை பட்டம் பெறுவாரோ என்னவோ?
ஹிந்து சமயம் அற்புதமானது அதில் சிறிதும் மாற்றம் இல்ல்லை.
ஆனால் மூட பழக்கங்கள் அதிகமாக உள்ளன. இது மற்ற மதத்தவர்கள் நம்மை எள்ளி நகையாட, நாமே துணையாக உள்ளோம்.
இந்துக்கள் இறைவன் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதம் மற்றவர்களுக்கு கொடூரமாக உள்ளது. உண்மையில் தம்மை வருத்திக்கொள்வது அவரவர் விருப்பம்.
எனினும் கேலிக்குள்ளாகாமல் இருப்பது ஹிந்து சமயத்திற்கு மதிப்பு. நன்றி
-அன்பன் ஏ.வி .ஓம்குமார், மதுரை.
// கல்வி நிலையங்கள் மாணவர்கள் மனதில் தேசிய உணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்று தான் எல்லாரும் எதிர்பார்க்கிறோம். ஆனால் சில பள்ளிகள் வேண்டுமென்றே இதனைக் குலைக்கின்றன. சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி ஒன்றில், பிரார்த்தனை நேரத்தின் போது அபிராமி என்ற பள்ளி ஆசிரியை இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் மூன்றிலும் இருந்து பிரார்த்தனைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பிரார்த்தனைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மற்ற ஆசிரியர்கள் ஒலிபெருக்கியை அணைத்து விட்டனர். பிரார்த்தனையை நிறுத்த ஆணையிட்டனர். பிறகு அந்த ஆசிரியை மாணவர்களிடம் கடுமையாக நடந்தார் என்றும் பள்ளி விதிகளை மதிக்கவில்லை என்றும் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை சஸ்பென்ட் செய்தார் பள்ளித் தலைமை ஆசிரியை. இதனை எதிர்த்து இந்து முன்னணி பள்ளீ நிர்வாகத்திற்கு எதிராக போராட்டமும் செய்தது.//
உண்மையாகவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்,,, சிறு வயது குழந்தைகளிடம் துவக்கபள்ளியில் இருந்தே கிறிஸ்தவ போத(தை)னைகளை செலுத்துகின்றன…. இது வன்மையாக அரசு கண்டிக்க வேண்டும்………..