ப்ரம்மம் அல்லது இறைத் தத்துவத்தை அறிய விழைவதில் பக்தி மற்றும் வேதாந்த வழிகளில் தர்க்கத்தின் பங்கு யாது என்பதில் வித்யாசம் உள்ளது. ”வாதே வாதே ஜாயதே தத்வபோத” : வாதம் செய்யச் செய்ய தத்துவம் துலங்கும் என்பது வேதாந்திகள் பக்ஷம். நாரத பக்தி ஸூத்ரமானால் “வாதோ நாவலம்ப்ய:” – பக்தர்கள் வாத விவாதத்தில் இறங்கக் கூடாது என்கிறது.
அப்படியானால் ஆத்ம குணங்களால் நிரம்பப் பெற்ற பழுத்த பக்தர்களிடையே அபிப்ராய பேதம் வருமானால் அது எப்படி களையப்படும் என்ற வினா எழலாம். அப்படி ஒரு நிகழ்வை தெரிவு செய்ய விழைவதே இந்த வ்யாசம் / புனைவு….
***
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் அவதரித்து நாடு முழுவதும் சஞ்சாரம் செய்து க்ருஷ்ண பக்தியை பரப்பியவர் சைதன்ய மஹாப்ரபு என்ற மஹான். இவருக்கு பல சிஷ்யர்கள் இருப்பினும் ஆறு சிஷ்யர்கள் தலையானவர்களாக ‘கோஸ்வாமிகள்’ என கொண்டாடப்படுகின்றனர். இவர்கள் ரூபகோஸ்வாமி, சனாதன கோஸ்வாமி, ரகுநாததாஸ கோஸ்வாமி, ரகுநாதபட்ட கோஸ்வாமி, கோபாலபட்ட கோஸ்வாமி, ஜீவகோஸ்வாமி என்று போற்றப்படும் பெரியோர்.
பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் ஹிந்துஸ்தானத்தில் காசி, காஞ்சிபுரம், நவத்வீபம் போன்ற நகரங்கள் சம்ஸ்க்ருத கல்வியில் தலைசிறந்த கேந்த்ரங்களாகச் சிறந்து விளங்கின. ‘நவத்வீபம்’ எனப்படும் ஊர் வங்காளத்தில் விளங்குகிறது. கங்கையால் சூழப்பட்ட ஒன்பது தீவுக் கூட்டங்கள் இவை. காலப்போக்கில் நதியின் போக்கு மாறியதில் இன்று இவை ஒன்பது தீவுகளாக இல்லை. இந்த ஸ்தலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு.
சைதன்ய மஹாப்ரபு தன் காலத்தில் கல்வியில் மிகச்சிறந்த கல்விமானாக விளங்கினார். அப்போது மிகுந்த விளையாட்டுப் பிள்ளையாயும் இருந்தார். இவையெல்லாம் க்ருஷ்ண பக்தி என்ற அமுதத்துளி அவர் ஹ்ருதயத்தே அமிழும் வரை தான். அவ்வமுதத்துளி அவர் தம் ஹ்ருதயத்தில் அமிழ்ந்த பின், தன் வாழ்நாள் முழுதும் பூர்ண சந்த்ரனை தரிசிக்க ஏங்கும் சகோர பக்ஷி போன்று எப்பொழுதும் க்ருஷ்ண தர்சனத்திற்கான விரஹ தாபத்திலும் க்ருஷ்ண நாம கீர்த்தனத்திலும் இவர் ஆழ்ந்திருந்தார்.
‘சிக்ஷாஷ்டகம்’ என்று பக்தர்களுக்கு அறவுரை அளிக்கும் ஒரு ஸ்தோத்ரம் சைதன்ய மஹாப்ரபுவால் இயற்றப்பட்டது. இது தவிர சம்ஸ்க்ருத இலக்கணத்தை விளக்குவதான ‘பஞ்சடீகா’ என்ற நூல் இவரால் இயற்றப்பட்டதாகவும் சொல்வர். இது தவிர இவர் உலகெங்கும் வாழும் மக்களனைவருக்கும் பரம ஆதுரத்துடன் அளித்தது, அள்ள அள்ளக் குறையா க்ருஷ்ண பக்தி.
மஹாப்ரபு ந்யாய (தர்க்கம்) சாஸ்த்ர சம்பந்தமாக ஒரு நூல் இயற்றியதாகவும், அதே சமயம் இவருடன் கல்வி கற்ற இவரது நண்பரும் ஒரு நூல் இயற்றியதாகவும், மஹாப்ரபு சரித்ரத்தில் குறிப்புள்ளது. கங்கையில் படகில் செல்லும் போது தன் நூலை வாசிக்க விரும்பிய நண்பரிடம் மஹாப்ரபு அதனைக் கொடுக்கிறார். அதை வாசித்த அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. ”ஏன் இந்த விசனம்?” என மஹாப்ரபு வினவுகிறார். நான் எழுதிய நூல் மிக்க பெருமையுடன் விளங்கும் என நினைத்தேன்; ஆனால் இந்நூலை வாசித்த பின் என் எண்ணம் தவிடுபொடியானது என்று பெருமூச்சு விட்டார் நண்பர். ”இதற்கா கவலைப்படுகிறாய்?” என்று சிரித்த மஹாப்ரபு, அப்போதே பரிச்ரமப்பட்டு தான் இயற்றிய ந்யாய சாஸ்த்ர விளக்கமடங்கிய அந்த நூற்சுவடிகளை ஓடும் கங்கையில் சமர்ப்பித்து விட்டார். இப்படிப்பட்ட அன்பு ப்ரதானமான ஒரு குண பரிபூர்த்தி மஹாப்ரபுவின் பதின்ம வயதில் காணக் கிடைக்கிறது.
‘தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை’ என பழமொழி உண்டல்லவா? அது போன்று இப்படிப்பட்ட குண பரிபூர்த்தி கொண்ட குருவைப்போலவே இவர் சிஷ்யர்களும் இருந்தனர்.
மஹாப்ரபு தன் வாழ்நாளில் பக்தி என்ற அமுதக் கடலிலேயே மூழ்கித் திளைத்து அந்த அமுதச் சுவையை பல லக்ஷக் கணக்கான மக்களுக்கு ஊட்டினார். அப்பெருமகனார் செய்த நூற்கள் மேலே குறிப்பிடப்படுபவை என்றாலும், அவரது ப்ரதானமான சிஷ்யர்கள் ராதைக்கும் கண்ணனுக்குமான ப்ரேமையை சம்ஸ்க்ருத பாஷையில் லக்ஷக் கணக்கான கவிதைகளால் எழுதிப் பொழிந்தார்கள்.
அதிலும் ஸ்ரீ ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி என்ற இரு சிஷ்யர்கள் மட்டும் நாலு லக்ஷம் க்ரந்தங்கள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு ‘க்ரந்தம்’ எனப்படுவது எட்டு அக்ஷரங்கள் கொண்ட ஒரு பாதமும் நான்கு பாதங்களும் மற்றும் முப்பத்திரண்டு அக்ஷரங்களாலும் ஆன ‘அனுஷ்டுப்’ என்ற சந்தஸிலான (தமிழில் நாம் ‘பா’ என்று சொல்வது போன்ற ஒரு வகை) ஒரு அலகீடு.
சுலபமாகப் புரிந்து கொள்ள நம் பலருக்கும் பரிச்சயமான ‘அனுஷ்டுப்’ சந்தஸிலான ஒரு ச்லோகம் கீழே கொடுத்துள்ளேன்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
சனாதனர் மூத்தவர், ரூபர் இளையவர் எனினும், மஹாப்ரபுவை முதலில் தரிசித்தவர் ரூபர். பின்னர் தரிசித்தவர் சனாதனர் என்றபடியால் ரூப சனாதனர் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.
தன் ஆறு கோஸ்வாமி சிஷ்யர்களையும் ஸ்ரீவனத்தில் (ப்ருந்தாவனம், கோவர்த்தனம் போன்று பன்னிரண்டு வனங்கள்) இருக்கப் பணித்தார் மஹாப்ரபு. மிகச் சிறந்த கல்விமான்களும் குண பரிபூர்த்தி உள்ளவர்களுமான இவர்களை க்ருஷ்ண பக்தியைப் பரப்ப வேண்டி பல நூற்களை எழுதவும் பணித்தார்.
மஹாப்ரபுவிடம் வருமுன் யவன (முஸல்மான்) ராஜாவிடம் சேவை செய்து கிட்டத்தட்ட யவனர்களின் வேஷ பூஷணங்களுடன் சொகுசாக செல்வத்துடன் வாழ்ந்து வந்த ரூப சனாதனர்கள் மஹாப்ரபுவிடம் வந்த பின்னர் மிக விரக்தர்களாக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
தருதல வாஸம் கரதல பிக்ஷை – மர நிழலில் வாசம் கையேந்தி, இரந்து கிடைத்ததைக் கொண்டு வயிறு நிரப்பல் – என்ற படிக்கு மிக எளிமையாக வாழ்ந்து வந்தனர். இப்படி வாழ்ந்து வந்த இவர்கள் தன் வாழ்நாள் முழுதும் தங்கள் குரு மஹாப்ரபு போல் க்ருஷ்ண பக்தியிலேயே திளைத்து இருந்தனர்.
கோவர்த்தனத்தில் ராதா குண்டம், ஷ்யாம குண்டம் என அருகருகே இரு அழகான குளங்கள். இவ்விடத்தருகே இவ்விருவரும் வாழ்ந்து வந்தனர்.
ஒரு சமயம், ரகுநாத தாஸரும் ரூபரும் ராதா குண்டத்தின் கரையில் அமர்ந்து ‘பேசிற்றே பேசலல்லால்’ என்ற படிக்கு பேசி மாளாத கண்ணன் மற்றும் அவனது ப்ரியையான ராதை இவர்களது ராதாக்ருஷ்ண லீலைகளை ஒருவருடனொருவர் அளவளாவிக்கொண்டிருந்தனர். ஸ்ரீ ரூப கோஸ்வாமி அவர்கள் ‘சது புஷ்பாஞ்சலி’ – நான்கு மலர்களால் ஆன அஞ்சலி என்ற, ராதையைப் பற்றிப் புகழும் நான்கு ச்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்ரம் இயற்றியிருந்தார். அது பற்றி இருவரும் அளவளாவியிருக்கையில், தூரத்தே ஸ்ரீ சனாதன கோஸ்வாமிகள் வருவதை கண்ணுற்று எழுந்தனர்.
வயதில் முதியவரான ஸ்ரீ சனாதன கோஸ்வாமியை இருவரும் நமஸ்கரித்தனர். தனக்கு மூத்தவரான ஸ்ரீ சனாதனரிடம் ஸ்ரீ ரூபர் தனது புதியாதாய் இயற்றப்பட்ட ஸ்தோத்ரத்தை சமர்ப்பித்தார்:
நவ-கோ³ரோசனா-கௌ³ரீ ப்ரவரேந்த்³ரீவராம்ப³ராம் |
மணி-ஸ்தவக-வித்³யோதி-வேணீ-வ்யாலாங்க³ணா-ப²ணாம் ||
ச்லோகத்தின் சாரம்:
ஸ்புடம் போட்ட தங்கத்தைபோல் மேனியுடைய ஜ்வலிக்கும் கருநாகத்தையொத்த நீண்ட கருங்குழலுடைய ப்ருந்தாவனேஸ்வரியை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
இந்த ச்லோகத்தை வாசித்த ஸ்ரீ சனாதன கோஸ்வாமிகளது முகம் வாடிச் சுருங்கியது. கருணை, பொறுமை மற்றும் அன்பு இக்குணங்கள் அத்தனைக்கும் ஒருங்கே உறைவிடமான ராதா தேவியினது குழல் எப்படி கொடிய விஷமுடைய கருநாகத்துடன் ஒப்பிடப்பட்டது என, மிகுந்த மன விசனமுற்றார். தர்க்கத்திற்கு ஒவ்வாத உபமானம் அல்லவா என அவரது மனம் குமைந்தது.
வாடிய பயிரைக் கண்டு வாடும் உளமுடையவர்களே சாதுக்கள். அவ்வாறிருக்க தமையனே ஆனாலும் ச்ஹ்ருதயரான (ஒத்த மனமுடைய) ஸ்ரீ ரூப கோஸ்வாமிகள் தான் எழுதிய ஸ்தோத்ரம் பக்தியுணர்ச்சியைப் பெருக்குவதற்கு மாறாக மற்றொரு க்ருஷ்ண பக்தருக்கு மன வ்யாகூலத்தை அளித்ததே என தானும் வாடி வதங்கினார்.
வாத விவாதங்களில் ஈடுபடுவதோ ஒருவரையொருவர் குறை சொல்வதோ பக்த லக்ஷணமில்லையே. ஆதலால் இவ்விஷயம் சம்பந்தமாக மேற்கொண்டு சஹோதரர்களிடையே சம்பாஷணம் ஏதும் நடக்கவில்லை. பின்னும் இருவர் மனமும் மிக பாரத்துடன் இவ்விஷயத்தையே அசைபோடத் துவங்கியது.
சாயங்காலமானதால் குளக்கரையில் தங்களது அனுஷ்டானங்களை செய்யத் துவங்கினார்கள் இந்த அருளாளர்கள். ச்லோகம் பற்றியே இருவருடைய மனதிலும் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எங்கள் கண்ணன்’ என்ற நம்மாழ்வாரின் பாவத்தில் எப்போதும் திளைத்திருக்கும் ஸ்ரீ ஸனாதன கோஸ்வாமிகள் நினைவில் இப்போது முற்றுமாக ராதா தேவி நிறைந்திருந்தாள்.
கண்களை மூடி ப்ராணாயாமம் செய்கையில் பரவசம் அளிக்கும் வண்ணமாய் திருத்துழாய் மணம். கண்களைத் திறக்கையில் தூரத்திலிருந்து வரும் குழலோசை காதை நிறைத்தது. காதும் மூக்கும் திளைத்திருக்க, கண்கள் இடது புறத்தில் தூரத்தே தமால வ்ருக்ஷத்தினடியில் நின்றிருக்கும் கண்ண பிரானைக் கண்டன.
நெடிதுயர்ந்து இலைகளாலும் கிளைகளாலும் கண்ணனின் மேலே பெரும் குடை போன்று காட்சியளிக்கும் தமால வ்ருக்ஷம். அதன் மர நிழலில் கண்ணன். கண்ணனுக்கு பின்னே அவன் முதுகிலே தினவு தீர்க்கும் பசுமாடு. குழலூதிக்கொண்டு ராதே ராதே என ஒலிக்கும் தன் குழலோசையிலேயே மயங்கி நிற்கிறான் கண்ணன்.
ராதையின் பெயரை ஒலிக்கும் தன் குழலொலியில் மயங்கி சற்றே சாய்ந்த அவன் தன் தலை. பின்னே நிற்கும் பசு மாட்டில் சாய்ந்த படிக்கு சற்றே சாய்ந்த இடுப்பு மற்றும் மாறிய திருப்பாதங்கள் சற்றே சாய, த்ரிபங்க்கி லலிதாகார விக்ரஹமாய் (மூன்று வளைவுகளுடன் கூடிய அழகுத் திருமேனி) திளைத்து நிற்கும் கண்ணனது தோற்றம் சொக்க வைக்கிறது. தனது தலையை சற்றே முன்னிறுத்தி, யவ வஜ்ர ரேகைகளுடன் கூடிய கண்ணனின் திருப்பாதத்தை சுவைக்கும் பசு. தேவருக்கும் மூவருக்கும் காணக்கிட்டா காட்சியல்லவா?
குழலொலியில் மயங்கியது கண்ணன் மட்டுமா? இப்படியான கண்கொள்ளாக் காட்சியை கண்ட கண்ணும் குழலொலியைக் கேட்கும் காதும், கண்ணனின் திருத்துழாய் மாலையிலிருந்து வந்த மணத்தை நுகரும் மூக்கும், கண்ணனாலேயே மனம் நிறைக்கப்பட்டு உடல் பரவசமாகி உறைந்த பனிபோல அசையாது இதைக் காணும் பேறு பெற்ற ஸ்ரீ சனாதன கோஸ்வாமிகளும் கூடத்தான்.
இப்படியிருக்கையில் வலது புறத்தில் இருந்து கலகலவென சப்தம். சற்றே தூரத்தில் ஓடைக்கரையில் உள்ள உத்யானவனத்தில் (தோட்டத்தில்) உள்ள புல்வெளியில் லலிதா, விசாகா, சம்பகலதா, சித்ரா, துங்கவித்யா, இந்துலேகா, ரங்கதேவி, ஸுதேவி என்ற அஷ்டஸகிகளுடன் (எட்டு தோழிமாருடன்) ராதை அளவளாவிக்கொண்டு (கண்ணனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டும்) இருக்கின்றமையும் காணக் கிட்டியது.
கண்ணனின் குழலொலியும் திருத்துழாய் மணமும், ராதையையும் இத்தோழிகளையும் எட்டியிருக்கும் அல்லவா? ராதையின் கையை விட்டகலா பச்சைக்கிளிக்கு மட்டும் இவ்வனுபவத்திற்குக் குறைவா? அல்லது ஆய்ச்சியர் பெண்டிர் போல் அதற்கு அச்சம், மடம், நாணம் என்ற கட்டுப்பாடெல்லாம் தான் உண்டா?
பரவசமடைந்த கிளி “க்ருஷ்ணா….க்ருஷ்ணா” என கூவத் தொடங்கியது. ஆம். கண்ணனின் குழலுக்குத் தெரிந்த “ராதை” என்ற ஒரே சொல் போல் ராதையின் கிளிக்குத் தெரிந்த ஒரே சொல் “க்ருஷ்ணா”. (வேறென்ன தெரிந்து கொள்ள வேண்டும் என நமக்குச்சொல்கிறது போலும்!)
ஒருபுறம் கண்ணனின் குழலொலியிலிருந்து “ராதே” என்ற சொல்லும், மறுபுறம் ராதையின் கையை விட்டகலா கிளியின் “க்ருஷ்ணா” என்ற சொல்லும் இணைந்து “ராதேக்ருஷ்ணா” என வனமெங்கும் ஒலித்தது.
ராதை மற்றும் கண்ணனின் வரவு, குழல் மற்றும் கிளியின் இணைந்த கொஞ்சுமொழி இவையெலாம் வனத்தில் உள்ள ஓடை, குளம், ஆடு, மாடு, கன்று, குரங்கு, கிளி, குயில், மயில், பருந்து, ஸர்ப்பம், மரம், செடி, கொடி என அங்குள்ள சேதன (உயிருள்ள), அசேதன (உயிரிலா) வஸ்துக்கள் அனைத்தையும் வ்யாபித்தது.
சொல்லில் வடிக்கவியலா இந்நிகழ்வு, மாதவி, மல்லிகை, முல்லை, மாலதி, மருவகம், சம்பங்கி, பாரிஜாதம், தாமரை, நீலோத்பலம், தாழம்பூ போன்று பல புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும் உத்யானவனத்தில் இவையனைத்தையும் ஒருசேர கொல்லென்று பூக்க வைத்தது; இது பூலோகம் தானா அல்லது கோலோகமா என ப்ரமிக்கச் செய்தது.
இக்கணம், கண்ணன் குழலொலியைக் கேட்டு மயங்கிய ராதை தன் ப்ராணநாதனின் குழலொலி வந்த திசையைக் கண்ணுற்று, பாரிஜாத மரத்தில் சாய்ந்து அசையா ஓவியம் போல் நின்றாள். அவள் பாதத்தருகே பாரிஜாத மரத்தடியில் இருந்த தாழம்புதர்களில் மடல்கள் விரிந்து ராதையை கண்ணுற விழைவது போல் காட்சியளித்தன.
நீலப்பட்டாடை உடுத்தி மிக மெல்லியதான தன் மேலாக்கினூடே தன் இடது கண்ணை சற்றே திருப்பி கார்மேக வண்ணனை கடாக்ஷித்து, நாணம் மிகவே தன் தலையை சற்றே சாய்க்கிறாள். தலை சாய்ந்தால் என்ன, கண்ணனைக் கண்ட விழிகள் அகலவும் இயலுமோ?
உளத்தில் நாணமிகினும் கண்கள் நாணமறியாது, கார்முகில் வண்ணனை விட்டகல மறுக்கின்றன. இந்தக் குழப்பத்தை சரி செய்ய தேவியின் கால்கள் தரையில் கோலமிடுகின்றன. கோலமா? ராதையின் கால்களா? இல்லையில்லை. ஏதோ எழுதுகின்றன. என்ன தான் எழுதும் அவை? அனிச்சையாக தேவியின் திருப்பாதங்கள் ‘க்ருஷ்ண க்ருஷ்ண’ என எழுத்தின் மேல் எழுத்தாக எழுதுகின்றன.
எப்படி ஒரு ஆனந்தமயமான நிகழ்வு!
பஞ்ச பூதங்களும் கூட பரவசமடைவது தெரிகிறது. தொலைவில் உள்ள வீடுகளில் மாடங்களில் ஏற்றப்பட்ட தீபம் இக்காட்சியைக் காண விழைவது போல இத்திக்கை நோக்கித் தலை சாய்க்கிறது. பரவசமடைந்த நீரோ தன் குளங்களிலுள்ள தன்னைப் போலவே பரவசமாகிப் பூத்த தாமரைப்புஷ்பங்களை இத்தம்பதிகளின் திருவடியில் சொரிய அவற்றைக் கரைக்குத் தள்ளுகிறது.
கார்மேகம் காணவில்லையெனினும் மெய்சிலிர்த்த ஆகாசம் பன்னீர் தெளித்தது போல மிக மெலிதாக தன் ஆனந்தக் கண்ணீரை பூமியில் தூவுகிறது. கண்ணன், ராதை மற்றும் தோழியரான கோபிகளின் திருப்பாதங்கள் தன் மீது பட்ட பரவசத்தை ப்ருத்வி என்ற பூமி மேகம் பொழிந்த நீர்த் துளிகளால் மண்ணின் மணத்தைப் பரப்புவதன் மூலம் தெரிவிக்கிறது.
இப்படி இருக்கும் போது, எஞ்சியதான பவனம் எனும் காற்றுக்கு மட்டும் பின் தங்குமோ? ஆனால் பஞ்ச பூதங்களில் மற்றவற்றை விட மிக சாதுர்யமிக்கது போலும் பவனம்.
அசையா ஓவியம் போல் கடைக்கண்ணால் கார்முகில் வண்ணனைக் கண்ணுறும் தேவி இருக்கும் திசையிலிருந்து ராதையின் நினைவில் சொக்கி நிற்கும் ராதாரமணனின் திசை நோக்கி மிக மெலிதாக காற்று வீசுகிறது. காற்றுப் பட்டதால் தேவியின் மேலாக்கு சற்றே காற்றில் விலகுகிறது. தேவியின் மேலாக்கில் பட்டு அதை வருடும் பேறு பெற்ற காற்று, கண்ணன் இருகும் திசையில் சென்று கண்ணனை சற்றே வருடியது தான் தாமதம். தேவியின் பெயரிலேயே குழலொலியில் மயங்கிய கண்ணனுக்கு தேவியின் மேலாடையைத் தீண்டிய காற்று தன் மேல் பட்டால் தாளத் தான் தாளுமோ? கிறங்கிப் போகிறான் கண்ணன். அவன் மேலிருக்கும் மஞ்சள் பட்டுப் பீதாம்பரம் நழுவிக் கீழே விழுவதைக் கூட அறியாது தேவி இருக்கும் திசை நோக்கி செல்லத் துவங்கினான். (*3)
சில க்ஷண நேரத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வுகளைப் பரவசம் மேலிட கண்டு கொண்டிருக்கிறார் சனாதனர்.
இப்படி ஒன்றையொன்று விஞ்சும் ஆனந்தத்தை அனுபவிக்கும் சனாதனர் திடீரென தேவியிருக்கும் இடத்தைக் கண்ணுற்ற போது பயம் மேலிடத் துணுக்குறுகிறார்.
ஆஹா இது என்ன கொடுமை? இவ்வளவு ஆனந்தம் மிகும் இக்கணத்தில் ராதையும் கண்ணனும் சேரப் போகும் நேரத்தில் இதென்ன மாபெரும் ஆபத்து?
அருகில் உள்ள தாழம்புதரிலிருந்து பாரிஜாத மரத்தில் சாய்ந்திருக்கும் தேவி மீது ஒரு கருநாகம் ஏறுகிறதே. சனாதனரின் உள்ளம் பதைபதைக்கிறது. கைகால்கள் விதிர் விதிர்க்கின்றன.
கூக்குரலிட்டால் சத்தம் கேட்டு சர்ப்பம் தேவியைத் தீண்டி விடுமோ? அல்லது தான் சத்தமிட்டால் ஆனந்த அனுபவத்தில் திகழும் அனைவரின் அனுபவமும் பங்கப்பட்டு விடுமோ?
”கண்ணா என் கனியமுதே! அவன் மனத்தைக் கொள்ளை கொண்ட என் தேவி ராதே! நான் என் செய்ய வேண்டும்? என் மதி மயங்குகிறதே! என் மதிக்குத் தெளிவு கிட்டாதா?” என்று துடிதுடிக்கையில் கீழே கிடந்த ஆயர்களின் கழியைக் கண்ணுறுகிறார். மதியில் சட்டென்று ஒரு பொறி!
ஓசைப்படாது தேவியின் பின்புறம் சென்று இக்கழியால் தேவியை நெருங்கும் ஸர்ப்பத்தைத் தூக்கி எறிந்தால் என்ன? இந்த எண்ணத்துடன் சர்ப்பத்தை மட்டும் குறிவைத்து சற்று தூரத்தில் இருந்து கழியினால் தேவியின் மீது படர்ந்திருக்கும் ஸர்ப்பத்தை தீண்டும் சமயம்.
”யாரந்த ஆடவன் தேவியின் கூந்தலைத் தீண்டுவது?” என்ற கண்ணனின் குரல் கேட்டது தான் தாமதம்.
கண்கள் விழிக்க, ராதா குண்டமெனும் குளக்கரையில் தன் முன்னே தன் முக மலர்ச்சியைக் கண்ணுற்ற தன் தமையன் ரூபரைக் கண்ணுற, ஆனந்தக் கண்ணீர் பொழிகிறார் சனாதனர்.
ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண
ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண
ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண
ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண ராதேக்ருஷ்ண
அடியார்கள் கண்ணனை எந்த அளவு தங்கள் எண்ணத்தில் இருத்த வேண்டும்? புஷ்டி மார்க்கத்தைச் (வல்லபாசார்யாரின் ஸம்ப்ரதாயம்) சார்ந்த பெரியோர் இதற்கு பதில் அளிக்கிறார்கள்.
ஒரு பசுமாட்டின் கொம்பில் ஒரு திலம் (எள்) எவ்வளவு நேரம் நிற்கவியலும். ஒரு க்ஷணத்திலும் குறைவான நேரம் அல்லவா? அத்துணை நேரமாவது கண்ணனிடத்திலோ அவனது நாமத்திலோ தங்கள் மனதைச்செலுத்தும் பேறு பெற்றவர் அவனது ‘அடியார்’ எனப்படுகின்றனர். அத்துணை நேரம் கூட கார்மேக வண்ணனது நினைவன்றி வேறொன்று நினைக்கவொண்ணாதவர் ‘அருளாளர்’ எனப்படுகின்றனர்.
இவ்யாசத்தை வாசித்து அல்லது இங்கு பதியப்பட்ட சித்திரங்களைக் கண்ணுற்று, ஒரு க்ஷணத்தில் சில துளிகளுக்கு கண்ணனிடம் மனதை இருத்தும் பேறு பெற்ற அடியார்தம் திருத்தாள்களில் இந்த வ்யாசம் சமர்ப்பிக்கப் படுகிறது.
***
பின் குறிப்புகள்:
1. ஸ்ரீ நரஹரி சக்ரவர்த்தி அவர்கள் இயற்றிய ‘பக்தி ரத்னாகரத்தில்’ இந்நிகழ்வு பற்றிய குறிப்புள்ளது. நான் அருளாளர்களிடம் கேட்டு என் மனத்தில் இருத்திய படிக்கு இதை எழுதியுள்ளேன். மொழியிலோ கருத்திலோ கடினத்வமோ பிழையோயிருப்பின் பிழை பொருத்தருளுமாறு விக்ஞாபிக்கிறேன்.
2. ‘சது புஷ்பாஞ்சலி’ என்ற க்ரந்தத்திலிருந்து ஒரு துளியை அனுபவித்த படிக்கு மற்ற துளிகளை வாசிக்க விழையும் எனக்கு முழு க்ரந்தமும் கிடைக்கப்பெற்ற வாசகர் யாரேனும் அதைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3. ராதையின் மேலாக்கைத் தீண்டிய காற்று கண்ணனைத் தீண்ட அவன் புளகாங்கிதம் அடைவானா? இதை நான் பகிர்ந்தது ப்ருந்தாவனத்தில் இருந்த அருளாளர் ஸ்ரீ ஹிதஹரி வம்ச மஹாப்ரபு அவர்கள் இயற்றிய ‘ராதாரஸ ஸுதாநிதி’ என்ற க்ரந்தத்தில் இருக்கும் முதல் ஸ்லோகப்படி. இப்பெருமகனார் கண்ணனின் குழலின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவர் சிறு குழந்தையாய் இருக்கும் போது இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்ரம்:
யஸ்யா: கதா³பி வஸனாஞ்சல-கே²லனோத்த²-
த⁴ன்யாதி-த⁴ன்ய-பவனேன க்ருதார்த்த²மானி
யோகீ³ந்த்³ர-து³ர்க³ம-க³திர் மது⁴ஸுத³னோபி
தஸ்யா: நமோஸ்து வ்ருஷபா⁴னுபு⁴வோதி³சே’பி
நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித் தெட்டாத யோகிகளைப் பற்றி வள்ளல் அருணகிரிப் பெருமான் தித்திக்கும் முத்தமிழை அடக்கிய திருப்புகழமுதத்தில் பாடியருளியுள்ளார் அல்லவா?
ச்லோகத்தின் சாரம்: அப்படிப்பட்ட யோகிகளுள் மிக ஸ்ரேஷ்டமானமானவர்களுக்குக் கூட கிட்டாதவன் கண்ணன். அப்படி யோகிகளுக்கும் கிடைக்கப் பெறாத கண்ணனெம்பெருமான் சற்றே வீசிய காற்று ராதாதேவியின் மேலாக்கின் ஒரு நுனியில் பட்டு அக்காற்று தன்னைத் தீண்டினால் கிடைதற்கறிய பேறு பெற்றதாய் எண்ணுவான். அப்படிப் பேறு பெற்ற (ராதை வசிக்கும்) வ்ருஷபானு கோபரின் (ராதையின் தந்தை) ஸ்தலமிருக்கும் திசைக்குக் கூட என் நமஸ்காரம் உரித்தாகுக!
பக்தி மார்கத்துக்கும், வேதாந்த வழிக்குமான வேறுபாட்டைப்
புலப்படுத்தும் முன்னுரையுடன் தொடங்கும் மிகச்சிறந்த பதிவு.
வாஸுதேவ ஸார்வபௌமரும் மாறிப்போனார்.
‘சது:புஷ்பாஞ்ஜலி’ கேட்டிராத நூலாகத் தெரிகிறது.
பாரதப் பண்பாட்டுச் சிந்தனை மரபின் உச்சம் ’பக்தி’
பூஜ்ய க்ருஷ்ண குமார் ஜீ மேலும் எழுத வேண்டும்
தேவ்
அன்புள்ள கிருஷ்ண குமார்,
நாம சங்கீர்தனத்தை உத்தாரணம் செய்த பெருமகனார்களை பற்றி அழகாக விளக்கிய நீவிர் அனைத்து நலன்களையும் பெற இறைஅருள் பெருகட்டும். படித்தவுடன் நல்ல மனநிறைவு கிட்டியது. நன்றி.
திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு.
ஸ்ரீ சைதன்யர் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இக்கட்டுரையின் படிக்கும் எவரும் ” அடியார்” என்ற பதத்திற்கு புஷ்டி மார்க்கம் அளிக்கும் பொருள் படி அடியார்களாவார்கள். கண் முன் பார்ப்பது போல் இருந்தது எழுத்து நடை.
திகட்டாத இனிப்பு கண்ணன் லீலை.
சாய்
இந்த ஆனந்த அனுபவத்தில் பங்கு கொண்ட ஸர்வ ஸ்ரீமான் கள் தேவ், மாசி பெரியசாமி மற்றும் சாய் அவர்களுக்கு வணக்கங்கள்.
சது: புஷ்பாஞ்சலி ச்லோகம் பதியப்பட்டதில் பிழை உள்ளது.
ச்லோகத்தில் உள்ள பிழை கீழே சரி செய்யப்பட்டுள்ளது :-
நவ கோரோசன கௌரி ப்ரவரேந்தி வாரம் வாரம்|
மணிஸ்தவக வித்யோதி வேணி வ்யாலங்கன பணம்||
ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஸ்ரீ க்ருஷ்ண தரிசனம் ஸாத்யம், ஸத்யம், ஸத்யம். சம்சயம் வேண்டா.
நீங்கள் பிற கட்டுரைகளின் கீழ் கருத்து தெரிவிப்ந்தை நிறுத்திவிட்டு, இனி அவற்றைத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய்வதே முறை.
மலர்மன்னன்
அன்பார்ந்த ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய,
கேட்டு, வாசித்து அனுபவித்ததை மற்றவர்களுடன் பகிருமுகமாக எனது ஒரு ப்ரயாசை இந்த வ்யாசம். அவ்வளவே.
நான் எழுத வேண்டும் என்ற தங்களது கருத்தை ஆசிகளாக ஏற்று முயற்சி செய்கிறேன்.
கிருஷ்ணகுமார் ஐயா அவர்களே …..
//இவ்யாசத்தை வாசித்து அல்லது இங்கு பதியப்பட்ட சித்திரங்களைக் கண்ணுற்று, ஒரு க்ஷணத்தில் சில துளிகளுக்கு கண்ணனிடம் மனதை இருத்தும் பேறு பெற்ற அடியார்//
உண்மை…..சில மணித்துளிகளாவது கண்ணன் பால் எண்ணம் செல்ல வைத்துவிட்டீர்கள்…….மிக்க நன்றி………
கண்ணன் கழலிணையே
எண்ணும் மனமுடையீர்
நண்ணும் திருநாமம்
திண்ணம் நாராயணமே
கண்ணன் திருவடிகளை எண்ண வைத்தமைக்காக, ஸ்ரீமான். கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நன்றிகள் பல… அவர்கள் இன்னும் கொஞ்சம் முயன்று நல்ல தமிழில் எழுதினால் நன்றாக அமையும் என்று சிறியேன் கருதுகிறேன்..
“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”
ப்ரும்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நமஸ்காரம்.
அடியேன் தேர்ந்த எழுத்தாளன் அல்லன். தமிழில் (சம்ஸ்க்ருதத்திலும்) பாண்டித்யமும் அறவே கிடையாது.
அடியேனால் இயன்ற மொழியில் (இயன்ற வரை செப்பனிடப்பட்டு) பகிரப்பட்ட அனுபவம் கண்ணனைத் தவிர பிறிதொரு விஷயம் பேச ஹேதுவாகுமெனில் அக்குறைபாடுக்கு பாத்ரமான அடியேனை க்ஷமிக்குமாறு அடியார்கள் தம் திருவடிகளில் என் சிரசை இருத்துவதல்லால் வேறொன்றறியேன். பிழை பொருத்தருள்வது பெரியோரான அடியார் இயல்பு என்பதால்.
“கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்” எனும் சுடர்க்கொடியாளின் வாக்கையொத்து சில க்ஷணங்கள் கண்ணனிடம் மனம் செல்லும் பேறு பெற்ற தங்களுக்கும் நன்றி ஸ்ரீமான் சான்றோன்,