சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
***
தொடர்ச்சி…
.
ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான்:
ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடனிருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்…..
நமக்கு மிக நெருங்கியுள்ள கடமையை, நாம் இப்பொழுது ஏற்றெடுத்துள்ள கடமையை செம்மையாகச் செய்வதால் நம்மை நாம் மேலும் அதிகமாகப் பலப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறாக படிப்படியாக நமது பலத்தை அதிகரித்துக்கொண்டே போனால், நாம் ஒரு பெரும் நிலையைக் கூட எய்திவிடக் கூடும். அப்பொழுது வாழ்க்கையிலும், சமூகத்திலும் எல்லோரும் மிக விரும்பிப் போற்றுகிற, கௌரவிக்கிற கடமைகளைக் கூடச் செய்து முடிக்கிற நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.
நாம் ஒவ்வொருவரும் எந்த இடத்துக்குத் தகுந்தவர்களோ அந்த இடத்தில் தான் இருக்கிறோம். ஒவ்வொரு பந்துக்கும் தக்கதொரு குழி உண்டு. ஒருவனுக்கு மற்றவர்களைவிட அதிகமான திறமை இருக்குமானால் உலகம் அதைக் கூடக் கண்டுபிடித்துவிடும். ஏனெனில் இயற்கையிலேயே எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றையும் பொருத்தமான இடத்தில் அமைக்கிற மாறுதல் நிகழ்ந்தே வருகிறது. ஆகவே முணுமுணுப்பதில் பயனில்லை.
ஒரு பணக்காரன் தீயவனாக இருக்கலாம். இருப்பினும் அந்த மனிதனைப் பணக்காரனாக்கிய சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தே தீரும். வேறொரு மனிதனுக்கும் அதே குணங்கள் ஏற்பட்டால் அவனும் பணக்காரனாக ஆகிவிடலாம். ஆகவே சண்டையிடுவதாலும், குற்றஞ்சொல்லிக் கொண்டிருப்பதாலும் என்ன பயன்? அப்படிச் செய்வதால் நமக்கு நல்ல நிலை எற்பட்டுவிடாது.
உனது விதியைப் பற்றி முணுமுணுக்காதே;
ஒவ்வொரு கடமையையும் சுவையுடன் செய்:
….ஒரு மனிதன் தனக்குக் கிடைத்துள்ள சிறு அளவு வேலையை எண்ணி முணுமுணுப்பானாயின், அவன் எல்லாவற்றுக்குமே முணுமுணுப்பான். முணுமுணுத்துச் சிடுசிடுத்து, மிகுந்த துக்ககரமான வாழ்க்கையை அவன் நடத்துவான். அவன் செய்வதெல்லாம் தோல்வியிலேயே முடியும்.
ஆனால் தனது கடமைகளை மகிழ்வோடு செய்துகொண்டு, பணியாகிய ரதத்தின் சக்கரத்தில் தோள் கொடுத்துத் தள்ளுகிறவன், ஒளியைக் காண்பான். உயர்தரமான கடமைகள் அவன் பங்குக்குக் கிடைக்கும்.
பலனை எதிர்பார்த்து அதில் பற்றுக்கொண்டு வேலை செய்கிற மனிதன் தனக்குக் கிடைத்துள்ள கடமையின் தன்மையைப் பற்றி முணுமுணுப்பான். ஆனால் பற்றற்ற ஊழியனுக்கு எல்லாக் கடமைகளுமே ஒரே மாதிரியானவை தான். எந்தக் கடமையானாலும் அது சுயநலத்தையும், சிற்றின்பத்தையும் கொன்றுவிடவும், ஆத்மாவுக்கு விடுதலை தேடித் தரவும் திறமை வாய்ந்த கருவியாகவே அமையும்…
முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப்படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்துகொண்டே செல்வோம். நமது கடமையாக எது வந்தெய்துகிறதோ அதனைச் செய்துகொண்டே போவோம். வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைக் கொடுத்துத் தள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து கொண்டிருப்போம். அப்படியிருந்தால் நாம் ஒளியைக் கண்டே தீருவோம்.
எந்த வேலையும் அற்பமானதல்ல. தன்னுடைய மனத்துக்குப் பிடித்தமான காரியத்தை ஒரு அடிமுட்டாள் கூடச் செய்து முடித்துவிட முடியும். ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக, சுவையுள்ள வேலையாக ஆக்கிக் கொள்ளுகிறவன் புத்திசாலி எனப்படுவான்.
இந்த உலகிலிருக்கிற எல்லாமே ஆலமரத்து விதைபோல நுண்ணியதாக, கடுகு போலத் தோற்றமளித்தாலும், அதற்குள்ளே பெரிய ஆலமரம் மறைந்துள்ளது. இதைக் கவனித்துத் தெரிந்து கொண்டு, எல்லாப் பணிகளையும் உண்மையிலேயே உயர்ந்ததாக ஆக்குவதில் வெற்றி பெறுகிற மனிதனே புத்திசாலியாவான்.
பிறரைக் குற்றஞ் சொல்லாதே: உன்னையே ஆராய்ந்து பார்:
….நாம் தாக்கப்படக் கூடிய நிலையில் இருந்தாலன்றி நம்மை எதுவும் தாக்கிப் பாதிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். என்னுடைய உடல் வியாதியால் பாதிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இராத வரை வியாதி என்னை அணுகாது. வியாதியானது கிருமிகளை மாத்திரம் பொறுத்ததல்ல. ஏற்கனவே உடலில் இருக்கிற சில தன்மைகளைப் பொறுத்ததாகும்.
நமக்கு ஏற்றது தான் கிடைக்கிறது. தகுதியே இல்லாமல் துன்பம் ஏற்படாது என்பதை நாம் நமது கர்வத்தைக் கைவிட்டு உணர்ந்து கொள்வோம். தகுதியில்லாமல் நமக்குத் தாக்குதலோ அடியோ கிடைக்காது. எனது சொந்தக் கைகளாலேயே வழிவகுக்காமல் எந்தத் தீமையும் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. நாம் அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது. இப்படிச் சிந்தித்தால் நாம் சாந்தமான கம்பீரமான மனநிலைக்கு வந்து சேருவோம்.
அத்துடன் கூட இந்த ஆராய்ச்சியின் மூலமாக நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். அதாவது ‘வெளி உலகத்தைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது. ஆனால் என்னிடம் எது இருக்கிறதோ – அதாவது எனது சொந்த அக உலகம் – அது என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இந்த இரண்டும் ஒன்று சேருவதால் தான் தோல்வி ஏற்படுமாயின், இந்த இரண்டும் சேருவதன் மூலம் தான் எனக்கு அடி கிடைக்க வேண்டுமென்றால், என்னிடமிருக்கிற பங்கை நான் கூட்டிச் சேர்க்க மாட்டேன். அப்பொழுது எப்படித் தாக்குதல் வரும்? என்னை என்னால் நன்றாக அடக்கியாள முடிந்தால் தாக்குதல் ஒருபோதும் என்னை அணுகவே முடியாது.
……ஆகவே உங்களது தவறுகளுக்காக வேறு எவரையும் குற்றஞ் சாட்டாதீர்கள். உங்களது கால்களிலே நில்லுங்கள். முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். “நான் அனுபவிக்கிற இந்தத் துன்பத்துக்கு நானே பொறுப்பு என்றால் இதனை நானே தான் நீக்க வேண்டும் என்பது நிரூபணமாகி விடுகிறது” என்று கூறுங்கள்.
நான் நிர்மாணித்ததை என்னால் அழிக்கவும் முடியும். வேறொருவர் உண்டாக்கியரை என்னால் ஒருக்காலும் அழிக்க முடியாது.
ஆகையால் எழுந்து நில்லுங்கள். துணிவுடனிருங்கள். வலிவுடனிருங்கள். முழுப் பொறுப்பையும் உங்களது தோள் மீதே, நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது விதியை நீங்களே தான் நிர்மாணிக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையான சக்தி, துணை எல்லாம் உங்களிடமே உறைந்துள்ளன.
“மடிந்து போன முற்காலம் மடிந்தவற்றைப் புதைக்கட்டும்”. முடிவற்ற வருங்காலம் உங்கள் முன்னே உள்ளது. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சும், சிந்திக்கிற சிந்தனையும் செய்கிற செயலும் வருங்காலத்தில் உங்கள் மீது பாய்வதற்கு ஆயத்தமாக, ஒரு குவியலாகச் சேர்ந்து உள்ளன.
நீங்கள் செய்த கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும், புலிகளைப் போலப் பாய்வதற்கு ஆயத்தமாக இருப்பதைப் போலவே நம்பிக்கையுணர்ச்சியைத் தூண்டுகிற மற்றொரு விஷயமும் உள்ளது. அதாவது நீங்கள் செய்யக்கூடிய, நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்களும் நூறாயிரம் தேவதைகளின் பலத்துடன் உங்களை எப்பொழுதும், எல்லாக் காலத்துக்கும் காப்பாற்றுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது விதிக்கு நாமே பொறுப்பு :
…..ஒருவன் சம்பாதிக்காவிட்டால் அவனுக்கு எதுவும் கிடைக்காது. இது நிரந்தரமான சட்டம். அப்படியல்லவென்று சில சமயம் தோன்றலாம். ஆனால் நாளடைவில் அது உண்மை தானென்று தெளிவடைகிறோம். ஒரு மனிதன் செல்வந்தன் ஆவதற்காக ஆயுள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக் கணக்கான பேர்களை அவன் ஏமாற்றலாம். ஆனால் கடைசி முடிவாகத் தான் பணக்காரனாவதற்குத் தகுதியுடையவனல்லன் என்பதைத் தெரிந்து கொள்வான். அவனது வாழ்க்கையே, அவனுக்குத் தொல்லையாகவும், தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. சுகபோகங்களை அநுபவிப்பதற்காக நாம் ஏராளமான பொருள்களைச் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் எதைச் சம்பாதித்தோமோ அதுதான் உண்மையில் நமக்கு ஒட்டும்.
முட்டாள் ஒருவன் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம். அவனது நூல் நிலையத்தில் அவை இருக்கும். ஆனால், எதனைப் படிக்க அவனுக்கு தகுதியுண்டோ அதையே தான் அவன் படிப்பான். அவனுக்குத் தகுதியை உண்டாக்குவது அவனது ‘கர்மா’.
நமது தகுதி என்ன, நம்மால் எதனை ஜீரணிக்க முடியும் என்பதை நமது கர்மா முடிவு செய்கிறது. நாம் இன்றிருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு. நாம் எப்படி ஆக வேண்டுமென்று விரும்புறோமோ அவ்வாறு நம்மை ஆக்கிக் கொள்ளுவதற்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. இன்று நாமிருக்கும் நிலை நமது பழங்காலச் செயல்களின் விளைவாக ஏற்பட்டது என்றால், அதைத் தொடர்ந்து மற்றொரு கருத்தும் வருகிறது. அதாவது நாம் வருங்காலத்தில் எப்படி மாற வேண்டுமென்றிருக்கிறோமோ, அந்த நிலையை இக்காலத்திய நமது நடவடிக்கைகளால் உண்டாக்க முடியும். ஆகவே எப்படிச் செயல்பட வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்…..
நமக்குள்ளிருந்தே உதவியெல்லாம் கிடைக்கும்:
…..நாம் பட்டுப் புழுவைப் போலிருக்கிறோம். நமது உடலிலிருந்தது வெளிப்படும் பொருளைக் கொண்டே நாம் பட்டு நூல் கூடு உண்டாக்குகிறோம். நாளடையில் அதிலேயே சிறையிடப்படுகிறோம். ஆனால் இது நிரந்தரமானதல்ல. அந்த கூட்டுக்குள்ளேயே நாம் நிச்சயமாக ஆத்மஞான அநுபூதியை வளர்த்துக் கொள்வோம். பின்னர் வண்ணாத்திப் பூச்சியைப் போலச் சுதந்திரமாக வெளிவருவோம்.
இந்தக் கர்ம வலையை, நம்மைச் சுற்றி நாமே தான் பின்னிக் கொண்டோம். நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம். உதவியானது வெளியிலிருந்து வராது. நமக்குள்ளிருந்தே தான் வரும்.
உலகிலுள்ள எல்லாக் கடவுள்களிடமும் முறையிட்டுப் பார். பல ஆண்டுகள் கதறினேன். இறுதியாக எனக்கு உதவியளிக்கப்பட்டதை நான் கண்டேன். ஆனால் எனக்குள்ளேயிருந்து தான் உதவி வந்தது. தவறுதல் காரணமாக நான் செய்ததையெல்லாம் திருப்பி மாற்ற வேண்டியிருந்தது. அது ஒன்றுதான் வழி. என்னைச் சுற்றிலும் நானே வீசிக் கொண்ட வலையை நான் வெட்டியெறிய வேண்டியிருந்தது. இவ்விதம் செய்வதற்கான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது.
ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். அதாவது எனது அபிலாஷைகளில் ஒன்றுகூட – அது நல்வழிப்பட்டதோ, தீயவழிப்பட்டதோ, எப்படியாயினும் சரி – வீணாகவில்லை. எனது ஆயுளில் நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் கவனியுங்கள். இந்தத் தவறுகள் ஒவ்வொன்றையும் நான் செய்திராவிட்டால் நான் இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது என்பது திண்ணமாக எனக்குத் தெரியும். ஆகவே எனது தவறுகளைப் பற்றி எனக்கு முழுத் திருப்திதான்.
அதற்காக நீங்கள் வீட்டுக்குப் போய் வேண்டுமென்றே தவறிழைக்க வேண்டுமென்று நான் கூறுவதாக நினைத்துச் சோர்ந்து போகவேண்டாம்; கடைசியில் எல்லாம் நேராகிவிடும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அது வேறுவிதமாக ஆகமுடியாது. ஏனெனில் நல்ல தன்மை நமது இயல்பு ஆகும். தூய்மை இயற்கையான நிலையாகும். அந்த இயற்கையை ஒரு நாளும் அழிக்கவே முடியாது. நமது அடிப்படையான சுபாவம் எப்பொழுதும் ஒரே விதமாகவே இருக்கும்.
மீண்டும் மீண்டும் படிக்க படிக்க புத்துணர்ச்சி…!
நன்றி…
Nice
//”உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது.”//
Knock out Punch!!!