கம்பனும் இலங்கையும்

இன்றைக்கு ஈழத்தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்க புள்ளியாக கருதப்படுவது இரகுவம்சம் என்ற நூலாகும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தைச் சேர்ந்த இந்நூல் அரசகேசரி என்பவரால் செய்யப்பட்டது.

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசகேசரி அக்காலத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தரசனான பரராஜசேகரனின் உறவு முறையானவர். இவர் காளிதாசனின் இரகுவம்சத்தை தமிழில் இலக்கியப் பெருநூலாகப்படைத்திருக்கிறார்.

இவ்வாறாக, ஈழத்தில் தோன்றிய முதலாவது இலக்கிய நூலான அரசகேசரியின் இரகுவம்சத்திலேயே தாராளமான கம்பரமாயணச் செல்வாக்கு இருப்பதை அவதானிக்கலாம்.

பொற்றாமரை மானொழியாது பொலியுமார்ப
வெற்றாழு மேனி ரகுராம சரிதை யாவும்
கற்றார் கவியின் பெரிதாந் தமிழ்க்கம்பநாடன்
உற்றாங் குரைத்தான் உரையாதன ஓதுகிற்பாம்

என்கிறார் அரசகேசரி.

kambar_stampஇங்கு கம்பர் பாடிய பகுதிகளை விடுத்து, அவர் எடுத்துக் கொள்ளாத பகுதிகளைத் தான் பாடுவதாக அரசகேசரி குறிப்பிடுகிறார். இதனூடாக, கம்பர் பாடிய பிறகு இன்னொருவர் இராமகாதையைப் பாடத் தேவையில்லை என்ற அரசகேசரியின் எண்ணம் தெளிவாகத் தெரிகின்றது.

‘கற்றார் கவியின் பெரிதாம் தமிழ்க்கம்பநாடன்’ என்ற சொற்றொடர் மூலம் அரசகேசரி கம்பரை மிகவும் போற்றினார் என்பதும், அவரது படைப்பை மிகவும் மதித்தார் என்பதும் புலனாகின்றது.

கம்பநாடன் என்ற பதம் கூட, ஈழ நாட்டு வித்துவானான அரசகேசரியாலேயே முதன் முதலில் இலக்கிய உலகில் அறிமுகம் செய்யப்பெற்றது என்பதும் இங்கே நினைவு கூர வேண்டியதாகும்.

அன்று தொட்டு, இன்று வரை கம்பராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப்படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப்பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப்பெற்று வருகின்றது.

இவ்வாறு கம்பரைப் போற்றும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் சிறப்பாகத் தானே இருக்கின்றன..? அதில் இலங்கைக்கு என்ன தனித்துவம் இருக்கிறது? என்று கேட்கலாம். அவ்வாறு கேட்கிற போது, தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இவ்விடயத்தில் மிகப்பெரிய வேறுபாடுகளை அவதானிக்கலாம்.

தமிழகத்தில் கம்பராமாயணம் இலக்கிய நூலாகவும், வைணவர்களிடத்தில் வழிபாட்டு நூலாகவும் சிறப்புற்றிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பூசனைக்குரிய புனித நூல் என்றொரு பார்வையும் கம்பராமாயணத்திற்கு உள்ளது.

ஆனால், இலங்கை நிலை அவ்வாறன்று.. வைணவமரபுகள், வழிபாட்டு முறைமைகள் இலங்கையில் வளர்ச்சி பெறவில்லை.. அதனால், இங்கே புனிதநூல் என்ற பார்வை பெரிதும் காணப்படாமல் ஒப்பரிய இலக்கிய நூல் என்ற பார்வையிலேயே கம்பராமாயணம் பெரிதும் போற்றப்படுகின்றது.

அடுத்தது, கம்பராமாணத்தின் எதிர்மறைப்பாத்திரமான, அரக்கனான இராவணன் இலங்கையைச் சேர்ந்தவன். எனவே, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு கம்பராமாயணம் மொழி அடிப்படையிலும் தேச அடிப்படையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது எனினும், ஈழத்தமிழர்களிடத்திலே இக்காவியம் மொழியடிப்படையில் மகிழ்ச்சி அளிக்கிற போதும், தேச அடிப்படையில் ஒரு வித அந்நிய உணர்வை உண்டு பண்ணுவதாகவே இருக்கிறது.

இதனால், தான் “ஈழத்தில் கம்பரை ஏன் போற்ற வேண்டும்…? கம்பருக்கு ஏன் விழாச்செய்ய வேண்டும்..?” போன்ற கேள்விகள் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இவை ”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற அடித்தளத்தில் உருவாக்கப்பட்டவை எனலாம்.

எனவே, உண்மையில் கம்பர் ஈழத்து வீழ்ச்சியைப் பாடினாரா..? என்ற கேள்வி எழுப்பப் படலாம். இது குறித்து ஒரு உரையாடலின் போது, அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் முனைவர் ஸ்ரீ.பிரசாந்தன் அவர்கள் பல எடுத்துக்காட்டுகளோடு கம்பர் ஈழத்தை வீழ்த்தவில்லை… ஈழத்தின் சீர்மையையே பாடினார் என்று விளக்கினார். அவரது கருத்துக்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவது, இலங்கையில் வேறெந்தக் கவிஞரும் போற்றப்பெறாத அளவுக்குக் கம்பர் போற்றப் பெறுகிறார் எனவே, கால ஓட்டத்தில் இவ்வாறு கம்பர் போற்றுதலுக்கு அனுமதிக்கப் பெற்றார் என்றால், அவர் உண்மையில் ஈழத்தின் வீழ்ச்சியைப் பாடியிருப்பதாக நம்பமுடியாது. இது அனுமானப் பிரமாணம்.

எனவே, அவர் ஈழத்தின் உயர்ச்சியையும், ஈழமக்களின் நன்மையையும் குறித்துப் பாடியிருக்க வேண்டும்.

Vibhishana_Charanagathy

குபேரனுடைய நாடாகிய ஈழத்தை இராவணன் தன் வலிமையினால், கைப்பற்றி ஆளத் தொடங்கியதற்குப் பிறகு இலங்கையில் அறம் நுழையவில்லை என்று கம்பர் சொல்கிறார். எனவே, அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது.

எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்.

எனவே, கம்பர் ஈழத்தின் மீளெழுச்சிக்கான வித்துக்களை நாட்டி விட்டே விடைபெறுகிறார். ஆக, கம்பர் காட்டியது இராவணனின் வீழ்ச்சியை அன்றி ஈழத்தின் வீழ்ச்சி அல்ல என்று கருதலாம்.

அடுத்தது, கம்பர் தன் கருத்தைச் சொல்வதற்கு காவியத்தில் அநேகமாகப் பேசும் பாத்திரம் அனுமனாகும். அனுமன் வாயிலாகவே, அதிகளவில் கம்பன் தன் சொந்தக்கருத்துக்களைப் பேசுவான் என்பது கம்பராமாயணத்தை நன்கு கற்றோர் கண்ட உண்மை. இந்தக் ‘கவி’ அந்த ‘கவி’ ஊடாகவே பேசுவான் போலும்…

சுந்தரகாண்டத்தின் ‘உருக்காட்டும் படலத்தில்’ இராமனது அழகை கம்பன் அனுமன் வாயிலாக ‘படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்’ என்று தொடங்கி இருபது பாடல்களால் பாடுகிறான். அதே போலவே, சீதையை ‘திருவடி சூட்டுப்படலத்தில்’ அனுமன் வாயிலாக, ‘கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று தொடங்கி இருபது பாடல்களால் போற்றி மனநிறைவடைகிறான்.

இப்படி கதாநாயகனையும், நாயகியையும் அனுமன் கண் கொண்டு பாராட்டும் கம்பர் நாட்டைப் பற்றிப் பேசும் போதும் அதே அனுமன் ஊடாகப் பேசுகிறான்.

அதே சுந்தர காண்டத்தில் “ஊர் தேடு படலத்தில்” ஈழத்தின் இயற்கை, செயற்கை வளங்களை எல்லாம் படம் பிடிக்;கத் தொடங்குகிறார் கம்பர்.

“பொன் கொண்டிழைத்த மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த வெயிலைக் கொடு சமைத்த” (ஊர் தேடு 01)

என அனுமன் மூலம் தொடங்குகிறார்.

“நல்நகர் அதனை நோக்கி நளினக் கைம் மறித்து நாகர்
பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா!” (கடல்- 91)

என்று அனுமனே வியப்பதாகவும் பேசுகிறார்.

போதாமைக்கு,

“மரமடங்கலும் கற்பகம் மனையெலாம் கனகம்..
தரமடங்குவது அன்று இது தவம் செய்த தவமால்” (ஊர் 09)

என்று “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும். அதாவது ‘தவமே செய்த தவம்’ என்று காட்டுவதற்கு மேலே என்ன உவமையுள்ளது..?

இதே ‘தவம் செய்த தவம்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கம்பரால் முன்னர் இருமுறை மொழியப் பட்டுள்ளது. சூர்ப்பனகை வாயிலாக, இராமனைப் பற்றிப் பேசும் போது, “தவம் செயத் தவம் செய்த தவமென்..?” என்று கம்பன் பேசுகிறான். அதே போல, சீதையை அனுமன் வாயிலாக “தூய சாலையில் இருந்தனள் ஐய, தவம் செய்த தவமாம் தையல்” என்று சொல்கிறான். இவ்வாறு நாயக,நாயகியரைக் குறித்த சொற்றொடரை நாடு ஒன்றுக்கும் சொன்ன போது, ஈழநாட்டுக்கே கம்பன் அச்சொல்லைப் பாவித்தமை ஈழநாட்டின் மீது அவனுக்கு அமைந்திருந்த உயர்வான சிந்தனையின் வெளிப்பாடாகவே கருதலாம்.

இவற்றினை விடச் சிறப்பு யாதெனின், வான்மீகி தசரதனால் காக்கப்பட்ட அயோத்திக்கு, இந்திரன் ஆளும் அமராவதியை ஒப்புவிக்கிறார். ஆனால், கம்பரோ, கோசல நாட்டிற்கு இலங்கையை ஒப்புவமிக்கிறார். இவ்வாறு கூறாத கவிஞர்களை
‘உணர்தல் தேற்றார்’ என்று வேறு சொல்கிறார்.. இதை யார் மூலம் சொல்கிறார் என்றார் காவியத்தலைவனான இராமனே சொல்வதாகச் சொல்கிறார்.

‘இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்துக்காட்டார்
அந்தரம் உணர்தல் தேற்றார் அருங்கவிப்புலவர் அம்மா’ (இல-07)

ஆக, இலங்கையை தாழ்த்துவது கம்பனின் நோக்கமாக ஒரு போதும் அமையவில்லை என்பதும், இலங்கையில் நல்ல ஒரு அரசனின் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே கம்பனின் விருப்பாக இருந்தது என்பதும் மிகவும் தெளிவாகின்றது.

One Reply to “கம்பனும் இலங்கையும்”

  1. வீழ்ந்தது ராவணனே…. ஈழமன்று…. என்பதை தெளிவாக விளக்கிய ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயருக்கு வந்தனங்கள். கம்பன் கண்ட ஈழமும் சம்க்ஷேபமாக விளக்கப்பட்டுள்ளது.

    ஈழம் உள்ளடக்கிய அகண்ட ஹிந்துஸ்தானம் முழுதும் ஆட்சி என்பது தர்மத்துக்கு அதீனமாகவே என்றும் இருந்தது. தனியொரு நபருக்கு அதீனமாக எப்போதெல்லாம் ஆட்சி சிக்குமோ…..அப்படி சிக்கி…..அதன் தொடர்ச்சியாக ஒருக்கால் அதர்மமும் தலை தூக்குமோ……..அப்போதெல்லாம் அதர்மத்தின் முகமாக ஆட்சியில் வீற்றிருக்கும் ராஜன் வீழ்ச்சியை சந்திப்பது இயற்கை நியதியே. இங்கு வாழ்வு தேசத்திற்கு வீழ்ச்சி அதர்மத்திற்கு.

    ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன், வேனன், கம்சன் இத்யாதி புராண அதார்மிகர்கள் முதல் சமீபத்திய அடால்ஃப் ஹிட்லர்,போல்பாட் வரை இவை தொடர்ச்சியாகத் தெரிவிக்கும் செய்தி. இரண்டாவது உலக மஹாயுத்தத்தில் ஜெர்மனி வீழ்ந்து அமேரிக்காவும் சோவியத்தும் அதை உடைத்து…….கபளீகரம் செய்தாலும்……பிற்காலத்தில் ஜெர்மனி இணைந்தது…….தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் …… ஆயின் தர்மமே வெல்லும்…..என்பதை சுட்டுவதாக அவதானிக்கிறேன். நாளை அவ்வாறே பாக்கி ஸ்தானமும் பாங்க்ளா தேசமும் ஈழமும் ஹிந்துஸ்தானத்தில் இணைந்து அகண்ட ஹிந்துஸ்தானம் வலுவான தேசமாக உதயமாக வெற்றி வேலாயுதப்பெருமாளை இறைஞ்சுகிறேன்.

    ஈழத்தில் ராமபிரானால் வீழ்த்தப்பட்டது ராவணனே அல்லாது ஈழம் இல்லை. வீழ்ந்தது ஈழம் என்றால் அது ராமபிரானின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஈழத்தில் தர்மம் நிலை நாட்டப்பட்டபின் விபீஷணனே ராஜ்யபாரம் ஏற்றது வீழ்ந்தது ஈழமன்று என்பதை சம்சயத்திற்கிடமின்றித் தெரிவிக்கிறது.

    ராவணன் வீழ்ச்சியை ஈழத்தின் வீழ்ச்சியாக சித்தரிக்க முனைபவர்களின் தர்மம் சார்ந்த நிலைப்பாடு என்ன என்பதும் நோக்கத்தகுந்தது.

    கம்பன் கண்ட ஈழம் எனத் தாங்கள் விஸ்தாரமாக ஒரு வ்யாசம் சமர்ப்பிக்குமாறும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *