நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வட மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லப்போனால், இந்தத் தேர்தல் முடிவுகளை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ஏனெனில், இந்தியாவின் வருங்காலம் செல்லும் திசையை இத்தேர்தல் முடிவுகள் காட்டும் என்பதை உலகமே உணர்ந்திருந்தது.
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி (1998- 2004) விடைபெற்று 9 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழியை இப்போது தான் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களையும் அவற்றால் ஏற்பட்ட இழப்புகளையும் பட்டியலிட்டால் தான் தெரிகிறது நாட்டின் வீழ்ச்சி. ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் ஆகியவை அவற்றில் மிக முக்கியமானவை. இந்த ஊழல்களால் நாட்டின் மானம் உலக அரங்கில் சந்தி சிரித்தது.
இவையல்லாது, நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையை அடைந்தது, ‘பொருளாதார நிபுணர்’ மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்ததுடன், பணவீக்கம், விலைவாசி கடும் உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை நாடு கண்டது. புரியாத புள்ளிவிவரங்களால் ஆட்சியாளர்கள் கதைத்துக் கொண்டிருந்தபோது, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல, விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் இந்திய மக்கள்.
இந்த நிலையில் தான் டிசம்பரில் வந்தன ஐந்து மாநிலத் தேர்தல்கள். நாடு முழுவதும் பெருகிவரும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இத்தேர்தல்கள் அமைந்தன.
.
மக்கள் மிகுந்த அறிவாளிகள்!
பொதுவாக மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கும், மத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தெளிவான வேறுபாட்டை உணர்ந்தவர்களாகவே இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரத்யேக நிலவரங்களுக்கேற்ப சட்டசபைத் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்கள், மக்களவைத் தேர்தல் வந்துவிட்டால், நிலையான அரசு, நீடித்த பொருளாதாரக் கொள்கை, சமூக ஒருமைப்பாடு, முந்தைய அரசின் செயல்திறன் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மத்திய அரசைத் தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும், நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆளும் திறன் படைத்த கட்சியே மத்தியில் ஆள முடியும் என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
எனவே தான், மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்குப் போராடும் கட்சிகள், மாநில அளவில் தங்கள் சாத்தியப்பாட்டை நிரூபித்தாக வேண்டியுள்ளது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ள 5 மாநிலத் தேர்தல்களை அரையிறுதிப் போட்டியாகவே ஊடகங்கள் கருதின. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், தில்லி, மிசோரம், பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளே நாட்டின் அரசியல் செல்லும் திசையைக் காட்டும் காந்தமுள்ளாகக் கருதப்பட்டன.
இந்நிலையில் தான், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் (டிசம்பர் 8) நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், தொடர்ந்து வீழ்ச்சி கண்ட இந்தியப் பொருளாதாரத்திற்கு சஞ்சீவினி மருந்தாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் ஆளுகையில் இருந்த தில்லியையும் ராஜஸ்தானையும் இழந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. தவிர, தனது ஆளுகையில் இருந்த ம.பி, சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது பாஜக.
இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒரு திடீர்த் திருப்பம் தில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் தான். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. எனினும், இங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையால், அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளது. புதிதாக தேர்தல் களம் கண்ட அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாமிடம் பெற்று, காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலை இதுவரை காணாத வகையில் சீரழிந்திருக்கிறது. நெருக்கடி நிலையின் போதும்கூட, இந்திரா காந்தி என்ற தன்னிகரற்ற தலைமை காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இப்போதோ, மாலுமி இல்லாத கப்பல் போல, இத்தாலி அன்னையையும், ராவுல் வின்சியையும் நம்பிக்கொண்டு, பழம்பெரும் காங்கிரஸ் தள்ளாடுகிறது.
பாஜக எதிர்ப்பு ஒன்றையே மூலதனமாக்கி, மதச்சார்பின்மை என்ற முழக்கத்தை மட்டுமே தேர்தல் ஆயுதமாக்கி, சிறுபான்மையினரின் வாக்குவங்கியை அடித்தளமாகக் கொண்டு, நேரு- ‘காந்தி’ குடும்பம் என்ற பரம்பரை வாரிசு அரசியலில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் கட்சி, இதுவரை பெற்றுவந்த வெற்றிகளுக்கு பாஜகவின் பலவீனங்களையே சார்ந்திருந்தது. இம்முறை அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கவில்லை.
நாடு நெடுகிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதை முன்கூட்டியே உணர்ந்த பாஜக, தனது தலைமையிலும், நடவடிக்கைகளிலும் செய்த அதிரடி மாற்றங்கள், அக்கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்ததுடன், காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு முன்னதாகவே கலகலக்கச் செய்துவிட்டன. குறிப்பாக, வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ஒரு பெரும் படையே நரேந்திர மோடி தலைமையில் இயங்கியதை நாடு கண்டது.
பாஜகவின் இளைய முகமாக முன்னிறுத்தப்பட்ட, ‘வளர்ச்சியின் நாயகன்’ குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனக்கு அளிக்கப்பட்ட பணியை கனகச்சிதமாகச் செய்து முடித்தார். தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் பாஜக நடத்திய கர்ஜனைப் பேரணிகளும் மாநாடுகளும், அவற்றில் திரண்ட பல லட்சக் கணக்கான மக்கள் கூட்டமும், ஏற்கனவே தேர்தல் முடிவுகளை முன்னறிவித்திருந்தன.
இதுவரையிலும் பாஜகவின் அணுகுமுறைகள் மென்மையாகவே இருந்துவந்தன. எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதிலும் கூட அத்வானி, வாஜ்பாய் போன்ற பெரும் தலைவர்கள் நாகரிகம் காட்டுவது வழக்கம். ஆனால், பாஜகவின் எதிரிகள் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பாஜகவைப் பந்தாடுவர். எனவே பாஜகவின் அரசியல் பாதை பெரும்பாலும் தடுப்பாட்டமாகவே அமைந்துவந்தது. அதை மாறி அமைத்தார், பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி. அவர் பொறுப்பேற்றது முதலே, பாஜகவில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், கட்சித் தொண்டர்களின் அணுகுமுறை மாற்றம் தான். இப்போதெல்லாம், பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ தங்கள் பழைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை. மோடி முதற்கொண்டு அடிப்படைத் தொண்டர் வரை, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உத்வேகமான தாக்குதல் உத்தியே அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. இது முந்தைய பாஜக அல்ல.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக இதுவரை 20-க்கு மேற்பட்ட மாபெரும் மாநாடுகளை நாட்டின் பல மாநிலங்களில் நடத்தி இருக்கிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாநாடுகளும் 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளன. ஆந்திரத்தின் ஐதராபாத், தமிழகத்தின் திருச்சி, கர்நாடகத்தின் பெங்களூரு, உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, பிகாரின் பாட்னா ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் மாநாடுகள், தேர்தல் நடைபெற்ற மாநிலங்களிலும் கூட பெரும் செல்வாக்கை பாஜக பெற உதவியாக இருந்தன.
மாறாக, காங்கிரஸ் கட்சியோ, தேர்தல் நடைபெற்ற தாங்கள் ஆளும் தில்லியிலேயே வெற்றிகரமான அரசியல் பேரணி ஒன்றைக்கூட நடத்த முடியவில்லை. ராகுல் வின்சியின் பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்களை அமரவைக்க அம்மாநில காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் கெஞ்சிய காட்சி ஒன்றே போதும், அக்கட்சியின் பரிதாப நிலையை விளக்க!
உண்மையில் தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது. எனினும், கடைசிநேர மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடிகளால் காங்கிரஸ் ஏதேனும் தந்திரம் செய்து மீளக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பலைக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் சதிராட்டங்கள் எடுபடவில்லை.
மொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் வின்சி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே முடியவில்லை. தில்லியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட, மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக.
இனி மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்.
.
ராஜஸ்தானில் பாஜக பெரும் வெற்றி!
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ்- பாஜக என்ற இருகட்சி அரசியலே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றுவது ராஜஸ்தான் மக்களின் வழக்கம். வெற்றி -தோல்விகளில் பெருத்த வேறுபாடு இரு கட்சிகளிடையே இருப்பதும் அபூர்வம். ஆனால் இம்முறை, பாஜகவே எதிர்பாராத வகையில் மிகப் பெரும் வெற்றியை இம்மாநில மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ளனர்.
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஊழல்கள், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் குளறுபடிகள் ஆகியவை காரணமாக, அரசுக்கு எதிரான அலை வீசுவதாக ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக அணிவகுத்தது. வசுந்தராவின் வசீகரமான மாநிலத் தலைமையும், மோடியின் அனல் பிரசாரமும் சேர்ந்து பாஜகவை இமாலய வெற்றி பெற வைத்துள்ளன.
மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 161 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இதனை, சென்ற 2008 தேர்தலில் பெற்ற 78 இடங்களுடன் ஒப்பிட்டால், இரு மடங்காகி இருப்பது தெரியவரும். மாறாக 96 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் இப்போது 21 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜகவைப் பொருத்த வரை, இது மகத்தான வெற்றியாகும்.
உள்கட்சிப்பூசலைக் கட்டுப்படுத்தியது, மாநில அரசின் தவறுகளை மக்களிடையே முறையாகக் கொண்டுசேர்த்தது, மோடி அலை, புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது ஆகியவை ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற உதவியுள்ளன.
.
மத்தியப் பிரதேசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி!
சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக அரசு மீது மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு மிகவும் நல்ல மதிப்பு இருப்பதை பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஊழலற்ற அரசு, திறமையான, வெளிப்படையான நிர்வாகம், மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை காரணமாக, சௌகான் அரசுக்கு எதிரியே இல்லாத நிலை காணப்பட்டது. இங்கு பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்றே கருத்துக் கணிப்புகளும் வெளியாகி இருந்தன. தேர்தல் முடிவுகளும் அதையே எதிரொலித்துள்ளன.
அதிலும் சென்ற 2008 சட்டசபை தேர்தலில் 230 மொத்த தொகுதிகளில் 143 தொகுதிகளையே வென்றிருந்த பாஜக இப்போது, 162 தொகுதிகளில் வென்றுள்ளது. மாறாக, 71லிருந்து 61 ஆகக் குறைந்திருக்கிறது, காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை. அரசுக்கு எதிரான அலையே பெரும்பாலான தேர்தல்களில் வெளிப்படும் நிலையில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றிருக்கிறார் சௌகான். இதற்கு அவரது தன்னிகரற்ற தலைமையே காரணம்.
எதிர்முகாமிலோ, கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் என பல்வேறு முகங்களுடன் ஒருங்கிணைப்பின்றி காங்கிரஸ் தள்ளாடியது. சௌகானின் செல்வாக்குக்கு உறுதுணையாக மோடியின் பிரசாரமும் வலிமை சேர்க்க, இப்போது பாஜக ம.பி.யில் அற்புதமான வெற்றி பெற்றிருக்கிறது.
.
சட்டீஸ்கரில் நிம்மதி அளித்த வெற்றி!
ம.பி.யிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான மாநிலம் சட்டீஸ்கர். 2003-லிருந்து இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. ஊழலற்ற, நிர்வாகத் திறனுக்கு பெயர் பெற்ற ரமண்சிங் தொடர்ந்து முதல்வராக உள்ளார். சௌகானைப் போலவே இவரும் மூன்றாவது முறையாக வெற்றியை ஈட்ட தேர்தல் களம் கண்டார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 2008-ல் 50 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக தற்போது 48 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
எனினும் இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியால் சவால் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த பாஸ்தர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாஜகவால் தடுக்க முடியவில்லை. கடந்த மே 25-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் ‘சல்வார் ஜூடும்’ அமைப்பின் தலைவர் மஹேந்திர கர்மா, முன்னாள் முதல்வர் வித்யா சரண் சுக்லா, மாநிலத் தலைவர் நந்தகுமார் பட்டேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். அதனால் எழுந்த அனுதாப அலையால், காங்கிரஸ் கட்சி சில மாவட்டங்களில் தேறி இருக்கிறது. அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றுள்ளது. சென்ற தேர்தலைவிட இது 2 இடங்கள் அதிகம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் உருவாக்கத்திலிருந்தே அம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று வருகிறது. இம்மாநிலத்தை உருவாக்கிய பிரதமர் வாஜ்பாய் மீது இம்மாநில மக்களுக்கு மிகவும் அபிமானம் உண்டு. மாவோயிஸ்ட் தாக்குதல்களை மீறி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதன் பலனை முதல்வர் ரமண் சிங் பெற்றிருக்கிறார். பாஜகவின் வெற்றிகரமான முதல்வர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, சிவராஜ் சிங் சௌகானுக்கு அடுத்தபடியாக ரமண் சிங்கின் பெயரும் இடம் பெற்றுவிட்டது.
.
தில்லியில் மட்டுமே குழப்பம்!
ஊழலுக்கு எதிரான இயக்கம் சமூக சேவகர் அண்ணா ஹஸாரேவால் துவக்கப்பட்டபோது, தில்லியில் அதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அந்த அணியில் இருந்த முன்னாள் அரசு அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை சென்ற ஆண்டு நிறுவினார். ‘சாதாரண மக்களின் கட்சி’ என்ற பெயரில் உருவான இக்கட்சிக்கு தில்லி மாநிலத்தின் இளைய தலைமுறையினரிடையே வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவரும் தேர்தல் களத்தில், அண்ணாவின் எதிர்ப்பை மீறிக் குதித்தார்.
மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசின் ஊழல்களாலும், தில்லி மாநில அரசின் ஊழல்களாலும் வெறுப்புற்றிருந்த மக்கள் இயல்பாகவே பாஜக-வை நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் தான், ஆம் ஆத்மி கட்சியின் பிரவேசம் நிகழ்ந்தது. எந்த ஒரு புதிய இயக்கத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு கேஜ்ரிவால் கட்சிக்கும் கிடைத்தது. தவிர, காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவாலை கொம்பு சீவிவிட்டன.
காங்கிரஸ் கட்சியும் கூட, ஆம் ஆத்மி கட்சியால் வாக்குகள் சிதறுவது தனக்கு நல்லது என்றே கணக்கு போட்டது. அக்கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியே எதிர்பாராத வகையில் மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவாகி, காங்கிரஸ் கட்சியை ஒற்றை இலக்க வெற்றிக்கு தள்ளியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. தில்லி சட்டசபையின் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட இக்கட்சி, 27 தொகுதிகளில் வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது.
ஆம் ஆத்மியின் கட்சியால் மிக மோசமான தோல்விக்கு காங்கிரஸ் உள்ளாகி, 9 தொகுதிகளில் மட்டுமே வென்று, (சென்ற தேர்தலில் வென்றது 43 இடங்கள்) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தவிர, மாநில முதல்வராக மூன்று முறை இருந்த ஷீலா தீட்சித் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோல்வியுற்றிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பாஜகவின் வெற்றிப்யணத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டதை மறுக்க முடியாது. மாபெரும் வெற்றியைக் கனவு கண்ட பாஜக 32 தொகுதிகளில் வென்று ‘தனிப்பெரும் கட்சி’ என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 15 ஆண்டுகளாகப் போராடிவந்த பாஜகவின் பிரசாரம் கடைசியில் புதிய கட்சியின் வெற்றிக்கு உதவிவிட்டது. தற்போது மாநிலத்தில் அரசியல் உறுதியற்ற நிலையை ஏற்பட்டுள்ளது.
அதிலும் கூட, கேஜ்ரிவாலை தில்லி முதல்வராக்க விரும்பிய பலரும் மோடியை பிரதமராகக் காண விரும்புவதாக பல கணிப்புகளில் கூறியிருந்தனர். அதாவது, பாஜக முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் (இவர் தான் இந்தியாவில் போலியோ ஒழிப்புக்கான சொட்டுமருந்து திட்டத்தின் காரணகர்த்தா) செல்வாக்கான முகமாக இருந்தபோதும், கேஜ்ரிவாலுக்கு கிடைத்த கவர்ச்சிகரமான ஊடக வெளிச்சம் அவருக்குக் கிடைக்கவில்லை.
கட்சியில் நிலவிய பூசல்களைக் களைந்து ஒன்றுபட்டுப் போராடிய பாஜகவுக்கு மோடியின் பிரசாரம் பெரும் உத்வேகம் அளித்தது. இருந்தபோதிலும், புதிய வரவை விரும்பும் இளைய தலைமுறை வாக்காளர்களின் அதீத எதிர்பார்ப்புகளால் பாஜகவின் வெற்றிப் பயணம் முழுமை பெற முடியாமல் போயிருக்கிறது. எனினும், காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நடைபோடும் பாஜகவுக்கு தெம்பளித்திருக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் பாஜக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய கட்சியல்ல. அங்கு போட்டியே காங்கிரஸ் கட்சிக்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் தான். அதன் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் பங்கும் வகிப்பதில்லை.
.
நாட்டு மக்களின் விருப்பம் என்ன?
மொத்தத்தில், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமான காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்றுள்ளது. ம.பி, சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ராஜஸ்தானை மீட்டுள்ளது.
தில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும், காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இனிவரும் காலத்தில் தேசிய அளவில் நிகழும் அணி மாற்றங்களுக்கு இம்முடிவுகள் வழிகோலும் என்பது நிதர்சனம். நாட்டை ஆள இன்னமும் பல தடைக்கற்களைத் தாண்ட வேண்டும் என்பதை பாஜகவுக்கும் அதன் அணித் தலைவர் மோடிக்கும் நினைவுபடுத்தி இருக்கின்றன இத்தேர்தல் முடிவுகள்.
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களுக்கு எந்த நேரத்தில், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எஜமானர்களின் சிந்தனையோட்டத்தை உணர்ந்துகொண்டு செயல்படுபவர்களே எதிர்காலத்தில் வெற்றிக்கனிகளை ஈட்டுவதுடன், நாட்டையும் ஆள முடியும். இதைப் புரிந்துகொண்டால், தாமரையின் விகசிப்பை நாட்டின் எல்லா இடங்களிலும் பரவச் செய்ய முடியும்.
அருமையான அலசல் ஸ்ரீமான் சேக்கிழான்
மிகவும் மனதிற்கு நிறைவைத் தந்த ஜெயம் ஸ்ரீ ரமண் சிங்க் அவர்களின் ஜெயம். குஜராத், மத்யப்ரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களில் பாஜக தன்னால் சர்க்காரைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என நிரூபணம் செய்திருக்கிறது.
ராஜஸ்தான் மாகாணத்தில் ஸ்ரீ கிரோரி சிங்க் பைன்ஸ்லா அவர்கள் கடைசீ க்ஷணத்தில் குஜ்ஜர் ஓட்டுக்கள் காங்க்ரஸுக்குத் தான் என்று அறிவித்த பின்னும் காங்க்ரஸ் மரண அடி வாங்கியது நரேந்த்ரபாய் அவர்களின் மீது மக்களுக்கு உள்ள அபிமானத்தினால் தான்.
மத்யப்ரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாகாணங்களின் முக்யமந்த்ரிகளின் வளர்ச்சி சார்ந்த சர்க்கார் மக்களுக்கு தொடர்ந்து நல்ல ஆட்சியைத் தந்ததை மக்கள் உகந்துள்ளார்கள்.
ஸ்ரீமதி வஸுந்தரா ராஜே அவர்கள் தன் முந்தைய ஆட்சியில் ஆட்சியை விட அதிகமாக தனிநபர் ஸ்துதி — தமிழகம் போல — அம்மா — தேவி — துர்க்கா — என்றெல்லாம் தன்னை முன்னிறுத்தியது மக்களுக்கு ஜீரணம் ஆகவில்லை. இம்முறை ராஜே அவர்கள் தனக்குக் கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொண்டு மற்ற முக்யமந்த்ரிகள் போல தன்னுடைய சர்க்காரும் நல்ல ஆட்சியைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
தில்லியில் ஆம் ஆத்மி பார்ட்டி நிறைய இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது வரை ஆட்சிக்கு வராத அரசியல் அனுபவமில்லாத இந்த கட்சியினருக்கு கனவுகள் ஆகாசத்தை எட்டுகின்றன. ஆகாசத்தை எட்டும் கனவுகள் அவசியமே. ஆனால் இன்னும் ஆட்சியைக்கூட பிடிக்க முடியாத நிலையிலும் காங்க்ரஸ் பாஜக கட்சிகளை மக்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க இது ஒரு துவக்கம் என பேசி வருகின்றனர். இவர்கள் ஒரு முறை ஆட்சிக்கு வந்து இவர்களுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற முனையும்போது மட்டிலுமே இவர்களைப் பற்றி கணிக்க முடியும். ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் மக்களால் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதி. ஐந்தாம் முறையாகத் தன் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊடக துஷ்ப்ரசாரவாதிகள் தங்கள் முயற்சியில் தளராத விக்ரமனைப்போல இவ்வளவு வெற்றியை பாஜக பெற்ற பின்பும் ஆப் பார்ட்டியை புகழ்வதன் மூலம் பாஜக வெற்றியை சிறுமைப்படுத்தும் விதமாக அரட்டை ஷோக்கள் நடத்துகின்றன.
ஹிந்து இயக்கங்கள் தங்கள் ஊடக பலத்தை பெருக்க வேண்டிய தருணம் இது. Press மற்றும் visual media வில் இப்போதாவது தங்கள் இருப்பை ஹிந்து இயக்கங்கள் நிலைநிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பா.ஜ.க.விற்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். பாரதத்தில் அடுத்து தாமரை மலர்ந்து முழு மெஜாரிட்டியுடன் மோடி வழிநடத்துவார். உலகில் பாரதம் உயர்ந்த நிலையை அடையும். குடும்ப ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். போலி மதசார்பின்மையை ஒழித்துவிட்டு உண்மையான மதச்சார்பின்மையை செயல்படுத்த வேண்டும்.
The author seems to be unaware of one issue. This Congress party has nothing to do with the Congress party that faught for Indian independence. Indira broke that party twice – in 1960s and 1970s. So, this Congress (I) is a party run by Indira’s family members. Certainly, this party should be wiped out from Indian political scene. Sooner it happens, better for the country.
அருமையான கட்டுரை.
அண்ணா ஹஜாரே அவர்களுடன் ஒன்றாக உண்ணாவிரதம், மற்றும் பல போராட்டங்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அவர் புதிய பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்து , புதிய கட்சியை ஆரம்பித்து நடத்தி, தேர்தலில் போட்டி இட்டவுடன், அண்ணா ஹஜாரேயின் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் தேர்தலுக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து வந்தது பற்றியும், இன்னும் பல குற்ற சாட்டுகளை அன்னா ஹஜாரே கூறினார். ஆனால் இப்போதோ அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றவுடன் , மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி, திருப்தி தெரிவித்துள்ளார். தேர்தலில் பெறும் வெற்றி பல புகார்களை மறக்க செய்துவிடுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அண்ணா ஹஜாரே அரசியல் பற்றி ஒன்றும் புரியாதவர். அவர் பேச்சைக் கேட்டு கேஜ்ரிவால் நடந்தால், விரைவில் கேஜ்ரிவால் அரசியல் வானில் காணாமல் போய்விடுவார்.
அரவிந்த் கேஜ்ரிவால் பாஜக அரசு அமைக்க டெல்லியில் நிபந்தனை இல்லாத ஆதரவு தரவேண்டும். இல்லை என்றால் மீண்டும் தேர்தல் வரும் நிலை உண்டாகும். அது விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். எனவே, அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஒரு கூட்டணி அரசில் பங்கேற்பது அவருக்கும் அவரது கட்சிக்கும் நல்லது. பாஜக நல்ல வெற்றி பெற்றுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த வெற்றி பன்மடங்காக பெருகி, காங்கிரசுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட இல்லாமல் போய்விடும் சூழல் வரும்.
இன்று அமையவிருக்கும் டெல்லியின் புதிய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட இல்லாமல் போய்விட்டது. புதிய பாராளுமன்றத்தில் மே மாதம் 2014-லே, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இதே நிலை தான் வரும். இந்தியா வாழ்க. உலகெங்கும் மனிதஇனம் மேலும் உயர்க. இறைஅருள் மனித இனத்துக்கு மேலும் பெருகட்டும்.
//9 தொகுதிகளில் மட்டுமே //
8 மட்டுமே…
ஊழலுக்கும், போலி மதச்சார்பின்மைக்கும், ஆணவத்திற்கும், இந்துக்களை சாமானியமாக எண்ணிய அகம்பாவத்திற்கும் கிடைத்த செம்மட்டி அடி. இன்னும் Communal Violence bill ஐ அமுல்படுத்த எண்ணட்டும், “இப்படி ஒரு கட்சி இருந்ததா?” என்று கேட்குமளவுக்கு உருத்தெரியாமல் போகிவிடும்…
2014 இல் மத்தியிலும் மீண்டும் மலரும் தாமரை!
இந்த வாய்ப்பை பா ஜ க லோக் சபை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது பா ஜ க காங்கிரசை விட பலம் பொருந்திய கட்சி என்று பல பிராந்திய கட்சிகள் நினைக்கக் கூடும். குறிப்பாக உத்தரப்ரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள பலம் பொருந்திய கட்சிகள் பா ஜ க வுடன் நெருங்கி வருவதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி பா ஜ க ஒரு பலம் பொருந்திய கூட்டணி அமைப்பதற்கு இப்போதிலிருந்து பாடுபட வேண்டும். பீஹாரிலும் கூட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கு முன் வரவேண்டும். இது ஓட்டுப் பிளவு ஏற்படாமல் தடுக்கும். நிதிஷ்குமார் தற்போது திரு நரேந்திர மோடி ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி என்றும் அவரை எதிர்த்தால் தனக்குத்தான் நஷ்டம் என்றும் உணர்ந்திருப்பார். எனவே அவரும் இறங்கி வரக்கூடும். தமிழகத்தில் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது என் ஆசை.
மக்களே மோடி தலைமையில் ஒன்று படுங்கள்! என்று ஒட்டு மொத்த இந்தியரும் சேர்ந்துவிட்டனர் . மத வன்முறை தடுப்பு மசோதா கொண்டு வந்து , இந்துக்களை ஒழிக்க நினைத்த இத்தாலி மணிமேகலைக்கு – மக்கள் சரியான பாடம் கற்பித்துவிட்டனர் ! கோபாலபுரம் அலற ஆரம்பித்துவிட்டது ! போலி மதசார்பின்மை பேசிய கும்பல் காணாமல் போய்விட்டது ! ஜெய் ஸ்ரீ ராம் ! என்ற வேத மந்திரம் பாரததேசம் எங்கும் ஒலிக்கிறது ! ராம ராஜ்யம் ! மோடி ! தலைமையில் அமைய இருக்கிறது !
மீடியா முழுவதும் பாஜக தொடர்பான செய்திகளை மூடி மறைப்பதில் எப்படி செயல்படுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம்.:-
8-12-2013 ஞாயிறு அன்று ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் நடை பெற்ற அதே நாளில் குஜராத்தில் மேற்கு சூரத் சட்டசபைக்கு நடை பெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பூர்னேஷ் மோடி 66,274 ஒட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதே நாளில் தமிழகத்தில் ஏற்காட்டில் அதிமுக 78116 வோட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஏற்காடு இடைதேர்தல் வெற்றி பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் , மேற்கு சூரத் தொகுதியில் பாஜக வெற்றி செய்தியை சொல்லவே இல்லை. ஏற்காட்டில் பெற்ற வெற்றி கழகங்கள் அளித்த இலவசம் என்று சொல்லும் அன்பளிப்பு காரணமாக பெரும் வாக்கு வித்தியாசம் அமைகிறது. ஆனால், குஜராத்திலோ எவ்வித இலவசமும், அதாவது அன்பளிப்பும் கொடுக்கப்படாமல் , மக்களிடம் பெறப்படும் உண்மையான ஆதரவு. குஜராத்தில் 54% மட்டுமே வாக்குப்பதிவு ஆகி உள்ளது. தமிழகத்திலோ ஏற்காட்டில் 90 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. தமிழக செய்தியை சொன்ன ஊடகங்கள், குஜராத் பாஜக வெற்றியை மூடி மறைத்தன. ஒரு வரி கூட சொல்ல வில்லை. ஏனிந்த வேஷம் ஊடகங்களுக்கு ?
” state Congress president Chandrabhan, who not only lost from Mandawa constituency but also forfeited his deposit ‘-
ராஜஸ்தான் காங்கிரசின் மாநில தலைவர் திரு சந்திர பான் பாஜக வேட்பாளரிடம் தோற்றதுடன் ஜாமீன் தொகையையும் இழந்துள்ளார். இதனையும் ஊடகங்கள் சொல்லவில்லை.
இந்த தேர்தல் முடிவு நாட்டு மக்களை எவ்வளவு வதைக்க முடியுமோ அவ்வளவு படுத்திய காங்கரசுக்கு கிடைத்த தண்டனை இனி ஆட்சி நடத்த தெரியாத காங்கிரஸ் தலை தூக்கவே முடியாது மட்டற்ற பகுதி மக்களும் யிவார்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் நிர்வாகத்தின் தவறான செயலால் சமையல் கேஸ் பெட்ரோல் டீசல் அத்யாவசிய சாமான்களின் விலையேற்றம் ரயில் கட்டணம் உயர்தல் போன்ற எண்ணற்ற செயல்கள் தன்னிச்சையாக சைத்தான் பலன் இவர்களுக்கு உடனே கிடைத்துள்ளது
ஆம் அத்மி கட்சியின் திரு அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய கட்சியினுடைய வேட்பாளர் தேர்வில் செலுத்திய கவனம் ஆகும்.
1.கார்கில் போரிலும் , மும்பை 26-11-2008 ஐ எஸ் ஐ ரவுடிகளின் தாக்குதலிலும் , நாட்டைக் காப்பாற்ற போராடி, தன் காதுகளின் கேட்கும் திறனை இழந்த , முன்னாள் என் எஸ் ஜி கமாண்டோ திரு சுரீந்தர் சிங்கை டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி , பெரிய அளவில் மக்கள் ஆதரவை பெற்றார்.
2. ஒரு வசதியும் இல்லாத ராக்கி பிர்லா என்ற பெண் பத்திரிக்கையாளரை மங்கோல்புரி தொகுதியில் தன்னுடைய ஆம் ஆத்மி வேட்பாளராக்கி , வெற்றியை பெறச் செய்தார்.
3. திரிலோக்புரி தொகுதியில் ராஜு திங்கன்என்ற CISF – முன்னாள் வீரரை வேட்பாளராகி வென்றார்.
4.சீமாபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் இறந்ததும், இறந்த வேட்பாளரின் வேலை இல்லாத , சொந்தத்தில் ஒரே ஒரு தொலைபேசி கூட இல்லாத திரு தர்மேந்திர சிங் என்ற அவரது சகோதரரை நிறுத்தி வெற்றி பெற்றார்.
5.பத்பர்கஞ் என்ற தொகுதியில் , மனீஷ் சிசொதியா என்ற முன்னாள் பத்திரிக்கையாளரை நிறுத்தி , வெற்றி பெற்றார்.
அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் பொதுமக்களை கவரக்கூடியவர்களாகவும், இவர் தயாரித்துள்ள அணி வெற்றிபெற்றால், நிச்சயம் நல்ல மாறுதலை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே ஆம் ஆத்மியின் வெற்றிக்கு காரணம். மேலும் காங்கிரசின் ஓட்டுவங்கியை காலிசெய்துவிட்டார்.
பெரியபுராணத்தை அளித்த அந்த சேக்கிழார் போல இந்த சேக்கிழான் காங்கிரஸ் கட்சியின் அதல பாதாள வீழ்ச்சிக்கான காரணங்களை பட்டியலிட்டு ஒரு பெரியபுராணமாக தந்துள்ளார். காங்கிரஸ் ஆளவும் மக்கள் மாளவும் அரியணையில் மீளவும் காங்கிரசை அமர்த்தமாட்டோம் என்று மக்கள் எடுத்த திண்ணமான (=உறுதியான) எண்ணத்தின் விளைவு தான் 4 மாநில தேர்தல் முடிவுகள்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரஸ்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களின் வாயில் இருந்து மதவாதம் என்ற வார்த்தை வெளி வருவது குறைந்து விட்டது அல்லது நின்று விட்டது என்று கூட சொல்லலாம். இது நேற்று டிவி debate களை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். என்றாலும் அமெரிக்கை நாராயணன் என்ற மகா அறிவாளி. “டெல்லியில் secular வோட்டு எங்கள் கட்சிக்கும் புதிய கட்சிக்கும் பிரிந்ததால்தான் பிஜேபி வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். மேலும் RSS ன் தலைமை MP யில் இருப்பதால்தான் அங்கும் பிஜேபி வெற்றி பெற முடிந்தது என்று அந்த ஜென்மம் உளறியது. மோடியைப் பார்த்து வரலாறு தெரியவில்லை என்று கூறும் இதுகளுக்கு வரலாறு புவியியல் எதுவுமே தெரியவில்லையே!. RSS ன் Headquarters மகாராஷ்ட்ராவில் நாக்பூரில் உள்ளது என்று திரு ராகவன் (பிஜேபி) கூறியபோது தேள் கொட்டிய திருடன் போல அந்த ஜென்மம் முழிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்.ஞானதேசிகன் அரசியல் ஞானம் ஏதும் இல்லாமல் இந்த 4 மாநிலங்களைத் தவிர இந்திய பூகோளத்தில் வேறு எங்கும் பிஜேபி இல்லை.என்று கூறுகிறார். குஜராத்தில் இல்லையா? பஞ்சாபில் கூட்டணி இல்லையா? முன்பு ஹிமாசலப் பிரதேசத்தில், உத்தராஞ்சல் மாநிலத்தில்,ஜார்கண்ட் மாநிலத்தில், கர்நாடகாவில், யார் ஆட்சியில் இருந்தது? பீகாரில் பிஜேபிக்கு என்ன 2 அல்லது 3 MLA க்கள்தான் இருக்கின்றனரா? பிரதான எதிர்க்கட்சி அங்கே யார்? தமிழ் நாட்டில், ஒரிசாவில், பிஜேபி இருக்கிறதா என்று கேள்வி கேட்கிறார். நான் அவரை பார்த்து கேட்கிறேன் தமிழ் நாட்டில் இலங்கை பிரச்னைக்கு பிறகு இவரது கட்சியை பூத கண்ணாடி கொண்டு தேடி தேடி பார்த்தாலும் கிடைக்கவில்லையே!
ஒருவேளை 4 மாநிலங்களிலும் பிஜேபி மண்ணை கவ்வியிருந்தால் டிவியில் விளவங்கோடு விஜயதாரணி வேலூர் ஞானசேகர் அமெரிக்கை நாராயணன், கோபண்ணா, ஜோதிமணி ஆகியோரின் ஆட்டம்பாட்டம் தாங்கமுடியாத அளவு இருந்திருக்கும். எண்ணிப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. மதவாதம் மாய்ந்தது. Secularism ஜெயித்தது மோடி ஓடிவிட்டார். அத்வானி ஆடிவிட்டார். ராகுலை PM ஆக ஆக்கிட மக்கள் ஒன்று கூடிவிட்டார். என்றெல்லாம் பேசியிருப்பார்கள். காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ராகுல் வின்சி காரணமல்ல என்றுஅவரது அன்னை Antonia mino டிவி பேட்டியில் கூறுகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஜெயித்தால் அது ராகுலின் வெற்றி.ஆனால் எங்கேனும் அது தோற்றுவிட்டால் அதற்கு ராகுல் காரணமல்ல. அப்படியானால் மௌன குரு (சிங்) காரணமா? பட்டி மன்றம் நடத்தலாமா? அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் CBI யை விட்டு விசாரிக்க சொல்லுங்கள்.
4 மாநிலங்களில் வெற்றி வாகை சூடிவிட்டோம். சரி. நமது அடுத்த குறி? மக்களவை. அதனை பிடிக்க தீவிரமாக செயல புரி.
சத்தீஷ்கர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, ஊடகங்கள் தவறான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. உண்மை நிலவரம் வருமாறு
;-
ஆண்டு கட்சி வென்ற இடம். வாக்கு சதவீதம்.
2003 பாஜக 50 39.26%
2008 பாஜக 50 40.33%
2013 பாஜக 49 42%
பாஜகவின் வாக்கு சதவீதம் கூடியே வருகிறது. ஆனால் ஒரே ஒரு தொகுதி குறைந்துள்ளது. காரணம் சுயேட்சைகள் மற்றும் bsp போன்ற கட்சிகள் வோட்டை காலி செய்து , அவை காங்கிரசின் வேட்பாளர்களுக்கு விழுந்ததால், காங்கிரசுக்கு ஒரு தொகுதியை பாஜக இழக்க நேரிட்டது.
அதைவிட முக்கிய விஷயம், சத்தீஷ்கர் விசார் மஞ்ச் என்ற பெயரில் போட்டியிட்ட , அந்த மாநிலக்கட்சி ஒன்று , பல தொகுதிகளில் சுமார் 10000 முதல் 15000 வரையிலான வாக்குகளை பெற்று, பிற அரசியல் கட்சிகளின் வாக்கு கோட்டையில் சிறிது சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசியல் ஆய்வாளர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை.
namo namo narendraModi
சதீஷ்கர் இல் ராகுல் கான் செய்த கேவலமான பிரச்சாரம் BJP யை கொஞ்சம் ஆட்டிவிட்டது . அத்விகா சொன்னது போல மீடீயா தொடர்ந்து BJP யை அசிங்கப்படுத்தி கொண்டுதான் உள்ளது. காலை ஒரு மணி நேறம் ஷீலா தட்டில் சாப்பீடுவதை வைத்து விளயடிய NDTV யின் அசிங்கம் நாள் முழுவதும் தொடர்தது. தெகல்கா மாதிரி இவர்களும் ஒரு நாள் மாட்டுவார்கள் என்று நம்புவோம்.
அத்விகா – BJP யின் முன்னால் முதல்வர் மகன் தோல்வியை மட்டும் கூவு கூவு என்று கூவினார்கள், அந்த அளவு கூட ஷீலாவின் தோல்வியை மீடீயா கூவவில்லை என்பதியும் பார்க்கவேண்டும்.
அம்பானிக்களுக்கும் மிட்டல்களுக்கும் அமெரிக்காவின் வால்மார்ட்டுகளுக்கும்
வசதியான பொருளாதாரக் கொள்கைகளை மக்களின் மீது திணித்து, ஊழலை
உயிர்மூச்சாக்கஃ கொண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்கு மாநிலங்களிலும்நல்ல பாடம் கற்பித்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வ்வையும் நிர்வாகச்சீர்கேட்டையும் சிறிதும் சீரமைக்காத காங்கிரஸ்கட்சிக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும்.. தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களிலும் சேர்த்துதோராயமாக 12 விழுக்காடு தொகுதிகளிலேயே காங்கிரஸ் வேற்றி பெற்றிருக்கிறது.
இந்த அடிப்படையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வீழ்வது உறுதி. இந்திய
மக்கள் காங்கிரஸ்-சோனியா-ராகுல் கம்பெனியிடமிருந்து விடுதலை பெறும்
நாள் இந்திய வரலாற்றில் பொன்னாளாக இருக்கும்
சத்யநாத்
நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிகள் குறித்த சரியான கண்ணோட்டத்தில் அமைந்த அலசல் இந்த கட்டுரை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த முடிவுகள்தான். சட்டிஸ்கர்கூட வாக்கு எண்ணப்பட்டபோது பயமுறுத்தியது போல முடிவுகள் இல்லை. ஆனால் டெல்லி முடிவுதான் குழப்புகிறது. கேஜ்ரிவாலின் கட்சியை சரியாக எடை போடாதது தவறு. காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை அவர்கள் கொண்டு போன காரணம் அவர்களது ஊழலுக்கு எதிரான பிரச்சாரம், இதற்கு முன்பு ஆட்சியில் இல்லாதது ஒரு அனுகூலம். டெல்லியில் நடந்த பெரும் பெரும் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கேஜ்ரிவால் குழுவினர் ஈடுபட்டதால் டெல்லி மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் இவ்விருவரிடையே சிதறாமல் பார்த்துக் கொண்டிருந்தால், நிலைமை இதுபோல குழப்பமாக இருந்திருக்காது. இப்படியொரு மரண அடி வாங்கியபிறகு காங்கிரஸ் தலைவி சொல்கிறார், இனி தோல்விக்கான காரணங்களை ஆழமாக சிந்திக்கப் போகிறார்களாம். மக்கள் மகிழ்ச்சியாக இல்லையாம், இப்போதுதான் அதுவும் இந்த அம்மையாருக்குத் தெரிகிறதாம். தினம் பொழுது விடிந்தால் பெட்ரோல் டீசல் விலை எத்தனை உயர்ந்திருக்கிறது என்பதும், வெங்காயம், காய்கறி, மளிகை சாமான்கள் இப்படி சாதாரண மக்களின் அன்றாட தேவைகள் ஆகாயத்தில் பறந்தபோது மக்களின் கூக்குரல் இந்த பெரியவர்களுக்குக் கேட்கவில்லையாம். எங்கோ தப்பு நடந்திருக்கிறதாம். ஆம் ஆத்மி மாதிரி இளைஞர்களை ஈடுபடுத்தி அரசியல் செய்யப் போகிறார்களாம், அப்படி இவர்கள் செய்வதைப் போல எங்கும் எவரும் செய்ய முடியாதபடி செய்வார்களாம். அடடா எத்தனை விழிப்புணர்ச்சி. எத்தனை எதிர்ப்புகள், எத்தனை பேர் எடுத்துரைத்தும், செவிடன் காதில் சங்கு ஊதினார்போல தாங்கள் கண்ட காட்சியே கோலமாக நடந்து கொண்டுவிட்டு, எதிர்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு விரும்பிய மசோதாக்களைக் கொண்டு வந்து பாஸ் செய்துவிட்டு, இன்று காரணம் கண்டுபிடிக்க போகிறார்களாம். சாதாரண மக்கள் தரையில் வாழ்கிறார்கள். கண்ணெதிரில் நடப்பது அவர்களுக்குக் கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் ஆகாயத்தில் முப்பத்தி மூன்றாயிரம் அடி உயரத்தில் பறப்பதால் தரையில் நடப்பது இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது விமானத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு விட்டார்கள். இனியாவது கண் எதிரில் நடப்பதைப் பார்க்கட்டும். வாய் மூடி மவுனியாய் இருக்கும் பிரதமர் கண், காது அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு மக்களின் வேதனைகளைக்கு விடிவு காணட்டும். கிழ வயது வந்த காங்கிரசுக்கு இனி இளமையா திரும்பப் போகிறது. எதிர்காலம் இளைஞர்கள் கையில். ஊழல் இருக்குமிடம் தெரியாமல் ஓடும். தினம் தினம் விலையேற்றம் முடிவுக்கு வரும். நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது, அநியாயம் செஞ்சவங்க ஐயோன்னு போவாங்க, நல்லவங்க காலம் இனி நல்லாவே நடக்கும். நாட்டு மக்கள் நன்றாகவே வாழ்வார்கள். வந்தேமாதரம்.
மத்திய பிரதேசத்தில் 7 சதவீதம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. போபால் மத்யா, ஜபல்பூர் கிழக்கு, பேததுல், காந்த்வா, இந்தூர்–1, இந்தூர்–2, கார்கன், உஜ்ஜயினி, நரேலா ஆகிய 10 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.
இந்த 10 தொகுதிகளிலும் இதுவரை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த தடவை அவற்றை அக்கட்சி பறி கொடுத்து விட்டது. அந்த தொகுதிகள் அனைத்திலும் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தன்வசமாக்கியுள்ளது.
அதற்கு முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானின் அணுகுமுறையே காரணம்.
ராம ஜன்மபூமி கட்டிட இடிப்பு வழக்கை தொடுத்த இஸ்லாமியப் பெரியவர் அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் மீதான தாக்குதலும், வகுப்பு கலவரங்களும் அதிகம் நடந்துள்ளதாகவும், நரேந்திரமோடி பிரதமர் ஆவதை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இந்த பேட்டி வட இந்திய மீடியாவில் வந்தது. ஆனால் நம் தமிழகப் பத்திரிக்கைகளும், காட்சி ஊடகங்களான தொலைகாட்சி சானெல்களும் இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓரிரு பத்திரிகைகள் தமிழில் இதனை வெளியிட்டபோதும், மிக மிக சுர்க்கமாக இரண்டு வரியில் முடித்து விட்டன.
இந்த நாலு மாநிலங்களில் தேர்தல் நடந்த 589 சட்ட பேரவை தொகுதிகளில் 408 இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது . சுமார் 70 சதவீதம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் 543-லே 300 தொகுதிகளை கைப்பற்றும். நமது வாழ்த்துக்கள். இறைஅருள் கை கூடும் .
கேஜரிவால் பேட்சு அவரை டெல்லி விஜயகாந்த் ஆக விரைவில் மார்றிவிடும். அவரின் பேட்சில் எந்த முதிர்ச்சியும் இல்லை.
People have shown their anger openly in Delhi. Between Congress – BJP – AAP, People have shown favour to AAP. When in the case of competition between Congress – BJP, people have blindly voted in favour of BJP. It is the lesson for all the big parties and their ‘seasoned’ leaders. Like Shri Rahuhul Gandhi said, political party has to learn this as a lesson and mend their ways towards countries progress instead of showing interest towards their and their own kith & kins personal’s gain!!
பிஜேபி இந்த வெற்றிகளினால், கர்வம் கொள்ளக்கூடாது. கர்வம் அழித்து விடும். Modi Effect – நல்ல பயனைத் தந்துள்ளது.
வசுந்தரா ராஜே – 2008 தேர்தலில் ஏன் தோற்றார் என்று யோசிக்க வேண்டும். அவர் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு – யாரையும் அரவணைத்துச் செல்லத் தெரியாதவர் என்பதே. 2008 தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக செய்தி வெளியாகியது. வழக்கம் போல், கட்சி மேலிடம் தாஜா செய்து அவரை சமாதனப் படுத்தியது.
தில்லியில் ஏன் பாஜகவால் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை? கடந்த 3 ஆண்டுகளாக, தில்லி அரசை எதிர்த்து, அதன் ஊழல்களை எதிர்த்து, ஒரு தலைமை இல்லாமால், பாஜக இயங்கியது. இப்போது கூட, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, மிகத் தாமதமாக வந்தது (உட்கட்சி பூசல் காரணமாக). விஷ்ணு வர்த்தனை சென்ற ஆண்டே முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருந்து, அவர் தலைமையில், கட்சி பல போராட்டங்களை நடத்தி இருந்தால், இன்று, பெரும்பான்மையே கிடைத்திருக்கும். இன்று கிடைத்த 32 இடங்களும், மோதியின் தாக்கத்தினால் கிடைத்தவைதான்.
என் கருத்து : தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடாது. குதிரை பேரம் இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
ஹிமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், கர்நாடகம் – இங்கு ஏன் தோற்றது என்று கட்சி இப்போது , வெற்றி கிடைத்துள்ள இந்நேரத்தில், ஆராய்ந்தால், வரும் தேர்தலில், நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.
பா ஜ க சத்தீஸ்கரில் 48 அல்ல 49 இடங்களை வென்றுள்ளது. காங்ரேஸ் 39 இடங்கள். மாவோ குண்டு வெடிப்பு பா ஜ க தொகுதி குறையக் காரணம். நல்லவேளை. காங் மற்றும் அஜித் ஜோகி வரவில்லை. மதமாற்ற சக்திகள் சத்தீஸ்கர் பக்கம் வரமுடியாமல் போச்சு..
அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் அரசு அமைக்க முன்வராததும், காங்கிரசுக்கோ அல்லது பாஜகவுக்கோ ஆதரவு தரமாட்டோம் என்பதோ ஏதோ ஜனநாயக வழிமுறைகள் மீதுள்ள நம்பிக்கைக் காரணமாக அல்ல. எதிர்கட்சியாக இருப்பது சுலபம். குறை சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கலாம். ஆனால் ஆள்வது என்றால் திறமை வேண்டும். அதிலும் இவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி வளர்ந்தவர்கள். ஆகையால் இவர்கள் பதவிக்கு வந்தால் இவர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். இவர்கள் பேசியதையெல்லாம் இவர்களால் நடைமுறைப் படுத்த முடியாது. இன்றைய சமூக, நிர்வாக அமைப்பில் ஊழலை சுத்தமாகக் களைவது என்பது எவராலும் முடியாத காரியம். உதாரணம் குல்சாரிலால் நந்தா. அதனால் இவர்கள் பதவிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க முடியாது, மக்களின் அதிருப்தி அதிகமாகும், இவர்களும் தோல்வி படுகுழியில் விழுந்துவிடுவார்கள். அதற்கு பயந்து கொண்டுதான் கரையில் உட்கார்ந்து கொண்டு நீச்சல் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார்கள். இந்த பாவ்லா எல்லாம் ரொம்ப நாட்களுக்குச் செல்லுபடி ஆகாது. சாயம் வெளுக்கும், இவர்கள் அரசியலும் முடிவுக்கு வந்து விடும். அரசியல் கட்சி என்றால் சில நெளிவு சுளிவுகளுக்கு இடமளித்துத்தான் செயல்படவேண்டும். நாணலாக வளைந்து கொடுத்தால் புயலைச் சமாளிக்க முடியும், பனைமரமாக நின்றால் ஒடிந்து விழுவதைத் தவிர்க்க முடியாது. காலம் இவர்களுக்குப் பதில் சொல்லும்.
ஆம் ஆத்மி கட்சி எந்த அளவு தாக்கத்தை வட மாநிலங்களில் ஏற்படுத்தும் என்று தெரியவில்ல கட்சிகள் கூட கூட ஜனநாயகம் கேலி கூத்தாகிவிடும்