கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்கரசியார்
மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப,  மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.  இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின;  சைவர்கள் மிக்க துன்பமடைந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். நாடும் மக்களும்  மன்னனும் இப்படித் திசைமாறிப் போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என எண்ணினாள். அதனால் அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.

சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். அவரால்தான் பாண்டிய  நாட்டையும் மன்னனையும் மக்களையும் சமணர்களிடமிருந்து மீட்க முடியும் என்பதையும் உணர்ந்தார்கள். எனவே ஞானசம்பந்தரிடம் இந்தச் செய்தியைச் சொல்லும்படி தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள்.

பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்ட திரு ஞானசம்பந்தர், திருநவுக்கரசரை அடைந்து, பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் அழைத்த விஷயத்தைக் கூறினார். இதைக் கேட்ட நாவரசர் திடுக்கிட்டார். சமணர்களின் வஞ்சனையை நன்கறிந்தவர் அல்லவா? “பிள்ளாய்! அந்த சமணர்களின் வஞ்சனையை நான் நன்கறிவேன். நானே அவர்களால் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானேன் தெரியுமா? மேலும் நாளும் கோளும் சரியில்லை.அதனால் தாங்கள் அங்கு செல்வது உசிதமாகத் தோன்றவில்லை” என்றார்.

அதைக் கேட்ட சம்பந்தர் “அப்பரே! நாம் பரவுவது நம் பெருமான் திருவடிகள் என்றால் நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? ”…

ஞாயிறு திங்கள் செவ்வாய்

புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே’’

என்று  ‘கோளறு பதிகம்’ பாடி நாவரசரை சமாதனம் செய்தார்.

இதன்பின் சம்பந்தர் நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.

Mankaiyarkarasi

இதேசமயம் மதுரையில் சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் தோன்றலாயின. அவர்களுடைய பள்ளிகளிலும், மடங்களிலும் கூகை, ஆந்தைகள் அலறின. எனவே அவர்கள் மன்னனிடம் சென்று தங்கள் தீக்கனவைப் பற்றிக் கவலையோடு தெரிவித்தார்கள்.

மதுரை மாநகரம் முழுவதும் சிவனடியார்கள் மயமாகி விளங்குவதாகவும், மன்னன் கொடிய வெப்பம் மிகுந்த தழலில் வீழ்வது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்கள். சிறிய கன்று ஒன்று தங்களை யெல்லாம் விரட்டியடிப்பதாகவும் கனவு கண்டார்களாம். இதையெல்லாம் மன்னனிடம் பதைபதைப்புடன் கூறினார்கள்.

இங்கே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்க்கும் குலச்சிறையார்க்கும் நன்னிமித்தங்கள் தோன்றின.

“வண் தமிழ்நாடு செய்தவப்பயன் விளங்க

சைவநெறி தழைத்தோங்க,

பரசமயக் கோளரி வந்தான் வந்தான்”

என்று சின்னங்கள் ஒலிக்க சம்பந்தர் வருவதைக் கேள்விப் பட்ட அரசி, சம்பந்தரை எதிர்கொண்டழைக்க குலச்சிறையாரை அனுப்பினாள். குலச்சிறையாரும் உவந்து சென்று சம்பந்தரை எதிர்கொண்டழைத்து மரியாதைகள் செய்து உபசரித்தார். ஆலவாய் அண்ணல் உறையும் கோயிலைக் கண்ட சம்பந்தர் அண்ணலை வணங்கினார். பின் அரசியைப் பாடினார்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாள்தோறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே

என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

சம்பந்தர் வந்ததை அறிந்த பாண்டிமாதேவி தானும் சென்று அவரை வரவேற்று சம்பந்தரின் அடிகளில் வீழ்ந்து, “யானும் என் பதியும் என்ன தவம் செய்தோமோ?’’ என்று வணங்கினாள். சம்பந்தரும், “சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர்!’ உமைக் காண வந்தனம்” என்றார். சம்பந்தரும் அவருடன் வந்த அடியவர் களுக்கும் தங்க திருமடம் ஏற்பாடு செய்தார்கள். பாண்டி மாதேவி மிக்க அன்போடு அவர்களுக்கு விருந்தளித்தாள். அடியார்கள் ஓதிய திருப்பதிக ஓசை பொங்கியெழுந்தது.

இரவில் சம்பந்தரும் அடியார்களும் திருப்பதிகங்கள் பாடிய முழக்கத்தைக் கேட்ட சமணர்கள் பொறாமையால் மன்னனிடம் சென்று, சம்பந்தரையும் அவருடைய சீடர்களையும் மதுரையை விட்டு விரட்ட வேண்டும் என்றார்கள். சம்பந்தர் தங்கி யிருக்கும் மடத்திற்குத் தீ வைத்தால் சிறுவனான சம்பந்தன் பயந்து மதுரையை விட்டு ஓடி விடுவான்.” என்றார்கள். இதைக் கேட்ட மன்னனும் சற்றும் யோசிக்காமல் அப்படியே செய்யலாம் என்றான். சமணர்கள் சென்ற பின் மன்னன் கவலையோடு படுக்கையில் சாய்ந்தான். மன்னனுடைய முகவாட்டத்தைக் கண்ட பாண்டிமா தேவி “முகவாட்டம் எதனால் வந்தது?” என்றாள்

“காவிரி நாட்டிலுள்ள சீர்காழி யில் பிறந்த ஒரு சிறுவன், சங்கரன் அருள் பெற்று இங்கு வந்திருக்கிறானாம். இங்குள்ள அமணர்களை வாதில் வெல்லப் போகிறானாம்” என்றான் மன்னன். இதைக் கேட்ட அரசி, “அப்படித் தெய்வத் தன்மை பெற்ற அவர் வாதில் வென்றால், வென்றவர் பக்கம் சேர்வோம்” என்றாள்.

பின் அமைச்சர் குலச்சிறையாருடன் தன் கவலையைப் பகிர்ந்து கொண்டாள் அரசி.

“சமணர்கள் என்ன தீங்கு சூழ்வார்களோ? சம்பந்தருக்குத் தீங்கு ஏதும் வந்து விடக் கூடாது. அப்படி அவருக்குப் பெருந் தீங்கு ஏதும் வந்தால் நாமும் உயிரை விட்டுவிட வேண்டும்”  என்றாள்.

இதற்குள் சமணர்கள் தங்கள் மந்திரத்தால் திருமடம் தீப்பற்ற மந்திரம் ஓதினார்கள்.

ஆனால் அது பலிக்கவில்லை. மன்னன் இதையறிந்தால் தங்கள் பெருமை மங்கி விடும் என்று தாங்களே மடத்தில் சென்று அழல் வைத்தார்கள். ஆனால் சிவனடியார்கள் அத் தீயை மேலும் பரவவிடாமல் உடனே அணைத்தார்கள்.

இதை சம்பந்தரிடமும் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட திரு ஞானசம்பந்தர் மிகவும் வருந்தினார். இந்தத் தவறுக்குக் காரணம் மன்னரின் நிர்வாகமே. மன்னனே பொறுப்பேற்க வேண் டும் என்று நினைத்து அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார்.

மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாத்தும், அமைச்சர் குலச்சிறையாரின் அன்பினாலும் அரசன்பால் குற்றம் இருந்ததாலும், அவன் மீண்டும் சைவநெறியில் சேரவேண்டும் என்பதாலும் சம்பந்தரின் திருக் கைகளால் திருநீறு பூசும் பேறு பெறப் போவதாலும்  ‘பையவே செல்க’ என்றார்.

சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. மன்னனுக்கு வந்த நோயை அறிந்த அரசியும் அமைச்சரும் மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோய் குறையவேயில்லை; மாறாக அதிகரித்தது.

மன்னன் நோய்வாய்ப்பட்டதை அறிந்த சமணர்கள் நோயின் காரணத்தை உணராமல் தாங்கள் அறிந்த மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினார்கள். ஆனால் அம் மயிற்பீலிகள் எல்லாம் வெப்பத்தால் கருகித் தீய்ந்தன.  தங்கள் கெண்டியில் இருந்த நீரைத் தெளிக்க அந்நீர் கொதிநீர் போலப் பொங்கி யது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து சமணர்களை அந்த இடத்திலிருந்தே விரட்டி விட்டான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், சம்பந்தருக்குச் செய்த தீமையின் காரணமாகவே மன்னனுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெளிந்து மன்னனிடம் தங்கள் எண்ணத்தை வெளியிட்டார்கள்.  இந்த நோய் சம்பந்தப் பெருமான் அருளால் தான் குணமாகும் என்றும் உணர்த்தினார்கள்.

எப்படியாவது தன் உடல் வெப்பம் குறைந்தால் போதும் என்று எண்ணிய பாண்டிய மன்னன் ”சம்பந்தர் அருளால் இந்த நோய் தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவரை அழைக்கலாம்” என்றான்.

Mankaiyarkarasi2மன்னனின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக பாண்டிமாதேவி சிவிகையில் ஏறி சம்பந்தர் இருந்த மடத்திற்குச் சென்றாள். சம்பந்தரைக் கண்டதும்,    உரை குழறி, மெய் நடுங்கி, என்ன செய்வதென்று தெரியாமல் அடியற்ற மரம் போல் அப்படியே அவர் கால்களில் வீழ்ந்து பணிந்தாள். “ஐயனே! சமணர்கள் செய்த தீததொழில் போய் மன்னனிடம் கொடு வெதுப்பாய் நிற்கிறது. தாங்கள் சமணர்களை வென்று அருளினால் எங்கள் உயிரும் மன்னன் உயிரும் பிழைக்கும்” என்று வேண்டினாள்.

இதைக் கேட்ட சம்பந்தர்  “ஆவதும் அழிவதும் எல்லாம் அவன் செயல். நீங்கள் அஞ்ச வேண்டாம். சமணர்களை வாதில் வென்று மன்னவனைத்  திருநீறணியச் செய்கிறேன்” என்றார். இதன்பின் அரசி, அமைச்சருடன் அரண்மனை சென்றார் சம்பந்தர். அங்கு மன்னன் இவரைப் பீடத்தில் அமரச் செய்தான். இதனால் சீற்றமடைந்த சமணர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள்.

சமணர்களின் கூட்டத்தையும் சீற்றத்தையும், பாலனான சம்பந்தரையும் பார்த்து மங்கையர்க்கரசியார் மிகவும் கவலைப்பட்டாள். ஆனால் சம்பந்தரோ மிகவும் தன்னம்பிக்கையோடு.  “தேவி! தாங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பாலனென்று எண்ண வேண்டாம். இந்தச் சமணர்களை நான் நிச்சயம் வெல்வேன்’’ என்று ஆறுதல் கூறி,

மானின் நேர்விழி மாதராய்! வழுதிக்கு

மாபெரும் தேவி! கேள்

பானல் வாயொரு பாலன் ஈங்கிவன்

என்று நீ பரிவெய்திடேல்

ஆனைமாமலி ஆதியாய இடங்களில்

பல அல்லல் சேர்

ஈனர்களுக்கு எளியேன் அலேன் திரு

ஆலவாய் அரன் நிற்கவே!

ஆலவாய் அரன் அருளால் இவர்களை வெல்வேன் என்று ஆறுதல் அளித்தார்.

இதன்பின் மன்னனுடைய இடப் பக்கத்தை சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவியும், மந்திரித்தும் குணப்படுத்துவதாகவும், மன்னனின் வலப்பக்கத்தைச் சம்பந்தர் திருநீறு கொண்டு தடவியும்  ‘நமசிவாய’ மந்திரத்தை ஜபித்தும் குணப்படுத்துவது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சம்பந்தர் அரன் தாளை நினைந்து

‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு

ஆலவாயன் திருநீறே’

என்று தொடங்கி பதிகம் பாடி மன்னனின் வலப்பக்கம் திருநீறு பூசினார். திருநீறு பூசப் பூச வெப்பம் படிப்படியாகக் குறைந்து வெப்ப நோய் தீர்ந்தது. ஆனால் இடப்பக்கம் வெப்பம் அதிகமானது. சமணர்களால் மன்னனின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை. நோய் மேலும் மேலும் அதிகரித்தது. மயிற்பீலியால் தடவிப் பார்த்தும் மந்திரங்கள் உரு வேற்றியும் பலனில்லை. ஒரே உடலில் வலப்பக்கம் குளிர்ச்சியாகவும் இடப்பக்கம் வெப்பம் அதிகமாகவும் இருப்பதைக் கண்ட மன்னன் ஆச்சரியமடைந்தான்.

“என்னை விட்டுச் செல்லுங்கள்” என்று சமணர்களைச் சீறினான் மன்னன். சம்பந்தரிடம், “என்னை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே! இந்த வெப்ப நோயை முழுமையாகப் போக்க அருள் செய்ய வேண்டும் என்று அடிபணிந்தான். இதைக் கண்ட அரசியும் அமைச்சரும் மனமகிழ்ந்தார்கள். சம்பந்தர் அருளால் மன்னனுடைய வெப்பு நோய் முற்றும் நீங்க, மன்னன், “ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்” என்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.

ஆனால் சமணர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மறுபடியும் சம்பந்தரை அனல்வாதம், புனல்வாதம் செய்ய வரும்படி வற்புறுத்தினார்கள். சம்பந்தர் சற்றும் தயங்காமல் அனல்வாதம், புனல்வாதம் செய்ய ஒப்புக் கொண்டார்.

அதன்படி சமணர்களும், சம்பந்தரும் தங்கள் தங்கள் ஏடுகளைத் தீயிலிட்டனர். சம்பந்தருடைய ஏடுகள் பசுமையாயிருக்க, சமணர்களுடைய ஏடுகள் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கின.

இதன்பின் இருவரும் தத்தம் ஏடுகளை ஓடும் வைகை ஆற்றில் போட்டார்கள். சம்பந்தருடைய ஏடுகள் தண்ணீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்று வழங்கப்பெறும் இடத்தில் கரையேறின.  சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் காட்சிகளைக் கண்ட மன்னனும் மக்களும் அதிசயித்தனர். சம்பந்தரை வாழ்த்தி முழக்கமிட்டனர். மன்னனும் தன் தறை உணர்ந்தான்.

“ஆலவாய் அண்ணலே! அமணர்கள் மாய்கையால் மயங்கி நானும் உன்னை மறந்தேன். தக்க சமயத்தில் ஆளுடைப் பிள்ளையை அனுப்பி என்னை ஆட்கொண்டாயே!” என்று பணிந்தான். திருநீற்றின் மகிமையை உணர்ந்து சிவ பக்தனானான்;  நாட்டில் சைவம் தழைக்க ஆரம்பித்தது.

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார்.

காண்க:  தொடர்புடைய தினமலர் பதிவு

.

 

 

26 Replies to “கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்”

  1. எளிமையான தமிழில் அருமையாக எழுதி உள்ளீர்கள்! தொடர்ந்து சைவம் பற்றியும், சிவனடியார்கள் பற்றியும் எழுதுங்கள்.

  2. திருஞானசம்பந்தர் மதுரை மீனாக்ஷி ஆலயத்தினுள் பிரவேசிக்கும் சமயம் குலச்சிறையார் அவரை வரவேற்கிறார். அப்போது அரசியான மங்கையர்க்கரசி கூட்டத்தோடு கூட்டமாக திருநீறணிந்து நிற்கிறார். அவர்தான் அரசி என்று அவருக்கு அறிமுகம் செய்கிறார் குலச்சிறை. எத்தனை எளிமை? ஒரு மகானை தரிசிக்க அரசி எத்தனை எளிமையாக மக்களோடு மக்களாக நின்றாள் எனும் செய்தியே அவரது உயர்வை காட்டுகிறது.

  3. / மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது/
    உண்மையான வாசகம். சோழர்கள் என்றும் சைவசமயத்தை விட்டு விலகியதில்லை. நெல்வேலி வென்ற நெடுமாறன் பேரரசனாக விளங்கியதால், புறச் சமயத்தவனாக இருந்தும், சிற்றரசனாகிய சோழனின் மகள் மானியை (மங்கையர்க்கரசியாரின் இயற்பெயர்) மணக்க முடிந்தது. சிவப்பிரகாசத்தில் பிறந்து திகழ்ந்த மானியார் சமண இருளில் தத்தளித்தார். பிள்ளையாரும் மானியாரும் வெறுத்த சமணம் எது என்பதைத் திருமுறை வாயிலாக அறிய வேண்டும்.முத்தமிழ் விரகனை நினையுந்தோறும் மங்கையர்க்கரசியாரின் மாண்பும் உடன் தோன்றும். ஞானசம்பந்த சிவசூரியனை அம்மையார் மதுரைக்கு அழைத்து அநாகரிக, அநாச்சார சமண் இருளைப் போக்கினார். மங்கையர்க்கரசி என்பது மானிக்கு எம்பிரான் சம்பந்தன் சூட்டிய பெயர். தெய்வச் சேக்கிழார், ” மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்கொழுந்து வளைக்கை மானி தென்னர் குலப் பழி தீர்த்த தெய்வப் பாவை” என் இவரை துதித்தார். திருமதி ஜெயலட்சுமி அவர்களிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கின்றோம். வாழ்க.

  4. அன்பார்ந்த ஸ்ரீ முத்துகுமாரஸ்வாமி மஹாசய, இன்றைய தினம் சுதினம்

    ஒரு சொல். தங்களது உத்தரத்தின் ஒரு சொல் அப்படியே கட்டிப்போட்டு விட்டது என்றால் மிகையாகாது. திருப்புகழமிழ்திலும் ஒரு அழகிய ஆலவட்டத்திலும் ஆழச்செய்தது என்றால் மிகையாகாது.

    \\ முத்தமிழ் விரகனை நினையுந்தோறும் மங்கையர்க்கரசியாரின் மாண்பும் உடன் தோன்றும். \\

    சமண இருள் நீங்கி சைவம் தழைக்கத் தாபமுற்ற மங்கையர்க்கரசியாருக்கு அருள் செய்த சம்பந்தப்பெருமான் மட்டிலுமா *முத்தமிழ் விரகன்* என்ற சொல்லால் நினைவுக்கு வருவார்?

    சம்பந்தப்பெருமானை திருப்புகழ்ப்பாமாலைகளால் துதித்த எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானும் நினைவுக்கு வருகிறாரே *முத்தமிழ் விரகன்* என்ற சொல்லால்.

    திருவெழுகூற்றிருக்கையில்,

    ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
    முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
    ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
    எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

    அழகே உருவான — முத்தமிழோனான — எங்கள் முருகப்பெருமான் — சம்பந்தப் பெருமானாக அவதரித்ததை பாடித் துதிக்கிறாரே.

    முத்தமிழ் வடிவினனான எங்கள் முருகப்பெருமானின் அவதாரமாயிற்றே சம்பந்தப்பெருமான். முத்தமிழ் விரகன் என்று துதிக்கப்படுகிறார். என்ன ஒரு அருமையான சம்பந்தம்!!!!!!!!!!!!

    முருகன் என்றாலே அழகன் என்றே நினைவில் நிற்கிறானே. சம்பந்தப்பெருமானைப் பாடுங்கால், அறுமுகனிவனென எழில்தருமழகுடன் கழுமலத்துதித்தனை என எழில் பொங்க சீகாழிப்பதியில் சம்பந்தப்பெருமான் அவதரித்தைப் பாடுகிறாரே. என்ன ஒரு அழகான சம்பந்தம்!!!!!!!!!!!!!!

    அதுமட்டுமா, கையிலயம்பதித் திருப்புகழில்

    புமியதனிற் ப்ரபுவான
    புகலியில்வித்தகர் போல

    அமிர்தகவித் தொடைபாட
    அடிமைதனக்கருள்வாயே

    சமரிலெதிர்த்தசுர்மாளத்
    தனியயில்விட்டருள்வோனே

    நமசிவயப் பொருளானே
    ரஜதகிரிப்பெருமாளே.

    உலகமே ப்ரளயத்தில் அழியும் சமயத்திலும் அழியாப் புகலியெனும் சீகாழிப்பதியில் அவதரித்த புவியிற் பெரும் ப்ரபுவான திருஞான சம்பந்தப் பெருமானைப் போல மரணமிலாப் பெருவாழ்வைத்தரவல்ல தேவாரப் பாடல்களைப் போல பாடுவதற்கு இந்த அடிமைக்குத் திருவருள் புரிவாயாக என வள்ளல் அருணகிரிப்பெருமான் கயிலைமலைப் பெருமானை இறைஞ்சுகிறார்.

    என்ன ஒரு அழகான ஆலவட்டம்.

    மங்கையர்க்கரசியாரை நினைக்குந்தோறும் சைவம் தழைக்க அவருக்கு அருள் செய்த சம்பந்தப்பெருமானும் நினைவுக்கு வருவார்.

    சம்பந்தப்பெருமானின் எழில் கொஞ்சும் திருவுருவை நினைக்குங்கால் அழகே வடிவான எங்கள் முருகப்பெருமான் நினைவுக்கு வருவார்.

    முருகப்பெருமானை நினைக்குங்கால் அமுழ்தினுமினிய தெய்வத் திருப்புகழ் நினைவுக்கு வரும்.

    திருப்புகழ் நினைவுக்கு வர வள்ளல் அருணகிரிப்பெருமானின் அருள் நெஞ்சில் நிறையும்.

    வள்ளல் அருணகிரிப்பெருமானின் அருளால் திருப்புகழைப் பாடப்பாட அடியார்களும் தேவரும் மூவரும் புடைசூழ வள்ளி தேவசேனையுடன் நீலக்கலாபதிலேறிய அறுமுகப்பெருமான் மனதில் நீங்காது கொலுவிருப்பானன்றோ!!!!!!!!!!!!!!!

    எங்கயும் சுத்தி ரங்கனைச் சேவி என்று ஒரு வசனம் உண்டு.

    எதைப்பற்றி பேச்செழுந்தாலும் வள்ளல் அருணகிரிப்பெருமான் தன்னை நினைக்கச் செய்வது அவனது காரணரஹித அசீம பெருங்கருணையன்றி வேறெதாக இருக்கவியலும்.

    இப்படி ஒரு சொல்லைச் சுட்டி மனதை ஆனந்தத்தில் ஆழ்த்திய தங்கள் திருவடிகளுக்கு தலையல்லால் கைம்மாறிலேன் என்பதைத் தவிற வேறென்ன சொல்ல முடியும்?

    உருகியுமாடிப் பாடியுமிருகழல் நாடிச்சூடியு
    முணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்

    றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
    யுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே

  5. what is samana matham?…please give the details…very interested to know about this..

  6. பெரியவர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, வணக்கம்.தங்கள் மறுமொழி உருக்கமாக உள்ளது. தங்கள் பார்வைக்கு மற்றுமொரு பொதுத் திருப்புகழைச் சுட்டிக் காட்ட ஆவலாக உள்ளேன். அருணகிரிப் பெருமான் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் உமை முலைப்பால் கமழ்வதனால் ஆரணாதீத கவிதை என்கின்றார். ஆரணம்- வேதம். “கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி கனத னாச லாபார அமுதூரல், கம்ழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வே தேவர் பெருமாளே” (பொது 1049) ‘ஆரணா கீத’ என்றும் ஒரு பாட பேதம் உண்டு.

  7. அன்புள்ள சரவணன், சமணத்தின் கொல்லாவிரதமும் புலான்மறுப்புக் கொள்கையும் வினைக் கொள்கையும் மறுபிறப்புக் கொள்கையும் சில வேறுபாடுகளுடன் சைவத்துக்கு உடன்பாடே. சங்ககாலத்தில் சமணமும் பவுத்தமும் தமிழ் நாட்டில் இருந்தன். அவை தமிழர் பண்பாட்டுக்கோ, தெய்வக் கொள்கைக்கோ கேடு விளைக்கவில்லை. 6ஆம் நூற்றாண்டளவில் கர்நாடகத்தின் வழியாக ஒரு புதிய சம்ணம் வந்தேறியது. திகம்பர சமணம் எனப் பெயரிய அது, பெண் வெறுப்புக்கு வித்திட்டது. சீவக சிந்தாமணி ஆசிரியர், ‘எண்ணிப்பத்து அங்கையிட்டால் இந்திரன் மகளாயினும் வெண்ணெய்க் குன்றுபோல் உருகி” சோர்ம் போவாள் எனப்பட்டுகின்றார். திருமுறைகளில் மகளிர் மகிழ்ச்சியுடன் சோலைகளிலும் நீர்த்துறைகளிலும் ஆடுவதும் கணவன்மாருடனும் குழந்தைகளுடனும் திருக்கொவிலில் வழிபடுவது, சுதந்திரமாக இயங்குவதும் பாடப்பெறுகின்றன. திருஞாசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வெறுத்த சமணம்யாது:ஆடை உடுத்தாதவர். நீராடத அழுக்கு மேனியர்; பல் துலக்காமையின் ஊத்தை வாய் உடையவர்; முடை நாற்றம்வீசுபவர். தடுக்குப் பாய் உடுப்பவர். தலமயிரைக் குரத்தியர் (சமண பெண் ச்ந்நியாசிகள்) நகத்தால் கிள்ளீப் பறிக்கபுபட்டுத் சீழ் ஒழுகும் தலையர். யானை போல் உணவுக் கவலத்தைக் கையில் வாங்கி நின்றுண்பவர்.பறித்த புந்தலைக் குண்டிகைச் சமண்ர். வேத மதத்தை அலர் தூற்றுப்வர். உடலை வருத்தும் பொய்த் தவத்தை மெய்த்தவமாகக் கொள்பவர். இவைபோன்ற கொள்கைகளையே திருஞானசம்பந்தர் வெறுத்தார். நாடு முழுதும் இத்தகைய அநாச்சரக் கும்பல் இருந்தால் நாடு இருளடையாமல் ஒளியா வீசும்? அவர்களுடைய மதக் கொள்கையும் இவ்வாறே தெளிவற்றதொன்றாம். இறை நம்பிக்கையுடைய எச்சமயமும் அதனதன் அளவில் மக்களுக்கு நன்மை பயப்பனவே; அதனால் அவையும் வேண்டப்படுவனவே என்பதே சைவத்தின் கொள்கை; வைதிக மதத்தின் கொள்கையுமாம் . .

  8. நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் கட்டுரை வாசிக்க மகிழ்ச்சி தங்கள் சொல் நடை பொருள் நடை மிக அருமை அரசன் தவறும் போது அரசி அரசனை நேர் வழிக்கு கொண்டு வந்த விதம் மிக அருமை இது தொடர்பாக அனல் வாதம் மற்றும் புனல் வாதம் நிகழ்வுகளையும் தெரிவித்து இருந்தால் வாசகர்களுக்கு மேலும் தகவலாக கிடைத்து இருக்கும் வான் முகில் வளாது பெய்க மற்றும் வாழ்க அந்தணர் பாடல் ஏடு ஒதுங்கியதால் திருவேடகம் என்று அழைக்கபட்டது தங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆலவாயன் அருள் இருக்கட்டும் வணக்கங்களுடன் பாரதிசுதன்

  9. கொல்லா விரதத்தை, தமிழின் வளர்ச்சிக்கு உதவிய, வீணான சடங்குகளை கண்டித்த சமணம் ஒரு இருளில் தள்ளும் மதமா? நம் சிவபெருமானும் ஒரு திகம்பரர் (ஆடை உடுத்தாத ஒரு சந்நியாசி) என புகழப்படுவதை அறியீரா? ஆடை கூட வேண்டாத, உடலை சுமையாக நினைக்கும் ஒரு உயர்ந்த ஞானத்தை சமய காழ்ப்புணர்ச்சி காரணமாக அக்கால சைவ மதம் விஷ விதை தூவியது. இப்போதுமா? எனது நீண்ட கால தமிழ் சமண நண்பர்கள் உங்கள் கட்டுரை கண்டு, தமிழ் ஹிந்துவிலும் இவ்வாறு இநதிய மதங்களுக்குள் விரோதத்தை வளர்க்கும் கட்டுரைகள் வரலாமா?…

  10. சமண மதம் இல்லையேல், அஹிம்சை என்ற சொல்லுக்கு பொருள் இல்லை என்ற அளவு அஹிம்சை, சத்தியம், நேர்மை, திருப்பி தாக்காத குணம் , அதிக பொறுமை ,, அதீத துறவு நிலை, தேவையற்ற சடங்குகள், வேள்விகளில் பிராணிகளை பலிஇடுதலை தடுத்தல் போன்றவற்றை நம் இந்தியாவுக்கு நம் நாட்டில் தோன்றிய சமணம் வழங்கிய கொடை. பிராமணர்களே (உ-ம்_ இந்திரபூதி) ஜைனத்தை முன்னெடுத்து சென்றவர்கள். கட்சிகளுக்குள் தகராறு உள்ளதை போல் அன்றைய தமிழகத்தில் மதங்கள் ஒன்றை ஒன்று தாக்கிகொண்டுள்ளன என்பதை வரலாறும், தமிழ் நூல்களும் கூறும். அன்றைய நிலையில், இன்று நாம் வணங்கும் நாயன்மார்கள் கூட, கருத்து மோதலை தாண்டி, தனிப்பட்ட முறையில் அடுத்த மதத்தை சார்ந்தவர்களை, குறிப்பாக சமணர்களை விமர்சித்துள்ளனர் (உ-ம் கறுத்த மேனியர், ஊத்தை வாயர், குண்டர்…). அந்த காலத்தில் சைவ மத வளர்ச்சிக்கு, அவை தேவை பட்டிருக்கலாம். இன்றைய நிலையில் அது தேவை இல்லை. மேலும் அடுத்தவர்களை இழிவுபடுத்துவது, திரு. வர்மா குறிப்பிட்டது போல், நம்மிடையே, குறிப்பாக இந்தியா மதங்களிடையே ஒற்றுமை இன்மையை ஊக்குவிக்கும். தனிப்பட்ட blog ஆக இருந்தால் கூட தவறுதான், என்றாலும், தமிழ் ஹிந்து போன்ற நல்ல பொறுப்புள்ள தளத்தில் இதை போன்ற கட்டுரைகளை மென்மைபடுத்துவது நலம்.. அன்புடன் – பெரியகருப்பன்.

  11. அன்பின் ஸ்ரீ ஆர்.டி.வர்மா மற்றும் ஸ்ரீ பெரிய கருப்பன்

    ஹிந்து மதம் என்ற ஆல வ்ருக்ஷத்தில் பல்கிப்பெருகிய பற்பல சமயங்களுக்குள் ஒற்றுமைகளும் உண்டு வேற்றுமைகளும் உண்டு.

    சமண மதத்தை முனைவர் ஐயா அவர்கள் தமது உத்தரத்தில் முற்று முழுதாக விலக்கவில்லை என்பது தெள்ளெனத்தெளிவு.

    ஸ்ரீ ஆர்.டி.வர்மா / ஆர்.டி.வர்மன் அவர்கள் ஓரிரு வருஷம் முன்னர் திகம்பர சமணம் பற்றி நான் கருத்துப்பகிர்ந்த விஷயத்தில் சிறியேனுடன் கருத்து சாம்யதை கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. சரிபார்த்தேன். கீழே கண்ட சுட்டியில்.

    https://tamilhindu.com/2011/09/nirvana-sukhadaayini/

    \\ தமிழின் வளர்ச்சிக்கு உதவிய, \\ வீணான சடங்குகளை கண்டித்த சமணம் ஒரு இருளில் தள்ளும் மதமா? \\ எனது நீண்ட கால தமிழ் சமண நண்பர்கள் உங்கள் கட்டுரை கண்டு, தமிழ் ஹிந்துவிலும் இவ்வாறு இநதிய மதங்களுக்குள் விரோதத்தை ….\\

    முனைவர் ஐயா அவர்கள் சமணக்கொள்கைகள் சைவ சமயத்துடன் எந்த அளவுக்கு ஒத்து வருகின்றதோ அந்த அளவுக்கு அவற்றை ஏற்பதையும் மிகத் தெளிவாக சொல்லியுள்ளதைத் தாங்கள் கண்ணுறவில்லை. தங்களுடைய கவனத்துக்கு அந்த வாசகங்களை திரும்பவும் அடைப்புக்குள் கீழே கொடுத்துள்ளேன்.

    \\ சமணத்தின் கொல்லாவிரதமும் புலான்மறுப்புக் கொள்கையும் வினைக் கொள்கையும் மறுபிறப்புக் கொள்கையும் சில வேறுபாடுகளுடன் சைவத்துக்கு உடன்பாடே. \\

    அது மட்டுமா, சமணத்தையும் பௌத்தத்தையும் அவை தமிழகத்தில் செழித்திருந்த காலத்தில் — அவை எப்படி இருந்தன என்பதை ஐயா அவர்கள் விதந்தோதியும் உள்ளார்.. அதையும் தங்கள் கவனத்துக்கு கொணர்கிறேன்.

    \\ சங்ககாலத்தில் சமணமும் பவுத்தமும் தமிழ் நாட்டில் இருந்தன். அவை தமிழர் பண்பாட்டுக்கோ, தெய்வக் கொள்கைக்கோ கேடு விளைக்கவில்லை \\

    திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நிராகரணம் செய்த சமணக்கொள்கைகளையும் பட்டியலிட்டுள்ளார்கள் ஐயா அவர்கள்.

    இது எக்காலும் ஒரு சமயத்தை முற்று முழுதாக நிராகரணம் செய்வதாக ஆகாது என்று ஸ்ரீ ஆர்.டி. வர்மா அவர்களும் ஸ்ரீ பெரிய கருப்பன் அவர்களும் உணர்வர் என எண்ணுகிறேன்.

    அவ்வளவு ஏன்……சமயம் சைவமே ஆயினும் புலால் உண்ணாமை என்ற கொள்கையை சைவ சமயம் சார்ந்து ஏற்கும் ஐயா அவர்கள் புலால் உண்ணுதலை கொள்கையாகக் கொண்ட *காபாலிகம்* என்ற சைவ சமயத்தை அதன் ஏற்கவொண்ணா கொள்கைகளுக்காக ஏற்கமாட்டார்.

    இதே தளத்தில் சைவம் மற்றும் வைஷ்ணவம் என்ற இரு சமயங்களைச் சார்ந்தோரிடையே அபிப்ராய பேதங்கள் வரும்போது அவை கூட பதிவேறியுள்ளன.

    இந்த சம்வாதங்களில் நாம் மிக முக்யமாகக் காணவேண்டியது ஹிந்து மதத்தில் பற்பல சமயங்களினூடே வேற்றுமைகள் மட்டிலும் இல்லை. மாறாக ஒற்றுமைகளும் உண்டு என்பதும்.

    மேலும்,

    வேற்றுமைகள் என்பது வேறு வேறு சமயம் சார்ந்தவர்களால் ஒரு புறம் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில்

    திறந்த மனதுடனான பார்வையில் ஒற்றுமைகளை மிகத் தெளிவாக விதந்தோதும் பாங்கையும்

    மிகக்குறிப்பாகக் காண்கிறேன்.

    அது மட்டுமல்ல சமணம் மற்றும் பௌத்தம் என்ற இரு சமயங்களிடையேயும் வைதிகம் மற்றும் சாக்தம் என்ற பிரிவுகளுடன் இன்றளவும் தொடர்ந்த சம்வாதம் ஹிந்துஸ்தானமுழுதும் நிகழ்கின்றன.

    சமணர்களின் த்யான பத்ததி சம்பந்தமான ஒரு நூல் நாலைந்து வருஷ முன்னர் வித்யாபாரதி ஃபவுண்டேஷன் ஸ்தாபனத்தாரால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. சாக்தம் மற்றும் அத்வைத வழிமுறைகளைக் கொண்ட அன்பர்கள் வஜ்ரயான / தாந்த்ரிக பௌத்தர்களுடன் நிகழும் சம்வாதங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

    தமிழகச் சமணம் பற்றி கூகுள் குழுமங்களில் விவாதம் நிகழ்ந்து வந்தது நினைவுக்கு வருகிறது.

    ஸ்ரீமான் ஆர்.டி வர்மா / வர்மன் அவர்கள் சமணக் கொள்கைகள் பற்றி தமிழ் நூற்களிலிருந்தோ சம்ஸ்க்ருத / ப்ராக்ருத நூற்களிலிருந்தோ வ்யாசாதிகள் எழுதி நமது தளத்தில் பகிர்ந்தால் தமிழகத்தில் செழித்துத் தழைத்த ஒரு சமயம் பற்றி நமது தளத்து வாசகர்கள் அறிந்து கொள்ளலாமே.

    அக்கார்யத்தை அன்னார் காலதாமதிக்காது செய்ய வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  12. ஸ்ரீமான் முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் தனது தெளிவான கருத்துப்பகிரல்களில் — பொன்னெழுத்துக்களில் பொறிக்கத்தக்க — ஹிந்து மதத்தின் ஒப்புயர்வற்ற கொள்கை — ஒன்றைப் பகிர்ந்தமையும் எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

    \\ இறை நம்பிக்கையுடைய எச்சமயமும் அதனதன் அளவில் மக்களுக்கு நன்மை பயப்பனவே; அதனால் அவையும் வேண்டப்படுவனவே என்பதே சைவத்தின் கொள்கை; வைதிக மதத்தின் கொள்கையுமாம் . .\\

    எவ்வளவு அர்த்தம் பொதிந்த கருத்துக்கள். இக்கருத்தையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஹிந்துஸ்தானம் முழுதும் உலகமுழுதும் விடாது முழங்கிக் கொண்டிருக்கிறது.

    \\ இறை நம்பிக்கையுடைய எச்சமயமும் அதனதன் அளவில் மக்களுக்கு நன்மை பயப்பனவே \\

    இந்த உயர்ந்த கொள்கை பரந்த மனப்பான்மையுடைய ஹிந்து மதத்தின் அனைத்து சமயங்களினுடைய கொள்கைக்கும் ஏற்ற ஒன்றாகும்.

    நமது தள முகப்பில் *தமிழரின் தாய்மதம்* என்ற சொற்கள் நிரந்தரமாக எப்படிக் காணக்கிட்டுகிறதோ அப்படியே

    மேற்கண்ட வாசகமும் முகப்பில் நிரந்தரமாக பதிவிட ஏற்புடையதா என பரிசீலிக்குமாறு ஆசிரியர் குழுவினரிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    மிகவும் விசாலமான — புராதனமான — பற்பல சமயங்களைத் தன்னகத்தே கொண்ட — ஹிந்து மதத்தின் சாரத்தை — எளிய சொற்களில் ஆழமாகப் பதியும் வாசகமாக மேற்கண்ட வாசகத்தைக் கண்ணுற்றேன் என்றால் மிகையாகாது.

  13. மனித குலம் அத்தனையையும் ஒரே அலகீட்டுக்குள் ஒரே கொள்கைக்குள் அடைக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தது நமது ஹிந்து மதம். அதைப்புரிந்து கொள்ளாது மனித சமுதாயம் முழுவதையும் ஒரே கொள்கைக்குள் வன்முறை மூலமாக திணிக்க முயல்வது விதேசத்தில் இருந்து ஹிந்துஸ்தானத்தில் இறக்குமதியான ஆப்ரஹாமிய மதங்கள்.

    ஆகவே தான் ஹிந்து மதத்தின் செயல்பாடுகள் பன்முகத்தன்மை கொண்டதாகவும் அதை விதந்தோதும் மாண்புடையதாகவும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

    அன்பர்கள் ஸ்ரீ ஆர்.டி.வர்மா மற்றும் ஸ்ரீ பெரிய கருப்பன் அவர்களது கருத்துக்களில் புலால் உண்ணாமை மற்றும் சடங்குகள் (சில) பற்றிய கருத்து சம்பந்தமானது இந்த உத்தரம்.

    புலால் உண்ணாமை என்ற உயர்ந்த கொள்கை ஜீவகாருண்யம் என்ற உயர்ந்த அறம் சார்ந்து விதந்தோதப் பட வேண்டிய கொள்கை தான். எனக்கு மிகவும் மனதுக்குகந்த கொள்கையே.

    எனக்கும் ஸ்ரீ ஆர்.டி.வர்மா மற்றும் ஸ்ரீ பெரிய கருப்பன் போன்றோருக்கும் நாம் ஒழுகும் விவித சமய நெறிகள் சார்ந்து இது உயர்ந்த கொள்கை என்பதற்காக — இந்தக் கொள்கையுடன் ஒத்துப்போகாத கொள்கைகளுடைய — புலால் உணவினை விரும்பி உண்ணும் நமது மற்ற ஹிந்து சஹோதரர்கள் மீதும் விதேசங்களில் இருந்து இறக்குமதியான ஆப்ரஹாமிய மதங்களை ஒழுகும் மற்ற சஹோதர அன்பர்கள் மீதும் புலால் உண்ணாமை என்ற கொள்கை திணிக்கதகாதது என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    எத்தனையோ நாட்டார் வழிபாட்டு முறைமைகளில் ம்ருக பலி என்பது ஒரு அங்கம். நாட்டார் வழிபாட்டு முறைகளும் ஹிந்து மதத்தின் ஒரு கூறு தான். அந்த வழிபாட்டு முறைமைகளின் படி ஒழுகும் அந்த அன்பர்கள் பாபம் செய்பவர்கள் என்றோ அவர்களைப் பாபிகள் என்றோ நான் கருத மாட்டேன்.

    என்னளவில் — என் சமய ஒழுக்கங்கள் சார்ந்து எனக்கு ம்ருகபலி ஏற்கவொண்ணா விஷயம். அவ்வளவே.

    அப்படியே சடங்குகளும். என் சமய நெறிமுறைகள் சார்ந்து நான் சடங்குகள் நிகழ்த்துதல் என் சமயம் எனக்கு விதித்த கடமைகள் சார்ந்தது. கொள்கையளவில் புறச்சமயத்தவர்கள் இதில் வேறுபடலாம். ஆனால் எமது சமயக்கொள்கைகள் சார்ந்து நாம் ஒழுகும் ஒவ்வொரு சடங்கும் அர்த்தமுள்ளவை சமயத்தை முறைப்படி ஒழுகுவதற்கு அங்கமானவை.

  14. திரு வர்மா திரு பெரியகருப்பன் அவர்களுக்கு,
    சைவத் திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் திருவெண்காட்டடிகளின், திருவொற்றியூர் ஒருபாவொருபது என்னும் நூலின் இரண்டாவது பாடலின் கருத்தை உங்கள் கருத்துக்கு வைக்கின்றேன். “ திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள பெருமானே!, மாதொருபாகனாகிய நின்னைத் திருமாலென்றும் பிரமனென்றும் அருகனென்றும் புத்த னென்றும் பல்வேறு பெயர்களாற் சமயவாதிகள் மாறுபடக் கூறினாலும் யாவர்க்கும் மேலாம் இறைவனாகிய நீ, அவ்வச் சமயத்தவர்களுக்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு தோன்றி அருள் புரிகின்றாய். பளிங்கு தன்கண் சார்ந்த பொருளின் தன்மையைப் புலப்படுத்தி அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றித் தனித்து விளங்குமாறு போன்று மேம்பட்டு விளங்குதல் நின் திருவுருவின் இயல்பென உணர்ந்தேம்”
    இத்திருப்பாடலில் ‘ முதல்வன் ஒருவனே, அவனே வெவ்வேறு திருநாமங்களுடன் அவ்வச்சமயத்துக்கு இறைவனாய், அருளினால் அவர்கள் நினைத்த திருமேனி கொண்டு தோன்றி அருள்புரிகின்றான்’ என்பது சைவர்களின் கொள்கை என்பது தெற்றெனத் தெளிவாகும்.ஆன்ம முன்னேற்றத்திற்குச் சமயங்கள் வழிகாட்டிகளே; சமயங்கடந்த ஒரு நிலையுண்டு; அதுவே ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கும் என்பது சைவர்கள் கொள்கை. இக்கொள்கையினைச், ‘ சைவ சமயமே சமயம், சமயாதீதப் பொருளைக் கைவந் திடவே”, ‘ சைவமுதலா அளவில் சமயமும் வகுத்து சமயாதீதமும் வகுத்த நீ” என்னும் தாயுமானவ சுவாமிகளின் திருவாக்கால் அறியலாம். உலகில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும் எல்லாச்சமயங்களும் வேண்டப்படுவனவே.
    திருஞானசம்பந்தர்ரும் திருநாவுக்கரசரும், ஏன், ‘சமண் மிண்டர்கள் பாய்ந்துண்ணும் சோற்றைப் பிடுங்கி நாய்க்கிடுமின் நீரே” என்னும் ஆழ்வாராதிகளும் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் சமண பவுத்தர் களுக்குப் பகைவர்கள் அல்லர். அதனதன் அளவில் அவை வேண்டப்படுவனவே. மதத்தின் பெயரால் சமயவாதிகள் மற்றையோர் மேல் மந்திரப் பிரயோகம் செய்து அழிக்க முயல்வதும், மந்திரம் பலனளிக்காதபோது வாழிடத்தில் தீவைப்பதும் அரசினைக் கைக்குள் போட்டுக்கொண்டு பிறசமயத்தவரை அழிப்பதும், அநாச்சார பழக்க வழக்கங்களைச் சமய ஒழுக்கமாகப் போதிப்பதையும் மட்டுமே சைவ வைணவ திராவிட வேதங்கள் கண்டித்தன. திருமுறைகளில் காணப்படும் கண்டன மொழிகள் விஷ வித்துக்கள் அல்ல; தூய்மை செய்வதற்கு எடுத்துக் காட்டப்பட்ட அழுக்குகள். இன்றைய ஸ்வேதாம்பர சமணர்களும் சைவர்களும் வேறுபாடின்றிப் பழகுவதைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். இசுலாமியருடனும் பெந்தகொஸ்தே கிறித்துவர்களுடனும் பழகுவதைக் காட்டிலும் ஸ்வேதாம்பர சமணர்களுடன் பழகுவது எளிதாகவும் இயல்பாகவே உள்ளது. சமணம் பாரதத் திரு நாட்டில் தோன்றிய ஒரு மதம். இந்துத்துவத்தின் ஒருகூறு என்பதில் ஐயமே இல்லை

  15. \\ திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள பெருமானே!, மாதொருபாகனாகிய நின்னைத் திருமாலென்றும் பிரமனென்றும் அருகனென்றும் புத்த னென்றும் பல்வேறு பெயர்களாற் சமயவாதிகள் மாறுபடக் கூறினாலும் யாவர்க்கும் மேலாம் இறைவனாகிய நீ, அவ்வச் சமயத்தவர்களுக்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு தோன்றி அருள் புரிகின்றாய். \\

    முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் திருமுறையிலிருந்து எடுத்தாண்ட கருத்தை ஒட்டிய ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏகதா மந்த்ரம். நாகர லிபியிலும் தமிழ் லிபியிலும் ச்லோக சாரம் தமிழிலும்

    यं वैदिका मन्त्रद्रशः पुराणा इन्द्रं यमं मातरिश्वानमाहुः
    वेदान्तिनोऽनिर्वचनीयमेकं यं ब्रह्मशब्देन विनिर्दिशन्ति

    யம் வைதிகா மந்த்ரத்ரச: புராணா இந்த்ரம் யமம் மாதரிச்வானமாஹு:
    வேதாந்தினோ S நிர்வசனீயமேகம் யம் ப்ரம்ஹ சப்தேன வினிர்திசந்தி

    வைதிகர்களும் மந்த்ர த்ரஷ்டாக்களான (மந்த்ரங்களைக் கண்டறிந்த) ரிஷிகளும் இந்த்ரன், யமன், மாதரிச்வான் என்றும் எந்தப் பரம்பொருளைச் சொல்லுகிறார்களோ வேதாந்திகள் அப்பரம்பொருளை ப்ரம்மம் என்று சொல்கின்றனர்.

    शैवायमीशं शिव इत्यवोचन् यं वैष्णवा विष्णुरितिस्तुवन्ति
    बुद्धस्तथाऽर्हन्निति बौद्ध जैनाः सत्-श्री अकालेति च सिक्क सन्तः

    சைவாயமீசம் சிவ இத்யவோசன் யம் வைஷ்ணவா விஷ்ணுரிதிஸ்துவந்தி
    புத்தஸ்ததார்ஹன் இதி பௌத்த ஜைனா: ஸத் ஸ்ரீ அகாலேதி ச சிக்க ஸந்த:

    (அந்த பரம்பொருளை) சைவர்கள் சிவன் என்றும் வைஷ்ணவர்கள் விஷ்ணு என்றும் பௌத்தர்கள் புத்தன் என்றும் ஜைனர்கள் அர்ஹன் என்றும் சீக்கியர்கள் ஸத் ஸ்ரீ அகால் என்றும் அழைக்கின்றனர்.

    शाश्तेति केचित् कतिचित् कुमारः स्वामीति मातेति पितेति भक्त्या
    यं प्रार्थयन्ते जगदीशितारं स एक एव प्रभुरद्वितीयः

    சாஸ்தேதி கேசித் கதிசித் குமார: ஸ்வாமீதி மாதேதி பிதேதி பக்த்யா
    யம் ப்ரார்த்தயந்தே ஜகதீசிதாரம் ஸ ஏக ஏவ ப்ரபுரத்விதீய:

    சாஸ்தா என்றும் குமரன் (முருகன்) என்றும் ஸ்வாமி என்றும் மாதா என்றும் பிதா என்றும் பக்தியுணர்வுடன் அழைக்கப்படும் பரம்பொருள் இரண்டாவது என்றில்லாத ஒரே பரம்பொருள் ஆகும்.

  16. அன்புடையீர், . நான், தமிழை தாய் மொழியாக கொண்ட பாரதீயன் ; ஒரு ஸ்வயம் சேவக்; மற்றும் மதத்தால் ஒரு ஜைனன் (சமணன்). திகம்பர பிரிவை சேர்ந்தவன். ஒரு தூய்மையான சமண/பாரதீய பாரம்பரியத்தில் வந்ததற்காக பெருமை கொள்பவன். நீண்டகால தமிழ் ஹிந்துவின் வாசகன். கடந்த ஜனவரியில் கூட தங்களின் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தேன். கீழ்கண்ட என்னுடைய கருத்துக்களை இங்கு பதிய அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்:

    மேற்கண்ட கட்டுரையில் மென்மை காட்டி இருக்கலாம் என்ற திரு. பெரிய கருப்பனின் கருத்தில் உடன் படுகிறேன். பெருமதிப்பிற்குரிய
    திரு.முத்துகுமாரசுவாமி அவர்களின் கருத்து எனக்கு மிக,மிக சொல்லொனா வேதனையும்,வருத்தமும், அதிர்ச்சியும் அளித்தது.
    //ஆடை உடுத்தாதவர். நீராடத அழுக்கு மேனியர்; பல் துலக்காமையின் ஊத்தை வாய் உடையவர்//
    திகம்பரமாக உள்ள சந்நியாசிகள் அனைவரையும் -கும்பமேளாவில் வரும் வணங்கதகுந்த அவதூதர்கள் அனைவரையும் கேவல படுத்துவது போல் உள்ளது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் திட்டுவது போல் பல்துலக்காமையை நகையாடி உள்ளீர்கள்.உடல் பற்றில்லா ஞானிகள் பற்றி பேச நமக்கு என்ன அருகதை. திகம்பரம் ஒன்றும் ஹிந்து பாரம்பரியத்தின் எதிரி இல்லை. ஆபிரகாம் மதகாரர்கள் போல் கருத்து சொல்லி உள்ளீர்கள். திராவிடர் கழகம்தான் உங்களின் கருத்து போல் “விடுதலையில்” திகம்பரத்தை பற்றி வெளிஇட்டது. திகம்பரத்தின் உயர்வை பற்றி தமிழ் ஹிந்துவில் முன்பு வந்த கட்டுரையை மறந்து விட்டீர்களா ஐயா?

    // முடை நாற்றம்வீசுபவர். தடுக்குப் பாய் உடுப்பவர். தலமயிரைக் குரத்தியர் (சமண பெண் ச்ந்நியாசிகள்) நகத்தால் கிள்ளீப் பறிக்கபுபட்டுத் சீழ் ஒழுகும் தலையர்//உடலை வருத்தும் பொய்த் தவத்தை மெய்த்தவமாகக் கொள்பவர்//யானை போல் உணவுக் கவலத்தைக் கையில் வாங்கி நின்றுண்பவர்.பறித்த புந்தலைக் குண்டிகைச் சமண்ர்//

    நீங்கள் வணங்கதகுந்த அகோரி சாமியார்கள் அருகில் சென்றுல்லீரா? நான் சென்றிருக்கிறேன். அவர்களின் எப்படி நாற்றம் வீசும் தெரியுமா?.பிடிக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் முடை நாற்றம் வீசும் சாமியார் பக்கத்தில் செல்கிறீர்கள்? சமண ஞானிகளின் தவ வாழ்க்கை கடுமையானதுதான்; ஆன்மீக உயர் நிலை ஒன்றும் சுலபனாதல்ல.. அவர்கள் தவம் பொய் தவம் என்று எப்படி கூறுகிறீர்கள்? . அதை விமர்சிக்க நமக்கு என்ன தகுதி உள்ளது?

    //வேத மதத்தை அலர் தூற்றுப்வர்.. இத்தகைய அநாச்சரக் கும்பல் இருந்தால் நாடு இருளடையாமல் ஒளியா வீசும்? அவர்களுடைய மதக் கொள்கையும் இவ்வாறே தெளிவற்றதொன்றாம்//
    வேதத்தின் சில கொள்கைகள் (பிராணிகளை பலி மூலம் ஆஹூதி தரும் வேள்வி) சமணத்திற்கு எதிரானவைதான். அதற்காக முழு வேதத்தையும் எதிர்க்கவில்லை என்பதை நீலகேசி மூலம் அறியலாம். நமக்கு ஒரு கொள்கை புரியவில்லை என்றால் அதற்காக அது தெளிவற்றதா? “அனாச்சார” கும்பல் என்று ஏதோ தெருவில் நின்று ஆபிரகாம் மதக்காரர்கள், நம் பாரத சாமியார்கள் பற்றி கூச்சலிடுவது போல் உள்ளது உங்களின் கருத்து.

    //இன்றைய ஸ்வேதாம்பர சமணர்களும் சைவர்களும் வேறுபாடின்றிப் பழகுவதைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன்//
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? . “திகம்பர” சமணர்களுடன் பழக முடியாதா? திகம்பர சமணம் என்பது இல்லற தர்மம், துறவற தர்மம் இரண்டையும் உள்ளடக்கியது. ஞானிகளுக்குதான் “திகம்பரம்”. இல்லற சமணர்கள் எவ்வாறு ச்வேதம்பர சமணர்களுடன் வேறுபட்டவர்கள் என்பதை சற்று சொல்லுங்கள். என்னை போன்ற, சுமார் ஒன்றரை லட்சம் தமிழ் சமணர்களுடன், தமிழை வளர்த்த தமிழர்களுடன் பழகுவது கஷ்டமா? மிகவும் வருந்துகிறோம் அய்யா. என்னை போன்ற ஸ்வயம் சேவக்குகள் தமிழ் திகம்பர சமணத்தில் உள்ளார்கள் என்பதாவது உங்களுக்கு தெர்யுமா?
    உங்கள் கருத்துக்களை படிக்கும் வரை, நான் அந்த காலத்தில்தான் சைவ மக்கள் மற்ற பாரத மதங்களை வெறுத்து /வதைத்து வளர்ந்தார்கள் என நினைதேன். இப்போதும் அப்படித்தானோ என நினைக்க தொடருகிறது. என்றாலும் நான் வணங்கும், சிவனும், அருகனும் எனக்கு ஒன்றுதான். உங்களை போன்றவர்களால் என் கருத்தை மாற்றுவது கஷ்டம் என நினைக்கிறேன். ஜெய் ஜிநேந்திரா! வாழ்க பாரதம்! அன்புடன் – நேமி நாதன்.

  17. திரு பர்ர்ஸ்வரநாதன் அவர்களுக்கு, தங்கள் மனவேதனையை நானும் அடைகின்றேன். திகமபர சமணர்கள் இன்று இங்குகாட்டப்பட்ட நிலையில் வாழ்வதில்லை. இன்று தமிழ்ர்களாக வாழும் திகம்பரசமணர்கள் சைவர்களாகவே அல்லது இந்துத்துவர்களாகவோ வாழ்வதை எங்கள் கொங்கு மாவட்டத்தில் உள்ள சமணக்கோயில்களில் காணலாம். நிச்சயமாக புலால் உண்ணும் ஒருவன் வீட்டில் உண்ணுவதை விட சமணன் வீட்டில் உண்ணுவதில் எனக்குத் தயக்கம் இராது. பழகுவது மகிழ்ச்சியாகவே இருக்கும்.. நான் கூறிய அநாச்சாரங்கள் இன்று சமண்ர்களிடம் இல்லை என்பது வெளிப்படை. அதற்கு யாரும் சான்று கூற வேண்டுவதில்லை. சமணமும் பவுத்தமும் வேதமதத்தில் தேங்கி நின்ற கொலைவேள்வியை நீக்க வந்த புரட்சிக் கொள்கைகள்தாம். அவையும் இந்துத்துவத்தின் பலகிளைகளே. கொலை மறுத்தல் என்னும் உன்னத கொள்கை உழவுத்தொழில் மறுப்பு, தீண்டாமை முதலிய வேறு தீமைகளை அக்காலச் சமயம் கொண்டுவந்துவிட்டது. உழவு உயிர்க்கொலையுடன் சம்பந்தப்பட்டது, ஏரில் எருதுகளைப் பூட்டி உழுவது மிருகவதை, .நிலத்தை உழுவதால் மண்புழு, களை முதலியவை மாயும், தோலினால் ஆன பொருள்கள் கொலை சம்பந்தப்பட்டவை, அவற்றைப் ப்ய்ன்படுத்துவோர் தீண்டத்தகாதவர், கண்டு முட்டு கேட்டு முட்டு என்பனபோன்றவையே கண்டிக்கப்பட்டன; விலக்கப்பட்டன. உழவுத் தொழிலை விலக்கிய அக்காலச் சமணர் வணிகத்தையும் வட்டிக்குப் பணம் கொடுத்தலையும் அதனாற் செல்வம் சேர்த்தலையும் தொழிலாகக் கொண்டனர். இன்று திங்களூர், விஜயமங்கலம் பக்கத்துச் சமணர்கள் உழவுத் தொழிலையும் செய்கின்றனர். இராஜஸ்தானில் எலிக்கோயில் தோன்றிய வரலாறும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.சமண்சமயமும் பவுத்தமும் தோன்றிய நிகழ்ச்சிகள் இந்துத்துவ வளர்ச்சியை காட்டுவதைப் போலவே ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய் சைவ வைணவ பத்தி இந்துத்துவ வளர்ச்சியைக் காட்டும். புலால் உண்ணும் மரபினரையும் விலங்குகளின் தோல் முதலியவற்றில் தொழில் செய்வோரையும் தீண்டத்தகாதவர் என வில்க்கி ஒதுக்காமல் அணைத்துக் கொண்ட வேதநெறியைப் பக்தி இயக்க காலத்தில் காண்கின்றோம்.. திருஞானசம்பந்தர் எண்ணாயிர சமணர்களைக் கழுவேற்றவில்லை; அவர்கள் ஞான சம்பந்தரால் வைதிகர் ஆனார்கள். அவர்களே ‘அஷ்ட சகஸ்ரம்’ என்ற வைதிகப் பிரிவினர் என்று கூறுவது உண்டு. இதன் உண்மை எனக்குத் தெரியாது. ஞானசம்பந்தர் தம் தொண்டர்கள் இருந்த திருமடத்தினை நெருப்பிலிட்டுக் கொழுத்திய arson என்னும் குற்றம் செய்தவர்களே தண்டிக்கப்பட்டனர் என்பது அப்புராண செய்தி மேலும் சிவனின் பிச்சைத் தேவர் திருக்கோலம் திருமுறைகளில் அதிகம் பேசப்படுகின்றது. சிவனின் திருநாமங்களில் ‘திகம்பராய’ என்பதும் ஒன்று. இது சமணர்கள் வேத நெறிக்கு மாறிய சமயத்தில் விளைந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. ஒரு கூட்டம் சமயம் மாறும்போது அவர்கள் போற்றிவந்த வடிவங்களையும் தம்முடைய புதுச் சமயத்துக்குக் கொண்டு வர்தலை இன்றும் காண்கின்றோம் என்னுடைய மறுமொழி தங்களையும் தங்களைப் போன்ற கருத்துடை யவர்களையும் வருத்தியிருக்குமேல் பொறுத்தருள வேண்டுகின்றேன். . உங்களைப் புண்படுத்துதலோ வருத்துதலோ என்னுடைய எண்ணம் அன்று. திராவிடம் பேசுவோரும் அந்நியமத வாக்குவங்கிக்காக இந்துத்துவத்தைத் தூற்றுவோரும் இந்துத்துவம் பிராமணத்துவம் என்று கூறிப் பிராமணர்களின்மேல் வெறுப்பை ஏற்றி, அந்த வெறுப்பின் வழி இந்துத்துவத்தை அழிக்க, இந்த வரலாற்றினைத் திரித்துக் கூறுவதற்கும் எதிராக எழுந்ததே என்மறு மொழி. ஒரு வேண்டுகோள்: தமிழ் இந்துவில் சைவம் வைணவம் வேதம் வேதாந்தம் பற்றிய கட்டுரைகள் வெளிவருகின்றன. இந்துத்துவத்தின் கிளைகளான அவைதிக சமண பவுத்தங்களைப் பற்றிய கட்டுரைகள் வருவதில்லை. திகம்பர சுவேதாமபர சணக் கொள்கைகள் பற்றிய கட்டுரைகள் எழுதுவீர்களேயானால் பயன்பெறுவோம்.

  18. //இப்போதும் அப்படித்தானோ என நினைக்க தொடருகிறது. என்றாலும் நான் வணங்கும், சிவனும், அருகனும் எனக்கு ஒன்றுதான்// இதையேதான் நானும் வலியுறுத்துகின்றேன். வரலாற்றைத் திரித்து உரக்கக் கூவி இந்துத்துவர்களிடம் பிளவு ஏற்படுத்த விரும்புவோர் வலையில் விழுந்துவிடல் ஆகாது.

  19. திரு முத்துகுமாரசுவாமி அவர்களுக்கு.,
    திரு. பார்ஸ்வனாதனுக்கு, உங்களின் பதில் பொருத்தமானதாக இல்லை என்பது மட்டுமல்ல. சமண மதம் பற்றிய எந்த புரிதலுமின்றி பதிலளித்துள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல.. பலரும் அப்படிதான். உதாரணமாக..//நான் கூறிய அநாச்சாரங்கள் இன்று சமண்ர்களிடம் இல்லை என்பது வெளிப்படை// என்று கூறி உள்ளீர்கள். சமணம் என்பது இல்லற தர்மம், துறவற தர்மம் என்ற இரண்டையும் உள்ளடக்கியது. உங்கள் கணக்கின்படி அனாசாரம் (அதாவது ஆடையின்றி இருப்பது, பல் துலக்காமல் இருப்பது, கேசலோசனம் செய்வது போன்றவை) என்பது துறவிகளுக்கு மட்டுமே. இன்றும் திகம்பர துறவிகள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.. திரு பாற்சுவநாதன் குறிப்பிட்டது போல், உங்களை போன்றவர்கள் சொல்லால் அடிக்கிறீர்கள்; புரிதலற்ற திராவிடர் கழகத்தினர் கல்லெறிவது,துடைப்பத்தால் அடிப்பது போன்றவற்றை துறவிகளுக்கு செய்வதை கண்கூடாக கண்டிருக்கிறேன் (சென்னை – புழல்) . அந்த தூய்மை துறவிகள் திருப்பி பதில் கூறுவதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ இல்லை. வைணவ மரபை சார்ந்த எனக்கு முதலில் நீங்கள் சொல்வது போல் முதலில் கருத்து வேறுபாடு இருந்து வெறுத்தேன். இன்றும் திகம்பரத்தில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது (அது நாக சாதுவாக இருந்தாலும், சிவனின் திகம்பரமாக இருந்தாலும்) . ஆனால் திகம்பரத்தை மதிக்கிறேன். உழவு இல்லறத்தாருக்கு கூடாது என்று எப்போதும் சமணம் சொன்னதில்லை. அந்த கட்டுப்பாடு சமண துறவை நோக்கி நகர்பவருக்கு. நீங்கள் அநேகமாக சாதாரண புத்தக வழி (நடுநிலை ஆராய்ச்சி அன்று) அறிவு பெற்றிருக்குரீர்கள் என எண்ணுகிறேன். திகம்பர சமணம் என்றால், திகம்பர நிலை ஒன்றின்மூலமே மோக்ஷம் அடைய முடியும் என்று நம்பும் மரபு. அதற்காக இல்லறத்தார் துறவறத்தார் இருவருமே ஒரே பழக்கங்களை கொண்டவர்கள் அல்லர்.

    தமிழ் நாட்டில் தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மாவட்டங்களில் உள்ள தமிழக ஜைனர்களுடன் பழகிஉள்ளேன். நீங்கள் ஒரு ஆச்சாரமான தமிழக ஜைனர்களையும், பிராமணர்களையும் வேறுபடுத்துவது கடினம். மட்டுமல்ல, அவர்களுடன் நீங்கள் இயல்பாக பழக முடியும்.

    ஜைனம் வைணவ மரபுடன் தொடர்புடையது. பகவத் கீதையை அருளிய கிருஷ்ணரின் உறவினர் 21 ஆம் தீர்த்தங்கரர் நேமி நாதர் என்று பாகவதம் சொல்கிறது.சிவபெருமானின் தவ நிலையுடன் ஒப்புடையது ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரர் ஸ்ரீ விருஷபரின் தவ நிலை. ஸ்ரீ விருஷபரை ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் என்கிறது பாகவதம். வேதங்களிலும் ஸ்ரீ விருஷபரை குறிப்பிடுவதாக லோகமான்ய திலகரும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் குறிப்பிடுவர். சாவர்கரும் ஜைனத்தை மதித்தவர்; அத்வானி முதல் நரேந்திர மோடி வரை திரு தருண் சாகர் எனும் திகம்பர சாதுவை மதிப்பவர்களே.

    தனிப்பட்ட முறையில் திகம்பர துறவிகளின் உடற்கூறுகள், பழக்கவழக்கங்களை பார்த்து விமர்சிப்பது ஆழ்வாராக இருந்தாலும், நாயன்மாராய் இருந்தாலும், நாமாய் இருந்தாலும் பண்புடைமை அன்று.

    என்றாலும் உங்களின் வருந்தும் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காக தலை வணங்குகிறேன். பார்ஸ்வனாதணும், ஜைன பண்பாகிய பொறுத்தருளும் தன்மையை கடைபிடிப்பார் என நம்புகிறேன். தமிழ் ஹிந்துவின் வாசகர்கள் அதிமாக எழுதுவது இல்லை என்றாலும், பண்புடையவர்கள் என்பதை கட்டுரையின் பின்னூட்டங்கள் நிரூபிக்கின்றன. நம் பாரத பண்பாடு அதுதான். நம் பாரத மதங்களாகிய சைவம், வைணவம், ஜைனம், புத்தம், சீக்கியம் போன்ற மதங்களிடையே பூசல் இருந்திருக்கலாம். என்றாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழையோடும் பாரத பண்பாடு இவர்கள் அனைவருக்கும் பொது; நம் நாடு என்ற தேச பற்றும் இவர்களிடையே அதிகம். எனவே, கட்டுரைகளை பதிப்பிக்கும்போது கவனம் தேவை. நீங்கள் ஆழ்வாரின் பாசுரங்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவாசகம், வள்ளலாரின் பாடல்களை விவரித்து கட்டுரை எழுதுங்கள்.. அதுதான் இன்றைய பாரதத்திற்கு தேவை.. அன்புடன் – சேஷாத்ரி ஐயங்கார். .

  20. \\ வேதங்களிலும் ஸ்ரீ விருஷபரை குறிப்பிடுவதாக லோகமான்ய திலகரும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் குறிப்பிடுவர். \\

    ப்ரக்யாதி வாய்ந்த இதழியலாளர் ஸ்ரீமதி சந்த்யா ஜெய்ன் அவர்களது தகப்பனார் காலம் சென்ற ஸ்ரீ கிரிலால் ஜெய்ன் அவர்கள் தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் ரிஷபதேவரைப் பற்றி விஸ்தாரமாகப் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.

    \\ சாவர்கரும் ஜைனத்தை மதித்தவர்; அத்வானி முதல் நரேந்திர மோடி வரை திரு தருண் சாகர் எனும் திகம்பர சாதுவை மதிப்பவர்களே. \\

    திகம்பர சாதுவான ஸ்ரீ தருண் சாகர் ஜி மஹராஜ் அவர்கள் அவ்வப்போது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் குருபூஜா, விஜயதசமி நிகழ்ச்சிகளுக்கு வந்து ஸ்வயம் சேவகர்களை ஆசீர்வதித்து மார்க்க தர்சனம் அளிப்பதும் உண்டு.

  21. tதிரு சேஷாத்திரி அவர்களுக்கு நன்றி. நான் சொல்ல வந்த கருத்தை குத்துதல் இல்லாத மொழியில் சொல்லியிருக்கலாம். சொன்ன சொற்களில் பிழை இருக்குமே யன்றி கருத்தில் அன்று. பவுத்தமாயினும் சமணமாயினும் இந்துத்துவத்தின் கூறுகளே. அதனை பாரத நாட்டின் பண்புகளைப்போற்றுபவர் மதித்திடவே வேண்டும். அகோரிகளாயினும் திகம்பரர்களாயினும் அவரவர் நிலையில் நிற்கும்போது போற்றிவழிபடவே வேண்டும். அதற்காக நாடு முழுவதும் அகோரிகளாகவும் திகம்பரர்களாகவும் மாறிவிடுதலை ஆதரிக்க முடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவைதிக சமயங்களைக் கண்டித்த சூழ்நிலைகளை அவர்களுடைய வாக்கிலேயே வைத்துக் காண வேண்டும். அந்தக் கால சூழ்நிலையை முழுதும் நம்மால் கணித்துவிட முடியாது.. அருளாளர்களாகிய அவர்கள்பால் இத்ஹகைய கடுமையான சொற்கள் பிறக்க வேண்டுமெனில், அதற்கான காரணங்களும் இருந்திருக்க வேண்டும். இது என் உறுதியான கருத்து. .சமண தத்துவத்தில் போதிய புரிதல் இன்றி நான் எழுதியிருப்பதாக எழுதியுள்ளீர்கள். அது உண்மையே. சைவ வைணவ தமிழ் நூல்களில் பரபக்கமாகக் கூறியவற்றையே நான் அறிவேன். அதனாலேயே தமிழ் இந்துவில் சமணம் பற்றிய கட்டுரைகள் எழுத வேண்டுகின்றேன்.

  22. திரு க்ருஷ்ணகுமார் மற்றும் திரு.முத்துசுவாமி அவர்களுக்கு, யோசனைக்கு நன்றி. எனக்கு எழுதும் வல்லமை மிகவும் குறைவு என்பது மட்டுமல்ல. ஜைன மதத்தை பற்றிய அறிவு விஸ்தாரமானது அல்ல. என்னுடைய நீண்ட கால நண்பரும், பாரத மதங்களின் பால் மாறாத பற்று கொண்டவரும், தமிழ்ஹிந்துவின் ரசிகருமான, தமிழக ஜைனர் ஒருவர் உள்ளார். அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். நம் தமிழ் ஹிந்துவை படிக்க உடன் உள்ள தமிழக நண்பர்களை உற்சாகபடுதுபவர். அவரின் உந்துதலால்தான் நான், வெளிநாட்டில் இருந்தும், கட்டுரைகளை படித்து நேரமுள்ளபோது கடிதம் எழுதிகிறேன். அவருடன் சொல்லி பார்க்கிறேன்..

    திரு.சேஷாத்ரி மற்றும் திரு. பர்ஸ்வனாதன் அவர்களும் முயற்சிக்கலாம். திரு. சேஷாத்ரியின் நடை நன்றாக உள்ளது..

  23. கி. மு நான்காம் நூற்றாண்டு முதலே சமணர்களும் பௌத்தர்களும் அஹிம்சையை தலைமுழுகி வெகு நாட்கள் ஆயிற்று. மத அரசியல் புரியதொடங்கிவிடார்கள் நம் தமிழன்னை மங்கையர்க்கரசி உண்மையாகவே மங்கையர்கெல்லம் அரசி தான். எங்கள் சோழ வள நாட்டின் கொடும்பாளூர் சத்திர அரசர் வேளிர் குளத்தில் பிறந்த கற்புக்கரசியர். அன்னையால் தான் மகன் கோச்சடையான் ரணதீர பாண்டியன் மாவீரனாகவும் மகாயோஹியாகவும் திகழ்ந்தார். இது வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *