திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

திரு.மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தது தமிழகத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள், அவர்களது கூட்டணி கட்சியினர் உட்பட இந்த செயலை எதிர்க்கின்றனர். ஊடகங்களில் பா.ஜ.க வினர் இந்தநிகழ்வுபற்றிய கேள்விகளால் குழப்பமடைந்து தற்காப்பு ஆட்டம் ஆடுகின்றனர். பீட்டர் அல்போன்ஸ் போன்ற காங்கிரஸ் அறிவுஜீவிகள் தங்களை நியாயவான்களாகக் காட்டிக்கொள்ள மோதி மீது கரிபூசத் துடிக்கின்றனர். கலைஞர் மீண்டும் தமிழர்களைக்காக்கத் தத்துவ மழை பொழியத் தொடங்கிவிட்டார். இதற்கெல்லாம் அவர்கள் சொல்லும் காரணம் தமிழர் நல்வாழ்வு.

ஆனால் இவர்கள் போடும் கூச்சல் சிறிதேனும் தமிழர்களுக்கு நலம் பயக்குமா? உண்மையில் தாங்கள் செய்வது ஈழத்தமிழர்களின் நலனுக்கு எதிரானது என்பது மோதிக்கு எதிராகக் கூச்சல்போடும் இவர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் இவர்களது தேவை ஈழத்தமிழர்களின் நலன் அல்ல அதைவிட மேலான அரசியல் ஆதாயம்..எப்படி? அய்யன் வள்ளுவரைக் கேட்போம்..

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண் பதறிவு.

முதலில் காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸ். இவர் கேட்பது என்னவென்றால், தமிழரைப் படுகொலைசெய்த, ராஜபச்ச நடத்தும் மாநாடு என்று கூறி, “ நாங்கள் காமன்வெல்த் மாநாடு போனதற்கு எங்களை துரோகி என்றீர்களே இப்பொழுது சிவப்புகம்பளம் விரித்து அதே ராஜபச்சாவை விழாவிற்கு கூப்பிடும் நீங்கள் துரோகி அல்லவா?” என பா.ஜ.க வைக் கேட்பதுபோல் மோதியைக் கேட்கிறார். மெய்ப்பொருள் என்ன?

• படுகொலைபுரிந்த ராஜபச்சா வெறும் அம்புதான் எய்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்களின் அரசுதான். இதை ராஜபச்சாவே சொல்லிவிட்டார்

• மாநாட்டுக்குப்போனது படுகொலையைப் பாராட்ட

• தமிழர்கள் தேர்ந்தெடுத்த எம்.பி களால் நடந்த அரசு ஒரு போராளி இயக்கத்தைப் பழிவாங்குவதற்காக அந்த தமிழ் இனத்தையே படுகொலைசெய்ய முற்பட்டதால் அது துரோகம்

• பா.ஜ.க வும் மோதியும் காங்கிரசின் இந்தப் பாதகத்தை கண்டித்தனர். கருணாநிதி செய்ததுபோல் பாவத்துக்குத் துணை போகவில்லை

• பேட்டைதாதா, கைக்கூலியைப் பார்க்கப்போவது போன்றது காங்கிரஸ் செய்தது.

• ஊர்ப்பெரியவர் போக்கிரியை அழைத்துத் திருத்தமுயல்வது போன்றது
மோதிசெய்வது. போக்கிரி திருந்தினால் தமிழர் வாழ வழிகிடைக்கும்..

நமது பார்வையில் ஆரிய மோதி தமிழர் நலம் நாடுவது குற்றம்தானே? மோதியை வாயாரத் திட்டுவோம் வாழ்க தமிழ்.

சரி வைகோ போன்ற கூட்டாளிகளுக்கு என்ன ஆயிற்று?  வைக்கோவால் ராஜபச்சா மீது அவருக்கு உள்ள கோபத்தின் விளைவால் மோதியின் ராஜ தந்திரத்தை உணரமுடியவில்லை என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

மோதியின் இந்த நகர்த்தலை விமர்சிக்காவிட்டால் தமிழினத்துக்கு முதலில் குரல் கொடுப்பவர் எனும் வைகோ வின் நிலையைப் போட்டியாளர்கள் உடைக்க முற்படுவார்கள் எனும் பயம் அவருக்கு இருக்காது என்று நம்பவும் இடமுள்ளது. தமிழர் நலன் காக்கும் காரியம் பெரிதா? அல்லது வீரியம் பெரிதா? கூட்டிக்கழித்துப்பாருங்கள்.

Tamil_Concentration_Camp_in_Srilanka

“ போர் என்றால் அழிவு நடக்கத்தான் செய்யும்” என்று தமிழர்மீது ராஜபச்சா கொலைவெறித்தாக்குதல் நடத்தியபோது சொன்ன அம்மா அவர்கள் இப்பொழுது கடும் எதிர்ப்பு காட்டினால் அது அரசியல் ஆதாயத்தை நோக்கியபேச்சு, மாறாக தமிழன்மீதான அன்பால் விளைந்த பேச்சு அல்ல. இந்த அரசியல் ஆதாயத்துக்காக அலைந்துதானே ஈழத்தை ரணகளமாக்கினோம். இனியாவது அவர்கள் வாழட்டுமே……

ஈழத் தமிழருக்காக விழும் கலைஞரின் கண்ணீர் முதலைக்கண்ணீரா? நீலிக் கண்ணீரா? என்று பட்டிமன்றமே போடலாம். ஆனால் கழகக் கண்மணிகள் உலகத் தமிழினத்தலைவர், காலை சிற்றுண்டிமுதல் மதிய உணவு நேரம் வரை உண்ணாநோன்பிருந்து ஈழ யுத்தத்தை நிறுத்திய ராஜ தந்திரத்தை, ஆவேசத்துடன் முழங்கி நம்மை நையப்புடைத்துவிடவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தலைவர்அவர்கள் மோதிக்குக் கூறும் அறிவுறைகள்பற்றி நாம் கண்டும் காணாமலும் இருப்பதே தமிழ்மக்களுக்கு நாம் செய்யும் மாபெரும் உதவியாக இருக்கும்.

மற்றபடி மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை.

கம்யுனிஸ்ட்கள் வழக்கம்போல் நடைமுறைக்கு உதவாதவற்றைமட்டுமே பேசுவர்.

ஆக மொத்தத்தில் தமிழ் தமிழன் என்று பதவிக்காகவும், பெயருக்காகவும் இன்றுவரை கூச்சல்போட்ட, போடும் இவர்களில் பலர் வாய்ப்புகள் பல வந்தபொழுதும் அதே பதவிக்காகவும் பெயருக்காகவும் அப்பாவித் தமிழரைக் காக்கும் கடமையிலிருந்து தவறியவர்கள். இவர்களது தேவை தமிழர் நல் வாழ்வல்ல அரசியல் ஆதாயம். இன்று இவர்கள் மோதியை விமர்சிப்பதும் அரசியல் ஆதாயம் கருதி. போர்முடிந்தபிறகு இலங்கைக்கு உல்லாசப்பயணம் செய்து ராஜபச்சாவுடன் சிரித்தபடி கைகுலுக்கிய வளவனார்களின் செயல்கள் என்ன ராஜதந்திரமோ எந்தவகை இன உணர்வோ தெரியவில்லை.

என்னால் புரிந்துகொள்ளமுடியாதது ஹிந்துத்துவர்களாகத் தங்களை உணர்பவர்களின் அவசரமுடிவு. இந்தனைகாலம் மோதியைப்பார்த்துவந்தவர்கள் அவரின் இந்த ஒரு நன்முயற்சியின் பின் உள்ள உண்மையை உணராமல் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது. உங்களாலுமா பார்வையை விசாலமாக்க முடியவில்லை?

ஆனால் திரு மோதி அவர்கள் நல்லதொரு முன்முயற்சி எடுத்துள்ளார்கள். தனது செல்வாக்கை இலங்கைக்கு உணர்த்துவதன்மூலமும் நாசூக்கான ராஜதந்திரத்தின் மூலமாகவும் ஈழத்தமிழருக்கு கௌரவமான வாழ்வுரிமையை மீட்டுத்தர முதலடி எடுத்து வைத்துள்ளார்.

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று.

உணர்சியற்ற மனிதன் ஜடம், ஆனால் உணர்சிமயமாக மட்டுமே உள்ளமனிதன் மிருகம். அறிவும் உணர்ச்சியும் சரிவரக்கலந்திருந்தால் அவனே மனிதன். ஆகவே வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்காமல், உலகதமிழர் நலம் பேணப்பட, பாரதம் உயர்வடைய வாராதுவந்த மாமணியாய்த்தெரியும் மோதிக்கும் வாய்ப்புக் கொடுப்போம்.

 

18 Replies to “திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி”

 1. EXCELLENT ARTICLE DEPICTING REALISM AND AT THE SAME TIME EXPOSING OF DRAVIDIAN CULTIVATED FOOLERY TO FOOL TAMIL PEOPLE FOR THEIR POLITICAL GAINS ONLY FOR THE PAST 60 & ODD YEARS AND THEIR CUSTOMISED DOUBLE TALK.

  சட்டியில் இருப்பதுதானே ஆப்பையிலும் வரும்.

 2. எதிராளியுடன் பேசமாட்டேன் என்று மூஞ்சியைத் தூக்கிக் கொண்டு இருந்தால் அவனும் ‘ அப்பாடா, , நல்லதா போச்சு,இன்னும் நன்றாக நான் தமிழர்களை வதைக்கலாம்’ என்று சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மேலும் நெருக்கமாக ஆகி விடுவான். இது வரை நம் நாட்டுக்கு வடக்கு , மேற்கு திக்குகளில் மட்டுமே ஆபத்து இருந்தது. ஆனால் சோனியா காங்கிரஸ் புண்ணியத்தில் இப்போது சீனா இலங்கையுடன் நெருக்கமாக ஆகிவிட்டதால் தெற்கிலிருந்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  சீனா இலங்கையிலிருந்து குண்டு போட்டால் முதலில் தமிழ் நாட்டில்தான் விழும். அப்போதும் கருணாநிதி, பீட்டர், வைகோ இவர்களெல்லாம் புறநானூற்றிலிருந்து ஏதாவது வசனம் பேசி விட்டுப் போய் வடுவார்கள்.

  இலங்கையை சீனா மற்றும் பாகிஸ்தானின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதே மோடியின் நோக்கம்.

  ஒரு நாட்டை ஆள்பவன் இப்படித்தான் சிந்திக்க வேண்டும்.

  இப்பொழுதே இலங்கை அந்நாட்டுச் சிறைகளில் உள்ள தமிழ் நாட்டு மீனவர்களை விடுவித்துள்ளது.

  ‘இலங்கை ஹிந்துத் தமிழர் மற்றும் மீனவர் பிரச்னை தமிழர் பிரச்னை மட்டும் அல்ல,அது தேசீயப் பிரச்சினை ‘ என்று மோடி கூறியுள்ளதை நினைவு கொள்வோம் .
  அவருக்கும், அரசுக்கும் அவகாசம் அளிப்போம்.

  மோடி செய்வது என்னவென்றால் ‘பேரரசன் சிற்றசர்களைத் தன் முடி சூட்டு விழாவிற்கு
  வரவழைத்து கப்பம் கட்டச் செய்வது போல் தான்.

  ராஜபக்சேவிடம் அவர் கூறலாம்’ தம்பி, ஒங்க பிரெண்டு சோனியா ஆட்சி போச்சு, முன்ன மாரி எல்லாம் இப்ப ஆடமுடியாதுப்பா. கொஞ்சம் பாத்து நடந்துக்கோ.ஒனக்கு வேணும்னா லைட் டீ தரேன் .இல்லனா ‘ஸ்ட்ராங்கா’ கசக்க கசக்க டிகாக்ஷன் குடுக்கிறேன் ;எப்பிடி வேணுமோ சொல்லுப்பா’ என்று சொல்லலாம்.

 3. //தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது.// அந்தத் திட்டம் என்ன என்பதை விளக்கமுடியுமா? குறைந்த பட்சம் கோடி காட்ட முடியுமா? அப்படி ஒரு திட்டம் இருந்தால் தேர்தல் அறிக்கை அதைக் குறித்து மெளனம் சாதித்தது ஏன்?

 4. // அப்படி ஒரு திட்டம் இருந்தால் தேர்தல் அறிக்கை அதைக் குறித்து மெளனம் சாதித்தது ஏன்? //

  மாலன் அவர்களே (நீங்கள் பிரபல பத்திரிகையாளரா அல்லது அதே பேர் கொண்ட மற்றொருவரா), பல முனைகளிலும் தளங்களிலும் செயல்படும் சிக்கலான, வெளியுறக் கொள்கையை தேர்தல் அறிக்கையில் விளக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. மேலும், இது போன்ற Diplomacy செயல்படும் விதம் நுட்பமானது. அதைக் கோடி காட்டவோ வெளிப்படையாக பேசவோ எல்லாம் முடியாது. உங்களுக்கு இது தெரியாததல்ல.

  மோதியீன் தலைமையில் மிக உறுதியான இந்திய அரசு அமைகிறது என்பதே சிங்கள அரசுத் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. இலங்கை மீடியாவில் வரும் செய்திகளைப் பார்த்தால் இது தெளிவாகப் புரிகிறது. மோதி என்ற தேசிய உணர்வு கொண்ட தலைவரின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் இருப்பதே இப்போது இலங்கைத் தமிழர்களின் நலம் நாடுவோர் செய்ய வேண்டியது.

 5. டெலிபோன் டைரக்டரியில் பல லட்சம் சுப்பிரமணியன்கள் இருப்பார்கள். நீங்கள் எந்த சுப்பிர மணியன் என்று கேட்பது தேவை அற்றது. அவர் எந்த மாலனாக இருந்தால் என்ன கேள்விக்கு பதில் சொல்லுவது நமது கடமை. வேறு மாலனாக இருந்தால் பதில் கிடைக்காதா நமது தளத்தில் ?

  2. இந்தியாவில் எப்போதாவது நல்லதும் கூட நடக்கிறது. அதுவும் ஒரே நாளில் இந்தியாவுக்கு குருட்டு அதிர்ஷ்டம்- ஒரு நன்னாளில்- அதாவது பிரதோஷ நாளில் நமது நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக பொறுப்பேற்கிறார். அவர் தலைமையில் இந்திய வளம் பல பெற்று உயர்க. இந்தியாவில் அமைதியும் ஆனந்தமும் விளைய சிவபெருமான் அருள் வழங்குவார்.

  3. காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம் என்று சிறு குழந்தைக்கு கூட தேர்தலுக்கு முன்பே தெரியும். அளவு கடந்த ஊழல்கள்- டூ ஜி, நிலக்கரி, ஆதர்ஷ், சுரங்கம், ஹெலிகாப்டர் முதலியன- மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பாவர் – காங்கிரசுக்கு ஓட்டுப்போடாத மக்களுக்கு குடிதண்ணீர் தரமாட்டோம் என்று சொன்னது இப்படி இன்னும் ஏராளம் உண்டு. குப்பனும் சுப்பனும் காங்கிரசு எப்படி 44 இடங்களில் ஜெயித்தது- நம் நாட்டில் கண்ணுதெரியாத வாக்காளர்கள் அவ்வளவு பேரா இருக்காங்க என்று கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

  4. இது போதாது என்று பாண்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு நாராயணசாமி அவர்கள் காங்கிரஸ் தோல்விக்கு நானே பொறுப்பு என்று அவர்கள் கட்சி ஊழியர் கூட்டத்தில் நேற்று பேசி இருக்கிறார். அவருடைய பெருந்தன்மைக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  இவரைப் போல நாலு பெரிய மனுஷன் இன்னமும் காங்கிரசில் இருப்பது ஒரு உலக மகா அதிசயம். வழக்கமாக தோல்விக்கு பின்னர்-

  1. காக்காய் வடகிழக்கே சரியாக பறக்காததால் தோற்றேன்,

  2. எதிர்க்கட்சியினர் பணமும், சாராயமும் கொடுத்தனர்,

  3. எதிர்க்கட்சியினர் செத்தவர்களின் ஓட்டைப்போட்டு வெற்றி பெற்றார்கள்,

  4. எங்கள் இன ( தமிழின)வாக்காளர்கள் சோற்றால் அடித்த பிண்டம் ,

  5. எங்கள் தோல்விக்கு

  சூப்பர் ஸ்டார் இரஜினிகாந்த்,
  தல அஜீத் குமார்,
  விஜயகாந்த் ,
  சரத்குமார்,
  இளைய தளபதி விஜய்,
  மக்கள் திலகம் எம்ஜிஆர்,

  ஆகிய ஆறு நடிகர்களின் ரசிகர்களும், 1987-லே இறந்த எம் ஜி ஆரின் ஆவியும் ஒன்று சேர்ந்து – சதி செய்து எங்களை தோற்கடித்து விட்டனர்,

  6. கேடுகெட்ட தமிழன் சினிமாக் கவர்ச்சியில் மயங்கி எங்களை தோற்கடித்து விட்டான் –

  7. 42-வது வார்டில் எங்கள் கட்சியிலேயே சிலர் உள்குத்து வேலை செய்து என்னுடைய வெற்றி வாய்ப்பை கெடுத்தனர்-

  8. என்னுடைய போட்டி வேட்பாளர் திரு சோ அண்ட் சோ அவர்கள் திருச்சியில் மலைக்கோட்டை ஜோதிடரிடம் தாயத்து வாங்கி கையில் கட்டிக்கொண்டார். எனக்கு தாமதமாகத் தான் இந்த தகவல் தெரிந்து , , நான் மலைக்கோட்டைக்கு போய் தாயத்து வாங்குவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது என் துரதிர்ஷ்டம்.-

  இப்படியெல்லாம் உளறாமல், கண்ணியமாக திரு நாராயணசாமி அவர்கள் பேசியிருப்பது நமது கண்களில் நீரை வரவழைக்கிறது. நானே காரணம், தோல்விக்கு நானே பொறுப்பு என்று உண்மையான மனிதர்களால் மட்டுமே சொல்லமுடியும். காங்கிரசில் கூட இப்படி சிலர் இருப்பது நம் இந்தியத் திருநாடு செய்த புண்ணியம். அய்யா நாராயணசாமி அவர்களே, தாங்கள் இறை அருளால் மேலும் மேலும் உயர்வுகள் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற மணக்குள விநாயகப் பெருமானை வேண்டுகிறோம்.

 6. மோடியின் நோக்கம் என்னவென்று போகப்போகத் தான் தெரிந்துகொள்ளமுடியுமே தவிர, இந்த அழைப்பை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக, தமிழமைப்புகள் செய்வது தவறு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி செய்வதைச் செய்யட்டும். அதேபோல், தமிழர்களும் தங்கள் எதிர்ப்பை வலுவாகக் காட்டவேண்டும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு வலுவாக எதிர்ப்பைக் காட்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் புண்பட்டிருப்பதும் விசயத்தின் வீரியமும் டெல்லிக்குப் புரியும். மோடி அழைத்துவிட்டார் என்பதற்காக, ராஜபக்சேவுக்கு எதிர்ப்புதெரிவிக்காமல்,, இளித்துக்கொண்டு தமிழர் பிரதிநிதிகள் விழாவில் நட்புறவோடு பங்கெடுத்துக்கொண்டால், அது டெல்லிக்கு தவறான சமிக்ஞையைக் கொடுக்கும். விசயம் இப்படியிருக்க, தமிழர் அமைப்புகள் வயிற்றுப்பிழைப்புக்காகவும், உலகத்தமிழர்களைத் தவறான வழியில் நடத்துமாறும் தங்கள் எதிர்ப்பைக்காட்டுகிறார்கள் என்று சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 7. திமுகவினரின் அலசல்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. தஞ்சை நண்பர் சொல்கிறார் – எப்படியும் பாலு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது ஜெயித்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தேனுங்க. எங்க கட்சியே டூ சீக்கு பிறகு , ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் மின்சார தட்டுப்பாடு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, ஆகிய பிரச்சினைகள் எங்களுக்கு சிறிது கை கொடுத்தன. அவற்றை வைத்து கரையேறிவிட முடியும் என்ற சூழல் இருந்தது. பட்ட காலிலே படும் கெட்டகுடியே கெடும் என்று சொல்வாங்க அதுபோல, திடீரென்று மீத்தேன் என்ற பிரச்சினை கிளம்பி ஒரு அலைபோல எங்களை இழுத்து அழுத்தி விட்டது. இல்லையென்றால் குறைந்த வித்தியாசத்திலாவது வெற்றி கிடைத்திருக்கும் என்று சொல்கிறார்.

 8. அரசியலின் பால பாடமே எதிரிக்கு நம் நடவடிக்கை தெரியாமலே அடிப்பதுதான். வாஜ்பாய் அணுகுண்டு வெடித்தது மாதிரி. இதையெல்லாம் அறீக்கை விட்டு செய்ய முடியாது. இலங்கைத் தமிழன் மட்டும் அல்ல, மலேசிய தமிழனும் இனி பாதுகாப்பாக இருப்பான்.

 9. சற்றே நினிவு கூறுவோம்.
  சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஒலி நாடா வெளி வந்தது. ஈழதுகுக்காக
  வெளில் போராட்டம் நடத்தி கொண்டு. பின்புறம் கனிமொழி காவல்துறை அதிகாரி உடன் ஊழல் பேரம் பேசிகொண்டுருந்தர்.

  இவர்கள் வெளில் ஈழதமிலர்களுக்காக போராட்டமும் பினால் அதை வைத்து வியாபாரமும் செயும் கூட்டம்.

  ஈழதமிழர்கள், நம் தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகளிடம் இருந்து விலகி ஒரு மாமாங்கம் ஆகறது. தமிழ்நாட்டு மக்கள் இன்னும் விளித்து கொள்ளவில்லை.

 10. சிங்களரும், நாங்களும் அண்ணன் தம்பிகள் இதில் இந்தியா தலையிட வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு இந்தியாவில் இந்த இழவு ஆதரவா ? வியக்க வைக்கின்றது. இரண்டு நாள் முன்பு விடுதலை புலிகள் மலேசியாவில் கைது – ஜாபகம் இருக்கட்டும். ஹோனெஸ்ட்மன் – இந்துகள் கட்சி என்று மூட்சுக்கு முன்னூறு தடவை ஊதும் வெள்ளை மீடியாவை எப்படி சமாளிப்பது – இப்படி இல்லாமல் ??

 11. மோடியின் அழைப்பிதல் வெவ்வேறு கோணங்களிலிருந்து அலசப்படுகிறது. இதில் எது உண்மை என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும் ..அது வரை நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும் ..அதற்குள் மோடி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்று போர் கோடி தூக்குவது என்பது முட்டாள் தனம்….

 12. // ராஜபக்சேவிடம் அவர் கூறலாம்’ தம்பி, ஒங்க பிரெண்டு சோனியா ஆட்சி போச்சு, முன்ன மாரி எல்லாம் இப்ப ஆடமுடியாதுப்பா. கொஞ்சம் பாத்து நடந்துக்கோ.ஒனக்கு வேணும்னா லைட் டீ தரேன் .இல்லனா ‘ஸ்ட்ராங்கா’ கசக்க கசக்க டிகாக்ஷன் குடுக்கிறேன் ;எப்பிடி வேணுமோ சொல்லுப்பா’ என்று சொல்லலாம். //

  நெனப்புத்தான் பொழப்பை கெடுக்குமாம். அந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சப்போவ்.

  அப்படி ஏதாவது செஞ்சா, ‘இருப்பா இதோ சீனாக்காரன் கிட்ட இருந்து ஒனக்கு குடுக்குறேன், கசப்பு மருந்தை, ஒடம்ப பத்திரமா பாத்துக்கோ’-ன்னு அவன் குடுப்பான்.

 13. திரு தீரன்,திரு கதிரவன் ,திரு சக்திவேல் மூவருமே நன்கு விளங்கிக்கொண்டு எழுதுகிறீர்கள்.நீங்கள் அல்லவோ தொலைக்காட்சி பேட்டிகளுக்கு சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் .எல்லோரும் ,அதாவது உண்மை,நேர்மை,விவேஹம் என்ற சிறப்பு பண்புகள் பக்கம் நிற்பவர்கள் ,பேசுபவர்கள் மற்றும் சிந்திப்பவர்கள் , உங்கள் விளக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள். நம் தமிழ்நாட்டில் படிக்காதவர்களும் ( பேப்பர் & செய்திகள் ), சிந்திக்க மறுப்பவர்களும் சுமார் 99%. எனவே இவர்களுடன் நம்முடைய அருமையான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் .குறிப்பாக அறிவுபூர்வம் அல்லாத கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாமே !!!!!!!மற்றையவைகளை நாம் பகிர்ந்து கொள்வோம் .

 14. ‘சிங்களரும், நாங்களும் அண்ணன் தம்பிகள் இதில் இந்தியா தலையிட வேண்டாம் ‘-

  திரு பாண்டியன் அவர்களே,

  நல்ல கேள்வி. மேலே சொன்ன வாக்கியம் விடுதலைப் புலிகளின் கூற்று. இன்னும் சொல்லப்போனால் திரு பிரபாகரனின் கூற்று. ஆனால் 1989-க்கு முன்னர் என்றும் , 1989-க்கு பின்னர் என்றும் விடுதலைப் புலிகளின் நிலை பிரித்து அறியப்பட வேண்டும். 1989-க்கு முன்னர் அதாவது திரு அமிர்தலிங்கம் அவர்களை படுகொலை செய்யும் முன்னர், மற்றும் திரு அமிர்தலிங்கம் அவர்களை படுகொலை செய்த பின்னர் என்று இரண்டு கட்டமாக பிரித்து அறிகிறோம். முதல் கட்டத்தில், தமிழகம் எம் ஜி ஆர் உட்பட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அமிர்தலிங்கம் படுகொலை மற்றும் ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழகம் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வில்லை. ஆனால் அப்பாவி சிவிலியன் இலங்கை தமிழர் தலையில் கொத்து எரிகுண்டுகளைப் போட்டு கொல்ல, இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாக செய்திகள் வந்தன. அவற்றை நமது நாட்டு மத்திய அரசு பதில் எதுவும் கூறாமல் கள்ள மவுனம் சாதித்தது. அப்பாவி மக்களை கொல்ல யாருக்கும் எவ்வித நியாயமும் கிடையாது. தமிழகத்தில் கண்டனத்துக்கு ஆளாவது அந்த விஷயம் மட்டும் தான். வை கோ நிலையை யாரும் ஆதரிக்கவில்லை. அவர் நிலை வேறு. அவர் கள்ளத்தோணியில் இலங்கை சென்று வந்தவர். அதிகாரப் பூர்வமாக செல்லவில்லை. எனவே விடுதலைப் புலிகளுக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.இலங்கை சிவிலியன் தமிழர் தலையில் கொத்து எரிகுண்டுகளைப் போட்டுக் கொன்ற பாவிகளை என்ன செய்வது ? இந்த வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

 15. ஐயாறப்பன் – உங்கள் வாதப்படி , சிங்களருக்கு இணையாக புலிகளும் சொந்த பந்தங்களையே போட்டு தள்ளி இருக்கின்றார்கள் , கொடுமை படுத்தி இருகின்றார்கள். அப்பொழுது யாரும் அப்பாவி மக்களுக்கு ஏன் கூப்பாடு போடவில்லை ? ஏன் விசாரணை கீக்கவில்லை,
  ஒரு தீவையே ஆட்டயப்போடும் போதும் , இங்கு அவர்கள் ஹீரொ வாக வலம் வந்தார்கள் ?? இல்லயா ?

 16. அன்புள்ள திரு பாண்டியன்,

  தங்கள் கேள்வி நியாயமான கேள்வி. விடுதலைப்புலிகளைப் பற்றி நம் மக்களின் கருத்து எதுவாயினும், பத்திரிகைகள் வைகோ, மற்றும் நெடுமாறன் போன்ற சில தலைவர்களின் கருத்தை மட்டுமே வெளியிடுகின்றன.

  விடுதலைப் புலிகளால் சொந்த இனத்தை சேர்ந்தவர்களே அழிக்கப்பட்டபோது, கண்டனம் எழுந்தது. அந்த கண்டனம் பெரிய மீடியாக்களால் மறைக்கப்பட்டது. இலங்கை தமிழரின் துயரில் இங்கு அரசியல் உண்ணாவிரதங்கள் நடத்தி , இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல நடித்து , ஆனால் 2009-லே படுகொலை நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர் அழிந்தபோது பேரனுக்கும் மகனுக்கும் என்ன இலாக்கா வேண்டும் என்று பேரம் பேசிக்கொண்டிருந்தனர் நமது தலைவர்கள் இதனை யாரிடம் சொல்லி அழுவது ? விடுதலைப்புலிகள் கொன்றது ஒரு பத்தாயிரம் தமிழர்களை என்றால் சிங்களவரோ லட்சக்கணக்கில் நம் இனத்தவரை கொன்றனர். இதில் கூட குறைய இருந்தாலும் இரண்டுமே அழிவு தானே. இதையெல்லாம் எழுதவே மன வருத்தம் அதிகரிக்கிறது அய்யா.

 17. திரு பாண்டியன் ,

  தங்கள் கேள்விக்கு என் விடை ஆம் என்பது தான்.

 18. போர்முடிந்தபிறகு இலங்கைக்கு உல்லாசப்பயணம் செய்து ராஜபச்சாவுடன் சிரித்தபடி கைகுலுக்கிய வளவனார்களின் செயல்கள் என்ன ராஜதந்திரமோ எந்தவகை இன உணர்வோ தெரியவில்லை.

  The author has conveniently forgotten that the delegation was headed by Sushma Swaraj, BJP, then leader of the opposition.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *