சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்

மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகள், கணப்பின் அருகே வைக்கப்பட்டுள்ள பஞ்சுப்பொதி போன்ற அபாய நிலையில் நாம் இருப்பதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. இச்சம்பவத்திற்கு முதல்நாள் (ஏப்ரல் 30) சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்கள், நம் நாட்டைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத மேகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தி உள்ளன.

சென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு:

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு மே 1-ம் தேதி காலை பெங்களூருவிலிருந்து வந்த குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் (எண்: 12509) ரயில் நடைமேடை 9-ல் வந்துநின்ற சில நிமிடங்களில் அதன் இரு பெட்டிகளில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

காலை 7.05 மணிக்கு ரயில்நிலையத்திற்கு அந்த ரயில் வந்தது. அதன் எஸ் 4 பெட்டியில் காலை 7.18 மணியளவில் ஒரு குண்டு வெடித்தது. அதனால் நிலைகுலைந்த பயணிகள் ஆங்காங்கே சிதறி ஓடிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் காலை 7.21 மணியளவில் எஸ் 5 பெட்டியிலும் ஒரு குண்டு வெடித்தது.

இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் ரயிலில் பயணம் செய்த பயணிகளும் நடைமேடையில் சென்ற பலரும் காயம் அடைந்தனர். குறிப்பாக ரயிலில் பயணித்த பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் காயம் அடைந்த அனைவருமே வெளிமாநிலங்களைச் சார்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

chennai-bomb-blast-2014-1

இவர்களுள் ஆந்திர மாநிலம், குண்டூரைச் சார்ந்த சுவாதி (24) என்ற இளம்பெண் அதே இடத்தில் பலியானார். இவர் பெங்களூருவில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தவர். பணியிடத்தில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பில் இவர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இவருக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துவந்த பெற்றோரின் தலையில் இடியாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது.

பின்னணியில் இருப்பது யார்?

இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்வி எழுதிருக்கிறது. குறிப்பாக, இச்ச்சம்பவத்திற்கு ஒருநாள் முன்னதாக சென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

அதேசமயம், இந்த குண்டுவெடிப்பு சென்னையை இலக்காகக் கொண்டதல்ல; ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் செல்லும்போது வெடிக்கும்வகையில், பெங்களூருவிலேயே குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம்; ரயில் தாமதமாக வந்ததால் சென்னையில் வெடித்துவிட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பெங்களூருவில் போலியான அடியாள அட்டை உதவியுடன்  ‘தட்கல்’ முறையில் எடுக்கப்பட்ட பயணச்சீட்டுடன் சிலர் இந்த ரயிலில் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூரு ரயில்நிலைய கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி) பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ரயில்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டுள்ளன.

இதற்கு ஆதாரமாக, குண்டு வெடித்த இடங்களில் வெடிகுண்டுகளை இயக்கும் டைமர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குண்டுகள் குறைந்தபட்ச சேதம் விளைவிப்பவை; அதேசமயம், எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாகச் செல்லும்போது குண்டுகள் வெடித்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் உளவுத்துறையினர்.

பெங்களூரு – குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய நேரம் தவிர்த்து 90 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. இடையே சிக்னலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இத்தாமதம் நேரிட்டுள்ளது. சரியான நேரத்தில் இந்த ரயில் சென்னை வந்து சென்றிருந்தால், காலை 7.15 மணியளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம், தடா ரயில் நிலையத்தைத் தாண்டி சென்றிருக்கும். அப்போது அங்கு வெடிக்கும் வகையிலேயே இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.

மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில், இந்த குண்டுகள் குறித்த நேரத்தில் அம்மாநிலப் பகுதியில் வெடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற காவல்துறையின் சந்தேகத்தைப் புறக்கணிக்க முடியாது.

எது எப்படியிருப்பினும், இந்தக் குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய பயங்கரவாதக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகளுக்கு உதவுவோர் உள்ளனர் என்று தெரிய வந்திருப்பதும் சாதாரணமானதல்ல.

வெடிகுண்டுகளின் தன்மை:

சென்னை ரயிலில் வெடித்த குண்டுகள் குறித்த நேரத்தில் வெடிக்கும் டைமருடன், அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு, சிறு உருக்குக் குண்டுகள் (பால்ரஸ்), ஆணிகள் பொதியப்பட்டு தயாரிக்கப்பட்டவை. குண்டு வெடித்த வேகத்தில் நாலாபுறமும் சிதறும் உருக்குக் குண்டுகளும் ஆணிகளும் அருகில் உள்ளவர்களுக்கு பலத்த சேதம் விளைவிப்பவை.

இதற்கு முன்னர் 1997, டிசம்பர் 6-ல் தமிழகம், கேரளத்தில் சென்ற ரயில்களில் வைக்கப்பட்ட குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். வகையைச் சார்ந்தவை; மிகவும் ஆபத்தானவை. அந்தக் குண்டுவெடிப்புகளில் 10-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்தக் குற்றங்களில் தொடர்புடைய பலர் இன்னமும் கைதாகாமல் தலைமறைவாகவே உள்ளனர். 1998 பிப்ரவரி 14-ல் கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளிலும் (இதில் 60 பேர் கொல்லப்பட்டனர்) ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு காவல்துறையின் கெடுபிடியால் ஆர்.டி.எக்ஸ். பதுக்கல் முடக்கப்பட்டதால், இப்போது சக்தி குறைந்த வெடிகுண்டுகளில் பயங்கரவாதிகளின் கவனம் திரும்பியிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இருப்பினும் 2008 மும்பை குண்டுவெடிப்புகளில் ஆர்.டி.எக்ஸ். பயன்படுத்தப்பட்டதையும், பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளும் உள்ளூர்த் தீவிரவாதிகளும் இணைந்து நடத்திய அத்தாக்குதலின் கொடுமையையும் யாரும் மறந்துவிட முடியாது.

இப்போது தமிழக அரசு இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.பி.சி.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தவிர மத்திய அரசும், தேசிய பாதுகாப்பு ஏஜன்ஸியின் (என்.எஸ்.ஏ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில காவல்துறையும் இதுகுறித்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இவையல்லாமல், மத்திய புலனாய்வுத் துறையும் (சி.பி.ஐ.) குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித்த விசாரணையைத் துவக்கி உள்ளது.

chennai-bomb-blast-2014-3

ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ளதா?

ஏப்ரல் 30-ம் தேதி சென்னை, திருவல்லிக்கேணியில் ஜாகீர் ஹுசேன் என்ற இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது செய்யப்பட்டிருப்பது, இந்த நேரத்தில் மிகவும் முக்கியமான திருப்புமுனையாகும். சி.பி.ஐ. அளித்த உளவுத் தகவலின் அடிப்படையில், சென்னை நகரின் பகுதிகளான சூளைமேடு, பெரியமேடு, மண்ணடி, சௌகார்பேட்டை பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான சில பகுதிகள் கண்கானணிக்கப்பட்டன. அப்போது இலங்கையைச் சார்ந்த ஒரு கும்பல் சதித் திட்டங்களுடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஆயினும், காவல்துறையினர் வருவதை அறிந்த சதிகாரர்கள் பலர் தப்பிவிட்டனர். அவர்களுள் முக்கியமானவனான ஜாகீர் உசேன் திருவல்லிக்கேணியில் கைதானான்.

அவனிடம் நட்த்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஹுசேன் அளித்த தகவல்களின் அடிப்படையில் இலங்கையைச் சார்ந்த மேலும் இரு சதிகாரர்கள் கைதாகினர்.

இவர்களுள் ஜாகீர் ஹுசேன் (37), இலங்கையை தாயகமாகக் கொண்ட பட்டதாரி இளைஞன். இவன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரியான அமீர் சுபேர் சித்திக் என்பவரால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளான். ஹுசேனுக்கு பெருமளவில் பண உதவி செய்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி, அவனை இந்தியாவின் தென்மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்காக, இலங்கையைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் குழுவை ஹுசேன் உருவாக்கி, அங்குள்ள பாக். தூதரக உதவியுடன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அளித்த பயிற்சியைப் பெற்றுள்ளனர். அவர்களே இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளையும், ஆயுதங்களையும், சாட்டிலைட் போன்களையும் சதிக்கும்பலுக்கு அளித்துள்ளனர்.

இந்த கும்பல் தமிழகம் வந்து, உள்ளூர்ச் சதிகாரர்களின் உதவியுடன் சென்னை, மண்ணடியில் தங்கி, நாசகரச் செயல்களை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவர்களிடம் கைப்பற்றப்பட்ட சென்னை, பெங்களூரு மாநகர வரைபடங்களும், முக்கிய இடங்களின் ஒளிப்பதிவுக் காட்சிகள் கொண்ட குறுந்தகடுகளும், இக்கும்பலின் இலக்குகள் யாவை என்பதைக் காட்டுகின்றன.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், கொச்சி கடற்படைத்தளம், விசாகப்பட்டினம் துறைமுகம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த இக்கும்பல் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன்னர் சதி முறியடிக்கப்ப்ட்டுவிட்டதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் கூருகின்றனர்.

ஆனால், இக்கும்பலில் கைதாகாமல் தப்பியுள்ள சதிகாரர்கள் மாநிலத்தின் பல இடங்களில் பதுங்கி இருப்பதால், ஆபத்து முழுமையாக விலகவில்லை. கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன், “எங்களை கைது செய்தாலும், கைதாகாமல் தப்பிய போராளிகள் தங்கள் கடமையை நிறைவேற்றுவர்’’ என்று விசாரணையில் கூறியதாகவும் தகவல். இந்நிலையில் தான் சென்னை ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் பாகிஸ்தானின் கொடுங்கரம் நீண்டிருப்பதை அலட்சியப்படுத்த முடியாது.

ஏன் இந்தக் கொலைவெறி?

சென்னையில் கைதாகியுள்ள இலங்கை ஐ.எஸ்.ஐ. உளவாளிக்கு அங்கு இரண்டு ஆண்டுகள் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள- பாகிஸ்தானுடன் நட்புறவு பேணும்- இலங்கை அரசின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகி இருக்க முடியாது. மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஹுசேனுக்கு பெருமளவிலான பண உதவியும் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இந்தச் சதியில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தவிர, இந்தியாவில் தாக்குதல்களை வெற்றிகரமாக நிறைவேற்றினால், ஹுசேனுக்கு ஒரு கோடி ரூபாய் இலங்கைப் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. இதனை ஹுசேனே விசாரணையில் தெரிவித்துள்ளான். இவன் ஏற்கனவே திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிடிபட்டு தப்பியவன் என்பதும் அம்பலமாகியுள்ளது.

ஆக, இந்தியாவில், குறிப்பாக தென்மாநிலங்களில் நாசகரச் செயல்களை நடத்த பாகிஸ்தான் துடிப்பது தெளிவாகியுள்ளது. இதற்கு இலங்கையின் உதவியும் கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. இதற்கு என்ன காரணம்? அதுவும் இந்தியாவில் தேர்தல் நடந்துவரும் வேளையில் இங்கு குண்டுகளை வெடிப்பது எந்த நோக்கத்திற்காக?

இந்தியாவில் தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்; நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், அந்த ஆட்சி அமைந்தால் யாருக்கு ஆபத்து ஏற்படுமோ, அவர்கள் அஞ்சுவது இயற்கையே. மோடி தலைமையில் ஆட்சி அமைந்து, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கு நட்பாக இருந்த காங்கிரஸ் ஆட்சி வீழ்வதை சதிகாரர்களால் தாங்க முடியவில்லை. எனவே தான், இன்னமும் இரண்டுகட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை அச்சுறுத்த இந்தக் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற ஹேஸ்யங்களில் உண்மை இல்லாமல் இல்லை.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் நாடு முழுவதும் பரவியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் எந்த வகையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவர் என்பதற்கான சிறு மாதிரியே இந்தத் தாக்குதல்கள் எனலாம்.

கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்.

பாரதத்தின் முன்னேற்றத்தை விரும்பாத அண்டைநாடுகளின் கரங்களில் சிக்கும் மதவெறியர்களே, அவர்களின் விளையாட்டுப் பதுமைகளாக இங்கு சதிகளை அரங்கேற்ற விழைகின்றனர். இதற்கு உள்நாட்டில் சிறுபான்மையினரிடம் வாக்குவங்கி அரசியல்வாதிகளால் பரப்பப்படும் அச்சஉணர்வும், அதன் காரணமாக சதிகாரர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள தீவிரவாதக் குழுக்களும் உதவுகின்றன.

செய்ய வேண்டியது என்ன?

தில்லியில் உள்ள பாக். தூதரகம் இப்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை (ஐ.பி.) தகவல்கள் கூறுகின்றன. இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்பதை சொல்லத் தேவையில்லை. சொல்லப்போனால், இல்ங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி சென்னையில் கைதாயுள்ள நிலையில், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கு அரசுமுறையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எதிர்பார்ப்பது நமது தவறே.

மே 2-ல் சென்னையில் எக்ஸ்பிரஸ் வணிக வளாகம் உள்ளிட்ட பல வியாபாரத் தலங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், இனிவரும் காலத்தில் அமைதிப்பூங்காவாக தமிழகம் நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சென்னை ரயில்நிலைய குண்டுவெடிப்புகளை குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் சர்வகட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இவர்கள் தமிழகத்தில் பரவும் பயங்கரவாத்த்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஆதரவு காட்டுவார்களா?

மதத்தின் பெயரால் மக்களை சிறுபான்மையினர்- பெரும்பான்மையினர் என்று பிரித்து ஆடும் அரசியல் விளையாட்டே இந்த நெருக்கடிக்கு வித்திட்டுள்ளது என்பதை இனியேனும் நமது அரசியல் தலைவர்கள் உணர்வார்களா?

சென்னை குண்டுவெடிப்புகளை சில இஸ்லாமிய அடிப்படிவாத அமைப்புகளும் கூடக் கண்டித்துள்ளன. இதைத்தான்  ‘குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது’ என்று கூறுவார்கள். இவர்களின் பொய்வேடத்தை மக்கள் நம்பிவிடக் கூடாது. நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற இரு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தான் தமிழகத்தில் இந்த நிலை ஏற்படக் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இஸ்லாமிக் டிஃபன்ஸ் ஃபோர்ஸ், சிமி, ஐஎஸ்எஸ், அல் உம்மா, ஜிகாத் பேரவை, தமுமுக, மமக, தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ. எனப் பல பெயர்களில் இயங்கினாலும், சிறுபான்மையின அரசியலின் நோக்கங்கள் ஒன்றே. இஸ்லாமியர் தங்களை குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்கொண்டு பிறரை சந்தேகமாகப் பார்ப்பதைக் கைவிடாதவரை, அவர்கள் மீதான மக்களின் சந்தேகப் பார்வையும் தொடரவே செய்யும். இதனையே சுயநல அரசியல்வாதிகள் வாக்குவங்கிக்காக விரும்புகின்றனர். பாஜக போன்ற தேசிய கண்ணோட்டமுள்ள கட்சிகளின் பெருந்தன்மையான அணுகுமுறையாலும் அரவணைப்பாலும் மட்டுமே இந்நிலை மாறும். ஆனால், அதற்குள் நாட்டில் சதிகாரர்கள் நாசங்களை நிகழ்த்தாமல் தடுத்தாக வேண்டும்.

நமது கவலை இப்போது சென்னையில் நடந்துள்ள ரயில் குண்டுவெடிப்பு மட்டுமல்ல; இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகி இருப்பது மட்டுமே நம்மை அதிர்ச்சிகொள்ளச் செய்யவில்லை. இனிமேல் இத்தகைய அபாய நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யும் திறன் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதே நம் கவலை.

இந்நிலையில், நாட்டைப் பிளக்கும் எந்த சதியையும் முறியடிக்க, புதிதாகப் பொறுப்பேற்கும் மத்திய அரசு வல்லமை பெற்றதாக இருக்கும் என்பதே நம் முன்னுள்ள ஒரே நம்பிக்கை.

7 Replies to “சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்”

  1. அனைவருக்கும் வணக்கம்,

    ஸென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து நம்ம சென்னை ஜனங்கள் யாரும் ”வழக்கம் ” போல் அமைதி காத்தது எனக்கு ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ”தினமலர்” நாளிதழ் மட்டும் தான் முன்னெச்சரிக்கையோடு செய்தி வெளி இட்டு இருந்தது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்ன வென்றால் நம்ம D G P, முதலில் இந்த சம்பவத்தை சிறு வெடிவிபத்து என்று சொன்னதாக கேள்வி பட்டேன், ஜெயா T V யும் அதயே சொன்னதாக தெரிகிறது.{பிறகு குண்டு வெடிப்பு என்று மாற்றி சொன்னது வேறு விஷயம் } இப்படியே போனால் ஸெப்டெம்பர் 11 ஒரு விமான விபத்து, புஷ் நிர்வாகம் பைலட் லைசென்ஸ் வழங்குவதில் ஊழல் செய்ததால் ஏற்பட்டது , கோவை சம்பவம் வெயில் காரணமாக தார் உருகி லாரீடயர்கள் வெடித்ததால் ஏற்பட்டது, என்றெல்லாம் சொன்னாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. இங்கு ஜனங்களை ஒற்றுமை படுத்த, தன் { சரியான } முடிவா ஏற்க செய்யும் செல்வாக்கான தலைமை தேவை அது மோடி மட்டும் தான். எனவே ஆட்சி மாறினால் { தான் }காட்சியும் மாறும்..

    இப்படிக்கு
    ADV.RANGA..

  2. “நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற இரு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தான் தமிழகத்தில் இந்த நிலை ஏற்படக் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இஸ்லாமிக் டிஃபன்ஸ் ஃபோர்ஸ், சிமி, ஐஎஸ்எஸ், அல் உம்மா, ஜிகாத் பேரவை, தமுமுக, மமக, தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ. எனப் பல பெயர்களில் இயங்கினாலும், சிறுபான்மையின அரசியலின் நோக்கங்கள் ஒன்றே. இஸ்லாமியர் தங்களை குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்கொண்டு பிறரை சந்தேகமாகப் பார்ப்பதைக் கைவிடாதவரை, அவர்கள் மீதான மக்களின் சந்தேகப் பார்வையும் தொடரவே செய்யும்”

    இது யதார்த்த நிலையைக் கூறும் வாக்கியங்கள். வெடிக்கும் குண்டு இந்துவா, முஸ்லீமா என பேதம் பார்ப்பதாக தெரியவில்லை. இஸ்லாமிய இந்தியர்கள் சிரியா,ஆப்கானிஸ்தான், எகிப்த்து மற்றும் பாகிஸ்தானில் உள்ள நிலைமைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது.

  3. என்ன தவறு செய்தாள் அந்த சின்னஞ்சிறு பெண் சுவாதி? அரசியல் வாதிகளின் பகடை விளையாட்டில் வாழ வேண்டிய பெண் உயிர் இழந்து கிடக்கும் கொடுமைக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள். வாக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கீழ்த்தரமாக அரசியல் செய்யும் சுய நலக்காரர்களின் முகத் திரைகள் கிழிபட வேண்டிய நேரம் , நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

  4. As long as the terrorist incidents are taken in an ambivalent manner by the people, by the state and central governments of India, and by its self-serving political leaders who are only after vote-banks, this terrorism on Indian land will continue for ever.

  5. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஜனிஉல் ஆபிதீன் இந்த ஜாகிர் உசேனுக்காக சென்னை ஹாய் கோர்ட்டில் வாதாடியது, பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த ஆள் ஒரு அப்பாவி, போலீஸ் வேண்டுமென்றே பொய் கேசில் புக் பண்ணி உள்ளார்கள் என்று சொன்னது, இவர்களின் சுய ரூபத்தை காட்டி உள்ளது. இவர்கள் அரசியல் ரீதியாக வளர்வதற்கு DMK மற்றும் ADMK கட்சிகளே காரணம்

  6. வன்முறை இயக்கங்கள் வளர திமுக எப்போதுமே துணைபுரியும். ஏனெனில் திமுகவே ஒரு வன்முறை இயக்கம் தான். கரூரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் திமுக ரவுடிகள் பாலசுப்பிரமணியன் என்ற காவல்துறை அதிகாரியை உயிருடன் பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். கோவையில் செல்வராஜ் என்ற காவல் துறை அதிகாரியை கொன்ற கொடியோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணா அரசின் மெத்தனத்தாலும், கொடிய எண்ணங்களாலும் தான் பிப்ரவரி 1998-லே சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெடிகுண்டு தாக்குதலில் பலியாகினர். பின்னர் அந்த மதானி கும்பலை எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்காமல் வழக்குகளில் எளிதாக தப்ப விட்டனர். சந்தன கடத்தல் மன்னர் வீரப்பரை , தமிழ்ப் போராளி என்று சட்டசபையில் விளித்தவர் தான் நமது மஞ்சள் துண்டு அய்யா அவர்கள். திமுக என்றாலே வன்முறை , பொறுக்கித்தனம் என்று அகராதியில் ஏறிவிட்டது. வன்முறையை விட அபாயம் வன்முறையை நியாயப்படுத்தும் போக்கு. ஆனால் குடும்ப கட்சியான திமுகவை மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டனர். இனி திகாருக்கு அடிக்கடி பயணம் செய்யவேண்டியிருப்பதால், தமிழக அரசியலில் அந்த குடும்ப கட்சிக்கு அஸ்தமனம் மட்டுமே.

  7. வன்முறை என்பது திமுகவின் கூட பிறந்த குணம். Emergency நேரத்தில் இந்தியா திமுக கலைத்தார். அந்த வெறியில் அந்த இந்திரா தமிழ் நாட்டிற்கு வந்தபோது அவர் மீது முட்டை, கல் என எறிந்தனர். அதனால் இந்திரா காயம்பட்டு ரத்தம் வழிந்தது.அதனை காங்கிரஸ் காரர்கள் கண்டனம் செய்தபோது “”நாங்கள் முட்டை, கல் எரிந்ததால் அவருக்கு ரத்தம் வரவில்லை. அவருக்கு period time அதனால் வந்த ரத்தமே அது.”” என்று விளக்கம் கொடுத்தனர் திமுகவினர். இப்படி வன்முறை செய்வதோடு அந்த வன்முறைக்கு விளக்கம் வேறு தருபவர்கள் தான் திமுகவினர். (பின்குறிப்பு:- காங்கிரஸ் க்கு நான் வக்காலத்து வாங்க முயல்வதாக நினைக்காதீர்கள். காங்கிரஸ் கட்சி எந்த வகையிலும் திமுகவிற்கு சளைத்ததல்ல.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *