ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே கருதப்பட்டுவந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிதாகப் பொறுப்பேற்ற மோடி அரசால் ஜூன் 10-இல் நாடாளுமன்றத்தில் புதிய இலக்குகளுடனும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செல்லப்போகும் திசையை இந்த நிதிநிலை அறிக்கை திட்டவட்டமாக வரையறுத்துள்ளது.
இதுவரையிலான காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதே நிதிநிலை அறிக்கைகளின் விளைவாக இருந்துவந்துள்ளது. ஆனால், மோடியின் சகாவான நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், வழக்கமான இனிப்பான வாக்குறுதிகளை விட, நிறைவேற்றச் சாத்தியமான திட்டங்களையே முன்வைத்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை தயாராகும் முன்னரே எந்தத் துறைக்கு சாதக அம்சங்கள் கிடைக்கும்? சாமானிய மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்? வருமானவரி எந்த அளவிற்கு குறைக்கப்படும்? எந்தெந்தப் பொருள்களுக்கு வரி அதிகமாகும்? என்ற கேள்விகளுடன் பொருளாதார நிபுணர்கள் நிலைகொள்ளாமல் தவிப்பார்கள். ஆனால், நிதிநிலை அறிக்கை வெளியான பிறகு அந்த நிதியாண்டில் சென்ற நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் செயல்படுத்தப்பட்டனவா என்று யாரும் சிந்திப்பதில்லை. புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக்கொண்டு போக வேண்டியது தான்.
ஆனால், மோடி அரசு, ரயில்வே நிதிநிலை அறிக்கையிலும் சரி, பொது நிதிநிலை அறிக்கையிலும் சரி, முந்தைய அரசின் நிதிநிலை அறிக்கைகளின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டே புதிய திட்டங்களைத் தீட்டி உள்ளது. இயல்பிலேயே மக்களின் வாக்குகளை அள்ளும் ஜனரஞ்சக அரசியலில் நாட்டமில்லாத நரேந்திர மோடி, மன்மோகன் சிங் போல மானியத் திட்டங்களை அதிகரிக்க முற்படவில்லை. அதேசமயம், முந்தைய அரசு தொடங்கிவைத்த பல மக்கள்நலத் திட்டங்களுக்கான மானியங்கள் குறைக்கப்படவும் இல்லை. மானியங்களுக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 2.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.
5 அம்சங்களில் கவனம்:
தேர்தல் பிரசாரத்தின் போதே நாட்டின் வளர்ச்சிக்கு 5 டி ( 5 T) தேவை என்றார் மோடி. அவை: அறிவு (Talent), பாரம்பரியம் (Tradition), சுற்றுலா (Tourism), வர்த்தகம் (Trade), தொழில்நுட்பம் (Technology). இந்த ஐந்தின் அடிப்படையிலேயெ தனது அரசு இயங்கும் என்று பிரதமராகும் முன்னரே அறிவித்தவர் மோடி. அவரது அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்த 5 அம்சங்களும் ஆதாரமாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
எனினும், முந்தைய அரசால் நாட்டின் நிதிநிலைமை மிகவும் சீரழிக்கப்பட்டுள்ள நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாததையும் கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டின் மீதமுள்ள 8 மாதங்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய இக்கட்டு அருண் ஜேட்லி மீது சுமத்தப்பட்டது. இந்த இக்கட்டை ஓரளவுக்கு ஜேட்லி சாமர்த்தியமாக்க் கடந்துவிட்டார். ஆனால், மோடி மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதீத எதிர்பார்ப்புகளை தனது முதல் நிதிநிலை அறிக்கையில் அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது உண்மையே. குறிப்பாக விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு எழுந்த கடும் எதிர்ப்பால், ஜேட்லி பொது நிதிநிலை அறிக்கையில் சிறிது அடக்கி வாசித்திருக்கிறார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் மொத்த உத்தேச வரி வருவாய் ரூ. 13,64,524 கோடி. வரி சாராத உத்தேச வருவாய் ரூ. 2,12,505 கோடி. உத்தேச வரி வருவாயில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 9,77,258 கோடி. ஆனால், மொத்த செலவினம் ரூ. 17,94,892 கோடியாகும். இதில் திட்டமற்ற செலவினங்கள் ரூ. 12,19,892 கோடியாகும்.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். நாட்டின் கருவூலம் ஏற்கனவெ பற்றாக்குறையில் தள்ளாடும் நிலையில் மோடியின் பல கனவுத் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் அமல்படுத்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆயினும், தனது ஐந்தாண்டுகால அரசில் தனது முன்னோடித் திட்டங்களை மோடி நிறைவு செய்வார் என்பதற்கான பல சமிக்ஞைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுகின்றன.
.
அறிவும் தொழில்நுட்பமும்:
இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மோடி அரசு உயர்கல்வியில் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்புவதை புதிதாகத் துவங்கப்பட உள்ள ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் குறித்த அறிவிப்பில் அறிய முடிகிறது.
இமாச்சலப் பிரதேசம், பிகார், பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் புதிதாக இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.) துவக்கப்படும்; ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) துவக்கப்படும்; ஆந்திரா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவின் விதர்ப்பா பகுதி, உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி ஆகியவற்றில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகள் (எய்ம்ஸ்) துவக்கப்படும் என்ற அறிவிப்புகள் பாராட்டிற்குரியவை.
காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது வரலாறு. ஆனால், மோடி அரசு, அரசியல் பேதமின்றி நாட்டின் பல பகுதிகளுக்கும் உயர்கல்வி வாய்ப்பு செல்வதை தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே உறுதிப்படுத்தி உள்ளது.
பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம்; படிக்க வைப்போம் என்ற முழக்கத்துடன் ரூ. 100 கோடியில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் குஜராத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமே; இப்போது நாடு முழுவதும் அமலாகிறது.
வடகிழக்கு மாநிலங்களுக்கென ‘அருண்பிரபா’ தொலைக்காட்சியும், விவசாயிகளுக்காக ‘டிடி-கிசான்’ தொலைக்காட்சியும் துவக்கப்படும் என்ற அறிவிப்பு தகவல் புரட்சியின் பயன்பாட்டை விவசாயிகளுக்கும் எல்லைப்புற மக்களுக்கும் கொண்டுசெல்வதற்கான முயற்சியே. 600 சமுதாய வானொலிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடும் தகவல் புரட்சியின் அங்கமே.
தவிர, கிராமப்புற மக்களும் அகன்ற அலைவரிசையைப் பெற ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இணைய உலகம் கிராமப்புற மக்களுக்கும் பயன்பட உதவும். அதேபோல, உள்நாட்டிலேயே கணினி மென்பொருள், வண்பொருள்களைத் தயாரிக்க ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்காக ரூ. 500 கோடியை ஒதுக்கியுள்ளார் அருண் ஜேட்லி.
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு (சர்வ சிக்ஷா அபியான்) ரூ. 28,635 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதரஸாக்களை நவீனமயமாக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அடிப்படைவாதக் கல்வியிலிருந்து இஸ்லாமிய மாணவர்களை மீட்பதற்கான முயற்சி எனலாம்.
தவிர, புதிய கல்வி பயிற்சிக்கருவிகளை அறிமுகப்படுத்தவும், ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், ரூ. 500 கோடி செலவில் ‘மதன்மோகன் மாளவியா புதிய ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்’ துவக்கப்பட உள்ளது.
நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் தொழில்முனைவு ஆற்றலையும் மேம்படுத்த ‘ஸ்கில் இந்தியா’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன், இளைஞர்களின் திறமைகளை கூர்தீட்டி, தொழிற்பயிற்சி அளிக்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ரூ. 100 கோடி செலவில், வாழ்க்கை வழிகாட்டி மையங்களாக மாறும். உலகிற்கு அற்புதமான பணியாளர்களையும் நாட்டிற்குத் தேவையான தொழில்முனைவோரையும் அதிகரிக்க இத்திட்டங்கள் உதவும்.
.
பாரம்பரியமும் சுற்றுலாவும்:
மோடி அரசு முந்தைய அரசு போலல்லாது பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்ளும் அரசு. எனவே, பாரம்பரியத்தை காப்பதும் மீட்பதும் முக்கியம் என்ற அடிப்படையில் பல செயல்பாடுகளைத் துவக்கி உள்ளது. அதன் பிரதிபலிப்பை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது. சென்ற அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியதை விட 877 சதவீதம் அதிகமாக இந்த நிதிநிலை அறிக்கை சுற்றுலாத் துறைக்கு நிதி (ரூ. 1,966 கோடி) ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, மதுரா, அமிர்தசரஸ், கயை, ஆஜ்மீர் ஆகிய தேசிய பாரம்பரிய நகரங்களின் மேம்பாட்டிற்கு ‘ஹிருதய்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நதிக்கரையில் உள்ள நகரங்களான தில்லி, பாட்னா, அலகாபாத், கேதார்நாத், ஹரித்வார், கான்பூர், காசி ஆகிய நகரங்களை அழகுபடுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்க ‘இ-விசா’ என்ற புதிய திட்டம் 9 விமான நிலையங்களில் துவக்கப்படும்; இதன் செயல்பாட்டைப் பரிசீலித்து பிற விமான நிலையங்களிலும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க அடுத்த 20 ஆண்டுகளில் 200 சிறு விமான நிலையங்களை உருவாக்குவது என்ற திட்டம், சுற்றுலா வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, உள்கட்டமைப்பு வளர்ச்சியாகவும் இருக்கும்.
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சுற்றுலா ரயில்பயணத் திட்டங்கள் மோடி அரசின் சுற்றுலா அபிவிருத்தி கொள்கைக்கு சான்றாகும். தவிர குறிப்பிட்ட 5 சுற்றுலா சுற்றுத் திட்டங்களை ரூ. 500 கோடியில் கொண்டுவர இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். உதாரணமாக, சாரநாத்- கயா- வாரணாசி ஆகிய புத்தமத சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்ட பௌத்த சுற்றுலா சுற்றுக்கு ரூ. 100 கோடி செலவிடப்பட உள்ளது. இஸ்லாமிய சுற்றுலா, சமண வழிபாட்டுத்தல சுற்றுலா ஆகியவையும் உண்டு.
முக்கிய புனிதத் தலங்களை மேம்படுத்தும் ‘பிரசாத்’ என்ற திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடாகி உள்ளது. திரைப்படத் துறை சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த கோவாவை சர்வதேச மையமாக வளர்த்தெடுக்க உள்லதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
தொழில்வளர்ச்சியும் உள்கட்டமைப்பும்:
நாட்டின் தொழில்வளர்ச்சி இருந்தால் தான் பொருளாதாரம் உயரும். அதன் அடிப்படையில் பல தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, பரேலி (உ.பி.), கட்டாக் (ஒடிசா), பாகல்பூர் (பிகார்), சூரத், கட்ச் (குஜராத்) ஆகிய இடங்களில் ஜவுளி தொகுப்பு மண்டலங்கள் அமைக்க ரூ. 200 கோடி வழங்கப்படுகிறது. வாரணாசியில் பாரம்பரியமான பட்டு கைத்தறி சேலைகளின் மேம்பாட்டிற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தடையற்ற மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்க விவசாயத்திற்கென பிரத்யேக மின்தொடரை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கென ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின்வசதியை ஏற்படுத்தும் ‘தீனதயாள் உபாத்யாய கிராமஜோதி யோஜனா’ என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் மாபெரும் சூரியஒளி மின்சக்தி திட்டங்களை உருவாக்க ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றாலை, சூரிய ஒளி மின்சாதனங்களுக்கு வரிக்குறைப்பால் மரபுசாரா மின்னுற்பத்தி அதிகரிக்கும். சூரிய ஒளி மின்திட்டங்களுக்கு மட்டுமே ரூ. 1,000 கோடி செலவிடப்பட உள்ளது.
ஊரக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த மன்மோகன் அரசால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை (நூறுநாள் வேலைத் திட்டம்) விவசாயப் பணிகளுடன் இணைக்கலாம் என்ற மோடி அரசின் முடிவு மிகவும் தேவையானது. இப்போது இத்திட்டம் வேலை செய்யாமலே ‘கமிஷன்’ கழித்துக்கொண்டு ஊதியம் அளிக்கும் ஊதாரித் திட்டமாக உள்ளது. அதேசமயம், வட மாநிலங்களில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு, இத்திட்டம் நீக்கப்படாமல் அதேசமயம் முந்தைய தவறுகளை சீர்திருத்தும் வகையில் விவசாயத்திற்கு ஆதரவானதாக மாற்றப்பட்டிருக்கிறது. மோடி அரசின் தெளிவான பார்வைக்கு இது ஒரு உதாரணம். இதன்மூலமாக விவசாயக் கூலியாட்கள் பிரச்னையும் குறையும்.
லக்னோ, அகமதாபாத் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர ரூ. 100 கோடி ஆரம்ப நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொன்னேரி உள்ளிட்ட 100 இடங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் நவீன சிறு நகரங்கள் அமைக்க ரூ. 7,060 கோடி நிதி வழங்கப்படுகிறது.
எல்லைப்புற ரயில்வே கட்டமைப்புக்கு ரூ. 1,000 கோடியும், வடகிழக்கு மாநில எல்லையோர உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பயன்படும். வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டிற்காக மட்டுமே, ரூ. 53,706 கோடி செலவிடப்படும் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளார். இது மோடி அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்று.
தேசிய அளவில் நதிகளை இணைக்க முதல்கட்டமாக கொள்கை அடிப்படையில் ரூ. 100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து மோடியின் கனவுத் திட்டமான கங்கை சுத்திகரிப்புக்காக, ‘நமாமி கங்கே’ என்ற திட்டம் ரூ. 2,037 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கங்கையில் அலகாபாத் (உ.பி.) முதல் ஹால்டியா (மேற்கு வங்கம்) வரை உள்நாட்டு நதிநீர்ப் போக்குவரத்தை உருவாக்க ரூ. 4,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக முத்திரை (பிராண்ட்) கொண்ட ஆடைகளுக்கு கலால் வரி விதிக்காதது, தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு ரூ. 11,635 கோடி நிதி, சிறு, குறு தொழில்களில் புதிய தொழில்முனைவோருக்கு ரூ. 10,000 கோடி சலுகைகள் ஆகியவை தொழில்துறையினருக்கு மகிழ்ச்சி அளிப்பவை.
கிராமப்புற வளர்ச்சிக்காக, ஒருங்கிணைக்கப்பட்ட திட்ட அடிப்படையிலான உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘சியாம பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனமூலமாக, நகரம் நோக்கி மக்கள் செல்வது குறையும். இத்திட்டம் தனியார்- பொது பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது.
.
பாதுகாப்பும் விவசாயமும்
அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விவசாயத்திற்கும் இந்த அரசு அளித்துள்ள முக்கியத்துவம் தான். முந்தைய அரசு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் கைவைத்தது. ஆனால், மோடி அரசு, பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2,29,000 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளது. இது முந்தைய நிதிநிலை அறிக்கையை விட 12.5 சதவீதம் அதிகம்.
எனினும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இது 1.78 சதவீதம் மட்டுமே. நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அண்டை நாடான சீனாவில் பாதுகாப்புத் துறைக்கு அளிக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கே இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தவிர, பாதுகாப்புத் திறையிலும், காப்பீட்டுத் துறையிலும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ராணுவத் தளவாடங்களையும் ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான அதிகபட்ச முதலீடு கிடைக்கும்.
“தற்போது நமது ராணுவ ஆயுத உற்பத்தித் திறன் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. எனவே, நாம் பெருமளவில் ஆயுதங்களை வெளிநாடுகளில் கொள்முதல் செய்கிறோம். இதனால் பெருமளவில் அந்நியச் செலாவணி விரயமாகிறது. இதைத் தடுக்க, இந்தியாவே ஆயுத உற்பத்தி கேந்திரமாக மாற அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு பாதுகாப்புத் துறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார், பாதுகாப்புத் துறையையும் கைவசம் வைத்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தற்போது உலகிலேயே அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையை மாற்ற மோடி அரசு திட்டமிடுகிறது.
தில்லியில் போர் நினைவுச் சின்னம் (ரூ. 100 கோடி), காவலர் நினைவுச் சின்னம் (ரூ. 50 கோடி) ஆகியவை வேறெந்த அரசும் நினைத்தும் பாராத விஷயங்கள். எல்லைப்புறப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ. 2,250 கோடி, எல்லையை ஒட்டிய கிராமங்களின் வளர்ச்சிக்கு ரூ. 990 கோடி, மத்திய புலனாய்வுத் துறைக்கு ரூ. 521 கோடி, காவல்துறையை மேம்படுத்த ரூ. 3,000 கோடி, ராணுவ வீர்ர்களின் ஒரு பதவி- ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்காக ரூ. 1,000 கோடி, பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ரூ. 100 கோடி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, விவசாய அபிவிருத்திகாக, பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு. விவசாயக் கடன்களுக்காக ரூ. 8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஊரக கூட்டுறவு கடன்களுக்கு ரூ. 50,000 கோடி, விவசாய விளைபொருள் கிடங்குகள் அமைக்க ரூ. 5,000 கோடி, விலைவாசி நிலைப்படுத்தும் நிதிக்கு ரூ. 500 கோடி, ஆந்திரா, ராஜஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகங்கள், தெலங்கானா, ஹரியானாவில் தோட்டக்கலைத் துறை பல்கலைக் கழகங்கள் அமைக்க ரூ. 200 கோடி, வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை அசாம், ஜார்கண்டில் துவங்க ரூ. 100 கோடி, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க ரூ. 100 கோடி, இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க தேசிய நிதியாக ரூ. 100 கோடி, உள்நாட்டு கால்நடை இன அபிவிருத்திக்கு ரூ. 50 கோடி, மீன்வளத் துறைக்கு ரூ. 50 கோடி ஆகியவை புதிய ஒதுக்கீடுகள்.
அரசின் கருவூலம் ததும்பி வழிந்திருந்தால் மேற்படி திட்டங்களுக்கு மேலும் பல மடங்கு நிதி கிடைத்திருக்கும். ஆனால், சரிவில் தவிக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதேநேரத்தில் புதிய திட்டங்களையும் அறிவித்தாக வேண்டிய கடமை, மோடிக்கும் ஜேட்லிக்கும் ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும்.
‘விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் புதிய உரக் கொள்கை உருவாக்கப்படும்’ என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக லோக்சபையில் அவர் பேசுகையில், “உரம் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்கும். பல்வேறு வகையிலான உரங்களை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுவது கவலையை அதிகரித்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.
2013- 2014 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில், “மத்திய அரசும் விவசாயிகளும் உரம் மூலம் ரூ. 8,500 கோடி நிதியை வீணாக்குகின்றனர். இதை சரிசெய்வதற்கு, தற்போது தயாரிப்பை அடிப்படையாக்க் கொண்டு மானியம் (பி.பி.எஸ்.) வழங்குவதற்குப் பதிலாக ஊட்டம் அடிப்படையில் மானியம் (என்.பி.எஸ்.) வழங்க வேண்டும். உரத்துக்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக பணமாக வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. இதுவே புதிய உரக் கொள்கைக்கு வித்திட்டுள்ளது எனலாம்.
தேசிய அளவில் நீர்நிலைகளை மேம்படுத்த ‘நீராஞ்சல்’ திட்டம் ரூ. 2,142 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்ர அறிவிப்பும், தேசிய நதி நீர் இணைப்புகான அய்வுகள் தொடங்கும் என்ற அறிவிப்பும் விவசாயத்தின் வேருக்கு நீரூற்றுபவை.
.
மேலும் பல சிறப்பம்சங்கள்:
ஜம்மு காஷ்மீரிலிருந்து பிரிவினைவாதிகளால் விரட்டப்பட்ட காஷ்மீரப் பண்டிட்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப (மறுகுடியமைப்பு) ரூ. 500 கோடி நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
2011-இல் ரத்தான கிசான் விகாஸ் சேமிப்புப் பத்திரம் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. காப்பீட்டுடன் கூடிய தேசிய சேமிப்புப் பத்திரங்களும் கொண்டுவரப்படுகின்றன. பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீட்டு வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமானவரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 சி பிரிவின் கீழ் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு சலுகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் சேமிப்பை ஊக்குவிக்க ரூ. 1.5 லட்சம் கோடி அளவிற்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரிவசூல் முறையில் சீரான தன்மையைக் கொண்டுவர ஜி.எஸ்.டி. (பொருட்கள் மற்றும் சேவை வரி) கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தகர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி.
அரசு வங்கிகளின் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அரசுத் துறை வங்கிகளின் மூலதன மேம்பாட்டிற்கு ரூ. 11,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு தன்னாட்சி அளிக்கவும் பரிச்சீலிப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
முடங்கிக் கிடக்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளின் விற்பனைக்கு ரூ. 58,425 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு செலவினங்களைக் குறைப்பது குறித்து ஆராய, செலவு மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
பார்வையற்றோருக்கான 15 புதிய பிரெய்லி அச்சகங்கள் துவக்கம், பார்வையற்றோருக்கான பிரதியேக ரூபாய் நோட்டு தயாரிப்பு ஆகியவை சமூக மேம்பாட்டுச் சிந்தனையும் கொண்டவை. சென்னையிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தேசிய முதியோர்நல மையம் துவக்கப்படும் என்ற அறிவிப்பு, நாட்டில் பெருகிவரும் முதியோர்நலச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான முதல்படி.
அனைவருக்கும் ஆரோக்கியம் திட்டத்தில் இலவச மருந்து, நோய் பரிசோதனைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. சிகரெட், பான்மசாலா, புகையிலைப் பொருள்கள், குளிர்பானங்கள், இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருள்கள் மீதான வரி உயர்வு, இவை மீதான நுகர்வியத்தைக் குறைக்க வாய்ப்பினை ஏற்படுத்தும்.
விளையாட்டுத் துறைக்கு ரூ. 981 கோடி நிதி ஒதுக்கியுள்ள மோடி அரசு (இது முந்தைய அரசை விட ரூ. 196 கோடி அதிகம்), ஜம்மு காஷ்மீரிலும் (ரூ. 200 கோடி) மணிப்பூரிலும் (ரூ. 100 கோடி) விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ. 85 கோடி நிதி ரூ. 405 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளின் வளர்ச்சிக்காக ரூ. 185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் போர் நினைவுச் சின்னமும் அருங்காட்சியகமும் அமைப்பது என்ற முடிவு இந்த அரசின் தேசப்பற்றின் அடையாளம். இதற்கென ரூ. 100 கோடியும் குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைப்பதற்கு ரூ. 200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.1 சதவீதமாகக் குறைக்க இந்த நிதிநிலை அறிக்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. தவிர, மூன்றாண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை 8 சதவீதமாக்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
.
ஒட்டுமொத்த மதிப்பீடு:
வழக்கம்போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் அருண் ஜேட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையை படிக்காமலேயே விமர்சித்தும் குறைகூறியும் வருகின்றன. ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரும் ஒருசேர இந்த நிதிநிலை அறிக்கையைப் பாராட்டி இருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிதிநிலை அறிக்கையில் காங்கிரஸ் முத்திரை உள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சி. கூறியுள்ளதிலிருந்தே, இதனை அவரால் குறைகூற முடியவில்லை என்பது புலப்படுகிறது.
முந்தைய அரசின் பல திட்டங்களையே நகலெடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவி சோனியா கூறியிருக்கிறார். வெறும் சவடாலுக்கு கடந்த பத்தாண்டுகளில் மன்மோகன் அரசால் அறிவிக்கப்ப்ட்டு பாதியில் நிற்கும் திட்டங்களை பிறகு என்ன செய்வதாம்? தவிர, முந்தைய அரசின் திட்டங்களை பழிவாங்கும் நோக்கில் நிறுத்தாமல் தொடரும் மோடியின் பெருந்தன்மை சோனியாவுக்கு எங்கே புரியப்போகிறது?
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுகளால் அறிவிக்கப்பட்ட 600-க்கு மேற்பட்ட ரயில்வே திட்டங்களில் நடைமுறைக்கு வந்தவை 120 திட்டங்கள் மட்டுமே என்ற உண்மையை ரயில்வே நிதிநிலை அறிக்கையின்போது ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா அம்பலப்படுத்தினார். எனவேதான் முந்தைய திட்டங்களை நிறைவேற்றவே புதிய ரயில்வே நிதிநிலை அறிக்கை அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டியதாயிற்று. இத ஆண்டின் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 65,445 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே பொது நிதிநிலை அறிக்கையிலும் முந்திய அரசின் செயலற்ற தன்மையால் ஏற்பட்ட தேக்கத்தை சரிசெய்தாக வேண்டிய கடமை புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதை மிகவும் சமயோசிதமாக நிறைவு செய்திருக்கிறார் அருண் ஜேட்லி.
குறிப்பாக பெரு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி சாதகமானவர் என்ற பிரசாரம் நடைபெறும் நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை பெருநிறுவனங்கள் சாராத புதிய திசையைக் காட்டி இருக்கிறது. பெருந்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இதுவரையிலான நிதிநிலை அறிக்கைகள் இருந்து வந்துள்ளன. ஆனால், முதல்முறையாக, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, விவசாயம், சேமிப்பை மையமாகக் கொண்ட பொருளாதாரம் ஆகிய சிந்தனைகளின் அடிப்படையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது.
அதுவும் ஆட்சியில் அமர்ந்து 45 நாட்களில் இந்த நிதிநிலை அறிக்கையை மோடி அரசு வெற்றிகரமாக, மக்களிடம் எவ்வித அதிருப்தியும் எழாவண்னம் சமர்ப்பித்திருக்கிறது. இவ்விஷயத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வயிற்றெரிச்சல் விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.
அதேபோல நாட்டின் உள்கட்டமைப்புக்கும் பாதுகாப்புக்கும் பாரம்பரிய மீட்புக்கும் இந்த நிதிநிலை அறிக்கை அளித்துள்ள முக்கியத்துவம் இதுவரை இருந்ததில்லை. கிராமப்புற அபிவிருத்திக்கும், இளைஞர் மேம்பாட்டிற்கும் திட்டப்பட்டுள்ள பல திட்டங்களில் மோடி முத்திரை தெளிவாகத் தெரிகிறது. அருண் ஜேட்லியே கூறியிருப்பது போல இந்த நிதிநிலை அறிக்கை கூட வெறும் 8 மாதங்களுக்கான இடைக்கால அறிக்கையே. இதில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் சோதனை முயற்சித் திட்டங்களாகவே உள்ளன.
இந்த நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படப் போகின்றன என்பதைப் பொருத்தே, இதனை முழுமையாக மதிப்பிட முடியும். ஆனால், இதுவரை இருந்த அரசுகள் போலல்லாது புதிய கண்ணோட்டமும், செயல்திறனை வெளிப்படுத்தும் தொலைநோக்கும் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை காட்சி அளிக்கிறது.
மோடியும் ஜேட்லியும் இணைந்து சமர்ப்பித்துள்ள இந்த நிதிநிலை அறிக்கை அடுத்துவரும் ஆண்டுகளிலும் மேம்படுத்தப்பட்டு தொடருமானால், இந்தியா வளர்ச்சி திசை நோக்கி நடைபோடுவதை யாராலும் தடுக்க முடியாது.
.
PLEASE DO NOT USE LEATHER SUITCASE FOR BRINGING BUDGET PAPERS…
Yaezhai hindu maanavargalukum mathiya arasin kalvi uthavi thogai vazhanga vendum