ஒரு நிகழ்ச்சி. சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ நாராயணகுரு அவர்களை சந்திக்க சென்றிருந்தார். குரு சுவாமியிடம் என்ன தமிழ் நூல்கள் பிடிக்கும் என கேட்டார். சுவாமி குருதேவரிடம் ’தாயுமான சுவாமிகள் பாடல்கள்’ என கூறினார்.
குருதேவர் சொன்னார் – ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்ம தத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது.
தமிழ் மொழி வேதாந்த நூல் மரபில் சுவாமிகளின் இந்நூலுக்கு தனி இடம் உண்டு. கேரளத்தின் மகான் ஒருவர் அருளாலும் சுவாமி சித்பவனாந்தரின் கருணையாலும் தமிழன்னைக்கு மேலும் ஒரு ஆபரணம் கிடைத்தது. சுவாமி விவேகானந்தர் சொல்வார் ‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்.’
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது.
ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை. மாணிக்கவாசக சுவாமிகளின் பாதங்களையும் ஸ்ரீ நாராயண குரு சுவாமி சித்பவானந்தர் ஆகிய ஆன்மிக மகான்களின் பாதங்கள் பணிந்து தேசத்தில் ஆன்மநேய ஒருமைப்பாடு ஓங்க உழைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
நான் இதுபோன்ற கட்டுரையை எதிர்பார்த்தேன்.
மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை (02-07-2014) அன்று சிறப்புக்கட்டுரை எதுவும் இல்லையே என நினைத்தேன்.
ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள் பல.
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே
– நால்வர் நான்மணி மாலை
சோமசுந்தரம்
ஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை
‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த கோவில் இது.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்று, பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தன் படைக்கு, குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினான். அவர், திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்த போது, குருந்த மரத்தின் அடியில், சிவபெரு மான், குருவாக இருந்து, சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாணிக்கவாசகர், தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, அவரது திருவடியில் விழுந்து, தன்னையும் ஆட்கொண்டு அருளும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு திருவடி தீட்சை வழங்கினார். குதிரை வாங்க வைத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். பின், மன்னன் உத்தரவுபடி நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை, குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை, மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும், அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தன் பக்தரின் பெருமையை ஊரறியச் செய்தார் சிவன்.
சிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிவனை புகழ்ந்து பாடினார். அந்த பதிகங்களின் சொற்கள் ஒவ்வொன்றும், மாணிக்கம் போல இருந்ததால், அவருக்கு, மாணிக்கவாசகர் என, பெயர் வந்தது. ஏனெனில், இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வாதவூரான். தன்னுடைய பாடல்களால் மாணிக்கவாசகர் என, பெயர் பெற்ற இவருக்கு, சின்னமனூரில் கோவில் எழுப்பப்பட்டது.
ஆனி மகம் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரத்தன்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னிதி முன், சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடுடன் அருளுகிறார். இங்கு ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார்.
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்கின்றனர். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால், இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாக்களின் போது, இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழி மாத உத்திர நட்சத்திர நாட்களில், மாணிக்கவாசகரும், நடராஜரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். ஆனி மகம் குருபூஜையன்று, தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத்திறமை வேண்டுவோர் திருவாசகத்தில் உள்ள, ‘திருச்சாழல்’ பதிகத்தை பாடி, வேண்டுகின்றனர்.
குருபூஜையன்று மதிய பூஜையில், மாகேஸ்வர பூஜை நடக்கும். அன்று, சிவனடியார்களை, சிவனாகக் கருதி திருநீறு, சந்தனம் பூசி, மலர் தூவி தீபாராதனை செய்து, விருந்து கொடுக்கின்றனர். தேனியிலிருந்து, 24 கி.மீ., தூரத்தில் சின்னமனூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரிலும், அவருக்கு தனிக்கோவில் உள்ளது. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் விழாக்காலங்களில், மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.
வெ.சுப்பிரமணியன் ஓம்
இந்த பதிவினை எதேச்சையாக இன்று தான் பார்க்க நேரிட்டது. எப்படி என் கண்களில் இருந்து விடுபட்டது என்று எனக்கு தெரியவில்லை.
திருவாசகத்துக்கு பலரும் உரை எழுதி உள்ளனர். அவற்றில் சிறந்த உரைகள் சிலவே. முதலிடத்தை பிடித்துக்கொண்டவை சுவாமி சித்பவானந்தரின் திருவாசக உரையும், திருவாவடுதுறை ஆதீனத்து பெரும்புலவர் மகா வித்துவான் குருநாதர்
அருள்தரு அய்யா ச தண்டபாணி தேசிகர் அவர்கள் எழுதிய இருபாகங்கள் அடங்கிய உரையும் ஆகும்.
திருவாசகத்தில் -உபநிடத மகா வாக்கியங்கள் என்று சொல்லப்படும் நால்வேத சுருக்கங்களுக்கு , தெளிவான பிரம்ம விளக்கம் உள்ளது..
ஏகன் அநேகன் இறைவன் என்றார் மாணிக்கவாசகர்.
கரம் குவிவார் உள் மகிழும் கோன் – என்றார் இறைவனை.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றார்-
தேவாரத்தில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் பாடிய உருத்திர தாண்டகம் எனப்படும் நின்ற திருத்தாண்டகத்துக்கு முழு விளக்கமும் திருவாசகத்தில் பரவலாக காணக்கிடக்கிறது.
பெருந்துறை மேய பிரானாகிய சிவபெருமானின் அருள்தரும் திருவடிகளை இறைஞ்சும் பொக்கிஷம் திருவாசகம்.
திருவண்டப்பகுதி ஒரு பிரபஞ்ச விளக்கம் –
சைவ சித்தாந்தத்தின் மணி முடி திருவாசகமே ஆகும். தினசரி சிவபுராணம் படித்து உய்வோம் .
அற்புதமான விளக்கம்