பட்டாசுடன் கொண்டாடுங்கள்!

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதற்கு பலரும் இப்போது மறுப்பும் சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். நான் அனைவரையும் வேண்டிக் கொள்வது என்னவென்றால் எந்தவித குற்ற உணர்வும் இன்றி பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடுங்கள். பட்டாசு மற்றும் மத்தாப்புகளுக்கு சொல்லப்படுகின்ற எதிர் காரணங்கள் எதுவுமே பொருட்படுத்தத் தகுந்தவை அல்ல. தீபாவளித் திருநாளை மற்ற பண்டிகைகளைவிட திருவிழாக்களின் ராஜாவாக ஆக்குவது இந்த வான வேடிக்கைதான். இது தருகின்ற ஆனந்தத்துக்கு ஈடு இணையே இல்லை.

வான வேடிக்கைகள் விழாக் காலங்களின் முத்திரை. உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. நமது நாட்டில் இவை எல்லா பெரு நிகழ்வுகளிலும் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா!

children-diwali-celebration

இனி இதற்கான மறுப்புகளாக சொல்லப்படுவனவற்றை ஒவ்வொன்றாகப் ஆராய்வோம்.

முதன்மையாக சொல்லப்படும் ஒரு காரணம் சுற்றுச் சூழலுக்கான மாசு உண்டாக்குவதாக சொல்லப்படுவது. பட்டாசு மத்தாப்பு தயாரிப்புகளில் தயாரிக்கப்படும் அத்தனை மூலப் பொருட்களும் மக்கும் தன்மை கொண்டவைதான். பொட்டசியம் நைட்ரேட் கந்தகம் பாஸ்பரஸ் போன்ற வேதிப் பொருட்களும் பெருமளவுக்கு காகிதமும்தான் இவற்றுக்கான மூலப்பொருள். விரைந்து எரியும் இந்தப் பொருட்கள் உருவாக்கும் முக்கியமான வினைபொருள் கார்பன் டை ஆக்சைடும் புகையும் மட்டுமே. காகிதத்தால் சுற்றப்பட்ட மிகப்பெரிய வெடியை பிரித்துப் பார்த்தோமானால் அதில் மிகச்சிறிய அளவில் வெடி மருந்தைக் காணலாம். உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மத்தாப்புகளுக்கு நாம் அன்றாடும் பயன்படுத்தும் தீக்குச்சிகள்தான் அடிப்படை. ஒவ்வொரு வீட்டிலும் தீக்குச்சிகள் தன்னளவில் ஆன மாசை வளிக்கு தினம்தோறும் சேர்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் எரி வாயுவும் இருசக்கர நாற்சக்கர வண்டிகளும் தினம் தோரும் இடைவிடாமல் வெளியிடும் பெரும் அளவிளான மாசுகளை அவற்றின் தேவை கருதி அனுமதிக்கும் நாம் பட்டாசுகளும் மத்தாப்புகளும் தரும் உற்சாகத்துக்காகவும் குதுகலத்துகாகவும் பொருட்படுத்தட் தேவையே இல்லாத அளவில் மாசு உண்டாக்கும் இவற்றை ஏன் அனுமதிக்கக் கூடாது?

அடுத்ததாக குழந்தைத் தொழிலாளர் இதன் தயாரிப்பில் இருப்பதால் இவை புறக்கனிக்கப்பட வேண்டும் என்ற கருத்து. இது ஏன் பட்டாசுக்கு மட்டும் சொல்லப்படுகிறது? தீக்குச்சிகளுக்கும் அதேகுற்றச்சாட்டு பொருந்துமே! அது மட்டுமட்டாமல் எண்ணற்ற தொழில்களிலும் இக்குற்றச்சாட்டைக் கூறலாம். ஆனால் அதற்காக அப்பொருட்களை புறக்கணிப்பதல் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா அல்லது பாதிக்கப் படுகிறார்களா? குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது.

பட்டாசு மத்தாப்புகள் கொளுத்துவது ஒரு விளையாட்டு. எல்லா விளையாட்டையும் போலவே இதிலும் ஆபத்துகள் உண்டு. ஆனால் அதற்காக நாம் விளையாட்டுகளை எப்படி பாதுகாப்பாக செய்கிறோமோ அதேப்போலவே இதையும் செய்ய வேண்டும். எல்லா விளையாட்டுகளும் இருக்கும் பயன்களைப் போலவே இதற்கும் உண்டு.

நெருப்புடன் விளையாடுவதற்கான வேடிக்கையான உண்மையான அறிமுகத்தை தீபாவளி வானங்கள் நமக்குச் சொல்லித் தந்துவிடுகின்றன. முதன்முறை பயப்பட்டு பிறகு தயங்கி பிறகு தெளிந்து குதுகலத்துடன் நெருப்புடன் விளையாடுகின்ற அரிய செயல்பாட்டை நாம் இழக்கலாமா!

அனைவருக்கும் பட்டாசு மத்தாப்புகளின் ஒலி ஒளி கலந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

(ஓகை நடராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

9 Replies to “பட்டாசுடன் கொண்டாடுங்கள்!”

 1. //அடுத்ததாக குழந்தைத் தொழிலாளர் இதன் தயாரிப்பில் இருப்பதால் இவை புறக்கனிக்கப்பட வேண்டும் என்ற கருத்து. இது ஏன் பட்டாசுக்கு மட்டும் சொல்லப்படுகிறது? தீக்குச்சிகளுக்கும் அதேகுற்றச்சாட்டு பொருந்துமே! அது மட்டுமட்டாமல் எண்ணற்ற தொழில்களிலும் இக்குற்றச்சாட்டைக் கூறலாம். //

  சாலைஒர உணவு விடுதி, hotel எல்லாம் clean பண்ணுவதர்க்கு சிறுவர்கள்தான் , இந்த கருத்து கந்தசாமிகள், சிறுவர்கள் இருக்கும்வரை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று சபதம் பண்ணலாம்.

 2. ஓகையாருடைய ………சரியான சமயத்தில்…….. சரியான விளக்கம்.

  ஒவ்வொரு ஹிந்துப் பண்டிகையிலும் கொனஷ்டை கற்பிப்பது என்பது பரங்கிப் பணத்தில் புழங்கும் ஊடகங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு ஹிந்துப்பண்டிகையும்.

  இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்களது பண்டிகைகளின் போது அவர்கள் கொண்டாடும் விதத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கான இடைஞ்சல்கள் அப்படியே மூடி மறைக்கப்பட்டு ஹிந்துக்கள் இந்தப் பண்டிகைகளில் எப்படி பங்கேற்கிறார்கள் என்பதே முக்யமாக பகிரப்படும். மத அறுவடையை அடிப்படையாகக் கொண்டு தானே ஆப்ரஹாமியப் பணத்திற்கு விலை போன ஊடகங்கள் செயல்படுகின்றன.அதே அலகீடு மாற்று மதத்தவரின் பண்டிகைகளின் போது நீட்டிக்கப்படுவதில்லை.

  இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்குபவர்களின் உண்மையான கரிசனம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோ அல்லது குழந்தைத் தொழிலாளர்களை அவர்கள் செய்யும் தொழில்களிலிருந்து மீட்டு அவர்களது குழந்தைப்பருவத்துக்குகந்த கல்வி மற்றும் கேளிக்கைகளுக்கு வழிவகுப்பதோ இல்லை.

  எப்பாடு பட்டாவது ஹிந்துக்கள் தாங்களாகவே தங்கள் பண்டிகைகளை பாரம்பர்யங்களில் குற்றம் கண்டு அவற்றை விட்டொழிக்க முயலவேண்டும் என்ற மிஷ நரித்தனமான எண்ணமே பட்டாசு வெடிக்காதே, கணவனுக்காக உபவாசம் இருக்காதே, நதியில் நீராடி நீரைப் பாழாக்காதே ………. இத்யாதி இத்யாதி………வக்ர ஆலோசனைகள்.

  பட்டாசில்லாத தீபாவளியா?…………….ம்ஹும்………. டமால் டுமீல்……….. புஸ்………..படார் படீர்……….சிறுவர் சிறுமியருடன் ஆனந்தமாக அதே சமயம் முழுமையான பாதுகாப்புடன் விதவிதமான பட்டாசுகளைக் கொளுத்தி……… மிட்டாய்கள் சாப்பிட்டு…….. வயிறு கெடாமல் இருப்பதற்கு தேவையான லேகியங்களை சாப்பிட்டு…….. உறவினர்கள் நண்பர்களுக்கு முக மலர வாழ்த்துக்கள் சொல்லி…………வடை பாயாசத்துடன் சாப்பாடு சாப்பிட்டு இது போன்ற பல தீபாவளிகளைக்கொண்டாட வள்ளிக்கு வாய்த்த பெருமான் அருள் புரிவானாக.

  ஹிந்துக்கள் மற்றும் மாற்று மத இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சஹோதர சஹோதரிக்களுக்கு எமது அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 3. பாண்டியன் அவர்கள் நெத்தியடியாக நல்ல பதில் தந்துள்ளார். தீப்பெட்டியோ நாம் அன்றாடம் பயன்படுத்துவது. மற்றும் பெரும்பாலும் ஓட்டல்களில் மேசை சுத்தம் செய்ய ஏராளம் சிறுவர்கள் தான் வேலைக்கு வருவார்கள். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, பட்டாசுக்கு மட்டும் எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்வது ,இந்துப் பண்டிகையான தீபாவளிக்கு எதிராக சீமான் போன்றவர்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரம் போன்றதுதான்.

 4. இந்து பண்டிகைகளுக்கு எதிராக கூறுபவர்களை சிறிது பார்த்தால், அவர்கள் 80% வேற்று மதமாகவே இருப்பர். 10% இடதுசாரியாகவும் மீதம் நாத்திக வாதிகளாக இருப்பர். நமக்கு கருத்து சொல்ல இவர்கள் யார். தீபாவளி எனில், இனிப்பும் பட்டாசும் புத்தாடையும் இணைந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இப்பண்டிகையின் இரு மாதங்களுக்கு முன்பிருந்தே countdown செய்து கொண்டு, எதிர் நோக்கி இருப்போம். இது தொடர்ந்து, அடுத்த அடுத்த த லைமுறைகளும் இந்த இனிய அனுபவம் புற வேண்டும்.

 5. ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறேன். நான் ஒரு இந்து. மேலும் தீவிர பிஜேபி காரன். இதை மனதில் வைத்து கீழேகண்டவற்றை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  1. பட்டாசு வெடிப்பதினால் தெருவெங்கும் குப்பை. இந்த தப்பை செய்து மோடி அவர்களின் “தூய்மை பாரதம்” திட்டத்திற்கு வைக்றோம் அதிர் வேட்டு

  2. நெருப்போடு விளையாடுவதும் கபடி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதும் ஒன்றா? (ஜல்லி கட்டு கூடாது அதை தடை செய்ய வேண்டும்) ஒவ்வொரு இந்து குடும்பமும் தீபாவளி அன்று நெருப்போடு விளையாடுகிறது. கபடியை குடும்பம் குடும்பமாகவா விளையாடுகிறது? தீ விபத்துக்கள் இல்லாத தீபாவளி உண்டா? நம் இந்து ஜனங்களை நாமே அழித்து கொள்கிறோமே! ஆகவே தீபாவளி அது ஒரு தீபாவலி ஆக மாறாமலிருக்க பட்டாசுகளை தவிர்ப்போம். புத்தாடைகளை உடுத்தி இனிப்பு பண்டங்களை உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம்.

  3. வீடுகளில் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் இருப்பார்கள் அவர்கள் கஷ்டப்படும்படி வெடிகளை வெடித்து மகிழலாமா? மற்றவர்களை கஷ்டபடுத்தி நாம் மகிழ்வது ஒரு உண்மையான மகிழ்ச்சியா?

  4. Air pollution மற்றும் noise pollution ஆகியவற்றோடு நிற்காமல் ஒரு பெரிய revolution தீபாவளியின் போது நடக்கிறது அதாவது இந்த பண்டிகைக்கு முன் ஆயுத பூஜை வருகிறது. அப்போது சரஸ்வதி மற்றும் லட்சுமி ஆகிய கடவுள்களுக்கு பூஜை செய்து வணங்குகிறோம், ஆனால் தீபாவளி அன்று லட்சுமி வெடி வெடித்து மகிழ்கிறோம். அந்த லட்சுமிக்கு பூஜை. இந்த லட்சுமி வெடியை வெடித்து அந்த கடவுளின் தலை தனியாக கால் தனியாக கை தனியாக தெருக்களில் சிதறி கிடக்கிறது. இது விநாயகரை (சிலையை) 10 நாட்கள் பூஜை செய்து கோலாகலமாக கொண்டாடி 11வது நாள் கொண்டுபோய் கடலில் தள்ளுவது போல இருக்கிறது. நிலத்தை மாசுபடுத்துகிறோம். நீர்நிலைகளை மாசுபடுத்துகிறோம். காற்றை மாசுபடுத்துகிறோம். கடவுளையே மாசுபடுத்துகிறோம்.

  5. நாம் வெடி வெடித்து காசை கரியாக்குகிறோம் என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த காசு நமது நாட்டுகாரனுக்கே போய் சேர்ந்தால் பரவாயில்லையே! அதில் பாதிக்கு மேல் சீனாகாரனுக்கு அல்லவா போய் சேர்க்கிறது? எங்கள் ஊரில் கெங்கையம்மன் பண்டிகை கொண்டாடபடுகிறது. அன்று வானவேடிக்கை நடக்கிறது. அதற்கு contract யார் தெரியுமா? ஒரு முஸ்லிம். அழிவது இந்து பணம். வாழ்வது முஸ்லிம் ஜனம். அதுமட்டுமல்ல. தீபாவளி அன்று மட்டன் மற்றும் சிக்கன் கடைகளை போய் பாருங்கள். அங்கே திரண்டு இருப்பது இந்துக்கள். பணத்தை வாரி வழித்து வியாபாரத்தை பெருக்கி கொள்வது முஸ்லிம்கள். அன்று மரக்கறி உணவு உண்டால் நமது குடல் அதை செரிக்காதா? அன்று புலால் உணவு உண்டே ஆகவேண்டுமா?

  6. சீமான் என்பவன் சொன்னான் என்பதற்காக நாம் கோபபடுவதை விடுத்து அதாவது யார் சொன்னது என்பதை பார்க்காமல் என்ன சொல்லப்பட்டது என்று பார்க்க வேண்டும். அல்லது அவன் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒரு பொறுக்கி. அவன் நம் மத விவகாரத்தில் தலையிட உரிமை இல்லை என்றே வைத்து கொள்ளுவோம். நாமே ஆராய்ந்து நம் மதத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்து கொண்டால் என்ன தவறு? ஒரு காலத்தில் இருந்த சதி உடன் கட்டை ஏறுதல் பழக்கம் இப்போது வழக்கதில் உள்ளதா? அதுபோல் மாற்றங்கள் பல வேண்டும். அதன் மூலம் இந்துமதம் பலம் பெறவேண்டும்.

  7. காசை விரயம் செய்யாமல் கடவுளை வணங்க வேண்டும். மாதத்திற்கு ஒரு பண்டிகை. எதற்கெடுத்தாலும் காசுதான். இப்படி காசை கண்டபடி விரயம் செய்து விட்டு கிறிஸ்தவன் பணம் சம்பாதிக்கவும் மதத்தை பரப்பவும் நடத்தும் அவனது கான்வென்டில் போய் சேர்ந்து படிக்கும்போது அவன் நமது பெண் குழந்தைகளின் நெற்றியில் பொட்டு வைக்காதே. தலையில் பூ வைக்காதே என்றால் அதை கேட்டு கொள்கிறோம். நமக்கு கொஞ்சமும் வெட்கம் கிடையாது.

  8. பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களையும் உணவகங்களில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களையும் விடுவிக்க வேண்டும். அவர்களை பற்றி என்றைக்கும் பேசுகிறோம். இவர்களை பற்றி தீபாவளி அன்று மட்டும் பேசுகிறோம். அந்த குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் நம் இந்து குழந்தைகள்தானே. அவர்கள் படிக்க வேண்டாமா? இந்த இந்து சமுதாயம் முன்னேரவேன்டாமா?

  9. பெட்ரோல் இன்றைக்கு கிடைக்கிறது. ஆனால் இன்னும் நூறு ஆண்டுகள் போனால் கிடைக்காது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதேபோல்தான் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் கந்தகம் போன்ற ரசாயன பொருட்களும் காலியாகிவிடும். கந்தகம் போன்றவை tyre செய்ய பயன்படுகிறது. அதனால் அவற்றை பட்டாசில் பயன்படுத்தி வீண் விரயம் செய்யலாமா? பெட்ரோல் தீர்ந்து போனால் அப்போது மின்சாரம் மூலம்தான் இரு சக்கர மற்றும் நாற் சக்கர வாகனங்கள் ஓடும். இப்போதே அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது air pollution க்கு வழி இருக்காது. காற்று மாசு படுகிறது என்பதால் பஸ் போக்குவரத்தை நிறுத்தினால் அதனால் மக்கள் கஷ்டபடுவார்கள். ஆனால் பட்டாசை நிறுத்தினால் அதனால் உலகம் அழிந்து விடாது. உண்மையை சொல்ல போனால் உலகம் வாழும்.

  10. இந்து மதம் தழைக்க வேண்டும் இந்துக்கள் ஒற்றுமை ஓங்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் மேற்கண்டவைகளை சொல்லியிருக்கிறேன்.

 6. கடந்த இரண்டு நாட்களாக, எனது முக நூல் பக்கத்தில் வந்த கருத்துகளுக்கு, நான் அளித்த பதிலையே இங்கே குறிப்பிடுகிறேன்.

  கூறியது கூறல் என்ற குறை இருக்கலாம். காரணம் எனக்கு மீண்டும் மீண்டும் வந்த கமெண்ட்களுக்கு நான் மீண்டும் மீண்டும் வலியுருத்த வேண்டி வந்தது. எனவே பொறுத்துக் கொள்ளவும்.

  *நண்பர்களே, தயவு செய்து பட்டாசுகளுக்காக வருடத்திற்கு ஒரு முரை செய்யும் செலவு அந்த சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு வருடம் முழுவதுமான ஜீவாதாரம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எனது கருத்துக்களைப் படியுங்கள்.

  ஒரு நண்பரின் கருத்து:

  எனது மாற்றுக் கருத்து. பட்டாசு வெடிப்பது கால காலமாக கடைப்பிடித்து வந்த கலாச்சாரமல்லவே. தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதற்காக ஆதரித்தால் டாஸ்மாக், ப்ளாஸ்டிக் பைகள், சிகரெட், பீடிகள், கள் என அனைத்தையும் ஆதரிக்கும் நிலை வரலாம். உங்கள் சிந்தனைக்கு.

  * இருங்கோவேள் ஆகிய எனது பதில்:

  ஆமாமாம், பெட்ரோலியம், பிளாஸ்டிக், ஆட்டோமொபைல் என்று எல்லா தொழிலிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் குறிப்பிட்ட தொழில்கள் தினசரி கொழுத்த வருமானம் கொடுத்த வருடம் முழுவதும் அழிவை தருகின்றது. ஆனால், வருடம் முழுவதும் உழைத்து வருடத்தில் இரண்டு நாள் வருமானத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் தொழிலாளியின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதை விட, தினசரி சிகரெட், டாஸ்மாக், பெட்ரோலியம், ஆட்டோமொபைல் என்று தினசரி பயன்படுத்தி சாவோம். மன்மோகன் சிங் போல, ”விவசாயிகள் வேறு தொழில் பார்க்கச்செல்லவேண்டும்” – என்று சொன்னதைப் போல சிவகாசி தொழிலாளர்களையும் வேறு தொழில் செய்யச் சொல்லலாம், அல்லது விவசாயிகளைப் போல தற்கொலை செய்து கொள்ளச் சொல்லலாம், அவர்களது உறுபத்தியை இரண்டே இரண்டு நாள் பயன்படுத்தி விடுவதால், டாஸ்மாக்கை விட, சிகரெட்டை விட, ஆட்டோமொபைல் தொழிலை விட, பெட்ரோலியம் தொழிலை விட, மரங்களை வெட்டி நாசம் செய்வதை விட, பிளாஸ்டிக்கை தினசரி பயன்படுத்துவதை விட, சிவகாசி தொழிலாளர்களின் உற்பத்தி வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் உற்பத்தி உங்கள் வாழ்வை நாசமாக்குகிறது என்றால், தாராளமாகச் சிவகாசியையும், சிவகாசியையும் இந்திய வரைபடத்திலிருந்தே எடுத்து விடுவோம். குட்டி ஜப்பான் என்றொரு பகுதி இந்த தேசத்தில் இருந்தது என்று நம் வாரிசுகளுக்கு கூகுள் சர்ச்சில் தேடச்சொல்லிக் கொடுப்போம். “லைக்கா” என்ற பெயரை எடுத்து விட்ட காரணத்தால் சோரம் கழிந்து விட்டது என்று தியேட்டரில் விசிலடிக்கும் ஜந்துக்களைப்போல, “சிவகாசி”யை அழித்து விட்டு “சீன்” – பட்டாசுகளை வாங்கி தீபாவளி கொண்டாடுவோம், தினசரி பயன்படுத்தும் டாஸ்மாக்கையும், சிகரெட்டையும் மறக்காமல் உபயோகப்படுத்துவோம், வருடத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயன்படுத்தும் சிவகாசி பட்டாசினால் தான் இந்தியா அழிந்து விடப்போகிறது. வாழ்க மாற்றுச் சிந்தனை, வளர்க கிறிஸ்துவ மிஷனரிகளின் விஷமப்பிரச்சாரம். சிவகாசித்தொழிலாளர்களை பிச்சையெடுக்கவைத்து, அவர்களை வைத்து மதமாற்றப்பிரச்சாரம் செய்ய பில்லியன்களைக் கைய்யில் வைத்திருக்கும் அந்நிய மத்தத்திற்கு சிவப்புக்கம்பளம் விரிப்போம். நாய் வித்த காசு குறைக்கவா போகிறது? சிவகாசி தொழிலாளர்களின் கல்லறையில் – மத நூல்கள் படிப்போம். வாழ்க மாற்றுச் சிந்தனை.

  அந்த நண்பரின் அடுத்த கருத்து:

  பட்டாசுகளினால் வரும் லாபம் தொழிலாளர்களுக்கா அல்லது உரிமையாளர்களுக்கா என பட்டி மன்றம் வைத்தால் உண்மை வெளி வரும். நான் படித்து வளர்ந்தது இந்த பகுதியில்தான். தொழிலாளர்களுக்கு கிடைக்கும் லாபம் சொற்பமே. ஆனால் ரிஸ்க் அதிகம். ஆனால் உரிமையாளர்களோ ஒவ்வொருவரும் பொறியியல் கல்லூரி வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள். மேலும் சிவகாசியின் புகழுக்கு காரணம் பட்டாசு மட்டுமல்ல. அச்சு வேலைகள், தீப்பட்டி தொழில், சமையல் எண்ணெய் உற்பத்தி என பல காரணிகள் உண்டு. சம்பாதித்த காசை கரியாக்க வேண்டுமா என்பதற்கு பதில் எப்படி சம்பாதிக்கிறோம் என பார்க்க வேண்டும் என்பதுதான். வெடி தவிர்ப்போம். சுற்றுச் சூழல் காப்போம். பட்டாசு தொழிலாளர்களை விபத்தில் இருந்து காப்போம்.

  அதற்கு இருங்கோவேளாகிய எனது பதில்:

  நண்பரே, நானும் அந்த கந்தகப் பூமியின் அருகே வளர்ந்தவன் தான். எல்ல தொழிலிலும் லாபம் முதலாளிக்குத்தான் செல்கிறது. அந்த முதலாளிகளிடம் கமிசன் பெற்றுவிட்டு தொழிற்சங்கங்கள் செய்யும் விபச்சாரத்தைய்யும் கவனித்திருக்கிறேன். டாஸ்மாக் லாபம் தமிழக அரசுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் யார் என்று தெரிந்தால், இப்படி எல்லாம் நீங்களும் நானும் பேச மாட்டோம். சுற்றுச் சூழலைக் காக்க நீங்கள் தினசரி பயன்படுத்தும் பெட்ரோலை வாரத்தில் இரண்டு நாள் நிறுத்துங்கள். மன்மோகன் சிங் போல, விவசாயிகள் வேறு தொழிலுக்குச் செல்லவேண்டும் என்று சொல்லாட்ஜீர்கள்.. வருடத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் பயன்படுத்தும் பட்டாசை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லாதீர்கள். தினசரி பயன்படுத்தும் பெட்ரோல் – சிவகாசி பட்டாசுக்கு அப்புறம் தான் தனி மனிதன் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. காசை கரியாக்குகிறது. சாலையில் பல உயிர்களை பலி கொள்கிறது. சாலையில் செல்வோரைக் காப்போம், மோட்டார் வாகனங்கள் ஓடுவதை தடுப்போமா? ”ராபர்ட் மெக்காலே” – வாரிசுகள் மிக தந்திரமாக தேச ஒருமையைக்குலைப்பதற்கு திட்டமிட்டு பிரச்சாரம் செய்வதை ஊக்குவிக்காதீர்கள். உலகுக்கே ஊறு விளைவிக்கும் பெட்ரோலையும், டீசலையும், பிளாஸ்டிக்கையும் தினசரி நான் பயன்படுத்த மாட்டேன். அதன் மூலம் ஓடும் வாகனங்களால், எத்தனையோ மரணங்கள், குறிப்பாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக நடக்கிறது எனவே நான் அவற்றை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று சொல்லுங்கள், நானும் வருடத்திற்கு ஒரே ஒரு நாள் பயன்படுத்தும் பட்டாசினை நிறுத்தி விடுகிறேன். சகோதரரே, ”தீபாவளிக்கு பட்டாசு வாங்க மாட்டேன், “லைக்கா” – என்ற பெயரை அழித்து விட்டு, ராஜபக்‌ஷேவின் தம்பியின் குடும்பத்திற்கு விருந்து வைப்பதற்க்காக “கத்தி” -யைத்தான் பார்ப்பேன், அதனால் பலனடைந்த கதாநாயகனின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வேன்” – என்பது தான் உங்கள் வாதமாக இருந்தால், அல்லது அப்படி செயல்படுபவர்களுக்குத்தான் உங்கள் ஆதரவு என்றால் தாராளமாகச் செய்யுங்கள். இதற்கு மேல் நான் இது குறித்து பேச விரும்பவில்லை.

  நிறைவாக, “சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறி ஆடுகளா?” – என்ற பாடலே நினைவுக்கு வருகிறது.

  இந்த ஆண்டு என் குழந்தைகளுக்கு ரு.1700/- க்கு பட்டாசுகள் வாங்கிக்கொடுக்கும் பாக்யத்தை இறைவன் எனக்கு அளித்தான்.

  அதன் மூலம் சிவகாசியில் அந்த பட்டாசுகளை உருவக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பினை நான் கௌரவித்திருக்கிறேன் – என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

  எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி.

  சில நண்பர்கள் சொன்னது போல, என்னால் இயன்ற உதவியினையும் மற்ற சமூக அமைப்புகளுக்கும் உதவும் பாக்யத்தினை இறைவன் எனக்கு அளித்தான்.

  வரும் ஆண்டுகளிலும் பட்டாசுகள் வாங்குவேன், அதன் மூலம் சிவகாசி தொழிலாளியின் உழைப்பிற்கு கௌரவம் கொடுப்பேன்.

 7. ////இந்த ஆண்டு என் குழந்தைகளுக்கு ரு.1700/- க்கு பட்டாசுகள் வாங்கிக்கொடுக்கும் பாக்யத்தை இறைவன் எனக்கு அளித்தான்.

  அதன் மூலம் சிவகாசியில் அந்த பட்டாசுகளை உருவக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பினை நான் கௌரவித்திருக்கிறேன் – என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்./////
  இவருக்கு உண்மையிலேயே தொழிலாளர்களின் மீது பாசம் பொங்கி வழிந்தால் அந்த 1700 ரூபாயை (வருடம் ஒரு முறைதான்) அந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக கொடுத்து அந்த பாக்கியத்தை பெறலாமே!. அல்லது ஏழை தொழிலாளர்களின் கல்வி செலவிற்கு “”தீபாவளி”” தினத்தன்றே கொடுக்கலாமே. ஒட்டு மொத்த பணமும் அவனுக்கு சேருமே. நான் இப்படி சொன்னால் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வெடிக்கட்டும். ஆனால் அந்த ஏழை குழந்தைகளின் முகத்திலும் வாரி கொடுக்கும் இவர் முகத்திலும் புன்னகை என்ற மத்தாப்பு பூக்குமே. அதைவிடவா பட்டாசு மகிழ்ச்சியை தந்துவிடும்? காசை கரியாக்கி அவர் செய்யும் செயலை சரியாக்கி பேசுவது முறையல்ல

  .///////countdown செய்து கொண்டு, எதிர் நோக்கி இருப்போம்//////
  இயற்கை வளங்களுக்கும் இந்து மத சீரழிவுகளுக்கும் கூட countdown செய்து கொண்டிருங்கள். நல்லதை சொன்னால் ஏற்றுகொள்ளும் பக்குவம் இந்துகளுக்கு வராததுதான் இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு காரணம். இந்துக்கள் ஒன்றுபடவேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியால் அடித்துக்கொண்டு சாவார்கள். ஆனால் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டும் (தீபாவளியே வேண்டாம் என்று ஈ.வே.ரா போல கூறவில்லை) என்று சொன்னால் எல்லாரும் ஒற்றுமையாக குரல் கொடுப்பார்கள். என்ன வினோதமான மக்கள்!

  மூடநம்பிக்கையற்ற இந்துமதம் வாழ்க! இந்து மக்கள் ஒற்றுமை ஓங்குக!

 8. அன்பார்ந்த ஸ்ரீ ஹானஸ்ட் மேன்

  மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எல்லோரும் ஹிந்துக்களாக இருக்கவியலாது என்ற ஒரு கருதுகோள் தான் தவறானது. நீங்கள் பகிரும் கருத்துக்களும் உங்களைப் பற்றிய அறிமுகமும் தமிழ் ஹிந்து தள வாசகர்களுக்குத் தெரிந்தது தானே.

  சுருக்கமாக சில மாறுபட்ட கருத்துக்கள்.

  கொண்டாட்டம் என்பது ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மத மக்களுக்கும் பொதுவான விஷயம் தான். பொது மக்கள் பெரிய அளவில் எந்த ஒரு விழாவையும் கொண்டாட முனையும் போது………. பணச் செலவு…….. சுற்றுச்சூழல் மாசு………. போன்ற விஷயங்கள் நிச்சயம் இருக்கும். எந்த மதத்தவராக இருந்தாலும் சரி.

  எந்த அளவு பணச்செலவு செய்ய வேண்டும் என்பது பணம் செலவு செய்பவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.. யாருக்குமே சுற்றுச்சூழலை மாசு படுத்துவதில் முனைந்து ஒரு விருப்பம் என்பது இருக்காது. விழாக்கொண்டாட்டங்களில் இயன்ற விஷயம்…. சுற்றுச்சூழல் மாசு படுவதை குறைக்க முயல்வது தான். சுற்றுச்சூழல் மாசில்லாத ஒரு விழாக்க்கொண்டாட்டம் என்பது யதார்த்தத்தில் இயலாத விஷயம்.

  வினாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை விழாவில் செய்யப்படும் ப்ரதிமைகளில் கெமிகல் வண்ணங்களுக்குப் பதில் இயற்கை வண்ணங்களை உபயோகிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட முடியும்.
  வினாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை விழாக்களுக்குப் பின்னர் விஸர்ஜனம் செய்யும் விழா செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சிறு குளங்களில் நிகழ்த்த முனைதல் தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் துவங்கியுள்ளது. ஆறு, சமுத்ரம் போன்றவற்றில் கரைப்பதற்கு பதிலான செயற்பாடு.
  சிவகாசிப்பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு குறைவான கேடு விளைவிக்கும் பட்டாசுகள். சீனப்பட்டாசுகள் இதற்கு நேர் எதிர். முன்னதன் விற்பனையை அனுமதித்து பின்னதன் விற்பனை முற்று முழுதாக தடை செய்யப்படுதல் நலம்.

  எந்த விழாவாக இருந்தாலும் சரி……. அதன் அடிப்படை அம்சம் கொண்டாட்டம் மற்றும் மக்கள் அதன் வழியாக ஒன்றிணைதல். அடிப்படை அம்சத்தையே விழாவிலிருந்து அழித்தொழித்து விட்டால் மக்களுடைய கொண்டாட்டமும் அதன் வழியே மக்கள் ஒன்றிணையும் பாங்குக்கும் ஊறு விளைவிக்க முடியும்.

  மாற்று மத சக்திகளும் சூழலியில் அக்கறையாளர் என்ற போர்வையில் ஹிந்துவிழாக்களின் கொண்டாட்ட அம்சங்களை களைய முற்படுவோருடைய முழுமையான நோக்கம் கொண்டாட்டங்களை திசைதிருப்புதலில் குழப்பம் விளவித்து ஹிந்துக்களுக்கு தங்கள் விழாக்கள் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குதல்………. ஹிந்துக்கள் ஒன்றிணைதலை அதன் மூலம் தடுத்து ஹிந்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல்.

  ஹிந்துக்கள் மட்டிலும் ஒன்றிணைதல் என்பது கூட ஆப்ரஹாமியரின் கண்ணை உறுத்துவது இல்லை.

  இது போன்ற விழாக்களில் ப்ரதிமைகள் செய்வது பட்டாசுகள் செய்தல் வண்ணங்கள் செய்தல் போன்ற தொழில்களில் ஹிந்துஸ்தானம் முழுதும் நமது இஸ்லாமிய சஹோதரர்களும் கூட ஈடுபடுகின்றனர். ஹிந்துஸ்தான முழுதுமான ஹிந்துக்களுடைய விழாக்கொண்டாட்டங்கள் ஹிந்து ஒற்றுமைக்கு மட்டிலுமான காரணி இல்லை. மாறாக அனைத்து மதத்தினரும் ஹிந்து விழாக்களில் பங்கு வகிக்கின்றனர். இந்த மத நல்லிணக்கம் ஆப்ரஹாமிய மதவெறியர்களின் கண்ணை வெகுவாக உறுத்துகிறது.

  உங்கள் நோக்கங்கள் எதுவுமே தவறானதில்லை. சரியான உயர்வான நோக்கங்களே தான். நான் இங்கு பகிர்ந்துள்ள சிற்சில யோசனைகள் போன்று (பல இடங்களில் அமலிலும் உள்ளன) ….. இந்த யோசனைகளை பெரிய அளவில் அமல் செய்தால் உள்ளபடி உயர்வான உங்கள் நோக்கங்கள்……… முற்று முழுதாக நிறைவேற்றப்படாது போனாலும் பெரிய அளவில் நிறைவேற்றப்பட முடியும். சுற்றுச்சூழல் குறைவான அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

 9. திரு ஹானஸ்ட் மேன் என்பவர் எனது மறுமொழியை ”காப்பி பேஸ்ட்” – செய்திருப்பதிலிரு்ந்தே, அவர் எந்த அளவு ஹானஸ்ட் என்பது தெரிகிறது.

  ”சிவாகாசி தொழிலாளர்களின் உழைப்பை உதாசீனம் செய்து விட்டு, அவர்களுக்கு நேரடியாக பிச்சை போடு”- என்கிறார்.

  இதற்குத்தானே “ராபர்ட் மெக்காலே” – யின் வழித்தோன்றல்கள் கைகளில் கறுப்பு அட்டையும், ஓரங்களில் சிவப்பு சாயமும் பூசப்பட்ட புத்தகங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதற்கு சிவப்புக்கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது் எந்த வகையில் “ஹானஸ்ட்” என்பது ஒரு நல்ல ஹிந்துவுக்கு தெரியும்.

  மன்மோகன் சிங்காவது “விவசாயிகள் வேறு வேலைக்குப் போக வேண்டும்” என்று சொன்னார், இவரோ “சிவகாசி தொழிலாளர்கள் பிச்சையெடுக்கப் போக வேண்டும்” என்கிறார்.

  ”உழைக்க முடியாதவர்கள் பண்டிகைகளை மட்டுமல்ல, வாழ்க்கையை கொண்டாட நான் வழங்கும் உதவியை இங்கே சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை” என்பதை ஹானஸ்ட் ஆகக் கூறிக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *