தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-1

veeramani_pandey

சனிக்கிழமை (28-3-2015) இரவு 10.00 மணிக்கும் ஞாயிறு (29-3-2015) இரவு 8.00 மணிக்கும் மறுஒளிபரப்பான தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திரு.வீரமணி அவர்கள் கலந்துகொண்டார்கள். திரு.பாண்டேவின் கேள்விக்கு சரியான பதிலை அவர் அளிக்கவில்லை என்பதை பார்த்தோர் அனைவரும் அறிவர். இதில் முக்கியமான சில விஷயங்கள் மட்டுமே தற்போது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் சார்பில் மறுப்பு கொடுக்கப்பட்டு அது தந்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் கொடுத்திருக்கின்ற மறுப்பு அறிக்கை என்பது கொஞ்சம்கூட உண்மையில்லாதது. அதுபற்றிய முழுமையான அலசலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் மாட்டுக்கறி தின்பதைப் பற்றிய விமர்சனத்திற்கு வருவோம்.

தந்தி தொலைக்காட்சியில் திரு.வீரமணியிடம் பாண்டே என்ன கேள்வி கேட்டார் என்பதை உள்ளது உள்ளபடியே பார்ப்போம்.

பாண்டே : அம்பேத்கர் பிறந்தநாள் அன்னைக்கு மாட்டுக்கறி விருந்துண்ணு சொல்லியிருக்கீங்க. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்கள் செத்த மாட்டை சுமக்க கூடாது, மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்று தன்னுடைய சகோதரர்களுக்கு சொல்லியிருக்காரு. நீங்க அவருடைய பிறந்தாள்யே மாட்டுக்கறி திண்ணும் போராட்டம்ன்னு சொன்னா, இந்த ஆதிக்கசாதியினர் மத்தியில அவங்கள்ளாம் புலையர்கள், அவங்கள்ளாம் மாட்டுக்கறி திண்பவர்கள் என்ற எண்ணத்தை மீண்டும் நீங்களே வந்து நினைவுறுத்தற மாதிரி விசயமா மாறிடாதா?

வீரமணி : அம்பேத்கர் எந்த இடத்தில மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு?

பாண்டே : நான் காட்றேன்

என்று சொல்லி தன்னிடமிருந்த ஆதாரத்தை காட்டினார். அந்த ஆதாரம் இதுதான்.

1927 மார்ச் 19, 20ல் கொலாபா மாவட்டத் தீண்டப்படாத மக்கள் மாநாட்டில் அம்பேத்கர் :

‘விலங்குகளின் புலாலை உண்பதில்லை என்று இந்த நிமிடம் முதலே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நமக்குள் உயர்வு தாழ்வு பாராட்டுவதை விட்டொழிப்பதற்கு இதுவே தக்க தருணமாகும். வீசி எறியப்படும் மீந்த உணவுகளை உண்பதில்லை என்று உறுதி பூணுங்கள்……’

 அந்த மாநாடு தீர்மானங்கள் :

இறந்த விலங்குகளின் உடல்களைச் சாதி இந்துக்களே புதைத்துக் கொள்ள வேண்டும். தனியான சட்டத்தின்மூலம் இறந்த விலங்குகளின் புலாலைத் தீண்டப்படாதவர்கள் உண்பதைத் தடை செய்ய வேண்டும்.

நூல் : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, ஆங்கில மூலம் : தனஞ்செய்கீர், தமிழாக்கம் : .முகிலன், வெளியீடு : மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி. பக்கம். 98-99

என்று காட்டுகிறார். இது இப்பொழுது திராவிடர் கழகத்தினரால் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் அனுப்பி தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய மறுப்பில் இவ்வாறு திக கூறியிருக்கிறது : நோயினாலோ, மூப்பினாலோ, பல்வேறு காரணங்களினாலோ இறந்த விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்றும் சுகாதாரக் கண்ணோட்டத்தோடும் தீண்டாமையைத் தவிர்ப்பதற்காகவும் அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துக்களை மாட்டுக்கறி கூடாது என்று சொன்னதாக திரித்து வெளியிடுவது எந்த வகையில் சரி? உணவுக்காக,  வளர்க்கப்பட்டு கொல்லப்படும் உயிரினங்களானாலும், இன்று உணவுக்காகப் பயன்படுத்தப்படும் மாட்டிறைச்சி ஆனாலும் இறந்த விலங்குகளின் உடல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அம்பேத்கரின் கருத்தை திரிபுவாதம் செய்து தங்களுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளும் இந்த அநாகரிகப் போக்கை எப்படி அனுமதிப்பது?’

நாம் மேலோட்டமாக பார்க்கும்பொழுது திராவிடர் கழகம் சொல்வதுதான் சரி என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவோம். உண்மையிலேயே அண்ணல் அம்பேத்கரின் புத்தகமான ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற புத்தகத்தை வீரமணி படித்திருப்பாரேயானால் மேற்கண்ட திக விமர்சனம் எழுந்திருக்காது. (இப்பேட்டியிலேயே அம்பேத்கரின் இப்புத்தகத்தை கூறுகிறார். அதைதான் அவர் 14ம்தேதி வெளியிடப்போவதாக கூறியிருக்கிறார்)

 விஷயத்திற்கு வருவோம்.

அம்பேத்கர் ஏன் செத்த மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று கூறினார்? இதை நாம் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பதோடு தொடர்பு படுத்தி பார்க்க முடியுமா?

அம்பேத்கர் சுகாதாரக் கண்ணோட்டத்தோடு இதை சொல்லவில்லை. இதோ அம்பேத்கர் எழுதுகிறார் :

176-babasaheb-ambedkar_big

‘இறந்த பசுவின் இறைச்சியை சிதறுண்ட பிரிவினர் உண்டனர் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது என்பது முதல் கேள்வி. பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் இந்தப் பழக்கத்தைக் கைவிட்டுவிட்ட பிறகு இவர்கள் மட்டும் மாட்டிறைச்சி உண்பதை ஏன் நிறுத்தவில்லை என்பது இரண்டாவது கேள்வி. தீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாட்டின்மீது இக்கேள்விகள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவற்றைப் பற்றி இங்கு பரிசீலிப்பது அவசியமாகிறது.

முதல் கேள்வி நாம் விவாத த்துக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பொருளுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப்பது மட்டுமன்றி மிக முக்கியமானதும்கூட. சிதறுண்ட பிரிவினர் ஆரம்பத்திலிருந்தே மாட்டிறைச்சியை உண்டு வந்திருக்கின்றார்கள் என்றால் அப்போது இக்கோட்பாடு அடிபட்டுப் போகிறது. ஏனென்றால் ஆரம்பம் முதலே அவர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருந்தபோதிலும் அவர்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படவில்லை என்கிறபோது சிதறுண்ட பிரினவினர் மாட்டிறைச்சி உண்டு வந்த தால் தான் அவர்கள் தீண்டப்படாதவர்களானார்கள் என்று கூறுவது அர்த்தமற்றதாக இல்லாவிட்டாலும் அறிவுப்பூர்வமற்றதாகும்.

இரண்டாவது கேள்வி முக்கியமானதல்லாவிட்டாலும் பொருத்தமானதாகும். மாட்டிறைச்சி உண்பதை பிராமணர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றால், பிராமணரல்லாதோரும் அவர்களைப் பின்பற்றினார்கள் என்றால், சிதறுண்ட பிரிவினரும் அவ்வாறு ஏன் செய்ய வில்லை? அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி இருப்பார்களேயானால் தீண்டாமை தோன்றியிருக்காது.

முதலாவது கேள்விக்குப் பதில் இதுதான் : மாட்டிறைச்சி உண்பது குடியமர்ந்த குலமரபுக்குழுவினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் பொதுவாக இருந்துவந்த காலத்தில், ஒரு புதியமுறை உருவாயிற்று. இதன்படி, குடியமர்ந்த சமூகத்தினர் புதிய மாட்டிறைச்சியையும் சிதறுண்ட வகுப்பினர் செத்த பசுவின் இறைச்சியையும் உண்ணத் தொடங்கினர். குடியர்ந்த சமூகத்தினர் செத்த பசுவின் இறைச்சியை  என்றுமே உண்டதில்லை என்பதற்கு ஐயத்துக்கிடமற்ற சான்று ஏதும் இல்லை. ஆனால் அதேசமயம் செத்த பசு சிதறுண்ட பிரிவினரின் பிரத்தியேக உரிமையானதற்கும், அவர்களுக்கு அது உபரிவருமானமானதற்கும் சான்று இருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். நாம் முன்னரே குறிப்பிட்டிருப்பதுபோல, மகாராஷ்டிர மகர்கள் செத்த விலங்கு தங்களுக்கே தரப்படவேண்டும் என்று உரிமை கொண்டாடுகின்றனர். கிராமத்திலுள்ள ஒவ்வொரு இந்துவிடமும் அவர்கள் இந்த உரிமையைக் கோருகின்றனர். எந்த ஓர் இந்துவும் தனது சொந்த விலங்கு இறந்தால் அதை உண்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அவன் அதை ஒரு மகருக்குத் தந்துவிட வேண்டும். அதாவது மாட்டிறைச்சி உண்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் மகர்கள் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் இந்துக்கள் புதிய மாட்டிறைச்சியையும் உண்டார்கள் என்பன வேறுவிதமாக க் கூறுவதைத்தான் இது குறிக்கும். இங்கு சில கேள்விகள் எழுகின்றன. இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறை பண்டைக்காலத்திலும் இருந்து வந்த தா? இந்த மகாராஷ்டிர உதாரணத்தை குடியமர்ந்த குலமரபினருக்கும் சிதறுண்ட பகுதியினருக்கும் இடையே இத்தகையதோர் ஏற்பாடு இந்தியா முழுவதும் இருந்து வந்ததற்கான சான்றாக எடுத்துக் கொள்ள முடியுமா?

இது சம்பந்தமாக, மகர்களிடையே தற்போது நிலவிவரும் ஒரு பரம்பரைப் பழக்கத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். இதன் படி கிராமங்களில் இந்துக்களுக்கு எதிராக பீடார் மன்னர் தங்களுக்கு 52 உரிமைகள் அளித்த தாக அவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு பீடார் மன்னர் உரிமைகள் அளித்த தாக க் கூறப்படுவதை ஒப்புக் கொண்டாலும், மன்னர் இந்த உரிமைகளை முதல் தடவையாக உருவாக்கி இருக்க மாட்டார் என்பது தெளிவு. தொன்னெடுங்காலமாகவே இந்த உரிமைகள் நடைமுறையில் இருந்து வந்திருக்க வேண்டும். மன்னர் செய்ததெல்லாம் அவற்றை உறுறதி செய்ததுதான். சிதறுண்ட பிரிவினர் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் குடியமர்ந்த சமூக்த்தினர் புத்தம்புது மாட்டிறைச்சியையும் உண்ணும் வழக்கம் பண்டைக்காலம் முதலே உருவாகி வந்திருக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இத்தகைய ஓர் ஏற்பாடு வளர்ந்து வந்திருப்பது முற்றிலும் இயல்பே. குடியமர்ந்த சமூகத்தினர் செல்வ வளம் படைத்தவர்களாக இருந்தனர். வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் அவர்களது வாழ்க்கைத் தொழிலாக இருந்துவந்தன. ஆனால் சிதறுண்ட பிரிவினரோ ஓட்டாண்டி சமூகத்தினராக இருந்தனர். சொந்த வாழ்க்கைத் தொழில் ஏதுமில்லாமல் குடியமர்ந்த சமூகத்தினரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். இரு சாராருக்கும் மாட்டிறைச்சியே பிராதன உணவு. குடியமர்ந்த சமூகத்தினர் உணவுக்காக எப்போதும் வேண்டுமானாலும் ஒரு விலங்கைக் கொல்ல முடியும். ஏனென்றால் அவர்களிடம் கால்நடைச் செல்வம் ஏராளமாக இருந்த்து. சிதறுண்ட சமூகத்தினர் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் அவர்களுக்குச் சொந்தமாக கால்நடைகள் ஏதுமில்லை. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் குடியமர்ந்த சமூகத்தினர் தங்களுடைய செத்த பிராணிகளை, சிதறுண்ட சமூகத்தினர் அங்கு அவர்களது காவல் பணிக்கு ஊதியமாக அளிக்க ஒப்புக்கொண்டது எவ்வகையில் இயல்புக்குப் புறம்பானதாக இருக்க முடியும்? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. எனவே, குடியமர்ந்த சமூகத்தினரும் சிதறுண்ட சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்டு வந்த பண்டைக்காலத்தில் முந்தியவர்கள் புதிய மாட்டிறைச்சியையும் பிந்தியவர்கள் செத்துப்போன பசுவின் இறைச்சியையும் சாப்பிட்டுவந்தனர் என்றதும், இந்த நடைமுறை மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த்து என்பதும் தெள்ளத்தெளிவு.

 இது முதல் ஆட்சேபத்தை செல்லுபடியற்றதாக்குகிறது. அடுத்து இனி இரண்டாவது ஆட்சேபத்துக்கு வருவோம். குப்த பேர ரசர்கள் இயற்றிய சட்டம் பசுக்களை கொல்பவர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமே ஆகும். அச்சட்டத்திற்கும் சிதறுண்ட சமூகத்தினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனென்றால் அவர்கள் பசு வதை செய்யவில்லை. செத்துப்போன பசுவைத்தான் உண்டார்கள். அவர்களது செயல்பாடு பசுவதைத் தடைச் சட்டத்தை எவ்வகையிலும் மீறவில்லை. எனவே, செத்துப்போன பசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்ணும்பழக்கம் அனுமதிக்கப்பட்டது. தவிரவும், பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் மாட்டிறைச்சியைக் கைவிட்டதுடன் எவ்வகையிலும் சம்பந்தப்படாத அகிம்சை சித்தாந்த த்தையும் சிதறுண்ட சமூகத்தினர் எவ்வித த்திலும் மீறவில்லை. பசுவைக் கொல்வது இம்சை. ஆனால் செத்த பசுவை உண்பது இம்சை அல்ல. ஆகவே, செத்தபசுவின் இறைச்சியை தொடர்ந்து உண்பது குறித்து, சிதறுண்ட சமூகத்தினர் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு உள்ளாவதற்கு எத்தகைய முகாந்தரமும் இல்லை. சட்டமும் சரி, இம்சை சித்தாந்தமும் சரி அவர்கள் செய்வதைத் தடை செய்ய முடியாது. ஏனென்றால் அவர்களது செய்கை சட்டத்திற்கோ சித்தாந்தத்திற்கோ எவ்வகையிலும் முரண்பாடானதல்ல.

 பிராமணர்களையும், பிராமணரல்லாதோரையும் அவர்கள் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கான பதில் இருவகையானது. முதலாவதாக, இவ்வாறு பின்பற்றுவதற்கு அவர்கள் தர வேண்டிய விலை அதிகம். அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை. இறந்த பசுவின் இறைச்சிதான் அவர்களுக்குப் பிரதான உணவு. அது இல்லையென்றால் அவர்கள் பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, செத்த பசுவை அப்புறப்படுத்துவது ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு தனிச்சலுகையாக இருந்தது. பின்னர் அதுவே ஒரு கடமைப் பொறுப்பாகிவிட்டது. செத்த பசுவை அப்புறப்படுத்தும் பணியிலிருந்து தப்பமுடியாத நிலைமையில் முன்னர் போலவே அதன் இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 14, பக்கம். 188-191.

நூல் : தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?

இதுதான் அண்ணல் அம்பேத்கர் எழுதியது. இப்பொழுது நமக்கு அண்ணல் அம்பேத்கர் ஏன் இறந்த மாட்டிறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று சொன்னார் என்பதும் ஏன் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதும் தெளிவாகும்.

அதாவது இறந்த மாட்டிறைச்சியைத்தான் அப்போது தலித்துகள் உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தனர். புதிய வெட்டப்பட்ட மாட்டிறைச்சியை உண்ணவில்லை, அதுவும் மகாராஷ்டிரம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலை இருந்தது என்று கூறுகிறார். ஆகவே சுகாதாரத்திற்காக அண்ணல் அம்பேத்கர் செத்த மாட்டிறைச்சியை உண்ணாதீர்கள் என்று சொல்லவில்லை என்பதும் நமக்குத் தெளிவாகிறது. சுகாதாரத்திற்காக என்றால் புதிய மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று சொல்லியிருப்பார். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தலித்துகள்மேல் தீண்டாமை திணிக்கப்படுகிறது என்ற காரணத்தைக் கொண்டு மாட்டிறைச்சி சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார் அண்ணல் அம்பேத்கர். மேலும் பல கட்டுரைகளில் இதே கருத்தை விளக்கியுள்ளார்.

அதாவது தலித்துகள் வழக்கமாக கொண்டிருந்த, உரிமையாகக் கொண்டிருந்த செத்த மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தை விட்டுவிட சொல்கிறார். மற்றொன்று புதிய மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று அவர் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை. இதில் யார் கருத்து திரிபுவாதம் செய்கிறார்கள் என்பதை படிக்கும் வாசகர்களே முடிவு செய்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் புத்தமதம் மாறும்போது 22 சூளுரைகளை ஏற்கிறார். அதில் அனைத்து ஜீவராசிகளிடமும் பரிவோடும் பாசத்தோடும் நடந்துகொள்வேன். அவற்றை அன்போடு பேணி வளர்ப்பேன் என்பதும் ஒன்று. அரசியல் அமைப்பின் சட்டத்தில் பசுவதையை தடுக்கும் ஷரத்திற்கு ஆன்மிக ரீதியில் இல்லாமல் விவசாயத்திற்க்காக பசுவை காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார். இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அண்ணல் அம்பேத்கரின் கருத்தை திரித்து அவர் பிறந்த நாளிலேயே மாட்டுக்கறி தின்னும் போராட்டத்தை திக நடத்துகிறது என்று சொன்னால் யாரை அவமதிக்க இப்போராட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தலித்துகளில் உள்ள பல பிரிவுகளில் மாட்டிறைச்சி உணவு சாப்பிடுவது இல்லை. உதாரணமாக வள்ளுவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவது கிடையாது. ஆனால் அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று மாட்டிறைச்சி சாப்பிடுவது வைக்கப்படும்போது, எல்லா தலித்துகளும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற ஆதிக்கசாதியின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளவற்றையே வீரமணியும் நிரூபிக்கிறார் என்பதைத் தவிர இந்தப் போராட்டத்தில் வேறெதுவும் கிடையாது. இதில் வேடிக்கை சில தலித் அமைப்புகள் ஆதரவு தருவதுதான். அவர்களை அண்ணல் அம்பேத்கர் ஆத்மா என்றும் மன்னிக்காது.

(தொடரும்)

6 Replies to “தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-1”

 1. மாட்டிறைச்சி உண்பதை பிராமணர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றால், பிராமணரல்லாதோரும் அவர்களைப் பின்பற்றினார்கள் என்றால், சிதறுண்ட பிரிவினரும் அவ்வாறு ஏன் செய்ய வில்லை? அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி இருப்பார்களேயானால் தீண்டாமை தோன்றியிருக்காது. இது சிறிது சிந்திக்க வேண்டிய கருத்துதான்.

 2. போரில் ஈடுபடும்போது பசுக்கள் கொல்லாமல் காக்கப்பட வேண்டியது என்பது தமிழன் பண்பாடு.
  ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
  பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
  பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
  5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
  அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
  கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
  எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
  செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
  10 முந்நீர் விழவின் நெடியோன்
  நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. புறநானூறு 9
  பாடியவர்: நெட்டிமையார். நெட்டிமையார்

  ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

  மாட்டுக்கறி பிதற்றும் தமிழன் எனும் நடிகர்கள் தமிழும் அறியாதவர்கள்

 3. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
  இரவின் இளிவந்த தில்.

  மு.வ உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும்,
  இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

  தமிழனய் பிச்சைக்காரனாக இலவசத்தை நோக்க வைத்தவர்கள் எங்கே வள்ளுவரை நாடப் போகிறார்கள்.

  திருவள்ளுவரும் கொடுங்கோண்மை அதிகாரத்தில் மோசமான அரசன் ஆட்சியில் பசுக்கள் பயன் தாராது என்கிறார்.

  ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
  காவலன் காவான் எனின்

  If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

 4. திரு. விவேக் , தாழ்த்தப் பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்ணாமல் இருக்க அவர்களுக்கு சமுதாயம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வாய்புக்கள் ஏதும் அப்போது இல்லை. தமிழ் இந்து தளத்திலேயே கிடைக்கும் அம்பேத்கார் அவர்களின் கருத்துக்களைப் படித்தல் நலம்.

 5. இப்படி ஒரு வலைத்தளம் இருப்பதை இன்று தான் தற்செயலாக அறிந்தேன்.அரிய / அறிய பல கருத்துக்கள்.ஹிந்துக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயல்வோர்க்கு தக்க பதிலடி. வாழ்க tamilhindu .com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *