எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை

எப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.

க்தியில் பலவகை. தெய்வத்தைக் குழந்தையாக, தாயாக, தகப்பனாக, ஆண்டானாக, நண்பனாக இன்னும் பலவிதங்களில் வரித்துக் கொண்டு பக்தி செய்வது. இதில் நண்பனாக என்றால் சுந்தரர் போல் உரிமை பூண்டு, “நான் உன்னைத் தமிழ்ப் பண்ணால் பாடல் பாடி ஏத்துகிறேன். நீ எனக்கு நான் (நியாயமாக) வேண்டுவது அனைத்தும் தருவாயாக,” என்பது ஒருவிதம். குசேலன் போல கிருஷ்ணன் தனது இளமைப் பருவத் தோழனே ஆயினும் தனது நிலை உணர்ந்து சற்று விலகியே இருந்து அன்பு செய்வது இன்னொரு விதம். பெரியாழ்வார் போலக் குழந்தையாகக் கண்டு கொஞ்சி மகிழ்வதும் ஒரு வகை.

தமிழ் மூவர் (அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை)
தமிழ் மூவர் (அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை)

தமிழ் இசை மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தா பிள்ளையை இதில் எதில் சேர்ப்பது? தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும். ஞானச் சித்தரென சித்தாந்தக் கருத்துக்களை எடுத்து அடுக்கவும் செய்கின்றார்.

         என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா- இதை

        எண்ணிப் பார்த்தால் ஆர்க்கும் பழிப்பையா (என்ன)

 

        அன்னம் கண்டறியாமல் சொரூபமும் மாறினீர்

        ஆட்டை யெடுத்துத்துணிந் தம்பல மேறினீர் (என்ன)

 

          கூடைமண் சுமந்துண்ணப் பரிந்தீரே முனிவர்

        கொண்ட பெண்களைத் துகில் உரிந்தீரே

        ஓடெடுத் திரந்துண்டு திரிந்தீரே பசியால்

        ஒருவன் பிள்ளையைக் கழுத்தரிந்தீரே

        வேடனாகி விசயன் வில்லால் அடிபட்டீரே

        காடே குடியிருப்பாக் கல்லால் அடிபட்டீரே (என்ன)

இது நிந்தாஸ்துதி எனப்படும் தூற்றுமறைத் துதி என்பதில் சந்தேகமும் உண்டோ? இத்தகைய நிந்தாஸ்துதி பாடல்களை இயற்றும் வழக்கத்தை பிரபலப் படுத்திய மாரிமுத்தா பிள்ளை இப்பாடலை வேளாவளி எனும் ராகத்தில் இயற்றினார் என அறிகிறோம். கால ஓட்டத்தில் இவருடைய பாடல்கள் வெவ்வேறு ராகங்களில் பாடப்பட்டு வருகின்றன. இந்த அழகான அபூர்வப் பாடலை கொத்தமங்கலம் சீனுவின் குரலில் கேட்கலாம். ராகம் என்னவென்று அறிய இயலவில்லை. தெரிந்தவர்கள் தயை கூர்ந்து தெளிவிக்கவும்.

  >>>  இந்தப் பாடலைக் கேட்க

chidambaram_temple_complex

பெரும்புலவரான மாரிமுத்தாப் பிள்ளை தில்லைவிடங்கன் எனும் சிற்றூரில் 18-ம் நூற்றாண்டில் பிறந்தவர். தமிழ்க்கல்வி, சமயக்கல்வி கற்றுத் தேர்ந்தவர், தில்லை நடராஜப் பெருமானிடம் பேரன்பு கொண்டவராக விளங்கினார். இவரது மூன்று புதல்வர்களில் முதலாமவன் சித்த சுவாதீனமற்றுப் போகவே பெரும் கவலை கொண்டிருந்தார். நடராஜப் பெருமான் இவர் கனவில் தோன்றி சிதம்பரத்தைப் பற்றி ஒரு பிரபந்தம் எழுதுமாறு பணித்தார். அவ்வாறே பிள்ளை அவர்கள், ‘புலியூர் வெண்பா,’ எனும் பிரபந்தத்தை இயற்றினார். சிதம்பரத்தின் இன்னொரு பெயர் புலியூர் என்பதாகும். இவருடைய புதல்வரும் குணமடைந்தார். இந்தச் சிறப்பான புலியூர் வெண்பாவானது சென்னைப் பல்கலைக் கழகத்துப் பட்டப் படிப்புக்கான நூலாக இருந்து வந்திருந்தது எனவும் அறிகிறோம். இதன் முதல் ஈரடிகள் தலப் பெருமையைக் கூறுவனவாகவும் பின் இரண்டடிகள் திரிபு, யமகத்திலுமாக அமைந்து புலவர்களுக்குப் பெருவிருந்தாய் இருக்கின்றது. இதிலமைந்த நூறு வெண்பாக்கள் சிதம்பரத் தலம் பற்றிய எண்ணற்ற பெருமைகளைக் கூறுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு பாடலையாவது குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை!

        சொற்செறிவே தாந்தச் சுடர்த்தகர வித்தையதாம்

        பொற்சபைநின் றோங்கும் புலியூரே- முற்சமனை

        வீசுபதத் தானடித்தார் விற்கொண் டமர்விளைத்த

        பாசுபதத் தானடித்தார் பற்று. (1)

நிறைந்து விளங்கும் வேதாந்தச் சொற்களின் இருதயம் எனப் பொலியும் பொற்சபையாகிய பொன்னம்பலம் (சிதம்பரம்) நின்று புகழுடன் விளங்கும் புலியூரே! முன்பு ஒரு காலம், இயமனை (மார்க்கண்டேயனுக்காக) காலை வீசி உதைத்தவரும், வில்லைக் கொண்டு போர் புரிந்தவரும், பாசுபதம் என்னும் அத்திரத்தை உடையவருமான சிவபிரானின் திருவடிகளாகிய மாலையைப் பற்றிக் கொள்வாயாக!

பற்பல தலங்களுக்குச் சென்று மாரிமுத்தா பிள்ளை பல பிரபந்தங்களை இயற்றினார். வடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை மீது பஞ்சரத்தினம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப் பள்ளு, விடங்கேசர் பதிகம் இன்னும் பல பாடல்களையும் நூல்களையும் எழுதினார். இலக்கிய நூல்கள் பலவற்றை இயற்றியிருந்தாலும் இவருடைய பெயர் இன்றும் பேசப்படுவது இவர் இயற்றிய கீர்த்தனங்களால் தான். எண்ணற்ற தலப் பெருமைகளையும், சிவபிரானின் திருவிளையாடல்களையும், அடியார்க்கு அவன் அருள் செய்ததையும், தூற்றுமறைத்துதியாகப் பாடியுள்ளார். கிடைத்துள்ள சொற்ப பாடல்களிலும் துரதிர்ஷ்டவசமாகப் பல பாடல்கள் புழக்கத்திலேயே இல்லை. பாடப்படுவனவ்ற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்!

கௌமாரி எனும் ராகத்தில் இயற்றப்பட்ட ஒரு அழகான பாடல்:

        அம்பலத்தாடல் நடிப்பென்பதை உம்மிடத்தில்

        அறிந்தேன் அறிந்தேன் ஐயா         (அம்பலத்)

 

        வம்பவிழ் கொன்றைசூடுஞ் சிதம்பரேசரேஉம்

        மார்க்கத்தை எல்லாம் ஊன்றிப் பார்க்கப் போனால் கூத்தாச்சே

                                                                        (அம்பலத்)

 

        பெண்டீர் உடன்பிறந்த மைத்துன னுக்கருமைப்

        பிள்ளையைப் பார்த்துக் கண்ணால் சுட்டீரே-பின்னும்

        கண்டோர் நகைப்பதற்குப் பெண்கொடுத்த மாமனைக்

        கழுத்தை யறுத்து விட்டீரே- உமக்கு

        உண்டான குணந்தானோ வேதமெ லாங்கற்றோன்றன்

        ஒருதலை தனைக்கொய்து விட்டீரே-சடைப்

        பண்டாரம் போல்வந்து குழந்தையை அறுத்துண்ட

        பசியாளி யென்றெவரும் பழிக்கத் தலைப்பட்டீரே       (அம்பலத்)

 

காமனை எரித்ததும், மாமனான தட்சனைக் கழுத்தரிந்ததும், வேதமெலாம் கற்ற பிரமனின் ஒரு தலையைக் கொய்ததும், குழந்தையை அறுத்துண்டதையும், தூற்றுவதைப் போல் துதியாகப் பாடியுள்ளார். இப்பாடல்களின் அழகு என்னவெனில், நிந்தாஸ்துதி ஆகவே அமைந்திட்டாலும், சிலவற்றில் ஒரு நயமான ஆழ்ந்த வேண்டுதலும், இரங்கி வேண்டும் ஆதங்கமும் இழையோடும் விதத்தில் அமைந்துள்ளமை தான்!

‘நான் இவ்வாறெல்லாம் உம்மைப் பழித்தேனோ; ஏன் இன்னும் என்மேல் இத்தனை மோடி (பிணக்கு) கொண்டீர்,’ என்ற ஒரு இனிமையான பாடல், இளம் பாடகரான ஆர். ராகவேந்திராவின் இனிமையான குரலில் சுருட்டி ராகத்தில் பாடப்பட்டுள்ளது. புத்தகத்தில் பாடலின் ராகம் அம்சகாம்போதி எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இப்பாடல்களை வெவ்வேறு ராகங்களில் அனைவரும் பாடுகின்றனர் என ஒரு நண்பர் கூறினார்.

       ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு

        என்றன் மேல் ஐயா     (ஏதுக்கு)

 

        பாதிப் பிறையைச் சடையில் தரித்த

        பரமரே தில்லைப்பதி நடராசரே   (ஏதுக்கு)

 

        சாதியும் தாயும் தந்தையும் இல்லார்

        தனியர் என்றேனோ- பெண்ணால்

        பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட

        புலையர் என்றேனோ- சாதி

        பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில்

        பெண்கொண்டீர் என்றேனோ- மறை

        ஓதிவணங்கு நடேசரே உம்மை நான்

        ஒப்பாரும் இல்லாத தப்பிலி என்றேனோ (ஏதுக்கு)

 >>>  இந்தப் பாடலைக்  கேட்க

சிவப்பரம் பொருள் பிறப்பிலிப் பிரான் என்பதையும், பார்வதிக்கு இடப்பாகம் கொடுத்த அர்த்தநாரீசுவரர் என்பதையும், மகனான முருகன் குறமாதான வள்ளியை மணம் புரிந்ததையும், இத்தனை பெருமைகள் கொண்ட நடேசர், நான்மறைகளும் ஓதி வணங்கும் பெரியோன் என்பதையும் சிலேடை இழையோட வெகு சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் யாரால் சுலபமாகப் பாடிக் கொண்டாடி விட இயலும்?

chidambaram_chitrambalam         இவற்றைத் தவிர இன்னும் சில பாடல்களை போற்றுமறைத் துதியாகவே தில்லைத் தலத்தின் பெருமை விளங்குமாறு அருமையாக இயற்றியுள்ளார் பிள்ளையவர்கள்.

சஞ்சய் சுப்ரமணியம் மிகவும் அனுபவித்துப் பாடியுள்ள ஒரு பாடல் இதோ: மாரிமுத்தா பிள்ளையின் கீர்த்தனைகள் அனைத்தும் மூன்று சரணங்களைக் கொண்டவை ஆகும். ஏதேனும் ஒன்றை மட்டுமே பாடகர்கள் பாடி வருகின்றனர். இப்பாடலில் சஞ்சய் வித்தியாசமாக, இரண்டாவது சரணத்தின் சில அடிகளை விருத்தமாகப் பாடிப் பின் கீர்த்தனையை மூன்றாம் சரணத்துடன் பாடியுள்ளார். கேட்கவே செவிக்கும் சிந்தைக்கும் விருந்தாக அமைந்துள்ளது. பெஹாக் ராகத்தில் அமைந்த இதனைக் கேட்பவர்களின் இனிய அனுபவத்துக்காக இங்கு அவர் பாடிய பாணியிலேயே பாட்டின் அடிகளைக் கொடுத்துள்ளேன். (இதனை மாரிமுத்தா பிள்ளை அம்சவினோதினி எனும் ராகத்தில் இயற்றியுள்ளார்).

        உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

        ஊரெங்கும் பெரிதாய்க் கற்பூரந்தன்னைச் சொல்வாரே

        …………………………………………………

        அப்படிப்போல் அனேகத் தலமிருந்தாலும் அந்த

        அல்லல் வினைதொலைக்கும் தில்லைப் பதிக்கு நேரோ (இன்னமும்)

       

        இன்னமும் ஒருதலம் இருக்கும் என்றொருக்காலே

        ஏன்மலைக்கிறாய் மனமே  (இன்னமும்)

 

        சொன்னசொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

          சோதித்தறிந்தால் இந்த ஆதிச் சிதம்பரம்போல் (இன்னமும்)

       

        விண்ணுல கத்தில்மீன் இனமெல்லாம் கூடினும்

        வெண்ணிற மாம்ஒரு தண்மதி முன்னில்லாது

        தண்ணுல வியஅல்லி திரளாய்ப்பூத் தாலுமொரு

        தாமரைக் கொவ்வாது

        மண்ணுல கத்திலுள்ள தருக்கள் அனைத்துங்கூடி

        மருவுல வுங்கற்பகத் தருவுக் கிணைவராது

        புண்ணிய தலங்கள்பல இருந்தும் நடேசன்வாழும்

        புண்டரீக புரம்போல் கண்டுசொல்ல வேறேது   (இன்னமும்)

கண்களில் ஆனந்தக் கண்ணீரைத் துளிர்க்கச் செய்யும் அழகான பாடல். புண்டரீகபுரம் என்ற சொல்லாட்சி மிக அழகானது- தாமரை அல்லது புலி எனப் பொருள் கொள்ளலாம். புலியூரை இவ்வாறு வர்ணனை செய்தவர் இவர் ஒருவரே! தில்லைப் புண்டரீகத்தலத்தைத் தண்மதிக்கும், தாமரைக்கும், கற்பகத்தருவுக்கும், கற்பூரத்துக்கும் ஒப்பிட்ட நயம் உள்ளத்தையே உருக்கி விடுகின்றதே! ஆயினும் நம்பிக்கை கொள்ளாது யார் யார் எந்தத் தலத்தைப் பற்றிக் கூறினும் அங்கெல்லாம் ஓடியோடிக் களைத்துச் சோதித்துத் தான் அறியும் மானிடனின் அற்பபுத்தியை விவரிக்கும் பாடல் இதாகும்.

>>> இந்தப் பாடலைக்  கேட்க

        காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்

        கைதூக்கி ஆள் தெய்வமே (காலை)

என்ற பாட்டை திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலில் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். யதுகுல காம்போதி ராகத்திலமைந்த நயமிகுந்த பாடல். இதன் கவிதை நயமே ‘தூக்கி’ என்ற ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பப் பிரயோகம் செய்ததால் தான் பட்டை தீட்டிய வைரம் போல ப் பளீரிடுகின்றது.

        வேலைத் தூக்கும் பிள்ளை தனைப் பெற்ற தெய்வமே

        மின்னும்புகழ் சேர்தில்லைப் பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

எவை எவற்றை அண்ணல் தூக்கியவாறு ஆடுகின்றான் என விளக்கிப் பின் யார் யார் எவ்வாறு நடனத்திற்கு ஈடு கொடுத்தனர் எனக் கூறுகிறார்.

        நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க

        தொந்தமென்றயன் தாளம் சுருதியோடு தூக்க

        சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரந்தூக்க

        முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க (காலை)

சி.எஸ். ஜயராமன் குரலில் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.

>>> இந்தப் பாடலைக் கேட்க

தமிழின் இனிமையையும் பொருட்செறிவையும் உணர்வதனால் இந்தப் பாடல் நம்மைப் புல்லரிக்க வைப்பதாகும். ஒவ்வொரு பாடலையும், அடியையும் ஆற அமர இருந்து, படித்துக் கேட்டு, ரசித்து மகிழ வேண்டும்.

தில்லை ஈசன் மீதே பாடல்களைப் பாடியவர் அன்னை பராசக்தி மீது ரீதிசந்திரிகா எனும் ராகத்தில் ஒரே ஒரு பாடலை இயற்றியுள்ளார்.

        ஏன் இந்தப் பராக்கு ஏழை மீதில் உனக்கு

        என்ன வன்மமோ அம்மா (ஏன்)

(என்மேல் உனக்கு அக்கறையில்லையோ தாயே? பராக்கு- கவனமின்மை)

        பானந் துலவிய பழனந் தனிற்கயல்

        பாயும் புலிசையில் ஆயன் திசைமுகன்

        வானிந் திரன்தொழும் ஆனந்த நடேசர்

        வாம முறுஞ்சிவ காம சவுந்தரி (ஏன்)

( நடேசனின் இடப்பாகம் கொண்டவளே)

மூன்றாம் சரணம்:

        பிஞ்சுமதிநுதல் வஞ்சி யெனும்அபி ராமியே- தெய்வப்

        பிடிக்கும் ஒரு குறக்கொடிக்கும் வாய்த்த நன் மாமியே

        தஞ்சம் எனும் அடியார்களிடத்துறை வாமியே- கொன்றைத்

        தாமம் அணிந்திடும் ஏம சபைச் சிவகாமியே

        செஞ்சிலம் பணியுன் திருவடி யேகதி

        தேவர் ஒருவரைச் செய்திடேன் துதி

        அஞ்சேல் அஞ்சேலென்றாள வேவிதி

        அசட்டை இனிச் செய்வதனைத்தும் பெண்மதி   (ஏன்)

இந்தச் சரணத்தில் வேறு கவிஞர்கள் யாருமே பாடியிராத உமையவள்- வள்ளி தெய்வானை உறவு பற்றிய ஒரு செய்தி விரிகின்றது! ‘தெய்வப்பிடியான தேவகுஞ்சரிக்கும் குறக்கொடியான வள்ளிக்கும் வாய்த்த மாமியே,’ என சிவகாமி அன்னையை விளிக்கின்றார். ‘கொன்றை மலர்க் கொத்தினை அணிந்த பொன்னம்பலத்துச் சிவகாமியே,’ என்கிறார். கொன்றை மலரணிந்தவன் அவள் நாயகன் தான்; அம்மை அதை அணிந்துள்ளாள் எனக் கூறும் போது, ‘அம்மையும் அப்பனும் ஈருருவாகிய (அல்லது ஓர் உரு ஆகியோர் எனவும் கொள்ளலாம்) ஓர் பரம்பொருளே,’ எனச் சொல்லாமல் சொல்லி விளங்க வைக்கிறார். என்னை அசட்டை செய்வதும் உன் பெண்மதி என அந்த அன்னையையும் விட்டு வைக்காமல் உரிமையுடன் நிந்தாஸ்துதியும் செய்கின்றார்!

நடேசர் (ஊர்த்வஜானு முத்திரை), கூரம்
நடேசர் (ஊர்த்வஜானு முத்திரை), கூரம்

இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிறைவு செய்யும் முன் ஒரு அருமையான பாடலைக் காண்போம்-

‘ஒருக்கால் சிவ சிதம்பரம் என்று நீ சொன்னால் இருக்காது ஊழ்வினையே,’ எனும் பொருள் செறிந்த ஆரபி ராகப் பாடல்.

தெய்வ வழிபாட்டின் சாரத்தைப் பிழிந்து நம்முன் வைக்கும் பாடல். சடங்குகளும் சம்பிரதாயங்களும் சேர்ந்து வழிபாட்டை வியாபாரமாக்கி விடும் இக்காலத்தில், அதைச் சித்தர் பெருமக்கள் போல் கண்டித்து, ‘திரை மறைவில் உள்ள ரகசியத்தின் திறனை அறிந்து கொள்; தலங்கள் தொறும் திரிந்து பல தெய்வம் தொழுவானேன்; சிவசிதம்பரம் என்று சொல்; உன் ஊழ்வினை அறுபடும்,’ எனக் கூறுகிறார்.

        வேத மந்திரம் சொல்லி ஆயிரம் தெண்டன்புவி

        மீதினில் விழுவானேன்-இரு

        பாதமும் சிவந்திடத் தலங்கள் தொறும் திரிந்து

        பல தெய்வம் தொழுவானேன்- கொல்லன்

        ஊதும் துருத்தி போல வாயுவைக் கும்பித்துடல்

        யோகத்தில் எழுவானேன்- ஐந்து

        பூதங்களும் கலங்க அங்கப் பிரதட்சிணமாய்ப்

        புரண்டு புரண்டு மதி மருண்டெழுவானேன்

        ………………………………………………………….சபைத்

        திரைக்குள்ளே மறைவாகி இருக்கும் ரகசியத்தின்

        திறம் தெரியாமல் வீணே இறந்தின்னும் பிறப்பானேன் (ஒருக்கால்)

புவனகிரி ஆர். கே. குமார் எனும் ஒரு இளம் பாடகர் பாடியுள்ள இந்த ஆரபி ராகப் பாடலின் இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

>>> இந்தப் பாடலைக் கேட்க

மாரிமுத்தா பிள்ளை அவர்கள் 75 ஆண்டுகள் வாழ்ந்திருந்து பின்பு இறைவனடி சேர்ந்தார். இவருடைய பாடல்களில் சிலவே நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தமிழ்ப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் கடமையாகும். சஞ்சய் சுப்ரமண்யம் போன்ற சில இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள் இதனைத் திறம்படச் செய்து வருகின்றனர் என்பது பாராட்டப்பட வேண்டியது.

10 Replies to “எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை”

 1. அருமையானக் கட்டுரை. மாரிமுத்தாப் பிள்ளையின் பாடல்கள் மிகவும் அருமை. இவரைப் பற்றி அறிமுகம்?! செய்ததற்கு தனி நன்றி. இவருடைய பாடல்கள் புத்தகமாக கிடைக்கிறதா? //கள்ளுஞ் சுமந்திட்ட// இதை விளக்க முடியுமா? சிவன் மண்சுமந்தார் தெரியும், ”கள்சுமந்திட்ட” என்று வருகிறதே? இப்படி ஒரு அருமையானக் கட்டுரைக்கு மிகவும் நன்றி.

 2. ஆஹா அருமையானக் கட்டுரை. மீனாக்ஷி பால கனேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். தமிழ் இசையின் பிதாகமர்கள் பற்றி மேலும் எழுதுங்கள். முத்துதாண்டவர் மற்றும் அருநாச்சலாகவி ஆகிய மற்ற பெரியார்களின் பணியைப்பற்றியும் எழுதுங்கள். ஹர ஹர சிவ சிவ

 3. சீர்காழி மூவர் கீர்த்தனைகள் எனும் பெயருடன் இரு தொகுதிகளாக தமிழ் மூவர் கீர்த்தனைகள் அனைத்தும் Karnatic Music Book Centre, 23A, Sripuram First Street, Royapettah, சென்னை 600014-ல் கிடைக்கின்றது.

  ‘கள்ளுஞ்சுமந்திட்ட’ என்பதற்கு உட்பொருள் உள்ளதா என அறிய இயலவில்லை. ஆயினும் சிவபிரான் சோமாசிமாற நாயனாரின் யாகத்தில் ஒரு புலையனாக/ சண்டாளனாக வர, அவர் இறைவனை அவ்வடிவிலேயே வழிபட்டமை குறித்த ஒரு வரலாறு உள்ளது. ஆகவே இவை அது தொடர்பான சொற்களோ என எண்ணத் தோன்றுகின்றன. ஆகவே தான் ‘கள்ளுஞ்சுமந்திட்ட புலையனோ’ என்றார் போலும்.
  ‘எத்தன்மையராயினும் ஈசனுக்கன்பரென்றால்
  அத்தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்’ என்பார் சேக்கிழார்.

  முத்துத் தாண்டவர் பற்றி முன்பே ஒரு கட்டுரை இத்தளத்தில் எழுதியுள்ளேன்- எப்படிப் பாடினரோ-5; அருணாசலக் கவிராயர் பற்றி ஜடாயு அவர்கள் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். எப்படிப் பாடினரோ-1;
  மேலும் தமிழ் இசை இயற்றியோர் பற்றி எழுத முயல்கிறேன்.
  தங்கள் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

 4. ithunai arumayana katturai tamizh moovaraipol iduvarai naan padithathillai…sivagaami nesanai ,Easanai anubavithu paadiyavarukkum anubavithadai negizhvudan katturai vaayilaaga pagirndhu konda ungalukkum namaskaram nandri

 5. மிக அருமையான கட்டுரை. பாராட்டுகள் !
  என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா – கொத்த மங்க்கலம் சீனு பாடி இருப்பது – ராகம் : ரிஷபப்ரியா ( சாரு கேசிக்கு பிரதி மத்யமம்). இந்த ராகத்தில் பிரபலமான பாடல் கோடீசுவர அய்யரின் “கன நய தேசிக”..

 6. கள் சுமந்த என்பது காசியில் ஆதி சங்கராசாரியாருக்கும் கள் சுமது வந்த புலையன் உருவில் இருந்த சிவபெருமானுக்கும் நடந்த வாக்கு வாதத்தை சொல்கிறது. எல்லாம் சிவமயம் என்று அறிந்தவரானாலும், சிவனை புலையன் உருவில் பார்த்த போது ,சங்கரர் தள்ளிபோ என்றர். அதற்க்கு , யாரை யாரிடம் இருந்து தள்ளிபோ என்கிறீர் என்று சண்டாளன் உருவில் இருந்த சிவன் கேட்கிறார். உனக்குள்ளும் புறமும் இருக்கும் சிவன என்னை வெளி யருவு கண்டு இப்படி சொல்வது மாயை அல்லவா – நன் வேறு நீ வேறு என்பது சரியா என்று கேட்கிறார். அப்போது தன எல்லாம் சிவா மயம் என்பதை சங்கரர் உணருகிறார். அவரது மதி மயக்கம் – மாயை – நான் அந்தணன், அவன் புலையன் என்ற இருவரிலும் அந்த பாரமனே உள்ளே இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறான். எனவே வெளியில் தெரியும் மாற்றங்கள் உண்மை இல்லை. இதையே ரசாயனத்தில் ஐசோடோப் அல்லது உள்ளே ஒன்றே வெளியில் மாறுபாடு உள்ள பொருள் என்கிறோம். இதையே மாரிமுத்தா பிள்ளை சுருக்கம்மாக சொல்ல்கிறார்.

 7. திரு மணியன் அவர்களுக்கு, தாங்கள் அளித்த அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி. இந்தக் கதை அறிந்த ஒன்றாக இருப்பினும் இப்பாடலில் இந்த வரிக்குப் பொருத்திப் பார்க்கத் தோன்றவில்லை. சுட்டிப் பொருத்திக் காட்டியதற்குக் கடமைப் பட்டுள்ளேன். மிக்க வந்தனங்கள்.

 8. சிறந்த நடையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. தமிழிசைக் குறித்து மேலும் எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *