மோடி டிஜிட்டல் இந்தியா எனும் திட்டத்தை துவக்கியிருக்கிறார் என்பது பலரும் படித்திருப்பீர்கள். கூடவே அதில் இந்திய கம்பெனிகள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி வரைக்கும் முதலீடு செய்து அதன் மூலம் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் படித்திருக்கலாம்.
ஆனால் அதனால் கிடைக்கும் குறுகிய கால, நீண்ட கால வாய்ப்புகள், பொருளாதார நன்மைகள் பற்றியெல்லாம் மீடியாக்களும் பெரிதாக பேசவில்லை. மக்களுக்கும் புரியவில்லை, சரி ஏதோ இன்னோர் திட்டம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps (ஒரு செகண்டுக்கு 100 மெகாபிட்கள்) இணைய வசதி தருவது. அதுவும் 2016 முடிவதற்குள். இதை பிஎஸ் என் எல் நிறைவேற்றும் என சொல்லியிருக்கிறார்.
இப்போது 500 கிலோபிட்டுக்கே (kbps) தள்ளாடுது இதிலே எங்கே 100 மெகா பிட் என சந்தேகம் எனக்கும் இருக்கு (1 மெகா பிட் ==1000 கிலோபிட்). சென்னை போன்ற நகரங்களிலேயே இப்போ இந்த வசதி இருப்பதில்லை. இதை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதில் தான் திட்டத்தின் முழுவெற்றியே இருக்கு.
அடுத்து விஷயம், எலெக்ட்ரானிக் பொருட்களை இங்கேயே தயாரிப்பது. இது நமக்கு இருக்கும் ஒரு பெரும் பிரச்சினை. இன்னும் பத்து வருசத்தில் நாம் அதிகம் இறக்குமதி செய்யும் சாதனமாக இந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் அதாவது மொபைலில் ஆரம்பித்து டிவி, கடிகாரம் வரை இருக்கும். பத்து வருடத்தில் பெட்ரோல், டீசலை விட இவை அதிகம் இறக்குமதி செய்யப்படும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் இங்கே தயாரிக்க வைப்பது என்பதும் கொஞ்சம் கடினமான காரியமே.
சரி ஒருவேளை இந்த இரண்டையும் செய்துவிடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். என்ன நடக்கும்?
இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். இதை இப்படி புரிந்து கொள்ல்லாம்.
ஒவ்வொருவர் கையிலும் அந்தந்த மொழிகளில் ஒரு மொபைல் அல்லது டேப்லட். அதிலே அதிவேக இணைய இணைப்பு இருந்தால் என்ன செய்யமுடியும்?
1. அரசின் சான்றிதழ்களை எளிதில் கேட்கவும் பெறவும் முடியும்.
2. இந்த அதிகாரி இன்றைக்கு அலுவலகம் வந்திருக்கிறா என பார்த்துவிட்டு போய் தேவையான சான்றிதழ்களை வாங்கலாம்.
3. தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம்.
4. நீதிமன்ற கோப்புகளில் ஆரம்பித்து சொத்து சான்றிதழ், வில்லங்க சான்றிதழ் போன்ற அனைத்தும் இப்படியே எளிதில் எடுத்துவிடலாம்.
5. எந்த ஒரு அரசு அலுவகத்திலும் பணம் கட்டவோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைக்குமோ வரிசையில் நிற்கவேண்டியதில்லை. முன்னரே நேரம் குறித்துவிட்டு போகலாம்.
6. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்.
இதையெல்லாம் விட வீடியோவையும் ஆடியோவை பதிவு செய்து அனைவருக்கும் பரப்பி எங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என தானாகவே காவல்துறையில் புகார் அளிக்க, நடவடிக்கை எடுக்க செய்துவிட முடியும் இல்லையா?
இன்றைக்கு சாதாரண மக்கள் ஒவ்வொரு அரசு அலுவலக பிரச்சினை என்றால் அலையவேண்டி உள்ளது. யாரையும் பார்க்ககூட முடியாது. அந்த அரசு அதிகாரி அலுவலகம் வருகிறாரா? ஏன் அவர் பெயர் என்ன? மாற்றலாகிவிட்டாரா இல்லையா என்பது கூட தெரியாது.
இதை இரண்டு வருடத்தில் மாற்றிவிடமுடியும்.
சான்றிதழ்களை ஆன்லைனில் எல்லோரும் எளிதில் தேடமுடியும் என்றால் இந்த சொத்து யார் பெயரில் இருக்கிறது வரை எடுத்து பினாமி/கினாமி எல்லாவற்றையும் எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். நடவடிக்கை எடுக்கிறார்கள் எடுக்கவில்லை என்பது அடுத்த விஷயம், தன் பெயரில் சொத்தே இல்லை என தேர்தலில் பொய் கூறி நிக்க முடியாது அல்லவா?
இந்த கோப்பை காணோம், அந்த கோப்பு தீவிபத்தில் எரிந்துவிட்டது, இதை எலி கடித்துவிட்டது என்றெல்லாம் பஜனை பாடவே முடியாமல் போய்விடும். பொதுவில் வைக்கப்படும் கோப்புகளை தங்களுடைய மொபைலில் இறக்கி வைத்துக்கொண்டால் தனிநபரிடமும் அந்த பிரதிகள் இருக்கும் இல்லையா? அப்புறம் எங்கே இந்த பஜனை எல்லாம்?
100 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டிலே அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அரசின் சேவைகளை செவ்வனே செய்யமுடியாது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அளவுக்கு மீறி அதிகரித்தால் சம்பளம் எப்படி எங்கிருந்து கொடுப்பது?
ஆனால் இணையம்+ மொபைல் போன் துணையுடனான தொழில் நுட்பத்தின் மூலம் இதை எளிதில் மாற்றிவிடமுடியும்.
அரசின் தேவைகளை தாண்டி யோசித்தால்,
- காகித பணம் என ஒன்று இல்லாமல் மின்னணு அட்டைகள் மூலமே பணம் வரவு செய்துவிட முடியும்.
- தனிப்பட்ட ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவற்றையும் பாதுகாக்க, புதியவற்றை உருவாக்க என ஏகப்பட்டதை செய்துவிடமுடியும்.
- புத்தகங்களுக்கு பேப்பர் செலவு, போக்குவரத்து செலவு மிச்சம் என்பதால் விலையும் குறைந்து எளிதில் கிடைக்கவும் வழி செய்யலாம்.
இதையெல்லாம் விட குழந்தைகள், மாணவர்கள் கற்க, புதியவற்றை உருவாக்க ஒருங்கிணைய இது எளிதில் வழிவகுக்கும்.
- ஒரே ஒரு டேப்லட் கணிணி மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளி போனால் போதுமே? டன் கணக்கில் மூட்டை சுமக்கவேண்டிய அவசியமே இருக்காதே?
- எல்லாம் இணையத்தில் இருக்கும், பெற்றோரும் அன்றைக்கு குழந்தைகள் என்ன படித்தார்கள் எனவும் எளிதில் தெரிந்துகொள்ளலாமே?
எப்படி 2000-களில் மொபைல் தொலைபேசி பரவலாக்கம் வந்து வாழ்க்கையை மாற்றி அமைத்தோ அதைவிட மிகப்பெரும் மாற்றம் இதிலே வரலாம்.
தினமும் அலுவலகம் போய்த்தான் வேலை செய்யனும் என இல்லாமல் வீட்டிலே இருந்தே வேலை செய்ய முடிந்து அதன் மூலம் போக்குவரத்துக்கூட குறையலாம் யார் கண்டது?
இதெல்லாம் இப்போதைக்கு கனவுகள் மட்டுமே. ஆனால் கனவுகள் நினைவானால் நாடே கனவு கண்டிராத அளவுக்கு முன்னேறும்.
(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
டிஜிட்டல் இந்திய பற்றி தெரியதவர்களில் நானும் ஒருவன் மோடி அவர்களுடைய திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
திரு ராஜசங்கர் அவர்களுக்கு
1.மீன் சாப்பிட ஆசைதான் ஆனால் கடல் முழுவதும் மீனாகவே இருந்துவிட்டால்
கப்பல் எப்படி போகும் ? அலை என்னாகும்? கரையில் இருந்து நாம் என்ன செய்வது
2.அலுவலகத்திற்கு போகாமல் வீட்டில் இருந்தே வேலை செய்வதாக இருந்தால் அலுவலகம் என்ற வார்த்தையை அகராதியில் என்ன செய்வது?
3காகித பணம் இல்லாமல் மின்னணு அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்றால் 5 நாட்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் தான தர்மம் , ஈம சடங்கு போன்ற முக்கிய செலவிற்கு என்ன செய்வீர்கள்.
4.டேபிலேட் கணினி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரது கணினியும் ஒரே நாளில் பழுதாகிவிட்டால் என்ன செய்வீர்கள்.
5.2000 மாவது வருடம் கணினியும்,மொபைல் போனும் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்றால் 2000மாவது வருடமே 2015க்கான மின்சார பற்றா குறையை தெரிவிக்காதது ஏன்?
திரு ராஜசங்கர் அவர்களே நம் மக்கள் 23 மணிநேரம் கனவுகண்டு 1 மணிநேரம் உழைக்கிறார்கள்
1 மணிநேரம் கனவு கண்டு 23 மணி நேரம் உழைக்கும்போதுத்ன் உங்களின் கனவு நனவாகும்.
இதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வளவு தகவல்களையும் சேமித்துவைக்க மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட நினைவுத்திறன்/கணினி இப்போதே நம்ம்மிடம் இருக்க வேண்டும்,அதை நிர்வகிக்க ஒரு குழு என்று ஒரு பெரிய பட்டாளம் வேலை செய்யவேண்டி வரும்.எல்லாம் நடந்தால் நாம் தலை நிமிர்ந்து நடக்கமுடியும்.
சாதிக்க வேண்டிய சாதனை யாகும். அரசு மனம் வைத்தால் சாதிக்கலாம்.
மொடியின் டிஜட்டல் இந்தியா திட்டம் வரவேற்க தக்க அருமையான திட்டம்.இது சாத்தியமா என பலரும் கேட்க கூடும்.நம் பிரதமர் இதை நிறைவேற்றும் திறன் படைத்தவர்.நிச்சியம் நிறைவேற்றுவார்.வாழ்க மோடி.
திரு சக்திபழனி
மழையில் செல்லும்போது எல்லோருடைய குடைகளும் கிழிந்து விட்டால் என்ன செய்வீர்கள் ?
வெயிலில் செல்லும்போது எல்லோருடைய செருப்புகளும் அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் ?
இதுபோல கேட்டுக்கொண்டே போகலாம்.
1 மணி நேரம் மட்டும் வேலை செய்தா இந்த நாட்டில் இத்தனை முன்னேற்றங்கள் வந்தன ?
‘எவனும் யோகியமில்லப்பா !” என்பது போன்ற திண்ணை பேச்சுக்கள் வீண்.
( நீங்கள் அதை சொல்லவில்லை என்றாலும் 1 மணி நேர வேலை அதைதான் அர்த்தம் கொள்ள வைக்கிறது. ஒருவேளை நீங்கள் இந்த 100 நாள் வேலையைப் பற்றி சொல்கிறீர்களோ ? )
திரு ரங்கன் அவர்களுக்கு நன்றி,
மழையிலும், வெயிலிலும் செல்லும்பொழுது குடை கிழிந்தாலும்,செருப்பு
அறுந்தாலும் பயணத்தை தொடர்பவன் லட்சியவாதி அவன் 23 மணி நேரம் உழைப்பவன் அவனால்தான் இந்த நாட்டில் இத்தனை முன்னேற்றங்கள்
உதாரணம் சுதந்தரத்திற்கு பாடுபட்டவர்கள்.சுதந்தரதிற்குப்பிறகு மழையிலும் வெயிலிலும் சென்ற சில அரசியல் தலைவர்கள்.
ராஜீவ் காந்தி அரசு டெலி காம் மற்றும் கம்பியுட்டர் தொழில் நுட்பங்களை அரசு துறைகளில் அறிமுகபடுத்திய போது பெரும் எதிர்ப்பு கட்டியது பாஜக கட்சி. இன்றைய பாஜக பிரதமர் அதே தொழில் நுட்பங்களின் தேவையை உணர்த்து அதை பெருமளவில் இந்திய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் கட்டுவது நல்ல முன்னேற்றம்தான்.
டிஜிட்டல் இந்திய திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
https://sp37.blogspot.in/2014/07/2-year-project-in-join-gangai-kaveri.html
இந்த திட்டம் நிறைவேறுவதற்கு மனித உழைப்பு மிக அதிகமாக தேவைப்படும். ஆனால் இதனால் உபயோகப்படும் மனிதனின் உழைப்பு மிகவும் குறைந்துவிடும்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!!
http://www.டிஜிட்டல்இந்தியா.com