ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…

சசிபெருமாளின் போராட்டம்
சசிபெருமாளின் போராட்டம்

அண்மையில் தமிழகத்தில் இரு பெரும் மரணங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. முதலாவது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அசகாய மறைவு (ஜூலை 27). அது தேசிய அளவில் ஒரு தன்னலமற்ற தலைவரை ஈந்த தமிழகத்தை நோக்கி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, காந்தியவாதியும் மது ஒழிப்புப் போராளியுமான சசிபெருமாள் ஐயாவின் திடீர் மரணம் (ஜூலை 31).

கலாமின் மறைவு ஒரு பெருத்த வெற்றிடத்தை அடிக்கோடிட்டுக் காட்டினாலும், அவரது சாதனைகளும், அவர் விதைத்த நற்கருத்துகளும் ஆக்கப்பூர்வமான தேசிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டையும் அவரது மறைவு வலுப்படுத்திச் சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு இல்லாவிடிலும், மாநில அளவில் மக்களின் தார்மீக ஆவேசம் கிளர்ந்தெழ உந்துசக்தியாக மாறியிருக்கிறார் சசிபெருமாள்.

மாணவர்களின் வளர்ச்சியையே மாபெரும் கனவாகக் கொண்ட அப்துல் கலாம் ஐயா மாணவர்களுக்கு வழிகாட்டும் விழாவிலேயே உயிர்நீத்து, தான் ஒரு கர்மயோகி என்று நிரூபித்தார். அதேபோல, மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த பல ஆண்டுகளாகப் போராடிவந்த சசிபெருமாள் ஐயாவும்,  மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தின்போதே களத்தில் உயிர்நீத்து, மக்களின் உரிமைக்குரலாக மாறி இருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக் கோரி நடந்த அறப்போரில் அரசை வழிக்குக் கொண்டுவருவதற்காக செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியபோது, அவர் அடைந்த எதிர்பாராத மரணம், மதுவிலக்கு குறித்த விருப்பம் இல்லாத அரசியல் கட்சிகள் பலவற்றையும்கூட மறு சிந்தனைக்குள்ளாக்கி இருக்கிறது. இன்று அரசியல் லாபத்துக்காகவேனும் மதுவிலக்கு தொடர்பாக உறுதிமொழி அளிக்க வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு சசிபெருமாள் ஐயாவின் தியாகமயமான மரணமே காரணம்.

நடந்தது என்ன?

ஆபத்தான நிர்பந்த உத்திக்கு தன்னைக் காவு கொடுக்கும் சசிபெருமாள்
ஆபத்தான நிர்பந்த உத்திக்கு தன்னைக் காவு கொடுக்கும் சசிபெருமாள்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடை பகுதியில் பள்ளி, கோயில், பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மூன்று  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தவிர சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர்களால் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில், மேற்படி மதுக்கடையை அகற்றுமாறு 2014, பிப்ரவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் கடை அகற்றப்படவில்லை.

இதையடுத்து, மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கமும் அங்குள்ள பல கட்சிகளின் கூட்டுக் குழுவும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராடி வந்த சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் அதில் கலந்துகொண்டார்.  அவரிடம் கடையை 15 நாள்களில் அங்கிருந்து மாற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், அதன் பின்னரும் கடை அகற்றப்படவில்லை.

sasi7எனவே, போராட்டக் குழு சார்பில் கடந்த ஜூலை 31 –இல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள வந்த சசிபெருமாள், அன்று காலை 8 மணியளவில் திடீரென  அருகிலுள்ள 175 அடி உயரமுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்குச் சென்றுவிட்டார். மதுக்கடையை இடம் மாற்றும் வரை அங்கிருந்து கீழே இறங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தார். இது அவரது போராட்ட்த் தந்திரம். நீதிமன்ற உத்தரவையும் மக்களின் எண்ணங்களையும் மதிக்காத அரசு மீது நிர்பந்தம் செய்ய அவர் மேற்கொண்ட வித்யாசமான சத்தியாக்கிரஹ முயற்சி.

அவருடன் உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலனும் (பாஜக) செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி 75 அடி உயரத்தில் சென்று அமர்ந்திருந்தார். போராட்டக் குழுத் தலைவர் எபனேசர் தலைமையில் மக்களும், பல்வேறு கட்சியினரும் அங்கு திரண்டிருந்தனர்.  காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள்  அங்கு போராட்டக் குழுவிடம் பேச்சு நடத்தினர். ஒரு வாரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்படும் என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

இதனிடையே, சுமார் 4 மணி நேரமாக செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சியில் கடும் வெயிலில் இருந்த சசிபெருமாள், பகல் 12 மணியளவில் மயக்கமடைந்தார். பிற்பகல் ஒரு மணியளவில் தீயணைப்புப் படை வீரர்கள் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி சசிபெருமாளை மீட்டு, கயிறு கட்டி மூட்டையைக் கீழிறக்குவது போல கீழே கொண்டு வந்தனர்.  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

அவரது தியாக மரணம், மதுவில் தள்ளாடும் இளைஞர்களைக் கண்டு மனம் நொந்திருக்கும் தமிழக மக்களுக்கு ஆவேச உணர்வு பீறிட்டு எழவும், தமிழகம் முழுவதும் மதுக்கடை எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரவும் வித்திட்டிருக்கிறது. எனினும் அதிலும் அரசியல் லாவணிகள் புகுந்திருப்பது வேதனை அளிக்கிறது.

அரசியலாகும் போராட்டங்கள்:

சசிபெருமாள் மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்தபோது அவரைச் சந்தித்த நடிகர் சிவகுமார்
சசிபெருமாள் மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்தபோது அவரைச் சந்தித்த நடிகர் சிவகுமார்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சுமார் 3 ஆண்டுகளாக, தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் போராடி வந்துள்ளது. அப்போதெல்லாம் பல அரசியல் கட்சிகள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆரம்ப காலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், பாஜக, இடதுசாரித்  தலைவர்களும் மட்டுமே இந்தக் கோரிக்கையை ஆதரித்தனர்.

ஆனால், தமிழக அரசு, மதுக்கடைகளை மூடத் தயாரில்லை. மாநில அரசுக்கு வரும் வருவாயில் சுமார் 15 சதவீதம் (ஏழில் ஒரு பங்கு) அரசு வணிக நிறுவனமான ‘டாஸ்மாக்’ மூலமாக நடத்தப்படும் மதுக்கடைகளால் கிட்டும் நிலையில், அதைக்கொண்டே இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் அரசு, மது எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது. (டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டு அரசு கருவூலத்துக்கு ரூ. 26,188 கோடி வருவாய் கிடைத்தது. வரும் 2016-ஆம் ஆண்டில் ரூ. 29,672 கோடி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது).

தவிர, மதுக்கடைகளுடன் கூடிய மதுக்கூடங்களை (பார்கள்) நடத்துவோரில் பெரும் பகுதியினராக ஆளும் கட்சியினர் இருப்பதும், அதுவே ஆளும் கட்சியின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இவையல்லாது, பெரும்பாலான மது உற்பத்திக் கூடங்கள் (டிஸ்டலரிஸ்) அரசியல்வாதிகளால் நடத்தப்படுபவை. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதம் இல்லை. எந்தக் கட்சி ஆண்டாலும், மதுக் கொள்முதலில் கட்சிபேதம் பார்க்கப்படுவதில்லை. இவ்வாறான நிலையில், மதுவிலக்கு கொண்டுவர மாநில அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்ப்பது அதீதமே. ஆனால், அதற்கான ஒரு கருத்தை உருவாக்குவது சமுதாயநலன் விழைவோரின் கடமை. அந்த அடிப்படையில் தான் சசிபெருமாள் தனது அறப்போரை நடத்திவந்தார்.

மதுக்கடைகள் முன்பு குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சும் போராட்டம் நடத்திய சசிபெருமாள்.
மதுக்கடைகள் முன்பு குடிகாரர்களின் காலில் விழுந்து கெஞ்சும் போராட்டம் நடத்திய சசிபெருமாள்.

மது இல்லாத சூழல் எக்காலத்திலும் நாட்டில் இருந்ததில்லை. ஆயினும், இதுவரை கண்டிராத வகையில் மதுவுக்கு அடிமையாக, குடிநோயாளிகளாக சமூகத்தின் பெரும் பகுதியை மூழ்கடித்திருப்பது தற்போதைய டாஸ்மாக் காலம் தான் என்று சொன்னால் மிகையில்லை. கள்ளும் சாராயமும் குடிக்க விரும்புவோர் தலையில் முக்காடிட்டு மறைந்து சென்று மது அருந்திய காலம் உண்டு. மதுவை ஒழுக்கக்கேடானதாகவே நமது சமுதாயம் கருதி வந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், அரசே வருவாய்க்காக மதுக்கடைகளை நிறுவனமயமாக்கி நடத்தும் நிலையில், மீசை முளைக்காத மாணவர்கள் துவங்கி, கூலிக்குப் போகும் பெண்கள் வரை, இதுவரை மதுவைத் தீண்டாத பலரும் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

சசிபெருமாளின் உடலைப் பெற மறுத்து ஒருவாரகாலம் உண்ணாவிரதம் இருந்த அவரது குடும்பத்தினர்.
சசிபெருமாளின் உடலைப் பெற மறுத்து ஒருவாரகாலம் உண்ணாவிரதம் இருந்த அவரது குடும்பத்தினர்.

குடியால் குடும்பங்கள் அழிகின்றன. தொழிலாளர்களின் உழைப்பும் தொழில் திறனும் வீணாகின்றன. ஒழுக்கம் குலைந்து, சமூகச் சீர்கேடுகள் பெருகுகின்றன. கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றங்கள் பெருகுகின்றன என்கிறது தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம். அதனால் தான், நாட்டுநலம் விரும்புவோர் பலரும் மதுவிலக்கை அமலாக்கக் கோரி போராடுகின்றனர். ஆனால், நாட்டில் குஜராத் தவிர்த்து எந்த மாநிலமும் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக இல்லை.

மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது ஒருதரப்பினரின் வாதம். திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் குடித்துச் சாவதற்கும், அரசின் நல்ல சாராயத்தை சுதந்திரமாகக் குடித்துச் சாவதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், எளிதாக அனைவருக்கும் கிடைப்பது டாஸ்மாக் சரக்கு என்பது தான்.

இந்நிலையில், தமிழகத்தில் 1971-இல் மதுவிலக்கை நீக்கிய புண்ணியவானான கருணாதிதி. திடீரென, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று சென்ற மாதம் அறிவித்தார். இது ஒருவகை அரசியல் நாடகமே. எனினும், வெகுஜனக் கருத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக இதைக் கண்ட சசிபெருமாள், கடந்த 23-ஆம் தேதி கருணாநிதியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது.

மக்கள் போராட்டமாக மாறியுள்ள மதுக்கடை எதிர்ப்பு.
மக்கள் போராட்டமாக மாறியுள்ள மதுக்கடை எதிர்ப்பு.

இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.

தமிழகத்தில் எந்த ஒரு கட்சி அரசியல் கூட்டங்கள் நடத்தினாலும், வாகனங்களில்  கூட்டிவந்து ஆள் சேர்ப்பது மரபாகவே ஆகிவிட்டது. அவ்வாறு வரும் ‘தொண்டர்களுக்கு’ தினப்படிக் கூலியும், டாஸ்மாக் சரக்கும் அளித்தாக வேண்டும் என்பது விதிமுறையாகவே மாறிவிட்டது. இதைக் கட்டுப்படுத்தத் துணிவில்லாத எந்தக் கட்சிக்கும் மதுவிலக்குப் போரில் பங்கேற்கும் உரிமை இல்லை.

தற்போது மதுவுக்கு எதிரான போரில் உயிரீந்துள்ள சசிபெருமாளின் குடும்பத்தாருக்கு நிதியுதவி செய்ய கட்சிகள் முண்டியடிக்கின்றன. அவரது சடலத்தைப் பெற மறுத்து, மதுவிலக்குக்கான உத்தரவாதம் அளிக்க அரசை வற்புறுத்தி ஒருவார காலம் உண்ணாவிரதம் இருந்த அவரது குடும்பத்தார் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அரசியல் கட்சிகளின் வலைகளில் வீழ்வது, சசிபெருமாள் ஐயாவின் நோக்கத்தைச் சிதைத்துவிடும்.

தமிழக மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி பெருகிவருவதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், மதுக்கடைகளின் திறப்பு நேரத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வருகின்றன. இது நடைமுறை சார்ந்த முடிவே. எனினும், அரசின் இறுதி இலக்கு, ஓராண்டுக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதாகவே இருக்க வேண்டும். இதுவே சசிபெருமாளின் மரணத்துக்கு மாநில அரசு செய்யும் பிராயச்சித்தமாக இருக்கும்.

 

மதுவுக்கு எதிரான போராளி…

திருப்பூரில் அறம் அறக்கட்டளை 2013-இல் நடத்திய சுதந்திரதினத் திருவிழாவில் சசிபெருமாளுக்கு அறச்செம்மல் விருது வழங்குகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
திருப்பூரில் அறம் அறக்கட்டளை 2013-இல் நடத்திய சுதந்திரதினத் திருவிழாவில் சசிபெருமாளுக்கு அறச்செம்மல் விருது வழங்குகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

காந்தியவாதியான சசிபெருமாள் (60), மதுவுக்கு எதிராக சமூகப் போராட்டத்தைத் தொடங்கி, அந்தப் போராட்டத்தின்போதே உயிர் நீத்துள்ளார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காட்டுவளவு அருகிலுள்ள இ.மேட்டுக்காடு, சாத்தம்பாளையத்தைச் சேர்ந்த செ.கந்தசாமியின் மகன் சசிபெருமாள். ஆறாம் வகுப்பு வரை பயின்றவர். இவரது முதல் மனைவி கோவிந்தம்மாள் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி மகிழம். மகன்கள் நவநீதன், விவேக், மகள் சுதந்திரதேவி.

காந்திய வழியில் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணிபுரிந்தார். எப்போதும் கதராடை அணிந்திருப்பார். தலையில் கதர் தொப்பி அணிந்தபடி வலம் வந்தார்.

தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து, கலாசாரச் சீரழிவை நோக்கி தமிழ்ச் சமூகம் சென்று கொண்டிருப்பதால் மனம் நொந்த அவர், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நீண்ட போராட்டத்தை நடத்தி வந்தார். மதுக்கடைகள் முன்பு சென்று குடிகாரர்களின் கால்களில் விழுந்து “குடிக்காதீங்க… உங்க குடும்பத்தை நட்டாத்துல விடாதீங்க!” என்று இறைஞ்சும் ஆர்ப்பாட்டத்தை காந்திய வழியில் நடத்தியிருக்கிறார்.

மதுபோதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் தலைவராக, அந்த இயக்கத்தை நடத்தி வந்தவர். வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். 2010-ஆம் ஆண்டு முதல் மதுவின் தீமைக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, 2013-இல் சென்னையில் 34 நாள்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வாழ்வின் இறுதிக்குச் சென்று மீண்டார். அவரது போராட்டம், மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உருவாக்கியது.

தவிர, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி, பாராளுமன்றத்தின் முன்பும் 2014-இல் போராட்டம் நடத்தினார். பிறகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனுவும் அளித்தார். அரசியல் சாசனத்தில் மதுவிலக்கு அடிப்படை உரிமை என்று உள்ளதை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார்.

2010-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு ஜூலை வரையிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றிருக்கிறார்.  மதுவுக்கு அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சங்கங்கள் நடத்திய போராட்டங்களிலும் பங்கேற்று மதுவுக்கு எதிராக குரல் கொடுத்துவந்தார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி  ஜூலை 31-இல் நடந்த போராட்டத்தின்போது மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

காந்தியம் இன்னும் உயிர்ப்புடன் நாட்டில் உள்ளது என்பதற்கான தமிழக உதாரணம் சசிபெருமாள். “அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக் கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி  அதன்மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிபெருமாளுக்கு என் அஞ்சலி” என்று தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் மிகச் சரியாகவே சசிபெருமாள் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

குடிநோயில் தள்ளாடும் தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே, அன்னாருக்கு நாம் செலுத்தும் முழுமையான அஞ்சலியாக இருக்க முடியும்.

6 Replies to “ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…”

 1. 1971 மதுவிலக்கை நீக்கிய கலைஞர் 1974 மதுவிலக்கை அமுல் படுத்தினார் பின் ஆட்சிக்கு வந்த எம் ஜி ஆர் என்ற புண்ணியவான் 1981 மதுவிலக்கை அமுல் படுத்தினார் என்று ஏன் நீங்கள் எழுதவில்லை . மறைந்த ஐயா சசிபெருமளுக்கு அ தி மு க வினர் கொடுக்கும் மரியாதை , அவர் விளம்பரத்துக்காக இறந்தார் என்பதுதான் வேதனை அதனினும் வேதனை நீங்கள் வரலாற்றை நியாயமற்று ஒருவர் சார்புடன் எழுதுவது .

 2. 1-9-1972 அன்று தமிழகத்தில் கள் மற்றும் சாராயக் கடைகளை திறந்த புண்ணியவான் அவற்றை 1974- இல் மூடியதற்கு காரணம் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல், மற்றும் கோவை கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக பெற்ற படுதோல்வி ஆகும்.

  2) 1972-74 காலக் கட்டத்தில் குடித்து பழகிய தமிழ் இனம், அதன் பின்னர் கள்ள ச்சாராயம் காய்ச்சி அருந்தி, விஷ சாராயத்தால் நிறைய மரணங்கள் ஏற்பட்டதால், அப்போது மீடியாவும், அந்த விஷ சாராய சாவுகள் பற்றி மிக அதிகமாக கூவியதால், கள்ள சாராயத்தால் ஏற்பட்ட சாவுகளை தடுக்கும் பொருட்டு , எம் ஜி ஆர் அரசு மூலமே விஷமில்லாத சாராயத்தை விற்பதற்கு வழிவகை செய்தார்.

  3) சாராயம் விற்பதில் தனியாருக்கு போய்க்கொண்டிருந்த லாபத்தை தடுத்து, அரசு கஜானாவுக்கே லாபத்தை திருப்பி விடும் பொருட்டு, ஜெயலலிதா அதிகாரம் கொடுத்து , முழு லாபமும் அரசுக்கே கிடைக்க வழி வகுத்தார். இதுதான் கழகங்களின் சாராய வரலாறு. தீமைகளை அறிமுகம் செய்து தமிழகத்தை பாழ் படுத்தியது திமுக மட்டுமே. அந்த தீமைகள் பல்வேறு உருவங்களில் இன்றும் தொடர்கின்றன.

  4) சசி பெருமாள் மதுவை ஒழிக்க போராடியது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதே சமயம் செல்போன் டவரில் ஏறி போராடியது ஒரு கிறுக்குத்தனமான செயல். சில மலைகோயில்களில் நாம் படி ஏறும்போதே , சுமார் 500 படிக்கு மேலே ஏறும்போது, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். உண்மை இப்படி இருக்கும்போது , வயதான இந்த பெரியவர் செல்போன் டவரில் ஏறி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரை இழந்தது தேவை இல்லாத முட்டாள் தனமான செயல். தரையிலேயே போராடலாம். ஏதோ விலங்கு போல மரத்தில் ஏறுவது போல, டவரில் உயரமான இடத்தில் ஏறி, அதுவும் சுமார் 4 அல்லது 5 மணி நேரம் போராடியது முற்றிலும் தவறான செயல். இவர் செய்த தகாத செயலை காப்பி அடித்து, மேலும் பல மக்கள் அதே தவறான வழியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுக்கும் போக்கு வளர்ந்தது.

  இந்த தவறான வழிகளை ஆதரித்து , சில நாலாந்தர அரசியல்வாதிகள் இவர் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து படுதோல்வி அடைந்தனர்.

  தமிழகத்தில் உள்ள முக்கியமான சாராய ஆலைகள் 10. இவற்றில் ஒன்று மட்டுமே மிதாஸ் – ஆளும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு வேண்டியவர்களால் நடத்தப்படுகிறது. எஞ்சிய 9- பேராலைகளின் அதிபர்கள் திமுகவினர் அல்லது திமுகவினருக்கு வேண்டிய பெருமக்கள். உண்மை இப்படி இருக்க திமுகவின் விஷ விளையாட்டு அவர்களுக்கே முடிவுரையை ஆகஸ்ட் 15- லோ, அண்ணா பிறந்த செப்டம்பர் 15-லோ, அல்லது அக்டோபர் 2-காந்தி பிறந்த நாளிலோ ,எம் ஜி ஆர் பிறந்த ஜனவரி 17-லோ , பெண்கள் தினமான மார்ச் 8-லோ நிச்சயம் மீண்டும் மதுவிலக்கு அமல் செய்யப்பட இருக்கிறது.

  டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 30, 000- பேரை மறு பணி அமர்த்துவதற்கு அரசு மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் டாஸ்மாக் மூலம் கிடைத்த சுமார் 27,000- கோடிக்கு புதிய வரிகள் விதித்தால் தான் , அரசு தொடர்ந்து செயல்பட முடியும்.

  கழகம் என்றாலே சூதாடுமிடம் என்று அகராதிகள் சொல்கின்றன. கழகங்கள் மக்கள் வாழ்வை பணயப் பொருளாக வைத்து சூதாடி 43 வருடம் மது மூலம் தமிழனையும் தமிழையும் அழித்தன. அதுதான் கண்ட பலன் .

  கருணா அவர்கள் தமிழகத்தில் மதுவை புகுத்தியபோது, அவர் கூட இருந்து கை கட்டி,வாய் பொத்தி, காலில் விழுந்து ஆசி வாங்கி , அரசியல் செய்த தீய சக்திகள் இன்று மதுவிலக்கு வேண்டி போராடுவது , யாரை ஏமாற்ற ? மானம் கேட்ட பிறவிகள்.
  ,

 3. உடலில் உயிர் இருக்கும் வரை அந்த ஆத்துமாவை பற்றி கவலை மற்றும் சீந்துவார் இல்லை இறந்த பிறகு அந்த உடலை வைத்து அரசியல் வியாபாரம் செய்வது வன்முறையை சீண்டுவது அரசிஎல்வாதிகளுக்கு கைவந்தகலை காந்தியவாதி மறைவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது உலகம் உள்ளவரை கர்மவினைபடி நடப்பது நடக்கும் பணியினை செய் பலனை எதிர்பாராதே இதுதான் கவலைஅற்ற வாழ்வு

 4. 1971 மதுவிலக்கை நீக்கிய கலைஞர் 1974 மதுவிலக்கை அமுல் படுத்தினார் பின் ஆட்சிக்கு வந்த எம் ஜி ஆர் என்ற புண்ணியவான் 1981 மதுவிலக்கை அமுல் படுத்தினார் என்று ஏன் நீங்கள் எழுதவில்லை . மறைந்த ஐயா சசிபெருமளுக்கு அ தி மு க வினர் கொடுக்கும் மரியாதை , அவர் விளம்பரத்துக்காக இறந்தார் என்பதுதான் வேதனை அதனினும் வேதனை நீங்கள் வரலாற்றை நியாயமற்று ஒருவர் சார்புடன் எழுதுவது ……/Murugan K on August 13, 2015 at 5:33 pm

 5. 1971 ஆண்டிற்கு piraku, முழு மது விளக்கு கொண்டு வரப்படவே illai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *