பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை

பிரதமர் மோதியின் பன்னாட்டுப் பயணங்கள் குறித்து பெரும்பாலும் பிரபல பத்திரிகைகளின் கிண்டல் கேலியில் இருந்து, சமூக ஊடகங்களில் ஒரேயடியான புகழாரம் வரை பலதரப்பட்ட வகையில் எதிர்வினைகளைப் பார்க்கிறோம். அதுவும் ஒவ்வொரு நாட்டுக்கு பிரதமர் சென்று ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடும் போதும் அதில் இத்தனை ஆயிரம் கோடி முதலீடு வரப்போகிறது என்று செய்திகள் வருவதும், ஒரு பைசாவும் வராது என்று முகத்தை நீட்டிக் கொள்ளும் பத்திரிக்கைகளின் பத்திகளும் மலைப்பாகத்தான் இருக்கும். சிலர் வாய்கூசாமல் பிரதமர் உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்கின்றனர். அது உண்மை என்றால் ஒரு மணிநேரம் ஒய்வு கூட இல்லாமல் இயந்திரமாக ஒரு மனிதன் உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதை இப்போதுதான் நாம் பார்க்கிறோம்.

உள்நாட்டு ஸ்திரத்தன்மை, அண்டைநாடுகளுடன் அமைதி

நாட்டு வளர்ச்சிக்கு உள்நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மை, அண்டைநாடுகளுடன் அமைதி என்பது இன்றி அமையாதது. பாரதம் இப்போது எதிர்கொள்ளும் சூழல் அவ்வளவு சாதகமாக இல்லை. சீன – பாகிஸ்தானிய அச்சுறுத்தல்கள் சற்றும் குறையவில்லை, அதிகரித்தே இருக்கிறது.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. அமெரிக்க, அரேபிய உறவுகளை விட்டு அந்நாடு விலகி சீனாவுடன் நெருங்கி வருகிறது. எடுத்துக் காட்டாக, ஏமனில் நடந்த போரில் சவூதி அரேபியா கேட்டும் பாகிஸ்தான் ராணுவ ஒத்துழைப்புத் தர மறுத்தது சீனா தரும் தெம்பில் தான். பாகிஸ்தான் ஒரு வாடகை கொலையாளி தேசமாகவே செயல்பட்டு வருவது அந்நாட்டு மக்களின் துரதிருஷ்டம். இது நாள்வரை அமெரிக்கர்களுக்கு இடம் கொடுத்து வந்த பாகிஸ்தான் இப்போது சீனாவுக்கு இடம் கொடுக்கத் துவங்கி உள்ளது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா தன் ராணுவ நிலைகளை நிறுத்தும் அளவுக்கு இந்திய வெறுப்பில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இலங்கையும் காங்கிரஸ் ஆட்சியின் போது இது போன்ற முயற்சிகளில் இறங்கியது நினைவிருக்கலாம். தொடர்ந்து “சீன – பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை திட்டம்” (China-Pakistan Economic Corridor) அமைவது இந்தியாவுக்கு பெரும் தொல்லையைத் தரும்.

இந்தியாவின் நீண்ட நாள் நண்பனாக விளங்கிய ரஷ்யாவும் இந்தியாவிடமிருந்து விலகி பாகிஸ்தானுக்கு உதவத் துவங்கி உள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாதச் செயல்களைக் கண்டனம் செய்யக் கூட ரஷ்யா முனையவில்லை. ஆனால் இந்தியா, ரஷ்ய நல்லுறவுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதைத் தவிர. ரஷ்ய – பாகிஸ்தான் உறவு, இந்தியாவை மேலும் அமெரிக்காவை நெருங்கச் செய்யும். வேறு வழியில்லை.

மேலும் கம்யூனிச நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுவதும், சீனா விரும்பாத காரியத்தை ரஷ்யா முன்னெடுக்காமல் இருப்பதுமாக இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகியவை இந்தியாவுக்கு எதிராக அணி திரளுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

இது பாகிஸ்தான் ஏங்குவது போல நேரடி போராக வெடிக்காவிட்டாலும் இந்திய முன்னேற்றத்துக்கு பெருமளவு தடையும் தாமதமும் ஏற்படுத்தக் கூடும். இந்தியாவுடன் நெருங்கும் நாடுகளை, கை முறுக்கி விலகச் செய்ய இக்கூட்டணி முயலும். ஐநா சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக இயலாமல் இருப்பதற்கு சீனாவே காரணம். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தீவிரவாதம் தொடர்வதால் இந்தியா ஒவ்வொரு வருடமும் அதிகப் படியான நிதியை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயமும் தொடரும்.

Modi- un

அடுத்து வரும் பத்தாண்டுகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இது வரை எதிர்பாராத அளவில் இருக்கும். எதிர்காலத்தில், தீவிரவாதச் செயல்கள் ஆழ்கடல் பகுதி, துருவப் பகுதி, விண்வெளி மற்றும் இணைய ஊடகங்கள் போன்ற எதிர்பாராத இடங்களிலிருந்து தாக்குதல் நிகழக் கூடும் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுனர்கள். இந்தியா இன்னும் வருங்கால சவால்களுக்கு தயாராகும் நிலையில் நிச்சயம் இல்லை. கடந்த இரண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உதாசீனப் படுத்தப் பட்ட துறைகளில் பாதுகாப்பும் ஒன்று.

இந்த பின்னணியில் தான் மோதியின் வெளிநாட்டுப் பயணங்களை அலச வேண்டி இருக்கிறது. முதலீடு, வர்த்தகம், வருவாய் இவற்றைத் தாண்டி பிரதமரின் பன்னாட்டுப் பயணங்கள் ஒரு கட்டாயத்தின் பேரில் மேற்கொள்ளப் படுகின்றன. அத்தகைய ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டு விட்டிருக்கிறது.

பன்னாட்டு உறவுகளில் மாற்றங்கள்

இப்போது நம்மைச் சுற்றி உள்ள நாடுகளின் அரசியல் உறவுகள் (Diplomacy) பெருமளவு மாறி விட்டிருக்கிறது. அமெரிக்க – ரஷ்ய பனிப்போருக்கு பின் ஆன உலகில், பெரும் நாடுகள் நேருக்கு நேர்ச் சண்டை என்பது பெருமளவு சாத்தியமற்றதாக ஆகி விட்டது. அதற்கு மாறாக உலக ஆளுமை (World domination) என்பதன் அடையாளம் வர்த்தகத் துறையில் ஆதிக்கமே, அதனை அடைவதற்கு போரும் ஒரு வழி, அவ்வளவே. ஏனைய மற்ற துறைகளின் முன்னேற்றம் கூட வர்த்தக முன்னேற்றத்தை ஒட்டியே அமையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் ராணுவத்திற்காக நிகழ்ந்த பல அறிவியல் முன்னேற்றங்கள், இன்று வர்த்தகத் துறையின் உந்துதலின் பேரில் நிகழ்வதையும் பார்க்கிறோம்.

போர் செய்து ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு மாறாக வர்த்தக பரிவர்த்தனையில் மாற்றங்கள் செய்வதன் வழியாக, ராணுவ ரீதியான சச்சரவுகள் தவிர்க்கப் பட்டு வருகின்றன. உதாரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதை சீனா விரும்பாது, சீனாவின் வர்த்தகங்களை இழப்பதை அமெரிக்காவும் விரும்பாது,

ஆகவே இவ்விரு நாடுகளும் பகைமை பாராட்டவும் விரும்பாது, இது ஒரு வகையில் போரின்றி சாதிக்கப் பட்ட மேலாதிக்கம் என்றும் பார்க்க முடியும். மேலும் நேரடிப் போருக்கான துடிப்புடன் இருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்நாட்டு முன்னேற்றம், வெளியுறவு ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலையில் இருக்கின்றன. இதர நாடுகள் இவற்றை தம் வர்த்தக ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் போட்டி ஏற்பட்டு விட்டிருக்கிறது.

வர்த்தகமே வளம், வர்த்தகமே அரண், வர்த்தகமே வருங்காலம்

இன்றைக்கு உலகில் முக்கியமாக மூன்று நாடுகள், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா தத்தமது உலகமயமாக்கல் திட்டங்களுக்காக ஊடாடத் துவங்கி இருக்கின்றன. உலகில் வரலாறு காணாத அளவில் மிகக் குறுகிய காலத்தில் உலக மயமாக்கலை அறுபது கோடி மக்களிடம் கொண்டு சேர்த்து பயனடைந்த நாடு சீனா மட்டுமே. இந்தியாவில் உலகமயமாக்கலின் பயன் அவ்வாறு பரவலாகச் சென்றடையவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. உலக மயமாக்கலை நாட்டு முன்னேற்றத்துக்கான வழியாகப் பார்க்காமல் கொள்ளை அடிக்க வாய்ப்பாக கருதியவர்கள் மிகுந்திருந்ததும் ஒரு காரணம். கொள்கை வகுக்கும் இடங்களில் தெளிவற்ற சிந்தனைப் போக்கு நிறைந்தவர்கள் குழுமி இருந்ததும் ஒரு காரணம். பொது மக்களிடமிருந்து பெருமளவு விலகி செல்வத்தின் உச்சியில் திளைப்பவர்களாக, தேச நலனுக்காக சிந்தனை செய்யும் திறனற்றவர்கள் அரசியல் அரங்கில் திரண்டிருந்தும் ஒரு காரணம்.

இந்தியாவின் “மேக் இன் இந்தியா” திட்டத்தைப் போல, சீனா “One Belt One Road”, “Trans-Pacific Partnership”, New Development Bank என்று பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை விட சீனாவுக்கு அரசியல் மன உறுதி, செயலாற்றல் தன்மை மிக அதிகம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான உறவு மிகுந்த நெருக்கம் கொண்டது. அமெரிக்காவில் நாற்பது லட்சம் சீன மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். வருடத்தில் நாற்பது முதல் ஐம்பது லட்சம் சீனர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்கிறார்கள். அமேரிக்க – சீன வர்த்தகம் ஐநூறு பில்லியன் டாலர்கள் என்ற அளவில் உள்ளது. இந்திய அமெரிக்க வர்த்தகம் சுமார் நூறு பில்லியன் டாலர்கள் என்ற அளவில் உள்ளது. வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அமெரிக்க – சீன ராஜரீக அமைப்புகள், லாபிக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது.

சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் மோடி.
சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் மோடி.

இதனை மோதி அரசு மிகச்சரியாக உணர்ந்து, வெளியுறவு மற்றும் வர்த்தக முன்னேற்றத்தை முதலில் கையில் எடுத்திருக்கிறது. தொண்ணூறுகளில் ஆரம்பித்த உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் ஆகிய கொள்கைகள் சரியாக திட்டமிடப் படாமல், ஏழை – நடுத்தர – பணக்கார இடைவெளிகள் அதிகரிக்கவே வழி கோலியது. ஆனால் இம்முறை மோதி அரசு, அதனை உணர்ந்து, வெளிநாடுகளை வர்த்தகத்துக்காக அழைக்கின்ற அதே வேளையில் உள்நாட்டில் எல்லோருக்கும் வங்கி கணக்குகள் துவங்குதல், ஆதார் அட்டையை திட்டத்தைத் தொடருதல், “Educate in India”, வரி வசூலில் மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு, தூய்மை இந்தியா திட்டம், இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகள் 49% வரை அனுமதி என்று பல திட்டங்களையும் செயல்படுத்த துவங்கி இருக்கிறது.

மோதி அரசின் ராஜதந்திரம் (Diplomacy)

நமக்கு அண்டை நாடுகளுடனான உறவு, கடந்த இரண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளில் மிகவும் கீழ்நிலையை அடைந்தது. இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் என்று சிறிய தேசங்கள் கூட இந்தியாவை மதிக்காத நிலை உருவானது. அதற்கு காரணம், இந்தியா எந்த முடிவும் எடுக்க இயலாத, இரண்டு தலைமைகளைக் கொண்ட, அரசியல் கோஷ்டி பூசல்கள் நிறைந்த ஆட்சியைக் கொண்டிருந்தது. மோதி அரசு பதவி ஏற்ற விழாவிலேயே முதலில் அண்டை நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்து பங்கேற்கச் செய்த “Neighbours First” என்கிற செயல்பாடு சரியான ராஜ தந்திரம் ஆகும். மோதியின் முதல் வெளிநாட்டுப் பயணமே, பூடான் நாட்டுக்கு என்று அமைந்தது மற்ற நாடுகளுக்கு இந்தியத் தலைமை குறித்து ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியது.

அடுத்து பங்களாதேஷுடனான உறவு புதுப்பிக்கப் பட்டது. பங்களாதேஷுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களின் மதிப்பு சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி டாலர்கள் என்ற அளவில் இருக்கிறது. அந்த வகையில் பங்களாதேஷ் மிக முக்கியமான அண்டை நாடாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் இந்தியாவுடனான பங்களாதேஷின் வர்த்தகம் மிகக் குறைந்து அந்நாட்டு சீனாவுக்கு அதிக ஏற்றுமதி செய்யத் துவங்கியது. மோதியின் பங்களாதேஷ் பயணம் வர்த்தக பரிவர்த்தனையில் முன்னேற்றத்துக்கு வழி கோலியிருகிறது. அதிலும் பங்களாதேஷுடனான எல்லை பிரச்சனையில் தீர்வு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு எதிர்ப்பு ஓட்டும் இன்றி நிறைவேற்றப் பட்டது மோதி அரசின் மற்றுமொரு செயல் திறன் எடுத்துக் காட்டாகும்.

மோதியின் சீனப் பயணத்திலும், சீன அதிபர் வழக்கமாக தலைநகரில் இருந்து வரவேற்காமல் Xian நகரில் வந்து வரவேற்றார். அதற்கு காரணம், சீன அதிபர் இந்தியா வந்த போது, தில்லியில் வரவேற்காமல், அகமாதாபாத்தில் மோதி அவரை வரவேற்று உபசரித்திருந்தார். மேலும் வழக்கமாக சீனா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுவதற்கு முன், ராணுவ ஊடுருவல் போன்ற எதையாவது செய்து தங்கள் மேலாதிக்கத்தை காண்பிப்பர். ஆனால் மோதியின் பயணத்தின் போது அவ்வாறு எதுவும் நிகழவில்லை. சீன அரசிதழில் கூட வழக்கம் போல இந்தியாவுக்கு “அறிவுரை” கூறுகிற பத்திகள் இடம்பெற வில்லை. இரு நாடுகளுக்குமான நல்லுறவில் கையெழுத்து இடும் போது, சீனா எப்போதும் திபெத் பிரச்சனையை குறிப்பிடும், அதுவும் இம்முறை இடம்பெறவில்லை. மேலும் மோதியின் அறிக்கையில் எல்லைப் பிரச்சனையை தைரியமாகக் குறிப்பிட்டு இரு நாட்டு உறவுக்கு அதனை தீர்ப்பது அவசியம் என்று கூறி இருந்தார். முந்தைய பிரதமர்கள் இதனை செய்வதற்கு விரும்பியதில்லை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல, இது வரை எந்த இந்திய பிரதமரும் செய்யாத அளவில் சீனாவைத் தாண்டி மங்கோலியாவுக்கு மோதி சென்றது இந்தியா சீனாவுக்கு அஞ்சி சீனாவின் கீழ் இயங்குகிற நாடல்ல, சுயசிந்தனையும் சுயசார்பும் உள்ள நாடு என்கிற செய்தியை உலகுக்கு தெரியப் படுத்தியது.

ஆஸ்திரேலிய மற்றும் கனடிய பயணத்தில், நிலக்கரி-யூரேனியம் போன்ற எரிசக்தி தேவைகளுக்கான ஒப்பந்தங்கள், பிரான்ஸ் பயணத்தில் ரஃபெல் போர் விமானங்கள் வாங்குதல் குறித்த தீர்வு, இஸ்ரேலுடன் விவசாயத் துறையில் ஒத்துழைப்பு, வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் என்று பல நல்ல வாய்ப்புகள் உருவாக்கி இருக்கின்றன. அமெரிக்காவுடன் நெருக்கம், அங்குள்ள பெரு நிறுவனங்களை நேரடியாக அணுகி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்தை நிச்சயம் நல்லவிதமாக மற்றும் அறிகுறிகள்.

ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் அண்டை நாடுகளுடனான உறவு புதிய நிலைக்கு கொண்டு வந்தது, சீனாவுடன் உறவு மேம்படுத்திக் கொண்டது என்று பல ராஜரீக செயல்பாடுகளைத் தொடர்ந்து மோதியின் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் கிழக்காசிய நாடுகளின் பயணம் உலக அளவிலும் இந்தியாவை முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்து வருகிறது. இந்த பயணங்களின் விளைவுகள் தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். அதோடு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, பா.ஜ.பா. உட்கட்சி பூசல் எதுவும் இல்லாமல் இருப்பது, தொடர்ந்து வரும் மாநில தேர்தல்கள் என்று பல காரணிகள் இந்திய முன்னேற்றத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கும். இது வரை சரியாகச் செல்லும் மோதி அரசின் செயல்பாடுகள் தொடரும் என்று நம்புவோம்.

ஆட்சியாளர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை எத்துணை முக்கியமோ அது போல மக்களுக்கு கடந்த கால வரலாறு குறித்த நினைவு அவசியம். மோதியை சந்தித்தவர் கை குலுக்கி விட்டு கையைத் துடைத்துக் கொண்டார் என்பதில் இருந்து, பா.ஜ.க ஆட்சியில் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு குற்றச் செயலுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று கூவும் பொறுப்பற்ற செயல்பாடுகளுடன் பத்திரிகைகளும் ஊடகங்களும் உள்ள நிலையில், மக்கள் தான் கடந்த பத்தாண்டு ஐ.மு.கூ ஆட்சியை நினைவில் கொண்டு மோதியின் அரசை எடை போடவேண்டும்.

வம்பர் 25, 2015: அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, கோலாலம்பூரில் மலேசியா வாழ் இந்தியர்கள் சுமார் 15,000 பேர் மத்தியில் உரையாற்றினார். மோடி தனது உரையைத் தொடங்கியபோது, “வணக்கம்’ எனத் தமிழில் வரவேற்றார். அரங்கில் இருந்து “மோடி, மோடி’ என்று முழக்கங்கள் எழுந்தன. தொடர்ந்து சில வாக்கியங்களைத் தமிழில் பேசிய அவர், பிறகு ஆங்கிலத்துக்கு மாறினார். அவர் பேசியதிலிருந்து –

“சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்தியா தற்போது சாதாரணமாக ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்தியாவின் வலிமையே, அதன் பன்முகத்தன்மைதான். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றங்களும், அரசும் பாதுகாப்பு அளிக்கின்றன…

pm-narendra-modi-unveils-swami-vivekanandas-statue-in-malaysia
நவீன பொருளாதாரத்தின் பயனாக, வறுமையை ஒழிக்க முடிந்தது. மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆயுள் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. உலகில் வேறு எங்கேனும் சில மாதங்களிலேயே 19 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதா? கடந்த 18 மாதங்களில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது…

அன்பாலும், நட்பாலும் மலேசியவாழ் இந்தியர்களுக்கு எனது இதயத்தில் எப்போதும் சிறப்பான இடமுண்டு. நட்பைப் பற்றி, தமிழகத்தில் வாழ்ந்த தத்துவஞானி திருவள்ளுவர் தனது திறக்குறளில், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ என்று சிறப்பாகக் கூறியுள்ளார். (திருக்குறளை பிரதமர் ஆங்கிலத்தில் கூறினார்). தமிழில் “திருக்குறள்’ என்னும் மிகப்பெரிய அறிவுச் செல்வத்தைக் கொடுத்தவர் வள்ளுவர். திருக்குறளை அதன் மூல வடிவமான தமிழில் படிப்பதற்காக, தமிழ் மொழியைக் கற்க விரும்புவதாக மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்…

உங்களில் பெரும்பாலானோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை நான்கு எல்லைகளுக்குள் சுருக்கி விட முடியாது. உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் வசித்தாலும், அங்கும் இந்தியா இருக்கிறது. நீங்கள்தான் இந்தியா”.

கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷனில், 12 அடி உயர விவேகானந்தர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய கலாசார மையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மையம் எனப் பெயரிட்ட பிரதமர் மோடி, மலேசியவாழ் இந்திய மாணவர்களின் அறக்கட்டளைக்கு, 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

6 Replies to “பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை”

  1. நரேன்றமோடியைப்பற்றி விமர்சிப்பவர்கள் செயல்படாத அல்லது செயல்படதெரியாத,
    செயல்படமுடியாத அரசியல்வாதிகளின் கூச்சலாகத்தான் எடுத்துக்கொள்ளமுடியும்.
    மேலும் நரேன்றமொடியைபோன்ற தலைவர்களின் பெருமையும், புகழும், எதிர்
    காலத்தில் நிலைத்துநிற்பவையகத்தான் இருந்திருக்கின்றன.

  2. “, பா.ஜ.க ஆட்சியில் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு குற்றச் செயலுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று கூவும் பொறுப்பற்ற செயல்பாடுகளுடன் பத்திரிகைகளும் ஊடகங்களும் உள்ள நிலையில், மக்கள் தான் கடந்த பத்தாண்டு ஐ.மு.கூ ஆட்சியை நினைவில் கொண்டு மோதியின் அரசை எடை போடவேண்டும்.”

    இது தான் யதார்த்தம். செயல் படாத அரசைப் பார்த்தார்கள். இப்போது அதற்கு நேர் எதிர். அந்தோணி அவர்கள் எந்த ஒரு செயலும் செய்யாது, பத்து நாள் போருக்கான தளவாடங்கள் தான் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். இப்போது, நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பாக உள்ளது. உலக அரங்கில் மரியாதை கிடைத்துள்ளது. இது தொடரட்டும்.

  3. Fantastic. This article shows author Hawk vision, hope if our media got the same vision would be good. This has to be translated in English and spread this. Great one.

  4. /////////பா.ஜ.க ஆட்சியில் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு குற்றச் செயலுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்//////

    பா ஜ க ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்றால் பாஜக்வை பிடிக்காத கட்சிகள் (சமாஜ்வாடி, மமதா கட்சி, கேஜ்ரிவால் கட்சி போன்றவை) அவர்கள் ஆளும் மாநிலங்களில் வேண்டுமென்றே கலவரத்தை தூண்டிவிட்டு அதற்கு தாங்கள் எந்தவித்திலும் பொறுப்பில்லை எல்லாவற்றிற்கும் மோடிதான் முழுக்க முழுக்க பொறுப்பு என்று கூறிவிட்டால் முடிந்தது கதை. அவர்களின் குற்றசாட்டை ஒத்து ஊதுவதற்கு சோரம்போன பத்ரிக்கைகளும் கம்யூனிஸ்ட் கம்மனாட்டிகளும் இருக்கவே இருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்தியிலும் (அதாவது மேலேயும் கீழேயும்) காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஸ்ரீ Dabholkar கொலை செய்யபட்டார். அப்போது intolerance நாட்டில் நிலவுகிறது என்று எந்த கூலிக்கார குப்பை எழுத்தாளர்களும் வாய் திறந்து கண்டிக்கவில்லை. அப்போது அவர்கள் வாயில் என்ன வாழைபழமா இருந்தது? பீகாரில் ஒரு 25 சீட்டு வந்துவிட்டாலும் வந்துவிட்டது. அந்த Ragul KHAN (thi ) ரொம்பத்தான் துள்ளுகிறான். அந்த கேஜ்ரிவால் ஊழலை ஒழிக்கவே பிறந்தவர் போல பேசிவிட்டு பீகாரில் பதவி ஏற்பு விழாவிற்கு சென்றது ஊழலில் ஊறி திளைத்த காங்கிரஸ் மற்றும் லொள்ளு பிரசாத் ஆகியோரின் ஊழல் கரை படிந்த கரங்களை பிடித்துதானே இந்த நிதிஷ் கரை ஏறமுடிந்தது? அப்படி ஏறினால் அது பரவாயில்லை தப்பில்லை என்று இந்த கேஜ்ரிவால் நினைக்கிறாரா?

  5. இது தான் யதார்த்தம். செயல் படாத அரசைப் பார்த்தார்கள். இப்போது அதற்கு நேர் எதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *