“காமாச்சியைக் கரையேத்தணும்!”

முன்குறிப்பு: இக்கதை நடந்ததாகக் குறிப்பிடும் காலம் பதினேழாம் நூற்றாண்டுத் துவக்கம்.  அப்போதைய தமிழ்நாட்டில் ஒருசிலரைத்தவிர யாருக்கும் ஆங்கிலம் என்று ஒரு மொழி இருப்பதாகவே தெரியாது.  மக்கள் தனித்தனிக் குமுகமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன.  செவிவழிக்கேட்ட ஒருகட்டுப்பாட்டைப்பற்றி ய கதையே இது.

 “கடைசியாத்து காமாச்சி போயிட்டாளாம்.   ஒரே அமக்களமா இருக்கு!” என்று தன் தந்தையின் மூன்றாம் தாரத்து மகள் பாரவதி யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது முத்தண்ணா காதில் விழுந்தது. எல்லோருக்கும் அவர் முத்தண்ணாதான்.  அவர் பெயர் முத்துசுப்பிரமணியம் என்பது அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.  எண்பத்தொன்பது வயதான அவர்தான் அந்த கிராமத்திலேயே மூத்தவர் என்பதாலும், அவருக்கடுத்த முதியவர் அவரைவிட இருபத்திரண்டு வயது குறைந்த மூதாட்டி என்பதுமே காரணம்.

“எலே, கறுப்புக்கண்ணா, இங்கே வாடா!” என்று இரைந்தார் முத்தண்ணா.

“இப்ப கருப்பனை எதுக்குக் கூப்பிடறேள், முத்தண்ணா?” என்று வாசலில் எட்டிப்பார்த்தவாறே பதிலுக்கு இரைந்தாள் அறுபது வயதான பார்வதி.

“உன்னால முடியாத காரியத்துக்குத்தான் அவனைக் கூப்பிடுவேன்!  எலே, கருப்பா? எங்கேடா போயிட்டே!” என்று மீண்டும் குரலை உயர்த்தினார் முத்தண்ணா.

“இங்கேதான் இருக்கேன் சாமி.  மாட்டுக்கு கழனி காட்டிக்கினு இருந்தேன்,” என்று துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டு ஓடிவந்muththannaaதான் கறுப்புக்கண்ணன் என்று அழைக்கப்பட்ட கருப்பன்.

பெயருக்கேற்றபடி கருநீலக்கருப்பு, எடுப்பான நாசி, வேலைசெய்துசெய்து உரமேறிய உடல்கட்டு;  சுருட்டை சுருட்டையான தலைமயிரைப் பின்னால் இழுத்துப் பெரிய குடுமியாக முடிந்திருந்தான்.  பத்துப் பதினைந்து நாளாக மழிக்கப்படாத முகத்தில் மிளகுப்போடியில் உப்பை ஆங்காங்கே தூவிவைத்ததுபோல கருப்பில் கொஞ்சம் நரைமுடி கலந்த முடிகள் அரிசி நீளத்திற்கு வளர்ந்திருந்தன.

முப்பத்தேழு வயதான அவனுக்குத் நினைவு அறிந்த நாள் முதல் தெரிந்ததெல்லாம் முத்தண்ணாவுக்குச் சேவை செய்வதுதான்.

“கோடியாத்து மாமி போயிட்டானு காதுலே விழுந்தது.  அங்கே என்ன நடக்கறதுன்னு பார்ந்த்துண்டு வாடா!” என்று முத்தண்ணா சொன்னதும் தலையைச் சொறிந்தான் கருப்பன்.

“என்னடா மரமாட்டம் நிக்கறே!  சொன்னது காதுல விழுந்ததோல்லியோ?” என்று மீண்டும் விரட்டினார் முத்தண்ணா.

அவர் குரலில் அதட்டல் இருந்தாலும், உள்ளத்தில் இல்லை என்று நன்கு உணர்ந்திருந்த கருப்பன், “என்ன சாமி, இப்படிக் கேக்குறீக?  சாமிமாரு வூட்டுல கேதம் விழுந்தா, அங்கிட்டு நா போகலாங்களா?  சும்மா உட்டுடுவாகளா?” என்று அவர் சொன்னதைச் தான் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதைத் தெரிவித்தான்.

“ஆமாம்.  அது ஒண்ணுதான் இந்த ஊருக்குக் கொறச்சல்!  கட்டையிலே வச்சதுக்கு அப்பறம் வேகவைக்கறதையும் இவனுகளே செய்வானுங்களா? அப்பமட்டும் தலையாரி வேணாமா இவனுகளுக்கு!” என்று அலுத்துக்கொண்டவர், “ஒனக்குத்தான் கண்ணும் காதும் தீட்சண்யமாச்சே! தள்ளிநின்னு பாத்து, என்ன விவரம்னு தெரிஞ்சுண்டு வா.  பார்வதி, என் கைத்தடிய எடுத்துக்கொடு, எங்கேயோ மறந்து வச்சிட்டேன்!” என்று தன் தங்கையும் அதேகுரலில் விரட்டினார்.

“நான் என்ன சின்னப் பொண்ணுன்னு நெனப்பா, முத்தண்ணா!  சும்மா வெரட்டிண்டே இருக்கேள்!” என்று மெல்ல எழுந்து, அவரது தடியை எடுக்கச்சென்றாள் பார்வதி.

இருபது வயதிலேயே கணவனை இழந்து, பிறந்தவீட்டுக்கு வந்தவள் — தனது தந்தையின் மூத்தமகனும், முப்பது வயதிலேயே மனைவியையும், மூன்று குழந்தைகளையும் வைசூரிக்குப் பறிகொடுத்துவிட்டு, இனித் திருமணமே வேண்டாம் என்று தனிக்கட்டையாக் இருந்துவிட்ட —  தன்னைத் தந்தையாக வளர்த்து ஆளாக்கிய தமையனுமான முத்தண்ணாவுக்குத் துணையாக இருந்துவிட்டாள்.

அண்ணன் தடி எங்கு இருக்கிறது என்று மறந்துபோய்த் தன்னை விரட்டவில்லை, வம்புபேசாதே என்று மறைமுகமாகச் சொல்லுகிறார் என்பதையும் உணர்ந்துதான் இருந்தாள்.  தனக்கு அறுபது வயதாகியும், ஆறுவயதுக் குழந்தையாக நடத்தப்படுவதுதான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.  இருந்தாலும், தந்தையாக நினைக்கும் முத்தண்ணாவை எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றவில்லை.

“பக்கத்திலேயே கைத்தடியை வச்சுண்டு, ஊர்பூராத் தேடினா, எங்கே கெடைக்குமாம்?” என்ற திட்டலுடன் அவர் அருகில் கிடந்த தடியை எடுத்து, தரையில் ஒரு தட்டுத்தட்டி, அவரிடம் நீட்டினாள்.

“பொணம் போறவரைக்கும் சாப்பிட முடியாது.  சமையக்கட்டுலே இருக்கறதத் தூக்கி கழனித் தொட்டீல கடாசு!” என்று தடியை ஊன்றிக்கொண்டு எழுந்தார் முத்தண்ணா.

அவர் வாயிலுக்கு வருவதற்கும், கருப்பன் திரும்பவருவதற்கும் சரியாக இருந்தது.

‘சாமி, எதோ தகராறு நடக்குது.  ஊருசாமிகளெல்லாம் சேந்து எதோ சத்தம் போட்டுக்கினு இருக்காக.  எளவுவீட்டுச் சின்னசாமி மத்தசாமிகள ஏதோ கெஞ்சிக்கினு இருக்காக.  முடியாது, முடியாதுங்கற பேச்சுத்தான் கேக்குது.” கருப்பன் தகவல் தந்தான்.

“ஆமாம், வைத்தா அங்கே இருக்கானா?”

வைத்தாதான் ஊர் விசேஷங்களுக்கு உபாத்தியாயம் செய்பவர். பிறக்குமுன்னர் செய்யும் சடங்குகளில் இருந்து, முடிவுவரை அவர்தான் எல்லாவற்றிற்கும் வரவேண்டும்.

“இருக்காரு சாமி.”

“சரி!  என்னோட வா!” என்று தடியை ஊன்றிக்கொண்டு விடுவிவென்று நடந்தார் முத்தண்ணா.

“நா அங்கிட்டு வர்றது சரியா இருக்குமா சாமி?  நா வேணும்னா தலையாரிக்குத் தகவல் சொல்லட்டுமா?” தனித்த குரலில் கேட்டான் கருப்பன்.

“நான் பெரியவனா, நீ பெரியவனா?  எதுக்கு மேப்பேச்சுப் பேசறே?  வேண்டியதில்லை.  நான் இருக்கறச்சே எவனும் நீ ஏன் என்கூட வரேன்னு கேக்கமுடியாது.  வாய மூடிண்டுவா, என்கூட,”  என்று கடிந்துவிட்டு வேகத்தைக் குறைக்காமலேயே நடந்தார் முத்தண்ணா.

அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தான் கருப்பன்.

அந்தச் சிற்றூர் – குக்குடநல்லூர் —  எப்பொழுதோ எந்த மன்னனாலோ முத்தண்ணாவின் முன்னோருக்கு பிரம்மதேயமாக வழங்கப்பட்டதாம்.  மொத்தம் இருநூறுபேர்களுக்கும் குறைவாகவே உள்ள அந்தச் சிற்றூருக்கு ஒரு தலபுராணமும் உண்டு.  அந்தக்கதை இப்போது வேண்டாம்…

…ஒவ்வொரு குமுகத்திற்கும் ஒரு கோவில். பதினெட்டு வீடுகள் உள்ள அந்தணர் தெரு, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை உள்ள வேளாளர் தெரு, இன்னும் பல குடிசைகள், என்று அவரவர்கள், அவரவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தார்கள்.  அதேமாதிரி அந்தந்தக் குமுகங்களுக்கு அவரவர்கள் நீதி, கட்டுப்பாடு.  ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை.

முத்தண்ணாவின் குடும்பம் மட்டுமல்ல, எல்லோரின் குடும்பமுமே பெரிதாகத்தான் இருந்தன.  அப்பொழுது குக்குடநல்லூரின் எண்ணிக்கை அறுநூறுக்கும் மேலாக இருந்தது.  எப்போதும்போல் திடுமென்று வந்த வைசூரி, முக்கால்வாசிப்பேரை வாரிக்கொண்டுபோய்விட்டது.  முத்தண்ணா குடும்பத்தில் மிஞ்சியவர்கள் அவரும், அவர் தங்கையும்தான்.

அந்த ஊரில் முத்தண்ணாதான் மிகவும் கற்றவர்.  யஜுர்வேதம், சம்ஹிதை, கணம், பல உபநிஷத்துகள், ஜோசியம், இன்னும் வைதிகச் சடங்குகள் எல்லாம் தெரியும்.  நிறைய நிலபுலங்கள் உண்டு.  இருந்தாலும், நிலத்தில் பயிரிடுபவர்களிடம் தடலடி செய்து எதையும் வாங்குவதில்லை.  அவர்களாகக் கொண்டுவந்து கொடுப்பதிலேயே வீட்டுக்குதிர் நிரம்பி வழியும்.

அதிலும், தனக்கு வேண்டியதுபோக மீந்ததைத் தேவையானவர்களுக்கு வழங்கிவிடுவார். அவரை எதிர்த்துப்பேச ஊரில் எவருக்குமே துணிவுகிடையாது.  ஆனால், பின்னால் பேசுபவர்கள் அவர் குமுகத்தில் நிறைய உண்டு…

…”என்ன நடக்கிறது இங்கே?  காமாச்சி போய்ட்டானு பார்வதி சொன்னா.  இங்கே எதோ தகராறுன்னு கருப்புக்கண்ணன் கண்ணுலே பட்டது.  அதான் என்னனு பாக்கலாம்னு வந்தேன்.” என்று தான் வந்த நோக்கத்தை யாரும் கேட்பதற்குமுன்பே கணீர் என்று அறிவித்தார்.

brahminsயாரிடமிருந்தும் பதில்வரவில்லை.

“டேய் ராமா, எண்டா பச்ச மட்டை வல்லே?  காமாச்சி காஞ்சிரங்காடு (சுடுகாடு இருக்குமிடம்) போகவேணாமா?” என்றவர், “டேய் வைத்தா, அபர காரியத்துக்கு ஒண்ணுமே நீ கொண்டுவல்லையேடா.  அவ இங்கேந்து போனாத்தானே நாம புண்டம் திங்கமுடியும்?” என்று வைத்தாவை விரட்டினார்.

வைத்தா தலையை நிமிரவே இல்லை.

“கிச்சா, சொல்லுடா.  என்ன தகராறு இங்கே?” என்று கிருஷ்ணசாமியை – இறந்த காமாச்சியின் ஒரே மகனைக் கேட்டார்.

பதினாறு வயதான கிச்சாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

அருகில் சென்று அவன் தலையை வருடினார் முத்தண்ணா.

“சொல்லுடா, கிச்சா! ஒன் கொள்ளுத்தாத்தா வயசாறது நேக்கு.  காமாச்சி என்பேத்தி மாதிரி.  ஏன் எல்லோரும் பித்துப்பிடிச்சமாதிரி, காரியங்களைக் கவனிக்காம நின்னுண்டிருக்கேள்?”

“யாரும் அம்மாவைக் கொண்டுபோக முடியாதுங்கறா, முத்தண்ணா!”  ஓவென்று ககதறி அழுதான் கிச்சா.

“என்னது?  எவண்டாது அப்படிச் சொன்னது?”  கிழட்டுச் சிங்கமாக உறுமினார் முத்தண்ணா.

“ஆத்துலே திரண்ட(வயதுக்குவந்த) பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்காம ரெண்டு வருஷமா ஆத்திலே வச்சிருக்கா.  நாங்க என்னசொல்லியும் காமாச்சி கேக்கமாட்டேனுட்டா.  நம்ம சம்பிரதாயமே கெட்டுப்போச்சு.  திரண்டபொண்ணு சும்மா இருப்பாளா? அவனை, இவனைப் பாத்து வலைவீசமாட்டாளா?  இப்படிப்பட்ட, ஜாதிகேட்ட வீட்டுக்கு சம்ஸ்காரம் ஒண்ணுதான் கொறச்சல்!”  முத்தண்ணா பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“யாரடாது பின்னலேந்து பேசறது?  முன்னால வாடா!” என்று அதட்டினார் முத்தண்ணா.

பதிலே வரவில்லை.

“பொம்மனாட்டிப்பசங்க!  முன்னால வந்து நிக்காம பின்னால பேசறாங்க, தலையைச் செறச்சு முட்டாக்குபோட்டுண்டு ஒக்காந்துக்கவேண்டிய பசங்கல்லாம்!   பார்வதிய பழம் போடவைத் தரச்சொல்லறேண்டா, கட்டிக்குங்கடா!”  அவர் குரலில் இருந்த உஷ்ணம் எல்லோரையும் சுட்டது.

“நான்தான் சொன்னேன், முத்தண்ணா!” என்று முன்னால் வந்து நின்றார் ஐம்பது வயதான அய்யாச்சாமி.

“நீ எப்பலேந்துடா ஊருக்குப் பெரியமனுஷன் ஆனே?”

“ஏன் முத்தண்ணா, நியாயத்தை எடுத்துச்சொல்ல பெரியமனுஷனாத்தான் இருக்கவேணுமா?  உங்களைத் தவிர வேற பெரியமனுஷாளே இந்த ஊரில இருக்கப்படாதா?”

“ஓகோ, அப்படியா விஷயம்?  என்னடா நியாயம் இங்கே இருக்கு?  ஒருத்தி கட்டையிலே போகவேணும்.  அதைச் செய்யவிடாம தடுக்கறது எந்தவிதத்துலடா நியாயம்?”

“உங்களுக்குத் தெரியாததில்லே, முத்தண்ணா!  பெரியமனுஷி ஆகி, மூணுமாசத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிவைக்கணும், அப்படி இல்லாட்டி, அந்தப் பொண்ணு யாரைவேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சாஸ்திரம் சொல்லியிருக்கு.  அப்படி நடக்கக்கூடாதுன்னுதானே பொண்ணு பெரியமனுஷி ஆகறத்துக்குமுன்னாலே கல்யாணம் பண்ணிவைக்கணும்கற சம்பிரதாயத்தை நாம அனுஷ்டிக்கிறோம்!  அதை ஒத்தத்தரா மீற ஆரம்பிச்சா, நம்ப சாஸ்திர சம்பிரதாயங்கள்ளாம் காத்தோடபோயிடும்!”

“அதுனால…”

“அதுனாலதான் ஒன் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு….  கிச்சா மாட்டேன்னுட்டான்!”

“அடி சக்கை!  ஒனக்கு அம்பது வயசாறது.  உனக்கு பதினஞ்சுவயசுப் பொண்ணு கேக்கறதாக்கும்!  ஓம் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுதானே, அவனுக்கு இருபத்தாறு வயசுதானே ஆறது!”  முத்தாண்ணாவின் குரலில் கிண்டல் இருந்தது.

“அதெப்படி?  அவனுக்குத்தான் ஒரு பொண்டாட்டி இருக்காளே!”

“இருந்தா என்னடா?  ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிக்கப்படாதுன்னு சாஸ்திரம் எங்கேயாவது சொல்றதா?”

“கிச்சாவோட அப்பன் சொத்தையெல்லாம் கண்ட எடத்துலே கொண்டுபோயி அழிச்சிட்டான்.  அவனுக்கு எல்லாக் கெட்டபழக்கமும் இருந்துது. அப்படிப்பட்டவன் பொண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு வரதே பெரிசு.”

“எப்படிடா இப்படிப் பேசறே!  அப்பன் எப்படி இருந்தா எப்படிடா?  காமாச்சியும், அவ கொழந்தைகளும் தங்கக்கம்பிகள்டா!  பொண்ணு முக்கியமா, அல்லது செத்துப்போன அவன் அப்பன் முக்கியமா?”

“முத்தண்ணா, என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சுவச்சா, சீரு செனத்தி என்ன செஞ்சானு கேள்வி வரும்.  என்னைக் கல்யாணம் பண்ணிண்டா அப்படிக் கேள்வி ஒண்ணும்….”

“சீ!  வாயக் கழுவு.  வாயால மட்டும் பேசுடா.  வேறு இன்னோத்தால பேசாதேடா.  அதுக்கும், காமாச்சி பொறப்படறதைத் தடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“பாடம் கல்பிச்சாத்தான் இனிமே தப்பு நடக்காது.”

“அப்படியாடா அண்ணாவி?”  என்றவர், அங்கிருந்த கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.  “உங்க முடிவு என்னங்கடா?  டேய் வைத்தா, காரியத்தை ஆரம்பிப்பியா, மாட்டியா?” என்று வைதிகர் வைத்தாவை அதட்டினார்.

vaithaa“முத்தண்ணா,  நீங்க சொல்றேள்னு நான் எதையாவது செஞ்சா, என்னை கிராமத்தை விட்டு இவா ஒதுக்கிவச்சுடுவா.  நான் மூணு பொண்குழந்தைகளைக் கரையேத்தணும்.  இப்பவேணும்னா நீங்க என்னை சம்ரட்சணை பண்ணுவேள்.  அப்பறம்….” என்று இழுத்தார் வைத்தா.

“இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே!  வேற நீ என்னடா பண்ணுவே!  அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழைபெய்யுமாடா?  நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம்.  அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா.  இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?” என்றவர், மற்றவர்களை நோக்கித் திரும்பினார்.

“டேய் பசங்களா!  ஊருக்குப் பெரியவன்கற முறையிலே கேக்கறேங்கடா!  இப்ப காமாச்சியை வழியனுப்ப நீங்க வரப்போறீங்களா இல்லையா?”

பதிலே இல்லை.

“இங்கே யாருடா உங்களுக்கு மூப்பு, வாடா இந்த முத்தண்ணா முன்னாலே!”

முத்தண்ணாவின் சவாலை ஏற்றுக்கொள்வதுபோல அவர் முன்னால் வந்துநின்றார் அய்யாச்சாமி.

“நான்தான் முத்தண்ணா இவங்களைத் தடுத்தேன்!  இப்ப எல்லோரும் என் வார்த்தைக்குத்தான் கட்டுப்பட்டுண்டு இருக்கா.  நாங்க எல்லோரும் எங்க வழியைப்பார்த்துண்டு போறதாத்தான் இருந்தோம்.  நீங்க வரேளேன்னுதான் இங்கே நின்னுண்டு இருந்தோம்.”

அய்யாச்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் முத்தண்ணா.

“எண்டா அய்யாச்சாமி!  அப்ப காமாச்சி இங்கே நாறிண்டே இருக்கணுங்கறதுதான் உங்க தீர்மானமா?”

பதிலே இல்லை.

‘காமாச்சி இங்கே இருக்கறவரை யார் ஆத்திலேயும் அடுப்பு எரியாது.  கோவில்லே சாயரட்சை பூஜை நடக்காது. அது பரவாயில்லையாடா நோக்கு?”  கேள்வியில் தீப்பொறி பறந்தது.

“அப்ப கிச்சாப்பயலை எங்க வழிக்கு வரச்சொல்லுங்கோ!”

“அப்படீன்னா?”

“அவன் தங்கையை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம்னு சொல்லச்சொல்லுங்கோ!’”

பளார் என்று அய்யாச்சாமியின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.  அதிர்ந்துபோய் இரண்டடி பின்னல் எடுத்துவைத்தார் அய்யாச்சாமி.

“எப்ப, எதைப் பேசறதுன்னு தெரியாத நீ ஒரு மனுஷன், உனக்குப் பின்னால ஒரு பட்டாளம்!  தூத்தெறி!” என்று காறி உமிழ்ந்தார் முத்தண்ணா.

“எந்திருந்து போங்கடா, போக்கத்த பசங்களா!  காமாச்சியைக் கரையேத்தறது எப்படீன்னு எனக்குத்தெரியும்.  டேய் வைத்தா, உன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுன்னு ஒருநாளைக்கு கேப்பான், இந்த அய்யாச்சாமி.  அப்ப உன்பாடு, அவன்பாடு.  அப்ப அதுக்கு மட்டுமில்லே, எதுக்குமே இன்னிலேந்து நீ எங்காத்து வாசல்படி ஏறி வரக்கூடாது. தெரிஞ்சுக்கோ.” என்று உறுமிய அவர், குனிந்து வைத்தாவின் ஒலைப்பையைப் பிடுங்கினார்.

“காமாச்சியை அனுப்பி வச்சுட்டு, இந்தப்பையைத் தலையைச் சுத்தி வீசி எறியறேன்.  பொறுக்கிக்கோ!” என்றவர்,  கருப்பன் பக்கம் திரும்பி, “டேய் கருப்புக்கண்ணா, நெல்மூட்டை ஏத்திண்டு வருவியே, அந்த வண்டியைக் கொண்டுவாடா! ஏன் என்னன்னு கேள்வி கேக்காதே!  பச்ச மட்டை ரெண்டையும் கொண்டுவந்து போடு.” என்று வழக்கம்போல அதட்டும் குரலில் விரட்டினார்.

“இதோ சாமி!”  என்று ஓடினவனிடம், “அப்படியே தலையாரியையும் மசானத்துக்கு வந்து மத்த ஏற்பாட்டை நான் கவனிக்கச்சொன்னதா சொல்லிடு.  எவனாவது உன்னைத் தடுத்து நிறுத்தினா, அவன் கையைக் காலை உடைச்சிடு.  எவன் என்னபண்ணுவான்னு நான் பார்க்கறேன்!” என்று இரைந்தார்.

தலையை ஆட்டியபடி ஓடினான் கருப்பன்.

“முத்தண்ணா, நீங்க பண்றது அநியாயம்.  உங்களுக்கும் ஒருநாள் எங்க தேவை வரும்.  உங்களையும் நாங்கதான் கரைசேக்கணும்  மறந்துடாதீங்கோ!”

குரல் வந்த திசையை நோக்கித் தன் கைத்தடியைச் சுழற்றினார்.

“ஆ!” என்று அய்யாச்சாமியிடமிருந்து ஒரு கத்தல் கிளம்பியது.

“டேய், என்னை எப்படி கரையேத்திக்கணும்னு எனக்குத் தெரியும்டா.  உங்க கொட்டத்த எப்படி அடக்கணும்னும்கறதும் எனக்குத் தெரியுங்கடா.  மனுஷனுக்கு மனுஷனா உபகாரம் செய்யலேன்னா, நரகலைத் திங்கற மிருகத்துக்கும் உங்களுக்கும் என்னங்கடா வித்தியாசம்!” என்றவர், கிச்சாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

கட்டைவண்டிசிறிது நேரம் சென்று வெளிவந்த அவர், பச்சைமட்டையுடன் வண்டியில் வந்த கறுப்பனைப் பார்த்து விரல்களால் சைகை செய்துவிட்டு உள்ளேசென்றார்.

கருப்பன் அரிவாளால் மட்டையை வெட்டி, பாடைபின்னத்துவங்கினான்.

நேரம் சென்றது.

“கருப்புக்கண்ணா, உள்ளே வாடா!” என்று முத்தாண்ணாவின் அதட்டல் குரல் ஒலித்தது.

“நானா?  வூட்டுக்கு உள்ளேயா  சாமி?” என்று இரைந்து குரல் கொடுத்தான் கருப்பன்.

“ஆமாண்டா மடசாம்பிராணி! உன்னத்தான்.  காது செவிடாயிடுத்தா நோக்கு?” என்று திரும்பவும் அதட்டல் வந்தது.

கலைந்து கிடந்த மயிர்க்கற்றையை அள்ளிமுடிந்துகொண்டு உள்ளே போன கருப்பன், சிறிதுநேரத்தில் காமாச்சியின் உடலைக் குழந்தையைத் தூக்குவதுபோலத் தூக்கிக்கொண்டு வந்தான். முத்தண்ணா கண்ணைக்காட்டவே, பாடையை வண்டியில் தூக்கிவைத்தான் கிச்சா.

காமாச்சியைப் பாடையில் கிடத்தினான் கருப்பன்.

தீச்சட்டியைக் கீழேவைத்த முத்தண்ணா, கிச்சாவைப்பார்த்து தலையை ஆட்டினார்.

தீச்சட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் மயானத்தைநோக்கி நடந்தான் கிச்சா.

மாட்டின் மூக்கணாங்கயிறைப் பிடித்தவாறே வண்டியை மெல்ல நடத்திச்சென்றான் கருப்பன்.

தடியை ஊன்றியவாறே அவனைப் பின்தொடர்ந்த முத்தண்ணா, கதறி அழுதுகொண்டிருந்த கிச்சாவின் தங்கையைத் திரும்பி பார்த்து, தனக்கே உரிய உரத்த அதட்டும்குரலில், “நாங்க காமாச்சியைக் கரையேத்திவிடப் போறோம்மா. காலம் கெட்டுக்குக்கெடக்கும்மா, பொறுக்கிநாய்க்கூட்டம் காத்துக்கெடக்கு.  பத்திரமா, கதவைத் சாத்தித் தாப்பாப் போட்டுக்கோ!” என்று இரைந்துவிட்டு நடக்கத் துவங்கினார்.

*** *** ***

15 Replies to ““காமாச்சியைக் கரையேத்தணும்!””

  1. சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு, சாதியமூடப்ழக்கவ்ழக்கங்களை, எதிர்த்து குரல் கொடுப்பவர்களும் உயர் சாதி இந்துக்கள்தான் என்பது அந்த நாட்களிலும் சரி இந்த நாட்களிலும் சரி உண்மை என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.

  2. May be a true story, how these people mended all the sasthras for their personal use, just to taste the child of their daughters and grand daughters age. Child rapists, Hindusims spoiled by Brahmins, I am ashamed being part of them.

  3. துரியோதனர்கள் மத்தியில் ஒரு கிருஷ்ணன் முத்தண்ணா ! நடை ! நம்மை அந்த காலத்திற்கே இழுத்து செல்கிறது ! எல்லா ஊரிலும் எல்லா ஜாதியிலும் , அய்யா சாமிகளும் , வைத்தாக்களும் , முத்தண்ணாக்களும் கருப்பசாமிகளும் இருந்து கொண்டே இருக்கிறார்கள் ! கால வெள்ளம் போய் கொண்டே இருக்கிறது !

  4. நல்லக்கதை. சமூகம் தேக்க நிலையை அடைகின்றபோது நம்பிக்கைகளும் மரபுகளும் தவறாகப்புரிந்துக்கொள்ளப்பட்டு ஒரு சிலரின் சுய நலத்திற்கு அவைப்பயன்படுத்தப்படுவதை இந்தக்கதை சித்தரிக்கிறது. ஒரு வேதம் அறிந்த பிராம்மணர் அதற்குப்பரிகாரம் தேடத்தனித்து நின்று போராடுவதாகக்கூறினாலும் தேக்க நிலையைத்தான் அது காட்டுகிறது. பிராம்மணர்களுள்ளும் சீர்திருத்தவாதிகள் புரட்சியாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர் என்ற உண்மை இதற்கு ஆதாரமாக அமைகிறது.
    சிறுகதையின் ஆசிரியர் ஸ்ரீ அரிசோனன் அவர்களுக்குப்பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
    குமுகம் என்பது ஒட்டுமொத்த society ஐக்குறிக்குமே அன்றி community ஐக்குறிக்காது. கதாசிரியர் சாதியைக்குமுகமாக இந்தக்கதையில் சொல்லியிருக்கிறார். சாதியைக்கம்யூனிட்டி என்று சொல்வதுகூட விவாதத்திற்கு உரியது என்றாலும் அது சொசைட்டியாகாது. அதை சாதி என்று மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும்.

  5. Good story but the usual gripe. Brahmin bashing EVEN in an imaginary story though this may not be the intention of the author. Even the hero in this story has shades of racism with rest of the Brahmin characters portrayed as loathsome sexual deviants. I am sorry Sir, it is demeaning a particular community and we all know that they are the easy soft targets.
    Waiting to see whether we will see similar stories about other Hindu communities in TH.

  6. நடந்ததாகச் சொல்லப்படும் கதை என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார்.

    கதையின் கரு சாதிப்பிரச்சினையேயில்லை. சாதிக்குள் நடக்கும் சம்பிரதாயப் பிரச்சினை.

    17ம் நூற்றாண்டில் நடைபெறுபவை எப்படி இக்காலக்கண்ணாடியை மாட்டுக்கொண்டு எப்படி பார்க்க முடியும்? அக்கால தருமங்கள் நம்காலத்தில் விநோதமாகத் தோன்றுமளவுக்கு மாறிவிட்டன. எனவே, அக்காலத் தர்மங்களை அக்கால ஊடகத்தின் வழியேதான் பார்க்கவேண்டும்.

    அக்காலவழக்கத்தின்படி, மணவயது வருமுன்பே பெண் மணமுடித்து வைக்கப்படுவாள். அல்லது மணவயது வந்தவுடனே சில மாதங்களுக்குள் மணமுடித்து வைக்கபபடவேண்டுமென்று சாஸ்திரம் கடமையாக்குகிறது என்று விளக்குகிறார் கதாபாத்திரமான அய்யாச்சாமி. அப்படி முடிக்கவில்லையென்றால், பின் விளைவுகள் வாழ்க்கையை நாசாமாக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது என்றும் எச்சரிக்கிறார்.

    காமாட்சி தன் பெண்ணுக்கு மூன்று வருடங்களாக ஏன் மணம் செய்விக்க முடியவில்லை எனபதற்கு கதையில் விளக்கமில்லை. அனுமானம்தான் செய்யலாம். வறுமையோ?

    ஆம், இப்படிப்பட்ட வறுமையைப் பயன்படுத்தி வயதானவர்கள் ஏழைப் பெண்களை மணம் செய்துகொண்டு இளம்பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குவர் அதாவது சாஸ்திரம் சொல்வதைப் பயன்படுத்தி. Remind yourself here of the feature film Gayatri by Bhartan; and Mogamul by Janakiraman.

    இது யார் தவறு? மனிதர்கள் தவறா? சாஸதிரத்தின் தவறா? கதாநாயகன் இதை ஆராயப் புகாமல், சாஸ்திரத்தையைப் பற்றியே கவலைப்படாமல், எல்லாரையுமே திட்டித்தீர்த்து விடுகிறார். ஒட்டுமொத்த சாதிசனமும் தவறு – அதாவது சாஸ்திரத்தை அனுசரிக்கவேண்டுமென்று குறியாய் இருப்பதினால். தான் மட்டுமே சரி – அச்சாஸ்திரம் வேண்டமெனபதனால்.

    கொஞ்சம் சிந்தனா வலிமையும் கடமையுணர்வும் இருபபவன் சாஸ்திரங்களை அனுசரிக்க எவை தடைக்கற்கள் என ஆராயந்து அதை நீக்கும் உபாயங்களைத்தான் தேடுவான். கதாநாயகன் அப்படியெல்லாம் செய்யவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோரணை. We are victims of the circumstances we were born in. Whether we like or not, we will have to go with the crowd. Otherwise, we will be ostracised. One of the members of the crowd clearly points this out to the hero. If someone say we can transgress and ride roughshod over feelings of society, then that person should show the alternate ways. What ways has this hero shown to the crowd? Throughout the story, his conduct is despicable.

    சாஸதிரங்கள் மாறலாம். அக்காலத்தில் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், சாஸதிரங்கள் மனிதர்கள் நல்வாழ்க்கைக்கு இடர்களாகவே இருக்கவேண்டுமென்று அதைப்படைத்தோர் கொள்ளவில்லை. இக்கதை அத்தவறாகப் புரியப்பட்ட‌ பிம்பத்தையே உருவாக்குகிறது.

    அது கிடக்க. இனி சாதியைப்பார்ப்போம்.

    ஒரு தலித்தை தன் வீட்டுக்குள்ளே வந்து போகும் வேலைக்காரனாக வைத்துக்கொள்வது 17ம்நூற்றாண்டில் நினைத்துப்பார்க்க முடியாது. கதாநாயகன் வீட்டு வேலைக்காரன் கருப்பன் என்ற வழக்கமான பெயரில் வரும் ஒரு தலித்து. பிரம்தேயம் என்கிறார். அக்கிரஹாரத்தில் கதை. எப்படி தலித்து ஊருக்குள்ளேயே வந்து போக முடிகிறது? அக்ரஹாரத்தில் ஒரு குடும்பம் எப்படி தலித்தை வேலைக்கு தம்முடனேயே வைத்துக்கொண்டது? அதே சமயம் அவன் பிறவீடுகளுக்குள் தான் எட்டிப்பார்ப்பது கூட பழியே எனறும் சொல்கிறான். வீட்டின் கழிப்பறையைக் கழுவிவிடும் தலித்து கூட பின்புறம் வழியாகத்தான் வருவான். அவனுக்கென்று ஒரு தனிபாதை உண்டு. பிராமணர்கள் தலித்தை மட்டுமன்று; பிறரையும் வீட்டுக்குள் விடாத காலம் 17ம் நூற்றாண்டு.

    Anachronism என்றொரு ஆங்கிலச்சொல். பொருள். பிற்காலத்தைச்சேர்ந்ததை முற்காலத்தோடு சேர்ந்ததாகக் காட்டி நம்பவைப்பது. அல்லது எழுத்தாளர் கவனத்தையும் மீறியும் நுழையலாம். எ.கா. டெலிஃபோன். இது நம்காலத்தில் கண்டுபிடிக்கபப்ட்டது. ஒரு 10ம் நூற்றாண்டுக்கதையில் வந்தால், அஃது அனக்ரானிசம்.

    முத்தண்ணா ஒரு Anachronism. Most of the story, like dalit entry – is anachromism.

    — பால சுந்தர விநாயகம்.

  7. திரு ஒரு அரிசோனன் அவர்களே

    உங்களடைய இந்த கதையின் நோக்கம் என்னவோ தெரியாது. ஆனால் திரு SunnyGreen என்பவரது மறுமொழி தான் நீங்கள் வேண்டியதா ? ஜாதி எல்லோரிடமும் இருந்தது – இன்னமும் இருக்கிறது. ஆனால் அதை மிகவும் இன்னும் பிடித்துக் கொண்டிருப்பது பிராமணனைத் தவிர வேறு யாருமே இல்லையா ? கலப்பு மணம் என்றால் கத்தி எடுத்துக் கொண்டு கிளம்புவது பிராமணனா ?

    பிராமண குடும்பத்தில் பிறந்து ( முக்கியமாக தமிழ் நாட்டில் ) பல தொல்லைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்தில் இருக்க முடியவில்லை என்று வீடு வாசல் விட்டு நகரங்களுக்கு சென்றவர்கள் பலர். இந்த மாதிரி கதைகள் எங்களுக்கு இன்னும் அடிமேல் அடிதான் கொடுக்கும். கதை சொல்வது உங்கள் உரிமை – அதை பிரசுரிப்பது தளத்தின் உரிமை – வேறு சொல்வதற்கு என்ன உள்ளது !

  8. இந்த கதையின் உண்மை தன்மை பற்றியும் அந்த காலத்தில் இது நடந்திருக்க வாய்ப்பு உண்டா என்று கேட்பவர்களுக்கும் நான் ஒன்று சொல்வேன். இதே வட தமிழகத்தில் இருக்கும் அச்சிறுபாக்கம் என்னும் சிற்றூரில் சுமார் 72 ஆண்டுகளுக்கு முன் என் பாட்டனார் மரணத்தின் போது நடந்ததை அறிந்தால் இன்னும் வாய் பிளப்பார். இந்த கதையில் வரும் காமாட்சியின் நிலைதான் என் பாட்டனாருக்கும். அவரை கரை சேர்க்க நடந்த கலாட்டாவை என் தாய் சொல்லி கேட்டிருக்கிருக்கேன். இத்தனைக்கும் அன்று இறந்த என் பாட்டனார் அந்த ஊரின் பள்ளி ஆசிரியர். கரை சேர்க்க கை கொடுத்தது ஒரு பாய். ..சில சமயம் வாழ்க்கை கதைகளை விட விசித்திரமானது.

  9. இக்கதையைப் பலரும் பலவிதமான கோணத்தில் கண்டு கருத்தை எழுதியமைக்கு நன்றி. ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாகப் புரிந்துகொண்டிருப்பது நீங்கள் கதையை ஊன்றிப் படித்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. அதற்காக மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் எந்த சாதியையும், சமயத்தையும் குறைகூறி எழுதுபவனல்ல. இக்கதை பழங்காலத்தில் நிகழ்ந்ததாக உருவகம் செய்யப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. அவ்வளவே!

    //ஒரு தலித்தை தன் வீட்டுக்குள்ளே வந்து போகும் வேலைக்காரனாக வைத்துக்கொள்வது 17ம்நூற்றாண்டில் நினைத்துப்பார்க்க முடியாது. கதாநாயகன் வீட்டு வேலைக்காரன் கருப்பன் என்ற வழக்கமான பெயரில் வரும் ஒரு தலித்து. //

    இது தவறான புரிதல். மேலும், கருப்பன் என்ற பெயர் தலித் குமுகத்திற்கே உரித்தானது என்று பதிந்திருப்பதும் சரியல்ல. தலித் அல்லாத நண்பர்கள் பலர் கருப்புசாமி, கருப்பையா, கருப்பண்ணன், பெரியகருப்பன் என்ற பெயருடன் அழைக்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.

    கருப்பன் ஒரு தலித்து என்று கதை எங்கு சொல்கிறது? இல்லை.

    கதையின் துவக்கத்திலேயே மக்கள் குமுகங்களாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள், ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்பதை நினைவில்கொண்டால், வேறு குமுகத்தைச் சேர்ந்த கருப்பன், வழக்கிடும் இன்னொரு குமுகவிஷயத்தைக் கேட்கவிரும்பவில்லை என்பது புரியும்.

    எப்பொழுதும், ஒரு குமுகத்தைச் சேர்ந்தவர்களிடம், மற்ற குமுகத்தைச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்வதும், பணிசெய்வதும் எக்காலத்திரும் நடந்துதான் வந்திருக்கிறது.

    மேலும், “தீண்டத்தகாதவர்கள்” என்ற ஒரு சொல் உருவானதே, ஆங்கிலேயர்கள் இந்தியா வந்து, வீட்டில்/கொல்லைப்புறத்தில் கழிப்பறையை உண்டாக்கியபின்னர்தான். கழிவை எடுக்கும் தொழிலைச் செய்தவர்கள் “தீண்டத்தகாதவர்கள்” என்று தவறாக ஒதுக்கிவைக்கப்பட்டார்கள்.

    எனவே, இக்கதை நடக்கும்சமயத்தில் “தீண்டத்தகாதவர்கள்” என்று ஒரு குமுகம் தோன்றவேயில்லை.

    கதையை எப்படிவேண்டுமானாலும் விமர்சிக்க அனைவருக்கும் உரிமையுண்டு. இதில் தேவையின்றி சாதியை ஏற்றத்தாழ்வு என்னும் பிளவை ஏற்படுத்துவது, அதுவும் உயர்சாதி/தலித் என்ற தேவையில்லாத ஒரு விமர்சனத்தை எழுதுவது சரியானதல்ல.

    நான் முன்பு “தகுதி யாருக்கு?” என்ற கதையை எழுதும்போது, அது கொலலர்களைப்பற்றிய கதை என்று யாரும் விமர்சிக்கவில்லை. அதில்வந்த காளிமுத்துவின் நிலையும், தனது நிலையம் ஒன்று என்று எழுதியவர்களும் உண்டு.

    அதுபோலவேதான் ரவி அவர்களும் இக்கதையைப்பற்றி கருத்துப் பதிந்துள்ளார்.

    // இந்த கதையில் வரும் காமாட்சியின் நிலைதான் என் பாட்டனாருக்கும். அவரை கரை சேர்க்க நடந்த கலாட்டாவை என் தாய் சொல்லி கேட்டிருக்கிருக்கேன். இத்தனைக்கும் அன்று இறந்த என் பாட்டனார் அந்த ஊரின் பள்ளி ஆசிரியர். கரை சேர்க்க கை கொடுத்தது ஒரு பாய். ..சில சமயம் வாழ்க்கை கதைகளை விட விசித்திரமானது.//

    ரங்கன் அவர்களே, நான் எந்தவொரு பின்னூட்டத்தையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை. மழை இடம்பார்த்துப் பெய்வதில்லை; இடத்தைப்பொறுத்தே நீரின் தன்மை அமைகிறது. Sunnygreenன் புரிதல் அப்படிஎன்றால், அது என்னைச் சாராது. Sunnygreen தான் ஒரு பிராமணர் என்பவர் போலவும், ஒட்டுமொத்தமாக அக்குமுகத்தை குறைசொல்லியும் எழுதியுள்ளார். அவர் அக்குமுகத்தைச் சேர்ந்தவர் என்று யாரறிவார்? எனவே, அது அவரது கருத்து என்று விட்டுவிடவேண்டியதுதான்

    கடைசியாக, உயர்திரு சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களே, குமுகம் என்றால் community என்றுதான் தமிழ்-ஆங்கில அகராதி கூறுகிறது.

  10. //என்ன சாமி, இப்படிக் கேக்குறீக? சாமிமாரு வூட்டுல கேதம் விழுந்தா, அங்கிட்டு நா போகலாங்களா? சும்மா உட்டுடுவாகளா?” என்று அவர் சொன்னதைச் தான் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதைத் தெரிவித்தான்.

    “ஆமாம். அது ஒண்ணுதான் இந்த ஊருக்குக் கொறச்சல்! கட்டையிலே வச்சதுக்கு அப்பறம் வேகவைக்கறதையும் இவனுகளே செய்வானுங்களா? அப்பமட்டும் தலையாரி வேணாமா இவனுகளுக்கு!” என்று அலுத்துக்கொண்டவர், “ஒனக்குத்தான் கண்ணும் காதும் தீட்சண்யமாச்சே! தள்ளிநின்னு பாத்து, என்ன விவரம்னு தெரிஞ்சுண்டு வா. பார்வதி, என் கைத்தடிய எடுத்துக்கொடு, எங்கேயோ மறந்து வச்சிட்டேன்!” என்று தன் தங்கையும் அதேகுரலில் விரட்டினார்.//

    இவ்வரிகள் கருப்பன் ஒரு தீண்டத்தகாதவனாகவே பார்க்கப்படுகிறான். அவனும் தன்னை அப்படியேதான் உணர்கிறான் என்பது என் புரிதல். சாமி என்ற சொல்லே ஆண்டான்-அடிமை காலத்துச் சொல். பிராமணரகள் என்று வரும்போது ஆண்டான்-அடிமை என்று சொல்லாமல், உயர்ஜாதியினர் எனச்சொல்லலாம்.

    தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே 10 நூற்றாண்டு முன்பேயே முன் இருந்தததகாக ஆழ்வார்கள் சரிதம் சொல்கிறது. நாயன்மார்கள் காலத்தில் இருந்தததாக பெரிய புராணம் சொல்லும்.

    நம்பாடுவான் – இவர் காலம் முதலாழ்வார்கள் காலத்திற்கும் முன்பு நடந்தது – ஒரு தலித்து (இன்றைய சொல்லின். அன்றைய சொல்லின் ஒரு பறையர்) திருக்குறுங்குடி நம்பி மீது தாளாத பக்தி கொண்டவர். ஆனால் கோயிலுக்குள் மட்டுமன்றி, ஊருக்குள்ளே நுழையமுடியாதபடி அவர் சாதிக்குக் கட்டுபாடு. எனவே ஊரடங்கிய பின் எவருக்கும் தெரியாமல் ஊருக்குள் நுழைந்து, கோயில் கொடிமரத்துக்கு முன் நின்று பாசுர மழை பொழிந்துவிட்டு, ஊர் எழுவதற்கு முன் ஓடிவிடுவார். மேலும் கதையை பேராசிரியர் இராமனுஜத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் பார்த்துக்கொள்ளவும். ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி இரவன்று அந்நாடகம் திருக்குடியிலும் திருவரங்கத்திலும் அரங்கேற்றப்படுகிறது. அந்நாடகத்தில் வரும் திருக்குறுங்குடி நம்பி கருடனின் மேலமர்ந்து வரும் காட்சியே மறைந்த வெங்கட் சாமிநாதனின் இறுதிக்கட்டுரையில் போடப்பட்டிருக்கிறது.

    திருப்பாணாழ்வார் கதை தெரியும். திருவரங்கனாரின் மேல் காதல். ஆனால் திருவரங்கத்துக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்ட பாணர் ஜாதியினர். எனவே காவிரி ஆற்றங்கரையிலிருந்தே பாடினார். நந்தனார், தில்லைக்குள்ளே நுழைய முடியாத நிலை. தில்லையில் முதன்முறையாக நுழையும்போது நடுங்கினார் என்றே எழுதுகிறார் சேக்கிழார். ஆக, தீண்டாமை அக்காலத்தில் இருந்தது என ஆழ்வார், நாயன்மார் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

    வந்த பின்னூட்டங்கள் 17ம் நூற்றாண்டு கதையை இக்கால மாற்றுநிலைகளிலிருந்தே பார்க்கின்றன.

    ஆர்தோடாக்ஸ் வாழ்க்கை நிலைகளை பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் பார்க்கலாம். இக்கதையும் வந்த பின்னூட்டங்கள் சிலவும் நெகட்டிவாக பார்க்கலாமென தெரிவிக்கின்றன.

    யாராவது ஒருவர் பாசிட்டிவாக பார்க்கும் கதையை இங்கு போட்டால் நன்று.

  11. ‘நான் முன்பு “தகுதி யாருக்கு?” என்ற கதையை எழுதும்போது, அது கொலலர்களைப்பற்றிய கதை என்று யாரும் விமர்சிக்கவில்லை. அதில்வந்த காளிமுத்துவின் நிலையும், தனது நிலையம் ஒன்று என்று எழுதியவர்களும் உண்டு.”
    Sorry sir, you are missing the point. Brahmin bashing in the main stream media and movies is very prevalent in TN for yonks and your story only affirms this sorry saga. There is no such bashing of other castes in TN. Exactly, what is the purpose of this story?
    Will you sir, dare to write similar IMAGINARY story on the Muslim community with Immam coveting and lusting over a young girl? Just wondering.
    The intention not to hurt a particular community from your part is laudable but does your story reflect this sentiment sir?
    Just because in your previous story no objections were raised about a particular caste, can it be or should it be a justification to pen a story which essentially demeans the Brahmin community?

  12. நண்பர் பாரி அவர்களுக்கு,
    “இதுபோன்ற உதிரி மேற்கோள்களை கொண்டு செய்யப்படும் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. எனவே அவற்றை நீங்களே நீக்கி விடலாம்.”

    இவற்றில் எவை எல்லாம் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் என்பதை சற்று தெளிவு படுத்த முடியுமா?

  13. ” நாட்டை /சமூகத்தை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.நாட்டை விட்டுப் போகிறேன்.” என்றெல்லாம் சொல்வோர் நாட்டினால் அதீதமாக பலன் அடைந்தவர்கள். அப்படியும் நாட்டை வெறுக்கும் கனவான்கள் விருது திருப்புவோரின் சிஷ்யகோடிகள்.

    காங்கிரசும், தீரும் விட மாயையும் தலை விரித்து ஆடிய போதும் பாதிக்கப் பட்டோர் ஒருநாளும் இப்படி சொன்னது இல்லை.

    உண்மையான சமூக அக்கறையும் , ” வெட்கப் படுகிறேன்” நக்கலில் புலப்படும் சமூக வெறுப்பும் வேறு வேறு. அறிவுலகத் திருப்பிகள் ஓவர் ஆக்டிங் செய்து இந்த உத்தி சிரிப்பை சிரிக்கிறது.மாத்தி யோசிக்கவே மாட்டாங்க சில பேர்.

  14. மேலே சொன்ன ” வெட்க ” நாடகங்கள் ஒரு புறம். நேருவிய காலத்திலிருந்து சாஸ்திரத்தை சொந்த ஆதாயங்களுக்காக வளைத்த கெட்ட பிராமணர்கள் vs நல்ல சீர்த்திருத்தர்கள் கதைக் கரு மற்றும் களமே இங்கும் பேசப் பட்டிருக்கிறது. புதிது ஏதும் இல்லை.

    மற்ற 97% சமூகத்தைப் பற்றி ஆராய்ந்து எழுத… .ஜாதி பற்றிய அவர்கள் நிலை என்ன? என்ன சாத்திரங்கள் , ஏன் கடைப்பிடித்தார்கள் ??ஊஹூம்.. அவசியமேயில்லை.

    பதினைந்து அல்லது பதினாறு , பருவம் அடையும் வயதாக இருந்த காலத்தில் அதற்கு முன்பே கல்யாணம் செய்து வைத்து விடுவது எல்லா சமூகத்திலும் வழக்கம் தான் அப்போதெலாம். அதற்கு அடுத்தடுத்து வந்த அடக்கு முறை அந்நிய ஆட்சிகளும் ஒரு பெருங்காரணம். இதையெலாம் கதைக் களமாகக் கொண்டால் ..?
    அது முடியாது ஏனென்றால் அது சமீபத்திய சிறுகதை சாத்திரத்தில் வராது.

    எனக்கு தெரிந்த சமூகத்தைப் பற்றி நான் எழுதுகிறேன் . அதிலென்ன தவறு ? என்று சொன்ன எழுத்தாளர்களும் உண்டு. என்ன சமாதானம் சொன்னாலும் அவர்களும் அங்கீகரிக்கப் பட்ட சிறுகதை ” சாத்திரத்தை ” பின்பற்றியது தெளிவு.

    மழை பேதம் பார்க்காமல் பெய்யும். இங்கே பெய்தால் கொண்டாடுவார்கள் , அங்கே பெய்தால் வம்பு என்று நினைப்பது இல்லை. கோபால புரத்திலும் அச்சமின்றிக் கொட்டித் தீர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *