அடுத்த வீடு

அடுத்த வீட்டிற்கு யாரோ வரப் போகிறார்கள் என்ற செய்தி மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.  அப்பொழுது எனக்கு எட்டு வயசிருக்கலாம். 65 வருடங்களாகி விட்டன…

வண்டியிலிருந்து மடிசார்கட்டிய ஒரு மாமியும் மாமாவும் இறங்கினார்கள்.

மாமி ஒடிசலாக – தீர்க்கமான மூக்கில் வைர எட்டுக்கல் பேசரியும், மூக்குத்தியும், வைரத்தோடும், பெரிய குங்குமப்பொட்டுமாக பார்க்க வரலக்ஷ்மி அம்மனைப்போலிருந்தாள். மாமா நல்ல நிறம் – வெள்ளைக்காரர்களைப்போல, அசப்பில் நேருவைப்போல் இருந்தார்.

அவர்களோடு வீணையும் வந்து இறங்கியது. நான் முதன்முதலாக வீணையை அப்பொழுதுதான் நேரில் பார்த்தேன். ஸரஸ்வதி படத்தில் பார்த்திருக்கிறேனே தவிர நிஜத்தில் பார்த்ததில்லை.

கொஞ்சநாள் கழித்து அவர் தக்ளியிலும் ராட்டையிலும் நூல்நூற்றதைப் பார்த்தேன். என் தகப்பனாரும் இரண்டிலும் நூல்நூற்று நான் பார்த்திருக்கிறேன். மாமி பெயர் ராஜேஸ்வரி. மாமா பெயர் ஜகந்நாத ஐயர் என்றும் சொன்னார்கள்.

இரவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தெருவில் கட்டில்போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவரும் கலந்துகொள்வார். மாமியின் தங்கை பெண்கள் ஊரிலிருந்து வருவார்கள். அவர்களோடு விளையாடப் போன நானும் அவர்களைப்போலவே மாமியைப் பெரியம்மா என்றே கூப்பிட ஆரம்பித்தேன்.(இப்பொழுது எல்லோருமே ஆண்ட்டிதான்!)

நாள்கள் செல்லச் செல்ல அவர்களைப்பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

மாமியின் அப்பா அந்த ஊரிலேயே பெரிய வக்கீலாகயிருந்தாராம். பீட்டன் வண்டி வைத்திருந்தாராம். அவர் பெயர் சொன்னால் ஊரே கட்டுப்படுமாம். மாமி இங்கு வந்தபோது அவர் இல்லை. மாமி தன் பிறந்தவிட்டுக்கு வந்திருகிறாள். மாமியின் அம்மாவும் மாமிகூட இருக்க வந்திருக்கிறாள்.

அந்தக் காலத்தில் பெண்கள் வெளியில் போய் படிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் மாமிக்கு வீணை, வாய்ப்பாட்டு, இங்லீஷ், ஸம்ஸ்க்ருதம் எல்லாத்துக்குமே தனித்தனி வாத்தியார்களை ஏற்பாடுசெய்து, வீட்டிலேயே டியூஷன் வைத்திருந்தார்களாம். அதுக்கப்புறம் ஹிந்தி பிரசார சபையின் தீவிர பிரசாரத்தால் மாமியும் ஹிந்தி படிக்கக் கற்றுக்கொண்டாள்.

மாமி பேசுவதைக் கேட்கவே சங்கீதம்போல் இனிமையாக இருக்கும். ஒருநாள் மாமியின் தங்கை பெண்ணும் என் தோழியுமான வசந்தாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சில விஷயங்களைச் சொன்னாள்.

”எங்க பெரியப்பா பெரிய வக்கீலாக்கும்; மதுரைல நல்ல பெரிய வக்கீலா ப்ராக்டீஸ் பண்ணிண்டிருந்தார். அப்ப ரொம்பக் கஷ்டமான ஒரு கேசுக்காக, ராத்திரி பகல்னு பாக்காம ரொம்ப வேலை பார்த்தாராம். ராத்திரியெல்லாம் முழிச்சிண்டே இருந்ததனால அவருக்கு ஒடம்பு சரியில்லாமப் போயிடுத்து. பெரியம்மா பாவம். இனிமே இங்கதான் இருப்பான்னு நெனைக்கிறேன்” என்றாள்.

“பெரியம்மா ரொம்ப நன்னா வீணை வாசிப்பா. ரொம்ப நன்னா பாடுவா. ஆனா இப்பல்லாம் பாடறதும் இல்லை. வீணையும் வாசிக்கிறதில்லை!” மாமி பாடிண்டே வீணைவாசிச்சா எப்படியிருக்கும்?   நான் யாருமே வீணை வாசிக்கறதப் பார்த்ததேயில்லை. கேட்டதும் இல்லை.

சிலசமயம் மாமா தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பார். வெளியில் வருவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. சில நாள் அவர் சத்தம் அதிகமாகக் கேட்கும்.

மாமியின் அம்மாவும் அவர்கள்கூடவே இருந்தாள். அவரை மன்னிப் பாட்டி என்றே எல்லோரும் கூப்பிடுவார்கள். ஏன்? தெருவுக்கே அவர் மன்னிப்பாட்டிதான்!

சில நாள் மாமா ரொம்பவும் சத்தம்போட்டுக் கத்தினால் மனவருத்தத்தில் ஏதாவது சொல்லிவிடுவார் மன்னிப் பாட்டி. மாமியின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும்.

இந்த வயதில் மன்னிப்பாட்டியின் மனவருத்தம் எனக்குப் புரிகிறது.

மதுரையிலிருந்த மாமாவின் பெரிய வீட்டிலிருந்து மாமிக்கு வாடகை வரும். நிலபுலன்களிலிருந்தும் வருவதை மாமாவின் தம்பி அனுப்பிவைப்பார்.

நான் எஸ்.எஸ்.எல்.சி எழுதிய வருஷம் லீவில் சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்தஸ்வாமிகள் எங்கள் ஊருக்கு வருகைபுரிந்தார். மாமியும் அவளுடைய மன்னியும் சேர்ந்து ஸ்வாமிகளுடைய பூஜையில் கமலாம்பா நவாவரணக் கீர்த்தனைகளைப் பாடினார்கள். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் அக்கீர்த்தனைகள் அவ்வளவாகப் பிரபலம் அடையாத காலம். ஆனால் மாமி அந்தப் புத்தகத்தைக் கல்லிடைக் குரிச்சியிலிருந்து தருவித்து அதிலிருந்து தானும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள்.

ஒரு நவராத்திரியன்று மாமியின் அண்ணா வீட்டில் மாமி அத்தனை பாட்டுகளையும் வீணையோடு பாடியதைக் கேட்டதிலிருந்து என் அம்மாவுக்கு, நான் எப்படியாவது அந்தப் பாட்டுக்களைக் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீவிர எண்ணம். என் பரீட்சைகளெல்லாம் முடிந்த உடனே அந்த லீவிலேயே நவாவரணப் பாட்டுகளை மாமியிடம் கற்றுக் கொள்ள அம்மா ஏற்பாடுசெய்துவிட்டாள்.

எங்கள் இருவரது வீட்டு உள்வாசலில் திண்னை இருந்தது. பின்னாட்களில் அதை உள்ளடக்கி வெளியே நீட்டி அழிபோட்டுக் கட்டியிருக்கவேண்டும். இரண்டு வீட்டுத் திண்ணைக்கும் நடுவில் பிரப்பம்பாய்த்தட்டி ஒன்று வைத்து மறைத்திருந்தார்கள். நாங்கள் அதைப் பிய்த்துப் பிய்த்து ஒருவர் தாராளமாகப் போகும்படி செய்துவிட்டோம். மழை, பனி காலத்தில் இரவு வாசல் கதவைப் பூட்டிவிட்டு அம்மாவும் மாமியும் திண்ணையில் இந்தப் புறமும் அந்தப் புறமுமாக உட்கார்ந்து பேசுவார்கள்.girl

வெயில் காலங்களில் அழிக்கு வெளியே உள்ள வாசல் திண்ணையில் காற்றுக்காக உட்கார்ந்திருக்கும் போது (வீட்டில் ஃபேன் கிடையாது) ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் ’அங்க்’ என்ற மலர் வரும்.. அதில்தான் படித்த ஹிந்திக் கதைகளையெல்லாம் மாமி சொல்லுவாள். நானும் கதை கேட்டபடியே தூங்கிவிடுவேன்.

அம்மா மாமியிடம் ஸ்லோகங்கள் கற்றுக்கொண்டது ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம். மாமியிடம் ஸௌந்தர்ய லஹரி, சிவானந்தலஹரி, லலிதா ஸஹஸ்ர நாமம். த்ரிசதை. வெங்கடேச சுப்ரபாதம். ஸ்யாமளா தண்டகம். கனகதாரா ஸ்தோத்திரம் எல்லாமே கற்றுக்கொண்டாள். அந்த ஈடுபாட்டால் பின்னாளில் அர்த்தத்தோடுகூடிய புத்தகங்களை வாங்கி ஆர்வத்தோடு படிக்கலானாள். மாமி கற்றுக்கொடுத்ததை மனப்பாடம்செய்து என்னிடம் ஒப்பித்துக் காட்டுவாள் அம்மா.

மனப்பாடம்செய்ய உதவியாக அடுக்களைக் கதவில் சாக்பீஸால் பெரிதுபெரிதாக நான் எழுதிக் கொடுப்பேன். கதவுதான் போர்டாகச் செயல் பட்டது! கண்ணாடியைத் தேடி புஸ்தகத்தைத் தேடிப் படிப்பதைவிட அடுக்களையிலிருந்து போகும்போதும் வரும்போதும் கதவிலிருந்து பார்த்து மனப்பாடம் பண்ணுவது அம்மாவுக்கு எளிதாக இருந்தது.

அம்மாவின் ஆர்வத்தை பார்த்து மாமியே ஆச்சரியப்படுவாள். ’’ஆனாலும் உனக்கு ஆர்வம் அதிகம்! இந்த ஆர்வத்தினால்தான் நீ வேகமாக மனப்பாடம் பண்ணி என்னை முந்திப் போகிறாய்.” என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

எல்லாமே மாமி சொன்னால்தான் அம்மவுக்குத் திருப்தியாக இருக்கும்.

அன்று காலை ஊரிலிருந்து பாட்டிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று பெரியப்பா எழுதிய கடிதம் வந்தது. அன்று ஏதோ பண்டிகை. ஊருக்குப் போய் பாட்டியைப் பார்த்துவிட்டு வரும்படி அம்மா சொன்னாள். அப்பா ஏதோ வேலையிருக்கு 2,3 நாள் கழித்து சனி ஞாயிறு லீவில் போய்ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னார்.

ஆனால் அம்மாவோ, ”வயசானவாளப் போய்க்கூட ஒரு தரம் பார்த்தால் என்னவாம்?” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள் (இந்தக் காலம்போல் உடனுக்குடன் போன்பண்ண முடியாதே!)

மத்தியானம் நாலு மணிக்கு பாட்டி காலமாகி விட்டதாகத் தந்தி வந்தது. நான் தந்தியை வாசித்துச் சொன்னதில் அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை. உடனே மாமியிடம் போய் தந்தியைக்காட்டி நான் சொன்னது சரிதானா என்று நிச்சயம்செய்துகொண்டாள்.

மாமாவின் கத்தல் அடிக்கடி கேட்க ஆரம்பித்த்து. அவர் கார்டில் ஏதாவது எழுதி ரகசியமாகத் தந்து போஸ்ட்செய்யச் சொல்வார். முக்கியமாக மாமிக்கும் மன்னிப் பாட்டிக்கும் தெரியக்கூடாதென்பார். நாங்கள் எல்லோருமே சரி சரி என்று சொல்லி வாங்கிக் கிழித்துப்போட்டு விடுவோம். லெட்டர் ஒருவருக்கு எழுத ஆரம்பித்து விலாசம் வேறொருவருக்கு இருக்கும்! அதில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதியிருப்பார்.

அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார்.  சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே? அரையணா சாமான் எங்கே?” என்று கேட்பார்.  வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன்.

சில நாள் மாமி பாட்டுச் சொல்லிக் கொடுக்க முடியாதபடி ஆகிவிடும். ‘இவளுக்கு ஒண்ணுமே தெரியாது. நான் சொல்லித் தருகிறேன் பார்,’ என்று தொடையில் தாளம் போட்டுக் கொண்டு, ‘’நாதோபாசனா” என்று பாட ஆரம்பித்துவிடுவார்.

எத்தனையோ நாள்கள் மாமி தோசை வார்த்துக்கொண்டே எனக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்ததை இன்று நன்றியறிதலோடு நினைத்துக்கொள்கிறேன். அவர்கள் காசுக்காகக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆத்மார்த்தமாக்க் கற்றுக்கொடுத்தார்கள்.

ஒருநாள் மாமா ரொம்பவும் அதிகமாக கூச்சல்போட்டதில் நடுராத்திரி கீழே விழுந்துவிட்டார். மாமி உடனே தட்டிவழியாக அம்மாவைக் கூப்பிட்டாள். அம்மாவும் அப்பாவும் போய் மாமாவைத் தூக்கி கட்டிலில் படுக்கவைத்தார்கள். மண்டையில் அடிபட்டு ரத்தம் வேறு!  அப்பா உடனே சைக்கிளில் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.

எப்படியோ நானும் ஒரு வழியாக நவாவரணக் கீர்த்தனைகளை மாமியிடமிருந்து கற்றுக்கொண்டுவிட்டேன்! எங்கள் தெருவில் உள்ளவர்கள் மற்றும் என் தோழிகள் எல்லொருமே, “நீ எப்படி மாமி ஆத்துக்குப் போய்ப் பாட்டு கத்துக்கறே? ஒனக்கு மாமாகிட்ட பயம் இல்லையா?” என்று கேட்பார்கள்.

சின்ன வயசிலேந்து பழகியதாலோ என்னவோ அவரைப்பற்றிய பயமே தோன்றியதில்லை.

அம்மா என்ன பக்ஷணங்கள் பண்ணினாலும் ஸ்வாமி நைவேத்தியத்திற்கு அப்புறம் மன்னிப் பாட்டிக்குத்தான் கொடுப்பாள். “பாவம், வயசானவா! ஏதாவது சாப்பிடணும்போல இருக்கும். குடுத்துட்டு வா” என்பாள்.

முறுக்கு, தட்டை பண்ணும்போதெல்லாம் மன்னிப் பாட்டிக்குக் கடிக்கமுடியாதென்பதால் வேகாத முறுக்கு தட்டைகளைக் கொடுத்தனுப்புவாள். மன்னிப் பாட்டியும் அவர் திடமாக இருந்தபோது எத்தனையோதரம் முறுக்குச் சுற்றி அம்மாவுக்கு உதவிசெய்திருக்கிறாள். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்த காலம் அது! சம்பளத்திற்கு ஆள் தேடும் வழக்கம் கிடையாது. மன்னிப் பாட்டியால் முறுக்குச் சுற்ற முடியாமல் போனபின் அம்மா அவருக்காக ஸ்பெஷலாக வேகாத முறுக்கு தட்டைகளை எடுத்து மறக்காமல் கொடுத்தனுப்புவாள். பொரித்த அப்பளம்கூட நான் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறேன்.

”மாமாவுக்கு ரெண்டு மூணு நாளா ஒடம்பு சரியில்லை, ராத்திரி எல்லாம் தூங்கவேயில்லை. மாமி என்ன செஞ்சாளோ? நீ போய் இந்த அவியலையும், குழம்பையும் குடுத்துட்டு மாமிகிட்ட சாதம் தரட்டுமான்னு கேட்டுண்டு வா” என்று என்னை எத்தனையோ நாள் அனுப்பியிருக்கிறாள்.

எங்கள் வீட்டில் நாங்கள் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அம்மாவுக்கு எவ்வளவோ வேலை இருந்தாலும் மாமிக்கு உதவிசெய்ய அம்மா எப்போதுமே தயார்! என்னைப் பெண் பார்க்க வந்த அன்று மாமிதான் அம்மாவுக்குக் கூடமாட உதவியாக இருந்தாள். அதைவிட என்னைப் பாடச்சொன்னபோது மாமிதான் என்கூட மெல்லிய குரலில் நவாவரணம் பாடியதை என்னால் மறக்கவே முடியாது, (ஐம்பத்தாறு வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும்).

நான் திருமணமாகிச் சென்றபின் ஊருக்கு வரும்போதெல்லாம் மன்னிப் பாட்டியிடமும் மாமியிடமும் போய் நமஸ்க்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வேன்.  மன்னிப்பாட்டி காலமான பின் மாமியின் தங்கை பையன் மாமிக்குத் துணையாக இருக்க வந்தான். என் தம்பிகூடப் படித்தான்.

மாமா காலமான செய்தி கேட்டு நான் துடித்துப் போனேன். மாமியைப் பார்க்க எனக்குத் தாங்கவில்லை. மாமாவின் காரியங்களெல்லாம் கழிந்தபின் மாமியின் இன்னொரு தங்கை பையனோடு சேலம் போய் விட்டதாக அம்மா சொன்னாள். அடுத்த வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டார்கள்.

சுமார் இருபத்தைந்து வருடங்களாக இருந்த தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்கள் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போனதும், வயது வித்தியாசமும் ஒரு காரணமாயிருக்கலாம்.

என் கணவர் அகால மரணமடைந்த சேதி கேட்டு மாமி எனக்கு ஆறுதல்சொல்லி கடிதம் எழுதியிருந்தாள். மாமியால் தனியாகப் பிரயாணம்செய்ய முடியவில்லையாம். நேரில் வரமுடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தாள்.

நான் காரைக்குடி போயிருந்தபோது என் நாத்தனார்மூலம் மாமி காரைக்குடியில் தன் அக்கா பேத்தி வீட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பார்க்கப் போனேன். வெகுநேரம் பழைய கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

நான் கிளம்பும் சமயம் மாமி எனக்குக் குங்குமம் தந்தாள். என் கணவர் காலமாகி விட்டது மாமியின் மனதில் ரிஜிஸ்டர் ஆகவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். வயதாகி விட்டதல்லவா? அவர் மனதைக் கலவரப்படுத்த நான் விரும்பவில்லை.

மாமியை நான் காரைக்குடியில் பார்த்து ஐந்தாறு வருடங்கள் இருக்கும்.

நான் பாளையங்கோட்டையில் இருந்தபோது மாமி எதிர்பாராதவிதமாக போன்செய்தார். மாமியின் அக்கா பேரன் சேரன்மாதேவியில் இருப்பதாகச் சொன்னாள். எங்களுடன் (என் அம்மாவும் என்கூட இருந்தாள்) வந்து இரண்டு நாள் தங்கினாள். அக்கா பேரன் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனான். அடுத்தடுத்த வீட்டில் இருந்த பழைய நாள்களை மூவரும் அசைபோட்டோம். மாமி எங்களுடன் இருந்த இரண்டு நாள்களும் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள்.

“இங்கயிருக்கறது சோலைல இருக்கறாப்ல இருக்கு,” என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள்.

மாமி அவள் அக்கா பேரன் வீட்டில் அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்று புரிந்துகொண்டேன். ஒரு பக்கம் மாமி புகழ்ந்து சொன்னது சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது. மாமி மிகவும் தளர்ந்துதான் இருந்தாள். அவருடைய மீதி நாள்கள் அமைதியாகக் கழியவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்.

இரண்டு மாதம் கழித்து நான் டில்லி போய்விட்டு வந்தபோது மாமி அநாயாச மரணம் அடைந்துவிட்டதாகக் கேள்விப்பட்டபோது மனது ஒருவிதத்தில் நிம்மதியடைந்தது. நல்லவேளையாக மாமி அதிகமாகப் படுக்கையில் கிடக்காமல் போனாரே என்று இறைவனுக்கு நன்றி சொன்னேன். மாமி அம்மாவின் அடுத்த வீட்டுக்காரி மட்டுமில்லை. ஃப்ரண்ட், பிலாஸபர், கைடு!

மாமியின் அநாயாச மரணம் பற்றிக் கேட்டவுடன் அம்மா, “பகவானே! எனக்கும் இதேபோல் அநாயாச மரணம் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தாள். இரண்டு வருடம் கழித்து அம்மா விரும்பியபடியே அவளுக்கும் தூக்கத்திலேயே அநாயாச மரணம் கிடைத்துவிட்டது.

சென்ற வாரம் ஊருக்குப் போயிருந்த போது நாங்கள் வசித்த வீட்டைப் பார்க்கப் போனேன். நாங்கள் இருந்தது வாடகை வீடுதான் என்றாலும் நாற்பது வருடங்களாக அந்த வீட்டில் இருந்ததால் அதுதான் எங்களுக்குச் சொந்தவீடுபோல் தோன்றும். இரண்டு வீடுகளுமே மிகவும் மாறிப்போயிருந்தன!

அந்த அடுத்தடுத்த வீடுகளில் இருப்பவர்கள் நாங்கள் இருந்ததைப்போல் இருப்பார்களா? தெரியவில்லை.

***   ***   ***

7 Replies to “அடுத்த வீடு”

  1. கண்ணீரோடு படித்தேன். எங்களுக்கும் நாங்கள் இருந்த வீடுகளில் இப்படியான அனுபவங்கள் நேர்ந்தது உண்டு. அந்தக்காலங்களில் மனிதர்கள் மனிதர்களாகவே இருந்தனர். இப்போதெல்லாம் விருந்தினர் வந்தாலே கேட்பது வைஃபை இருக்கா? அலைபேசியை சார்ஜ் செய்ய வசதி இருக்கா? வாட்ஸப் வைச்சுக்கலையா என்பது தான். நாங்க இன்னும் வாட்ஸப் வசதி எல்லாம் உள்ள அலைபேசி வைச்சுக்கலை! இதைப் பலரும் பல முறை கேட்டுட்டாங்க. இப்போல்லாம் இது இருக்கிறவங்களோடத் தான் நட்பே வரும் போல! முன் போல மனிதரை மனிதர் நேசிக்கும் காலம் எப்போ வரும்? 🙁

  2. எந்த வகையில் படித்தாலும் திகத தமிழியம் அருமையான ஒரு கட்டுரை . படிக்க படிக்க நல்ல ஒரு மகிழ்ச்சியை கொடுத்த அருமையான நயம் மிக்க pathippu. அந்த நட்ட்களில் நாம் யாவரும் evvaru தானே erunthom. .

  3. கண்ணீரோடு தான் நானும் படித்தேன். இந்த மாதிரி ஸந்தர்ப்பங்கள் இப்போ உள்ளவர்களுக்குக் கிடைப்பதில்லை. வாழ்க பாரதம்.

  4. உறவும் நட்பும் இறைவன் கொடுத்தவரம் என்று புரிகிறது. அம்மையார் ஜயலக்ஷ்மி தமிழ் ஹிந்துவில் கட்டுரைகளோடு இதுமாதிரி நல்லக்கதைக்களையும் எழுதவேண்டுகிறேன்.

  5. நானே வாழ்ந்த உணர்வு பெற்றேன். மிக அருமை.

  6. உறவும் நட்பும் இறைவன் கொடுத்தவரம். மிக அருமை.

  7. அருமையான கதை. எனது சிறுவயது நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகின்றன. ஹ்ம்ம் அப்படி ஒரு நட்பே இப்போது இருப்பதில்லையே? மிக அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *