தவிர்த்திருக்கலாம்..
யாரோ, எப்படியோ அடித்துக்கொண்டு சாகட்டும் என விட்டுவிட்டு பேசாம போயிருக்கலாம்.
இரண்டுபேர் அடித்துக்கொள்ள, நடுவே மூக்கை நுழைத்து மத்தியஸ்தம் செய்யப்போக “ நீ யார்றா?” என்று கேட்கப்படுவது யதார்த்தம். அதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் “நீ இந்த ஊர்க்காரன். இந்த ஜாதியன். அதனால்தான் அவனுக்கு சாதகமப் பேசறே” என்ற வார்த்தைகள் கொஞ்சம் அடித்துவிட்டன. அடித்துக்கொண்ட இருவரும் சமாதானமாகப் போய்விட்டார்கள். ‘கோவத்துல என்னமோ பேசிட்டேன். சாரி” என்று சொல்லிவிட்டு திட்டியவனும் போய்விட்டான். அடையாளம் சொல்லி அடிப்பதென்பது நமது மக்களூக்கு கை வந்த கலை.
ஒரு குறுகுறுப்போடுதான் டெராடூனுக்கு அலுவலக வேலையாகப் போய்வந்தேன். அங்கிருந்து போண்ட்டா ஸாஹிப். 45 கிமீ தூரம். இமாசலபிரதேச எல்லையில். உத்தரகாண்ட்- இமாசல எல்லையாக யமுனா நதி ஓடுகிறது. யமுனை தீரத்தில் போண்ட்டா ஸாஹிப் குருத்வாரா- சீக்கியர் கோவில் (Gurudwara Paonta Sahib) கோவிலும், புனித நூலும் ஸாஹிப் என்றே மரியாதையுடன் அழைக்கப்படும்.
இரண்டு நாள் போண்ட்டாஸாஹிப்-ல் ஒரு கம்பெனியில் வேலை. முதல் நாள் மாலையில், காலாற நடந்து போண்ட்டாஸாஹிப் கோயிலை அடைந்தேன். மனம் கனத்துக் கிடந்தது. அடையாளம்.. நீ ப்ராஜெக்ட் மேனேஜர். நீதான் இந்த கேடுகெட்ட வேலையை சுத்தம் செய்து எடுக்கவேண்டும். நீ ஸீனியர். .. எனவே வாடிக்கையாளர் சொல்லும் ஒவ்வொரு சுடுசொல்லையும் நீதான் கேட்கவேண்டும். நீ இந்த மதத்தவன். பிற மதத்தவர் என்ன சொன்னாலும் பொறுமையாகக் கேட்டுப் போ. நீ இந்த ஜாதி… உனக்கு இங்கு வேலை கிடையாது. வேணும்னா இந்த வேலையைச் செய்.
நான் யாருமல்ல என்ற நிலையில் என்னை மனிதனாக எவன் மதிப்பான்? மதிப்பார்களா? அடையாளங்களற்ற நிலையில், அஜ்நபியாக, அயலானாக ஒருவன் நின்றால், அவனுக்கு என்ன அடையாளம்… அயலான் என்றா?
”ஸர்ஜீ, தலையில் கர்ச்சீஃப் கட்டுங்கள்”
ஒரு சிறு பெண் தனது கடைக்கு அழைத்தாள். கைக்குட்டைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சிகப்பு, வெள்ளை.. சீக்கியச் சின்னம் பொறித்தது, கர்ச்சீப் வாங்கிக்கொண்டு, கட்ட முடியாமல் திணறுவதைப்பார்த்து, சிரித்தபடி ஒருவர் தானே வாங்கிக் கட்டிவிட்டார். “ நீங்கள் மதராஸியா? பாத்தாலே தெரியுது. ஸாஹிப் மிகப் புனிதமானது. நீங்கள் அதிருஷ்டசாலி”
போண்ட்டாஸாஹிப் சீக்கியர்களூக்கு மிக முக்கியமான தலங்களில் ஒன்று. காஞ்சி, சிதம்பரம் , மதுரை என்பது போல..பொற்கோயில் ஹர்மந்திர் ஸாஹிப், அனந்தபூர் ஸாஹிப் (இங்குதான் கலிஸ்தானிய Anantapur Sahib resolution நிறைவேற்றப்பட்டது). அதன்பின் வருவது புகழ்பெற்ற போண்ட்டாஸாஹிப் . இங்கு குரு கோவிந்த் சிங் பல வருடங்கள் தங்கியிருந்து சங்கீத், உபன்யாசம் போன்றவற்றைச் செய்தீருக்கிறார். போண்ட்டா ஸாஹிப்பை சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டவுடன், பெரிய கோட்டை போன்ற அமைப்பை எழுப்பி, அங்கு இந்த கோயிலை நிறுவி அவர் தங்கியிருந்திருக்கிறார். அவரது சொந்த ஆயுதங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன. (சில திருடப்பட்டுவிட்டன என்கிறது கோயில் பதிவேடு.).
உள்ளே நுழையும்போது கவனித்தேன். ஷு, செருப்பு வாங்கி வைப்பதில் இருந்து பல வேலைகளையும் தன்னார்வலர்களே செய்கிறார்கள். எங்கும் “ ஸ்பெஷல் தர்ஷன்.. ரூ 500 ஆவும்” என்று எவரும் வந்து கிசுகிசுக்கவில்லை. சிறுபள்ளத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் கால் நனைத்து உதறி உள்ளே சென்று, மவுனமாக ஒரு மூலையில் அமர்ந்தேன். நெய் வழிய வழிய , ’மூடநெய் பெய்து முழங்கை வழிவார’ சூடான கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது. என்னைத் தவிர அனைவரும் , வெளியே இருந்து அதே கேசரியை ஒரு இலைக்குப்பியில் வாங்கி வ்ந்து பெரிய அண்டாவில் நிறைத்தார்கள். அதைத்தான் பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கிறார்கள். ”கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என்று , பகிர்ந்து உண்டு மகிழுமாறு, இதைத்தான் ஆண்டாள் சொன்னாள்.
சே, இப்படி வெறும் கையோடு வந்துவிட்டோமே? என்ற குற்ற உணர்வில் திரும்பிப் பார்த்தேன். யாரும் வந்தவழியில் திரும்பிச் செல்லவில்லை. சரி, சுற்றி வரவேண்டும் போலிருக்கு என்று பிரதட்சணமாக வந்த போது, திடீரென அனைவரும் எழுந்து அப்படியே நிற்க, சில பாடல்களைப் பாடியபடி ‘வாஹே குரு, வாஹே குரு, வாஹே குரு” என்று பெரிய குரு சொல்ல, ஒரு முரசு அதிர்ந்தது. டம், டம் என்ற அதிர்வும், வாஹே குருவும் சேர்ந்து ஒரு ஒத்ததர்வில் ( resonance)ல் உடலெங்கும் ஒரு அதீத உணர்வு பரவ நின்றிருந்தேன்.
அதன்பின் மீண்டும் சுற்றி வந்து வணங்கி அமர்ந்தட போது மற்றொரு சடங்கைக் கவனித்தேன். என் அருகே அமர்ந்திருந்த வறுமை வியாபித்திருந்த இரு கிழவிகள், ஆளுக்கொரு நாணயத்தை காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஐம்பது பைசாவிலிருந்து , கணக்குத் தெரியாத கற்றைகளாக ரூபாய் நோட்டுகளை பலர் காணிக்கையாக செலுத்திக்கொண்டிருந்தனர். வந்த எவரும் காணிக்கை செலுத்தாது அமரவில்லை. அவரவர் சக்திக்கு ஏற்றார்ப்போல் காணிக்கை. அதன்பின்னரே பிரசாதம். தானமாக, இரவலாக அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை- எதையும்.
வெளியே யமுனையின் சில்லிப்புடன் காற்று உடலைத்தழுவ சிறிது நேரம் நின்றிருந்தேன். ஒரு வறட்சி உள்ளே ஓட, மெல்ல நடந்தபோது பெரிய வாணலி ஒன்று தெரிந்தது. மிகப்பழமையானது. இரு ஆள் அகலமும், ஒரு ஆள் உயரமுமான துருப்பிடித்த, இரும்பு வாணலி. அருகே இருந்த பலகையைப் படித்தேன். குருவின் கிச்சன். Guru ki Langar.
இலவசமாக உணவளிக்கும் இடம். மெல்ல நடந்தேன். சங்கிலிகளால் கட்டி வரிசையை ஏற்படுத்தியிருந்தனர். கூட்டம் அதிகமற்ற நேரம். வரிசையாக பெண்களும் ஆண்களூமாக தட்டுகளைக் கழுவி வைக்க, சிலர், கை கழுவும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஒரு தட்டும், டபராவும் எடுத்துக்கொண்டு வரிசையில் தரையில் சப்பணமாக அமர்ந்தேன். என் அருகில் இருந்தவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர். இடதுபுறம் கட்டிடத் தொழிலாளி ( இது அவர்களது பேச்சில் தெரிந்து கொண்டது).
ரொட்டி, ரொட்டி “ என்று கொண்டு வந்தவரிடம், அருகில் இருந்த ரிக்ஷா ஓட்டுனர், கைகளைத் தூக்கி யாசிப்பது போலக் காட்டினார். இரு ரொட்டிகளை அவரிடம் தந்துவிட்டு என்னிடம் இரு ரொட்டிகளை நீட்டினார். நான் கைகளை மாற்றி வைத்து வாங்கிக்கொண்டேன். மற்ற அனைவரும், யாசிப்பது போலவே கைகளை மரியாதையாக நீட்ட, கொடுப்பவரும் பயபக்தியுடன் கொடுத்தார்.
கட்டிடத் தொழிலாளி என்னைத் தாண்டி மற்றவரிடம் சொன்னார் “ இது குருவின் சமையலறையில் இருந்து வரும் பிரசாதம். இதனைக் கை காட்டி, யாசித்தே பெறவேண்டும். அன்புடன் வழங்கப்படும் அன்னம் இது”
மற்றவர் ஆமோதித்தார். நான் யார்? என்ன ஜாதி, என்ன மதம், என்ன வேலை செய்கிறேன்? ஒரு கேள்வி இல்லை. குருவை நம்பி உள்ளே வந்திருக்கிறாயா? உனக்கும் உண்டு அன்னம்.
எதிரே இளம் தம்பதியர் இருவர் வந்து அமர்ந்தனர். அவர்கள் பணம் படைத்தவர்களாக இருக்கவேண்டும். யார் அருகே இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை. பயபக்தியுடன் ரொட்டியை கை நீட்டிப் பெற்றார்கள்.
இது யாசிப்பல்ல.. என விளங்க சில நிமிடங்களாயிற்று. கோயிலினுள்ளே பிரசாதத்தையே , நன்கொடை அளித்தபின்னே ஏற்றுக்கொள்பவர்கள்.. தெருவில் பிச்சை எடுப்பதை அனுமதியாதவர்கள் எப்படி ,ரொட்டி யாசிக்க முடியும்> இது குருவின் பிரசாதம். அதற்கான மரியாதை, தங்குதடையின்றிப் பரவிய அன்பிற்கு, மனித நேயத்திற்கு கொடுக்கப்பட்ட மரியாதை. நான், என்ற சுய கர்வம், அடையாளம் கரைந்த நிலைக்கு ஆயத்தம்.
என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?
எழுந்திருக்கும்போது,கால்வலியில் தடுமாறினேன். ஒரு மாதமாக கால் முட்டு வீங்கி படுத்தி எடுக்கிறது. தள்ளாடி நடக்கையில், ஒரு இளைஞன் ஓடி வந்தான். “ஸர்ஜீ, தட்டை என்னிடம் கொடுங்க”
‘வேணாம்ப்பா” மறுத்தேன். “நானே கழுவுகிறேன்”
“ஸர் ஜீ. நாங்க செய்கிறோம். பரவாயில்லை.” தட்டை வாங்கிக்கொண்டு கைபிடித்து , கைகழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். “வழுக்கும், பார்த்து”
அங்கு ஒரு சர்தார்ஜி இளைஞர் வாரியலால், மற்றொருமுறை சுத்தம் செய்து “இங்க கை அலம்பலாம்” என்பது போல் கைகாட்டினார்.
“எச்சித்தட்டெல்லாம் நான் அலம்ப மாட்டேன். இட் ஈஸ் வெரி டர்ட்டி.உவ்வே” என்ற பிள்ளையிடம், “பரவாயில்லம்மா. தட்டை டேபிள்ளயே வைச்சுட்டு போ. நான் எடுத்துக்கறேன்” என்ற அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது.
வெளிவரும்போது காணிக்கை கவுண்ட்டரில் ஆள் இல்லை. ”நான் எதாவது காணிக்கை கொடுக்கவேண்டும்.ஆள் வரட்டும்” என்றேன். ஒருவர் உள்ளே சொல்ல, அங்கிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜி “ காணிக்கையை உண்டியல்ல போட்டுட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். நான் காணிக்கை செலுத்தினேனா, எவ்வளவு ? என்றெல்லாம் பார்க்கவில்லை.
பேண்ட் பாக்கெட்டில் எவ்வளவு பைசா இருந்ததோ அத்தனையையும் உண்டியலில் கவிழ்த்தேன். அது காணிக்கையல்ல. சாப்பாட்டுக்கு விலையல்ல. யமுனையின் குளிர்ச்சியை முகந்துகொண்டு வருடித் தழுவிய காற்றாக ஓடிவந்த அன்பிற்கு மாற்றுச் சீர்.
வெளியே வரும்போது மனம் லேசாகியிருந்தது. அடையாளமற்று கரைவதிலும் சில நேரம் சுகம் உண்டு. அனைத்துக்கரைப்பான் நீர் என்று கெமிஸ்ட்ரியில் படித்திருக்கிறோம். அனைத்துக் கரைப்பான் வேறு ஒன்று உண்டு. அது எல்லையற்ற இம்மரபு வழி பொங்கிப் பெருகும் அன்பு.
(போண்ட்டா ஸாஹிப்பில் குருவின் சமையலறை என்ற குரு-க்கி லங்கர்-ல் உணவு உண்ட அனுபவம் பற்றியது இது. இதன் பின்னணி சற்றே திரிக்கப்பட்டது எனினும், உணர்வுகள் உண்மையானவை)
அன்பின் ஸ்ரீ சுதாகர் கஸ்தூரி. உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதியப்பெறும் சீக்கிய சமயம் சம்பந்தமான முதல் வ்யாசம் என அறிகிறேன்.
உணர்வுகளால் நிரம்பிய வ்யாசம். படிக்கப் படிக்கக் கண்கள் பனித்தன.
ஸ்ரீ நகர், டோடா, ஜம்மு, லே(ஹ்) க்கு அருகில் பத்தர்சாஹேப் குருத்வாரா இங்கெல்லாம் வழிபட்டிருக்கிறேன். இயன்ற கைங்கர்யத்தையும் செய்திருக்கிறேன். எந்த குருத்வாராவிலும் வரும் தர்சனார்த்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இருப்பிடம், உண்ணுவதற்கு உணவு இவற்றை மிகவும் அன்பு மிக அளிப்பதை சீக்கியர்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடு ஹிந்துஸ்தானம் முழுதும் உள்ள குருத்வாராக்களில் காணப்படும்.
வாஹே குரு ஜீ கா கால்ஸா வாஹே குரு ஜீ கீ ஃபதே
Hail the Khalsa who belongs to the Lord God! Hail the Lord God to whom belongs the victory
சுதாகர் கட்டுரியகள் அனைத்துமே அருமை.
Dr.Umesh
இந்து மதம் தேசிய அளவில் சீக்கிய கோவிலை பின்பற்றி பொிய மாறுதல்களைச் செய்ய வேண்டும். முறையான வாழ்கை்கை நெறியில் இந்துக்களை ஈடுபடுத்தும் போது சமூக பிாிவினைகள் ஏற்படுவது ?? சீக்கியா்கள் இந்துக்கள் என்ற பிாிவினை ஏற்பட்டது வருந்தத்தக்கது ? காலத்தின் சவாலை சந்திக்க இந்து சமூகம் தன்னில் இருந்து உருவாக்கிய ஒரு பாிணாமமே சீக்கிய மதம். இந்த பாிணாமம் இந்து சமூகத்தின் மூலை மூடுக்கெல்லாம் சென்று சேரவில்லை. சாதிகள் ஒழிய தக்க நடவடிக்கைகள் ஏதும் இல்லை.இந்துக்களின் மனித வளம் பொருளற்ற சமக சடங்குகளில் கனத்தில் விரரமாகிக்கொண்டிருக்கின்றது.
Superb sudakar ji…bala Kumar kumbakonam….