தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இத்தேர்தல் மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்று கூறி இருக்கிறார். “இதுவரை நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். இம்முறை, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளிடமிருந்து ஆட்சி மாற்றம் ஏற்படாதா என்ற ஏக்கத்துடன் வாக்காளர்கள் சிந்திப்பதைக் காண முடிகிறது. தமிழக மக்கள் திராவிடக் கட்சிகளுக்கு முடிவு கட்ட இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்” என்றும் மோடி கூறியுள்ளார்.
உண்மைதான். இந்த தேர்தல் இதுவரை நடந்த தேர்தல்கள் போலில்லை. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என்ற விஷ வட்டத்துக்குள்ளேயே தமிழக அரசியல் சுழல்வதால்தான் இங்கு ஊழலை ஒழிக்க முடியவில்லை. இங்கு தேர்தல் என்பது இரு பணபலங்களுக்கு இடையிலானதாக கடந்த 30 ஆண்டுகளாக மாறிவிட்டது. தேர்தலில் வெல்ல பணம் முக்கியமான ஆயுதம் என்பதைக் கண்டுகொண்ட திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, அடுத்த தேர்தலுக்கான நிதி ஆதாரத்தை குவிக்கத் தொடங்கி விடுகின்றன. அதுவே ஊழலின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம். இதில் திமுக, அதிமுக- இரு கட்சிகளில் யார் பெரியவர் என்ற போட்டியே உண்ட
ஊழலில் குவித்த காசை அள்ளி இறைத்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற நிலைமை தான் இன்னமும் தமிழகத்தில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இரு பிரதான கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் மக்களைத் திரட்ட செலவிடப்படும் பணம் எங்கிருந்து வருகிறது? நாட்டில் வேறெங்கும் இல்லாத காட்சியாக, தினந்தோறும் கணக்கில் இல்லாத பணம் கோடிக் கணக்கில் பறிமுதல் செய்யப்படுவது எதைக் காட்டுகிறது? இப்போதும் கூட, தேர்தலுக்கு முந்தைய நாள்களில் எப்படியும் வீட்டுக்கு வீடு ‘லஞ்சப்பணம்’ பட்டுவாடா ஆகிவிடும் என்று மக்களே எதிர்பார்ப்பது உண்மையா இல்லையா?
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் முறையற்ற பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதை அறியாத அப்பாவி பொதுமக்களும் வர்த்தகர்களும் தான், வாகன சோதனைகளில் சிக்குண்டு தங்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள். கரூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே அரசியல்வாதிகளின் பணம் பெருமளவில் சிக்கி இருக்கிறது.
அரசியல் கட்சிகள் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல, தேர்தல் ஆணையத்திடம் பிடிபட. ஆயினும், பணம் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சரக்குப் பெட்டக லாரிகளிலும் கடத்தப்படுவதாக ஆளும் கட்சி மீது திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்று சும்மாவா சொன்னார்கள்?
மொத்தத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கை முழுமையாக நம்புவதற்கு உரியதாக இல்லை. ராஜேஷ் லக்கானி தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் இதுவரை கைப்பற்றியதைவிட பல மடங்கு பணத்தை தேர்தலுக்கு முந்தைய நாள்களில் பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும். இதில் திமுக- அதிமுக பேதம் இருக்காது. காங்கிரஸும் கூட பல இடங்களில் பணத்தை வாரி இறைக்கத் தயாராகவே உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வருமா? பிரதமர் மோடி கூறியிருப்பது போல, தமிழக மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள் என்பது உண்மையே என்றாலும், இத்தேர்தல் களத்தில் அதற்கான பண்படுத்தப்பட்ட காட்சிகள் குறைவாகவே உள்ளன. இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையின் வெளிப்பாடு தான் இம்முறை உருவாகியுள்ள ஐந்துமுனைப் போட்டி. ஆனால், இதனால் ஆளும் அதிமுகவுக்கே சாதகமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒருபுறம் அசைக்க முடியாத அதிகார பலத்துடனும் பணபலத்துடனும், ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமையின் தலைமையில் அதிமுக தனி பவனி வருகிறது. அதன் கூட்டணிக் கட்சியினர் உள்பட 234 தொகுதிகளிலுமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எதிர்த்தரப்பிலோ, திமுக அணி, பாஜக, பாமக, மக்கள் நலக் கூட்டணி என்று அதிமுகவை எதிர்க்கும் சக்திகள் நான்கு முனைகளில் சிதறி இருக்கிறார்கள்.இவர்களில் ஓரளவேனும் வெல்லும் சாத்தியம் உள்ளவர்கள் திமுக அணிதான் என்ற நிலைக்கே மக்கள் வழக்கம் போலத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிமுகவா, திமுகவா என்ற ஒற்றைக் கேள்வி வரும்போது அதன் உச்சபட்ச ஆதாயம் அதிமுகவுக்கே கிடைக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த நிலையை உருவாக்கியவர்கள் வைகோவும் ராமதாஸும் தான். ராமதாஸின் அதிகாரப்பசி, தனது மகனை முன்னிறுத்தும் துடிப்பு ஆகியவையே, அக்கட்சி தனி அணியாக களமிறங்க வித்திட்டுள்ளன. அதேபோல, அதிமுகவை விட திமுகவையே பரமவைரியாகக் கருதும் வைகோவின் திட்டமிட்ட முயற்சியால், மூன்றாவது அணி என்ற பெயரில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் வலுவற்ற அணி உருவாகி இருக்கிறது. அதில் தேமுதிகவும் தமாகாவும் சேர்ந்தது, இரு திராவிடக் கட்சிகளுக்கான மாற்று அரசியலை உருவாக்கும் வாய்ப்பைத் தகர்த்தது. அந்த வாய்ப்பு பாஜக- பாமக- தேமுதிக அணியாக இருந்திருக்க வாய்ப்புகள் இருந்தன. அப்படி ஒருநிலை ஏற்பட்டிருந்தால், தற்போது மூன்றாவது அணி என்ற பெயரில் வலம் வரும் கட்சிகள் அனைத்தும் ஏதாவதொரு திராவிட அணியில் ஐக்கியமாகி இருக்கும். அப்போது மக்களிடையே நிதர்சனமான மூன்றாவது அணி தென்பட்டிருக்கும். இனி அதைப் பற்றி எழுதி பிரயோசனமில்லை. ஆனால், அதற்கு காரணம் யார் என்பதை தேர்தலுக்கு முன் சிந்திக்க வேண்டியது அவசியம் அல்லவா?
இப்போது எதிர்ப்பார் அனைவரும் தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் சூழலில், கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையுடன், அதீத பணபலம, தொண்டர்பலம், அதிகார பலத்துடன் முன்னைவிட வேகமாகச் செயல்படுகிறார் ஜெயலலிதா. மீண்டும் ஜெயலலிதாவா, கருணாநிதியா என்ற சூழல் ஏற்பட்டிருப்பது இத்தேர்தலில் ஒரு பின்னடைவே.
ஆனால், இம்முறை மக்கள்நலக் கூட்டணியும் பாமகவும் பாஜகவும் இரு திராவிடக் கட்சிகளின் வாக்குகளில் பெரும்பங்கை கபளீகரம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ம.ந.கூ- தேமுதிக-தமாகா கூட்டணி குறைந்தபட்சம் 15 சதவீத வாக்குகளைப் பெறும்; பாமக குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளைப் பெறும்; பாஜகவும் கூட தனது வாக்கு சதவீதத்தை 8 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் எதிரணி பெறும் வாக்குகளில் சுமார் 30 சதவிகிதம் இக்கட்சிகளால் பங்கிடப்படும். இது ஒரு கணிப்பு.
அதாவது, திமுக, அதிமுகவின் வாக்கு வங்கிகளில் இம்முறை ஓட்டை விழுவது நிச்சயம். தவிர, ஒரு கோடி புதிய வாக்களர்களில் பெரும்பகுதி இவ்விரு கட்சிகளுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மீதமுள்ள 70 சதவிகித வாக்குகளில் அதிமுக- திமுக கட்சிகள் கைப்பற்றும் வாக்குகளே தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். இது உண்மையில் மக்கள் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்காது என்றாலும், நமது தேர்தல் நடைமுறையில் இதற்கான வாய்ப்புகளே உள்ளன. ஏனெனில், ஆட்சி மாற்றத்துக்கான் உண்மையான உள்ளக்கிடக்கையுடன் எந்தக் கட்சியும் இங்கு போட்டியிடவில்லை. அனைவருக்குமே தங்களை முன்னிறுத்துவதில் தான் ஆர்வம் இருக்கிறது. இவர்களுக்கு ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
தேர்தல் களத்தின் கடைசிநேரக் காட்சிகளின் படி, அதிமுக முன்னணியில் உள்ளது. தினமலர்- நியூஸ் 7 கருத்துக் கணிப்பு திமுகவுக்கு சாதகமாகக் கூறப்பட்டாலும், அது அந்த ஊடகங்களின் ஆசையையே வெளிப்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப சில ஊடகங்கள் துடிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மக்கள் மனநிலையில் அதற்கான சுவடுகள் இல்லையே.
அதிமுகவை அடுத்து திமுக கூட்டணி துரத்திக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணி பிசுபிசுத்துவிட்டது. அதன் தலைவர்கள் வெளியிடும் பேச்சுகள் ஊடகங்களில் இடம் பெறுவதுடன் சரி, அதுதவிர வேறெந்த மாற்றமும் காணக் கிடைக்கவில்லை. தேமுதிகவின் வேகமும் மட்டுப்பட்டுவிட்டது. பணபலம் இல்லாவிட்டால் மனபலம் குறைவது இயற்கை தானே? உளுந்தூர்ப்பேட்டையில் அக்கட்சி முடங்கிவிட்டது வைகோவோ, ஜெயலலிதாவைவிட கருணாநிதியைத்தான் அதிகமாக வறுத்தெடுக்கிறார். பாமக, பாஜக ஆகியவை சீராக இயங்கினாலும், அவற்றின் வேகம் அதிமுக, திமுகவுக்கு இணையாக இல்லை.
ஆயினும், ஒவ்வொரு கட்சியும் தானே ஆட்சி அமைப்பாக முழங்குவது அற்புதமான நகைச்சுவைதான். இதில் உச்சகட்டம் 220 தொகுதிகளில் பாமக வெல்லும் என்ற மருத்துவர் ராமதாஸின் பிதற்றல். கோடை வெயில் அவரையும் படுத்திவிட்டது. பாஜக தனது சக்தியை உணர்ந்து சுமார் 20 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்துகிறது. இனி வரும் நாள்களில் கட்சிகளின் பிரசார அணுகுமுறையை விட, வாக்குச்சாவடிக்கு மக்களைக் கொண்டுசேர்க்கும் திட்டங்களே முக்கிய பங்கு வகிக்கும்.
மொத்தத்தில், திராவிடக் கட்சிகளுக்கு முடிவு கட்டும் வகையில் இத்தேர்தல் அமையவில்லை என்பது ஏற்றே ஆக வேண்டிய நிதர்சனம். அதேசமயம், இம்முறை எந்தக் கட்சியும் அதீதப் பெரும்பான்மையுடன் கோலோச்ச முடியாது என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையிலேயே இனிவரும் காலத்தில் கூட்டணிச் சேர்க்கைகள் அமையும். அந்த வகையில் இத்தேர்தல் முக்கியமான தேர்தலே.
கணிப்புகள் ஒருபுறம் இருக்கட்டும். நாம் என்ன செய்யப் போகிறோம்? ஏதேனும் ஒரு ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டப் போகிறோமா? அல்லது, கொள்கை சார்ந்து சிந்தித்து, மாநில எதிர்காலத்தை ஆலோசித்து, மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறோமா?
மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள்? உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா? வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா? தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா?
உங்கள் தேர்வு பாஜகவாக அமையுமானால், அடுத்த தேர்தலிலேனும், இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிரான வலுவான அணி அமைய சாத்தியம் உள்ளது.
இரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப, திராவிட, இடதுசாரி, சுயநலச் சிந்தனையல்லாத மாற்று அரசியல் துளிர்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பே இந்தத் தேர்தல். இதை நிறைவேற்றுவது இனி உங்கள் பொறுப்பு!
சொகுசு காரில் ஆரவாத்துடன் சஞ்சரித்தால் சாமான்யன் ஒட்டு கிடைக்குமா? அடிப்படை வேலை செயத சங்கத்தவரை நேற்று முளைத்த பா ஜ க வினர் இந்நாளில் மறக்கலாமா?உள்ளூரிலே வேலை செய்ய வேண்டாமா?மணவாளக்குறிச்சி சதீஷ் தந்தை இறந்த போது எந்த பா ஜ க வினர் துக்கம் விசாரித்தனர்?
நன்கு ஆழ சிந்திக்க தூண்டும் கட்டுரை. தமிழ் மாநிலத்தின் இன்றைய அவல அரசியல் உண்மை நிலையை பிரதிபலிக்கும் கருத்துக்கள். ப.ஜ.க.வும் திராவிட கட்சிகளின் சினிமா தன விளம்பர உத்தியைதானே பின் பற்றுகிறது. ப.ஜ.க.வின் தேர்தல் பிரசாரங்களை பார்க்கும்போது திராவிட கட்சியைவிட வித்தியாசமாக தெரியவில்லையே? மிக சிறிய கும்பல்தான் என்றாலும் அதற்கும் இவர்கள் கூலிக்கு ஆள் வைத்துத்தானே நடத்துகிறார்கள். அந்த சிறிய கும்பலுக்குகூட ப.ஜ.க.வின் உண்மை தொண்டர்கள் இல்லையே.! தவிரவும் பா.ஜ.க.வும் ஒரு காலத்தில் தி.மு.க.- அ.தி.மு.க .என்று கூட்டணி வைத்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் பாணியிலேயே கூத்தடித்தவர்கல்தானே ! இந்த 2016 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடைக்குமா என்று அலைந்தவர்கள்தானே! கேவலம் அரசியலில் அரிச்சுவடி கூட படிக்காத விஜயகாந்த் பின்னால் அலைந்தவர்கள் தானே. காரணம், தன்னம்பிக்கை இல்லாமல் , சினிமாகாரன் பின்னால் சென்றால் ஜெயித்துவிடுவோம் என்கிற அல்ப ஆசைதானே.! மக்கள் இதை அறியாதவர்கள? இந்த தேர்தலில் எதோ கொஞ்சம் வாக்கு கிடைக்கும் என்றால் அது தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளால் கண்டிப்பாக கிடையாது. அது பிரதமர் நரேந்திர மோடி என்கிற ஆத்மாவால் மட்டுமே.
எனவே, எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்காட்சியாக வருமா என்பதும் சந்தேகமே. தமிழக மக்கள் மாற்று கட்சி ஆட்சியை எதிர் பார்கிறார்கள் என்பது உண்மையே. அது, அ.தி.மு.க.- தி.மு.க என்கிற இரு நாசக்கார கட்சியும் அவர்களுடன் கூட்டு கூத்து அடிக்காத, வேறொரு நேர்மையான சேவை செய்யும் பாங்குடைய கட்சியை எதிர் பார்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.
நடப்பது சட்டசபை தேர்தல். இருக்கும் முதல்வர் நீடிக்கட்டுமா அல்லது வேறு பதிலியை முதல்வர் நாற்காலியை அமர்த்தலாமா என்பது தான் முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
ஜே-வுக்கு இன்றைய தேதியில் பதிலி இல்லை என்பதே உண்மை. திமுகவை ஒரு பெரிய குடும்ப தீய சக்தியாகவே மக்கள் இன்றுவரை பார்க்கிறார்கள். கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொல்லி , இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதாக நடித்த கருணா , மீண்டும் மகளுக்கு ராஜ்யசபா பதவி பெற , இந்திரா குடும்பக் காலில் விழுந்தார். இலங்கை தமிழர் துரோகத்தின் கதை இன்னமும் தொடர்கிறது.
இந்திரா காங்கிரஸ் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுயேட்சைகளை விட குறைவான வாக்குகளையே பெறும். விதிவிலக்காக கன்யாகுமரி மாவட்டத்திலும், ஓசூரிலும் மட்டும் சிறிது கூடுதல் வாக்குகளை பெறும். இந்திரா காங்கிரசை கூட்டு சேர்த்ததால், திமுகவுக்கு ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் சுமார் 5000- ஒட்டுக் குறையும். சொந்தக் காசிலேயே திமுகவினர் சூடு வைத்துக் கொண்டனர்.
டூ ஜி ஊழல் வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை பிரச்சார மேடையில் ஏற்றாமல், ஒய்வு கொடுத்து வைத்திருந்தால், திமுகவுக்கு சிறிதாவது கூடுதல் வாக்கு கிடைத்திருக்கும்.
அதிமுகவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்குமே திமுக இருப்பதால் தான் கிடைக்கிறது. திமுக இல்லை என்றால் அதிமுகவுக்கு ஓட்டே விழாது. ஜூன் மூன்றாம் தேதி நெருங்குகிறது. மேமாதம் 19-ஆம் தேதி முடிவுகள் வந்தவுடன் தமிழனுக்கு திட்டு ஏராளம் வர இருக்கிறது.
பாஜக வருவான் வடிவேலன் என்று விஜயகாந்த் பின்னால் அலைந்து ஏமாந்து போனது தான் மிச்சம். தனியே போட்டியிடும் எண்ணமே இல்லாமல் எவனாவது கூட்டணிக்கு வருவானா என்று தொங்கியதை பார்த்து தமிழகமே நகைத்தது. ஒரு ராமதாசும், ஒரு சைமனும் 234- தொகுதியிலும் போட்டியிடும்போது , பாஜக தக்க முன்னேற்பாடு இல்லாமல் ஏமாந்துபோனது வருந்த தக்கது.
தனித்து போட்டியிடுவது என்ற முடிவை ஒரு வருடம் முன்பே எடுத்து செயல்பட்டிருந்தால், நிச்சயம் ஒரு பதினைந்து இடங்களை பிடித்திருக்க முடியும். இப்போதோ ஓரிரு இடங்கள் கூடக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சூழலே உள்ளது. கன்யா குமரியிலாவது ஓரிரு தொகுதி கிடைக்குமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வேதாரண்யம் தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று ஒரு தமிழ் வாரம் இருமுறை தேர்தல் கணிப்பு கூறுகிறது. அதுவாவது உண்மையாக மாறட்டும் என்று எல்லோரும் முருகப்பெருமானை வேண்டுகிறார்கள்.
கன்யா குமரி மாவட்டம், கோவை, திருப்பூர் பகுதிகள் தவிர , தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள பாஜக ஆதரவு ஓட்டுக்கள் இந்த தேர்தலிலும் ஜே- பக்கமே போய்விடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் எரியிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் விதமாக, திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையில் , இந்து கோயில் சொத்துக்களை , அந்த சொத்துக்களை அனுபவித்து வருபவரிடமே விற்றுவிட ஒய்வு பெற்ற ஒரு நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து , நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் வக்ப் போர்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளரை விரட்டிவிட்டு, வக்ப் போர்டு வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் , பாஜக ஆதரவு ஓட்டுக்கள் திமுக தோற்கடிக்கபட்டே ஆகவேண்டும் என்ற காரணத்தால் அதிமுகவுக்கே போய்விடும் நிலை இந்த தேர்தலிலும் தொடர்கிறது. அதே போல ஆறு நபர் கூட்டநியாகிய விஜயகாந்த் , வாசன், வைகோ, திருமா, வலது, இடது -குழுக்கள் அடங்கிய அணிக்கு ஓட்டுபோட நினைக்கும் பலரும் ,அந்த அணி தேறாது என்று தெரிந்துவிட்டதால் , அதிமுகவுக்கே வாக்களித்து விடுவார்கள்.
பாமகவும், சீமானும் தாங்களும் எல்லா தொகுதியிலும் முடிந்த அளவு ஓட்டுக்களை பிரித்துவிட்டோம் என்று திருப்தி பட்டுக் கொள்வார்கள். படுகொலை செய்யப்பட லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களின் ஆவிகள் ஊழல் கூட்டணியான திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணியை சுற்றிக்கொண்டு உள்ளதால், அந்த கூட்டணி வெற்றி வாய்ப்பை இழப்பது உறுதி.
முந்திய பதிவில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5000 ஒட்டு குறையும் என்று மாற்றி படித்துக்கொள்ளவும்.
அன்பின் ஸ்ரீ ஸ்வாமி
\\ மிக சிறிய கும்பல்தான் என்றாலும் அதற்கும் இவர்கள் கூலிக்கு ஆள் வைத்துத்தானே நடத்துகிறார்கள். அந்த சிறிய கும்பலுக்குகூட ப.ஜ.க.வின் உண்மை தொண்டர்கள் இல்லையே.! \\
பாஜக என்றுமே கூலிக்கு ஆள் சேர்த்து கும்பல் காண்பித்ததில்லை.
இந்த தேர்தலில் பன்முனைப்போட்டி என்று இருப்பதால் பல இடங்களில் வெற்றிகளை தமிழக பாஜக எதிர்நோக்குகிறது.
கும்பல் இருந்த இடங்களில் காண்பிக்கக் கூடாது என்று கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் விலைபோன ஊடகங்கள் செய்தி காண்பித்து விடுவதால் பாஜக ப்ரசாரம் செய்த இடங்கள் அனைத்திலும் கூட்டம் இல்லை என்று கருத்துப் பகிர்வது தவறான தகவல்.
\\ தவிரவும் பா.ஜ.க.வும் ஒரு காலத்தில் தி.மு.க.- அ.தி.மு.க .என்று கூட்டணி வைத்து அவர்களுடன் சேர்ந்து அவர்கள் பாணியிலேயே கூத்தடித்தவர்கல்தானே !\\
தனிப்பெரும்பான்மை என்பது எட்டாக்கனி எனும்பொழுது எட்டிக்காயுடன் கூட்டு சேர்வது என்பது தவிர்க்கவே முடியாதது.
தீராவிடத்துடன் பாஜக கூட்டணி சேர்ந்தது என்பது கசப்பான விஷயம் தான். அப்படிப்பார்த்தால் காஷ்மீரத்தில் பிடிபி யுடனான நிர்ப்பந்தக் கூட்டணி கூட கூத்து தான். ஆனால் மாற்று ஏற்பாடுகள் இதை விட மோசமாக இருக்கலாம் என்பதனையும் ஒதுக்கிவிட முடியாது.
\\ இந்த 2016 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடைக்குமா என்று அலைந்தவர்கள்தானே! கேவலம் அரசியலில் அரிச்சுவடி கூட படிக்காத விஜயகாந்த் பின்னால் அலைந்தவர்கள் தானே. \\
அண்டை மாகாணமான கேரளத்தைப் பார்க்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிலைமை விசனத்தைத் தருகிறது தான்.
இத்தாலி காங்க்ரஸ் போல பாஜகவும் கழகக்குதிரை மீது சவாரி செய்வது போகாத ஊருக்கான வழி தான் என்பது என் புரிதல். அந்தக் கழகம் இந்தக் கழகம் என்று வித்யாசமே வேண்டாம். தீராவிடச் சுவடு உள்ள எந்த ஒரு இயக்கமுமே தமிழகத்துக்கு கேடு விளைவிக்கத் தக்க இயக்கம் என்பதில் சம்சயமே வேண்டாம். எச்ச மிச்சமில்லாமல் …………. அடிச்சுவடு இல்லாமல் அழித்தொழிக்கப் பட வேண்டிய நச்சுக் கிருமி தீராவிடம்.
கசப்பான பாடங்களும் வளரும் ஒரு அரசியல் கட்சிக்குத் தேவை தான். கற்ற பாடம் மறக்காமல் இருந்தால் வளர்ச்சி நிச்சயம்.
இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை விட யாருக்கு நிச்சயமாக அளிக்க கூடாது என்பதே மிக்கியமாகிறது. ஏனென்றால் ஜனநாயகத்தில் மக்களுக்கு கொடுக்க படும் வாய்ப்போ உள்ளத்திலிருந்து தேர்ந்தெடு என்ற கட்டுபடுத்த பட்ட உரிமையே. தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளை ஒவ்வொன்றாக எடைபோட்டால், நிச்சயம் நம் உள்ளதில் நல்லது எது என்று கண்டுபிடித்து விடலாம்.
முதலில் திமுக. இந்த கட்சி 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊழலில் திளைத்து அதில் ஒரு ஆராய்ச்சியே செய்த கட்சி. சரி ஊழல் எங்கு தான் இல்லை யார் தான் ஊழல் செய்யவில்லை என்ற வாதத்தை என்றுகொண்டு இந்த கட்சியை ஆதரிக்கலாம் என்றால், பல ஞாபகங்கள் நம் மனதில் தோன்றி மிரட்டு கின்றன. இக்கட்சியின் தலைவரின் ஆட்சி சரித்திரத்தை ஆராய்ந்தால், இவருக்கு நாடு சார்ந்த விஷயங்களில் தீவிர கொள்கை பற்று எப்பொழுதும் இருந்ததில்லை. உதரனத்திற்க்கு அணு உலை பற்றியோ, அந்நிய முதலீடு பற்றியோ கேட்டால் அவ்வப்போது தோன்றும் கருத்துகளை சொல்வார். திடீரென்று இலங்கை பாசம் வெடிக்கும் வந்த சுவடிலேயே மறைந்து போகும். மாநிலத்திற்கான உரிமைகளை பிடிவாதமாக போராடி பெரும் பாங்கு இவரிடம் இருந்தது இல்லை. ஒருவேளை செய்த ஊழல்களும் சொந்த வியாபாரங்களும் குறுக்கே வருவதாலோ என்னமோ, நேர்மையோடு போராடி பெரும் தைரியத்தை இவரிடம் காண முடியவில்லை. மிக மிக்கிய பிரச்சனைகளில் இவர் போக்கு மிகவும் அலட்சியத்துடன் இருந்துள்ளது. மாணவர்களை போலீஸ் அடிதபோதோ, மீனவர் பிரச்சினையிலோ அல்லது விலைவாசி உயர்வு ஆகட்டும், இவருடைய கையாளும் விதம் மரியாதையாக கூறினால் ரொம்பவே சிறுபிள்ளைதனமாக இருந்தது. மேற்படி இவரது கட்சிக்காரர்களின் அராஜகம் போலீஸ் ஸ்டேஷனிலேயே பஞ்சாயத்து போன்றவை அருவருக்கத்தக்கது. புதிய செயலகம் கட்டுகிறேன் புதிய நூலகம் கட்டுகிறேன் என்று வரிபணத்தை அனாவசியமாக அல்லிவிடுவதை தவிர புத்திசாலிதனமாக மக்களுக்கு நன்மை தரும் விஷயங்கள் இவர் செய்தது மிக குறைவு. ஆகவே, திமுக முற்றிலுமாக நிராகரிக்க படவேண்டிய ஒரு கட்சி. சொல்லபோனால், இந்த கட்சி அதன் தலைவருக்கு பிறகு பல்வேறு பிருவுகளாக உடைந்து அழிந்து போனால் நாட்டுக்கு நல்லது.
இரண்டாவது விஜயகாந்த் கட்சி. ஆரம்பத்தில் ஒரு மாற்றாக தோற்றம் கொடுத்தாலும், இவர் தன் நடவடிக்கைகளாலும் குடும்ப அரசியலாலும் தான் வித்தியாசமானவன் இல்லை என்று நிருபித்து இருக்கிறார். மேலும் பல கொள்கைகளில் இவருக்கு ஒரு கருத்து இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கும் நிலையில், இவர் பேச்சுகளை பார்க்கும்போது தகுதி பற்றிய சந்தேகங்கள் ரொம்பவே வருகின்றன. மாநிலத்தை ஆளும் பொறுப்பு அவ்வளவு சாடாரமானது அல்ல. அதற்க்கு சற்றே புத்தி சுவாதீனம் உள்ள நபர்கள் தேவை. இவர் அந்த இடத்தை நிரப்புவார் என்ற நினைப்பிர்க்கே இடமில்லை. ஆகவே இவரும் அவுட்டு.
மூன்றாவதாக அன்புமணி – உள்ளதற்குள்ளே ஓரளவு படித்தவர், மத்திய மந்திரி யாக இருந்த அனுபவம் இவருக்கு கைகொடுக்கிறது. ஆனால், இவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் பயமளிக்கிறது. இவர் வென்றால் இவரை தவிர மற்ற மந்திரிகளை பார்த்து ஊரே நடுங்க வேண்டியிருக்கும்! இவர் இன்னும் சிறிது காலம் பொருத்து, தமிழ்நாடு முழுவதும் உழைத்து மக்களுக்காக போராட்டங்கள் நடத்தி தனக்கெனெ ஒரு குழுவை பயிற்சி கொடுத்து, உருவாக்கி பிறகு மக்களை அணுகினால் 2021இல் இவரை ஆதரிக்கலாம். சொல்லபோனால், தமிழகத்தின் எதிகால தலைவர்களில் இவர் ஒருவர் என்று நிச்சயமாக கருதலாம்.
நான்காவதாக பாஜக மற்றும் காங்கிரஸ். இவை தேசிய கட்சிகள் தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றினையாதவர்கள். இக்கட்சிகள் முதலில் நம்பிக்கையான தலைவர்களை உருவாக்கவேண்டும். அவர்களும் கடுமையாக உழைத்து மக்களுக்காக போராடி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதற்க்கு 10 வருடம் ஏன் 15, 20 வருடங்கள் கூட ஆகலாம். அது வரை இக்கட்சிகள் பொருத்து இருக்க வேண்டும். கூட்டணி வேண்டி அலைந்தது பாஜக வின் பெயரை கெடுத்து விட்டது. இனிமேலாவது, கண்ணியமான அரசியலில் ஈடுபடவேண்டும்.
கடைசியாக,, அதிமுக! ஊழல் கட்சி! அணுகமுடியாத தலைமை! தோய்ந்து வரும் உடல்நிலை இவை யாவும் இக்கட்சியின் மிகபெரிய குறைபாடுகள். திமுகவிடம் ஊழலை மன்னித்த மாதிரி, அதிமுகவையும் மன்னிதொமானால், தலைமை குறைபாடுகளும் மற்றும் முடிவுகள் எடுக்கப்படாமல் ஒரு தேக்க நிலையில் மாநிலம் தள்ளபடுவது போன்ற குறைகள் நம்மை பயமுறுத்தும்! ஒரு வேளை, கோர்டின் தீர்ப்பு சாதகமாக வந்து, எதிரிகள் பலவீனபட்டால், அப்பொழுது அணுகுமுறையில் மாற்றம் தெரியலாமோ?
இன்றைய சூழ்நிலையில், பணம் இல்லாமல் கட்சி நடத்த முடியாது இலவசங்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. இந்த நிலைமைக்கு முற்றும் காரணம் இதையெல்லாம் தொடங்கி வைத்த திமுக தான். ஒருவேளை திமுக அழிந்தால், போட்டி அரசியல் குறைந்து நாளடைவில் நிலைமை சீராகுமோ?
மற்றபடி அதிமுகவின் தலைமையிடம் ஒரு விசயத்தை எடுத்தால் முடிக்க வேண்டும் என்ற வெறியை பார்க்க முடிகிறது. மத்திய அரசை பார்த்து பயந்து போகிற மனம் இல்லாததும், வேறு வியாபார நோக்கங்கள் ஆட்சியில் குறுக்கிடாததும் இந்த கட்சியின் பலன்கள்.
இந்த சூழ்நிலையில், அதிமுக எவ்வளவு தான் மோசமான ஆட்சியை கொடுத்திருந்தாலும், அந்த கட்சியை விட மற்றவை மிகவும் மோசமாக இருப்பதால், இந்த தேர்தலில் வேறு வழில்லாமல், எல்லோரும் அதிமுகவிற்கே ஒட்டு போடவேண்டும். வேறு எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் அது பொறுப்பில்லாத செயலாக அடுத்த தலைமுறையின் நன்மைகளை பற்றி சிந்திக்காத செயலாக இருக்கும்.
இன்று நான் தமிழகத்தில் இருந்தால் பாஜகவுக்குத்தான் ஓட்டுப் போடுவேன். எனக்கு பாஜக, மோடி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஹிந்துத்துவ அரசியலை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரை எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் நிலைமைதான். அம்மா விட்டால் தாத்தா என்ற நிலை மாறியே ஆக வேண்டும். காப்டனும் டாக்டரும் சீமானும் மம்மி, தாத்தா அரசியல் முறையை மாற்றுவார்கள் என்று நான் துளியும் நம்பவில்லை.
ஆனால் பாஜக தமிழகத்தின் நிலையை உணர்ந்திருக்கிறதா? ஜெ கண்ணசைத்திருந்தால் அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்திருப்பார்கள். முக்கியத் தலைவரான சு. சாமி திமுகவுடன் கூட்டு வைக்க முயல்கிறார். காப்டன் கதவைச் சாத்தும் வரை அவர் பின்னாலேயே அலைந்தார்கள். மோடி பிரசாரத்துக்காக தமிழகம் வந்தபோது ஏன் காப்டனுடன் கூட்டு வைக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம். எந்த நம்பிக்கையில் பாஜகவுக்கு ஓட்டு போடுவது? பிற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் ஓட்டு மட்டும் விழுந்தால் பாஜக ஒரு நாளும் வெல்ல முடியாது. பாஜக மீது நம்பிக்கை வைத்து ஓட்டளிப்பவர்கள் பெருக வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார்கள், இது சந்தர்ப்பவாதக் கட்சி அல்ல என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டாம், அதற்கு முயற்சி கூட செய்ய மறுக்கிறார்களே!
சொகுசு காரில் ஆரவாத்துடன் சஞ்சரித்தால் சாமான்யன் ஒட்டு கிடைக்குமா? அடிப்படை வேலை செயத சங்கத்தவரை நேற்று முளைத்த பா ஜ க வினர் இந்நாளில் மறக்கலாமா?மெயின் ரோட்டிலிருந்து உள்ளூரிலே வந்து வேலை செய்ய வேண்டாமா?அடிப்படை சங்க வேலை செயத மணவாளக்குறிச்சி சதீஷ் தந்தை இறந்த போது அவர் வீட்டில் வந்து எந்த பா ஜ க வினர் துக்கம் விசாரித்தனர்?மற்ற கட்சியினரை விட பா ஜ க வினரிடம் நாம் இது போன்ற பண்புகளை அதிகம் எதிர் பார்க்கிறோம்.
(Edited and published)
போனது போகட்டும்.
// சூரிய கதிர்களை பூதக்கண்ணடி கொண்டு ஒருபுள்ளியில் குவியச்செய்து கனல்மூட்டுவதைபோல், 4.34 கோடி (5 கோடி * 87.6%) தமிழிந்துகளின் ஓட்டுகளையும், ஒன்றுதிரட்ட முடியுமா? //
“தமிழ்ஹிந்து” அந்த பூதக்கண்ணாடியாகமுடியுமா?
தமிழகத்திலுள்ள அணைத்து இந்துக்களையும் ஒன்று திரட்டி தங்கள் கோரிக்கைகளை பட்டியலிட்டு அடுத்த தேர்தளிலாவது அரசியல் கட்சிகளின் முன் வைக்க முடியுமா?
அலங்காரமாய் பேசிப்பேசியே ஆட்சிக்கு வந்தன திராவிடக் கட்சிகள். அந்தப்பவிசு பாஜகவுக்கு இல்லை. தேசியம், தெய்வீகம், நாட்டுப்பற்று போன்ற விவரமெல்லாம் தமிழனுக்குத் தேவையில்லை. டாஸ்மாக்கில் இலவசமாய் பாட்டில் தந்தால் பல்லையிளித்துக் கொண்டு ஓட்டுப் போடும் தரங்கெட்ட புறநானூற்றுத் தமிழன், அகத்தில் யோசனை செய்தால் இரண்டு கழகங்களும்தான் மாற்றி மாற்றி காட்சியளிக்கும். பாஜக பத்து இடங்களில் வெற்றி பெற்றால் பெரிது என எண்ணும் ” நடுநிலையாளர்கள்” வெற்றி பெறும் கட்சிக்கு வோட்டுப் போடுங்கள் என அபத்தக் கோட்பாடுகளைக் கொண்டு அதிமுக/திமுகவுக்கு வாக்களிக்க மறைமுகமாய் யோசனை சொல்வார்கள். பாஜக விஜயகாந்த்தை எதிர்பார்த்ததில் தவறில்லை. அது யதார்த்தமே. ஆனால் ரொம்பவும் காத்திருந்ததுதான் தவறு. அடித்தள வேலைகளுக்கு தொண்டர்கள் தேவை. பிரியாணியும் பாட்டிலும் கொடுக்கும் கட்சிதான் பெருமளவுக்குத்தொண்டர்களை ஈர்க்கும். பாஜகவுக்கு அதற்குண்டான சாமர்த்தியமில்லை. மக்களின் தகுதிகேற்பதான் ஆட்சியாளர்கள் அமைவர். நல்ல ஆட்சியாளர்கள் அமைய இறைவன் அருள்வானாக.
பழமொழிகளை தமிழில் கூறும்போது முதலில் நல்லதை கூறவேண்டும் என்பதால் தான் ராமன் வந்தான் என்று சொல்லாமல் வந்தான் ராமன் என்று சொல்லி ,நம் முன்னோர் வழி காட்டி இருக்கிறார்கள். இதனை பின்பற்றினால் நமக்கு நல்லது .
திமுகவினர் தங்கள் கோஷத்தை முடியட்டும் விடியட்டும் என்று முதலில் நெகடிவாக ஆரம்பித்து விட்டனர். எந்த கோஷமும் முதலில் பாசிடிவாக ஆரம்பிக்க வேண்டும். விடியட்டும் என்று ஆரம்பித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். விடியட்டும் முடியட்டும் என்ற கோஷம் ரொம்ப பாசிடிவாக இருந்திருக்கும் .
நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதுடன் தமிழகத்தின் தவப்புதல்வன் என்று ஏழை மக்கள் கனவிலும் நனவிலும் வாழும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் செய்த சாதனையை , எம் ஜி ஆர் திருக்கரங்களால் வெள்ளி செங்கோல் பெற்ற அதிருஷ்ட தேவதையான ஜெயலலிதாவும் செய்து முடித்து விட்டார். ஐந்தாண்டு பதவியில் உள்ள கட்சியை மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவது என்பது வெகு சிரமம். தமிழகத்தை பொருத்தவரை முதலில் பெருந்தலைவர் காமராஜர் 57, 62 ஆகிய இரு தேர்தல்களில் அந்த சாதனையை செய்தார். ஆனால் முதல்வர் வேட்பாளர் மற்றும் பதவியில் தொடர்ந்து இருந்த முதல்வர் என்ற முறையில் அந்த சாதனையை இரண்டு முறை செய்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஒருவர் தான். ஏனெனில் காமராஜர் 57 தேர்தலில் வெற்றிபெற்றபோது , 5 வருடம் முடித்த முதல்வர் அல்ல. அவர் 1954-இல் ராஜாஜிக்கு பிறகு தான் முதல்வர் ஆனார்.
ஒரு பெண்மணி எதிர்க்கட்சியினரால் போடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளையும் வெற்றிகரமாக சந்தித்து அரசியலில் இவ்வளவு நாட்கள் நீடித்து , ANTI INCUMBANCY – அலையை தாக்குப்பிடித்து , தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது பாராட்ட தகுந்தது.
234- தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் இந்த சட்டசபை தேர்தலில் தான் முதன்முறையாக போட்டியிட்டது. கூட்டணி இல்லாமல் ஜே – மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. ஒரு சட்டசபை தேர்தல் முடிவை அதற்கு முந்திய சட்டசபை தேர்தலுடன் தான் ஒப்பிடுவார்கள். சென்ற சட்டசபை தேர்தலில் உடன் இருந்த விஜயகாந்த், கம்யூனிஸ்டுகள் இவர்களின் கூட்டணி இல்லாமலேயே , சென்ற சட்டசபை தேர்தலைவிட சுமார் 35 லட்சத்துக்கும் கூடுதலான அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் கருத்துக் கணிப்பு என்று பெயரில் திறம்பட மீடியாவையும், பாதிரிமார்களையும் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு , திமுக 140 -150-160 என்று மீடியாவில் செய்தி தாள்களையும், டிவி சானல்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதை எல்லாம் ஜே தவிடு பொடியாக்கி சாதனை புரிந்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாலு மாவட்டங்களான சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கடலூர் ஆகியவை முற்றிலும் அதிமுக கையை விட்டு நழுவி போய்விட்டன என்று மீடியா ஜோதிடம் சொன்னது. கடலூரில் நிச்சயம் அதிமுக தோற்கும் ஏனெனில் கடுமையான வெள்ளப்பாதிப்பு அங்கே தான் என்று மீடியா கருத்து தெரிவித்தது. கடலூரில் அதிமுகவின் திரு சம்பத் அதிக வித்தியாசத்தில் வென்று அந்த வதந்தியை பொய்யாக்கி காண்பித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை தவிர எஞ்சிய எல்லா தொகுதியையும் அதிமுகவே வென்றது. சென்னையில் தான் வாக்குப்பதிவு சதவீதம் தமிழகத்திலேயே குறைவு என்பதால் இங்கு மட்டுமே திமுக அதிக இடங்களை பெற்றது.
கருத்துக் கணிப்பாவது பரவாயில்லை -மன்னித்துவிடலாம்- எக்சிட் போல் என்ற பெயரில் திமுக வுக்கு 120 முதல் 160 வரை கிடைக்கும் என்று சொல்லி பொய்ப்பிரச்சாரம் செய்த ஊடகங்களை பார்த்து மக்கள் நகைத்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜெவுக்கு சாதகமாகத்தான் இருக்கும். அது பாதகமாக இருந்தாலும் ஜே- யின் கட்டுப்பாட்டில் தான் அடுத்த ஐந்து வருட தமிழக ஆட்சி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
டூ ஜி, கலைஞர் டிவி , ஏர் செல் மாக்சிஸ் , பி எஸ் என் எல் இன்னமும் இன்னபிற வழக்குகளை சந்தித்துவரும் திமுகவுக்கு , தீர்ப்பு வரத்துவங்கும் ஜூன் மாதம் முதல் மேலும் மேலும் சோதனைக்காலம் தான் .கலைஞர் காலத்துக்கு பின்னர் குடும்ப கட்சியில் பங்காளி சண்டையும், அதிகார போட்டியும் மிகும்.
பாஜக விஜயகாந்த் கூட்டணிக்கு நீண்ட காலம் காத்திருந்தது தேவை இல்லாத விஷயம். தனியாகவே போட்டியிட்டாலும் ஆறுமாதம் முன்னரே பிரச்சாரத்தை தொடங்கி இருந்தால் ஒரு இருவது இடமாவது கிடைத்திருக்கும். தாமதத்தால் பாஜக வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தது.
கொடுமையிலும் கொடுமை நக்கீரன் பத்திரிகையில் திமுகவுக்கு 56.8 சதவீதம் ஒட்டு/ ஆதரவு உள்ளது என்றும் அதிமுகவுக்கு 32 சதவீதம் என்றும் கருத்து திணிப்பு செய்தது தான். பத்திரிகைகள் வெளியிடும் கருத்தக் கணிப்பு மற்றும் எக்சிட்போல்களை இனி யாரும் தமிழகத்தில் நம்பமாட்டார்கள்.
இந்த தேர்தலில் ஜெவின் சாதனையை போலவே இன்னொரு பெரிய சாதனை செய்தவர் வைகோ மட்டுமே . என்ன அண்ணே , இந்த பொண்ணுகூட உங்களை கட்டிக்க மாட்டேன்னுடுச்சே , இனிமேல் எந்த பொண்ணு உங்களை கட்டிக்கப்போவுது என்று செந்திலின் சினிமா வசனத்தை முதல் இரண்டு வாரங்கள் தனியே சொல்லி திமுகவினரை புலம்ப வைத்து விட்டார்.
திமுகவினர் ஏராளம் செலவு செய்தும் வெற்றி பெறமுடியவில்லை. அவர்கள் கொடுப்பினை அவ்வளவுதான்.
ஐவர் அணியின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்தது தான்.
கம்யூனிஸ்டுகள் அகில இந்திய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்திருப்பது நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி ஆகும்.
தமிழக மக்கள் இந்திரா காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தோரை 2009-க்கு பிறகு எக்காலத்திலும் ஆதரிக்க மாட்டார்கள்.
இந்துக்கோயில்களின் சொத்தை ஆக்கிரமித்து உள்ளோருக்கே விற்றுவிடுவோம் என்று சொன்ன திமுகவினரின் தேர்தல் அறிக்கை திமுகவுக்கு பத்துலட்சம் வாக்குகளை திசை திருப்பி தோல்வியை தந்தது.
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தாமல் இருந்திருந்தால் , திமுகவுக்கு இன்னமும் கூடுதல் தொகுதிகள் கிடைத்திருக்கும்.
இந்திரா காங்கிரசை தனியே விட்டிருந்தால், அனைத்து தொகுதியிலும் இந்திரா குடும்ப கட்சிக்கு டெபாசிட் போயிருக்கும். காங்கிரசுடன் கூட்டணி திமுகவினர் தலையில் மண்ணை வாரிப்போட்டுவிட்டது.
காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவேண்டும் என்று திமுக தலைவருக்கு ஆலோசனை சொன்ன தீய சக்திகளுக்குத்தான் ஜெயலலிதா இரண்டுமுறை நன்றி சொல்லவேண்டும். திமுகவுக்கு இப்போதும் இனிமேலும் இறங்குகாலமாகவே உள்ளது. வையகம் வளமுடன் வாழ்க .
அ.தி. மு.க. வில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் எங்கே?